கை கொடுத்த தெய்வம்
கதையாசிரியர்: இரா.துரைமாணிக்கம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2026
பார்வையிட்டோர்: 86
(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என் பெயர் தாமரை. அகவை மூவேழு, இயற்கையன்னை எனக்களித்த எழிற் கோலங்களால் பூத்துக்குலுங்கினேன். படிப்பு ஓரளவுதான். என் உடன்பிறப்பு ஒரே ஒருத்திதான். அவள் தான் அல்லி. அவளுக்கு மணமாகி விட்டது. ஆண் வாரிசு இல்லாத என் வீட்டில் அவளின் கணவர் அடைக்கலம் ஆகிவிட்டார்.
‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ இது அக்கால பழமொழி
இருந்தால் புருஷன். இல்லாவிட்டால் பகைவன் இது இக்கால பழமொழி. தன் தாய் வீட்டிலிருந்து கொண்டு வந்த சொத்து, கன் கணவரிடம் இருப்பதைவிட கொஞ்சம் அதிகமாக இருந்தால் தரன் சொல்படி தன் கணவன் நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் என் தாய்.
என்னுள் பாதி, இன்ப துன்பங்களுள் இருவருக்கும் பங்குண்டு. இருவருக்கிடையே ஏன் வீண் வம்பு? என்ற எண்ணம் கொண்டவர் என் தந்தை.
ஒரு நாள், “இந்த பாருங்க. நம் மூத்த மகளுக்குத்தான் நாம் மாப்பிள்ளையைத் தேட முடியாமல் போய்விட்டது. அவள் விருப்பப் படியே நடந்து கொண்டு விட்டோம். அதைப் போல சின்னவளுக்கும் இடம் கொடுத்துவிடக் கூடாது. புரியுதுங்களா?” என்றாள் என் தாய்.
பருவமடைந்த பெண்ணை வைத்துக் கொண்டு இருப்பது பற்ற வைத்த நெருப்பைப் பத்திரமாக பயன்படுத்துவதற்கு ஒப்பாகும்.
‘மரம் நீண்ட நாள் இருந்தால் வைரம் விழும்’. ‘மகளிர் நீண்ட நாள் இருந்தால் கிழவி ஆகி விடுவார்கள்’ என்று தனக்குத் தெரிந்த புதுமொழிகளையும் சொன்னாள் தாய். “இப்போது நீ என்ன சொல்கிறாய்? சொல்ல வேண்டியதை நேரிடையாகத்தான் சொல்லேன்” – என்றார் தந்தை.
“நான் சொல்ல நினைக்கிறது உண்மையிலேயே உங்களுக்கு விளங்கவில்லையா?”
“கொஞ்சம் புரியுது. ஆனால் அது முழுமையாக உன் வாயாலேயே வரட்டுமே” என்றார் அப்பா.
“நம்ம மகள் சின்னவளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்கிறேன்.”
“அப்படியா? மிக்க மகிழ்ச்சி. செய்துவிடுவோம். கமலம் இந்த நேரத்தில் ஒன்று சொல்ல நினைக்கிறேன். கேட்கிறாயா?” என்றார் அப்பா.
“என்னாங்க? இப்படி பேசுறீங்க? பெற்ற நாம் இரண்டு பேர்களும் ஒரு நல்ல முடிவுக்கு வந்து சந்தோசமாகத் தானே செய்ய வேண்டும்” என்றாள் தாய்.
“கமலம் இதுநாள் வரையில் நீ சொல்லியதை நான் மறுத்தோ ஒத்துக்கொள்ளாமலோ இருந்ததில்லை. இது உனக்கு நல்லா தெரியும்.”
“நான் இல்லை என்றா சொல்கிறேன்? அதற்கு இப்ப என்ன?”
“நம்முடைய மகள் தாமரையின் திருமண விஷயத்தில் மட்டும் நீ என் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். என் ஆசையை நீ நிறைவேற்றி வைப்பாயா?” என்று அப்பா கேட்டார்.
“என்ன என்னிடம் இப்படி கேட்கிறீங்க? நாம் இரண்டு பேரும் மனம் ஒத்து சந்தோஷமாகத் தானே இக்காரியத்தை செய்ய வேண்டும்? இது நம்முடைய கடமை அல்லவா? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு ஏன் என்னை வேதனைப்படுத்துறீங்க?” என்று அழுது கொண்டே கேட்டாள் தாய்.
“கமலம் ஏன் கண் கலங்குகிறாய்? நான் சொல்ல வந்தது என்னவென்றால். நம் வீட்டில் நடக்க இருக்கிற திருமணம் ஒன்றே ஒன்று தான். அதனால் அதை என் விருப்பப்படி செய்ய ஒத்துக்கொண்டாய் என்றால் சந்தோஷமாக நடத்தி விடலாம் என்கிறேன்” என்றார் அப்பா.
“அப்படிதானே செய்ய வேண்டும் என்கிறேன்.”
“என் தங்கை மகன் தருமலிங்கத்திற்கும் தாமரைக்கும் திருமணம்”.
கொஞ்ச நேரம் சென்று, ”என்னங்க திடீரென்று ஒரு குண்டைப் போட்டு என்னை அதிர்ச்சி அடைய செய்து விட்டீர்கள்? எனக்கு இருப்பது ஒரே ஒரு தம்பி. அவனுக்குத் தாமரையைக் கொடுத்து நம்ம உறவு என்றென்றும் ஆலமரத்தின் ஆணி வேர் போன்று ஆழமாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்றாள் தாய்.
“நான் எதைச் சொல்லி நீ கேட்டிருக்கிறாய்? இந்த விஷயத்தில் மட்டும் கேட்கப் போகிறாய். நல்லதைச் செய்யும் போது நம்மிடையே மன வேறுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. ஆனால் பிள்ளையைப் பெற்றவன் என்ற முறையில் ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன். உன் தம்பி ஓர் ஊதாரி. அவனை உன் அப்பாவினால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் தொல்லை தாங்காமலே அவர் இறந்தார். அப்பனைக் கொன்ற அந்தப் பாவிக்கு நம்முடைய அன்பு மகளைக் கட்டி வைத்து அவளின் வாழ்க்கையை வீணாக்கி விடாதே” என்றார் அப்பா.
“அவனுக்கு ஒரு குடும்பத்தை அமைத்து கொடுத்து விட்டால் சரியாகி விடுவான் என்றுதான் இந்த முடிவுக்கு வந்தேன்” என்றாள் தாய்.
“எது எது எப்படி எப்படி நடக்க வேண்டுமோ? அது அது அப்படி அப்படித்தான் நடக்கும். நமக்கு மேல் ஒருவன் இருக்கிறான். அவன் எண்ணம் எதுவோ? அதனால் இந்த விவகாரத்தை இத்துடன் விட்டுவிடு. இனி நடக்க வேண்டியதைக் கவனிப்போம்” என்று அப்பா கூற இருவரும் எழுந்து சென்றார்கள்.
‘தாயிற் சிறந்த ஒரு கோயிலும் இல்லே. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லே’ என்ற வாசகத்தைப் படித்த நான் பெற்றோர்கள் விருப்பப்படியே நடந்து கொள்வோம் என்ற எண்ணத்துடன் நானும் அவர்களுக்குத் தெரியாமல் அங்கிருந்து சென்றேன்.
பெற்றோரும் மற்றோரும் இனிதே வாழ்த்த என் திருமணம் நடந்து முடிந்தது. சினிமாவில் பல தடவை பார்த்த அந்த முதலிரவு நிகழ்ச்சி என் வாழ்க்கையில் இன்று ஏற்படப் போகுதே என்று ஒரு புறம் மகிழ்ச்சியும் மறுபுறம் நாணமும் அடைந்தேன். ஆதவன் தன் ஆட்சியை விட்டு இறங்க காரிருள் தன் கைத்திறமையைக் காட்டத் தொடங்கியது.
எவர்சில்வர் செம்பில் உள்ள நல்லாவின் பாலை என் கையில் கொடுத்து என் அக்காவும் தோழிகளும் என்னை உள்ளே தள்ளி அறையின் கதவை மூடினார்கள். என் மாமா மணிவண்ணனிடம் பேசி பழகி இருந்தாலும் ஏனோ இன்று அவரின் முகத்தைப் பார்க்க வெட்கமாக இருந்தது. இதுதான் பெண்மைக்குரிய பெருமையோ? நானறியேன். குனிந்த தலை நிமிராமல் அடிமேல் அடி வைத்து மஞ்சத்தை நோக்கி சென்றேன். என் கணவர் ஓடி வந்து என்னைக் கட்டி அணைத்து மாசறம் பொன்னே, வலம்புரி சங்கே, மானே. தேனே என்று கூறி ஆரத்தழுவி கொள்ளுவார் என்று எண்ணியிருந்- தேன். ஆனால் அவரோ ஆடாமல் அசையாமல் மஞ்சத்தில் அமர்ந்து வெண்சுருட்டைப் புகைத்துக் கொண்டிருந்தார். நான் அருகில் சென்றதும், ”வா தாமரை. பால் கொண்டு வந்திருக்கிறாயா? நான் பால் சாப்பிட மாட்டேனே. பழரசம் தானே சாப்பிடுவேன். அதுவும் மேல் நாட்டு ரசமாகத்தானே பருகுவேன். இது உனக்குத் தெரியாதா? பரவாயில்லை. இன்றைக்கு ஒருநாள் மட்டும் உனக்காக இந்தப் பாலைக் குடிக்கிறேன், குவளையில் ஊற்றி தா” என்றார்.
உடனே நான் ஊற்றிக் கொடுத்தேன். பிளந்திருந்த மாதுளையையும் கருந்திராட்சையையும் எடுத்து நீட்டினேன். கையில் குவளையைத் தந்தார். அது காலியாக இருந்தது. பழத்தை எல்லாம் சாப்பிட்டு முடித்தார். எனக்கு அவரின் எச்சில் கிடைக்கவில்லையே என்று மனவருத்தம் அடைந்தேன்.
“தாமரை, முதலிரவு என்பது மனித வாழ்க்கையில் ஒரு முறைதான் வரும். அந்த முதலிரவு இன்று வேண்டாம். இன்னொரு நாள் வைத்துக் கொள்வோம். அதனால் நீ மஞ்சத்தில் படுத்துகொள். நான் கீழே படுத்து கொள்ளுகிறேன்” என்று கூறி தலையணையை எடுத்துக் கொண்டு கீழே போய் படுத்துவிட்டார்.
எனக்கு அந்த அறையே பெயர்ந்து தலையில் விழுவது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது. ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என்று கேட்க மனம் விரும்பியது. ஆனால் வாயை திறக்க முடியவில்லை. கண்ணீர் வடிந்து என்கூறைப்புடைவையை நனைத்தது. மெத்தையில் பொத்! என்று விழுந்தேன். தேம்பி தேம்பி அழுதேன்.
சேவல் கூவுவதற்குள் எழுந்து குளித்துவிட்டு காலை காப்பியுடன் கணவனான, மாமாவை எழுப்பினேன்.
“பொழுது விடிந்து விட்டதா?” என்று கேட்டுக் கொண்டே காப்பியை வாங்கிக் கொண்டார். காலச்சக்கரம் சுழன்றது. ஆண்டு ஒன்றாகி விட்டது. நான் இன்னும் கசங்காத மலராகவே இருந்தேன். என் கணவரிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என்று எத்தனை முறையோ கேட்டு விட்டேன். காலம் வரும்போது சொல்கிறேன் காத்திரு என்பார்
‘நானோ காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் காம நோயால் படாத பாடுபட்டேன். எனக்குப் பின் இல்வாழ்க்கையில் ஈடுபட்ட என் தோழிகள் கையில் குழந்தையுடன் கொஞ்சி மகிழ்வதைக் கண்டு நெஞ்சுருகினேன்.
என் கணவர் வீட்டிற்கு வருவதற்கு காலநேரம் என்பதே கிடையாது. அதனால் நானும் அவரின் வருகைக்காகக் காத்திருந்த காலமும் போய்விட்டது.
ஒருநாள் என் கணவர் வந்து “தாமரை இனிமேல் நீ இங்கு இருக்க வேண்டியதில்லை. உன் கழுத்தில் இருக்கும் என் தாலியை கழற்றி கொடுத்துவிட்டு உன் வீட்டுக்குப் போய்விடலாம்” என்றார்.
அச்செய்தி என் தலையில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது. நீண்ட நேரம் எதுவுமே பேசமுடியாமல் நின்றேன். ”நான் உங்களுக்கு என்ன தீங்கு செய்தேன்? ஏன் என்னை உயிரோடு வைத்து சித்திரவதைச் செய்றீங்க?’ என்று கேட்டேன்.
“தாமரை நான் இப்போது குடிபோதையில் உன்னிடம் பேசவில்லை. தெளிவான புத்தியுடன் தான் பேசுகிறேன். என் தாயின் பெயரில் இருந்த சொத்தை நான் கேட்டபோது, உன்னைத் திருமணம் செய்து கொண்டால் தான் அது எனக்குக் கிடைக்கும் என்று என் அம்மாவும் உன் அம்மாவும் கூறி விட்டார்கள். அந்தச் சொத்தை அடையவே உன்னை நான் திருமணம் செய்து கொண்டேன். இன்று சொத்து எல்லாம் எனக்கு வந்து சேர்ந்து விட்டது. அது மட்டும் அல்ல. நான் நீண்ட நாட்களாக ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். அவளுக்கும் எனக்கும் எத்தனையோ முதலிரவுகள் நடந்து முடிந்து விட்டன. உன்னுடைய வாழ்வை நாசமாக்கி விட நான் விரும்பவில்லை. அதுதான் இதுவரையில் உன்னைத் தொடாததற்கான காரணம்” என்றார். ஓராண்டு கணவனும் மனைவியுமாக ஒரே வீட்டில் வாழ்ந்தும் நான் இனனும் கைப்படாத மலராக இருக்கிறேன் என்பது எனக்கும் என் கணவருக்கும் தெரியும். ஆனால் இதை இந்த உலகம் நம்புமா? ஏன் என் வாழ்வை இப்படி ஆக்கி விட்டாய் இறைவா? என்று கண்ணீர் வடித்தேன். கதறினேன்.
நானே வேண்டாத போது தாலி மட்டும் அவருக்கு ஏன்? கட்டிய துணியுடன் தாய் வீடு வந்தேன். நாடாள வேண்டியவனைக் காடாள அனுப்பி கைகேயியைப் போல் என் தாயும் ஆனாள். என் அக்காள் அல்லிக்குத் திருமணம் ஆகி ஆண்டுகள் ஐந்தாகி விட்டன. ஆனால் அள்ளி எடுத்து கொஞ்ச ஒரு குழந்தை இல்லையே என்ற கவலை என் குடும்பத்தை வாட்டியது. அன்று என் தாயும் அக்காளும் வீட்டில் இல்லை. என் அக்காளின் கணவர் வேலையிலிருந்து வீடு திரும்பினார். நான் தனியாக இருப்பதைப் பார்த்ததும் என்னிடம் வந்து, “தாமரை உன்னை உன் மாமா வேண்டாம் என்று அனுப்பி விட்டான். உன் அக்காளுக்கும் இதுநாள் வரையில் பிள்ளை இல்லை. எனக்கு ஒரு வாரிசு வேண்டும். அதை உன்னிடம் இருந்து பெறலாம் என்று எண்ணுகிறேன். அதாவது உன்னை நான் மணந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்.
திருமணமான என்னை இனி வேறு யார் ஏற்றுக் கொள்ள போகிறார்கள்? என் அக்காளின் கணவர் முன்வந்து கொடுக்கின்ற வாழ்க்கையை ஏன் நான் விட்டுவிட வேண்டும் என்று எண்ணி அவரின் விருப்பத்திற்கு இணங்கினேன். ஆனால் இதற்கு என் அக்காள் மறுப்பு தெரிவித்தாள். ஒரு மாதத்திற்குப் பிறகு ஒரு நாள் என் மாமா அதாவது என் கணவர் வந்தார். தான் விரும்பியவள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், என்னுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் சொன்னார். அதைக் கேட்டு நான் மகிழ்ச்சி அடைந்தாலும் என் பெண்மையை என் அக்காளின் கணவனிடம் இழந்து விட்டதை எண்ணி வேதனை அடைந்தேன். என் நிலையை நினைத்து என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறினேன்.
அவர் என்னை அவ்வளவு விரைவில் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை. ஆனால் அவர் வீடு வரும்போதெல்லாம் அவரிடமும் வழுக்கி விழுந்தேன்.
எப்போது எவரின் வாரிசு வயிற்றில் முளைத்தது? என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது வளர்ந்து வந்தது.
ஐரெண்டு திங்கள் ஓடி மறைந்தன. ஓர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தேன். அது என்னை போலவே இருந்தது. இதனால் உண்மை தகப்பன் யார் என்று தெரியாத நிலை. என் கணவரும் அக்காளின் கணவரும் சொந்தம் கொண்டாட மறுத்தனர். நிலமை. பிள்ளைக்கு யார் அப்பன்? என்று தெரியவில்லை. அந்நிலையில் இவர்கள் இருவருமே என்னைக் கைவிட்டு விட்டார்கள்.
என் நிலையைக் கண்டு நானே வெட்கப்பட்டேன். வேதனை அடைந்தேன். ஊராரின் தீயம்புகள் பாய்ந்தன. என் தவறினால் என் பிள்ளைக்கும் இழுக்கு ஏற்பட்டது. இந்தப் பொல்லா உலகத்தில் வாழ்வதைவிட பிள்ளையைக் கொன்றுவிட்டு என்னையும் அழித்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தேன்.
அந்த நேரத்தில் என் அத்தையின் மகன் தருமலிங்கம் வந்தார். “தாமரை உன் நிலைமை எந்தப் பெண்ணுக்கும் ஏற்பட்டிராத நிலைமையாக இருக்கிறது. இத்தவறு யாருடையது என்று சொல்ல முடியாத நிலைமை யார் மீது யார் குற்றம் சுமத்துவது? என்று தெரியவில்லை. இத்தவறு உன்னுடையதல்ல. இது இச்சமுதாயத்தின் தவறு. அதனால் உன்னைத் தண்டித்துக் கொள்ளுவதால் மட்டும் இத்தவறு இனி நடைபெறாது என்ற சொல்ல முடியாது. இந்தச் சமுதாயத்தை யார் தண்டிப்பது என்றும் புரியவில்லை. இறைவன் ஒருவன் இருந்தால் இச்சமூகக் குற்றவாளிகளைத் தண்டிப்பான் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அதனால் உன்னையும் இந்தக் குழந்தையை- யும் எனதாக்கிக் கொள்ள விரும்புகிறேன். நீ என்ன சொல்லுகிறாய்?” என்று கேட்டார்.
என்னால் எதுவும் பேச முடியவில்லை. எனக்குக் கைகொடுத்த அந்தத் தெய்வத்தின் பாதங்களை என் கண்ணீரால் கழுவி தொட்டு வணங்கினேன்.
– காலம் கடந்து விட்டது, முதற் பதிப்பு: ஏப்ரல் 1990, 25வது ஆண்டு நிறைவு விழா, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழு, சிங்கப்பூர்.
![]() |
இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
பின்னம்
நாஞ்சில்நாடன்
November 4, 2026
உந்தன் நிழலாய் நானடி தோழி…
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
November 4, 2026
தங்கக் கூண்டு
இரஜகை நிலவன்
November 4, 2026
