அடுத்த பக்கம்
கதையாசிரியர்: தமயந்தி
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 10, 2026
பார்வையிட்டோர்: 156
(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பழுப்பேறி சில இடங்களில் கண்ணாடி உடைந்து மஞ்சள் அட்டை தெரிந்த கண்ணாடியில் தமிழரசி முகம் பார்த்தாள். அங்கும் இங்குமாக பவுடர் திட்டுகள். கைக்குட்டையால் அழுந்தத் துடைத்துவிட்டுச் சேலைச் சுருக்கைச் சரியாக்கினாள். வானம் மப்பாக இருந்தது. குடை எடுத்துப் போகவேண்டும். முன்னறையில் மல்லிகா அக்கா பழைய டிரான்ஸ்சிஸ்டரில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள். ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே..’
அழகு பாட்டு. மல்லிகா அக்கா கண்மூடிப் படுத்திருந்தாள். மனசுக்குள் போன வாரம் பெண் பார்த்துவிட்டுப் போனவன் வந்திருப்பான். கிட்டத்தட்ட அவனுக்கும் விஜய்காந்த் நிறம்தான் சின்ன கண்கள். அவளுக்கு இந்த இடம் முடிந்துவிட்டால் அப்புறம் தனக்குத்தான். ‘கல்யாணத் தரகராக இருக்கும் அப்பாவுக்கு வரன் பார்ப்பது பெரிய விஷயமில்லை.
ஆனாலும் ஏனோ மல்லிகாவின் கல்யாணம் தள்ளிக்கொண்டே போனது. பண விஷயமும் அதில் முக்கியமான ஒன்று. இன்று புதிதாகச் சேரப்போகும் வேலையில் அடுத்த மாதம் முதல் தேதி ஆயிரத்துநூறு சுளையாகக் கையில் வரும். அக்காவுக்கு ஒரு ஜதை தோடு வாங்கவேண்டும். கிருஷ்ணாவுக்கு ஒரு பாண்ட் பிட். காலேஜுக்கு சாயம் போன பாண்ட்டைப் போட்டுக்கொண்டு போகிறான்.
அம்மா டிபன் பாக்ஸை நீட்டினாள் “சாமியைக் கும்பிட்டுக்க..”
“அப்பா எங்கே?”
“போயிட்டார். ஏதோ முக்கியமான வேலையாம்..”
“இன்னிக்குமா?’
அம்மா நிமிர்ந்து பார்த்தாள்..
“என்னிக்குத்தான் இல்லே? சாப்பிட உட்கார்…”
“அக்கா சாப்பிட்டுட்டாளா?”
“ம்ஹும், நீ சாப்பிடு தமிழ்..”
அம்மா அப்படித் தமிழ் என்று கூப்பிடுவது தமிழரசிக்குப் பிடிக்கும். நெஞ்சுவரைக்கும் நீவி விடுகிற உணர்வு.. மடமட வென்று சாப்பிட்டு விட்டு ஹாண்ட்பேக்கை மாட்டிக் கொண்டாள். முன்னறையில் எட்டிப் பார்த்தாள்.
“அக்கா.. போயிட்டு வர்றேன்..”
பதில் சொல்லாமல் பாட்டில் லயித்த மல்லிகாவுக்குப் படிப்பு ஏறவில்லை. ப்ளஸ் டூவோடு நிறுத்திக் கொண்டாள். அவளுக்கு நல்ல மாப்பிள்ளை அமையாமல் போனதற்கு அதுவும்கூடக் காரணம்.
வந்த மாப்பிள்ளையெல்லாம் ‘பி.ஏ-வா? பி.எஸ்ஸி-யா… எம்.ஏ-வா?’ என்று கேட்க, அம்மா பின்னாலிருந்து “நல்லா சமைப்பா.. கோலம் போடுவா?” என்பாள். சிரிப்பாயிருக்கும்.. இப்படித் தான் அந்த எல்.ஐ.சி. வரனும் முறிந்து போனது. பெண் பார்க்க வந்த நேரம் அப்பாவும் இல்லை. அம்மாதான் பரபரவென்று சுற்றி வந்தாள்.
“பெண் என்ன படிச்சிருக்கா?’
“ப்ளஸ் டூ…”
முகம் சுருங்கும் என்று நினைத்து தமிழரசி மாப்பிள்ளை முகத்தையே பார்த்தாள். இல்லை… சுத்தமாக இல்லை.
“மத்த விஷயம் பேசலாமா?”
“பொண்ணோட அப்பா இப்ப வந்துருவார்.”
அப்பா வர அரை மணி நேரமாயிற்று. அக்கா முகத்தில் வெட்கக்களை. அப்பா அத்தனை சுவாரஸ்யமாகப் பேசிக் கொள்ளவில்லை. திடீரென மாப்பிள்ளை முகம் கறுத்திருந்தது. அவர்கள் கிளம்பினதும் அம்மாவைக் கூப்பிட்டார் அப்பா.
“இந்த வரன் வேணாம் சகுந்தலா..”
“ஏன்?”
“பையன் அத்தனை நல்லவனில்ல..”
“யார் சொன்னா?”
“ஷ்.. கேக்கப்படாது.. வேணாம்..”
அன்றுதான் மல்லிகா அக்கா அழுது முதன்முதலாகப் பார்த்தது.
“அழாதக்கா..”
“எனக்கு அவரைப் பிடிச் சிருந்ததுடி…”
“என்ன செய்ய? சரியில்லைனு அப்பா சொல்றார்..”
“அப்பா பொய் சொல்றாரோனு தோண்றது அரசி…”
சேச்சே.. வருத்தத்தில் என்ன பேசுகிறோம் என்று புரியாமல் பேசுகிறாள் அக்கா.
ஆபீஸ் புதுஉலகமாகக் கண்ணுக்குத் தெரிந்தது. பக்கத்து ஸீட்டிலிருந்த சொர்ணலட்சுமி சிநேகமானாள்.
“எம் பேர் சொர்ணலட்சுமி, சொர்ணாம்பாங்க.”
“பயங்கர போர்ங்க. இப்படித் தான் எங்கிட்டேயும் முதல்ல இன்ட்ரடியூஸ் ஆச்சு. ஏண்டா ஆச்சுனு இப்ப கஷ்டமாயிருக்கு. அஞ்சு நிமிஷத்துல உங்க கழுத்து தொங்கிரும்… ” சொர்ணா பின்னாலிருந்து அவன் சொன்னான்.
“எம் பேர் கைலாஷ அக்கௌண்டண்ட்.”
“மானேஜரைப் பார்த்துட்டீங்களா..?” சொர்ணா கேட்டாள்.
“இல்லை. இன்னிக்கு ஒரு மணி நேரம் லேட்டா வருவாராம்..”
“பாருங்க தமிழரசி. உங்க வாழ்க்கை வெறுத்துரும். மானேஜர் சரியான தடவல் கேஸ். ‘மகளிர் மட்டும்’ நாசர் மாதிரி…” – சொர்ணா சொல்லிவிட்டுச் சிரிக்க, கைலாஷ் சேர்ந்து கொண்டான்.
இப்படிச் சிரித்த மனுஷர்களிடையே உட்கார்ந்திருந்தது தமிழரசிக்குப் பிடித்திருந்தது.
திடீரென்று எல்லோரும் அமைதியானார்கள்.
“மானேஜர்.. மானேஜர்…”
முன்பக்கம் வழுக்கையை மறைக்க லேசாகச் சரித்துக் சீவியிருந்தார். ‘குட்மார்னிங் குட்மார்னிங்’ என்று தலையசைத்தபடி அவர் நடக்க.. அவர் தொப்பையும் முன்னால் நடந்தது. தமிழரசிக்குச் சின்ன வயசில் கோயில் கும்பாபிஷேகங்களில் பார்த்த யானை நினைவுக்கு வந்தது.
கொஞ்ச நேரத்தில் மானேஜர் கூப்பிடுவதாக ப்யூன் வந்து சொன்னான்.
”பார்த்து தமிழரசி. நான் சொன்னது நினைவிருக்கட்டும்..” – சொர்ணா கிசுகிசுத்தாள்.
கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனபோது அவர் சிரித்தார்.
“ப்ளீஸ் கம் இன். உட்காருங்க….”
“தாங்க்யூ..” நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டாள்.
“உங்களை அக்கௌண்ட் செக்ஷனில்தான் போஸ்ட் பண்ணப் போறோம். கைலாஷைக் கூப்பிட்டுச் சொல்றேன். அவர் பண்ணுவார்..”
“சரி சார்..”
அவர் எழுந்து வந்து தமிழரசியின் தோளைத் தொட்டார்.
“இங்க ஆபீஸ்ல ஃப்ரீயா இருக்கணும். ரிசர்வேஷன்ஸ் கூடாது.. சரியா..?”
தமிழரசி சட்டென்று எழுந்தாள். “ஸாரி சார். நீங்க நினைக்கிற மாதிரி ஆள் நான் இல்லே..”
“நீங்க தப்பா எடுத்துக்கிட்டீங்கனு..”
திரும்பிப் பாராமல் வெளியேறினாள். ஸீட்டில் உட்கார்ந்தபோது, வியர்த்திருந்தது. சொர்ணா கண்ணால் ‘என்னாயிற்று’ என்றாள்.
“நீங்க சொன்னது நிஜம்தான்..”
“ஓ… ‘மகளிர் மட்டும்’ நாசரா?!”
வேலை முடிந்தபோது, ஆயாசம் வந்தது. இருபதுக்கு முப்பது அடி கொண்ட இந்த அறைக்கு நாளைக்கு வருவோமா? ஒருவேளை அப்பா ராஜினாமா செய்யச் சொன்னால்? அக்காவின் தோடு கலைந்து போகும், கிருஷ்ணாவுக்கு பாண்ட் பிட் கிடைக்காது. பழையபடி வீட்டில் காலையில் உப்புமா கிண்டி, சோம்பேறித்தனமாக மத்தியானம் குளித்து.. அப்பாவின் கஷ்டத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாமல்..
“இந்த மாதிரி ஆம்பிளைகளை நடுரோட்ல அம்மணமா விட்டுச் சுடணும்ங்க தமிழரசி” சொர்ணா பேசிக்கொண்டே வந்தாள். மனமென்னவோ தோட்டிலும் பாண்ட் பிட்டிலும் சுற்றிச் சுற்றி வந்தது.
“ஹே… கவலைப்படாதீங்க. இதான் உலகம். நல்லதும் கெட்டதும் நிறைஞ்சது.. அவரை மாதிரி சில பேர் இருந்தாலும் என்னை மாதிரியும் சில பேர் உண்டு” கைலாஷ் சிரித்தபடி பைக்கை உதைத்துக் கிளம்பினான்.
“நிஜம்தான் தமிழரசி. கைலாஷ் மனசு நிறையப் பேருக்கு வராது.”
பஸ் ஸ்டாண்டில் அதிக கூட்ட மில்லை. சொர்ணா எதையோ பேசிக்கொண்டே வந்தாள். ஜானகிராம் ஓட்டல் பக்கம் வந்ததும் காபி குடிக்க வேண்டும் போலிருந்தது. ஓட்டல் வாசலில் பெரிய உடம்போடு ஒரு ஆள் முதுகைக் காட்டிக் கொண்டு படியை விட்டு இறங்கின ஆளைத் துரத்தினான்.
“சார்.. கேரளா, ஆந்திரா.. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் சார்.. வேணுமா?”
விருட்டென்று மனதில் கோபம் வந்தது. சொர்ணா கையைப் பிடித்திழுத்து உள்ளே கூட்டிப் போனாள்.
“உங்களுக்கு இதுதான் முதல் தடவையா உலகம் எக்ஸ்போஸ் ஆயிருக்கு தமிழரசி. பதறாதீங்க…”
மடமடவென்று காபி கீழே இறங்கும்போது ஆசுவாசமாயிருந்தது. கல்லாவில் பணம் கொடுத்துவிட்டு வெளியேறும்போது அந்த ஆள் இன்னும் வாசலில் நின்று கொண்டிருந்தான். இறங்கின சமயத்தில் ஏதோ ஒரு கோணத்தில் முகம் தெரிய, தமிழரசி நின்றாள்.
அப்பா!
– 1.9.96, ஆனந்த விகடன்
தொடர்புள்ள சிறுகதைகள்
ஒய்த்தா மாமா!
மா.சித்திவினாயகம்
May 10, 2026
குழந்தை பேறும் சமூகமும்
இளையவேணி கிருஷ்ணா
May 10, 2026
ஜனனி…! ஜெயம் நீ…!
ஜூனியர் தேஜ்
May 10, 2026