அங்கும் இங்கும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 21, 2026
பார்வையிட்டோர்: 90 

ஜெர்மனியில் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தில் வேலைபார்க்கும் தனது நண்பன் தீபனின் அழைப்பை ஏற்று, ஜெர்மனியின் பூபன் நகரத்திற்கு அருகில் உள்ள மான்ஸம் என்ற கிராமத்திற்கு வந்து பத்து நாட்கள் முடிந்த நிலையில், அதாவது தீபாவளி முடிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, கவியரசு ஊருக்கு புறப்பட்டு கொண்டிருந்தான்.

திருச்சிக்கு அருகே உள்ள தவசிபுரம் அவனது சொந்த ஊர். அவன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்து, சென்னை வழியாக ஜெர்மனிக்கு வந்து முழுசாக பத்துநாட்கள் முடிந்து விட்டது.

அந்த கிராமத்தைச் சேர்ந்த எல்லா சிறுவர் சிறுமிகளும், அவனை போகக்கூடாது என தடுத்தனர். சிலர் ஓவென்று அழுதனர். அவன் போய்விட்டு பத்து நாட்களில் கண்டிப்பாக வந்து விடுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தபின் அவர்கள் அவனுக்கு வழி விட்டனர். அதில் துர்கா தேவியும் துக்கத்துடன் நின்று கொண்டு கலங்கியபடி கவியரசுவைப் பார்த்து பரிதவித்துக் கொண்டிருந்தாள். கண்டிப்பாக பத்து நாட்களில் திரும்பி விடுகிறேன் நீ கவலைப்படாதே என்பதை அவளுக்கு கவியரசு கண்களாலேயே பதில் அளித்தான். அதன்பின் துர்காதேவி சற்று ஆறுதல் அடைந்தாள். துர்காதேவியைப் போல கவியரசுவை நேசிக்கும் அகிலா, சுபநந்தினி போன்றவர்களும் கண்கலங்கியபடி அங்கே நின்று கொண்டிருந்தனர்.

கவியரசு ஏறி அமர்ந்த விமானம் ஓடுபாதையில் ஓடி, மெல்ல ஒரு திருப்பத்துடன் மேலே ஏறி திரும்பி, ஒரு சுழல் வட்டம் போட்டு, மெல்ல வேகம் எடுத்து பின் விர்ரென்று முனிச் நகரத்தை விட்டு விரைந்து பறந்து கொண்டிருந்தது. அவனுக்கு பக்கத்தில் நல்ல கோதுமை நிறத்தில் ஓர் அழகான நடிகை அமர்ந்திருந்தாள். அவள் யாராக இருந்தால் நமக்கென்ன என்கிற ரீதியில் கவியரசு யான்பெரி எழுதிய புதினத்தின் தமிழாக்கமான விவரணை புதினத்தை எடுத்து அதில் முற்றிலுமாக இணைந்தபடி இருந்தான். பக்கத்தில் இருந்த நடிகை செறுமிகொண்டும் அடிக்கடி இருமிக்கொண்டும் இருந்தாள். அதற்கான காரணம் அவனுக்குத் தெரியவில்லை.

கவியரசு மீண்டும் இந்த மான்ஸம் கிராமத்திற்கு அவசியம் வந்தே ஆக வேண்டும். துர்காதேவி போன்ற மகாத்மியோடு வாழ்வது எத்தகைய பேரின்பம். அவளின் நினைவுகள் அவனை ஏங்க வைத்தன. அவன் அவளை நினைத்தபடியே அப்படியே தூங்கிப் போனான். அவள் மெல்ல அவன் அருகில் வந்து காதருகே கிசுகிசுத்தாள். “மாமா இறங்கி வாங்க விளையாட போகலாம்” என்று அவள் சிணுங்கினாள். அப்படியே அவனை மிக அருகில் நெருங்கினாள், கனவில்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அபுதாபி வந்து இறங்கிய போது அவன் கண்விழித்தான். அதன் பின் அவன் தூங்கவில்லை. ஆனால் கண்களை மூடிக்கொண்டு மான்சம் கிராம நினைவுகளில் மூழ்கிப் போனான்.

கவியரசு முனிச் நகரத்திற்குச் சென்று இறங்கியபோது தீபனும் அவனது அண்ணன் நாகலிங்கமும் அவனை சிவப்புநிற மெர்சிடஸ் பென்ஸ் சிற்றுந்துவில் பூபன் நகரம் வழியாக, தாங்கள் புதிதாக கட்டியிருக்கும் வீடு அமைந்திருக்கும் மான்ஸம் என்ற கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்த அழகிய கிராமம் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. கிராமத்தின் வடக்கே பெரிய ஏரி. மேற்கே எல் கா ஆற்றோடு இணையும் சிறிய நீரோடை. தெற்கே எளிமையான மரங்கள் நிறைந்த சிறிய மலைப்பகுதி. கிழக்குப் பக்கம் நீண்ட புல்வெளி மற்றும் வயல்வெளிகள். இவர்கள் போய் கிராமத்தில் இறங்கியவுடன் ஒரு பெரும் சிறுவர் சிறுமியர் கூட்டம் ஆர்ப்பாட்டத்தோடு அவனை வரவேற்றது. அவன் அந்த புல்வெளியில் நின்றவாரே தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டான். அடுத்து அந்த சிறுவர்களும் சிறுமிகளும் தங்கள் பெயரைச் சொல்லிவிட்டு அவனிடம் கைகுலுக்கிவிட்டுச் சென்றனர். கடைசியாக மூன்று இளம் பெண்கள் தங்கள் பெயர்களை சொல்லிவிட்டு, அவனுக்கு கைகொடுத்துவிட்டுச் சென்றனர். அவர்களில் துர்காதேவி கடைசியாக நின்றபடி தன் பெயரைச் சொல்லிவிட்டு, அவனுக்கு கைகொடுத்தாள். அடுத்தபடியாக, அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு, “மாமா நீங்க நாளைக்கு எங்க வீட்லதான் சாப்பிடணும்,” என்று சொல்லிவிட்டு மெல்ல சிரித்தபடி ஓடிவிட்டாள்.

மறுநாள் அவனுக்கு துர்காதேவி வீட்டில்தான் மூன்று வேளையும் சாப்பாடு. அவன் துர்காதேவி வீட்டில் இருக்கும்போது அவனுக்கு உன்னதமும் உற்சாகமும் மிக்க பணிவிடைகள் நடைபெற்றது. அவன் காலை உணவை முடித்த பின் துர்காதேவிக்கும், அவளது தம்பி தங்கைகளுக்கும் தன்னைப்பற்றியும் தனது ஊரைப் பற்றியும் தெரிவித்தான். துர்காதேவி வீட்டு வேலைகளை முடித்தபின் அவன் அருகில் உட்கார்ந்தாள். அவன் அருகில் அமர்ந்து ஆசையோடும், பிரியத்தோடும் அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள். பேசிக்கொண்டே அவனது கை விரல்களையும், கால் விரல்களையும் நெட்டி முறித்து விட்டபடி இருந்தாள். பெங்களூருவில் இருக்கும் அவளது உறவினர்களைப் பற்றி, படுத்த படுக்கையாக கிடக்கும் அப்பாவைப்பற்றி, அன்பின் வடிவமாக இருந்த அவளது தாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்களைவிட்டுப் பிரிந்து சென்றதைப்பற்றி, தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற

அவளது தனியாக ஆசையைப் பற்றி, என பலவாறு அவனிடம் உரிமையோடும் நன்கு பழகிய உறவினர் போலவும் துர்காதேவி பேசிக்கொண்டிருந்தாள்.

துர்காதேவியின் பரிசுத்தமான அன்பிற்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம் என்று கவியரசு உள்மனம் வெகுநேரம் அவனை கேட்டுக் குடைந்தபடியே இருந்தது. அன்று மாலை அவளது தம்பி தங்கைகளுக்கு அவன் கதைகள் சொன்னான். பாட்டுகள் பாடினான். ஆட்டம் போட்டான். அன்றைய பொழுது

மறக்க முடியாத நாளாக அவர்கள் அனைவருக்கும் மாறிப்போனது. கவியரசு உற்சாக மிகுதியால் உன்னதமாகிப் போனான்.

அடுத்தநாள் அவன் அங்கே உள்ள சிறிய தமிழ் பள்ளிக்கூடத்தில் தமிழாசிரியராக பணியில் சேர்ந்தான். அங்கே உள்ள அந்த சிறிய பள்ளிக்கூடம் மதியம் வரைதான் இயங்கும். அதன் பிறகு பிற்பகலில் சின்னஞ்சிறுவர்கள், சிறுமிகள் எல்லோரும் விளையாட்டு வேடிக்கை, ஏரி குளம் குட்டைகளில் குளியல், கிட்டிப்புள், பட்டம் விடுதல், பம்பரம் விடுதல், கோலாட்டம், கும்மியாட்டம், கைத்தாட்டம் என ஆடிப்பாடி மகிழ்வார்கள்.

கவியரசு அங்கு தங்கியிருந்த 10 நாட்களில் ஒரு வாரம் தமிழ் ஆசிரியராக இருந்து, தமிழ் இலக்கிய கதைகள், பீர்பால் கதைகள், ராமாயணக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், ஜென் கதைகள், முல்லா கதைகள் என பல வகைக் கதைகளை சொல்லி அந்த சின்னஞ்சிறுவர்களை தன்வயப்படுத்தியபடி இருந்தான்.

அந்த மான்ஸம் கிராமத்தில் 47 தமிழ் குடும்பங்கள், 18 தெலுங்கு குடும்பங்கள், 15 மலையாள குடும்பங்கள், 12 கன்னட குடும்பங்கள் என மொத்தம் 92 குடும்பங்கள் இருக்கின்றன. அந்த குடும்பங்கள் அனைத்திற்கும் துர்காதேவி கவியரசுவை அழைத்துச் சென்று அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். அங்கே எல்லோரும் ஒன்றாக அன்பாக மிகவும் நேர்த்தியாக வாழுகின்றார்கள். எல்லோரும் தமிழ் பேசுகின்றார்கள். எல்லோரும் சகோதர சகோதரிகளாக வேறுபாடு இன்றி வாழ்கின்றார்கள்..

மறுநாள் காலை வேளையில் தனது வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, மதியத்திற்குப் பிறகு துர்காதேவி கவியரசுவை அழைத்துக் கொண்டு அந்த கிராமத்தின் மூலை முடுக்குகளை எல்லாம் சுற்றிக் காண்பித்தாள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் அவள் அவனது தனி காரியதரிசியாகவே மாறிப் போனாள்.

தீபாவளிக்கு முதல் நாள் மாலை, திறந்த வெளி நடுவில், 20 அடிக்கு 20 அடி நீல அகலம் கொண்ட மிகப்பெரிய வெண்திரை பளிச்சென்று எல்லோருக்கும் தெரியும்படி அமைக்கப்பட்டு இருந்தது. திரையின் முன்புறமும் பின்புறமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்தனர். துர்காதேவி கவியரசுவை இரவு 7 மணிக்கு சற்று முன்பாகவே அழைத்துச் சென்றாள். இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். கவியரசு அங்கே ஏதோ திரைப்படம் காட்டப் போகிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தான். பொதுவாக வெண்திரையை பார்த்தாலே எல்லோருக்கும் அப்படித்தானே தோன்றும். ஆனால் நடந்ததோ வேறு. அந்த திறந்தவெளி புல்வெளி மைதானத்தின் ஓர் ஓரத்தில் கணிப்பொறி வல்லுநர் ஒருவர் ஒரு மேசையில் அமர்ந்தபடி, கணிப்பொறி மூலம் அந்த வெண்திரையை இயக்கிக் கொண்டிருந்தார்.

சரியாக ஏழு மணிக்கு வல்லுநர் கணிப்பொறியை இயங்கவிட்டார். வெண்திரை வெளிச்சம் கண்டது. திரையின் கீழ் பகுதியில் வரிசையாக கட்டங்களும், அக்கட்டங்களில் 1 முதல் 100 வரை எண்களும் காணப்பட்டன. அவற்றிற்கு அருகே வெடிகளின் படங்கள் சிறிய அளவில் இருந்தன. வல்லுநர் சுட்டெலியை பிடித்து எண் ஒன்றின் மேல் வைத்தார். உடனே திரை நடுவில் அணுகுண்டுவின் படம் பெரியதாக தெரிந்தது. வல்லுநர் சுட்டெலியை பக்கத்தில் நகர்த்தினார். உடனே சுட்டெலியோடு ஒரு கம்பி மத்தாப்பு எரிந்தபடி வந்தது. உடனே வள்ளுநர் சுட்டெலியை அணுகுண்டுவின் திரிப் பகுதி அருகே கொண்டு சென்றார். உடனே அது நிஜ அணுகுண்டைப் போல் திரி படபடவென எரிந்து நடுப்பகுதிக்குச் சென்றபின் பட்டார் என பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அந்த காட்சியைக் கண்டு அங்கிருந்த அத்தனை பேரும் கைதட்டி ஆனந்தம் அடைந்தனர். சிறுவர்கள் சீட்டியடித்தார்கள். பெண்கள் ஆகா ஓகோ என கத்தினார்கள். அடுத்து அங்கே இதே போல் தரைச்சக்கரம், புஸ்வானம், சரஸ்வதிவெடி, லட்சுமி வெடி, வெங்காய வெடி, யானை வெடி, பூனைவெடி, மயில் வெடி, குயில் வெடி, குரங்கு வெடி, சரவெடி, கரடிவெடி, அஞ்சு வெடி, குஞ்சு வெடி என வகை வகையாய் மொத்தம் 100 வகையான வெடி வகைகள் இருந்தன. அவற்றில் எண்ணற்ற அழகிய வானவேடிக்கைகளை நிகழ்த்தும் வெடி வகைகளும் இருந்தன.

இரவு 7 மணிக்கு தொடங்கி இரவு பத்து மணி வரை மக்கள் அந்த வெடி வெடிக்கும் படக் காட்சிகளை ஆனந்தமாகவும் ஆச்சரியத்துடனும் பார்த்துப் பார்த்து பரவசப்பட்டபடி இருந்தனர். இரவு பத்து மணி வரை பார்த்துவிட்டு இருவரும் எழுந்தனர். துர்காதேவி அவளது வீட்டிற்கும், கவியரசு, தீபனின் வீட்டிற்கும் சென்று படுத்துக் கொண்டனர். இத்தகைய ஒரு புதுமையான அருமையான நிகழ்ச்சியை வடிவமைத்து வகைப்படுத்திய புண்ணியவானை, அந்த மாமனிதனை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும், என அவன் மனம் பூரித்துப் போனது.

தீபாவளி அன்று காலையில் அந்த அழகிய சிறிய கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளின் வாசல்களில் அகல் விளக்குகள் அழகாக ஒளி வீசியபடி எரிந்து கொண்டிருந்தன. அவை வரிசையாகவும் பார்ப்பதற்கு ரம்யமாகவும் இருந்தன. அன்று காலை 8 10 மணிக்கு முருகன் கோவில் முன்பு உள்ள மிகப்பெரிய அகல் விளக்கில் 20 லிட்டர் விளக்கெண்ணெய் ஊற்றப்பட்டு மிகப்பெரிய மூன்று திரிகளும் அதில் வைக்கப்பட்டிருந்தன. ஊர் மக்கள் எல்லோரும் அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, புத்தாடை உடுத்திக் கொண்டு அந்த அகல் விளக்கின் முன்பு நின்று கொண்டிருந்தார்கள். சில நிமிடங்களில் அந்த மூன்று திரிகளும் ஒரே நேரத்தில் ஏற்றப்பட சுமார் ஐந்து அடி உயரத்திற்கு தீபத்தின் ஒளி பிரகாசமாய் ஒளிர ஆரம்பித்தது. அப்போது எல்லோரும் ஓவென்று ஒரு சேர சத்தமிட அந்த ஓசை அருகில் உள்ள பூபன் நகரம் வரை கேட்டது. அப்போது அந்தப் பகுதிக்கு வள்ளலார் அடிக்கடி வந்து விட்டுப் போனது போல் கவியரசுவிற்குத் தோன்றியது. அடுத்த சில நிமிடங்களில் எல்லோரும் ஒரு தட்டுடன் இரண்டு வரிசைகளில் முருகன் கோவில் முன்பு நின்று காத்திருந்தனர். காலை 8.20 மணிக்கு எல்லோருக்கும் துவையல், சர்க்கரைப்

பொங்கலுடன் வெண் பொங்கலும், காய்கறி கூட்டும் வழங்கப்பட்டது. எல்லோரும் அவரவர்களுக்கு பிடித்த இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

கவியரசுவும் துர்காதேவியும் ஏரிக்கு அருகே உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். மதியமும் கோவிலில் வடை பாயசத்துடன் சாப்பாடு போடப்பட்டது. ஆனால் கவியரசுவும், துர்காதேவியும் நேரம் போவதே தெரியாமல் அருகில் உள்ள நீரோடையில் ஆனந்தமாய் சின்னஞ்சிறுவர்களைப் போல குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

மாலையில் முருகன் கோவிலுக்கு அருகே உள்ள மேடையில் சின்னஞ்சிறு வர்களின் ஆட்டம் பாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம், மயிலாட்டம் என பல வகை நிகழ்ச்சிகள் பரவசமாய் நடந்தபடி இருந்தன. கடைசியாக கவியரசுவும் துர்காதேவியும் மகாகவி பாரதியின் ‘நின்னையே ரதி என்று நினைக்கின்றேனடி கண்ணம்மா’ என்ற பாடலுக்கு இருவரும் சேர்ந்து நடனம் ஆடினர்.

தீபாவளி முடிந்த நான்காம் நாள் காலை 9 மணி அளவில் கவியரசு சென்னை வந்து சேர்ந்தான். அதன் பின் தொடரியில் பயணித்து, மாலை 4 மணிக்கு ஊருக்கு வந்து சேர்ந்தான். வரும் வழி எங்கும் பல இடங்களில் இன்னும் வெடிகளின் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. தீபாவளி முடிந்து பல நாட்கள் கடந்த பின்னரும் தமிழ்நாட்டில் இன்னும் வெடித்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஏன் என்று புரியவில்லை.

கவியரசுவின் ஊரில் கீழத்தெரு சிவலிங்கத்திற்கு தீபாவளி அன்று வெடி வெடித்ததில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டு இப்போது கட்டுப் போட்டு இருக்கின்றார். மேலத்தெரு பரமசிவம் கன்னம் ரெண்டும் வீங்கியபடி இருப்பதாகச் சொன்னார்கள். பக்கத்து வீட்டு பவித்ரா ராணிக்கு வெடி வெடித்து இடதுகை 5 விரல்களும் வீங்கிப் போய் இருக்கின்றாள். வடக்குத் தெரு வாஞ்சிநாதனின் மாட்டுப் பட்டிக்குள் வானவெடி உள்ளே புகுந்து அவரது பட்டி தீக்கரையாகி ஒரு கன்றுக் குட்டியும் இரண்டு ஆட்டுக்குட்டிகளும் கருகி நாசமாகிப் போனதாக சிலர் சொன்னார்கள். இந்த ஊரில் மட்டுமே இப்படி என்றால் தமிழ்நாடு முழுவதும்… இந்தியா முழுவதும்.. எத்தனை எத்தனை விபத்துகள்.. உயிரிழப்புகள்… வீண் செலவுகள்.. வீணாகும் சூழல்கள்… நினைக்க நினைக்க கவியரசுவுக்கு பயமாகத்தான் இருந்தது.

கவியரசுவிற்கு அவனது ஊரில் ஒரு வாரம் கூட இருக்க பிடிக்கவில்லை. எங்கும் வெடி. எதற்கும் வெடி. நின்றால் வெடி. எழுந்தால் வெடி. செத்தால் வெடி. வாழ்ந்தால் வெடி. எங்கும் எப்போதும் வெடிகளின் நெடி அவனை மட்டுமல்ல இந்த பூமியை அதன் தூய்மையை நாசம் செய்து கொண்டிருப்பதை இங்கே எவரும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

பெரும்பாலும் வெடிகள் கந்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. வெடிக்கும் போதும், வெடித்த பின்பும், அதிக வெளிச்சம் வர்ணஜாலம் போன்றவைகளுக்காக, தாமிரம், வெள்ளி நைட்ரேட், காப்பர் சல்பேட், பொட்டாசியம் ட்ரை குளோமட் போன்ற சில வேதிப்பொருள்களும், நைட்ரிக் அமிலமும் சிறிய அளவில் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.

வெடிகள் வெடிக்கப்படும் போது கந்தக டைஆக்சைடு, கந்தக ட்ரை ஆக்சைடு போன்ற நச்சுக் காற்றுகள் அதிகமாக வெளிப்படுகின்றன. ஏற்கனவே நமது பூமி வாகனங்கள் வெளிப்படுத்தும் கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சுக்காற்றினால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இந்த கந்தக டையாக்சைடு கந்தக ட்ரை ஆக்சைடு போன்ற நச்சுக் காற்றுகளும் நம்மையும் நமது பூமியையும் மேலும் மேலும் நாசப்படுத்திக் கொண்டிருப்பதை நாம் ஏன் இன்னும் உணராமல் இருக்கின்றோம்? எப்பொழுது வெடிகளை கைவிடப் போகிறோம்? கவியரசுவின் மனதில் கேள்விகள் கிளைக்கத் துவங்கின.

10 நாட்கள் கழித்து மீண்டும் ஜெர்மனிக்கு போவதாக இருந்த கவியரசு ஐந்து நாட்களிலேயே மீண்டும் ஜெர்மனிக்குப் புறப்பட்டான். துர்காதேவியின் நினைவுகள் அவனை பாடாய்ப்படுத்தின. மான்சம் கிராமத்திற்குச் சென்ற பின் அவனது கண்கள் துர்காதேவியைத் தேடின. துர்காதேவி அங்கே வரவே இல்லை. அங்கே துர்காதேவியின் தோழிகளான அகிலா, சுபநந்தினி இருவரும் கவியரசுவைப் பார்த்தவுடன் ஓவென்று கதறி அழுதனர்.

“துர்காதேவி சொல்லாமக் கொள்ளாம மேலே போயிட்டா மாமா” என்று இருவரும் அழுதப்படியே சொல்ல, கவியரசு அப்படியே அதிர்ச்சியில் “ஓ துர்கா,” என்று காட்டுகத்தலாய் கத்தியபடியே அகிலாவின் அருகில் மயக்கம் அடைந்து புல் தரையில் சாய்ந்தான். அவர்கள் இருவரும் அவன் அருகில் அமர்ந்து அவனுக்கு ஆறுதல் சொல்ல முயன்றனர். கவியரசுவின் கூக்குரலை கேட்ட மலைப்பகுதியில் உள்ள சிறிய குடிசையில் ஒரு பாட்டியோடு பேசிக்கொண்டிருந்த ஓர் உருவம் பாட்டியிடம் சொல்லிவிட்டு சந்தோசமாக மெல்ல இறங்கி, கவியரசுவை நோக்கி வேகமாக ஓடி வந்தது. 15 நிமிடங்களில் அந்த உருவம் கவியரசுவின் அருகில் வந்து நின்றது. அந்த உருவம் துர்கா தேவி என்பதை அறிந்த அகிலா, சுபநந்தினி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

“மாமா பத்து நாள்ல வரேன்னு சொல்லிட்டு அஞ்சு நாளிலேயே வந்துட்டீங்களா. ரொம்ப சந்தோஷம் மாமா. என்ன விட்டுட்டு எப்படி உங்களால இருக்க முடியும்? சரி எந்திரிங்க மாமா ஓடைக்கு குளிக்க போகலாம்,” என்ற துர்கா தேவியின் குரலை கேட்ட கவியரசு பதறியபடி எழுந்து உட்கார்ந்தான். அவன் முகம் பிரகாசம் அடைந்தது. அருகில் இருந்த அந்த இருவரின் முகங்களும் வெளிறிப் போனது.

குறிப்பு: இக்கதை  எனது “இசையின்  எதிரொலிகள்” எனும் சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ள 11 கதைகளில் ஒன்று. இந்த நூல் கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.

முத்தமிழ்ப்பித்தன் எழுத்தாளர் பற்றிய  குறிப்புகள்:  பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன்  இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்:  1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள்  (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *