தமிள் படிச்ச அளகு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 15,150 
 
 

கதை ஆசிரியர்: கி.ரா.

குற்றாலத்தில்ஒரு நாள், ரசிகமணி டி.கே.சி. அவர்களைப் பார்க்க ஒருத்தர் வந்தார்.

வந்தவர் செந்தமிழில் எங்களிடம் “அய்யா அவர்களைப் பார்க்க வந்திருப்பதாகச்” சென்னார்.

அவர் பேசுகிற விதமே அப்படி என்று தெரிந்தது.ரசிகமணி அவர்கள் இதை ரெம்ப அனுபவிப்பார்கள் என்று எங்களுக்குக் குஷி!

அவரை அழைத்துக் கொண்டு போய் விட்டோம். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சுத்தமான தமிழில் வெளுத்து வாங்கினார் மன்னன்.

ஆ….ஹா என்பது போலத் தலையை ஆட்டி, மீசைக்குள்ளேயே சிரித்துக் கொண்டு ரசித்துகொண்டு ரசிகமணி அவர்கள் ” ரசித்த” விதம், எங்களுக்கு அனுபவிக்கும் படியாக இருந்தது! வந்தவர் பேசி முடிந்ததும் ரெம்ப குளுமையா, ” வீட்ல சம்சாரத்துட்டயும் இப்படித்தான் பேசுவீளோ?” என்று கேட்டார்கள் ரசிகமணி! டி.கே.சி. சிரிக்காமல் கேட்டுவிட்டார். எங்களுக்குச் சிரிப்பை அடக்கப் பிரயாசைப்பட வேண்டியதிருந்தது.

இடைச்செவலுக்கு வந்த பிறகும் அந்தக் “காட்சி”, ரசிகமணி அவர்கள் கேட்ட ஞாயமான கேள்வி மனசில் கேட்டுக் கொண்டேயிருந்தது. இதை கு.அழகிரிசாமியின் மாமனாரான சந்திரகிரியிடம் அப்படியே – குற்றாலத்தில் நடந்ததைச் சொன்னேன். உடனே அவர் என்னிடம் ஒரு நாட்டுக்கதையைச் சொன்னார்.

ஒரு ஊரில், அளகு என்ற பையனை வெளியூருக்குத் தமிழ் படிக்கப் பண்டிதரிடம் அனுப்பினார்கள். அவன் ரெம்ப நாள் தமிழ் படித்து முடித்துவிட்டு ஊருக்கு வந்தான். அம்மா அப்பாவைப் பார்த்ததும், “அன்னாய், தாதாய்” என்றான் மகிழ்ச்சியுடன், பெற்றவர்களுக்கு “திக்” கென்றது!

“என்ன சொல்லுகிறான் பயல்” என்று திகைத்தார்கள்,”ஏலே அளகு, என்ன சொல்லுதே?” என்று கேட்டார்கள். திரும்பவும் அவன் அதே தோரணையில் ” அன்னாய் தாதாய்” என்று சொல்லிவிட்டு “அயிற்சி மிக்கது, அடிசில் புக்கி, சிறிதே அயனம் கொணர்க” என்றான்.

பெத்த தகப்பன் பதறித்தான் போனான்!

“அட பாவிப் பயலே! ஒன்னே தமிள் படிக்கதான்லே அனுப்ச்சோம்; நீ என்ன பாசையெல்லாமோ போசுதயே!”

அந்த ஊருக்குப் பக்கத்தில் எப்பவோ ஒரு லாட சன்யாசியை கொள்ளைக்காரர்கள் வழிப்பறி செய்து கொன்று போட்டுவிட்டார்கள். தொலைதூர வடநாட்டிலிருந்து வந்த அந்த லாட சன்யாசி போயாக மாறி யாரையாவது பிடிப்பான். அந்த லாட சன்னாசிப் பேய் பிடித்த ஆள் பேசுவது இப்படித்தான் யாருக்கும் விளங்காது, தங்கள் பிள்ளைக்கும் அதே பேய்தான் – தனியாக நடந்து வந்தபோது – பிடித்துவிட்டது என்று வருத்தப் பட்டார்கள்.

போய்களுக்கு எருக்கம் மிளாரு கொண்டு வந்து நாளு சாத்து சாத்தினால் ” போறேன் போறேன்” என்று அலறிக் கொண்டு போய்விடும். ஆகையால், எருக்கம் மிளாறு கொண்டு வரச் சொன்னார்கள்.

ஊரே கூடிவிட்டது, எல்லாருக்கும் வருத்தம் தான், ” ஆசயாய்ப் படிக்கப் போன பிள்ளையை, இப்படி பேய் வந்து பிடித்து ஆட்டுகிறதே” என்று,

ரெம்ப தூரத்திலிருந்து நடந்தே வந்த பையன்; பசிகூட அமத்த முடியலையே என்று அம்மாவுக்கு வருத்தம். காலையிலிருந்து மத்தியானம் வரை அவன் கதவைத் தட்டித் தட்டி ” அன்னாய் தாதாய், அன்னாய் தாதாய்” என்று அழைத்து அழைத்து அழுத்துப் போனான்.

பொழுது இறங்கியது. பசி பிராணன் போனது. அவனை அறியாமலேயே சத்தம் போட்டான் இப்படி ” ஆத்தோவ் வகுறு பசிக்கி, கஞ்சி ஊத்து” – மாறி மாறி சொன்னான் பலமாக!

பெற்றவ்ர்களின் காதில் தேன் வந்து பாய்வது போல இருந்தது. பையனை எருக்கம் மிளாரினால் அடிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. சந்தோஷம் அவர்களுக்கு, ” நம்ம பெரியாட்கள் செய்த புண்ணியம், நம்ம பையனுக்குத் திரும்பவும் நல்லா பேச வந்திட்டது”, என்று சொல்லி ஆறுதல் அடைந்தார்களாம்.

புத்தகம் : கரிசல் காட்டுக் கடுதாசி.
ஆசிரியர் : கி.ராஜநாரயணன்.
பதிப்பகம்: அகரம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *