வெளிச்சத்தை நோக்கி!
கதையாசிரியர்: சிங்கை மா.இளங்கண்ணன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 16, 2026
பார்வையிட்டோர்: 79
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கீழ் வானத்தில் செங்கதிர் ஒளிக்கீற்று இருளைக் கிழித்துக்கொண்டிருந்தது.
இளந்தென்றல் நீரைத் தொட்டுத் தடவ அலை அடுக்காக எழுந்து வந்து நிலமகள் மடியில் புரண்டுகொண்டிருந்தது.
தென்னையையும், அத்தியையும் தென்றல் தழுவப் பனிநீர் படிந்த இலைகள் இன்பக் கண்ணீர் சொரிந்தன.
புன்னகை பூத்து நின்ற செடிகள் மலர் மாரி பெய்ய மலர் மணம் கரையெல்லாம் மணத்தது.
‘கீச் கீச்’ என்று பறவைகள் பண்ணிசைத்து இன்பப் பாட்டுப் பாடின.
இனிய சூழலில் கிழக்கு முகமாக ஆழியை நோக்கிக் கொண்டிருந்த அழகுச் சிங்கம் அசையாமல் சிலையாக நின்றது.
கவிந்திருந்த வானத்தைத் தொட்டுத் தழுவிய கடலிலிருந்து செங்கதிரோன் எழுந்தான்.
சிங்க நாடு பொன்னொளிபட்டுப் பொலிவு பெற்றுக் கொண்டிருந்தது.
கடல் நண்டு களிநடம் புரிந்தது.
சூரியனைக் கண்ட பனியைப் போல் உயிரினம் சோம்பல் முறித்துவிட்டிருந்தன.
இயந்திர எறும்புகள் உயிர் பெற்றுச் சாலைகளில் சாரைசாரையாக ஊர்ந்து கொண்டிருந்தன.
அஞ்சல் நிலையக் கட்டிடத்தில் குடியிருந்த புறா உடலை உலுக்கிவிட்டு அரச நடை பயின்றது.
தாயின் அணைப்பில் கதகதப்பாகக் கண்ணுறங்கிய பொற்குஞ்சுகள் சூடு தணிந்ததும் ‘கீ கீ’ என்று வாயைப் பிளந்தன.
தன் குஞ்சுகளின் பசியைப் போக்க நினைத்த பெண் புறா ‘பட்பட’ என்று பட்டுச்சிறகை அடித்துக் கொண்டு மேலெழுந்து பறந்தது.
பறக்கும்போது அதற்கு ‘தாய்’ அரிசியும், சீனத்துப் பச்சைப் பயறும், அண்டை நாட்டுச் சோளமும் மனக் கண்முன் தெரிந்தன.
வழக்கம்போல் இரை இருக்கும் இடத்தை நோக்கிப் பறந்தது. கேவனாப் பாலத்தைக் கடந்து ஆற்றைப் பார்த்தபோது புறா அதிர்ச்சி அடைந்தது.
ஆற்று நீர் தாலாட்ட அதில் மிதந்துகொண்டிருந்த படகுகள் எங்கோ மாயமாய் மறைந்துவிட்டிருந்தன.
வெறிச்சோடிக் கிடந்த ஆற்றில் சிற்றலை ஊர்ந்து சென்று படிக்கட்டில் முத்தமிட்டது.
பளிங்கு நீரை மீன் ஊடுருவிக் கொண்டிருந்தது.
இக்காட்சியைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த புறாவுக்குப் “படகுகள் எங்கே போயிருக்கும்?” என்ற கேள்வி எழுந்தது.
பின்னால் வந்து கொண்டிருந்த ஆண் புறாவைப் பார்த்தது.
ஆண் புறாவும் பெண் புறாவைப் போல் அதிர்ச்சி அடைந்திருந்தது.
“ஆற்றில் படகுகளையே காணோமே?”
“தெரியவில்லையே!”
“அள்ள அள்ளக் குறையாமல் அமுத சுரபியைப்போல் இரைகளைத் தன் வயிற்றில் இருந்து கொடுத்துக் கொண்டே இருக்குமே!”
“ஆமாம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கும்!”
“இனிமேல் இரைக்கு என்ன செய்வது?”
இரு புறாக்களும் பேசிக்கொண்டே நாடாளுமன்றத்திற்குப் பின் புறம் உள்ள போட் கீயில் தரையிறங்கி அரச நடை போட்டன.
இரை எதுவுமே தட்டுப்படவில்லை.
அவை அங்கு செல்வதற்கு முன்பே ஆற்றை அளந்து பார்த்துவிட்டிருந்த அண்டங்காக்கை மரத்தில் இருந்தபடியே புறாக்களை ஓரக்கண்ணால் பார்த்தது.
“காகா காகா” என்று கரைந்தபடி புறாக்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றது.
“எங்க பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்தே இந்த ஆற்றில் படகு நிறைந்து இருக்குமாம். இப்போ பார்த்திங்களா எப்போதும் களைகட்டியிருக்கும் ஆறு களையிழந்து உருமாறிப்போச்சு. எல்லாத்துக்கும் காரணம் இந்த ஆளுங்களே தான். அவங்க இப்படித்தான் நம்ம தலையில் கை வைப்பாங்க. காக்கை குருவி எங்கள் சாதின்னு பாடுவாங்க. ஆனா அதே நேரத்தில் இப்படியும் செய்வாங்க. நாம அவங்களுக்கு என்ன தீங்கு செய்யுறோம்? எதுவும் இல்லையே! உங்களை எடுத்துக்கங்க நீங்க அவங்களுக்காக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு உயிரைப் பணயம் வைத்து செய்திகூட கொண்டு போயிருக்கிறீங்க. உதவி செய்த உங்கள் உயிரையே அவங்க விலை பேசுறாங்க. உங்களுக்குக் குடியிருக்க கூடுகட்டிக் கொடுக்கிறாங்க. நீங்களும் அவங்களை நம்பிக் குடியிருக்கிறீங்க. ஆனா அவங்களோ நம்பியிருக்கும் உங்கள் உயிரையே குடிச்சிடுறாங்க!” என்றது.
காகம் கரைந்தது பெண் புறாவுக்குச் சரியென்று பட்டது.
ஆனால் ஆண் புறாவுக்குக் குழப்பமாக இருந்தது.
“அதுக்கும் படகு ஆற்றில் இல்லாததற்கும் எந்தத் தொடர்பும் இல்லையே! நீ ஏன் அவர்கள் மேல் பழி சுமத்துகிறாய்?” என்று கேட்டது.
“உங்களுக்கு ஒண்ணுமே புரியவில்லையே! இந்த உலகமே அவங்களுக்கிட்டே மாட்டிக்கிட்டுத்தானே விழிக்குது. உலகத்தை அவங்க தானே ஆட்டிப் படைக்கிறாங்க! போர்க் கருவிகளைச் செய்து குவிச்சு வச்சிருக்கிறாங்க! ஏவுகணை களை நட்டுவைத்திருக்கிறாங்க! அணுகுண்டுகளைச் செய்து அடுக்கி வச்சிருக்கிறாங்க! உலகத்தை அழிக்கிறதும் வைத்திருக்கிறதும் இப்போது அவங்க கையில்தானே இருக்கிறது. அவங்க நினைத்தால் உலகத்தைச் சாம்பலாக்கிடுவாங்க!” என்று தலையைச் சாய்த்துப் பார்த்தது.
“நீ என்னென்னவோ சொல்கிறாயே! அதுக்கும் ஆற்றில் கிடந்த படகுகள் காணாமல் போனதற்கும் என்ன இருக்கு?
“நீங்கள் தெரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதானா? உங்கள் மனம் பால் மனம்! அதனாலேதான் வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கிறீங்க. இந்த ஆளுங்க இருக்காங்களே இவங்க எங்கேயாகிலும் சண்டைப் போட்டுக்கிட்டு இருப்பாங்க. அதனாலேதான் வெளிநாட்டுல இருந்து கப்பல் வரலே! கப்பல் வந்தால்தானே படகுகளும் சரக்கை ஏத்திக்கிட்டு வரும்!” என்று காகம் இறக்கையை அடித்து தன் அறிவாற்றலை வெளிக்காட்டிவிட்ட பெருமையோடு பார்த்தது.
ஆண் புறா அதையே கூர்ந்து பார்த்தது.
“அப்படினா வெறும் படகாகிலும் இந்த ஆற்றில் கிடக்க வேண்டும்!” என்றது.
ஆண்புறா இப்படிக் கேட்கும் என்று காகம் நினைக்கவில்லை. சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தது.
“ம்…. நீங்க நினைக்கிறது தப்பு! சண்டைக்கு அவங்க இந்தப் படகுகளையும் பயன்படுத்துவாங்க!” என்றது.
“அப்படியா?” என்றது ஆண்புறா.
“இருக்கும் இருக்கும்!” என்றது பெண் புறா.
“என்ன இருக்கும் இருக்கும் என்கிறீர்கள்! அதேதான்!” என்றது காகம்.
கற்களைப் பொறுக்கிப் போட்டுச் சாடிக்கு அடியில் இருந்த நீரை மேலே வரச் செய்து, அந்த நீரை அருந்திய காகத்தின் கதை நினைவுக்கு வந்தது.
அதைப்போல் இந்தக் காகத்திற்கும் அறிவுக்கூர்மை இருக்கவே செய்யும் என எண்ணியது.
வானத்தை முட்டுக்கொடுத்துக் கொண்டு ஆற்றோரத்தில் நின்ற கட்டிடங்களையும் ஆண் புறா அண்ணாந்து பார்த்தது. அதற்குப் பக்கத்தில் சிறுசிறு பழைய கட்டிடங்களையும் பார்த்தது.
இரண்டடையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது இவ்வளவு பெரிய கட்டிடத்தைக் கட்டுபவர்கள் எதையும் செய்வார்கள் என்று அதற்குத் தோன்றியது.
“சரி இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?” என்று புறா கேட்டது.
“நாம் முதலில் பறவைகளையெல்லாம் ஒன்றுகூட்ட வேண்டும். நீங்கள் புறாக்களை அழைச்சுக்கிட்டு இங்கே வந்துவிடுங்கள். நான் காகங்களைக் கொஞ்ச நேரத்தில் ஒன்று திரட்டிவிடுகிறேன். நாம் கூடிப்பேசி முதலில் முடிவெடுப்போம். அதற்குப் பிறகு மற்ற பறவைகளையும் வரச்சொல்லி நாம் எடுத்த முடிவைச் சொல்லி ஆக வேண்டியதைப் பார்ப்போம்!” என்றது அண்டங் காக்கை.
“காகம் தந்திரமான பறவை.அது சொல்வது சரியாகத்தான் இருக்கும்” என்று எண்ணிய ஆண் புறா “சரி” என்றது.
பெண் புறாவும் தலையை ஆட்டியது.
அண்டக்காக்கைக்கு ஒரே மகிழ்ச்சி.
அது தலைகால் தெரியாமல் “காகா காகா” என்று கரைந்தது.
கரைந்து உறவாடும் காக்கைக் கூட்டம் சிறிது நேரத்தில் கூடிவிட்டது.
புறாக்களும் கூட்டமாக வந்து சேர்ந்தன.
சூரியனும் உச்சிக்கு வந்துவிட்டிருந்தான்.
உச்சி வெயில் பட்டு இலைதழைகள் வெதும்பிக் கொண்டிருந்தன.
பூத்துக் குலுங்கிய மலர்கள் கதிரவனின் கனல் கக்கும் பார்வை பட்டு வாடிக்கொண்டிருந்தன.
நடனம் புரிந்த நண்டுகள் வெப்பத்திற்குப் பயந்து பதுங்கிவிட்டிருந்தன.
அத்தியும், தென்னையும புழுங்கிக் கொண்டிருந்தன. கடல் நீர் கொதித்து ஆவியை விட்டுக்கொண்டிருந்தது. கரையோரத்தில் நின்ற சிங்கத்தின் தலை வெப்பத்தால் வெடித்துவிடும் நிலையிலிருந்தது.
குழுமியிருந்த பறவைகளுக்குத் தலைமை ஏற்றிருந்த அண்டங்காக்கைக்குத் தலைக்கனம் வந்துவிட்டிருந்தது.
சர் ஸ்டாம்போர்டு ராபிள்ஸ் சிலைக்கு மேலே உள்ள குறுக்குக் கம்பியில் அமர்ந்திருந்த அண்டங்காக்கை, கூடியிருந்த புறாக்களையும், காகங்களையும் பார்த்தது.
“அன்புத் தோழர்களே! அருமை நண்பர்களே! நமக்கு நம் பாட்டன் பூட்டன் காலத்திலிருந்தே இந்த இடத்தில் உணவு கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது திடீர் என்று நிலைமை மாறிவிட்டது. இந்த நிலையைப் போக்க நாம் குரல் கொடுக்க வேண்டும். நம் உரிமையை நாம் பெற வேண்டும். அதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும். அந்த வழியைக் கண்டுபிடிக்க நீங்கள் ஆதரவு தர வேண்டும். தருவீர்களா?” என்றது காக்கை,
‘தருவோம் தருவோம்!” என்று விக்டோரிய அரங்கக் கட்டிடத்தில் இருந்த காகங்கள் கரைந்தன.
“தருகிறோம்! தருகிறோம்!” என்ற புறாக்கள் சொல்லின.
“உங்கள் ஒத்துழைப்பையும், ஒருமைப் பாட்டையும் பாராட்டுகிறேன். இந்த ஒற்றுமையும், ஒத்துழைப்பும் நீடிக்க வேண்டும். மற்ற பறவைகளின் ஆதரவையும் பெற வேண்டும்!”
“ஒன்று திரட்டுவோம்! ஒன்று திரட்டுவோம்!” என்றன புறாக்கள்.
“அதற்காக நாங்கள் உயிரையும் கொடுப்போம்! உயிரையும் கொடுப்போம்!” என்று காகங்கள் சூளுரைத்தன.
ஆற்றுக்கு மறுபக்கம் உள்ள பழைய செங்கற் கட்டிடத் தொலைக் காட்சி அண்டினாவில் இருந்து காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்த சிட்டுக் குருவி ஆற்றைக் கடந்து வந்தது.
அண்டங்காக்கை அமர்ந்திருந்த கம்பிக்கு எதிரே நின்ற அரசமர உச்சியில் அமர்ந்து குழுமியிருந்த பறவைகளைப் பார்த்து,
“அமைதி அமைதி!” என்றது.
புறாக்களும் காகங்களும் கூச்சலிடுவதை நிறுத்திவிட்டுச் சிட்டுக் குருவியைப் பார்த்தன.
அண்டங்காக்கை சிட்டுக் குருவியை ஏளனமாகப் பார்த்தது.
சிட்டுக் குருவி அதைப் பொருட்படுத்தவில்லை.
“என்னைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். என்னைச் சிட்டுக் குருவி என்றும், ஊர்க்குருவி என்றும், ஊர் சுற்றி என்றும் செல்லமாக அழைக்கிறீர்கள். ஊரில், உலகத்தில் என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது என்று எனக்கு நன்றாகத் தெரியும்.
“ஆமாம் உங்களுக்குத் தெரியும்! உண்மைதான் உங்களுக்குத் தெரியும்!” என்று காகங்களும் புறாக்களும் கத்தின.
“இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுமே உயிர்வாழ வேண்டும்! அதற்கு எல்லாரும் உழைத்தே ஆக வேண்டும். உழைக்காமல் பிறர் உழைப்பைப் பெறுவது தப்பு!”
இப்படிச் சொல்லியதும் கவர்ந்து தின்னும் அண்டங்காக்கைக்கு நறுக்கென்றிருந்தது.
சிட்டுக் குருவியை வெறுப்போடு பார்த்தது.
சிட்டுக் குருவி அதையும் பொருட்படுத்தவில்லை.
அது தொடர்ந்து பேசியது.
“உழைக்காமல், இருக்கும் இடத்திலேயே இருந்து கொண்டு உணவு வேண்டும் என்றால் எப்படி உணவு கிடைக்கும்? கிடைக்காது உயிர் வாழவும் முடியாது என்பது உங்களுக்கும் தெரியும்!” என்றது.
“ஆமாம்! ஆமாம்! தெரியும்!” என்று காகங்களும் புறாக்களும் கத்தின.
“இவ்வளவு நாளும் இந்த இடத்தில் எளிதாக உணவு கிடைத்து வந்தது. இனிமேல் இங்கு எளிதாக உணவு கிடைக்க வழியில்லை. அது மட்டுமில்லை இங்கே இயற்கை வளமும் இல்லை. இருந்தாலும் உழைத்துத்தானே உணவைப் பெற வேண்டும்!”
“ஆமாம்! ஆமாம்!” என்று புறாக்களும் காகங்களும் கத்தின்.
“இதே இடத்தில் கிடைக்க வேண்டும் என்று காட்டுக் கூச்சல் போட்டுப் பயனில்லை! கடல் வத்திக் கருவாடு தின்னலாம் என்று காத்திருப்பதுக்கு ஒப்பாகும். படகுகள் பாசிர் பாஞ்சாங்குக்குச் சென்றுவிட்டன!”
“அப்படியா? படகு பாசிர் பாஞ்சாங்குக்குப் போய்விட்டதா?” எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டதே!” என்றன புறாக்கள்.
“நீங்கள் இருந்த இடத்திலே இருந்துகொண்டு உணவு வேண்டும் என்றால் எப்படித் தெரியும்? தேடிப்பார்த்தால்தானே தெரியும்! தேடிப்பார்க்காமல் எதையெதையோ கற்பனை செய்து கொண்டு கத்துகிறீர்களே!” என்று சொல்லிய சிட்டுக் குருவி அருகில் உள்ள உச்ச நீதிமன்றக் கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டியைப் பார்த்தது.
அந்தப் பெட்டிக்கு அடியில் பொருத்தப்பட்டிருந்த தகரத்தில் தேங்கியிருந்த நீரில் மைனாக்கள் குளிப்பதும் தெரிந்தது. அதைப் பார்த்ததும்,
“அதோ பாருங்கள் மைனாவை. அலைந்து உணவு தேடி. உண்டுவிட்டு குளிர்சாதனப் பெட்டிக்கு அடியில் உள்ள நீரில் குளிக்கின்றது. அது இடத்திற்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது. ஆறு வேண்டும், குளம் வேண்டும் என்று குளிக்காமல் இருக்கவில்லையே. அப்படியிருந்தால் நீர் கிடைக்குமா? கிடைக்காது என்று அதற்குத் தெரியும்: அதைப்போல் நீங்களும் காலத்திற்குத் தகுந்த படி மாற்றங்களை வரவேற்கக் கற்றுக்கொள்ள வேண்டும்!”என்றது.
புறாக்களும் காகங்களும் குளித்துக் கொண்டிருந்த மைனாவைப் பார்த்தன.
“மாறத்தான் வேண்டுமா?” என்று காகங்கள் கேட்டன.
“மாறவில்லை என்றால் வாழ முடியாதா?” என்று புறாக்கள் கேட்டன.
“மாறித்தான் ஆக வண்ேடும். மாற்றங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நீங்கள் மாறவில்லையென்றால் பசிப்பிணி உங்களைப் பற்றிக்கொள்ளும். அது மட்டுமில்லை; பசியெடுத்த வல்லூறுகளுக்கும் இரையாகக் கூடும்!” என்றது.
புறாக்களும், காகங்களும் அண்டங்காக்கையைப் பார்த்தன.
அண்டங்காக்கை தலை குனிந்தபடி இருந்தது.
“நாங்கள் இந்தக் காக்கையை நம்பியது தப்பாகிவிட்டது!” “இனிமேலும் நம்பினால் நம் வயிறுதான் காயும்!” உழைக்காமல் இருக்க முடியாது என்பதை உணர்ந்துவிட்டோம்!” என்று காகங்களும் புறாக்களும் கத்தின.
அப்போது வானத்தில் வல்லூறு வட்டமிட்டதால் அதன் நிழல் கீழே தெரிந்தது. புறாக்களும் காகங்களும் நடுநடுங்கி ஓடி ஒளிந்து கொண்டன.
அண்டங்காக்கை எங்கே சென்றது என்றே தெரியவில்லை.
வல்லூறு தன் ஆற்றல்மிக்க தொலைநோக்கிக் கண்களால் கீழே பார்த்தது. தன் கண்களுக்கு எதுவுமே தென்படவில்லை.
அது மறைந்ததும், தப்பித்தோம் பிழைத்தோம் என்று புறாக்களும் காகங்களும் வெளியே வந்தன. சிட்டுக் குருவிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டன.
அஞ்சல் நிலையத்திலிருந்து வந்திருந்த பெண் புறாவுக்கும் ஆண் புறாவுக்கும் பட்டினி கிடக்கும் குஞ்சுகளின் நினைவு வந்தது.
இரண்டும் பாசிர் பாஞ்சாங் துறையை நோக்கி விரைந்தன
சிங்கப்பூர் ஆற்றில் கண்ட அந்தப் படகுகள் ‘ஏலேலோ அயிலக்கா’ பாடிக்கொண்டு ஆடுவதைப் பார்த்ததும் புறாக்களுக்கு ஒரே மகிழ்ச்சி.
படகில் போய் அமர்ந்தன.
பசி எடுத்த வயிற்றுக்குச் சிறிது பொறுக்கிப் போட்டுக்கொண்டு குஞ்சுகளுக்கும் எடுத்துக் கொண்டு அஞ்சல் நிலையக் கட்டிடத்துக்குத் திரும்பி வந்தன.
கூட்டை அடைந்ததும் குஞ்சுகளைப் பார்த்தன.
அவற்றுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பட்டினி கிடந்த குஞ்சுகளின் ஆவி காற்றோடு கலந்துவிட்டிருந்தது. புறாக்களின் கண்களிலும் கடல் மடை திறந்து கொண்டது.
குஞ்சுகளின் இறப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கவலையோடிருந்த அவற்றுக்கு அறியாமை இருள் அகன்று நம்பிக்கை ஒளி பிறந்தது.
மீண்டும் தென்றல் கடல் நீரைத் தொட்டுத் தடவச் சிற்றலை அடுக்கடுக்காக எழுந்து வந்து கரையை முத்தமிட்டது. தென்னையும் அத்தியும் அகம் குளிர்ந்தன.
பூத்துக் குலுங்கிய மலர்கள் மணம் கமழத் தலை நிமிர்ந்து சிரித்தன.
நண்டு தலைகாட்டியது; பறவையினம் அமைதிபெற்றது. சிங்கச் சிலையின் நெஞ்சம் குளிர்ந்தது.
விக்டோரிய அரங்கக் கடிகாரம், டாண் டாண் என்று ஒலித்து உழைக்க உறுதி பூண்டிருந்த பறவைகளுக்கு இன்பக் கிளுகிளுப்பை மூட்டியது.
தகதகத்துக் கொண்டிருந்த கதிரவன் மேலைக் கடலில் தன்னை நனைத்து வெப்பத்தைத் தணித்துக் கொணடிருந்தான்.
முழுவட்டப் பால் நிலவு கிழக்கில் தண்ணொளி சிந்த சிரித்துக் கொண்டு எழுந்தது.
வானத்து விண்மீன்கள் எல்லாம் அடுக்கு வீடுகளிலும், சாலைகளிலும் உதிர்ந்து தம் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன.
பூங்காநகர் வயிரத்தால் இழைக்கப்பட்டிருந்தது.
– தூண்டில் மீன், முதல் பதிப்பு: சூலை 2001, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
![]() |
1938இல் சிங்கப்பூரில் பிறந்தார். இவருடைய தாயார் சிங்கப்பூரில் பிறந்தவர். தந்தை தமிழ் நாட்டில் பிறந்தவர். கலைமகள் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய இவர் இண்டர்மீடியட் வரை படித்தார். பின்னர் தகவல் கலை அமைச்சில் தமிழ்ச் தட்டச்சராக அரசுப் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார். இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலகிருட்டிணன். பரிதிமாற்கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரி) மறைமலையடிகளைப் பின்பற்றி இளங்கண்ணன் என்று பெயரை தமிழ்ப் படுத்தி…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
பொன்னழகியின் காட்டு வீடு
புஷ்பராஜ் கந்தசாமி
October 21, 2026
நான்கு மகா கோழிகள்!
செ.ஹரிஷ்
October 21, 2026
உயிர்காப்பான் தோழன்
ஸ்ரீ.தாமோதரன்
October 12, 2026
