அந்த இரவு…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 611 
 
 

அப்பாவின் பழைய வானொலி பெட்டியை பழுது பார்க்க உசேன்பாய் கடையில் கொடுத்து இரண்டு நாட்களாகியிருந்தது. இன்று இருந்து கையோடு வாங்கிவர வேண்டுமென பாஸ்கரன் தன் மோட்டார் பைக்கில் போய்கொண்டிருந்தான். அப்போது அவன் கைப்பேசி சிணுங்கியது.எதிர் முனையில் அண்ணன் திவாகரன்..

“பாஸ்கரா..இன்னைக்கு இருந்து கையோடு வாங்கிட்டு வந்திடு. நமக்கு டைம் இல்ல சரியா” என்றான்.

“ம்..சரி அண்ணா நீங்க அம்மாவோட பட்டுப் புடவைகள் வாங்கிட்டு வந்திடுங்க.மத்தத வீட்லவந்து பேசிக்குவோம்” என்று கைப்பேசியை அணைத்தான்.

அப்பா நடராஜன் இந்திய அஞ்சல் துறையில் தபால்காரராக வேலை பார்த்து இன்னும் மூன்று தினங்களில் பணி ஓய்வு பெறவிருக்கிறார். தன் இரண்டு மகன்களையும் அரும்பாடுபட்டு வளத்து ஆளாக்கி இன்று இருவரும் தனியார் கம்பெனியில் நல்ல சம்பளத்தில்..நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்கள். அம்மா சரஸ்வதி வீட்டையே மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்கும் கோயிலாக மாற்றி வைத்திருப்பார். அவருக்கு கணவன் தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் தான் உலகம். இரண்டு மருமகளையும் தன் மகள்களாகவே இன்றுவரை பாவித்து வருகிறாள். பாவம் தனக்கென எதையும் கேட்டு அப்பாவிடம் அடம்பிடிக்காத அப்பாவி. அப்பாவுக்கு இந்த வயதிலும் கூட அம்மாவின் மேல் தீராத காதல். சமயலறையில் இருக்கும் அம்மாவிடம், செல்லமாக சில்மிஷம் செய்வார். பேரப்பிள்ளைகள் இருக்கும் வீட்டில் ‘என்ன குறும்புத்தனம்’ என்று அம்மா அதட்டுவதைக்கேட்டு தலைகுனிந்த படியே சிரித்திருப்போம். இரவில் பேரப்பிள்ளைகள் கதை சொல்லச்சொன்னால் தங்களின் பழைய காதல் கதையை ஒரு காவியக் கதையாக சொல்லுவார் அப்பா.

பணி ஓய்வு நாளில் வீட்டில் தடபுடலான சமையல். “ஹோட்டலில் ஆர்டர் கொடுத்திடலாம்” என்று அப்பா சொல்லியும், “நம்ம வீட்டுக்கு வர்றவங்களுக்கு நம்ம கையால் சமச்சுப்போட்டாத்தான் நமக்கு பெருமை” என்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டார் அம்மா சரஸ்வதி. “மகன்களும் மருமகள்களும் வர்றவங்களை கவனிச்சுக்கிட்டா போதும்” என்று சொல்லிவிட்டார்.

அப்பாவோடு பணிபுரிந்த சக ஊழியர்கள், நண்பர்கள், உறவுக்காரர்கள் என்று எல்லோரும் வந்து போய்விட்டார்கள். அப்பாவுக்கு தாம்பூலம் மடித்து தந்து கொண்டிருந்தாள் அம்மா சரஸ்வதி. முற்றத்தில் வந்து எல்லாரும் அமர்ந்தார்கள்.

திவாகரன் இப்படி சொன்னான்: “அப்பா எங்க கம்பெனில இருந்து இன்பச் சுற்றுலா போக டிக்கெட் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. நானும்,தம்பியும் குடும்பத்தோட போயிட்டு வரலாம்’னு இருக்கோம். திரும்பி வர நாலு நாள் ஆகும்” என்றான்.

“என்ன நாலு நாளா? அதுவரையில எம் பேரப்பிள்ளைகளை எப்படி பிரிஞ்சிருக்கிறது. முடியாதப்பா, நீங்க மட்டும் போயிட்டு வாங்க பிள்ளைகள் இங்கேயே இருக்கட்டும்” என்றாள் அம்மா சரஸ்வதி.

“அம்மா நாலு நாள் தானே ஒன்னும் பிரச்சினை இல்லை நாங்க பாத்துக்கிறோம்” என்றான் சின்னவன் பாஸ்கரன்.

“என்னங்க உம்முன்னு இருக்குறீங்களே பசங்க கிட்ட சொல்லுங்க” அப்பாவை ஏவினாள் அம்மா.

“பசங்களும் எப்ப பாரு ‘வேலை, வேலை’னு ஓடிக்கிட்டே இருக்காங்க.நாலு நாள் தானே போய் சந்தோசமா சுத்திப்பாத்துட்டு வரட்டுமே” என்றார் அப்பா நடராஜன்.

“சரி” என்று அம்மாவும் அரை மனதோடு சம்மதம் சொல்ல அன்று இரவே தேவையானவைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

ஆனால் உண்மையில் தன் அப்பா அம்மாவிடம் அவர்கள் சொன்னது எல்லாம் பொய். எதற்காக அப்படியொரு பொய் சொல்லி விட்டுப் போக வேண்டும்.

தன் அம்மாவோடு உடன் பிறந்த அண்ணன் (தாய் மாமன்) முத்தையா திவாகரனிடமும், பாஸ்கரனிடமும் அடிக்கடி இப்படிச் சொல்வார். “மாப்பிள்ளைகளா உங்கள் வளத்து ஆளாக்கி நல்ல உத்தியோகத்துல உட்கார வச்சு நாலுபேர் மதிக்கும் படி வாழவச்சிருக்காங்களே, அதுக்கு உங்க அப்பாவும், அம்மாவும் எவ்வளவு கஷ்டப்பட்டாங்க’னு தெரியுமா? ‘உழைப்பு, உழைப்பு’னு ஓடி.இளமை காலத்து இன்பங்களைக் கூட அனுபவிக்காமலே போயிட்டாங்க. ஒரு சினிமா பாத்தது கிடையாது. புடுச்சத சமைச்சு சாப்பிட்டது கிடையாது.இவ்வளவு ஏன், காய்ச்சல் தலைவலி’னு வந்தா கூட பணம் செலவாகுமே’னு ஆசுப்பத்திரிக்குப் போனது கிடையாது. தைலத்த தேய்ச்சே சமாளிச்சுக்குவாங்க. என்ன கஷ்டம் வந்தாலும் அவங்கள மட்டும் கை விட்றாதீங்க” என்று பெருமூச்செறிந்தபடி சொல்வார் முத்தையா.

அதனால்தான் இன்ப சுற்றுலா போவதாக, பொய் சொல்லிவிட்டு அவரவர் மாமனார் வீட்டுக்குப் போனார்கள்.

அதிலும் மாமனார் வீட்டுக்குப்போவது தெரிந்தால் அப்பா திட்டுவார்.

அதை சுயமரியாதை பிரச்சினையாக பேசுவார். ஆகவேதான் இப்படியொரு பொய் நாடகம்.

“இந்த நாலு நாட்களாவது அவர்கள் சந்தோஷமாக, இருக்கட்டும். யார் யாருக்கு என்னென்ன வேண்டுமென இழுத்துப் போட்டு இம்சை படாமல், அவர்களுக்கு பிடித்ததை சமைத்து சாப்பிட்டு நிம்மதியாக இருக்கட்டும். இப்போதாவது அவர்கள் இழந்த காலத்தைப் பற்றி மனம் விட்டு பேசட்டும். அவர்களுக்காக அவர்களே கொஞ்சம் வாழட்டும்” என்று அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு இது.

அந்த ரம்மியமான இரவு வேளையில், வானொலியில் இதமான பழைய பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது.பல வருடங்களுக்குப் பின் அவர்களுக்கு அப்படியொரு இரவு.அப்படியொரு தனிமை.நிசப்தமான அமைதி.ஆனால் அதை அனுபவிக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை.முகம் கொடுத்துக்கூட அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. “அது வேண்டும், இதுவேண்டும்” என கேட்பதற்கு பிள்ளைகள் இல்லை. கைக்குள்ளும், காலடியிலும் வந்து விளையாடும் பேரப்பிள்ளைகள் இல்லை. அந்த வீடே அவர்களுக்கு வெறிச்சோடி கிடந்தது. பிள்ளைகள் எப்போது வருவார்கள் என்று கவலை தோய்ந்த முகத்தோடு வாசலையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள் நடராஜனும், சரஸ்வதியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *