அந்த உப்புக்காக

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 16, 2025
பார்வையிட்டோர்: 733 
 
 

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சக்தி இருந்தவரை உழைத்தாயிற்று ஓடியாடும் வயதும் தாண்டி இன்றோ நாளையோ என்ற நிலைமையில் தான் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தது ராஜா.

வயசும், வனப்பும் இருந்த நாளில், எசமானன் தனக்குச் சூட்டிய செல்லப் பெயர்! இன்று பெயர் மட்டும் நின்றது. செல்லம்?

பக்கத்தில் எங்கோ தட்டுச் சத்தம் கேட்டது. இயலாமையாக இருந்தாலும் சாப்பாட்டு விஷயமாயிற்றே! கொஞ்ச சிரமத்துடன் தலையை நிமிர்த்தியது ராஜா. நிமிர்த்திய வேகத்தில் மனசில் ஒரு நெருடல! ராஜாவின் பார்வை எல்லையில் சீசர்.

ராஜாவுக்கு வயசானதும், புதிதாக வந்திருந்தது இன்னொரு நாய்; சீசர். பெயரின் கம்பீரம் புரிந்தோ புரியாமலோ சீசர் விறைப்பாகத்தான் நின்று சாப்பாட்டை ‘கடித்து’க் குதறிக்கொண்டிருந்தது.

“டேய்! பொன்னா! சீசருக்கு சாப்பாடு போட்டுட்டு, அந்தக் கெள்டுக்கும் ஏதாவது கண்ணுல காமி!…” என்றாள் எசமானியம்மாள்.

ராஜா இப்போது கெள்டு ஆகிவிட்டது.

அந்தக் காலத்தில், ஷாம்பூ குளியலென்ன, ‘உண்ணி’யெடுக்கும் அன்பு என்ன.. எல்லாம் போய் இப்போது… ‘கெள்டு.’

இன்னொரு நாள், “ஏனுங்க இந்தக் கெள்டை எங்கேயாவது ‘தாட்டி’ விட்டு வரலாமில்லியா?” என்றாள் எசமானியம்மாள்.

‘ஜென்மம்…நாயானாலும். இந்த மாதிரி, சௌக்கிய வாழ்க்கைக்கு அடுத்து வர்ற சங்கடம் கூடாதுடாப்பா!…’ ராஜா நினைத்திருக்கலாம்.

ராஜாவுக்கு, எத்தனையோ நாட்கள் பட்டினியில் கழிந்துமிருக்கின்றன.

“சும்மாக் கெடக்கற நாய்க்கு சோறு போட்டு தண்டம் பண்ணாதே!” என்று எசமானர் சொல்லிட்டுப் போனது. ராஜாவுக்கு நினைவில் தோன்றியது.

‘ஐயோ உடம்புல் வலு வல்லாம போச்சே!’ என்று புலம்பினாலும் ராஜா விதியை நொந்தபடி உட்கார்ந்திருந்தது.

பொழுது சாய்ந்தது. சாலையில் திடீரென குழப்பம் ஏற்பட்டது போன்ற நிலை.

‘விருட்’டென்று எழுந்து முகர்ந்ததில் ‘அன்னிய வாடை’ வீசியது.

இருந்த பலத்தையெல்லாம் திரட்டி ஒரு ‘சிலுப்பு’ சிலுப்பிக் கொண்டு, ராஜா எழுந்து நின்று குரைக்க ஆரம்பித்தபோது சீசர் எசமானியம்மாளின் பக்கத்தில் சொகுசாகத் தூங்கிக் கொண்டிருந்தது.

“ஏதுடா இது சனியன்! ரவ்வும் பகலும் தூங்காத, குரைச்சுக் கழுத்தறுக்குது” என்று முனகியபடியே திரும்பிப்படுத்தார் எசமானர்.

‘அன்னியவாடை’ நெருங்க நெருங்க, ராஜாவின் குரைப்பு அதிகமானது. வயதானதால் குரைப்பு ஊளையாகி இருட்டில் அச்சுறுத்தியது

அன்னியர்கள் நெருங்கினதும் பாய்ந்து சென்று ஒருத்தனின் காலைக் கெளவியது ராஜா.

“டேய்! முரட்டு நாய் கடிச்சிட்டுது! திரும்புங்கடா அல்லாரும்” என்று அன்னியர்கள் திரும்ப யத்தனித்தார்கள்.

வயசுக்கும் மீறி ராஜா பாய்ந்த பாய்ச்சலில், உடம்பு என்னவோ செய்தது. மயக்கம் வருகிறாற் போன்றநிலை. மயங்கிய நிலையிலும் ராஜாவுக்கு திருப்தி! ‘இப்பல்லாம் சோறு போட்டுக் கவனிக்கலைன்னு முன்னெல்லாம் துண்ண சோறை மறக்க முடியுமா? அந்த உப்புக்காக! இனி எத்தினி வாட்டி வேணுமானாலும் சாகலாமே!’ என்று ஒரு நினைப்பு மயக்கம் இருளானது. இது ஒன்றும் அறியாத எசமானர் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அது… அந்த நன்றி… நாய்க்கு மட்டுந்தான் இருக்கும். நமக்கு?

– தாய் வார இதழ், 04-09-1986.

என்.சந்திரசேகரன் சந்திரசேகரன் (நரசிம்மன்) அவர்கள் புகழ்பெற்ற தென்னிந்திய இந்து பிராமண வழக்கறிஞர்கள் குடும்பத்தில் அரியலூரில் பிறந்தார். மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம்(1976) பெற்று சமூக விஞ்ஞானி ஆவதற்குத் தொடர்ந்தார். கல்லூரியின் சிறந்த ஆல்ரவுண்ட் மாணவருக்கான டாக்டர்.எம்.நஞ்சுண்டராவ் தங்கப் பதக்கம் வென்றார். பார்வை: நான் என்னை ஒரு தலைவர், வழிகாட்டி, ஆலோசகர், வழி கண்டுபிடிப்பாளர், பிரச்சனை தீர்வு காண்பவர், பேச்சுவார்த்தை நடத்துபவர், ஆராய்ச்சியாளர், பொருளாதார…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *