அந்த நாள் ஞாபகம்





(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சரவணை தான் அவரது பெயரென்பது எனக்கு நல்ல நினைவில் இருக்கிறது. நான் ஆறாம் வகுப்பு படித்த போது எங்கள் வளவிற்குச் சற்று முன்னால் உள்ள எங்களது மேட்டுக் காணியில் ஓலைக் குடிசை அமைத்துக் குடியிருந்தார். வாயில் நுழையாத ஒரு ஊரின் பெயர். அதுவே அவரது சொந்த இடமென அம்மா சொன்னதாக ஒரு ஞாபகம்.
நெடிதுயர்ந்து வளர்ந்த தோற்றம். பச்சை குற்றிய மார்பு. ‘சாண்டோ’ மாதிரி உடற்கட்டு. பிடரிவரை வளரவிடப்பட்டு வெட்டிய சடைத்த பழுப்பு நிற மயிர். எண்ணெய் வார்த்து எப்போதும் மேவி இழுக்கப்பட்ட தலை. நான்கு முழ வேட்டியை கணுக்கால் தெரியக் கட்டியிருப்பார்.
நான் ஆறாம் வகுப்பில் படித்தபோதுதான் சரவணை எங்கள் காணியில் குடியிருந்தார் என நான் அறுதியாகவும் உறுதியாகவும் கூறுவதற்கு மூத்ததம்பி வாத்தியாருடன் தொடர்புபட்ட முக்கிய காரணம் ஒன்றும் இருந்தது. ஆறாம் வகுப்பில் எங்களது வகுப்பு வாத்தியாராக இருந்தவரே மூத்ததம்பி வாத்தியார். அவருக்கு சுத்த சூனியமான ஆங்கிலம், விஞ்ஞானம் தவிர்ந்த மற்ற பாடங்கள் அனைத்தையும் அவரே எங்களுக்குப் படிப்பித்தார். எங்கள் வளவிற்குள் கிழக்கால் நான்கைந்து வளவுகள் தள்ளி, வண்டில் படலை போட்ட வளவில் இருப்பவர். அப்பு வழியில் உறவுக்காரர். அவர் பின்னேரப் பொழுதுகளில் சத்தகக் கத்தியும் கையுமாக ஆட்டுக்கு குழை அறுக்கப் போகும் வழியில் சரவணையுடன் வந்து கதைத்துக் கொண்டிருப்பார். அந்த நேரங்களில் ஆறுமுகப்பா கடைக்குப் போய் தேயிலை, சீனி வாங்கி வரச் சொல்லி அம்மா கேட்டால் நான் மெல்ல மெல்ல அடிவைத்து படலையை அமத்தித் திறந்து எதிரில் இருக்கும் மூத்ததம்பி வாத்தியாரின் கண்களில் ‘மண்ணைத் தூவியே’ செல்ல வேண்டியிருந்தது.
குளிப்பதற்கும் குடிக்கத் தண்ணீர் எடுப்பதற்கும் சரவணை எங்கள் வீட்டிற்குத்தான் வரவேண்டியிருந்தது. தொட்டியில் இறைக்கப்பட்டிருக்கும் தண்ணீரில் நான்கைந்து பட்டை தண்ணீரை அள்ளிக் ‘காக்கைக் குளிப்பு’ குளித்து விட்டு சென்று விடுவார். தொட்டியில் தண்ணீர் இல்லாவிட்டால் கிணற்றடியில் துலா ஓடும் நேரம் பார்த்து வருவார். மற்றபடி எதிரில் இருந்தாலும் எங்கள் வீட்டுப் படலையை ஏறிட்டும் பார்க்க மாட்டார்.
ஐயாவுடன் அவர் வலு வாரப்பாடாய் இருந்தார். ஐயாவுடன் இருந்த ஏதோ ஒரு பழக்கத்தில் தான் தங்களூரில் இருந்துவந்த அவர், எங்கள் காணியில் குடிசை அமைத்திருந்தார். சரவணை என்னை மாஸ்டர் ஆறுமுகம் என்று தான் கூப்பிடுவார். ‘ஏன் ஐயாவின்ரை பெயரைச் சொல்லி என்னைக் கூப்பிடுறியள்?’ என்று கேட்டால், “நீங்கள் மாஸ்டர் ஆறுமுகம், ஐயா மிஸ்டர் ஆறுமுகம்’ என்று கூறி காவியேறிய கடவாய் பற்கள் தெரியச் சிரிப்பார்.
அவர் குடியிருந்த காணி ஒன்டரைப் பரப்பிற்குள் தான் இருக்கும். காணியின் நடுக்கொள்ள ஒரு ஒதியமரம் ஊரைத் திண்டு கொழுத்துப் போய் நின்றது. நானும் ரவிச்சந்திரனும் வெறும் நெருப்பெட்டியை கையில் வைத்துக் கொண்டு பொன்வண்டு பிடிப்பதற்கு அந்த மரத்தைச் சுற்றியே வட்டமிடுவோம். காஞ்சனாவின் பெயரை வட்டாரியால் ரவிச்சந்திரன் முதன்முதலில் எழுதிப் பார்த்ததும் அதே ஒதியில் தான்.
சரவணை தன் குடிசையை வலு துப்புரவாகவே வைத்திருப்பார். குடிசை முன்றிலில் கோலம் போட்டது போல பருமிள், ஊமல், கொக்காரை, பன்னாடை போன்றவற்றைக் காயவிட்டிருப்பார். அது தவிர, ஒரு பூவரமிலைச் சருகைக்கூட முற்றத்தில் காண முடியாதவாறு விளக்குமாற்றால் அழகாகக் கூட்டி வைத்திருப்பார். அவர்,
தானே சமைத்துச் சாப்பிடுவார். கருவாட்டுக் குழம்பு வைத்தார் என்றால் மூத்ததம்பி வாத்தியார் வீடு வரை மணக்கும். ஒழுங்கையின் ஏத்தத்தில் வருவோரைக் கூட சுண்டி இழுக்கும்.
கூத்தாடுவதிலும் கதை சொல்வதிலும் சரவணை வலுசூரனாக இருந்தார். இடையிடையே இரவு வேளைகளில் உடுக்கடித்தவாறே, அவர் காத்தான் கூத்துப் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பார். அவர் பாட ஆரம்பித்தார் என்றால் ஐயா மட்டுக்கு ஓலை கிழிப்பதையும் பாதியில் விட்டு விட்டு எங்கள் வீட்டுப் படலை வெளிக்குந்தில் குந்திக் கொண்டிருந்து தலையாட்டி ரசிப்பார். மாடுகள் இரண்டும் ‘ம்மா’ சத்தம் எழுப்பி கட்டுக்கொடியை விட்டு எழும்பி நின்ற பிறகுதான் ஓலை கிழித்துத் தும்பாக்காது விட்டது. ஐயாவுக்கு நினைவு வரும்.
எங்கள் பழைய வளவுக்குப் பின் புறத்தே சிவலை என்றொரு அண்ணாவியார் இருந்தார். சரவணையின் பாடல் கேட்டு அவரும் இடையிடையே வந்து இணைவதுண்டு. அதிலும் சிவலை செம ‘மூட்’டில் இருந்தாரென்றால், கழுமரம் ஏறியபின்தான் இருவரும் உடுக்கை நிலத்தில் வைப்பார்கள். அன்று அயலட்டைச் சனங்களுக்கெல்லாம் சிவராத்திரிதான்.
பின்னேரங்களில் விளையாட்டு முடிந்து வரும் போது என்னையும் ரவிச்சந்திரனையும் கூப்பிட்டு சரவணை சரித்திரக் கதைகள் எல்லாம் சொல்வார். அப்பூதியடிகள், இளையான்குடி மாற நாயனார், கண்ணப்ப நாயனார் கதைகள் எல்லாம் இன்னும் என் நினைவில் நிற்பதற்கு சரவணை தான் காரணம். கதைகள் சொல்லும் போது அந்தந்த பாத்திரங்களாகவே அவர் மாறிவிடுவார். சிவனின் கண்ணில் இருந்து இரத்தம் பீறிட்ட போது, கண்ணப்ப நாயனார் கூட அப்படிப் பதைபதைத்திருக்க மாட்டார். ‘அறுவடை எல்லாம் முடிந்து தந்தபின் நீ சிதம்பரமென்ன எங்கு வேண்டுமானாலும் போய்வா!’ என்ற சொற்கேட்டு நந்தனார் கூட அந்தளவிற்குக் கதி கலங்கியிருக்க மாட்டார்.
அப்போது தான் ஒரு நாள் ரவிச்சந்திரன் காதுக்குள் எனக்கு ஒரு இரகசியம் சொல்லி எவருக்கும் சொல்ல வேண்டாம் என்றும், குறிப்பாக மூத்த தம்பி வாத்தியார் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சாவித்திரிக்குத் தெரியவே கூடாது என்றும் கூறி சத்தியமும் வாங்கிக் கொண்டான். அப்படி மீதி ஆருக்காவது தெரிய வந்துதெண்டால் என்ரை நாக்கு அழுகும் என்றும் எச்சரிக்கை செய்திருந்தான். “மூத்ததம்பி வாத்தியாருக்கு நாயன்மார் கதைகள் எல்லாம் சொல்லிக் கொடுப்பது சரவணைதானாம். அதைக் கேட்டுப் போட்டு வந்து தான் வாத்தியார் வகுப்பிலை எங்களுக்கு ‘றீல்’ விடுகிறவராம்.
எனக்குக்கூட அப்படி ஒரு சந்தேகம் மனதில் இருந்தது உண்மைதான். “அப்பூதியடிகள் வீட்டில் அப்பர் சுவாமிகள் விருந்துண்ண வந்த போது, அடிகளாரின் மகன் அரவந்தீண்டி மாண்டு கிடப்பான். அப்போது அப்பர் சுவாமிகள் மகன் எங்கே என்று வினவியபோது அப்பூதியடிகளார் ‘அவன் இப்போ உதவான்’ என்று கூறுவார். கதையை டைநிறுத்திய சரவணை ரவிச்சந்திரனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்: “அப்பூதியடிகள் அப்படிக் கூறியது எதனால்?” அப்போது ரவிச்சந்திரன் வாயைப் பிளந்தபடி ஒதிய மரத்தில் பறந்த பொன்வண்டையே பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அடுத்த நாள் சமய பாடநேரத்தில் அந்தப் பாடத்தைப் படித்துக் கொண்டிருந்த மூத்ததம்பி வாத்தியார் கதையை இடைநிறுத்தி அதே கேள்வியைத் தான் தங்கராஜனைப் பார்த்துக் கேட்டார். இலவசப் ‘பணிசை’ எதிர்பார்த்துக் கொண்டிருந்த தங்கராஜன், வாத்தியார் என்ன கேட்டார் என்று புரியாமல் பரக்கப் பரக்க முழுசிக் கொண்டிருந்தான். அதனால், அன்று சமயபாடம் முடியுமட்டிலும் அவன் முட்டுக்காலில் நிற்க வேண்டியதாயிற்று.
“சரவணை என்ன வருமானத்திலை அப்பா சீவிக்கிறார்?” என ஒருநாள் இரவு அம்மா, ஐயாவைக் கேட்கும் போது நான் நித்திரை குழம்பிய நிலையில் பாயில் படுத்திருந்தேன்.
“அது தானே ரவுணிலையிலிருந்து ஒவ்வொரு கிழமையும் வந்து மோன் காசு குடுத்துட்டுப் போறான்’ என ஐயா கூறிய கையோடு அம்மா கேட்ட அடுத்த கேள்வி அரையும் குறையுமாக எனது காதுகளில் விழுந்தது.
பொன்வண்டு பிடித்துக் களைத்த ஒரு பொழுதில் ஆறுமுகப்பாவின் கடைப் பக்கம் சரவணை சென்ற இடையில் நானும் ரவிச்சந்திரனும் அவரது குடிசையை கிடுகுப்படலைக்குள்ளால் எட்டிப் பார்த்தோம். பனம்பாத்தியில் ஊமல் பறித்த பின் பாத்திகட்டிவிடும் விடுமாப் போல் குடிசையை இரண்டு பகுதிகளாகப் பிரித்து வைத்திருந்தார். மண்ணடுப்பு, அதன் பக்கத்தில் கைவிளக்கு, தகனத்துக்குத் தயார் நிலையிலுள்ள காவோலைச் சிறகுகள் மற்றும் பனம்மட்டைகளுடன் பின்புறமும், சாணத்தால் வடிவாக மெழுகப்பட்டு வடலி ஓலை மட்டையால் வரியப்பட்டு முன்புறமும் இருந்தது. முன்புறத்தில் பெரும்பகுதியைக் கள்ளிப்பெட்டி ஒன்று விழுங்கிக் கொண்டிருந்தது. கள்ளிப்பெட்டிக்கு மேல் பாய்களும் தலையணிகளும் பொட்டழிகளும் ஒண்டை ஒண்டு தள்ளிவிழுத்துவதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தன.
“டேய்… அந்தக் கள்ளிப்பெட்டிக்குள்ளை என்னடா வைச்சிருப்பர்” ரவிச்சந்திரன் குசுகுசுத்த குரலில் எனது முதுகைச் சுரண்டினான்.
“அதைப் பற்றித்தான்ரா நானும் யோசிக்கிறன்”
“உடுப்புக் கிடுப்பு, தட்டுமுட்டுச் சாமான்கள் ஏதாவது வைச்சிருப்பாரோடா?”
“ஏன் அப்படி நினைக்கிறாய்?”
“பங்கார் உற்றுப் பாரடா மாங்காப்பூட்டு போட்டு பூட்டியிருக்கிறார். ஐமிச்சமில்லை. தட்டுமுட்டு சாமான்கள் தான் வைச்சிருக்கிறார்.”
வேறு வழியின்றி நான் ஓணான் மாதிரி தலையாட்டிய போது எங்கள் வளவுக் கிணற்றடியிலிருந்து அம்மா என்னைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.
சரவணையிடம் ஒரு பழக்கம் இருந்தது. அடிக்கடி வளவில் கண்டாயம் இருக்கும் இடத்தை மாற்றிக் கொண்டிருப்பார். மேற்கு திசையில் அலம்பல் வேலிப்பக்கமாக இருந்த கண்டாயம் சில நாட்களின் பின் நடுவில் சீமைக் கிளுவைகளுக்கு இடையிலும் இன்னும் கொஞ்ச நாட்கள் செல்ல கிழக்கே கம்பி வேலிப்பக்கமாகவும் இருக்கும். பிறகு மீண்டும் அலம்பல் வேலிப் பக்கமாகத் திடீரென்று முளைத்திருக்கும். எங்கள் வீட்டில் கூட ஏதாவது அடிக்கடி மாற்றப்பட்டிருந்தால் “என்ன, சரவணை கண்டாயம் மாத்தினது மாதிரி அடிக்கடி மாத்திக் கொண்டிருக்கிறியள்?” என்று அம்மா ஏசுவா. பாவம் அக்காதான் அடிக்கடி அம்மாவிடம் அப்பிடிப் பேச்சு வாங்குவாள்.
அது தவணை விடுமுறையில் ஒரு நாளாக இருக்க வேண்டும். நானும் ரவிச்சந்திரனும் எங்கள் வீட்டுப் படலையடியில் கிட்டியும் புள்ளும் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது செருப்புச் சத்தம் ஒலி எழுப்ப வெள்ளை வெளேரென்று வேட்டி சட்டையுடன் தெருவழியே விறுவிறுவென வந்த ஒருவர் சரவணையின் குடிசைக்குள் நுழைந்தார். வஞ்சகமில்லாத வளர்த்தி வாலிபத் தோற்றம்.
பத்து நிமிடமும் சென்றிருக்காது. படபடவென்று கதைத்துக் கொண்டிருந்த அவர் வேறு உடையுடன் கிழக்குப் பக்கமாகச் சென்று கொண்டிருந்தார். சரை ஒன்றை கையில் காவியவாறே சிறிது நேரத்தில் குடிசையிலிருந்து வெளிப்பட்ட சரவணை எங்களைப் பார்த்துச் சொன்னார். “உவர்தான் என்ரை ஒரே மகன். ரவுணிலை வேலை பார்க்கிறார். ஒவ்வொரு புதனும் அவருக்கு லீவு. காலமையிலை என்னட்டை வந்தால் இனி சாப்பிட்டுக் கீப்பிட்டுட்டு ஆறு மணி பஸ்ஸைப் பிடிச்சுப் போவார்.
சரவணை குடிசைக்குள் போனதுதான் தாமதம் ரவிச்சந்திரன் என்னருகே வந்தான்.
“டேய் உந்தாளை எனக்கு முன்னமே தெரியும். ”
“என்னெண்டு?”
“கிளைப்பனையடி மதகிலை இடைக்கிடை காணுறனான்.”
“விசர்க்கதை கதைக்காதை. இவை இஞ்சை இருக்க வந்த அஞ்சாறு மாதங்களுக்கை இண்டைக்குத்தான் எனக்கே ஆளைத் தெரியுது. நீ எப்பிடியடா காண்பாய்?”
“இல்லை இப்ப கொஞ்ச நாளா நான் காண்றனான்” என்றவாறே கிட்டியால் எங்கள வீட்டுத் தகரப்படலையில் ரவிச்சந்திரன் ஓங்கி அடித்தான்.
இப்பேர்ப்பட்ட சமாச்சாரங்களில் ரவிச்சந்திரனுக்கு வேகம் அதிகம் என்பதை ஏற்கனவே நான் அறிந்து வைத்திருந்ததால் மேலும் கதையை வளர்த்து என் மீதும் கிட்டிபடும் ஆபத்திலிருந்து நான் விலகிக் கொண்டேன்.
அத்துடன், அன்றைய ஆட்டமும் நிறைவு பெற்றது. அதற்கு மேலும், விளையாடினால் ‘ஆழாப்பல் ரவிச்சந்திரன்’ என்ற தனது பட்டப் பெயரை உறுதிப்படுத்தி விடுவான் என்ற பயமும் எனக்கு உள்ளூர இருந்தது.
மறுநாள் காலையில் முகங் கழுவிய கையோடு வேர்க்க விறுவிறுக்க வந்த ரவிச்சந்திரன் படலையடியில் நின்றவாறே எனது பெயரை உரக்கக் கூப்பிட்டான். “கூட்டாளி இண்டைக்கென்ன கருக்கலோடையே வந்திட்டார். அவ்வளவு விளையாட்டுக் கம்மக்கை” அடுப்படிக்குள் இருந்தவாறே அம்மா முணுமுணுத்தா.
வழமையாக விளையாட வந்தால் நான் போகுமட்டிலும் சரவணை இருக்கும் காணியின் முன்புற வேலியிலுள்ள சீமைக்கிளுவைக் கதியால்களுக்குக் கிட்டியால் மந்திர வித்தை காட்டிக் கொண்டிருப்பவன் இன்றேன் வாய்கிழியக் கத்துகிறான் என்று எண்ணியவாறே காற்சட்டைக்கு பொத்தான் கூடப் பூட்டாமல் இழுத்துக் கட்டிக் கொண்டு நான் படலையடிக்கு ஓடினேன்.
“டேய்… நேற்று நான் சொன்னன். நீ கேட்கேலைப் பாத்தியே” என்றான் வலது கையை நீட்டியவாறே.
“ஏன்ரா என்ன சங்கதி?”
“அந்தாளை நேற்றும் கிளைப்பனை மதகடியிலை கண்டன்.” நான் எதுவுமே கூறாது அவனையே உற்றுப்
பார்த்துக் கொண்டு நின்றேன்.
மூக்கால் வழிந்த சளியைப் புறங்கையால் துடைத்து காற்சட்டையில் பிரட்டியவாறே ரவிச்சந்திரன் தொடர்ந்தான். “மதகிலை மச்சான் மண்டிக் கொண்டு இருந்தார். கிடுகு வேலிக்குப் பிறகாலை நிண்ட யாரோடையோ கதைச்சுக் கொண்டு நிண்ட மாதிரிக் கிடந்தது. என்னைக் கண்டதுந்தான் தாமதம் பேச்சுப் பறைச்சல் சத்தமே இல்லாமல் இருந்தது. அந்தாள் குந்தியிருந்து கொண்டு பொக்கற்றுக்குள்ளை இருந்த பீடிக்கட்டிலை ஒரு பீடியை எடுத்து பத்த வைச்சுக் கொண்டிருந்தது. ஆளளவு உயரத்துக்கு வேலியும் முன்னுக்கு பாவட்டம் புதர் மண்டிக்கிடந்ததிலையும் அங்காலப் பக்கம் நிண்ட ஆளை மட்டுக்கட்டேலாமல் கிடந்துது.”
இப்படியான சங்கதிகளில் ரவிச்சந்திரனுக்கு இருந்த அக்கறையும் ஆர்வமும் படிப்பில் இருந்திருந்தால் மூத்ததம்பி வாத்தியார் பிரம்பு கொண்டு திரிய வேண்டிய அவசியமே இல்லாமல் இருந்திருக்கும். பாவம் லீவு விடுறதுக்கு இரண்டொரு நாளைக்கு முந்திக்கூட மனக்கணக்குப் பாடத்திற்கு காற்சட்டை கிழிய அடிவாங்கினான்.
‘மூத்ததம்பி வாத்தியார்ப் பிள்ளை அடிக்கில் எல்லாருக்கும் ஒரே மாதிரி அடிக்க வேணும். அவரென்ன எங்களுக்குக் காற்சட்டை கிழிய அடிச்சுப் போட்டு பெட்டையளுக்கு உள்ளங்கையிலே மெல்லமாய்த் தட்டுறது?’ என்ற ஒரு பிரச்சினை எழும்பக் காரணமாக இருந்தது. கூட அன்று அவன் வேண்டியது அகோர அடி தான்.
ஓரிரு நாட்களின் பின்னர்..
தன்னுடைய மனைவியின் திவசமெனச் சொல்லி சரவணை பொங்கலும் வடையும் செய்து படைத்தார். நாங்கள் அந்த நேரம் அங்கு வாய் பார்த்துக் கொண்டு நின்றதில், பூவரசம் இலை இரண்டை ஆய்ந்து எனக்கும் ரவிச்சந்திரனுக்கும் ஆளுக்கு ஒரு அகப்பை பொங்கலும் இவ்விரண்டு வடையும் தந்தார். நாங்களும் ஆவி பறக்கும் பொங்கலையும் சுடச்சுட வடையையும் சாப்பிட்டு விட்டு ஏவறை விட்டவாறே வீட்டுக்குச் சென்றோம். “தங்கள் வீட்டில் கூட இப்பிடி உருசையா வடை சுட மாட்டினம்” என கண்டாயத்தாதல் கடக்கும் போது எனது கையைப் பிடித்தவாறு ரவிச்சந்திரன் சொன்னான்.
வீட்டில் வட்டிலில் போட்ட முழுச் சோற்றையும் தின்ன முடியாது நான் வில்லங்கப்பட்டுக் கொண்டிருந்த போது “ஏன்ரா எங்கை சாப்பிட்டனீ?” என்று அம்மா கேட்டா.
“சரவணை புக்கையும் வடையும் தந்தவரம்மா” என்று நான் திறந்த வாய் மூடுமுன்னரேயே…”
“நாசமறுப்பானே. அங்கே வேண்டித் திண்டனியோடா?” என்ற அம்மாவின் சத்தமான குரல் கேட்டு ஐயா அடுப்படிக்குள் நுழைந்தார்.
“என்னப்பா சந்நதம் பத்துறாய் என்ன பிரச்சினை?”
“உவன் சரவணை வீட்டிலை மூக்கு முட்டத் திண்டுட்டு வந்திருக்கிறானாம். வாய் திறந்து சொல்லுறான்.’
“அதுக்கேன் இப்ப உயிர்போற போலை கத்துறாய்?”
“அதுக்கென்னவோ? எங்கையெங்கை கை நனைக்கிறதெண்டு ஒரு…”
“சும்மா இரப்பா… பிள்ளையளுக்கு உதுகளைப் பற்றி ஒண்டும் சொல்லக் கூடாதெண்டெல்லோ உனக்குச் சொன்னனான்…” அதன் பின்னர் அம்மா அமைதியாகிவிட்டார்.
அடுத்த நாள், ரவிச்சந்திரன் தனது முதுகைப் பார்க்கும்படி எனக்குக் காட்டினான். பூவரசம் கம்பு ஆழமாகப் பதிந்த அடையாளம் தெரிந்தது.
“இனி சரவணை வீட்டுப் பக்கம் கண்டனோ முதுகுத்தோல் தான் உரிப்பன் எண்டு அப்பர் சொன்னார். அப்பராம் அப்பர். அறுவான் நாம்பன் மாட்டுக்கு அடிச்சமாதிரி தோலுரிய இப்படியே அடிக்கிறது” என்றான். அப்போது அவனது குரல் கம்மிப் போய் இருந்தது.
சரவணையிடம் நாங்கள் புக்கை வாங்கித் திண்டது ஊரெங்கும் பரவியிருக்க வேண்டும். ஆறுமுகப்பா கடையடியிலை வைச்சு ஆதவன் அண்ணா ஆக்கள், “இனி சரவணை வீட்டிலை ஏதாவது விசேசமெண்டால் எங்களுக்கும் சொல்லுங்கோடா தம்பியவை” எண்டு ரவிச்சந்திரனுக்குச் சொல்லியிருக்கிறார்கள். அடுத்த நாள் அழுவாரைப் போல் என்னிடம் வந்து அவன் சொன்னான்.
அதன் பிறகு, எங்கள் வீட்டுப் படலையடியில் விளையாடிய கையோடு ரவிச்சந்திரன் சென்று விடுவான். “வடிவான பொன்வண்டு ஒண்டு பறக்குது. பிடிப்பம் வா” என்று கேட்டாலும் “ஆளை விட்டாப்பா” என்று சொல்லி அவன் ‘பறந்து’ விடுவான்.
“ஏதோ நேர்த்திக்கடன் கழிக்கவென ரவிச்சந்திரனின் குடும்பம் ரத்தினண்ணனின் கார்பிடித்துக் கொண்டு பெருமாள் கோயிலுக்குப் பொங்கப் போனார்கள். என்னையும் வரச்சொல்லி வீட்டில் வந்து கேட்டதில் நானும் அவர்களுடன் சென்றேன். பொங்கல் எல்லாம் முடிந்து மடத்தில் தங்கியிருந்து விட்டு திரும்பி வர பொழுது மைமலாகிவிட்டது.
அந்நேரம், தங்களது வீட்டில் இருந்து தனியாக என்னை அனுப்பி வைப்பது ‘சரியில்லை’ என்று சொல்லி எங்கள் வீடுவரை என்னைக் கொணர்ந்து விடுவதற்காக ரவிச்சந்திரனின் தகப்பன் என்னுடன் வந்தார். சாவித்திரி வீட்டடியில் வரும்போது எங்கள் வீட்டுப் படலையடியிலும் சரவணையின் குடிசையின் முன்னாலும் தீர்த்தக்கரை மாதிரி சனங்கள் குழுமி நிற்பது தெரிந்தது. சத்தமாக ஏதோ பேச்சிக் கேட்டது. வேகமாக முன்னேறிச் சென்றோம்.
அங்கு குழுமி நின்றவர்கள் கிளைப்பனையடியில் இருப்பவர்கள் என்பதை அண்மித்தபோதுதான் அவதானித்தேன். பெரும்பாலும் இளந்தாரிகளே நின்றார்கள். கையில் பொல்லு கொட்டன்களுடனும் முகத்தில் கோபத்துடனும், சரவணையை நிற்க வைத்து ஏதோ கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனது ஐயா சரவணை பக்கமாக நின்று கிளைப்பனை ஆட்களுக்கு அமைதியாக என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். சரவணையைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
என்னைக் கண்டதும் வளவிற்குள் செல்லுமாறு ஐயா புறங்கையால் சைகை காட்டினார்.
உள்ளே சென்றதும் சேட் கூடக் கழற்றாமல், “என்ன சண்டை அம்மா முன்னுக்கு?” என்று கேட்டேன்.
“அது ஏதோவாம். அது சரி எப்பிடி பெருமாள் கோயில்?” என்றவாறே அம்மா நான் போட்டிருந்த கை முட்டச் சட்டையைக் கழற்ற உதவினர்.
“ஆறுமுகம் அவனுக்கு மண்டை கிழிச்சிருப்பம். உனக்காண்டி விட்டுட்டுப் போறம். இனிமேற்பட்டு, அவனுக்கு குடியிருக்கிறதுக்கு நிலம் குடுத்தியோ நடக்கிறது வேறை” உச்சஸ்தாயியில் ஒரு குரல் ஒலித்தது. எனக்குக் கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது.
கம்புச்சத்தம் கேட்கக்கூடாதென்று ஊரிலுள்ள தெய்வங்களை எல்லாம் மனதில் வேண்டினேன். ‘நறுவலி வைரவருக்கு சக்தி கூட’ என்று அம்மா அடிக்கடி சொல்லுவாவே…
“வைரவா… வைரவா” என்று வாயில் முணுமுணுத்தேன். சிறிது சிறிதாகச் சத்தம் ஓயவே… ஐயா உள்ளே வந்தார்.
வீட்டில் ஐயாவும் அம்மாவும் அதைப் பற்றி ஏதாவது கதைக்க மாட்டார்களா என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன். ஓலை தும்பாக்கி மாடுகளுக்கு போட்டு கைகால் அலம்பி சாப்பிட்டுட்டு படுக்கும் வரை இடைக்கிடை ஐயா தும்மும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.
முளித்திருந்து பயனில்லை என்பது உறுதியாகவே இறுகக் கண்களை மூடிக் கொண்டு பாயில் உழன்று உழன்று நித்திரையாகிவிட்டேன்.
அடுத்தநாள், ரவிச்சந்திரனின் வரவை நோக்கி ஆவலுடன் வீட்டுப் படலையடி வெளிக்குந்தில் காவலிருந்தேன். சரவணையின் குடிசைப்படலை சாத்தி பனங்குறிச்சி ஒன்றினால் முண்டு கொடுக்கப்பட்டிருந்தது.
ஒழுங்கையின் எத்தத்தில் சாவித்திரி வீட்டடியில் ரவிச்சந்திரன் வேகமாக வருவது தெரிந்தது. அந்த நொடியில் என்னையும் அறியாது எழுந்து சென்றேன். முதல்நாள் பெருமாள் கோயிலில் வாங்கிய கடதாசிக் காற்றாடியை கையில் நீட்டிப் பிடித்துக் கொண்டு பூவரசம் இலையால் செய்த குழலை வாயில் வைத்து ஊதியவாறே அவன் என்னை நோக்கி ஓடிவந்தான்.
என் அருகில் வந்ததும் ‘சடின் பிறேக்’கில் நின்றவன், குழலை வாயிலிருந்து எடுத்து, இளைத்திளைத்தவாறே கேட்டான். “விசயம் கேள்விப்பட்டியோடா?”
“அது தான்ரா நீ வருமட்டிலும் காவலிருக்கிறன். என்ன நடந்தது? வீட்டிலை ஒரு சனமும் மூச்சுக் கூட விடுதுகள் இல்லை”.
“ஏன் எல்லாஞ் செத்துப் போச்சுதுகளோ?”
“பகிடியை விட்டுட்டு விசயத்தைச் சொல்லன்ரா”
“கிளைப்பனை மதவடி முடக்கு வளவு அக்காவை, முந்த நாள் ராத்திரியிலையிருந்து காணேலையாம். சரவணையின்ரை மோனோடை அவையளின்ரை ஊர்ப்பக்கம் கண்டதாக வண்டில்கார வடிவேலண்ணன் நேற்று மைமலுக்கை வந்து சொல்லியிருக்கிறார். அது தான் நடந்த பிரச்சினை.”
“சரவணை வீட்டுப் படலையும் வெளியாலை சாத்திக் கிடக்குதடா. அங்கே திரும்பிப் பார். ”
ரவி என்னையும் சரவணையின் குடிசையையும் மாறி மாறிப் பார்த்தான். பின்னர் பூவரசம் இலை குழலை வாயில் வைத்தவாறே ‘பிப்பிப்பீ’ ஊதினான். எனக்கு வந்த எரிச்சலுக்கு அவனது வாயிலிருந்த குழலை பிய்த்தெறிய வேண்டும் போல இருந்தது.
“இனி நான் நினைக்கேல்லை. சரவணை திரும்பி ஊருக்கை வருவார் எண்டு” கையில் வைத்திருந்த காற்றாடியை நீட்டியவாறு என்னை ஒரு சுற்று சுற்றி ரவிச்சந்திரன் சொன்னான். அந்த வர்ணக் காற்றாடியும் கூடவே எனது தலையும் வேகமாகச் சுற்றின.
எங்கள் படலையடி வெளிக்குந்தில் போய் இருந்தேன். “வாடா விளையாட” என்றான் ரவிச்சந்திரன்.
“எனக்கு இண்டைக்கு ஏலாதடா. நாளைக்குப் பார்ப்பம்” என்றவாறே எழுந்து உள்ளே சென்றேன். தெருப்புழுதியைக் கிளப்பியவாறே வந்த வேகத்தை விட கூடிய வேகத்தில் ரவிச்சந்திரன் திரும்பிச் சென்றான்.
சரவணை திரும்ப வருவாரா? என்று எவரிடமாவது கேட்க வேண்டும் போலிருந்தது.
சிவனின் மறு கண்களிலிருந்தும் இரத்தம் பீறிடுவது போலவும் சரவணை தனது காலைத் தூக்கி சிவனின் கண்ணில் வைத்தவாறே தனது இரண்டாவது கண்ணையும் சிவனின் கண்ணில் அப்புவது போலவும் அன்றிரவு முழுவதும் கனவுகள் வந்தன. நித்திரை குழம்பி பாயில் உழன்றேன். பக்கத்தில் அக்காப்பிள்ளை மூசி மூசி நித்திரை கொண்டிருந்தாள்.
தெருப்பக்க ஜன்னலை இந்நேரம் பர்த்து யார் திறந்து விட்டது? எங்கும் புகை மண்டலம். பார்வதியும் சிவனும் வானத்தில் தோன்றி ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தார்களாமே… அது போல அந்தப் புகைமண்டலத்தில் சரவணை தோன்றுவதும் மறைவதுமாக… ஒரே பிரமை. பயப் பிராந்தி. கண்களை இறுக்கி மூடிக் கொண்டேன். கண்களைத் திறந்தபோது ஜன்னல் பக்கமாக ஆரவாரச் சத்தங் கேட்டது. ஆதவன் அண்ணா வீட்டுப் புகையிலைத் தீராந்தியில் புகைக்கும் போது எழும் மணத்தைப் போல ஏதோ நாசி வழி ஏறிற்று.
“அம்மா” என்றேன்.
சத்தமில்லை.
மீண்டும் கூப்பிட்டேன். அம்மாவையோ ஐயாவையோ காணவில்லை. இந்த அக்காவைக்கூட காணவில்லையே?
ஜன்னலால் எட்டிப்பார்த்தேன். பொழுது முற்றாகவே விடிந்திருந்தது.
எங்கள் படலையடியில் பலர் குழுமி நிற்பது தெரிந்தது. படலையை நோக்க ஓடினேன். திடலடிக்கு ‘வெளிக்குப்’ போகும் ஆதவனின் ஐயா சுருட்டுப் பிடித்தபடி சென்று கொண்டிருந்தார்.
சனங்கள் சரவணையின் குடிசைப் பக்கமாக அற்றேன்ஷனில்’ நின்றார்கள். மேட்டுக் காணி ஒரே புகை மண்டலத்துள் மூழ்கிக் கிடந்தது. சீமைக் கிளுவைகள் எல்லாம் வாடி வதங்கிப் போய் இலைகளைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்றன.
தெருவில் இறங்கி காணிக்குள் நுழைந்தேன். ஐயாவும், அம்மாவும், அக்காவும் ஒதிய மரத்தடியில் நின்றார்கள். அந்தக் குடிசை இருந்த இடத்தையே அடையாளம் காண முடியாதபடி ஒரே சாம்பல் மேடாகக் காட்சியளித்தது.
சரவணை அடிக்கும் உடுக்கு உருகி உருக்குலைந்து போய்க் கிடந்தது.
அந்தக் கள்ளிப் பெட்டியின் மேல் சாம்பல் கும்பி கும்பியாகக் குவிந்து கிடந்தது. பெட்டிக்குள்ளிருந்தும் புகை கக்க ஆரம்பித்தது. மாங்காப் பூட்டு மட்டும் கொழுக்கியில் இன்னமும் அப்படியே இறுகத் தொங்கிக் கொண்டிருந்தது.
எங்கள் வீடு சென்று கடகப் பெட்டி ஒன்றுடனும் சுத்தியல் ஒன்றுடனும் திரும்பி வந்த ஐயா அந்தப் பூட்டை உடைத்தார். கள்ளிப்பெட்டிக்குள் இருந்தவற்றை ஒவ்வொன்றாக வெளியில் எடுத்தார். அரிச்சந்திர புராணம், அறுபத்து மூன்று நாயன்மார் சரித்திரம், சங்கரதாஸ் சுவாமிகள் பாடல்கள் என புத்தகங்கள் பல குவிந்தன.
எல்லாவற்றையும் கடகப் பெட்டிக்குள் போட்டு பெட்டியைத் தூக்கினார் ஐயா.
“ஆறுமுகம் எல்லாத்தையும் அப்படியே எரியவிடு. அதைக் கொண்டு போய் அவனட்டைக் குடுக்கப் போறியோ?” யாரோ குரல் கொடுத்தார்கள். காது கிழியச் சத்தம் போட்டார்கள். கூக்குரலிட்டார்கள்.
ஐயா எதுவுமே பேசாது ஒரு வன்மத்துடன், பெட்டியைத் தோளில் சுமந்தவாறே வீட்டிற்குள் நுழைந்தார். அம்மாவும் அக்காவும் பின்னால் சென்றார்கள். அவர்களை முந்திக் கொண்டு நான் சென்றேன்.
அந்தப் புத்தகங்கள் யாவும் ஐயா இறக்குமட்டிலும் அவரது புத்தகங்களுடனேயே சங்கமித்திருந்தன.
– ஞாயிறு தினக்குரல், 30.10.2005.
– திக்கற்றவர்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
![]() |
புலோலியூர் இரத்தினவேலோன், ஆறுமுகம் 1958.12.25 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், புலோலியூரில் பிறந்தார். சிறுகதை எழுத்தாளர். இவர் புற்றளை மகாவித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். இவர் யாழ் புற்றளை மகா வித்தியாலயம், யாழ் ஹாட்லிக் கல்லூரி மற்றும் யாழ் சென் ஜோன்ஸ் அக்கடமி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தினகரன் பத்திரிகையில் பிரசுரமான புரளும் அத்தியாயம் எனும் சிறுகதையூடு 1977 இல் இலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர். 1977 ஆம்…மேலும் படிக்க... |