அன்பிற்கும் உண்டோ…?
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: March 17, 2026
பார்வையிட்டோர்: 120
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸின் தற்கொலையினால் அவனது தாயும், தந்தையும் மனம் நொறுங்கிப் போனார்கள். உள்ளம் உடைந்து குமுறினார்கள்.
பகைவர்களின் பரிகாசம், நண்பர்களின் புறக்கணிப்பு, சொந்தக்காரர் களின் நிந்தை-மொழிகள்… அனைத்திற்கும் மேலாக எருசலேம் நகர் வீதிகளில் தலைகாட்ட முடியாத கொடு பயங்கர நிலை. தாங்களும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட எண்ண ஆரம்பித்தார்கள்.
வருடம் ஒன்று ஓடியது, இழந்த மகனுக்காக அழுது வடிந்து அங்கலாய்த்தார்கள். ஆறாப்புண்ணாய் சாகாமல் செத்தார்கள். யார் கண்ணிலும் விழிக்க வெட்கம். அவமானங்களை சகிக்க முடியவில்லை.
புதிதாக ஓர் எண்ணம் உதித்தது.
பக்கத்திலிருந்த ஒரு கிராமத்திற்குப் போய் யாருக்கும் தெரியாமல் அமைதியோடு வாழ நினைத்து ஓடினார்கள்.
‘இந்தக் கிராமத்திலேயே மீதி நாட்களைப் போக்கி மடிந்து விடலாம்’ என்றார் யூதாஸின் தந்தை.
ஒரு மாலைப்போதில் இருவரும் ஓர் ஆற்றோரம் சென்று அமர்ந்தனர்.
இருவரும் கவலைகளை அடக்க முடியாது அழுதனர். தாய், தேம்பித், தேம்பி அழுது கொண்டே சொன்னாள் : “மகனை மறக்க முடியவில்லையே. அவன் செய்ததோ பெரிய துரோகம். இன்று அவன் பிறந்த நாள். அவன் பிறந்த நாளில் நம் வீட்டில் எத்தனை ஆனந்தம்? குழந்தையாயிருக்கும் பொழுது அவன் எவ்வளவு அழகாயிருந்தான். பின் நாளில் பணக்கணக்கில் கைதேர்ந்தவனாயிருந்தானே… அவனை எப்படி மறப்பது”.
உள்ளம் பதைத்து கதறிக் கதறி அழுதாள். தந்தையும் அழுது கொண்டே வாய் உளறினார் :
யூதாஸ் பிறந்த நாளில் வானத்தில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னி மினுங்கின. அவைகள் அவனை ஆசீர்வதிப்பது போல் எண்ணி பூரித்துப் பொங்கி மகிழ்ந்தோமே. அவனது முடிவு இப்படியாகும் என்று கனவுகூட காண வில்லையே.
என்று வாய்விட்டு அழுது புலம்பினார். அவர் குலுங்கிக் குலுங்கி அழுவதைக் கண்டு மனம் சகியாத மனைவி, ‘அழாதீங்க, அமைதியா இருங்க இந்தக் கிராமமாவது கிடைத்ததே’ என்றாள்.
அவர்களின் அந்த எண்ணத்திலும் மண் விழுந்தது.
ஊரை மூட உலை மூடி உண்டா?
அந்தக்கிராம மக்களுக்கும் செய்தி தெரிந்தது. அனைவரும் அவர்களை வெறுத்தனர். காரித்துப்பினர். காட்டிக் கொடுத்த துரோகியின் பெற்றோர் என்று தூஷித்தனர். வசை புராணம் பாடினர்.
அவர்களின் மனக்கசப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்தச் செய்தி மரியாள் என்ற ஓர் அம்மாவுக்கு எட்டியது. ஒருநாள் அவ்வம்மையார் அவர்கள் வீட்டிற்குச் சென்றார்கள். யூதாசின் தாயிடம் கருணை பொங்கப் பேசினார்கள்:
‘சகோதரி, இந்த ஊரில் நீங்கள் சந்தோஷமாய் இருக்க வேண்டும், இதுவே என் ஆசை’, என்று அன்பு கனியச் சொன்னார்கள்.
அன்பு மொழி கேட்ட யூதாஸின் தாய் ஆறுதல் கொண்டாலும் துக்கம் தாங்க முடியாமல் மனவேதனையை தெளிவாகச் சொன்னாள்.
“அம்மா, எங்கள் மகன் யூதாஸ், அவனுக்கு ஏன் இந்த பயங்கர முடிவு? நாண்டு கொண்டு செத்தான் என்று நினைக்கும் போதே குடல் துடிக்கிறது”. என்று சொல்லி வயிற்றிலடித்து அழுதாள்.
மரியாளின் உள்ளத்தை -ஓர் அம்பு ஊடுருவிப் பாய்ந்தது.
‘ஆ, என் மகனைக் காட்டிக் கொடுத்த யூதாஸின் தாய்தான் இவள்…’
மரியாளின் மனம் வலித்தது. ஆயினும் மரியாளின் உள்மனம் இப்படிப் பேசியது: இவள் என் மகனைக் காட்டிக் கொடுத்த யூதாஸின் தாய்தான். எனினும் அவளும் ஒரு தாய்தானே? ஒரு தாயின் உள்ளம் எத்தனை தூய்மையானது? என் மகனை நான் நேசித்த வண்ணம்தான் இவளும் தன் மகனை நேசிக்கிறாள்? நானும். என் மகனை இழந்தேன். இவளும் தன் மகனை இழந்தாள். இவளின் மன வேதனையை நான் தெளிவாகத் தெரிகிறேன். அந்தோ, பரிதாபம், இவளுக்கு ஆறுதல் சொல்வார் யாருமில்லையா? மகன் செய்த தவறுக்கு பெற்றோர் என் செய்வர்?
மரியாள் அவளண்டை நெருங்கினாள். அன்புடன் அரவணைத்தாள். கன்னங்களில் முத்தம் கொடுத்தாள். பின்பு அவள் தலையை வருடியவாறு சொன்னாள் : சகோதரியே, துக்கப்படாதே, கடவுள் நமது பிதா. அவரை நம்பி அவர்மேல் சார்ந்து கொள். நம் பரம பிதா உன் கண்ணீரைத் துடைப்பார். இதை நம்பி ஆறுதல் கொள். நம் அன்பை ஒருக்காலும், ஒருவராலும் பிரிக்க முடியாது.
யூதாஸின் தாயோ இன்னும் ஆறுதல் அடையவில்லை. துக்கம் தொண்டையை அடைக்க அரற்றினாள். மரியாளின் கண்களில் நீர் பனித்தது. மரியாள் மீண்டும் அவளை அரவணைத்து அன்பு கனியச் சொன்னாள்:
“சகோதரியே, என் மகனும் எனக்கு ஒரே மகன் தான். நானும் என் மகனை இழந்தேன். அவன் மரணமும் அகால மரணம்தான். அகால மரணம் மட்டுமல்ல, மகா பரிதாப மரணம் கொலைகாரனை அடித்துக் கொல்லும் சிலுவை மரணம்” என்று சொல்லி தன் பெருமூச்சை அடக்கிக் கொண்டு கண்ணீர் சொட்டச் சொட்ட யூதாஸின் தாயுடைய கண்ணீர் வெள்ளத்தைத் துடைத்தாள். முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தாள்.
யூதாஸின் தாய் பிரமித்துப் போனாள். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பதட்டத்துடன் சகோதரியே, உன் மகன் பெயர் என்ன என்று கேட்டாள்.
மரியாள் சிறிது நேரம் பேசவில்லை. பின்பு தன் உள்ளக் குமுறலை அடக்கிக் கொண்டு, ‘இயேசு’ என்ற பெயரை உச்சரித்து மீண்டுமாக அவளின் கண்ணீரை துடைக்கப் போனாள்.
அவளோ திடுக்கிட்டு எழுந்து, ‘இயேசுவா’ என்று கூறித் திகைத்தாள், தடுமாறினாள், பயந்தாள், படபடத்தாள், கண்ணீர் கொட்டியது. அவளின் கண்ணீர் வெள்ளமோ அன்பின் வெள்ளமாய் மாறிற்று.
யூதாஸிசின் பெற்றோர் ஆறுதலும் தேறுதலும் பெற்றனர்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
குறிப்புகள்
1. தமிழில் முதல் நாவல் எழுதியது மாயூரம் நீதிபதி ச. வேதநாயம்பிள்ளை என்று நாமறிவோம் (1879).ஆனால் முதல் சிறுகதையை எழதியது யார் என்று இன்னமும் நமக்குத் தெரியாது. ஏன் இந்தக் கதையாக இருக்கக் கூடாது?… இது எழுதப்பட்ட காலம் 1880 ஆக இருக்கலாம்.
2. மிகமிகப் பழங்கதை ஒன்றின் மொழி நடையைத் திருத்தி செப்பனிட்டுத் தரும் சிறுகதையாகும்.
3. ஜுன் – ஜூலை 2002 ‘மனை தீபம்’
– ஆர்.எஸ்.ஜேக்கப் சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
