கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: June 6, 2024
பார்வையிட்டோர்: 5,526 
 
 

நான் அம்பேத்கார் பூங்காவிற்கு வந்த சேர்ந்த போது வானம் பிரகாசமாக இருந்தது. Virtual Open Air Tennis அல்லது VOAT விளையாட அது ஒரு நல்ல நாள். VOAT என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? வாழ்நாள் முழுவதும் உங்கள் வீட்டிற்குள், நான்கு சுவற்றுக்குள் VR (Virtual Reality) செட்டைப் பயன்படுத்தி மெய்நிகர் டென்னிஸ் விளையாடியுள்ளீர்கள். அதே VR செட்டை வீட்டிற்கு வெளியே எடுத்து சென்று விளையாடினால், அது தான் VOAT. VOAT விளையாடுவதில் ஒரு சில நன்மைகள் இருக்கின்றன. எந்த VR செட்டாலும் உருவாக்க முடியாத இயற்கையான தென்றல் உங்கள் தோலை வருடும் சுகத்தை அனுபவித்திருக்கிறீர்களா? மேலும் சூரியன் அள்ளி அள்ளி கொடுக்கும் வைட்டமின் டி வீட்டிற்குள் விளையாடும் போது கிடைக்குமா என்ன?

நான் பூங்காவின் நடுவில் இருந்த ஒரு புல் வெளியை தேர்ந்தெடுத்தேன். எனது தலையில் Meta Quest 99 என்ற VR செட்டை ஐ அணிந்தவுடன் வெளி உலகம் மறைந்து, மெய்நிகர் உலகம் கண்ணெதிரே விரிந்தது. என்னுடைய டென்னிஸ் திறமைக்கு ஏற்ற ஒரு மெய்நிகர் எதிரியை தேர்ந்தெடுத்து அவனுடன் விளையாட ஆரம்பித்தேன். மெய்நிகர் பந்து மெய்நிகர் ராக்கெட்டில் பட்டுக் குதித்தபோது நான் கேட்ட சத்தம் நிஜ டென்னிஸ் விளையாடும் போது கேட்கும் சத்தம் போலவே இருந்தது. இருபது நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டம் முடிந்ததும் (மெய்நிகர் எதிரிக்கே வெற்றி), Meta Quest 99 ஐ தலையிலிருந்து கழற்றி விட்டு சுற்றிலும் பார்த்தேன்.

அப்போது தான் இருபதடி தூரத்தில் நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவர் தேகப்பயிற்சி செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். பக்கத்தில் பார்க் பெஞ்சில் Meta Quest Pro VR செட் இருந்ததைக் கவனித்தேன். என்னுடையதை விட மேம்பட்ட செட் அவருடையது. அந்த VR செட்டைக் காட்டி, “நீங்கள் VOAT விளையாடுபவரா?” என்று கேட்டேன்.

“ஆமாம்.” என்றார் அவர். எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு கைகுலுக்கிக் கொண்டோம்.

“Meta Quest Pro உங்களுக்கு பிடித்திருக்கிறதா?” என்று கேட்டேன்.

“ஓ, ரொம்பவே பிடித்திருக்கிறது. அது உருவாக்கும் சுற்றுப்புறம், அதிலிருந்து வரும் ஒளி, ஒலி எல்லாமே பிரமாதம். மேலும் அது உருவாக்கும் மெய்நிகர் எதிராளி நிஜ எதிராளி போலவே -” அவர் பாதி வாக்கியத்தை நிறுத்தி விட்டு என்னை உற்றுப் பார்த்தார்.

நான் புன்னகைத்துக் கொண்டே “என்ன சொல்ல வந்தீர்கள்?” என்று கேட்டேன்.

“எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது… அதை சொன்னால் சிரிப்பீர்கள்.”

“பரவாயில்லை, சொல்லுங்கள்.”

தன் யோசனையை விளக்கிச் சென்றார் அவர். நான் அசந்து போனேன். என்ன ஒரு அற்புதமான யோசனை!

அப்படித் தான் நாங்கள் எங்களுடைய VR செட்களை தூர எறிந்து விட்டு ஒருவரோடு ஒருவர் விளையாட ஆரம்பித்தோம். உண்மையான டென்னிஸ் ராக்கெட் மற்றும் உண்மையான டென்னிஸ் பந்துடன். இனி ஒருபோதும் நான் VR செட்டை அணியப் போவதில்லை.

நஞ்சப்பன் ஈரோடு பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான்.  அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *