அந்த மாணவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2024
பார்வையிட்டோர்: 1,013 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று இளைப்பாறிய ஆசிரியரான நௌபல், கல்முனை ஸாஹிறாக் கல்லூரிக்கு வந்திருந்தார். 

அங்கு, க.பொ.த. உயர்தர வகுப்பில் உயிரியல் விஞ் ஞானப் பிரிவில் தனது மகனுக்கு உயிரியல் கற்பிக்கின்ற ஆசிரி யரைக் கண்டு தன் புதல்வன் மேல் அவரின் கவனத்தை விழ வைக்கும் நோக்கில், இம்முறை ஆசிரியர் நௌபல் வந்திருந்தார். 

நௌபல், அக்கல்லூரியில், ஒரு தசாப்த காலம் கல்வி போதித்தவர். 1996 டிசம்பரில் அவர் ஓய்வு பெறும்வரை அங்கே தான் பணிபுரிந்தார். ஓய்வு பெற்றதன் பின் அவர், இரண்டு, மூன்று தடவைகள் அங்கு வந்திருக்கிறார். என்றாலும், அவர், அப்போதெல்லாம் அங்கு வந்தது முக்கியமான அலுவல்களுக்காக அல்ல. ஆனால், இம்முறையோ தனது மகனின் கல்வி முன் னேற்றம் கருதியே அவரின் வருகை அமைந்திருந்தது. 

அவர், கல்லூரி வளவுக்குள் அடிபதித்த பொழுது வகுப்பு களில் பாடங்கள் நடந்து கொண்டிருந்தன. வெளியில், மாணவர் களின் கூச்சல்கள் எதுவும் கேட்கவில்லை. மூவாயிரத்துக்கு மேல் கல்வி பயில்கின்ற மாணவர்களைக் கொண்ட அக்கல்லூரியில் நான்கு ஐந்து மாணவர்களை மட்டுமே வெளியில் காணக்கூடிய தாகவிருந்தது. அதுவும் அவர்கள், மிகவும் அத்தியாவசிய தேவை களின் பொருட்டே வெளியிலே வந்திருக்கக்கூடும். 

ஆசிரியர்களைப் பொறுத்தவரையிலும் வெளியில் கொடிய பஞ்சமே நிலவியது. 

அதிபரின் அறைக்கும், சிற்றுண்டிச்சாலைக்குமிடையில் வடபுறமாய் தெருக்கரையில் ஆசிரியர்கள் இருவர் உரையாடிக் கொண்டு நின்றனர். 

மேற்குத் திசையிலிருந்து ஆசிரியர் ஒருவர், க.பொ.த. உயர்தரப் பிரிவுப் பக்கமாய் அடி பதித்துக் கொண்டிருந்தார். இன்னுமிரு ஆசிரியர்கள் கிழக்குப் புறமிருந்து ஆசிரியர் ஓய் வறையை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். 

அதிபரின் அறையைத் தாண்டி வந்துகொண்டிருந்த நௌபலை, அங்கு நின்றிருந்த ஆசிரியர்கள் இருவரும் மகிழ்ச்சி யோடு பார்த்தனர். 

“வாங்க சேர்…” என்று அவரை அன்போடு வரவேற்றனர். அவர்களில் ஒருவர், நௌபலுடன் இதே கல்லூரியில் கற்பித்தவர். வெள்ளை வண்ணத்தில் நீளக்கை சேர்ட்டும், லோங்ஸும் அணிந்திருந்தார். மற்றவர், ஓரளவே அறிமுகமானவர். நௌபல் இளைப்பாறியதன் பின் அங்கே இடமாற்றம் பெற்று வந்தவர். அவர், இளம் நீல நிறத்தில் வெள்ளைக் கோடுகள் ஓடிய அரைக்கை சேர்ட்டும், கறுப்பு நிற லோங்ஸும் அணிந்திருந்தார். 

“என்ன சேர் வந்த…” நௌபலுடன் கற்பித்தவர். 

“ஒண்டு மில்ல…ஏயெல்ல உயிரியல் விஞ்ஞானம் படிப்பிக்கிற பழீல் மாஸ்டரைக் கொஞ்சம் சந்திக்கணும்… அவருக்கிட்ட எங்கட மகன் ஒரு ஆள் படிக்கிற…” 

”ம்… ஆ…” 

“பழீல் மாஸ்டர் நல்ல கெட்டிக்காரராம்… படிப்பித்தலும் அந்த மாதிரியாம். ஏயெல்ல அவருக்கிட்டப் படிச்சவங்கள்ள கொள்ளயாப் பேர் அவர்ர பாடத்தில மிச்சம் நல்லாப் பாஸ் பண்ணியிருக்காங்களாம்… என்றெல்லாம் என்ட மகன் சொன்னாரு… வெளியிலயும் பலர் அவ்வாறு சொல்ல நான் கேட்டிருக்கன்…” 

“பழீல் மாஸ்டர் நல்ல கெட்டிக்காரர் என்கிறத்தில சந்தேகமே இல்ல… உயிரியல் விஞ்ஞானம் கற்பிக்கிறத்துக் கென்றே வந்து பிறந்திருக்கார்… அவர்,எமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அவர், இங்க படிச்ச ஒரு பிள்ளதான். சிலவேள உங்களுக்கிட்டயும் அவர் படிச்சிருக்கலாம்..” 

ஆசிரியர் நௌபல், தன்னுடன் உரையாடிக் கொண்டிருந்த ஆசிரியரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டார். 

“நான் பழீல் மாஸ்டரைப் பாத்திட்டு வாறன் தம்பி…” 

”வாங்க சேர்… டீ யொண்டு குடிச்சிட்டுப்போங்க…” 

“இல்ல தம்பி, வேணா… பெரிய உபகாரம்… நான் அவரப் பாத்திட்டு வந்திர்ரன்…” 

“ஆ… சரி… போய் பாத்திட்டு வாங்க சேர்…” 

நௌபல், ஆசிரியர்கள் இருவரிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டு கிழக்குப் புறமாக நடந்து, காரியப்பர் கூட்ட மண்டபத் தின் முன்னால் திரும்பி தென் திசையில் அடி பதித்தார். மூச்சு இரைத்தது. 10ஆம் வகுப்பு மாடிக் கட்டடத்தின் முன்னால் நின்ற ஒரு மாமரத்தின் நிழலில் ஒதுங்கி நின்றார். அம்மாமரம் இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நடப்பட்டிருக்கவேண்டும். 

சிறிய இலைகள்; சில இலைகள் உலர்ந்து போயு மிருந்தன. பூக்களோ, காய்களோ இல்லை. கையைத் தூக்கிப் பிடிக்கக்கூடிய உயரத்தில் கிளைகள். முதுமை அதன் உறுப்பு களில் முத்திரை பதித்திருந்தது. அம்மாமரம், மேற்கு நோக்கி தனது நிழலை நிலத்திலே வரைந்திருந்தது. 

அந்நிழலில் நிற்பது நௌபலுக்கு வெகு சுகமாகவிருந்தது. தனது முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டுக் கொண்டு நிமிர்கிறார். க.பொ.த.உயர்தரப் பிரிவுப் பக்கமாகவிருந்து வந்த ஆசிரியர் ஒருவர், நௌபலைக் காண்கிறார். பேசாமல் அவரைத் தாண்டிச் செல்ல மனமின்றி நெருங்குகிறார். 

“என்ன சேர்… இவ்விடத்த நிற்கிற…” என்கிறார். 

“ஒண்டுமில்ல தம்பி, ஏயெல்ல வயோசயன்ஸி படிப்பிக்கிற பழீல் மாஸ்டரைக் கொஞ்சம் பார்க்கணுமிண்டுதான் நான் வந்த… இவ்விடத்த நிழலாரிக்கி… கொஞ்சம் களைப்பாகவுமிருந்திச்சு… அதுதான் நிக்கன்… ஆளக் கண்டிங்களா?” 

க.பொ.த.உயர்தரப் பிரிவுப் பக்கமாய் இருந்து வந்த அந்த ஆசிரியர், வலது கையை தென்திசைப் பக்கமாய் நீட்டிக் காட்டி பின்வருமாறு கூறினார்: 

“அன்னா அந்த மாமரத்துக்குக் கீழ ஐஸ்கலரில அரைக்கை சேர்ட் போட்டுக்கொண்டு யாரோ மூண்டு பேரோட கதைச்சுக் கொண்டு நிக்கார்…” 

அந்த ஆசிரியர் காட்டிய திசையில் நௌபல் தனது பார்வையை ஓடவிட்டார். 

அவருக்கும் அவர்களுக்குமிடையில் தொலைவு முப்பது முப்பத்தைந்து அடிகள்தான் இருக்கும். என்றாலும், பழீல் தன் னோடு நின்றவர்களுடன் உரையாடலில் மூழ்கிப் போயிருந்த தாலும், அவரை வெகு காலத்துக்குப் பின் பார்ப்பதனாலும் அவர், யார் என்பதை நௌபலினால் உடனேயே தெளிவாக அறிந்து கொள்ள இயலவில்லை. 

“ஆ… அவருதானா…”நௌபல் அவரை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக இவ்வாறு கேட்டு வைத்தார். 

“ஓம்… ஓம்…” அந்த ஆசிரியர், மீண்டும் அவரை உறுதிசெய்துவிட்டு நௌபலிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார். 

இப்பொழுது, ஆசிரியர் நௌபல், பழீல் மாஸ்டரை தனது விழிகளை கூர்மையாக்கிக் கொண்டு மிகவும் அவதானமாகப் பார்த்தார். பழீல், அவரின் பார்வையில் மிகவும் தெளிவாக விழுந்தார். தனது மாணவன்தான் அவர் என்பது நௌபலுக்கு நிரூபணமாயிற்று. அதனைத் தொடர்ந்து அவரோடு சம்பந்தப்பட்ட ஒரு சம்பவமும் அவரின் நினைவிற்கு வந்தது. 

பதினாலு பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள்… அதே கல்லூரியில் வடபுறமக அமைந்திருந்த இரு மாடிக்கட்டடம் ஆண்டு: 10 மாணவர் கற்கும் வகுப்பறைகளைக் கொண்டு விளங்கியது. 

முதலாவது மாடியில், இடது புறமாய், ஆண்டு :10பி வகுப் பறை. அவ்வகுப்பில் மொத்தம் 40 மாணவர்கள். அன்று முப்பத்தைந்து மாணவர்கள் மட்டுமே வகுப்புக்குச் சமூகமளித் திருந்தனர். 

தமிழ்ப்பாட ஆசிரியரான நௌபல், ஆண்டு :10,11 தமிழ் இலக்கிய பாடநூலிலிருந்து ‘நளவெண்பா’ பாடல் பகுதியை மிகவும் சுவைத்தவராக கற்பித்துக் கொண்டிருந்தார். 

நௌபல், கற்பிக்கவென ஆரம்பித்து விட்டால், தான் அமர்ந்திருக்கும் இருக்கையை பின்னே நகர்த்தி வைத்துவிட்டு ‘ஆசிரியர் மேசை’ யின் முன்னே எழுந்து நின்று கொள்வார். எந்த வேளையிலும், அவர், சில ஆசிரியர்களைப்போல கதிரை யிலே அமர்ந்து கொண்டோ அல்லது ‘ஆசிரியர் மேசை’ யின் மேசை’யின் மேல் உட்கார்ந்து கொண்டோ கற்பித்தது கிடையாது. 

நௌபலின் கற்பித்தலில் வகுப்பில் அனேக மாணவர் கட்டுண்டு கிடந்தனர். 

ஆனால், அதே வகுப்பின் வலது புறமாய் பின்வரிசையில் சுவரோடு ஒட்டியவாறு அமர்ந்திருந்த பழீல், பக்கத்திலிருந்த மாணவர்களுடன் கதைப்பதும் நகைப்பதுமாய் இருந்தான். 

பாடத்தில் தானும், கவனத்தை செலுத்தாதிருந்ததோடு, மற்றவர்களையும் குழப்பிக் கொண்டிருந்த பழீலைப் பார்த்ததும், ஆசிரியர் நௌபலுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. 

திடீரென்று கற்பிப்பதை நிறுத்திக் கொண்டு நெருப்புத் தணல் போல் பழீலைப் பார்த்தார். 

“ஒழுங்காகப் பயிற்சிகள் செய்யிறதுமில்ல. வகுப்பில் எந்த நேரம் பார்த்தாலும் ஒரே கதைச்சுக் கொண்டுதான் இருக்கிற… எனக்கும் ஒரே சொல்லிச் சொல்லி அலுத்துப் போச்சி… நீ ஒரு காலமும் படிச்சு முன்னுக்கு வரமாட்டாய்… விட்டிட்டு வேற வேலயப்பாரு…எழும்பி வெளியே போ… என்ட பாடம் முடிஞ்சத் துக்குப் பிறகு உள்ளுக்கு வா…” ஆசிரியர் நௌபல் பாம்பாய் சீறினார். 

“இல்ல சேர்… நான் இனிக் கவனிப்பன்…” பல்லைக் காட்டிய வாறு நெளிந்து வளைந்து கொண்டு மெல்ல எழுந்து நின்றான். 

“ஒரேயே இப்படித்தான் நீ… ஒண்ட கத ஒண்டும் வாணா… வெளியே போ… இஞ்ச படிக்கிற புள்ளைகள் இருக்கி…நான் அவர்களுக்குப் படிப்பிக்கணும்… சும்மா நேரத்த மெனக்கெடுத்தாத…” 

ஆசிரியரின் ஆத்திரத்தை உணர்ந்து கொண்ட மாணவன் பழீல், மேலும் அங்கு தாமதிக்க விரும்பாது வகுப்பிலிருந்து வெளியேறினான். 

ஆசிரியர் நௌபல், பாடத்தைத் தொடர்ந்தார். 

மாமரத்துக்குள்ளிருந்து வந்த காக்கை ஒன்றின் ‘கா… கா…’ என்ற சத்தம் நௌபலின் காதுக்குள் விழுந்து மோதியது. தன்னை சுதாரித்துக் கொண்ட நௌபல், மெல்ல மெல்ல அடி பதித்து ஆசிரியர் பழீலிடம் வந்து சேர்ந்தார். 

ஆசிரியர் பழீல், அவரை உவகையோடும் ஆவலோடும் பார்த்தார். 

“என்ன சேர் வந்த… மிகவும் நீண்ட காலத்துக்குப்பிறகு நான் உங்களப் பாக்கன்… எப்படி சேர்… சுகமாரிக்கிங்களா?” 

“நான் சுகமாரிக்கன்… என்ட மகன் நிஸாம் உங்களுக் கிட்டத்தான் வயோ சயன்ஸ் படிக்கார். உங்களப்பத்தி நல்லாச் சொன்னார். உங்கள் ஒருதரம் பாத்திட்டுப் போவமெண்டுதான் நான் இப்ப வந்த…” 

“நானும் உங்கள மிச்சம் நீண்ட காலத்துக்குப் பிறகு சந்தித்திருக்கன். உங்களோட கதைக்கணும்… வாங்க சேர்… ஏயெல்லுக்க போவம்…” என்ற பழீல் தன்னுடன் நின்ற ஏனையவர் களைப்பார்த்து, 

“இன்னமும் ரிவிசன் குடுக்கிறண்டா கஸ்டந்தான்… எனக்கு நேரமும் இல்லாமலிருக்கு… எனக்கிட்டத்தான் பிள்ளைகள் படிக்க விரும்புறாங்க… எண்டும் சொல்லுறிங்க…எதுக்கும் யோசிச்சுச் சொல்றன்… இரண்டு நாள் டைம் தாங்க… சரி போங்க… என்று விட்டு, ஆசிரியர் நெளபலை அழைத்துக் கொண்டு க.பொ.த. உயர்தரப் பிரிவு இயங்கும் மாடிக் கட்டடத்தின் இரண்டாம் மாடியிலுள்ள ஆசிரியர் ஓய்வறையில் நுழைந்தார். 

அவர், அங்கே போடப்பட்டிருந்த ஒரு மேசையின் தென் புறமாய் அம்மேசையைத் தொட்டவாறு கிடந்த ஓர் இருக்கையில் தனது ஆசிரியரான நௌபலை உட்கார வைத்து விட்டு தானும் அவரின் எதிரே அம்மேசையின் மறு கரையை முகர்ந்தவாறு கிடந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். 

அவர்கள் இருவரையும் தவிர, அங்கே வேறு ஆசிரியர்கள் எவரும் இல்லாமையும் அவர்களுக்கு மனம் விட்டுப் பேசவும் வாய்ப்பாக அமைந்தது. 

“உங்கட மகன் நிஸாம் வயோ சயன்ஸ் பிரிவில பெஸ்டி யர்லதானே படிக்கார்?” ஆசிரியர் பழீலே பேச்சை ஆரம்பித்தார். 

”ஓம்… ஓம்…பெஸ்டியர்லதான் படிக்கார்…” 

”அவர எனக்கு நல்லாத் தெரியும். ஆனா… அவர், உங்கட மகன்தான் எண்டு எனக்குத் தெரியாது. அவர் என்ட பாடத்த நல்லாச் செய்யிறார். பிழல்ல…” 

‘ஆ… ஏதோ…அவர இன்னும் கொஞ்சம் பாத்துக்கங்க…” 

“சரி… சேர்” 

“மகன், உங்களுக்கிட்ட ஒரு விசயத்தத் திறந்து சொல்ல ணும்… உண்மையிலேயே இப்ப உங்களப் பாக்கிறத்துக்கு எனக்கு கூச்சமாரிக்கு…” 

“அப்படி என்ன விசயம் சேர்… சொல்லுங்க…” பழீலின் இவ்வார்த்தைகளைக் கேட்ட நௌபல் பதினாலு பதினைந்து வருடங்களுக்கு முன் நடந்த அந்தச் சம்பவத்தை அவரிடம் பிட்டு வைத்தார். அத்தோடு, அச்சம்பவம் பற்றிய நினைவை அறிவதற்காக, “அது உங்களுக்கு நினைவிருக்கும் எண்டு நினைக்கன்…” என்றும் கூறிவைத்தார். 

பழீல், நெற்றியில் கவிந்து கிடந்த கேசத்தை பின்னே ஒதுக்கி விட்டுக் கொண்டார். 

”ஓ…அந்தச் சம்பவமா? இது நேரத்தோட எனக்கு நினைப்பில இருந்ததான். பொறகு… பொறகு… மறந்து போச்சு… அதுக்கென்ன…” என்றார். 

“நான் அண்டைக்கு ஆத்திரத்தில் உங்களப் பாத்து, ‘நீ ஒரு காலமும் படிச்சி முன்னுக்கு வரமாட்டாய்…, விட்டிட்டு வேற வேலயப்பாரு…’ எண்டு சொல்லிப்போட்டு நாம ஏன் அப்படிச் சொன்னம் எண்டும் நானும் பல நாள் யோசிச்சான்… பிறகு அது மறந்து போச்சி… இப்ப உங்கள் ஓர் உயர்ந்த நிலயில பாத்ததும், அச்சம்பவம் டக்கிண்டு என்ட நினப்பில வந்திட்டுது… உங்களப் பாக்கவும் எனக்கு கூச்சமாரிக்கி…” 

“ஆ… அதுக்குத்தானா…” 

“ஓம்… ஓம்… அப்படிச் சொன்னது எவ்வளவு பிழ என்கிறத்த நான் இப்பதான் உணர்ரன்…” 

“என்னப் பொறுத்தவரையில், நீங்க அப்படிச் சொன்னது மிச்சம் நல்லது எண்டுதான் நான் சொல்லுவன்… நீங்க அப்படிச் சொன்னதனாலதான் நான் வைராக்கியம் கொண்டு படிச்சி இந்த நிலைக்கு வந்திருக்கன்…” 

“நான் சொன்ன வார்த்தையைக் கேட்டு, ‘நான் படிக்க மாட்டேனோ?’ என்று குறைவாக எண்ணுகின்ற ஒரு மாணவனாக விருந்திருந்தால் அவன் படிப்பை விட்டுவிட்டு தனது போக்கை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டிருக்கலாம்… ஆனா… நீங்களோ… எதிர்நீச்சல் போடும் தன்மையுள்ள ஒரு மாணவனாக விருந்ததால படிப்பில் உயர்ந்திட்டிங்க… பொதுவாகப் பார்த்தா நான் அப்படிச் சொன்னது பிழதான்…. நீங்க என்ன மன்னிச்சிட்டன் எண்டு சொன்னாத்தான் எனக்கு நிம்மதி…” 

”சேர்… நீங்களும் என்ன, எப்படியோ படிச்சு முன்னுக்கு வந்திரட்டும் எண்டுதான் அப்படிச்சொன்ன… அதற்காக நீங்க எனக்கிட்ட மன்னிப்புக் கேட்டு, பேசாம நான் அதனைக் கேட்டுக் கொண்டிருந்தா… நான் பெரிய பாவம் செய்தவனாகிவிடுவேன்… சரியாகச் சிந்தித்தா நான்தான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். அந்த நன்றிக்குப் பிரதி உபகாரமாக எனது பாடத்தில உங்கட மகனுக்குத் தேவையான அனைத்தையுமே சொல்லிக் கொடுக்க நான் ஆயத்தமாகவிருக்கன். எனது மனக்கதவுகள் மட்டுமல்ல, எனது வீட்டுக் கதவுகளும் எந்த நேரமும் அவருக் காகத் திறந்தே இருக்கும்…” 

“மிகவும் சந்தோசம் மகன்…” ஆசிரியர் நௌபல், பழீல் ஆசிரியரை மகிழ்ச்சியோடு பார்த்தார். பழீல் ஆசிரியரோ, தனது ஆசிரியரான நௌபலை பணிவுடனும், பக்தியுடனும் பார்த்தார். 

‘மாதா, பிதா, குரு, தெய்வம் – அவர் மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்’ 

என்ற சினிமாப் பாடல் வரிகள் எங்கிருந்தோ காற்றிலே மிதந்து வந்து அவர்களின் காதுகளில் தேனை வார்த்தன. 

– ‘ஸாஹிறா’ சிறப்பு மலர் – 2001 நவம்பர்.

– சாணையோடு வந்தது… (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2007, முகாமைத்துவ தொழில்நுட்பக் கல்லூரி, இலங்கை.

யூ.எல்.ஆதம்பாவா உதுமாலெவ்வை ஆதம்பாவா (பிறப்பு: ஜூன் 15 1939) இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்கின்றார். இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் 'களம்' கொடுத்ததும் 'மணிக்குரலே'. 1961ம் ஆண்டு 'மலையருவி' எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் பாதம் பதித்தார். அன்றிலிருந்து இன்று வரை காத்திரமான 45 சிறுகதைகளையும்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *