சருகுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2026
பார்வையிட்டோர்: 194 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முகம் வெளிறி, கண்கள் செருகி, தண்ணீருக்குள் கிடந்த பூசணிக்காய் போல் துவண்டு கிடக்கிறாள் கறுப்பாயி. 

மூக்குத் துவாரத்தினூடாக வயர் மூலம் பிராணவாயு ஏற்றப் பட்டி ருக்கிறது. இன்றைக்கோ நாளைக்கோ கறுப்பாயி இறந்துவிடு வாள். அவளது உயிர்ப்பூச்சியைப் பிடித்துவிட டாக்டர் கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்க வில்லை. 

“விதி இருந்தால் தப்பு வாள்” அங்கு நின்ற ஒரு நர்ஸ் விதி மீது பழி சுமத்தி வருத்தத்தோடு கூறிக் கொள்கிறாள். 

அப்போது காலை ஒன்பது மணியிருக்கும் வாட் நோயாளர் களை வரிசையாகப் பார்வையிட்ட டாக்டர் கறுப்பாயியின் கை நாடியைப் பார்க்கிறார். அவரது முகத்தில் எந்தவித உணர்ச்சி பாவமும் இல்லை. பெருமூச்சு மட்டும் வெளிவருகின்றது கறுப் பாயியைப் போர்த்தியிருந்த போர்வையை நீக்கி, அவளது வயிற்றை அமர்த்திப் பார்க்கிறார். வயிறு கல்லாகி வீங்கியிருப்பது தெரிகின்றது. 

டாக்டர் அடுத்த நோயாளியிடம் போகிறார். கறுப்பாயின் தலைமாட்டில் கம்பியில் தலையை பதித்த வண்ணம் சிறு நீரூற்றைப் போல் கண்ணீர் சொரிந்து கொண்டிருக்கிறாள். கறுப் பாயியின் தாய் வெள்ளையம்மாள். இன்று காலைதான் மட்டக் களப்பிலிருந்து அவள் வந்திருந்தாள். அவளது மகளின் கடைசிப் பார்வைக்காகவே தான் அழைக்கப்பட்டிருப்பதாக அவளுக்குத் தெரியாது. 

“கறுப்பாயி!… கறுப்பாயி” 

ஏதோ ஒரு உணர்வில் சிறிது கண் விழித்த கறுப்பாயியின் கண் விழி தசைக் கோளத்துள் புரண்டு மீள்கிறது. தெளிவற்ற பார்வை… 

“ம்…ம்” வலுக்கட்டாயமாக முணு முணுக்கிறாள். 

“நான் வந்திருக்கிறன்… அம்மா வந்திருக்கிறன்… என்னைப் பார் கறுப்பாயி…” 

தன் பிள்ளையிடமே தன்னைத் தாயென்று அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியதொரு சூழ்நிலை. வெள்ளையம்மாள் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது. 

“நான் உன் அம்மா… குஞ்சு இந்தக் கோப்பியை குடி…” 

தனது ஆத்மதிருப்திக்காக கோப்பி என்ற ரூபத்தில் கடைசிக் கஞ்சி வார்க்க முனைகிறாள். வெள்ளையம்மாள் திறந்தும் திறக்காத நிலையில் கிடந்த வாய்க்குள் கோப்பியைச் சிறிது சிறிதாக விடுகிறாள். தாயின் முலையிலிருந்து பாலைக் குடிக்கும் குழந்தை வாயை குதப்புவது போல் கறுப்பாயி வாயைக் குதப்புகிறாள். 

உன்னைப் பெத்ததை விட உனக்கு நான் வேறை என்னத்தைத் தந்தன்… 

வயதுக்கேற்ற வாழ்வைத் தந்தேனா? “கடவுளே கறுப்பாயியைக் காப்பாத்து” 

வெள்ளையம்மாளின் மௌனக் குரல் யாருக்குக் கேட்கும்? ஏதோவொரு முடிவில் தனது சீலைத் தலைப்பில் முடிந்திருந்த சில்லறைக் காசை அவிட்டு ஒரு பத்துச் சதக்குத்தியை எடுத்து ஒரு சீலைத் துண்டில் முடிந்து கறுப்பாயின் வலது கை மணிக் கட்டில் கட்டுகிறாள். 

மிகப் பெரிய பணக்காரனான வினாசித்தம்பியை நம்பி ஆறு மாதங்களுக்கு முன்னர் வேலைக்காரியாக பருவச்சிட்டான கறுப் பாயியை அனுப்பி வைத்த வெள்ளையம்மாளுக்கா இப்படியொரு நிராதரவு?. 

நேற்றிரவு பதினொரு மணியளவில் கிணற்றில் விழுந்து விட்டதாகவும், அன்றிரவே அறிவற்று பேச்சு மூச்சற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு விட்டதாகவும் வெள்ளையம் மாளிடம் வினாசித்தம்பி குடும்பம் சொன்ன போது வெள்ளையம் மாள் துடித்துப் போனாள்… 

தனது வறுமை நிலையால் கறுப்பாயியைக் கொன்று விட்ட தைப் போல, அவளது நெஞ்சில் பாரச்சுமை அழுத்துகிறது. அவ ளுக்குள்ளே கருவாக விளைந்த கறுப்பாயி, பத்து மாதம் குடி கொண்டிருந்த கருப்பையே அறுந்து மயிரிழையில் தொங்குவதைப் போன்ற ஒரு உணர்வு…. 

கைகளால் முகத்தைப் பொத்திக் கொண்டு அழுகிறாள். அவளது ஓசைப்படாத அழுகையும் மின்சார விசிறியின் மந்தமான இரைச்சல் சத்தமும் இடையிடையே கறுப்பாயியின் விக்கல் ஒலியு மாக அங்கே கேட்டுக் கொண்டிருக்கின்றன. 

சில நிமிடங்கள் கரைகின்றன. 

கறுப்பாயியின் விக்கல் ஒலி நிற்கிறது. பரபரப்போடு ஓடி வந்த நர்ஸ் அவளைப் பார்க்கிறாள். 

மின்சார விசிறியை நிறுத்தி விட்டு கறுப்பாயியை மூடி இருந்த போர்வையை இழுத்து முகத்தை மூடுகிறாள். 

வெள்ளையம்மாளை யாரோ தாங்கிக் கொள்கிறார்கள். 

வினாசித்தம்பி அழைக்கப்படுகிறார். “என்ன டாக்டர் இப்படியாய் போச்சு?”. 

வினாசித்தம்பி கூறுகிறார். 

மின்மினிப் பூச்சி போல் அடிக்கடி அவரது முத்தில் ஏதோ வொரு உணர்வு தோன்றி மறைவதை டாக்டரால் உணர முடிகின்றது. 

“கறுப்பாயி பிழைத்திருந்தால் அது மறுபிறப்புத்தான்” 

“பிணத்தைக் கொண்டு போகலாமா?”. 

“விசாரணை இருக்கு” விசாரணையா?………!” 

வினாசித்தம்பியின் முகபாவனையை திடீரென ஏதோ ஒரு உணர்வு கல்விக் கொள்கின்றது. 

“முடிஞ்சு போச்சு… ஒரு மாதிரிச் சமாளியுங்கோ டாக்டர்” 

“கருச்சிதைவு ஏற்பட்டதாலைதான் அவளுக்கு மரணம் ஏற்பட்டிருக்கு…” 

கலியாணம் ஆகாதவள் கருத்தரித்தது…?. 

இது கொலையாகக் கூட இருக்கலாம்… 

“நீங்கள் என்ன நினைக்கிறியள்?” 

“இதைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. யாரோடு போனாளோ யாருக்குத் தெரியும்? 

டாக்டர்… வேறொன்றும் கூற என்னால் முடியவில்லை” 

வினாசித்தம்பியின் முகத்தில் பின்னிப் படர்ந்து போய் இருக்கும் இருளின் அர்த்தத்தை டாக்ரால் புரிந்து கொள்ள முடிய வில்லை. மீண்டும் மௌனத்தைக் குலைத்துக் கொண்டு வினாசித் தம்பியே பேசினார். 

“டாக்டர்.. நீங்கள் குட்டையைக் குளப்பாதீர்கள்… நீங்கள் அவளது மரணம் பற்றிச் சந்தேகப்பட்டாலும் கூட, விசாரணைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட அவற்றை யெல்லாம் தடுத்துவிடக் கூடிய சக்தி என்னிடம் இருக்கு டாக்டர். உங்கள் மேலதிகாரிகளே உங்கள் மீது சீறிப்பாயச் செய்யுமளவுக்கு நான் ஒரு படி முன்னுக்கு போகவும் முடியும் எனது வீட்டில் இருந்த ஒரு வேலைக்காரியின் மரணத்தால் எனக்கு அபகீர்த்தி ஏற்படுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது டாக்டர்…” 

அவரது குரலின் உறுதி டாக்டரையே திணற வைக்கிறது. 

நாதியற்ற கறுப்பாயியிடம் உள்ளடங்கிப் போயிருக்கும் அசிங்கமான அந்தப் பிரச்சினையைத் தூண்டவோ, நீதி நியாயத்தை நிலை நாட்டவோ எவருமே அதன் பின் துணியவில்லை. 

வெள்ளையம்மா, வாயில்லாப் பூச்சி. 

சட்டம் முக்காடிடப்பட, தற்செயலாக எற்பட்ட மரணமென தீர்ப்பளிக்கப்படுகிறது. 

சரியாக ஐந்து மணிக்கு கறுப்பாயியின் பிரேதம் பிரேதச் சாலையிலிருந்து வெளியே கொண்டு வரப்படுகிறது. 

சாதாரண சவப்பெட்டியைப் பாவித்தால் வினாசித்தம்பியரின் பெரிய மனித்தன்மைக்கு களங்கம் ஏற்படாதா?. பெரிய மனிதர்களுக்குரிய விலையுயர்ந்த பெட்டியையே வாங்கி தாராள மனப் பான்மை யோடு இங்கிருந்து மட்டகளப்புக்குச் செல்ல கார் ஒன்றையும் ஏற்பாடு பண்ணியிருக்கிறார் வினாசித்தம்பி. 

உயிரோடு இருந்த காலத்தில் கொடுக்கப்படாத ஒரு அந் தஸ்து இறந்த பின் கொடுக்கப்பட்டு, பெரிய மனிதவர்க்க பாவனை யில் என்றுமே கண்டிராத சீலை. சட்டையோடு பிணமாகக் கிடக் கிறாள் கறுப்பாயி. 

பிரேதப் பெட்டி காரில் ஏற்றப்படுகிறது. வெள்ளையம்மாளும் ஏறுகிறாள். 

ஏதோ சிந்தனையோடு அங்கே பெரிய மனிதராக உலாவிக் கொண்டிருந்த வினாசித்தம்பி திடீரென டாக்டரின் அறையை நோக்கி நடக்கின்றார். அவரது முகத்தில் ஏதோ ஒருவித குற்ற உணர்வு பிரதிபலிக்க தலை குனிந்த படியே நடக்கிறார். 

“டாக்டர்”

“யாரது” 

“நான்தான் சற்றுமுன் உங்களுடன் பேசிய வினாசித்தம்பி தான்.” 

“நீங்களா..?. நீங்கள் என்னிடம் வருவியளெண்டு எனக்குத் தெரியும். உங்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் மனம் உடைந்து என்னோடு அப்படி கதைத்திருப்பீர்கள் என்றும் நம்பினேன்…” 

“உண்மைதான்.. எப்படிக் கண்டுபிடித்தீர்கள்” 

“நான் டாக்டராகி எட்டு வருடங்களாகின்றன. இப்படிப்பட்ட பிரச்சினைகள் எத்தினையோ கண்டிருக்கிறன். விஷயத்தை முழுக்க மூடி மறைக்கிறவையும் இருக்கினம்… பிறகு சொல்லுறவையும் இருக்கினம்… நீங்கள் இரண்டாவது ரகத்தைச் சார்ந்தவரென்று எனக்குத் தெரியும்… சரிதானே?” 

“சரிதான்…” 

“….”

“கடைசி வரை நான் யாரிடமும் கூறாத, கூற விரும்பாத ஒன்றை உங்களிடம் கூறுப்போறன். இந்தச் சந்தர்ப்பத்தை நான் விட்டால் பிறகு நான் எப்பவும் இதைப்பற்றி யாரிடமும் கூறமாட்டன். இப்பவே உங்களிடம் அதைப்பற்றி கூற வேண்டும் போலிருந்தது அதுதான் வந்தேன்…” 

“எங்கடை வர்க்கத்திலை நடைமுறையிலிருந்து வருகின்ற ஒன்றைத்தான் நானும் செய்தனான்.. அது மரணத்திலை முடிஞ்சு போச்சு.. இதைக் கூட புதுமை என்று கூற முடியாது… அனுபவ ரீதியாக இப்போதுதான் காண்கிறன். “எனது மகன் வெளிநாட்டுப் படிப்பை மேற்கொண்டிருப்பது தங்களுக்குத் தெரியும். அவன் ஆறு மாத லீவிலை வீட்டில் நிற்கிறான். திரும்பவும் இந்தமாத முடி விலேயே வெளிநாட்டுக்குப் போகிறான். அடிப்பட்ட ஒரு நேரத்தில் இப்படி நடந்ததாலைத்தான் நான் பதட்டப்பட்டு போனன்…”. வெளி நாட்டுப் பழக்கமோ என்னவோ, அவனிடம் சில கெட்ட பழக்கம் உண்டு. பெண் மோகம் அவனிடம் தலைதூக்கி நின்றது எனக்குத் தெரியும். எங்கடை வர்க்கப் பெண்கள் சிலரோடை அவன் சுற்றி யலைந்து கொண்டிருந்தான். 

அவர்களுக்கென்ன? பணமிருக்கு இவன் சின்னப் பொடியன். ஊரிலே நிக்கிற இந்த ஆறு மாத காலத்திலை ஏதாவது விபரீதமாக நடந்து… பேந்து இவன் விசர்கொண்டு அலைவான்… முன்னேற்றமும் கலியாணஞ் செய்து தடைப்பட்டடுப் போகும்… அவனுக்குக் வைக்கலாம்.. ஆனால் இப்ப அதை நான் விரும்பவில்லை. 

அது கூட அவனது முன்னேற்றத்துக்கு தடையாகலாம் என்ற எண்ணம் தான் காரணம். அதற்காக ஒரு தற்காலிகமான வழியை நாடினன். அவ்வளவுதான். எண்டாலும் வேலைக்காரப் பெட்டைய ளோடை எங்கடை வர்க்கப் பொடியள் முசுப்பாத்தி பண்ணுவாங்களே யொழிய விசர் பிடிச்சு அவளுக்குப் பின்னாலை திரிய மாட்டாங்கள்… “நாயளே” எண்டு காலாலை உதைச்சும் தள்ளிப் போடுவாங்கள்.. அதாலைதான் வேலைக்காரி என்ற பெயரிலை கறுப்பாயியைக் கொண்டு வந்தனான். 

பிரச்சினை வெளியிலை தெரிஞ்சால் அது அவமானம். ஆகவே உள்ளுக்குள்ளே நடக்க அனுமதிச்சன். பூனை இருக்கிற கூட்டுக்குள்ளை கிளியையும் விட்டுப் பூட்டிவிட்டன்.. அவன் கூட்டுக் குள்ளை கிளியோடையே சுத்தி வந்தான். மருந்து குடுத்திருக் கிறான். அவள் தின்னயில்லை வயித்திலை கர்ப்பம் வந்திட்டுது.. இது கூட எனக்கு கடைசி நேரத்திலைத்தான் தெரிய வந்தது. அவளாக என்னிடம் கூறுவாள். நான் கோபப்படுவது போல் கோபப்பட்டு அவள் மீதே குற்றத்தைச் சுமத்தி, வீட்டை விட்டுக் கலைச்சிடலாம் என்ற எண்ணத்திலை பேசாமல் இருந்தேன். கடைசி வரை அவளும் என்னிடம் விஷயத்தைக் கூறவில்லை. சூடுபட்ட புலியைத் தேடிச் சுடுவது போல் கருச்சுமந்து நிற்கும் அவளை வெளியேற்றவும் முடியவில்லை. அன்றிரவு பதினொரு மணியளவில் நாங்கள் நித்திரையாக இருக்கும் போது அவள் கிணற்றில் குதித்து விட்டாள். பிறகு… உங்களுக்குத் தெரியும் தானே…” 

டாக்டர் நெட்டுயிர்த்தார். சோகமயமான மங்கிய புன்னகை யொன்று முகத்தில் பளிச்சிட்டது. 

“இப்படிப்பட்ட சம்வங்களுக்கு சமூகத்திலை நிலவி வரு கின்ற பொருளாதார ஏற்றத் தாழ்வு தான் காரணம்… கசாப்புக் கடைக் காரன் ஆடு மாட்டை வாங்குவது போல் ஒரு பெண்ணை வாங்கிப் போட்டியள். அது கெடுக்கப்பட்டு, மரணத்தை தழுவி, பிரச்சினை முடிந்து போச்சு…” 

“இதுகளுக்குச் சாதகமாக எங்களையும் விலைக்கு வாங்கிப் போடுறியள்… நான் செய்த தப்பு. உங்கள் மானம் மரியாதை எண்டு யோசித்ததுதான்…. இது நீங்கள் உள் வீட்டுக்கையே விளையாடியிருக்கிறியள்… 

அந்தப் பெட்டை உள்வீட்டுக் காரர்களாலேயே வயித் திலை “கருவைச்” சுமந்திருக்க நேரிட்டிருக்கு.. என்ரை தொழிலை நான் அக்கிரமத்துக்கு அடைவு வைச்சிட்டன்… அது, அதுக்கான தொழில் இல்லை… ம்.. அதுக்காக நானும் தான் கம்பி எண்ண வேண்டும்…” 

டாக்டர் தொலைபேசியை எடுத்து பொலிஸ் ஸ்டேசனோடு தொடர்பு கொண்ட போது வினாசித்தம்பியால் எதுவுமே செய்ய முடியவில்லை 

ராணி அப்புக்காத்து விசுவலிங்கத்தின் நினைவும் கூடவே எழுந்தது.

– 20.10.1971, மித்திரன்.

– கே.ஆர்.டேவிட் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2019, பூபாளம், யாழ்ப்பாணம்.

கே.ஆர்.டேவிட் கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *