அது யாருக்கு சொந்தம்..?

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 31, 2026
பார்வையிட்டோர்: 146 
 
 

அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தின்  கூட்டம் களைகட்டியிருந்தது.

விவாதிக்கப்பட இருந்த முக்கியமான விஷயம்: “பூங்காவில் இருக்கும் அந்த ஒரே ஒரு  வேப்பமரத்தடி சிமெண்ட் பெஞ்ச் யாருக்குச் சொந்தம்?” என்பதே.

​ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி சதாசிவம் மற்றும்  ரியல் எஸ்டேட் அதிபர் ராஜேந்திரன் இருவருக்கும் இடையே இரண்டு மாதங்களாக இந்த பிரச்சனை.

சதாசிவம் எழுந்து  “நான் இந்த அப்பார்ட்மெண்டிலேயே சீனியர் சிட்டிசன். 20 வருஷமா அந்த பெஞ்ச்லதான் நான் மாலையில் உட்காருவேன். இப்போ புதுசா வந்தவங்க அங்க வந்து உட்கார்ந்துக்கிட்டு எழ மாட்டேங்கறாங்க. இது முறையா?” என்று கேட்டார்.

அவருக்குப் போட்டியாக ரியல் எஸ்டேட் அதிபர் ராஜேந்திரன் சீறினார். “யார் முதல்ல வராங்களோ அவங்கதானே உட்காரணும்? என் வீடு பெரிய வீடு. நான்தான் அதிக பராமரிப்புத் தொகை கட்டுகிறேன். எனக்கும் அங்க உட்கார உரிமை இருக்கு!”

வாதம் முற்றியது. “என் பதவிக்கும் வயதிற்கும் மரியாதை கொடுக்கணும்” என்றார் சதாசிவம். “நான் கட்டுகிற பராமரிப்புத் தொகைக்கு மதிப்பு கொடுக்கணும்” என்றார் ராஜேந்திரன்.

இருவரும் சிறுபிள்ளைகளைப் போல “அந்த பெஞ்ச் எனக்குத்தான்” என்று பிடிவாதம் பிடித்தனர். இருவரும் ஒரே பெஞ்சில் உட்காரவும் மறுத்துவிட்டனர். அதற்குப் பல காரணங்களை கூறினார்.

கடைசியில், ஒரு வாரத்திற்கு ஒருவர் வீதம் அந்த பெஞ்சைப் பயன்படுத்தலாம் என்று ஒருவழியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்த நாள் மாலை, சதாசிவம் தன் முறைக்காக அந்த பெஞ்சை நோக்கி மிடுக்காக நடந்தார். அந்த பென்சில் வேறு யாரோ அமர்ந்திருப்பதை அறிந்து, அப்படியே ஸ்தம்பித்து நின்றார்.

பக்கத்தில் சென்றார்.​ அங்கே அமர்ந்திருந்தது அந்த குடியிருப்பின் குப்பையை  பெருக்கும் முனியம்மா பாட்டி. காலையிலிருந்து வெயிலில் அலைந்து கூட்டிப் பெருக்கிய களைப்பில், அந்த வேப்பமர நிழலில் அமர்ந்து, தான் கொண்டு வந்திருந்த பழைய சோற்றை நிம்மதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அந்தப் பக்கம் சென்ற ராஜேந்திரனும் இதை கவனித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ​யார் பெரியவர், யாருக்கு அதிகாரம் என்ற இவர்களின் ‘குழந்தைத்தனமான சண்டை’யை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டனர்.

​பதவியும் , பணமும் தேடிய அந்த நிழலை, பசியும் உழைப்பும் மிக இயல்பாகத் தத்தெடுத்திருந்தது. இருவரும் தங்கள் கர்வத்தை கைவிட்டு, கை குலுக்கி விட்டு, பேசாமல் திரும்பி நடந்தனர்.

இரா.கலைச்செல்வி இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு  நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *