அந்நியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 24, 2026
பார்வையிட்டோர்: 5,056 
வாசிப்பு நேரம்: 17 நிமிடங்கள்

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்னும் சரியாக விடியாத வைகறைப் பொழுது. மாசி மாதக்குளிருக்கு சீக்கிரமாகவே விழிப்பு தட்டி விட… டீக்கடையில் அடுப்பு பற்ற வைப்பதற்கு முன் பாகவே தவம் கிடக்கின்றனர், கிராமத்து ஆட்கள். 

அந்த ஊரின் வெறும் வாய்க்கு அவலாக சங்கரப்பன் ஆகிவிட்டார். 

டீக்கடையில் உட்கார இடம் இல்லாமல் அடர்த்தி யாய் ஆட்கள், ஒருத்தன் புதுச் செய்தியை ஒலிபரப்புகிற உற்சாகத்துடன் மெல்ல ஊதினான். 

“விஷயம் தெரியுமா? நம்ம சங்கரப்பன் வீட்லே கோவிச்சுக்கிட்டு ஓடிப் போயிட்டராம்.” 

‘‘நெசமாவா?” 

”பொய் சொன்னா எனக்குக் கிரீடமா கிடைக்கும்? நெசந்தாங்கேன்.” 

“அதெல்லாம் இருக்காதப்பா. பாவம், சங்கரப்பன். நொம்பலப்பட்ட மனுசர். எங்காச்சும் ஒரு சோலியா ஊருக்குப் போயிருப்பாரு. அதுக்குள்ளே கதைகட்டி விடாதீங்கப்பா.” 

“கதை கட்டி விட்டா எங்களுக்கு என்ன கிடைக்கப் போகுது? கதை கட்டி விளையாடுற விஷயமா இது? கோவிச்சுக்கிட்டு போயிட்டாருங்கிறது நெசம். தேடிப் போயிருக்கான், நம்ம முத்து.” 

“சங்கரப்பன் குடும்பத்துலே இந்த முத்துப் பயலுக்கு என்ன தொடர்பு? இவன் எதுக்கு தேடியலையணும்?” 

“சடங்கான கொமரு இருக்கிற வீட்லே எளவட்டப் பய முத்துக்கு என்ன தொடர்புன்னு புளியைப் போட்டு வௌக்கணுமாக்கும்? கைப்புண்ணு ணுக்கு கண்ணாடி வேணுமாக்கும்?” 

சூறாவளி வசப்பட்ட காகிதமாய் திசையற்று மிதந்து சுழன்று கொண்டேயிருந்தது, பேச்சு. ஒ ன்றைத் தொட்டு ஒன்றாக விளைந்து கொண்டே போயிற்று. 

ஓடிப் போன. சங்கரப்பனை ஆளுக்குக் கொஞ்ச மாய் பிய்த்து வாயில் போட்டு மெல்லத் தொடங்கி விட்டனர். ஊரான் கழுத்துப் புண்தானே! கிளறிய வரைக்கும் சுகம்தானே! 

“சங்கரப்பன் சல்லிக்காசுக்கு பெற மாட்டான். சுத்தக்கூறு கெட்ட பய…” 

“இவனுக்குக் கெடைச்ச வாய்ப்புக்கு எம்புட்டோ கௌரவமாயிருந்துருக்கலாம்…. எல்லாத்தையும் சீரழிச் சுட்டானே….” 

“குடும்பத்தையும் சீரழிச்சு நாசமாக்கிட்டு, அவனும் சீரழிஞ்சுட்டானே…” 

“அவனோட மூத்த மக பூசுன கரியை தொடைக் கறதுக்குள்ளே…. இவன் குடும்ப மூஞ்சியையே உடைச்சுட்டானே….” 

“தொட்டதை விட்டவனும் கெட்டான். தொடா ததைப் போய்த் தொட்டவனும் கெட்டான்ங்கிற சொல வடை, சங்கரப்பன் விஷயத்துலே சரியாய் இருக்கு..” 

“வவுத்துப் புள்ளையை நம்பி வளந்த புள்ளை கழுத்தைத் திருகுறவன் கதையெல்லாம் இப்படித்தான் முடியும்….” 

”அடேயப்பா…. ஒருத்தனையும் வாயெடுக்க விட மாட்டான். சவடால் பேச்சு பேசியே ஆள்களை அரட்டிப் போடுவான். இன்னிக்கு எல்லாம் பொசுக்குன்னு போச்சு….” 

“கையிலே நாலு சில்லறை நடமாடுறப்போ கண்ணு மூக்கு தெரியாம குதிக்கக் கூடாதப்பா. குதிக்கிறவ னெல்லாம் இப்படித்தான் குழியிலே வுழணும்.” 

“அப்பவும். ஒரு முழுத்த ஆம்பிளை இப்படியா செய்வான்? ஓடிப் போகறதா? ச்சே, ரொம்பக் கோழையா இருந்துருக்கான்…” 

‘நீ வேற… பொம்பளை எந்நேரமும் கொத்திப் புடுங்குனா ஆம்பிளை என்ன செய்ய முடியும்? நாற வாய்க்குள்ளே குடியிருந்தாலும், நச்சரிப்புக்குள்ளே குடியிருக்க முடியாதப்பா…. பூமாலையும் முள் முள்ளா குத்திப் பேசுவா…” 

“பூமாலையும் பொறுமையான மனுஷிதான். ‘பூமி மாதாவே கேள்’னு பொறுத்து வாயை மூடித்தான் கிடந்தாள். தரை தாங்காத அளவுக்கு இவன் போட்ட ஆட்டத்துலே அவளோட பெருமையெல்லாம் கண் காணாமப் போயிடுச்சு….” 

டீக்கடையில் மட்டுமல்ல…. குழாயடியில், மடத்துத் திண்ணையில், கூலி வேலைகள் நடக்கும் புஞ்சைகளில் எங்கெங்கு மனிதர்கள் கூடுகிறார்களே அங்கெல்லாம் சங்கரப்பன் கதைதான். 

கவலையோடு சிலர்தான் பெருமூச்சு விட்டனர். மற்றவரெல்லாம் கேலியாக, கிண்டலாக வக்கிரமான கற்பனையாக, வர்ணமேற்றிய அவதூறாக.. பேசிப் பேசியே தூசி கிளப்பினர். ஊரெல்லாம் சூறாவளிச் சுழற்சி. சுழன்றடிக்கின்ற காற்றில் மாறி மாறி எழுகிற தூசிப்படலங்கள். 

வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டுக்குள் அடைக்கப்பட்டுக் கிடந்தாள், பூமாலை, சுவரில் சாய்ந்து சரிந்து உட்கார்ந்திருந்தாள். பாதி குலைந்த நிலையில் இடது தோளில் சரிந்து கிடந்த கூந்தலில் ஆங்காங்கே நரைகள். மாலை மாலையாய் வழிகிற கண்ணீர். சலனமற்று உறைந்து போன விழிகள். அதில் ததும்பி நின்ற சோகம். 

உடைந்து அழுதாள். உதட்டைப் பல்லால் கடித்துக் கொண்டு குழுங்கிக் கொண்டுருந்தாள். 

“இப்படியும் செய்வாரா, இந்த மனுஷர்? என்னைக் கேவலப்படுத்திட்டாரே… உப்புக் கல்லுக்குப் பெறாத ஒரு சிறுக்கி கூட இனி என்னை ஏளனமாய்ப் பேசுவாளே, இளக்காரம் செய்வாளே.. நா எப்படித்தான் இந்த ஊர்லே இருக்கப்போறேனேர்… ஆக்கங்கெட்ட இந்த ஊர்லே ஆளுக்கொரு காரணமாய் இட்டுக் கட்டிப் பேசுவர்களே… காறித் துப்புவாகளே… என்னை இந்தக் கதியிலே நிறுத்திப் பார்க்க, இந்த மனுஷருக்கு எப்படித்தான் புத்தி போச்சோ…” 

விடிந்ததிலிருத்து அழுது அழுது அரற்றியதில் தாண்டை கரகரத்தது. குரல் கம்மிப் போயிருந்தது. உலர்ந்து போன நாக்கில் எச்சில் கட்டியாகத் திரண் டிருந்தது. மேல் அண்ணத்துடன் ஒட்டிக் கொண்டது. அவள் கண்களில் அயற்சி. அலைபாய்கிற மனசு நினைக்க நினைக்கப் புண்ணைக் கிளறுவதைப் போல உள்ளுக்குள் வலியின் அலைகள். 

“நா ஒரு பாதகத்தி என்ன இழவுக்குத்தான் எனக்கும் அப்படி புத்தி போச்சோ… பொசுக்’குன்னு வார்த்தை வந்துருச்சு. வாய்க்கு முந்தி வார்த்தை ஒடி யாந்துருச்சே நா என்ன செய்ய? ஆசையா ஒடியாந்த புள்ளையை ஓங்கியறைஞ்ச மாதிரி, அப்படியே தெகைச்சுப் போனாரேசொன்ன சொல்லைக் கேட்டு முகம் சுண்டிப் போனாரு. பாவம், பார்வை பறவை யாட, ஆதரவத்து நின்னாரே… அதுக்காக இம்புட்டுக் காரியம் பண்ணுவாருன்னு. இந்தப் பாவி மனசு நெனைக்கலியே…” 

மனசுக்குள் ‘கறுங், கறுங்’கென்று அறுக்கிற சோக உணர்ச்சி. குத்திப்பிடுங்கிற குற்ற உணர்ச்சி. ஊசிக் குத்தலில் ஓட்டையாகிப் போனதைப் போல மனசில் ஒரு சூன்யம். சகலமும் பறிபோய் விட்டாற் போன்ற வெறுமை. 

அம்மாவை ஒரு பரிவோடு பார்த்தாள் பவளம். ‘ஐயோ பாவம்’ என்கிற கண்கள். மற்றபடி எந்த வருத்தமோ, சலனமோ இல்லாமல் அவள் முகம் வறண்டு கிடந்தது. ஓடிப்போன அய்யாவால் வந்து சேர்ந்த கேவலம் பற்றிய நினைவே இல்லாதவளைப் போல மௌன நிழலாய் நடந்தாள். 

மகளின் முகத்தைப் பார்த்த பூமாலைக்குப் பகீரென் றது. ‘அடிப்பாவி…. அப்பன் போன வருத்தம் கூட இல்லாம, கல்லுப் புள்ளையாரு மாதிரி இருக்காளே.. ஏதுமத்த அப்பனை புள்ளைகூட மதிக்காது போல இருக்கு…. அடியே பவளம், எனக்கு அப்படி இல்லேடி…. சகலமும் அவருதானடி. 

‘என் பொட்டுக்கும், தாலிக்கும் பொறுப்பு அவரு தாண்டி… நம்ம தாழ்வுக்கும் மேட்டுக்கும் அவருதாண்டி காரணம். அவரு இல்லேன்னா, நீயுமில்லே… நானு மில்லே….’ 

அடுப்பறைக்குள் நுழைகிற பவளத்தின் முதுகை பூமாலையின் பார்வை துரத்தியது. மனசுக்குள் ஏதேதோ நினைவுகள். கொதிக்கிற பானைக்குள் தளதளக்கிற தண்ணீராய்… நினைவுகள். 

நினைக்க நினைக்க உள்ளுக்குள் பொங்கிப் பீறிடு கிற அழுகை. சத்தமில்லாமல் அழுகை. அழுது அழுது வற்றிப்போய் விட்ட சத்தம். 

ஓய்ந்த மாட்டின் கழுத்தில் புண், வந்து ஒட்டுகிற ஈக்கள், அப்படித்தான் இந்தக் குடும்பம். மாறி மாறி வருகிற நிலநடுக்கம். ஒவ்வொரு அதிர்விலும் ஒவ்வொரு சேதாரமாய்.. சேதாரங்களே வாழ்க்கையின் தொகுப் பாய்… 

பெண்ணாக இருந்த பூமாலையைத் தாயாக மாற்றிய கௌரவம் தந்த மூத்த மகள் ராசாத்தி… இவள் ரத்தத்தைக் குடித்து சதையைத் தின்று வடிவம் பெற்ற மகள்… இந்த வீட்டின் காற்றையும் சோற்றையும் வேர்வையையும் உண்டு வளர்ந்து உலவியவள். 

நாள் நாளாய் நூல் கோர்த்து இவர்கள் வளர்த்து வைத்திருந்த கனவுகளையெல்லாம் அறுத்துக் காயப் படுத்தி விட்டு எவனோ ஒருவனுடன் ஓடிப் போய் விட்டாள்… 

ஆறு மாதம் கூட ஆகவில்லை. 

அதற்குள் இந்த மனிதர்… இப்படி… 

அட்டா…இவருதான் எம்புட்டு நல்ல மனிதர்… நல்லது கெட்டதைப் பிரிச்சுப் பார்க்கத் தெரியாது. எல்லாவற்றையும் நம்பி விடுவார். வெகுளியான ஆள். வண்டி வண்டியாய் ஆசைப்படுவார். யோசனை இல் லாத ஆசைகள். வானவில்லை கையில் பிடிக்க ஆசைப் படுவார். நட்சத்திரங்களையெல்லாம் அள்ளி மடியில் கட்டிக்கொள்ள… நிலாவை எடுத்து பூமாலை நெற்றி யில் வைக்க… உலகத்தில் உள்ள ‘லட்சுமி’களையெல் லாம் அள்ளிக்கோர்த்து யிள்ளைகள் கழுத்தில் போட்டுப் பார்க்க… வண்டி வண்டியாய் ஆசை. 

எல்லா ஆசைகளும் பாசத்தோடு பின்னிக் கிடக்கும். பெருமை தழுவிக்கிடக்கும். 

பூமாலை என்றால் உயிர். பிள்ளைகள் என்றால் உயிரின் உயிர். அப்பேர்ப்பட்ட பிரியமான மனுசரை எங்கே பார்க்க முடியும்? இனி எங்கே போய்ப் பார்ப்பது. 

ராசாத்தி பிறந்த அன்று தைப்பூசம் கழிந்த நாலாவது நாள். இடுப்புவலி கண்டு விட்டது. தெரு ஜனமெல் லாம் வீட்டில். ஆடி ஓடி ஆளுக்கொரு வேலையாக பார்க்கின்றனர். வலி தாங்காமல் துடித்தலறுகிற பூமாலையைச் சுற்றி பரபரப்பாக இயங்குகிற பெண்கள். 

உயிரைப் பிடுங்கிற வேதனை. உயிரே போய்விடக் கூடாதா என்று ஏங்க வைக்கிற நரக வேதனை. 

பூமியின் காற்றைச் சுவாசிக்கிற புதிய உயிர். புதிய ஜீவன் வீறிடுகிற அழுகை. நரக வேதனையை சுக வேதனையாக்குகிற ஜீவனின் குரல். 

“சங்கரப்பனுக்கு தலைப்புள்ளை கடங்காரப் புள்ளையா பொறந்துருக்கு” ஒரு கிழவியின் வருத்த மான் அங்கலாய்ப்பு. ‘பொம்பளைப் புள்ளை. 

சத்தம் கேட்டு உள்ளே எட்டிப் பார்த்தான் சங்கரப்பன். அவல் முகமெல்லாம் ஆவல். 

அவன் பார்வையெல்லாம் பூமாலை மீது. அடே யப்பா, அந்தக் கண்களில் ததும்பிய பரவசம்… பரி வுணர்ச்சி… கருணை உணர்ச்சி எல்லாம் கலந்து கனிந்த ஒருவகைக் கூட்டுணர்ச்சி. 

அவன் பார்வையை மனசால் தழுவிய அவள் முகத் தில் மின்னும் புன்னகை. பெருமிதப் புன்னகை. 

“சங்கரப்பா, பூமாலை, ஒனக்குப் பொம்பளைப் புள்ளை” பெத்துக் குடுத்துருக்கா. இந்தப் புள்ளைக்கு நீ நகை பண்ணிப்போட இப்பவே சம்பாத்தியம் பண்ண ஆரம்பிக்கணுமப்பா.” 

“பொம்பளைப் புள்ளைன்னா அம்புட்டு மட்டமா? திங்கிற வாயும் நகை மாட்டுற கழுத்தும மட்டுமா, பாடுபடுற கைகால்களோடயும்தானே பொம்பளைப் புள்ளை பொறக்கு?” 

“அடியாத்தி… புள்ளைக்கு அப்பன் வக்காலத்து வாங்கி வர்ர வேகத்தைப் பாருங்கடி” என்று ஒரு நடு வயதுக் கிழவி பொய்யாக வியக்க… அவள் முகத்தை ஆட்டிய ஆட்டத்தில் காது பாம்படங்களும் ஆட…. அந்தச் சின்ன வீட்டுக்குள் முட்டி மோதுகிற பெண்களின் சிரிப்பொலி. ஆனந்தப் பரிகாசமாய் எழுந்த அந்தச் சிரிப்பலையில் வெட்டுண்டு, அசட்டுச் சிரிப்புடன் தலை கவிழ்ந்தான். 

அந்தப் புருஷப் பிள்ளையைப் பார்த்து பூரிப்போடு புன்னகைத்தாள் பூமாலை. துவண்டு கிடந்த அந்தப் பச்சை உடம்பில் அந்தப் புன்னகை அழகாய்,உயிர்ப்பின் துடிப்பாய் பிரகாசிக்கிறது. 

மோதிக் கொள்கிற இருவரின் பார்வைகள். வார்த் தையில் வசப்படாத அந்தரங்கமான இன்ப உணர்வுகளை, ஆழப்பதிந்து வேர் பின்னிக் கொண்ட தாம்பத்ய அந் யோந்யங்களை பரிமாறிக் கொள்கிற மனசின் பாஷைகள். 

இன்னும் ஒலிக்கிற சிரிப்பலைகள். 

“ஆம்பளைப் புள்ளை பொறதுந்தா…. மூணுதடவை கொலவை போட்டுருப்போம்…. ஊருக்கெல்லாம் ராசா பொறந்த சங்கதி தெரியும். பொம்பளைப் பிள்ளையா யிருக்கே … என்ன செய்ய?” 

அதே கிழவிதான் பொய்யாக வருந்தினாள். நமட்டுச் சிரிப்பில் முகச் சுருக்கங்கள் அதிகமாகியிருந்தன. 

“கொலவை போடுறது சந்தோஷத்துக்காகத்தானே? பூமாலை பெம்பளைப் பிள்ளையை பெத்தெடுத்ததே எனக்குச் சந்தோஷந்தான். போடுங்க கொலவை. முட்டாய்ச் செலவு செய்கிறேன்.” 

“முட்டாய்க்காக கொலவை போடலாமா வழமையை மீற முடியுமா?” 

“பொம்பளைப் புள்ளை பொறந்ததுக்கு பொம்பளைக வருத்தப்படுறது, பொம்பளைகளுக்கே கேவலம்.” 

குறுஞ்சிரிப்போடு சொல்லிவிட்டு, நைஸாக வெளி யேறி விட்டான். 

“போடு சக்கை….! புள்ளையோட அப்பன் என்ன போடு போட்டுட்டு போறான், பாருங்கடி” என்று பலத்த குரலில் போலிக்கண்டனம் செய்ய…. வீடு முழுக்க ஆரவாரச் சிரிப்பொலி. குப்பென்று எழுந்த அந்தச் சிரிப்புச் சத்தம், அடங்குவதற்குக் கொஞ்ச நேரமாயிற்று. 

இருபது வருஷம் ஆச்சு. இப்பக்கூட அந்தச்சிரிப்புச் சத்தம் கேக்குற மாதிரியேயிருக்கு. 

காணாத புதையலைக் கண்டவனைப் போல அந்தப் பிள்ளையை அப்ப் ப்படிச் சீராட்டினான். ராசாத்தி என்று பெயர் வைத்து, உயிராகக் கிடந்தான். 

செத்துப் போன அம்மாவோட ஜாடையாம்.பேச்சு…. கண்ணு… கொணம் எல்லாம் அதே அச்சாம்! சொல்லிச் சொல்லிப் பூரித்துக் கொள்வான். 

மல்லாக்கப் படுத்துக்கொண்டு பிள்ளையை நெஞ்சில் போட்டுக் கொண்டு எந்நேரமும் கொஞ்சல்தான். பேச்சு தான். சிரிப்புதான். வீடே ஒளி துள்ளும். கலகலக்கும். 

ஒரு குறை வைக்க மாட்டான். கண்ணுக்குள் கண்ணாக வளர்த்தான். கண்கலங்கி விடக்கூடாது. அவள் அழுதுவிட்டால்…. பூமாலைக்கு வசவு நாறிப் போகும். 

அந்த ராசாத்திதான்- 

குடும்பத்தின் மூக்கையறுத்து மூளியாக்கி, இழிவு படுத்திவிட்டு இழிவான முறையில் எவனுடனோ ஓடிப் போய் விட்டாள். சிறுக்கி! 

பூவைப் போல பொத்திப் பொத்தி வளர்த்தவர்கள் நெஞ்சிலே தீயை அள்ளிக் கொட்டி விட்டுப் போயிட் டாளே… பாவி! 

பாவி,சிறுக்கி என்று அவளைத் திட்டி என்ன செய்ய? யோசித்துப் பார்த்தால்…. ராசாத்தியைக் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது. 

அவளும்தான் சடங்காகி வீட்டில் இருந்தாள். சபலம் இல்லாமல் சலனம் இல்லாமல் ஒரு வம்பு தும்பில்லாமல் பசு போல இருந்தாள். ஒரு வருஷம், ரெண்டு வருஷமா, ஏழு வருஷம் இருந்தாள். மாலை பூக்காதா; நேரம் கூடி வராதா என்று பூமி மாதாவாய்ப் பொறுமையாய் இருந்தாள். 

குனிந்த தலை நிமிர மாட்டாள். தெருவில் வருகிற நாயைக் கூட ஏறிட்டுப்பார்க்க மாட்டாள். உணர்ச்சியும் கனவுகளும் உள்ள ஒரு மனுஷிதானே என்கிற சந்தேகம் வரும். நடமாடுகிற கற்சிலை, உயிர்ச்சிலை. 

நடமாட்டம் என்றால்… சாதாரணமா? உழைப்பில் ஆண்பிள்ளை தோற்றுப்போவான். அப்படிப் பாடு படுவாள். எருமைக்குப் புல் பார்ப்பதென்ன. ஆடுகுட்டி களை கவனித்துக் கொள்வதென்ன, கூலி வேலைக்குப் போகிற அக்கரையென்ன, வீட்டுவேலைகளை ஓடிஓடிப் பார்ப்பதென்ன, தங்கச்சி பவளத்துடன் சண்டை போட்டு கூச்சல் போடுவதென்ன… சகலத்திலும் ராசாத்தி கெட்டிக்காரி. இரவும், பகலும் எந்தநோமும் பாடுபடு வாள். அவள் கை சும்மாவேயிருக்காது. எதையாவது நோண்டிக் கொண்டிருப்பாள். 

வயசுக் கோளாறில் வருகிற இளமைக் கனவு களெல்லாம் வியர்வையில் செலவழிப்பதைப் போல அத்தனை தீவிரமாய்ப் பாடுபடுவாள். 

தன்னைத்தானே வருத்தி, திசை திருப்பி விட் டவளைப்போல உழைப்பாள். 

சங்கரப்பன் சாராயத்தை அளவில்லாமல் குடித்து புழுதியில் புரண்டு ஆளாகத்தள்ளாடி வருவான். பூமாலை தலையில் அடித்துக் கொண்டு அழுவாள். 

“அடக் குருட்டுப்பய தெய்வமே…. ஏங் குடும்பத்தை இப்படிச் சீரழிச்சு நீயும் கூத்துப் பாக்கணுமா?’” என்று உடைந்து போய் நெஞ்சமெல்லாம் கொதிக்கக் கதறு வாள். 

விடியற்காலம் தலைவலியோடு அவன் எழுந்தால், பூமாலையும் கோழிக் குஞ்சாகக் கொத்துவாள். 

“ஆம்பளை இப்படிப் பொறுப்பத்து அலைஞ்சா… வீடு வெளங்குமா? குட்டிச்சுவராத்தானே ஆகும்? புள்ளை சடங்காகி எத்தனை வருஷமாகுது? அவளை ஒருத்தன் கையிலே புடிச்சிக் குடுக்கணும்னு… மனசுலே ஒறைக் குதா? சொரணையத்துத் திரிஞ்சா எப்படி?…” 

அவன் சள்ளையோடு எரிந்து விழுவான். 

“விடிஞ்சவுடனே…ஒங் கூப்பாடுதானா? மனுசனை நிம்மதியா இருக்கவிட மாட்டியா? சனியன்!” 

”நிம்மதியா? நமக்கா? ரத்தத்துலே பொறந்த பொறப்புக இருக்கு. அதுக கடமைகளை செய்ஞ்சு முடிச்சாத்தானே நிம்மதி வரும்.” 

“இங்க பாரு…. ராசாத்திக்கேத்த ராசா இனிமே பொறந்து வரப்போறதுல்லே. பாரு அவனா வந்து சேருவான் பாரு.” 

“அப்ப.. அப்பனா நீ எதுக்கு இருக்கணும்? கடனுக்கா?” 

“இந்தா! வார்த்தையை அளந்து பேசு. ஆமா.” 

“இல்லேன்னா..?” 

“செருப்பு பிய்ஞ்சு போகும்.” 

“நம்ம பொழப்பே பிய்ஞ்சு தானே கெடக்கு?” 

நித்தம் இந்தக் கூத்துத்தான். வீட்டில் இடியும் முழக்கமுமாய் மின்னல் வெட்டுமாய் … மழையின் மையக் குறியாய் ராசாத்தி…. 

இதைப்பார்த்தாலே ராசாத்திக்குக் குமட்டிகொண்டு வரும். காறித் துப்புகிற உணர்வோடு எருமைமாட்டுப் பக்கம் போய் விடுவாள். 

வருஷம் பூராவும் நடக்கிற இந்தக் கூத்துகளுக்கு இடைமில் … நல்ல காரியம் ஏதாவது தானாகக் கைகூடி வந்துவிடாதா என்று ஏங்கினாள்; நம்பினாள். நம்பிக்கை பொய்க்கவில்லை. 

ஒரூ இடத்திலிருந்து பெண் கேட்டு வந்தார்கள். தீப்பெட்டியாபீஸில் ஃபோர்மேனாக இருக்கிற மாப் பிள்ளை. சொந்த வீடு உண்டு. அவர்களும் ரொம்பக் கேட்டுவிட வில்லை. ஆறு பவுன் நகையும், மூவாயிரம் ரொக்கமும்தான். 

இந்த இடம் முடிந்து விடாதா என்று ஏங்கினாள். இந்தச் சண்டையும் சச்சரவுமான, நித்தக் கூத்து நடக் கிற வீட்டை விட்டுப் போய்த் தொலைந்துவிடலாமே என்று நினைத்தாள். 

நினைப்பில் மண்ணையள்ளிப் போட்டுவிட்டான், சங்கரப்பன். ‘அது இது’ என்று ‘அழிச்சாட்டியம்’ பேசியே…. அந்தச் ‘சம்பந்தத்தை’ விரட்டி விட்டான். 

நகை போட முடியாத நிலைமை. பணம் புரட்ட முடியாத கஷ்டம். இயலாமையை வெளிக்காட்டாமல், ஜம்பம் பேசியே அவர்களைத் துரத்திய பின்தான், ராசாத்தி விழித்துக் கொண்டாள். 

‘அய்யா திருந்தப் பேரறதுமில்லே… ஒரு வழி செய்யப் போறதுமில்லே…. என்கிற தெளிவான விரக்திக்கு வந்து விட்டாள். விரக்தி வசப்பட்ட மனசின் நினைவுகள், ஒழுங்கான திசையில்தான் செல்லாதே… குடும்பத்தின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு விட்டாள். 

தையோ நினைத்துக் கொண்டவளைப் போல… பூமாலை வெறியோடு மார்பில் மாறி மாறி அறைந்து கொண்டாள். என்னவோ கீச்சுக்குரலில் முணங்கினாள். 

கேவலப்படுத்தி விட்டு… ஓடிப் போன மகளை நினைத்து அழுதாளா…. நேற்று ஓடிப் போன புருஷனை நினைத்தாளா? இரண்டையும் சேர்த்தே நினைத்து மனசு வெடித்தாளா? 

ஓடிப்போனவர்களைத் தூற்றுவதுடன் ஊர் நிறுத்து வதில்லை. மொத்தக் குடும்பத்தையும் காறித்துப்புகிறதே… 

“மானங்கெட்ட குடும்பம்…. இப்படி ஓடுகாலிப் புள்ளையை பெத்தவ வவுத்துலே சூடு போடணும். ஊரையே அசிங்கமாக்கிட்டாளே 

“தாயைப் போலப் புள்ளை…. நூலைப்போல் சேலைன்னு பெரியாளுக சும்மாவா சொன்னாக? புள்ளை இப்படி ஓடுகாலிப் புள்ளை இப்படி மானங்கெட்டு ஓடு துன்னா… அப்பன் ஆத்தர கொணமும் அப்படித்தானே இருக்கும்? இவுக ஒழுக்கமா பொறுப்பாயிருந்திருந்தா, இந்தப் பொட்டச்சிறுக்கி இப்படிக் காரியம் செய்யத் துணிஞ்சிருக்காதே…” 

நாக்கில் ஊசிகளை வைத்துக்கொண்டு, நொந்து கிடந்த மனசுகளைக் குத்திக் கிழித்தார்களே, பாவிகள்! 

‘மகளை இழத்து விட்டோமே’ என்ற அதிர்ச்சியில் புலம்பக் கூட உணர்வில்லாமல் திகைப்படைந்து கிடந்த அந்தக் குடும்பத்தின் தலையில் விழுந்த செருப்படிகள் கொஞ்சமா? அள்ளிக் கொட்டிய அக்கினி வார்த்தைகள் கணக்குகள் அடங்குமா? ஆ….ஹ் ! நார் நாராகக்கிழித்து நாறடித்து விட்டார்களே…. 

இன்னைக்கும் இந்த ஊரு இப்படித்தானே பேசும்? எது நிஜம் என்று அறியாமலேயே யூகத்துக்கு வர்ணம் பூசிப்பூசி பேசி மகிழத்தானே செய்யும்? காயப்பட்ட மனசைக் கீறி உப்பையள்ளிப் போடுகிற குரூரம்தானே ஊருக்குத் தெரியும்? 

எல்லாம் இந்த மனிதரால் தானே! இவர் புத்தி கெட்டுப் போய் இப்படிக் காரியம் செய்ததால் தானே! பொண்டாட்டி கோவித்துக் கொண்டு போகும். சகஜம். வீட்டுக்குத் தலையாக இருக்கிற ஆம்பளை இப்படிச் செய்யலாமா? 

இதைவிட என்னைத் தூக்கிப் போட்டு நாலு மிதி மிதித்திருக்கலாமே! அரிவாளையெடுத்து ஒரே போடு போட்டிருக்கலாமே! இயலாத மனிதரைப் போல எதுக் காக ஓடனும்? என்னை ‘அரக்கி’ என்று ஊர் பேசட்டும் என்றுதானே! ‘என்ன கொடுமை செய்தாளோ, பாதகத்தி என்று வசைபாடட்டும் என்று தானே? 

அட மனுசா, இப்ப ஒமக்குத் திருப்திதானே! மனசு ஆறிப்போச்சா? என்னை அசிங்கப்படுத்திப் பார்ப்பதில் ஒமக்கு அப்படி ஒரு மகிழ்ச்சியா? 

நீர் செய்த தப்பு ஒமக்குத் தெரியலியா? இந்தக் குடும்பம் செழித்துச் சிரித்து இருந்ததும் உம்மால்தான். சீரழிந்து நாசமாய்ப் போனதும் உம்மால்தானே! 

இதை உணர முடியலியா? இதை யோசிக்கிற அளவுக்குப் புத்தியில்லியா? 

நீரே யோசித்துப் பாரும்…. எல்லாம் உமக்கே தெரியும்…. உள்ளங்கையிலே இருக்கிற புண்ணு மாதிரி. 

யோசித்துப் பார்த்தால்… இந்த மனிதருக்கு எந்தக் காலத்தில்தான் நல்ல புத்தி இருந்தது? நாளும் பொழு தும் விரட்டி விரட்டி அவர் வயது அதிகமாயிற்று. காலமும் வாழ்க்கையும் ஓடிய வேகத்தில் அவரை இழுத்துக்கொண்டு போயிற்று. 

அவராக யோசித்து முடிவு செய்து ஆரம்பித்த காரியமெல்லாம் வாழ்க்கையின் சறுக்கல்களாகவே ஆகி…. குடும்பத்தின் திசையை அலைக்கழிக்கத்தானே செய்தது … 

பூமாலையை கல்யாணம் பண்ணிய காலத்தில் சங்கரப்பனுக்குக் குடிப்பழக்கம் இல்லை. எந்தக்கெட்ட சகவாசமுமில்லை. வஞ்சகமில்லாத, கபடில்லாத உழைப் பாளியாக இருந்தான். 

பூர்வீகப் புஞ்சை ஒன்றரைக் குறுக்கம். கமலை இறவையுள்ள கிணறு. வானம் பார்த்த கரிசல் பூமி. நிலையின்றி அலைகிற மேகத்தை நம்பிய பிழைப்பு. 

வானம் பண்ணுகிற வஞ்சனையும், கூத்தும் கொஞ்ச மில்லை. நாலு வருஷத்திற்கு பெய்தும் பெய்யாமலும் காயப் போட்டு வெள்ளாமை பொசுங்கும். அப்புறம் ரெண்டு வருஷத்திற்கு சவலைப் பிள்ளை ‘கழிஞ்சு வைக்கிற’ மாதிரி மழை மேலே மழையாகப் பெய்து நாசக்காடாக்கி கெடுத்துச் சீரழிக்கும். 

தப்பித் தவறி, குருட்டாம் போக்கில் பருவம் நல்ல படியாக அமைந்து ஓரிரு வருஷம் நல்ல விளைச்சல் கண்டு விட்டால் … புற்றிருந்து புறப்பட்டு வருகிற அர சாங்களாக வியாபாரிகள் ஊருக்குள் புகுந்து அடிமாட்டு விலைக்கு அள்ளிக்கொண்டு போய் விடுகிறார்கள். 

சம்சாரி தப்பிக்கவே முடியாது. தேய்ஞ்சு போன சாட்டைக் குச்சிக்கும் கதியற்றுப் போய்த்தான் நிற்க வேண்டும். 

இப்படித்தான் சாகவும் விடாமல் வாழவும் விடாமல் சஞ்சலப்படுத்துகிற பூமியோடு மல்லுக்கட்டுவதற்கு அஞ்சாதவனாக இருந்தான் சங்கரப்பன். வீடு நிறைய பற்றாக்குறையே குடியிருந்தாலும் மனம் தளராமல் உழைத்து குடும்பத்தோணியை நகர்த்துகிற அசுர உழைப்பாளியாக இருந்தான். 

ராசாத்தி பிறந்த வருஷம். அப்போதுதான் இங்கு சிமிண்டாலை வந்தது. ஆலை வளர்ச்சிக்கும் கற்குவாரி அமைப்பதற்கும் ஏகப்பட்ட நிலங்களை ஆர்ஜீதம் செய்த போது, இவனது ஒன்றரைக் குறுக்கமும் கபளீகரம் ஆயிற்று. 

நிலத்தைத் தரமாட்டேன் என்று காட்டுத்தனமாய் சண்டை போட்டுப் பார்த்தான். புல்டோசர் போன்ற ஆலை நிர்வாகம் இவனது கூச்சலையெல்லாம் இடித்து நொறுக்கி ஒதுக்கிவிட்டுத் தன்போக்கில் நகர்ந்தது. 

நரி கூட நடமாடாத கரிசல் காட்டில் மஞ்சணத்தி மரமும், கருவேலி மரமும் தவிர வேறு எதுவும் இல்லாத அந்தக் காட்டில், ஒரு மாய வித்தை போல ஒரு நகரம் உண்டாகி விட்டது. மேகமெல்லாம் வெட்கப்பட்டு முகம் வெளுக்கிற மாதிரி … ஆலைக்குழாய் தினந்தோறும் மேகப் படையையே அனுப்பியது. சங்கிலித் தொடராய் புகைத் திரட்சியின் நீட்சி. 

புகையோடு சேர்ந்து வருகிற சிமெண்டுத் தூசி அந்த வட்டாரத்துப் புஞ்சைகளையே நாசம் பண்ணியது. நிறம் மாற்றியது. பாவம், சங்கரப்பன் மோதித் தோற்றுப் போய் அரிவாள் இழந்த அறுப்புக் காரனாக குன்றிப் போய்க் கிடந்தவனை… சிமெண்டுத் தூசி மூடிப் புதைத்தது. 

அங்கே பல தொழிற்சங்கங்கள். அதில் ஒரு தொழிற் சங்கம் ‘விவசாயி- தொழிலாளி ஒற்றுமை ஓங்குக’ என்று கோஷமிட்டது. ஆலையிடம் நிலமிழந்த சகல விவசாயி களுக்கும் ஆலையில் வேலை தரப்பட வேண்டும் என்று விடாப்பிடியாக வற்புறுத்திச் சண்டை போட்டது. 

அந்தச் சண்டை சங்கரப்பன் வாழ்வில் ஒரு விடி யலைக் கொண்டு வந்தது. 

எழுத்து வாடையறியாத சங்கரப்பனுக்கு கற்குவாரி யில் கல்லுடைக்குற வேலை கிடைத்தது. காக்கி யூனி ஃபார்ம் கிடைத்தது. கனத்த பூட்ஸ் கிடைத்தது. நல்லெண்ணெய் கிடைத்தது. சோப்பு கிடைத்தது. இவன் அசந்து போகிற அளவிற்கு சலுகைகளும் சம்பளமும். 

பொழுது பூராவும் வெயிலில் பாடுபட்டு நார் நாராய் கிழிந்து போய் வந்தால்…. ஏழு ரூபாய் கூலி கிடைக்கிற விவசாயத்திலேயே பழகிப் போயிருந்த சங்கரப்பனுக்கு… இந்தச்சம்பளமும் வேலையும் லாட்டரிச்சீட்டு அதிருஷ்டம் போலத் தோன்றியது. ஆகாசக் கோட்டையைப் பிடித்து விட்ட மாதிரி தரையில் கால் பதிக்க விடாத பெருமிதம். 

வீடே நிறம் மாறி ஒளி துலங்கியது. சுவர்களில் சுண்ணாம்போடு கொஞ்சம் பெயிண்டும் வர்ணம் காட்டியது. சோளக்கஞ்சி, கம்மங்கஞ்சி என்பதெல்லாம் பழங்கதையாகி, எந்நேரமும அரிசிப் பருக்கைகள். பூமாலைக்கு மாசா மாசம் புதுச்சேலைதாள். ராசாத் திக்கு வாங்கிக் கொடுத்த கவுன்களுக்கு கணக்கு வழக்கே கிடையாது. 

இந்தக் குட்டி வசந்தத்தை ஜீரணிக்க முடியாமல் சங்கரப்பன் தத்தளித்தான். கையில் பிடிபடாத காற்றாக அலைந்தான். 

சொல்லிச் சொல்லி மாய்ந்து போவான். ‘இதெல் லாம் ராசாத்தி பிறந்த பிறகுதான். எல்லாம் அவளோட யோகம். இன்னும் என்னென்னவோ யோகம் அடிக்கப் போகுதோ” என்பான். 

வீடு பூராவும் குதூகுலம். ஒளிமயமான உல்லாசம். 

பூமாலை நிஜமாகவே புதுப் பெண்ணைப்போல மஞ்சள் கிழங்கு போல ஆகிவிட்டாள். காட்டு வேலைக் குப்போகாமல் வெயில் முகம் படாமல் – வீட்டிலேயே நிழல் வாட்டத்திலேயேயிருந்ததால் உடம்பில் ஒரு இளமை மினுமினுப்பு. புதிய நிறத்திற்குரிய கனிவு. 

மஞ்சள் பூசிய முகமும், குளித்து முழுகிய ஈரக்கனி வும், பூவாசத்தோடு பூமாலையைப் பார்த்து சிறு பிள்ளை யைப்போல கிளுகிளுப்பான். 

“என்ன பூமாலை ஒனக்கு மட்டும் நாளும் மாசமும் பின்னாலேயே போகுதா?” 

“ஏன் எதுக்கு கேக்கீக?” 

“ஒரு நாளைக்கு ஒருநாள்…. எளமையாகிக்கிட்டே போறீயே, அதுதான் கேக்கேன்” 

வெட்கப்பட்டுப் போய் கன்னத்தில் குழிவிழ உதடு களை சுழித்து குறுநகை செய்தாள். CUT.., உங்களுக்கு கொழுப்பு ரொம்பத்தான்” 

“இல்லே பூமாலை, நெசமாகவே சொல்றேன், நம்ம கல்யாணத்தப்ப இருந்ததைவிட, இப்ப எம்புட்டு அழகாயிருக்கே தெரியுமா? இந்த வருஷம் சடங்கான கொமரி கணக்கா!” 

உள் மனசுக்குள் பனிச்சிரிப்பு, மொட்டு வெடித்த மல்லிகைப் பூக்களாய் உதிரும். அதன் சுகந்த மணம்…. அவள் கண்களில் இடம் மாறி மின்னல் வெட்டிச் சிரிக்கும். 

குவாரியில் வேலை கிடைத்த ஒன்றிரண்டு பேரைத் தவிர…. மற்றபடி கிராமம் முழுவதும் பழைய கதியில்தான். ஏழு ரூபாய் கூலிக்கும் வேலை கிடைக்காமல் அலைகிற கூலிக்காரர்கள், நிலம் இருந்தாலும், கடனும் உடனு மாய்ப் பொதியேற்றிய கழுதையாக அசையும் சம்சாரிகள். படித்துப் பட்டம் பெற்ற ஒன்றிரண்டு பேர்களும் வீசிய வெறும் கையும் வீதி நடையுமாய் அலைகிற கோலம். 

வறட்சியைத் தவிர வேறு எதையும் பார்த்தறியாத கிராமத்து மக்கள் கையில் துட்டு இல்லாமல் கைமாற் றுக்கும் கால் மாற்றுக்கும் அலைந்து கொண்டிருக்கும் போது இவன் கையில் மட்டும் வாடாத சில்லறைப் புழக்கம். 

சங்கரப்பன் நடையே மாறி விட்டது. ஆள் ஒரு சாண் கூடுதலாகி விட்டதைப் போல ஒரு நிமிர்வு. 

வசந்த காலத்தைப் பின் தொடர்கிற கோடைகாலம் என்பது வாழ்க்கையிலுமா? 

அந்த நேரம்தான், அறுபது லட்சம், எழுபத் தேழு லட்சம் என்று பம்பர் குலுக்கல் பிரபலமாய் பேச வைத்தது நமது பத்திரிக்கைகள். 

விஞ்ஞானிக்கு, விருதுகள் பெறும் எழுத்தாளருக்கு, வரதட்சணையை எதிர்த்துப் போராடிய வீராங்கனைக்கு, பத்து வருஷம் முதலமைச்சராய் இருந்தும் ஒற்றைப் பைசாகூட சம்பாதிக்காத ஒழுக்கமான அரசியல்வாதிக்கு, விளம்பரமில்லாமல் மக்களுக்காக அன்றாடம் போராடித் தியாகம் செய்கிற அரசியல் போராளிகளுக்கெல்லாம் இடமே தராமல் இருட்டடிப்பு செய்து விட்டு, 

‘கள்ள’ த்தோணி ஓட்டும் கடத்தல் ‘மன்னர்’கள் பஸ் நிலைய விபச்சார ‘அழகிகள் – கல்லூரி மாணவிகளை கேலி செய்து கலாட்டா செய்த குறும்பு வாலிபர்கள். லாட்டரிசீட்டில் யோகமடித்தவர்கள் – கற்பழிப்புக்குள்ளான பெண்கள் –

இவற்றையே முதல் பக்கச் செய்திகளாக்கி, சமுதாயமே இப்படித்தான்’ என்ற உணர்வுக்கு வாச கனை வாசிக்கப் பழக்கி விடுகிற வாசக விரோதப்பணி யில் நமது பிரபல்ய பத்திரிக்கைகளை ஜெயிப்பது கஷ்டம். 

எழுபத்தேழு லட்சம் பரிசு சீட்டு யோகம் அடித்து பக்கத்து ஊரைச் சேர்ந்தவர். அவர் எஸ்டேட்டில் ஃபோர்மேனாக இருப்பவர். அவரது குடும்ப ஃபோட்டோ, வாழ்க்கை சரித்திரம், லட்சியம் எல்லாம் பக்கம் பக்க மாய்…. போட்டிகளும் கட்டுரைகளுமாய்…. 

பத்திரிகை செய்த தடபுடல், வாசிக்கத் தெரியாத கிராமத்து அப்புராணிகளையும் பேச வைக்கிறது. பிர மிக்க வைக்கிறது. 

தனக்கும் இப்படியோர் யோகம் அடித்தால்… பத் திரிகையில் படம் வரும். செய்தி வரும். நாடு முழு வதும் பேசப்படுகிற மையப்பொருளாவோம்… என்கிற சபலம் தட்டும். 

சும்மாவே ‘ராசாத்தி யோகம்’ என்ற மயக்கத்தில் மிதந்து கொண்டிருகிற சங்கரப்பன் இந்தச் சபலத்தீயில் விட்டில் பூச்சியாய் விழுந்தான். 

விளையாட்டாய் வாங்கினான். அப்புறம் கட்டுக் கட்டாய்… எப்போதேனும் பரிசு விழ… மற்ற சீட்டுக் களையெல்லாம் கிழித்து எறிய, உள் மனசுக்குள் சப்பென்று அறைகிற ஏமாற்றத்தின் ரகசியவலிகள்…. 

அந்த அவமானத்தை யாரிடம் பகிர்ந்து கொள்வது? மூச்சு முட்டுகிற நினைவுக் குழப்பம், அவ்வப்போது ஜாலிக்காக தண்ணியடிக்க ஆரம்பித்தான். 

சாராயக்கடையை திறப்பதும் மூடுவதுமாய் கண்ணா மூச்சி காட்டி மாய்மாலம் செய்கிற சர்க்கார், குடிக்கலாம் என்கிறதா, குடிக்காதே என்கிறதா? ஒரு இழவும் புரியமாட்டேன் என்கிறது. 

மூடிக்கிடந்தாலும் எங்கேயும் தாராளமாய்க் கிடக்கிற சாராய யதார்த்தம். ஏலத் தொகை வசூலிக்கிற அதிகாரிகளுக்குப் பதிலாக மாமூல் தொகை வாங்குகிற ‘காக்கி’ சர்க்கார். 

குடிதண்ணீர் தட்டுப்பாடு உள்ள கிராமங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், சாராயத் தட்டுப்பாடுள்ள கிராமம் ஒன்றுகூட இல்லை என்று எந்தக் கோவிலிலும் சத்தியம் பணணிச் சொல்லி விடலாம். 

இதெல்லாம் என்ன? குடிக்கச் சொல்லித்தான் சர்க்கார் கள்ளத்தனமாய் அறைகூவல் விடுகிறதோ! குடியரசு சொல்வதை குடிமகன் மீறலாமா? அறை கூவலை ஏற்றுக்கொண்டான். 

ஏறுவது யுக்கால வேலை. சறுக்குவது நிமிஷ நேர வேகம். கை நிறைய காசுப் பழக்கம் உள்ளவன் குடிப் பழக்கத்துக்கு ஆளானால்…. நேரம் ஏது? பொழுது ஏது? 

எல்லா நேரமும் போதைப் பொழுதுதான்…. 

தலைகீழ் மாற்றம். 

சைக்கிள் ஓரிடத்திலும், இவன் ஒரு புழுதியில் புரண்டு கிடப்பது என்பதுவும் வழக்கமாகி விட்டது. 

அவனைத் தூக்கிக் கொண்டு வந்து வீடு சேர்க்க வேண்டும். அதற்காக அவன் வெட்கப்படவும் இல்லை. ரோஷாக்கினியெல்லாம் போதையின் ஆழத்தில் தேனில் சிக்கிய ஈயாக நனைந்து போக…. எந்த அவமானத்தை யும் அசட்டுச் சிரிப்பால் துடைத்துக் கொண்டான். 

‘“ஏண்டா இப்படி புத்திக் கெட்டுப் போறே?” யாராவது பெரியவர் மனம் சகியாமல் கண்டித்து விட் டால் போதும், கல்லெறியப்பட்ட நாயாக வீறிடத் துவங்கி விடுவான். 

“எந்தப் பயலும் எனக்குப் புத்தி சொல்ல வேண்டி தில்லே. எவனுக்கு அந்தத் தகுதி இருக்கு? நா எதுல குறைஞ்சுட்டேன்? குடிச்சதுனாலே எதுலே குறைஞ்சுட் டேன்? எனக்கு சமதையா இந்த ஊர்ல எவன்கிட்ட துட்டு இருக்கு?” 

தெருவில் நின்றுகொண்டு குரைத்துக் கொண்டிப்பான். கூச்சப்படமாட்டான். 

‘அற்பனுக்கு வாழ்க்கை வந்தா, அர்த்த ராத்திரியிலே குடை பிடிப்பானாம்…. அப்படியிருக்கு இந்தப்பயலோட ஆட்டம்’ என்று ஒரு சிலர் வாய்க்குள் வார்த்தையாக முணங்கிவிட்டு முகச் சுளிப்போடு நகர்ந்து விடுவார்கள். 

பூமாலை புழுங்கினாள். மருகினாள். வீட்டுக்குத் தலையாக இருக்க வேண்டிய மனிதரே, இப்படி பாத மாகிப் புழுதியில் புரண்டால் என்ன செய்வது? எவ்வளவு இழிவாக இருக்கிறது. 

மனுசருக்கு சுரணை என்பதே இல்லாமல் போய் விட்டதே. 

பூமாலை கண்டித்தாள். சண்டை போட்டாள். திட்டிப் பார்த்தாள். ஊஹும், எதற்கும் அவன் மசிவ தாக இல்லை. ஓடும் வெள்ளத்தில் மிதக்கும் பலகை யாக தன்போக்கில் போய்க் கொண்டிருந்தான். 

தாறுமாறாக தண்ணியடிப்பது…. கண்டவனுடன் சண்டை போடுவது…. மறுநாள் அவனுடன் கொஞ்சிக் குலவுவது. 

நேரம் கெட்ட நேரப் போதையினால், ஷிப்டுக்கு வேலைக்குப் போகாமல் சம்பள இழப்புகள். சிறுத்துப் போகிற சம்பளக் கவரை அரித்து தின்கிற லாட்டரிச் சீட்டு. 

வீட்டில் மீண்டும் பழைய வறுமையின் முகம். சோளக்கஞ்சி நடமாட்டம். கூலி வேலைக்கு பூமாலை யோடு ராசாத்தியும் செல்ல வேண்டிய அவலம். படிப்பை பாதியோடு நிறுத்திவிட்டு அடுப்பாங்கரையை கட்டியாள வேண்டிய அவசியத்தில் பவளம்…. 

எங்கு பார்த்தாலும் வட்டிக்கடன்கள், பற்றாக்குறை, நச்சரிப்புகள். 

ஒருநாள் சாராயம் கடனுக்குத் தர மறுத்து விரட்டப் பட்டான் சங்கரப்பன். அந்த வெறியில் இவனே சாராரம் ‘காய்ச்சினான்’ விற்றுப் பார்த்தால்…. நல்ல ஆதாயம். 

ருசி தட்டியது. பாதை புரிந்தது. 

சாராயம் காய்ச்சுவதை தொழிலாக்கினான். ஆள் போட்டு காய்ச்சினான். மூன்று ஊர்களில் ஆள்போட்டு விற்றான். மாமூல் தொகையை கட்டி விட்டான். 

போலீஸ்காரர்கள் இவனைப் பார்த்து சலாம் போட…. தன் கையில் பெரிய அதிகாரமே வந்து விட்டதாக பிரமை. பரிவாரங்கள் சுற்றிலும். பெருமை பிடிபடவில்லை. 

நிஜமாகவே நல்ல ஆதாயம். திமுதிமுவென்று வரு மானம். போலீஸ் ஆஃபீஸர்களின் பரிச்சயம். அறிமுகம். 

‘குடிகாரப்பய’ என்று ஏளனம் செய்தவர்களையெல்லாம் தோற்கடித்து விட்டதாய்…. மனசில் ஒரு மதர்ப்பு…. மனத்திமிறல். 

முறுக்கேறிக் கிடந்த மனசு மூளையின் கழுத்தை நெறித்து விட்டதோ! அறிவை ஜீரணித்து விட்டதோ! 

இல்லையானால் சங்கரப்பன் அந்தக் காரியம் செய் வானா? வயிற்றுப் பிள்ளையை நம்பி, மாடு மேய்த்துக் கொண்டிருக்கிற பிள்ளையின் கழுத்தைத் திருகுகிற அசட்டுத்தனத்தை ஒரு மடையன் கூடச் செய்வானா? 

சங்கரப்பன் செய்தானே!. 

பொன்முட்டையிடும் வாத்து வயிற்றை கிழித்துப் பார்த்த அசடனைப் போல…. சாராய வியாபார வரு மானத்தை நம்பி காமதேனு பசுவாக இருந்த கல் குவாரி வேலையை ராஜினாமா செய்து விட்டான். பூமாலையின் கதறலை – புலம்பலை காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. 

கலக்கலும், வியாபாரமும் தடபுடல். எல்லாம் ஆறு மாதம் தான். பெரிய சாராய வியாபாரி ஒருத்தனுக்கு இந்த மூன்று ஊர்கள் மீது குறி விழுந்தது. 

மாமூல் தொகையை அவன் உயர்த்த… வம்பு, வழக்குகள், சண்டை, சச்சரவுகள். பி.எஃப். தொகை முழுவதும் கோர்ட் செலவில் காலியாயிற்று. 

இவனும் மாமூல் தொகையை உயர்த்தினான். போட்டி என்று வந்து, பணம் தண்ணீராக… 

என்ன இறைத்து என்ன செய்ய? பெரிய திமிங் கலத்தை சின்ன மீன் என்ன செய்து விடும்? அதன் வாய்க்குள் விழுந்து ஜீரணமாவதைத் தவிர வேறு கதி? 

சகலத்தையும் பந்தாக நினைத்து எற்றி உதைத்து வெற்றி வாகை சூடி வருவதாக சவடால் அடித்துத் திரிந்த சங்கரப்பனை, வாழ்க்கை ஏற்றி விளையாடியது. 

அந்தரத்தில் சீறிச் சுழன்ற பந்து சகதியில் வந்து விழுந்து விட்டது. நகர்ந்து உருள வழியில்லை. 

ஊரும் வீடும் அவனைக் கொத்திப்பிடுங்கியது. அதைவிட அவனை அவனது உள் மனசு கொடூரமாகக் கொத்திக் குதறியது. 

அவனை அவனாலேயே மன்னிக்க முடியவில்லை. ‘நீயும் ஒரு மனுசப் பயலா’ 

என்று காறித் துப்புகிற உள்மனசு. நமைச்சல். நமைச்சலை சமாளிக்க சாராயம். 

ஏழு ரூபாய்க்கூலி வேலைக்குக் கூட உடம்பில் சக்தி யில்லை. விறைத்து விறைத்து அடங்குகிற நரம்புகள். ஒரேயடியாக துவண்டு தளர்ந்து விட்ட உடல். வீட்டுக் குள் சண்டைகள், சச்சரவுகள், கோபதாபங்கள் .. வீராப் புப்பட்டினிகள். 

நிலைமை இப்படி கழுத்துப் பிடியாக பிடித்து நெரிக்கிற சமயத்தில்தான் செருப்பால் அடிப்பதுபோல ராசாத்தி அந்தக் காரியம் செய்தாள். 

அருமை மகள் அம்மாவின் ஜாடையாக மடியில் கிடந்தவள் உள் மனசின் ஆழத்தில் உறைந்து கிடந்த அம்மா பாசத்துக்கு மறு உயிரும். உருவும் தந்த உயிர்ச் சிற்பமாய் தோளில் தவழ்ந்த செல்வமகள். தன் யோக மாய் நின்ற மங்கள மகள்… 

அவளையா ந்தக் கதியில் விட்டேன்? ஐயோ… அவளுக்கு என்ன நேருமோ? கூட்டிக்கொண்டு போன பயல் வைத்துக் காப்பாற்றுவானா? அனுபவித்து முடித்து விட்டு சக்கையாக எறிந்து விடுவானா?ஐயோ…. என் ராசாத்தி…. 

பூமாலை படித்துப் படித்துச் சொன்னாளே… “அவளுக்கு ஒரு வழியைப் பாருங்க. ஒரு நல்லதுக்கு ஏற்பாடு செய்யுங்க” என்று 

சண்டி மாட்டை தார்க்குச்சியால் குத்துவதைப் போல இடித்துச் சொன்னாளே…. 

சண்டி மாடாகவே இருந்துட்டேனே… கண்டும் காணாமல், கேட்டும் கேளாமல் அசட்டையாக இருந்துட்டேனே…. 

இருந்த மூலதனம், சக்தி எல்லாவற்றையும் திமிறில் தொலைத்து விட்டு நொண்டி மாடாக முடங்கிய நேரத்தில்… 

என் ரத்தப் பிறப்புக்கு இந்த கதியா? என் முகத் தில் கரியைப் பூசிவிட்டு, அவளும் தன் தலையில் 

தன் நெருப்பை அள்ளிப் போட்டுக் கொண்டாளே… 

எல்லாம் இந்தப் பாவியால் வந்த வினை. 

உள் குத்தலாகக் குத்தித் துளைக்கிற மனசாட்சி யின் அவஸ்தை. எத்தனையோ பூச்சிகளின் அரிப்புக்கு ஆளாகியும் இற்றுப் போகாமல் இன்னும் துடித்துக் கொண்டிருக்கிற ஆத்மா…. மகளை எண்ணி, எண்ணிக் கருகியது. 

சங்கரப்பன், உள்ளும் புறமும் உடைந்து போய்…. வெறும் கூடாக – நடமாடும் பிரேதமாக அலைந்து கொண்டிருந்தான். 

மதியக் கரண்டு. பொழுது அடைவதற்குள் கரண்டு நின்றுவிடும். அகுற்குள் குளிக்கப் போயாகணும். பவளம் பரபரத்துக் கொண்டிருந்தாள். 

கூலிக்குக் களை வெட்டப் போய் விட்டு இப்போது தான் வந்திருந்தாள். நாலைந்து நடை தண்ணீர் சுமந்தாள். மணி ஐந்துக்கு மேலிருக்குமோ? 

மனசு கிடந்து தவித்தது. குளிக்கவில்லையானால் உறங்க முடியாது. 

“அம்மா! அய்யா எங்கே போயிருக்காரு?….” 

“கீழக்காட்டுலே வெறகு வெட்டப் போயிருக்காரு. அவரு வந்து சேர இருட்டிரும்.” 

“அம்மா நா குளிச்சிட்டு வாரேன்.” 

“பொழுது சாயப் போகுது வெருசா வந்துரு…” 

“ஆட்டும்மா” 

பூமாலைக்குப் பதிலைச் சொல்லிக் கொண்டே மாற்றுச்சேலை, பாவாடை, சட்டையை எடுத்தாள். மனசுக்குள் இனம் புரியாத பரபரப்பு. பரவசம். மஞ்சளை எடுத்துக் கொண்டாள். கால்களுக்கு முன்பாக ஓடுகிற மனசு. 

ஓட்டம் போன்ற நடை. அவசரப்பட்ட நடை. ஓடி ஓடித்தாவுகிற மனசு. வாலிப மனசு. கொம்புக்கு ஏங்குகிற கொடியின் நுனி மனசு. 

மனசுக்குள் முத்து. 

ஓடையைத் தாண்டிக் கரையேறினாள். தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிற முத்து. அவனைக் கண்டதும்- 

கன்றுக்குட்டியாகத் துள்ளுகிற மனசு. தொண் டையைச் செருமினாள். 

வாய் மடையைத் திருப்பிவிட்டு நிமிர்ந்த அவன், செருமல் சத்தத்தில் திரும்பினான். அவன் முகத்தில் மலர்ச்சி. சாயங்கால மஞ்சள் வெயிலின் பிரகாசமாய் கண்கள். 

சன்னமாய் விசிலடித்தான். பொழியில் நடந்து கொண்டே ‘ஸ்ஸ்ஸ்’ஸென்று அவளைப் போலியாக அரட்டினான். 

“ஏய் பவளம், எங்க போறே, குளிக்கவா?” 

“இல்லே, கோயிலுக்கு. பாத்தாத் தெரியலே?” 

அவன் குறும்பாக சிரித்தான். 

“சாமி இங்க இருக்கேன். நீ எதுக்கு கோயிலுக்குப் போகணும்?” 

“சாமியாம், சாமி! மூஞ்சியைப்பாரு” 

“சரி சரி…” 

“கரண்டு நிக்கிற நேரம். சீக்கிரம் குளிச்சு முடி. நா வந்து சேர்ரேன்” 

”வருவீக, வருவீக! களை சுரண்டியை திருப்பிப் பிடிச்சு அடிச்சா…. வருவீக” 

அவன் கேலியாகச் சிரிக்க, அது அவளையும் தொற்றிக்கொள்ள, மனசுக்குள் பூக்களின் சிரிப்பு. பனி யின் சிலிரிப்பு. 

கிணற்றை நெருங்கி விட்டாள். மோட்டார் தடதடக்கிற இரைச்சல். அள்ளியிறைக்கிற நீர், வெள்ளிக் கற்றையாக சிமெண்ட்டுத் தொட்டியில் பாய்ந்து நுரை பெருகி வழிகிறது. 

அவசரமாகத் தொட்டிக்குள் இறங்கி, தலையைக் கொடுத்தாள். சப்பென்று அறைகிற வேகத்தில் வந்து மோதுகிற நீர்க்கற்றை. கூந்தலின் எண்ணெய்ச் சிக் கெல்லாம் பறந்தது. 

இங்கிருந்தே முத்துவைப் பார்த்தாள், பரவசத்தில் துள்ளுகிற மனசு. “கண்ணைப் பாரு…. இங்கேயே பார்த்துக்கிட்டு” என்று கிளுகிளுப்பாய் முணங்கிக் கொண்டாள். 

நனைந்த சேலையை உரித்தாள். பாவாடையை அவிழ்த்து, உயர்த்தி பற்களால் கவ்விக் கொண்டு ஜாக்கெட்டை உரித்தாள். மார்புக்கு மேலாக பாவாடையைக் கட்டிக் கொண்டாள். சேலையையும், பாவாடையையும் துவைத்துப் பிழிந்து விட்டு, மறுபடியும் குளித்தாள். 

மஞ்சளைத் தேய்த்து முகத்தில் பூசிக்கொண்டாள். 

தலையைக் கொடுத்தாள். மாறி மாறி உடம்பைத் திருப்பி திருப்பி நீர்க்கற்றையில் காட்டினாள். 

இப்படிக் குளிப்பதே தனீ…ச் சுகம். உழைத்துக் களைத்து வேர்வையில் நசநசத்த உடம்பை அன்பாய் அடித்துத் தடவி கொடுக்கிற தாய்மை உணர்வான நீர் வேகம். அழுக்கைக்கழுவி உடம்பையும் மனசையும், துடைத்து எடுக்கிற இன்பப் பரவசம்… 

டடக்! 

இதென்ன கொடுமை, கரண்டு நின்று விட்டதே. 

ஈரக்கூந்தலை அள்ளி முடிந்து கொண்டாள். மாற்றுத் துணியை எடுத்துக் கொண்டு பம்ப் ஷெட் ரூமுக்குள் நுழைந்தாள். 

மனசுக்குள் அச்சப்படபடப்பு ; ஆர்வத் துடிதுடிப்பு. ‘வந்துருவாரோ….’ 

அவசர அவசரமாய் உடை மாற்றிக் கொண்டாள். கீழே விழுந்து கிடந்த ஈரப்பாவாடையை எடுத்து நிமிர்ந்தால் – 
வாசலை ‘மறித்துக்’ கொண்டு முத்து. 

பதைத்துப் போய்க் கேட்டாள். 

“எப்ப வந்தீக?” 

“அப்பவே வந்துட்டேன். ஜாக்கட்டைப் போடு றத்துக்கு முந்தியே…” 

‘’ச்ச்சீய்! வெக்கமாயில்லே?” 

குறும்பாகச் சிரித்தான் 

“நா எதுக்கு வெட்கப்படணும்? ஆம்பளை சிங்கம்” 

“அசிங்கம். இதெல்லாம் எனக்குப் பிடிக்காது” 

அவள் முகத்தில் அசலாகவே வெறுப்பு. மெல்லிய அசூயை. முகம் சட்டென்று வாடியது. 

“அட நீ ஒண்ணு, நா சும்மா சொன்னேன். நா இப்பத்தான் வந்து நிக்கேனம்மா, ஏங்கிட்டே அப்படிக் கள்ளக்குசும்பு எல்லாம் இருக்காது” 

“அதுதானே பாத்தேன்….” 

முகத்தில் இறுக்கம் சற்று தளர்ந்தது. கோபத்தில் விரிந்த இமைகள் படபடத்து அடங்கியது. அவன் மெல்லச் சிரித்தான். 

“என்ன சிரிப்பு?’ 

“பொம்பளைங்களை புரிஞ்சுக்கிடுறது கஷ்டம்தான். ஆனால், ஒன்னைப் புரிஞ்சுக்கிடுறது அதைவிட கஷ்டமாயிருக்கு” 

“அதான் என்னோட சிக்கல்” 

“என்ன சிக்கல்?” 

“அய்யாவை நம்பி இருக்கவும் முடியாது. அக்காளை மாதிரி ஆயிடவும் கூடாது. அதுதான் சிக்கல்.” 

“புரியுது பவளம். அதுவும் கரெக்ட்தான். நேத்து தான் எங்கம்மாகிட்டே ஒன்னைப்பத்திச் சொன்னேன். மொதல்லே யோசிச்சாக.நா ஒரே பிடிசாதனையா சாதிச்சேன். அவுகளுக்கும் என்னை விட்டா வேறயாரு இருக்காக? சம்மதிச்சுட்டாக.” 

”நெசமாவா?” 

“நெசந்தான்” 

அவள் முகத்தில் இருட்டு. கண்களில் ஈரக்கனம். படபடவென்று துடிக்கிற ஈர இமைகள். பிடிபட்ட பறவையின் சிறகாக அடித்துக் கொள்கிற மனசு. 

“எங்கய்யா இருக்குற நெலமையிலே…. வெறுங் கட்டையாகத்தான் உங்க வீட்டுக்கு வருவேன்.”

நனைந்த கண்கள் தாழ, வருத்தத்துடன் தலை குனிந்தாள். கனிந்த உதட்டில் மெல்லிய துடிப்பு. 

பவளத்தை விட நகை நட்டு பெருசா? நாம அன்போட சேர்ந்து பாடுபட்டா நகை வாங்க முடியாதா என்ன? எல்லாம் மனசுதான் முக்கியம் பவளம். 

“பவளம்கிறது வெறும் பேருதானே! ஒரு உப்புக் கல்லுக்குக் கூட பெறாதே….” 

“பவளங்கிறது ஒரு பேரு மட்டுமில்லே ஒரு மனசு, ஒரு கொணம், ஒரு மனுசி, அதுக்கு நூறு பவுன் நகை கூட ஈடாகாது தெரியுமா?” 

கலகலவெனச் சிரித்தான், மனசின் நிறைவு முழு வதும் பொங்கிப் பிரவகிக்கச் சிரித்தான். என்ன இது இவள் முகத்தில் பீதி? கண்களில் ஏனிந்த கிL?” 

சட்டென்று திரும்பிப் பார்த்தான். 

கோடாரியும், அரிவாளுமாய் சங்கரப்பன். ரௌத் ரமாய் நிற்க சங்கரப்பன் உடம்பெல்லாம் வேலிமர இலைகள். 

பவளம் உருவிக் கொண்டு ஓடிப் போய் விட்டாள். முத்து மனசுக்குள், மெல்லிய மிரட்சி. அப்படியோர் வெறி பிடித்த தோற்றத்தில் சங்கரப்பன். 

இதே மாதிரி விஷயத்தில் மூத்த மகளைப் பறி கொடுத்து ஆறு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள், இவளும் இதே கூத்தா நடத்துகிறாள்?. 

”எம் மக கூட என்னடா பேச்சு, ஒனக்கு?” 

ஆத்திரமாய் கேட்ட அவன், ஆவேசமாய் கோடரி யைத் தலைக்கு மேலாக ஓங்கினான். பாய்ந்தான். 

“மாமா….என்ன? ஏதுன்னு? கேளுங்க….” என்று சொல்லிக் கொண்டே விருட்டென்று நகர்ந்து கொண்டான். ‘ணங்’ கென்று தரையில் மோதிய கோடாரியை காலால் மிதித்து, வாலிபச் சுறுசுறுப்போடு பறித்துக் கொண்டான். 

சங்கரப்பன் அங்கும் இங்குமாய்ப் டரபரத்தான். ஓடிப் போய் ஒரு கல்லைத் தூக்கினான். முத்து பயப்படாமல் நின்றான். கண்டிக்கிற தோரணையில் சிடுசிடுத்தான். 

“எல்லாத்தையும் தொலைச்சு நாசமாக்கினீரு. புத்திக்கெட்ட ஆத்திரத்திலே பவளத்தோட பொழப் பையும் நாசமாக்கிடாதீரும்.” 

“என்ன சொல்றே?” 

“நம்ம நெலவரமெல்லாம் அறிஞ்சுதான் பவளத்தை ஆசைப்படுதேன். அவளும் ஆசைப்படுதாள். எங்கம்மா வும் சம்மதிச்சிட்டாக”. 

“நா சம்மதிக்க வேண்டாமா? எம்புள்ளை பொண் டாட்டி பத்தி ஒனக்கென்ன கவலை?” 

“நீரு எதைப்பத்திதான் கவலைப்பட்டீரு? ஒமக்கு சாராயம்தான் பொண்டாட்டி. லாட்டரி சீட்டுதான் புள்ளை. வேற எதைப்பத்தி ஒமக்குக் கவலை?’ 

“வீணா சீரழிஞ்சு போகாதே. வார்த்தையை அளந்து பேசு.” 

“சும்மா குதிக்காதீருமய்யா, பொழப்பை அளந்து பாக்கத் தெரியாம தொலைச்சவரு. வார்த்தையை வந்து அளக்க வந்துட்டாரு.” 

”ஏலேய்….’ என்று சீறலை அருவருப்போடு முகத்தை சுளித்து அலட்சியப் படுத்திவிட்டு, அவன் பாட்டுக்குப் போய்விட்டான். 

அவனது சொற்கள் சங்கரப்பனுக்குள் கோடாரி வெட்டாக வந்து விழுந்தன. அவரை வெட்டிச் சரிக்கிற அவமானம். அப்படியே ஸ்தம்பித்துப் போனார். 

ஆத்மாவையே கதறடிக்கிற சாட்டைச் சுழற்சியாக வார்த்தை விளாசல்கள். 

“சின்னப்பய என்ன பேச்சுப் பேசிட்டான்.” 

பொங்கிக் குமுறிய ஆத்திரம், பீறிட வழியின்றி முட்டி மோதியது. கையாலாகாத்தனமாய் பூமாலை மீது திரும்பியது. 

இவரைக் கட்டிப் போட்ட பலவீனமே, இவருள் ரௌத்ரமாய் தீவிரப்பட, அடிபட்ட பாம்பின் சீற்றமாய் வீட்டுக்குள் பாய்ந்தார். 

“ஏய் பூமாலை எங்க அந்தச் சிறுக்கி?” 

“அவா கிடக்கட்டும். நீரு எதுக்கு இம்புட்டுக் கோபத்துல வாரீரு?” 

“இந்தக்குட்டி நாய் செய்ற கூத்தாலே, ஒரு சின்னப் பய என்னை எம்புட்டுக் கேவலமாப் பேசிட்டான், தெரியுமா?” 

கொதிக்கிற மனசோடு வார்த்தைகள் தெறித்துச் சிதற நடந்ததைச் சொன்னார். தன் மனைவியிடமல்ல.. தாயிடம் சொல்லி ஆறுதல் தேடுகிற சிறுவனைப் போல.. ஆவல் பதைப்போடு சொன்னார். 

சண்டை சத்தம் வருகிற போதெல்லாம் சங்கரப்பனை பூமாலை திட்டுவாள். எவ்வளவோ பேசி இருக்கிறார். 

“ஏந்தாலியை அறுத்துக்கிட்டு, நீரு தொலைஞ்சு போரும். எதுக்கு எங்களைச் சேத்து சீரழிக்கணும்?” என்று கூட மனக் கொதிப்பில் சீறிச் சினந்திருக்கிறாள். 

ஆனால், திட்டுகிற உரிமையை வேறு யாருக்கும் இதுவரை விட்டுக்கொடுத்ததேயில்லை. அவள் காது பட சங்கரப்பனை யாராவது திட்டிவிட்டால் போதும், ‘பிலு, பிலு’ வென்று சண்டைக்குப் போய் விடுவாள். 

அப்பேற்பட்ட பூமாலை இப்போது நிச்சலனமே உணர்ச்சியற்ற வறண்ட நிலையில் முகம். 

சங்கரப்பனுக்கு இந்த நிச்சலனமாய் ஆச்சரியமாய் உள்ளுக்குள் ஏமாற்றம் ஒரு புழுவாய் நெளிந்தது. 

அவர் பார்வை, குவிமையமே அவள் முகத்தில், மெல்ல உதடுகள் அசைந்தன. 

“அந்தத் தம்பி சொன்னதுல் என்ன தப்பு இருக் குன்னு…. இந்தக் குதி குதிக்கீக?” 

பூமாலையின் கண்டிப்பு கலந்த அந்தச் சொற்கள். அவருக்குள் தீ மாலையாய் விழுந்தது. சுரீரென்றது. 

காலடியிலிருந்த ஒற்றைப் பலகையையும் உருவிக் கொண்டதைப் போன்று ஆழ் மனசில் பகீரென்றது. 

சகலத்திலிருந்தும் அந்நியப்பட்டிருந்த சங்கரப்பனை பற்றியிருந்த ஒரே உறவு பூமாலைதான். அன்புகாட்ட வும், இரக்கம் காட்டவும், தனக்காக வக்காலத்து வாங்கிச் சண்டை போடவும் ஓர் உயிர் இருக்கிறது; உயிருடன் சகலத்தையும் பகிர்ந்து கொள்ள ஓர் ஆத்மா இருக்கிறது. 

அந்த நம்பிக்கையும் இதோ…. நழுவிக்கொண்டது. 

மக செய்ற தப்பைக் கண்டிக்கிற உரிமைகூட எனக்கு இல்லை என்கிறாளா? இவள் என்னில் கலந்தவளா, தள்ளித் தள்ளிப் போய் கொண்டிருக்கிற வெறும் ஜடமா? 

அவள் முகத்திலேயே அவரது கண்கள். உள் மன சுக்குள் அறுபட்ட ரண வேதனை. கல்லடிபட்ட புறா வாக மனசு படபடக்க…. பார்வை பறவையாடிது. அலங்க மலங்கப் பார்த்தார். 

வேறு எந்த வார்த்தையும் பேசவில்லை. பேச மதி யில்லை. விரக்தியின் விளிம்பில் கைத்துப்போன மனசு பூராவிலும் கசப்பு. 

விபரீதமாய் சிந்தனை சிதறியோட…. விபரீதமான வேகத்தில் விருட்டென்று. வெளியேறினார். 

சுவரில் சரிந்து சாய்ந்து கிடந்த பூமாலை, மூக்கை சீறி சுவரிலே இழுவினாள். இன்னு வழிந்து கொண் டிருக்கிற கண்ணீர். பச்சைத் தண்ணீர்கூட பல்லில் படாததால் உலாந்து போய், வெடிப்புக் கண்டு கிடக் கிற உதடுகள். 

”எம்மா, கொஞ்சமாச்சும் சாப்புடும்மா” 

கலங்கிக் கிடக்கிற பவளத்தின் சத்தம். கெஞ்ச லாய் குரல். திமிறிக் கொண்டிருக்கிற அழுகையை உணர்த்துகிற குரல்:’ 

”எனக்காகவாச்சும் சாப்பிடும்மா” 

இப்பொழுதுதான் பூமாலை நிமிர்ந்தாள். மகள் முகத்தில் நங்கூரமிட்ட பார்வை. பயத்தில் அடிபட்டுக் கிடக்கிற மகள், ஆதரவு தேடி தவிக்கிற மகளின் பார்வை. 

“ஒனக்காகத்தானடி… நர் அந்த மனுஷர்கிட்டே அப்படிச் சொல்லித் தொலைச்சேன். அவரு என்னை இப்படி கேவலப்படுத்திட்டாரே….” 

எரிச்சலில் மெல்லிசாய் சிடுசிடுத்தாள் பவளம். 

“அவரு என்னைக்குத்தான் நம்மளை கேவலப் படுத்தாம இருந்தாரு?” 

“அப்படி சொல்லாதேடி. அவரு தங்கமான மனுசர்டி. குழந்தை மனசு, அவருக்கு. என்ன இழவோ, ஊரு நாடு போறபோக்கு, அவரு புத்தியைக் கெடுத்துச் சீரழிச்சிருச்சி. நம்மளையும் சீரழிச்சுக் கூத்து நடத்துது. மத்தபடி…. அந்த மனுசர் கள்ளங்கபடு இல்லாத ஆளுடி.” 

அம்மா அருகில் மண்டிபோட்டு உட்கார்ந்தாள். தோளில் பரிவோடு கை போட்டாள். பூமாலை மீண்டும் அழுவது போல அங்கலாய்த்தாள். 

“மூத்தவளைப் போல ஒங்கதையும் ஆயிடக்கூடாதே. ஒன்னையாச்சும் ஒருத்தன்கிட்ட உருப்படியா ஒப்படைக் கணுமே, அதுக்கும் ஒரு வழியில்லேன்னு கதி கலங்கிப் போயிருந்தேன். நேத்து முத்துவைப்பத்தி சொன்னே. நல்ல புள்ளையாண்டான இருக்கானே, அவன் கையிலே ஒன்னைப் பிடிச்சுக் கொடுத்துட்டா மனப்பாரம் எறங்கு மேன்னு நெனைச்சேன். அதனாலேதா…. வெறியோட வந்த அந்த மனுசர்கிட்டே கோபத்தை மடக்குறதுக்காக அந்த வார்த்தையை சொன்னேனே…. அந்த வார்த்தை யிலேயே ஆடிப்போயிட்டாரே…” 

கண்களிலிருந்து வழியத் தொடங்கிய கண்ணீரை துடைத்தாள் மகள். “அழாதேம்மா….” 

நிதானமா அவருகிட்ட பேசி, அவரையும் சம்மதிக்க வைக்கனும்னுதானே நெனச்சிக்கிட்டிருந்தேன். அது புரி யாம, இந்த மனுசர் இப்படிச் செஞ்சுட்டாரே. என்னை யும் அசிங்கப்படுத்தி,நாலு பேரு நாலு விதமா பேசுற நிலைக்கு ஆளாக்கிட்டாரே…” 

“இருக்கட்டும்மா…. மொதல்ல சாப்புடும்மா” 

“இந்நேரம் அவரு எங்க நிக்காரோ…. எப்படியெல் லாம் தவிக்காரோ…. சாப்புட்டாரோ… சாப்புடாம பட்டி னியா கெடக்காரோ.. அடப்பாதரவே, நம்ம குடும்பம் இப்படியா சீரழியணும்? இந்த சீரழிவு வேறு எந்தக் குடும்பத்துக்கும் வரக்கூடாதும்மா…. வரக்கூடாது.” 

கருகருவென்று மயங்குகிற நேரத்தில் புறப்பட்ட சங்கரப்பன், ஓடைக்கரையில் வேலிமரத்தூருக்கடியில் நாலு கிளாஸ் சாராயத்தை வாங்கி ஊற்றிக்கொண்டார். 

மனசு உடம்பெல்லாம் நெருப்பாய் பற்றி எறிய, விறுவிறுவென்று நடந்தார். எங்கே? எதற்கு? ஊஹும் அதைப்பற்றிய நினைவேயில்லை. மனசு பூராவும் முத்து வின் பேச்சும், பூமாலையின் அலட்சியமும். உடம்பு பூரா வும் கொதித்தது. 

நடக்க நடக்க விர்ரென்று ஏறியது. வெறும் வயிற் றில் குடித்த சாராயம் குடலைச் சுருட்டியது. அடி வயிற்றைக் கவ்வியது. வயிறு ‘கபகபா வென்று எரிந்தது. பசி உயிரைப் பிடுங்கியது. 

ஏதோ ஒரு ஊருக்குள் நுழைகிறயோது, அந்த ஊர் சுத்தமாக அடங்கிக் கிடந்தது. 

காலெல்லாம் வலியெடுத்தது. மூட்டுக்கு மூட்டு, ‘விண், விண்’ணெங்கிற வேதனை. 

ஒரு வீட்டின் வெளிப்பானையில் இருந்த தண்ணீரை வயிறு முட்ட அள்ளிக் குடித்தார். ஊர் மடத்து திண் ணையை தேடிவந்து சாய்ந்தவர்தான். அடித்துப்போட்ட மாதிரி அப்படியே உறங்கிப் போனார். 

ஆட்டு மந்தை ஒன்று கத்திக் கொண்டும் தன்னை மிதித்துக்ககாண்டும் ஓடுவதைப்போன்ற உணர்வு. திடுக்கிட்டு விழித்துப்பார்த்தால்- 

தெருமெல்லாம் திமுதிமுவென்று ஜனங்கள் “ஐயய்யோ…. தீப்பிடிச்சிருச்சே” என்ற ஒரே கூப்பாடு. சங்கரப்பனும் பதைபதைப் போடு ஓடினார். 

ஒரு கூரை வீட்டில் தீ. பயங்கரமாய் தீ. பற்றிக் கொண்டு தாவுகிற தீ. ‘சடசடசட்டச் சட’வென் இரைச்சலோடு தீ. 

குய்யோ முறையோயென்னு அலறிச்சாடுகின்ற பெண்கள். பானையும் சட்டியுமாய் கையில் அகப் பட்டதைத் தூக்கிக் கொண்டு ஓடுகிற மனிதர்கள். தண்ணீரையும், மண்ணையும் அள்ளி அள்ளி இறைக்கிற ஆவேசமாய் மனிதர்கள். 

காலம் காலமாய் நடந்த போரின் தொடர்ச்சியாக, நெருப்பை எதிர்த்து மோதுகிற மனிதர்கள். 

சங்கரப்பனுக்கு என்ன செய்வதென்றே ஒன்றும் புரியவில்லை. 

காளியின் ரௌத்ரமாய் பேயாட்டம் போடுகிற நெருப்பு ஜுவாலைக்குள் கட்டைகள் சரிந்து விழுகிற சத்தம். 

ஒரு சிறுமியின் சத்தம் வீட்டுக்குள் கேட்பதை போல ஓர் உணர்வு. சங்கரப்பன் உற்றுக் கேட்டார். 

சுழன்று வீசுகின்ற சுவாலையின் சீற்றச் சத்தத்துக் கிடையில் துல்லியமாய் ஒரு சிறுமியின் கதறல். 

இவர்தான் இதயமே பிளந்து போகிற மாதிரி கத் தினார். “ஐயய்யோ…. உள்ளே ஒரு புள்ளை அழுகுதே….” 

இவரது கத்தலில் அந்தக் கிராமத்தின் உயிரே ஸ்தம்பித்தது. தீயை அணைக்கிற வேலை தற்காலிக மாக நிற்க… 

‘“ஐயய்யோ … ஒருபுள்ளை தீக்குள்ளே ஒருபுள்ளே” என்ற பல குரலில் சத்தங்கள். தவித்துக் கதறுகிற சத்தங்கள். எதுவும் செய்யத் தோன்றாமல் சுற்றிச் சுற்றி வந்து புலம்புகிற சத்தங்கள் 

யாரும் உள்ளே இறங்கவில்லை. சங்கரப்பனுக்கு கேட்கிற ஒரு ஒன்றும் ஓடவில்லை. துல்லியமாய்க் கேட்கிற குழந்தையின் கதறல். 

“ஐயோ….ஒரு ‘உசுராச்சே’ என்று மனசு கிடந்து தவிக்கிறது. அவர் மனமெல்லாம் அக்குழந்தையின் தவிப்பான கதறல். 

சகலத்திலிருந்தும் அந்நியப்பட்டுப் போன அவருள் அந்நியப்படாமல் உட்கார்ந்திருக்கிற மனிதநேயம். உயிர்ப்பான மனிதத் துடிப்போடு இயங்குகிற மனித இயல்பு. 

யோசிக்க – நிதானிக்க முடியவில்லை. மடமடவென்று உள்ளே பாய்ந்து விட்டார். வெறித்தனமாய் முட்டி மோதிக்கொண்டு உள்ளே ஓடினார். சூடே அறிய வில்லை. அறிகிற உண்ர்வில்லை. உணர்வு முழுவதும் ஒரு உயிரைப் பற்றிக்கொண்டு 

கையால் எதை எதையோ தட்டி விட்டார். காலயல் எதையோ ஏற்றினார். கடைசியில் தீயில் குரூர வெளிச்சத்தில் சிறுமியைப் பார்த்து விட்டார். 

கண்ணெல்லாம் அப்பியிருந்த பீதி. 

தண்ணீர் பானையை வைக்கிற மண்திட்டுக்கு அடியில் பம்மிப் போய் கிடந்தாள். 

குபீர் குபீரென்று நெருப்பலைகள். 

விருட்டென்று பாய்ந்து பிள்ளையை அள்ளிக் கொண்டார். தாவி ஓடி வந்தார். 

வாசலை நெருங்குகிற சமயம்- 

வாசலை மறித்துக் கொண்டு ஒரு கனத்த நீளமான கனிந்த கங்கு, அதை வலது காலால் ஓங்கி மிதித்து நொறுக்கி விட்டு. தாண்டி குபீரென்று வெளியே பாய் கிறபோது- 

பலத்த சத்தத்தோடு நடு முதுகில் நறுக்கென்று விழுந்து அழுத்துகிற தீக்கட்டை திமிறிப் பார்த்தார். உடம்பை வெறியோடு ஆட்டிப்பார்த்தார். முகத்தில் வந்து சூழ்கிற நெருப்பு. 

ம்ஹும்… முடியவில்லை. கண்ணுக்குள் மரணத் தோற்றம். இதோ முதுகில் ஏறிக்கொண்ட மரணம். 

வீறிட்டலறுகிற குழந்தையின் கதறல். 

வலது கையில் இருந்தது குழந்தை. இடது கை யாலும் பற்றினார். பலம் முழுவதையும் திரட்டி வீசி யெறிந்து விட்டார். அவ்வளவு தான். 

கண்ணுக்குள் கறுப்பாய் நெருப்பலைகள். தீ கருப் பாகவா இருக்கும்? 

இருட்டி விட்டது. 

மறுநாள். இன்னும் சரியாக விடியாத வைகறைப் பொழுது. ஒரு மாட்டி வண்டி ஆடி அசைகிற சத்தத் துடன் இந்த ஊருக்குள் நுழைகிறது. வண்டியைத் தொடர்ந்து பத்து பதினைந்து பெரியவாகள். 

சப்தமற்ற இறுக்கத்தில் அவர்கள். 

வண்டியில் துணிசுற்றி மூடிய சங்கரப்பனின் உடல். 

தீப்பிடித்த மாதிரி செய்தி நிமிஷத்தில் பரவ மொத்த கிராமமே ஊர் விளிம்புக்கு வந்து விட்டது. 

வண்டியோடு வந்த பெரியவர்கள் சங்கரப்பனைப் பற்றி உருகி வழிகிற மனசோடு, கலங்கிய கண்களோடு கதை கதையாய்ச் சொல்ல… 

“கடைசியா அவரு உசுரு போறப்போ பூமாலை, ராசாத்திங்கிற ரெண்டு வார்த்தையைத்தான் மாறி மாறிச் சொன்னாரு” 

பூமாலையும், பவளமும் கதறியடித்துக் ‘கொண்டு ஓடி வந்தனர். சங்கரப்பன் மேல் விழுந்து புரண்டனர். நெஞ்சு வெடிக்க அவர்கள் அழுத அழுகையில் ம ற்ற பெண்கள் எல்லோரும் கண் கலங்கினர். மனசுக்குள் உடைந்தனர்.

– மரம், சிட்டு பதிப்பகம் மதுரை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *