கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2026
பார்வையிட்டோர்: 257 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கரியால் கீறப்பட்ட கோட்டையும் ஆலமர நிழலையும் மாறி மாறிப் பார்க்கிறான் மணி – மனத் திருப்தியில்லை! 

மணி – மாடு மேய்க்கும் சிறுவன். 

கரியால் கீறப்பட்ட கோட்டை, அந்த ஆல மர நிழல் நெருங்கி விட்டால் அவன் தனக்குள்ளே ஒரு நேரத்தைத் தீர்மானித்துக் கொள்வான். அந்த ஒரு நேரத்தை மட்டும் அவனால் தீர்மானிக்க முடியும். அதுவும் தான் புறப்படும் நேரம் என்பதைத் தவிர – எத்தனை மணி என்று கூறிவிட மாட்டான். 

‘சீ… இந்தச் சூரியன் இப்படியே நிற்கிறதா…?’ வானத்தை அண்ணாந்து பார்த்தபடி கூறுகிறான். அங்கு வேறு யாருமில்லை. தனக்குத் தானே கூறிக் கொள்கிறான். கீறப்பட்டிருக்கும் கரிக் கோட்டை அந்த ஆல மர நிழல் நெருங்கவில்லையே என்ற மன எரிச்சல். 

‘வேம்புராய் சுடலை’ என்றால் சகலருங்கு தெரியும். மிகப்பிரபலம் வாய்ந்த சுடலை இது. இங்குதான் மணி நிற்கிறான். 

அவனால் கொண்டு வரப்பட்ட மாடுகள் சுடலை நிலத்தில் மேய்ந்து கொண்டு நிற்கின்றன. 

வாழ்வில் மரணமென்ற முற்றுப்புள்ளியைப் பெற்ற வெற்று உடல்களுக்கே உரித்தான பூமியிது. இவன் மணி கடந்த சில மாதங் களாக இதே சுடலையில் தனது சீவியத்தை நடத்திக் கொண்டிருக்கின்றான். 

சுடலை என்றால் அனைவருக்குமே மனதில் ஒருவித பய உணர்வு தோன்றும். ஆனால் இவனுக்கு அப்படியொரு பய உணர்வும் இல்லை. அதேவேளை மணி துணிந்தவன் என்றும் கூறிவிட முடியாது. வறுமை, தனிமை, சமூகத் தொடர்பின்மை போன்ற காரணங்களால் அவனது மனதில் ஏற்பட்டதொரு இறுக்க உணர்வென்றுதான் கூறவேண்டும். 

சுடலையின் கிழக்குப் பக்கமாக ஒரு மடம்… இந்த மடத்தைச் சுடலைமடம்’ என்று கூறுவார்கள். பிணங்களைக் கொண்டு வருபவர்கள் இந்த மடத்தில்தான் இளைப்பாறுவர்கள். இந்த மடத்தோடு மருவி ஒரு ஆலமரம் கிளை பரப்பி நிற்கின்றது. இந்த ஆலமரத்தின் கீழுள்ள கற்பூமியில் மணி கரிக்கட்டியால் ஒரு கோடு போட்டு வைத்துள்ளான். சூரியன் மேற்கு வானத்தில் இறங்கி, ஆலமரத்தின் நிழல் இந்தக் கோட்டை நெருங்கும்போது. 

மணி தனக்குள் ஒரு நேரத்தைத் தீர்மானித்துக் கொண்டு புறப்பட ஆயத்தமாவான். 

கலைந்து நின்று மேயும் மாடுகளை தனது பாஷையில் அழைத்து ஒன்று சேர்த்து திரும்பவும் கிராமத்துக்குக் கொண்டு வரவேண்டும்….. இவனது உறவுகளே இந்த மாடுகள் தான். 

மணி திரும்பவும் தலையை நிமிர்த்தி சூரியனைப் பார்க்கிறான்… மர நிழலையும் கரிக்கோட்டையும் பார்க்கின்றான் இணையவில்லை! அடர்ந்து பற்றைபோல் வளர்ந்திருந்த தன் தலையைக் கோதிவிட்டபடி திரும்பவும் அந்தத் தங்குமிடத் திண்ணையில் வந்தமர்கிறான். கால்கள் இரண்டும் திண்ணை விழிம்போடு தொங்கிக் கொண்டிருந்தன. 

“என்ன செய்யிறது…?” தன்னைத்தானே கேட்டுக் கொள்கிறான்.  

“மிச்சத்தைக் கீறுவம்…” பதிலையும் கூறிக்கொள்கிறான். மணி – ஒரு ஓவியன். 

தொங்கிக் கொண்டிருந்த கால்களை மெலெடுத்து, சப்பாணி கொட்டியமர்ந்து தங்குமடச் சுவரில் கீறப்பட்டிருந்த தேர்ப் படத்தைப் பார்க்கிறான். 

சில தினங்களுக்கு முன் கோவில் திருவிழாவில் அவன் பார்த்த தேர். பார்த்ததைப் பார்த்தபடி கீறும் சக்தி இவனுக்கு உண்டு. 

இருந்தபடியே தன் கால்சட்டைப் பையை விட்டு துளாவுகிறான். கரிக்கட்டி தேடுகிறான். இவன் பாவிக்கும் ஓவிய மூலப் பொருள் அனாதரவான சுவர்களும், கரிக்கட்டிகளுந்தான். கால் சட்டைப் பையுள் கரித்துண்டு இல்லை. 

சிறு மன எரிச்சல் – 

மடத்தை விட்டிறங்கி, பிணம் சுடப்படும் இடத்துக்கு வருகிறான். எந்தவித கூச்சமுமின்றி கை விரல்களை விரித்து குப்பை விறாண்டி போல் சாம்பலைக் கிண்டுகிறான். இரண்டோ மூன்று கரித்துண்களை எடுத்துக் கொண்டு திரும்பவும் மடத்திற்கு வருகின்றான். 

திண்ணையில் நின்றபடி சுவரில் கீறப்பட்டிருந்த படத்தைப் பார்க்கின்றன். 

அவனது மனதில் கருத்தரித்து – முழு உருவம் பெற்றுவிட்ட ஒரு காட்சியை. குறைமாதக் குழந்தையாய்ப் பிரசவித்து விட்டு – மனத் துடிப்போடு பார்க்கின்றான். 

பாலூட்டும் முயற்சி – 

இவனுக்கு இது கன்னி முயற்சியல்ல 

கரிக்கட்டியை வளமாகப் பிடித்து குறையாக இருந்த படத்தை பூரணத்துவப் படுத்துகின்றான். சுடலை மடம் பழுதாக்கக் கூடாது- யாரும் பேசுவார்களே என்ற பயம் கூட அவனுக் கில்லை… சுதந்திர புருஷனாக நிற்கின்றான். 

எட்ட நின்று தான் கீறிய படத்தைப் பார்க்கிறான்… இப்போது அவனுக்கு மனத்திருப்தி. 

மணி இந்தச் சுடலைக்கு மாடு மேய்க்க வந்தபின், இவனது கைவண்ணத்தால் இங்கு பிணம் சுட வருபவர்களுக்கு இந்தத் தங்குமடம் ஒரு காட்சிச் சாலையாக விளங்கி வருகின்றது. இவைகளை மணிதான் கீறுகிறான் என்று பலருக்குக் ‘கேள்வி வாக்கில்’ தெரியும். அது யாரும் நம்புவதில்லை!. 

மாடு மேய்ப்பவன் தானே… எப்படிக் கீறமுடியும்… என்ற எண்ணமோ…. என்னவோ… 

ஒருமுறை படித்த மட்டம், ஒரு பகுதி பிணம் சுட வந்து – இந்த ஓவியங்களைப் பார்த்து – தங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அவர்களின் வற்புறுத்தலின் பேரில்… அங்கு பிணம் எரிந்து கொண்டிருக்கும் காட்சியை…. அப்படியே கீறிக்காட்டி விட்டான் மணி!. 

இவனுக்கு முறைப்படி ஓவியக் கலையைக் கற்பித் தால் ஓவியக் கலையின் சிகரத்தையே இவனால் எட்டிப்பிடிக்க முடியும்… அளவற்ற திறமை… சுடலை மடத்தின் சுவரோடு ஒட்டிக் கொண்டு கிடக்கிறது… இவன்ரை ஆற்றலை வழிப்படுத்த ஆளில்லை.. பாவம் ஏழை…. இப்படிக் கூறிக்கொண்டனர். இதை அவனால் உணர முடியுமா?. 

உலகப் பிரக்ஞை அற்றவன் மணி. 

‘உன்னுடைய படம் நல்லது’ என்று யாராவது கூறிவிட்டால் சந்தோஷப்படுவான். 

‘உன்னுடைய படம் கூடாது’ என்று கூறிவிட்டால் வருத்தப் படுவான். 

இவ்வளவுதான் இவன் உணர்வு. 

ஓவியக்கலையில் பல படிகளை தாண்டிவிட்டான் 

ஓவியத் தத்துவங்களை உமிழ்ந்து துப்பிவிட்டான்… பல ஓவியக் கலையில் அவனிடமுள்ள ‘கனம்’ அது அவனுக்குத் தெரியாதது…! 

ஏன் உலகத்துக்கும் தெரியாது! 

பெற்றவள் – ‘புண்ணுடம்பு’ மாறாத நிலையில் – தான் பெற்ற குழந்தையை பார்க்கும் மன நிலையில்… மணி தான் கீறிய தேர்ப்படத்தைப் பார்த்தபடி நிற்கின்றான். 

நின்றவன் ஆலமரத்தடிக்கு வருகின்றான் – ஆலமர நிழல் கரிக்கோட்டை நெருங்கி விட்டது. 

அங்கிருந்து புறப்படுகின்றான். 

இந்த வேம்புராய் சுடலையிலிருந்து முந்நூறு யார் தூரத்தில் ஒரு பாடசாலை இருக்கின்றது. இவனால் கீறப்பட்டிருக்கும் கரிக்கோட்டை ஆலமர நிழல் நெருங்கும் போது அப்பாடசாலையில் வீதியருகோடு அமைந்துள்ள பாடசாலை மண்டபத்தில் சித்திர வகுப்பு நடக்கும். இதை இவன் கண்டு நேரத்தைத் தீர் மானித்துக் கொள்ள முடியாததால் மர நிழலையும் கரிக்கட்டியால் கீறப்பட்ட கோட்டையும் ஆதாரமாகக் கொண்டு விட்டான். 

இப்போது அதே பாடசாலைக்கு வீதியோரத்திலள்ள மண்ட பத்தில் நடக்கின்ற சித்திர வகுப்பைப் பார்ப்பதற்காக போய்க் கொண்டிருக்கிறான். 

மணிக்கு இப்போது வயது பதினைந்து தான். 

இந்தக் கிராமத்துக்கு இவன் பரம்பரை உரிமையாளன். சிறு வயதிலேயே இவன் தகப்பனை இழந்து விட்டான். இவனோடு சேர்ந்த ஆறு சகோதரங்களுக்கும் ஒரேயொரு சுமைதாங்கி இவன் தாய்தான். ஏதோ தினசரி உழைப்பு. இந்தப் பத்தோ பதினைந்து மாடுகள்… ‘நல்லதங்காள்’ குடும்பமாக வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. 

வீட்டுத் தொல்லையை நீக்குவதற்காக பாடசாலைக்கு அனுப்பப்பட்டதால் ‘தப்பித்தவறி’ ஐந்தாம் வகப்பு வரைபடிக்கும் பாக்கியம் பெற்றிருந்தான் – பாடசாலையில் அரைகுறை மாணவனாக இருந்த காலத்திலேயே இவன் மாடு மேய்க்கப் போவான். 

அப்போதும் இவனிடம் படம் கீறும் பழக்கமுண்டு. 

அப்போதெல்லாம் பச்சை இலைகளைச் சுருட்டிப் பிடித்துத் தேய்த்துக் கீறுவான். சுடலைக்கு மாடு மேய்க்கப் போனதால் ஏற்பட்டது தான் இந்தக் கரிக் கீறல். 

ஓவியத்துறையில் இவன் பாவிக்கும் இரண்டாவது உப கரணம் இந்தக் கரி. இப்போது நல்ல கரியைத் தெரிந்தெடுக்கும் மனப்பாங்கைப் பெற்று விட்டான். 

வீட்டில் நிற்கும் போது இவன் சித்திரத்தைப் பற்றி சிந்திப் பதில்லை என்று கூறிவிட முடியாது. ஆனால் கைக்கு வந்தபடி கீறிக் கொள்ள வசதியான இடம் கிடைப்பதில்லை. ஆதலால் புறப்படும் நேரங்களில் மதவுகள் தங்கு மடங்களைக் கண்டால் ஏதோ ஒரு கோடு கீறாமல் போக மாட்டான். 

பாடசாலையில் நடக்கின்ற சித்திர வகுப்பில் உபயோகிப் படுகின்ற கலர் சோக்குகள், வேறு கலர்கள், கடதாசிகள் போன்ற வற்றைப் பார்த்திருக்கிறானே தவிர, அவைகளைத் தொட்டுப் பார்த்த பழக்கம் கூட இவனுக்கில்லை. 

இந்த வகுப்பில் கூறப்படுபவைகளைக் கேட்டுக் கொள்வான். அதைப்பற்றி தொடர்ந்து விளக்கம் பெறவோ, சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளவோ இவனுக்கு சந்தர்ப்பம் கிடைப்ப தில்லை. 

கிளிப்பிள்ளை! 

சுடலையிலிருந்து புறப்பட்ட அவன் பாடசாலைக்கு வந்து பாடசாலை மண்டபத்துக்கு அருகில் வீதியோரமாகவுள்ள கல்லுக் கும்பலின் மீது ஏறி நிற்கின்றான். 

வகுப்பு நடக்கின்றது. 

‘நீங்கள்… எல்லோரும் இந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள்… நீங்கள் அடிக்கடி காணுகின்ற ஒரு தென்னை மரப்படம் இன்று கீறுவோம். தென்னை மரத்தை நன்கு தெரியும். இதோ எப்படிக் கீறவேண்டும் என்பதை விளக்க நான் ஒரு தென்னை மரப்படம் கீறியுள்ளேன். இப்போது நீங்கள் ஒவ்வொருவராக கரும்பலகையில் கீற வேண்டும்..’ ஆசிரியர் கீறப்போகும் படத்தைப் பற்றி விளக்கம் கொடுக்கின்றார். 

ஒரு படம் கீறப்பட்டிருக்கின்றது – தென்னைமரம் – பல கலர் சோக்குகள் மேசைமீது கிடக்கின்றன. 

ஓவ்வொருவராகக் கீறுகின்றனர். 

மணி மிக அவதானமாகப் பார்க்கின்றான்.

கண்ணுக்குள் முள்ளெடுக்கும் அவதானம்.

கடைசி மாணவனும் கீறி விட்டான்!. 

ஒருவரும் பூரணமாகக் கீறவில்லை – ஆசிரியருக்கு மனத்திருப்பதி இல்லை. 

மணியின் மனம் அவிகிறது. 

பிறப்பில் புலியின் சுபாவம்… பிறந்த தளம் – சூழ்நிலையால் பூனையாகி….. எலியைப் பிடிக்கும் தன்மை கூட இல்லாமல்… மணி நிற்கிறான்…? 

பிறப்பில் பூனையின் சுபாவம்…. பிறந்ததளம் சூழ்நிலை?…. அந்தப் பூனைகளை புலியாக்கி… மனிதனை வேட்டையாட பயிற்றுவிக்க பகீரதப்பிரயத்தனம் நடக்கின்றது! 

சீரற்ற பொருளாதாரத் தளத்தில் நடக்கின்ற ‘திருவிளையாடல்களா…?’ 

ஆசிரியருக்கு கோபம் பீறிட்டு வருகின்றது!. 

‘…சீ… ஒரு தென்னைமரப் படம் கீற… இந்த இருபத்தேழு பேரிலை ஒருத்தன் கூட இல்லை… தினசரி பாக்கிறியள்… நானும் கீறிவிட்டிருக்கிறன்… இதைக் கீறேலாதெண்டால் வேறை என்னத்தைக் கீறப்போறியள்… உங்களுக்கேன்…சித்திரம்…?’ ஆசிரியர் பேசுகிறார். 

மணி சுடலையை நோக்கி நடக்கின்றான். 

… ஒரு தென்னை மரம்..’ மணியின் வாய் முணுமுணுக்க தலையை நிமிர்த்திப் பார்க்கிறான். எண்ணற்ற தென்னை மரங்கள். பல தென்னை மரங்களின் தொகுப்பாக – ஒரு தென்னை மரம்… ஒரு படம்… மணியின் மனதில் உருவாகின்றது… மரத்திலுள்ள வடுக்கள், ஓலைகளின் அமைப்பு, தேங்காய்கள், இளநீர், பூக்கள்…. அத் தனையும் படிப்படியாகப் பதிகின்றன. 

தன் கால்சட்டைப் பையுள் கையைவிட்டுத் துளாவுகிறான். ஒரு கரித்துண்டு கூட இல்லை. அங்குமிங்கும் பார்க்கிறான் குப்பை கூட்டி எரித்த – சாம்பல் கும்பம்… 

இன்னும் முற்றாக அணையவில்லை. 

புகை வந்து கொண்டிருக்கின்றது. 

தடியால் தட்டி இரு கரித் துண்டுகளை எடுக்கிறான். அவை களை எடுக்க முடியவில்லை… சுடுகின்றன… தன் உருமிலைத் துப்பி அதன் சூட்டை தணிக்கின்றான்… 

எங்கே கீறுவது… ?. 

நடு ரோட்டில், சீரான இடத்தைத் தெரிந்து அதில் கீறுகின்றான். 

தென்னை மரம் – கீறி விட்டான் 

ஆத்ம நிறைவு – முகத்தில் பிரகாசிக்கின்றது. 

‘… நல்ல கரி… கிழுவங்கரி… இதை வைச்சிருந்தால் நாளைக்குக் கீறலாம்…’ அங்குமிங்கும் பார்க்கின்றான். ஒரு பத்திரிகைத் துண்டு கண்ணில் படுகின்றது. அதை எடுத்து விரிக்கின்றான். கொட்டை எழுத்தில் சில வாக்கியங்கள்… ஏதோ வொரு உணர்வு அதை வாசிக்கின்றான்…

‘திறமைக்கேற்ற கல்வி வழங்கப்படுகின்றது, இன்னும் சில ஆண்டுகளில் நமது நாடு கல்வியில் தன்னிறைவு பெறும்…..’

அந்தப் பத்திரிகைத் துண்டில் கரிக்கட்டிகளை வைத்து மடிக்கிறான்…

கால்கள் வேம்புராய் சுடலையை நோக்கி நடந்து கொண்டிருக்கின்றன.

– வீரகேசரி, 20.01.1974. 

– கே.ஆர்.டேவிட் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2019, பூபாளம், யாழ்ப்பாணம்.

கே.ஆர்.டேவிட் கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *