அன்னபூர்ணி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 16, 2026
பார்வையிட்டோர்: 20 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

தாலி கட்டிய மனைவி அகல்யாவுடன் தன் அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான் அரவிந்த்.

மனசு நிறைந்து அவர்களை வாழ்த்திய கல்யாணியின்  கண்களில் நீர் திரையிட்டிருந்தது! எழுந்த போது இதை கவனித்த அரவிந்த் அப்பா இல்லாததை நினைத்து அம்மா அழுகிறாள் என நினைத்தான்!

அதுமட்டும் காரணமில்லை. மூத்தவள் அன்னபூர்ணி தன் தம்பியின் கல்யாணத்தை நேரில் கண்டுகளிக்க முடியாமல் போய்விட்டதே என்ற காரணமும் உண்டு. அரவிந்துதான் தன் கல்யாணத்தை எக்காரணம் கொண்டும் அக்கா பாராக்கக் கூடாது என்ற 144 தடை உத்தரவைப் போட்டு அன்னபூர்ணியை வீட்டிலேயே இருக்க வைத்து விட்டவன்.

ஆறு மாதம் முன்னால் நடந்தது. அன்று அன்னபூர்ணியின் திருமணம் இனிதே நடந்தேறியது. புகுந்த வீட்டில் அன்னபூர்ணிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அவளின் அழகிய தோற்றம் அனைவரையும் களிப்படையச் செய்தது.

பத்து நாள் புகுந்தவீட்டின் அன்பில் கட்டுண்டு, கணவனின் அரவணைப்பிலும் திக்குமுக்காடிப் போனாள். ஆனால் எதுவும் நீடிக்கவில்லை. தேன்னிலவுக்கு மனைவியை சிம்லாவுக்கு அழைத்துச் செல்ல டிக்கட் புக் பண்ணச் சென்றவன் பைக் ஒரு தண்ணீர் லாரி மீது பயங்கரமாக மோதி ஸ்தலத்திலேயே மாண்டு போனான்.

அன்னபூர்ணி துடித்தாள்; துவண்டாள். கண்ணீர் வற்றிப்போகும் அளவுக்கு அழுதாள். விஷயம் அறிந்து கல்யாணியும் அரவிந்தும் துடித்துப் போனார்கள்.

திருமணமாகி சில நாட்களுக்குள் ளேயே மகளுக்கு நேர்ந்த கதியை கல்யாணியால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை

காரியங்கள் முடிந்தன. அன்னபூர்ணியை வசைபாடத்தொடங்கினர் அவளின் இன்லாஸ்கள்! கைபிடித்த சில நாட்களுக்குள்ளேயே தன் புருஷனை விழுங்கிவிட்டாள் என அன்னபூர்ணியை திட்டினர்.. ‘துக்கிரி’ என்று ம் ஏசினர். கேட்ட அன்னபூர்ணி தன் காதுகளை இரண்டுகைகளாலும் மூடிக்கொண்டு விம்மினாள்.

ஒருநாள் அன்னபூர்ணியை பிறந்த வீட்டிற்கே அடித்துத் துரத்தினர். கண்ணீரும் கம்பலையுமாய் கையில் பெட்டியுடன் வீட்டினுள் நுழைந்தவளைப் பார்த்த கல்யாணிக்குப் பெற்ற வயிறு பற்றி எரிந்தது. தம்பி அரவிந்த் நெஞ்சு கனக்க பெட்டியை அக்காவிடமிருந்து வாங்கி அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

ஆரம்பத்தில் நிர்க்கதியாக வந்த அக்கா மீது பரிவு இருந்தது. பாசமும் இருந்தது. ஆனால் அக்கா இனி நிரந்தரமாக இந்த வீட்டிலேயே தங்கப் போகிறாள் என்ற நினைப்பு அரவிந்த் மனத்தில் வெறுப்பை தோற்றுவித்தது. அதனால் அக்கா மீதிருந்த பாசம் மற்றும் அன்பு காணாமல் போனது. கொஞ்சமாக அவளிடம் பேசுவதை குறைத்துக் கொண்டான்.

ஜாடைமாடையாக இதை கவனித்த கல்யாணி வேதனையுற்றாள். அரவிந்தை கண்டித்தாள். ஆனால் அவனோ வழிக்கு வரவில்லை. மீறி தன்னை வற்புறுத்தினால் தான் வீட்டை விட்டே ஓடிப்போவதாகச் சொன்னதும் வாயை மூடிக்கொண்டாள் கல்யாணி.

தன் கல்யாணத்துக்கு அக்கா வருவதை தான் விரும்பவில்லை என்றவன் அவள் இல்லாமலே அகல்யா கழுத்தில் தாலியைக் கட்டினான்.

அன்று இரவு அகல்யாவின் உறவினர்களுக்கு தன் வீட்டில் விருந்து வைத்தான் அரவிந்த்.

அப்போது மரியாதை நிமித்தம் முக்கிய  உறவினர் சிலர் அன்னபூர்ணி அறைக்குச் சென்று அவளை விசாரித்தனர். இது அரவிந்துக்கு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. இருந்தாலும் பொறுத்துக் கொண்டான்.

அவர்களை வாசல்வரைச் சென்று அனுப்பிய அரவிந்த் , “அம்மா! நான் சத்திரத்துக்குப் போய் என்ன செலவு ஆச்சுன்னுபார்த்திட்டு வந்திடறேன். அகல்யாவோட அப்பா விசாரிக்கச் சொன்னார்!” என்றவன் அகல்யாவிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.

அவன் தலை மறைந்ததும் அன்னபூர்ணி இருந்த அறைக்குள் புகுந்தாள் அகல்யா.

அகல்யாவைப் பார்த்ததும் ஒருவிதப் படப்படப்புடன் எழுந்து கொண்டாள் அன்னபூர்ணி. “வா அகல்யா!” வாய் நிறைய வரவேற்றாள்.

“அக்கா! எப்படிக்கா இருக்கீங்க?” முதல் முறையாக இப்படியொரு விசாரிப்பைக் கேட்டதும் நெகிழ் ச்சியுற்றாள் அன்னபூர்ணி. புண்ணாகிப் போயிருக்கும் மனத்தை வருடிச் செல்லும் அன்பு வார்த்தைகள்! மந்திர வார்த்தைகள்! 

அகல்யாவின் கைகளை நெகிழ்ச்சியுடன் பற்றிக்கொண்ட அன்னபூர்ணி, ” ம்.. நல்லாயிருக்கேன் அகல்யா! நீ இப்படிக் கேட்டதும் எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்குத் தெரியுமா!” என்றாள் புன்சிரிப்புடன்.

“ஆனாலும் உங்கள் தம்பி செய்தது தப்புதான்!” என்றவள் தொடர்ந்தாள். “உங்களைத் தன் கல்யாணத்துக்கு வரக்கூடாதுன்னு  தடுத்து நிறுத்தியதாகச் சொன்னார். வாழ்க்கையில நடக்கிற ஒரேயொரு நல்ல காரியம். அதை நீங்கள் பார்க்காதது எனக்கு கஷ்டமாயிருக்கு அக்கா!” 

“விடு அகல்யா! நான் உங்கள் கல்யாணத்துக்கு நேர வரமுடியாமல் போனாலும் இங்கிருந்து கொண்டே வாழ்த்தினேன்” 

“என்னை மறுபடியும் வாழ்த்துங்கள் அக்கா!” சட்டென அன்னபூர்ணி கால்களில் விழுந்து வணங்கினாள் அகல்யா.

இதை எதிர்பார்க்காத அன்னபூர்ணி நெகிழ்ச்சியுற்றாள்! கண்களில் நீர் சுரந்தது. தன் மீது அகல்யா கொண்டிருக்கும் மதிப்பும் மரியாதையும் கண்டு பூரித்துப் போனாள் .

“நூறுவருஷம் பொட்டோடும் பூவோடும் நிறைஞ்ச வாழ்க்கை வாழணும்மா.!”  கீழேயிருந்து அகல்யாவைத் தூக்கி தன்னோடு அணைத்துக் கொண்டாள் அன்னபூர்ணி.

“ரொம்ப நன்றிக்கா!” 

“இரு இதோ வரேன்!” என கூறிய அன்னபூர்ணி பீரோவைத்திறந்து ஒரு டப்பாவில்வைத்திருந்த ஐந்து பவுன் சங்கிலியை எடுத்து வந்து அகல்யா கழுத்தில் போட்டாள்.

“எதற்கு அக்கா இவ்வளவு பெரிய பிரசன்ட்?”

“உன் கல்யாணத்துக்கு என்னோட கிஃப்டா வச்சிக்கோ!” 

“தேங்க்யு அக்கா!” 

இரண்டுநாள் கழிந்தது. பக்கத்துத் தெருவில் நடக்கும் ஒரு ஃபங்க்ஷனுக்காக அரவிந்த் அம்மாவும் அகல்யாவும் சென்றனர்.

அரவிந்த் ஆஃபிஸ் வேலையிருப்பதாகச் சொல்லி வீட்டிலேயே தங்கி விட்டான். லேப் டாப்பை கட்டிலின்மீது வைத்தபடி ஆபரேட் பண்ணிக் கொண்டிருந்தான்.

பாத்ரூம் போக எழுந்தவன் லுங்கி தடுக்கி பேலன்ஸ் தவறி தடுமாறி கதவில் இடித்துக் கொண்டான். நெற்றியில் அடிபட்டு புடைத்து வீங்கி விட்டது. இரத்தம் கசியத் தொடங்கியது.

“அம்மா!” என்று நெற்றியில் கை வைத்தப்படி கட்டிலில் சாய்ந்தான்.

சமையலறைக்குள் வேலையாய் இருந்த அன்னபூர்ணி தம்பியின் முனகல் சத்தம் கேட்டு விரைவாய் வெளிப்பட்டு வேகமாக ஹாலைக் கடந்தவள் தம்பியின்அறை வாசலில் பிரேக் பிடித்ததுபோல் சடாரென்று நின்றாள்! 

உள்ளே போகலாமா வேண்டாமா….தம்பி ஏதாவது கூறிவிட்டால் மனசு தாங்குமா? என்ன செய்வது? அவள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது மீண்டும் முனக ஆரம்பித்தான் அரவிந்த்.

ஆபத்துக்கு பாவமில்லை என எண்ணிய அன்னபூர்ணி மெதுவாய் தம்பி படுத்திருந்த கட்டிலை நெருங்கினாள்.

தயக்கமுடன் அவன் கையை நீக்கி விட்டு நெற்றியைப் பார்க்க அதிர்ந்து போனாள் அன்னபூர்ணி. நடு நெற்றி புடைத்துப் போய் நன்கு வீங்கியிருக்க சுற்றிலும் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

உடனே ஈரத்துணியால் துடைத்துவிட்டவள், ஃபிரிட்ஜைத்திறந்து ஐஸ் கட்டிகளை எடுத்து அந்த ஈரத்துணியில் வைத்து வீக்கத்தின் மீது வைத்து மெதுவாக தேய்த்தாள். சிறிது நேரத்தில் இரத்தம் கசிவது நின்றது.

அரவிந்த் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் இருந்தான். அக்கா செய்த  முதலுதவி அவன் நெஞ்சில் இருந்த பாறாங் கல்லை அசைத்தது.! தன்னால் தூற்றப்பட்டு வெறுத்து ஒதுக்கிய சகோதரி இன்று தனக்கு ஏதாவது ஒன்று என்பதை அறிந்து எப்படித் துடித்துப் போகிறாள்! என்று மனம் கசிந்தான். 

கண்களில் நீர்த்திரையிட அக்காவையே பார்த்துக்கொண்டிருந்தான் அரவிந்த்.

“என்னப்பா வலிக்கிறதா?” கனிவுடன் அக்கா கேட்க. ‘இல்லை’ என தலையாட்டியவன் , “அக்கா! என்னை மன்னிச்சிடு. நான் உன்னை உதாசீனப்படுத்தினேன். வெறுத்து ஒதுக்கினேன். ஆனால் எல்லாத்தையும் மறந்து எனக்கு உதவி செய்றே. ரியலி யு ஆர் கிரேட் அக்கா!” 

“சரி சரி. எழுந்திரு. டாக்டர்கிட்ட போகலாம் ” 

மெதுவாக எழுந்து உடைமாற்றிக்கொண்ட அரவிந்த் வெளிப்பட்டான்.

பீரோவைத் திறந்து பணம் எடுத்துக் கொண்டாள் அன்னபூர்ணி.

பிறகு வீட்டைப்பூட்டி சாவியைப் பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு தம்பியுடன் தெருவில் இறங்கிஆட்டோ பிடித்து ஆஸ்பத்திரிக்குச் சென்றாள்.

நேரம் கடந்தது.

வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நிற்க கல்யாணியும் அகல்யாவும் வாசலுக்கு விரைந்தனர்.

நெற்றியில் கட்டுடன் இறங்கிய அரவிந்தை கைத்தாங்கலாக அன்னபூர்ணி அழைத்து வரும் காட்சியை பார்க்க இன்ப அதிர்ச்சியாய் இருந்தது இருவருக்கும்! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *