மனிதம்
கதையாசிரியர்: கி.ராஜநாராயணன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2026
பார்வையிட்டோர்: 1,567
(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரா மய்யங்காரை இப்போதும் நினைக்கிறேன். அந்தி மயங்கும் நேரம். இடது ஆள்காட்டி விரலை தன் பெண் பிடித்துக்கொள்ள, வலது கையில் ஒரு அரிக்கேன் விளக்கைப் பிடித்துக்கொண்டு, மார்பில் பூணூல் அசைய கம்பீரமாய் எங்களை நோக்கி வந்ததை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.
அவருடைய வரவு எங்களுக்கு, தாகவானுக்குத் தண்ணியைக் கண்டது போலிருந்தது.
நாங்கள் நடுக்காட்டில் அகப்பட்டுக்கொண்டோம். அந்தப் பிராந்தி யத்தில் திருடர் பயம் ஜாஸ்தி; வழிப்பறியும் கொலைகளும் சர்வ சாதாரணம்.
வேகமாய்ப் போய்க்கொண்டிருந்த எங்கள காருக்கு என்ன ‘சன்னி’ வந்ததோ; ஒருவேளை ராமய்யங்காரை நாங்கள் கண்டுசெல்ல வேண்டு மென்று நினைத்துத்தான் நின்றதோ. அவரைப்போல அன்பு நிறைந்த மனிதரை எப்போதாவது அபூர்வமாகத்தான் காணலாம்; பரிபூரண சூரியகிரஹணத்தை அடிக்கடி காணமுடியுமா?
என் மனைவியோ உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரைக்கும் நகைகளாய்ப் பூட்டித் தொங்கவிட்டிருந்தாள். மடியும் கனம். பயத்துக்கு கேட்கவேண்டுமா?
மேல்காற்று விர் விர் என்று தரையில் மோதி அடித்தது. ஒரே புழுதிப்படலம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் ஒரு மரம் செடி கூட இல்லை. எங்கு பார்த்தாலும் ஒரே கறுப்பு மண்; வெந்துபோன ஈரலைப்போல் ஒரே கறுப்பு; என்ன பயங்கரம். இந்தப் பயங்கரமான சூழ்நிலைதான் இங்குள்ள மனிதர்களிடத்திலும் பயங்கர குணத்தைத் தோற்றுவித்திருக்குமோ?
டிரைவர் அவசர அவசரமாக ரிப்பேர் பார்த்துக்கொண்டிருந்தான். இருட்டு எங்களை நோக்கி மெள்ள மெள்ள தரை இறங்கி வந்தது. எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
“எப்போவ்! அதோ பாரு பூச்சாண்டி வருது” எங்கள் பையன்கள் காண்பித்த திசையில்,
அப்போதுதான் ராம அய்யங்கார், நான் முதலில் சொன்னமாதிரி வந்துகொண்டிருந்தார்.
கட்டுக்குடுமி, ஒரு அசைப்பில் பார்க்கும்போது மாறு கண்ணோ என்று தோன்றும் முட்டைக் கண்கள். நெருக்கமான அரிசிப் பற்கள். உடம்பின் அந்த நிறம் இருக்கிறதே அதை எதோடு ஒப்பிட; மஞ்சளா வெண்மையா, ரெத்தச் சிவப்பா? எதைச் சொல்ல, உடம்பில் முகம் பார்க்கலாம்; அவ்வளவு பளபளப்பு; கத்தி தேஜஸ். க்ஷவரம் செய்யப் படாமல் மயிர் முளைவிட்டிருப்பதுதான் எவ்வளவு அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது; நாமும் இருக்கிறோமே மழுமழுவென்று முகத்தை வழித்துக்கொண்டு. அவர் பட்டத்தார் வைத்துக்கட்டி இருக் கும்மாதிரியும் அந்த வேஷ்டியின் நிறத்தையும் நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்; நாமும் வேஷ்டி உடுத்துகிறோமே வெள்ளைவெளேர் என்று.
சிவந்த கீற்று உதடுகள் புன்சிரிக்க எம்மை நோக்கி நெருங்கி வந்தார். குரல் இனிமையால் முதலில் என்ன சொன்னார் என்று விளங்கவில்லை.
“கார் ரிப்பேரா?. ..
“அந்தி வேளையில் இப்படித் தனியாக இந்த இடத்தில் நிற்க வேண்டாம்; நம் வீட்டிற்குப் போகலாம்; வாருங்கள்…”.
மனைவி என் முகத்தை நோக்க நான் அவள் முகத்தை நோக்க, எங்கள் பையனோ ராமய்யங்காரின் மகளை நோக்கிச் சிரித்துக் கொண்டிருந்தான்.
யார் இந்தப் பிராமணன்; கடவுளா, திருடனா? என் மனைவி ராமய்யங்காரின் பெண்ணை குரோதத்தோடு பார்த்துக்கொண்டி ருந்தாள்.
அந்தப் பெண்தான் எவ்வளவு அழகாக இருந்தாள். குழந்தையே இப்படி இருந்தால் தாய் எப்படி இருப்பாளோ…
டிரைவருக்கு லைட் தேவையாக இருந்தது. அறிந்த ராமய்யங்கார் அதை டிரைவரிடம் கொடுத்தார். அவன் வேலையில் மூழ்கினான். “உங்கள் வீடு எங்கே… “
“அதோ; அதோ தெரிகிறது பாருங்கள். வீடும் கடையும் ஒன்றுதான்.”
“கடையா; என்ன கடை?. . .
“காப்பிக்கடைதான்; ஒத்தக்கடை என்று சொல்லுவார்கள். கடை விற்கிறது காரியம் இல்லை. கால்நடையாய் போவோர் வருவோர்களுக்கு தாகத்துக்கு தண்ணீர் கொடுத்து உதவுகிறேன். அதுதான் நான் செய்கிறதெல்லாம்” நான் அவரைப் பார்த்தேன். உயர்ந்த மனிதனாகத் தோன்றினார் எனக்கு. அவர் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார். குறி இல்லாத பார்வை.
“குழந்தே! உன் பேர் என்ன?”
“மாமா கேட்கிறார்; பதில் சொல்லு”
“நந்தினி”
“நந்தினி….பெயரும் அழகாக இருக்கிறது”
குழந்தைகள் இருவரும் நண்பர்களாகிவிட்டார்கள் அதற்குள்.
பெரியவர்கள் ஏன் இப்படி ஒட்டமாட்டேன் என்கிறார்கள்?
‘சூனியம்; சூனியம் பிடித்த கழுதைகள்!’
பேசிக்கொண்டே நடந்தோம். குழந்தைகள் கைகோர்த்துக் கொண்டு முன்பாக ஓடினார்கள். என் மனைவி எங்களைப் பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாள். எதுவும் யாருடனும் பேசவில்லை அவள்.
அசிங்கருக்கு அழகைக் கண்டால் பிடிக்காது. அட்டைக் கருப்பி இவள். தேனீக்கு கருப்பு நிறத்தைக் கண்டால் பிடிக்காது; இவளுக்கு சிகப்பு நிறத்தைக் கண்டாலே எரிச்சல்!
கடைவாசலுக்குமுன் போட்டிருந்த பலகையிலேயே உட்கார்ந்து கொண்டுவிட்டாள் என் மனைவி. முகச்சுளிப்புடன் வாயைக்குவித்து உள்ளுக்குமைந்த காற்றை ‘உஸ்’ என்ற சத்தத்துடன் வெளியேற்றினாள். அவளை எப்படி உள்ளே போகச்சொல்ல என்று தெரியாமல் திகைத்தார் ராமய்யங்கார். உள்ளிருந்து ஒரு வயதான அம்மா வந்து இவளை “உள்ளே வாருங்கள்” என்றார். முகஜாடையால் அது ராமய்யங்காரின் தாயார்தான் என்று நன்றாகத் தெரிந்தது.
இவளோ அசைகிறதாகக் காணோம்.
குழந்தைகள் இருவரும் உள்ளே இருந்தார்கள். இப்போது ராமய்யங்காரின் மனைவி – மனைவியாகத்தான் இருக்கவேண்டும்; நந்தினியின் முகஜாடையாலும் அழகின் பெருக்கத்தாலும் தெரியவில்லையா –
“மாமி! உள்ளே வாருங்களேன்”
இந்தக் குரலின் வேண்டுதலுக்குமுன் நிற்கும் சக்தி உலகத்தில் யாருக்கு உண்டு!
ஒரு குடும்பத்துக்கு இப்படிக் கச்சிதமான ஒரு சின்ன வீடு போதுமே.
கம்மந்தட்டையால் அழகாக வேயப்பட்டிருந்தது. மண்தரை, சாணி மெழுக்கு; சுத்தம் லக்ஷ்மீகரம்.
நாங்களும் உள்ளே போனோம்.
எங்கள் பையனுக்கு முன்னால் நந்தினி உட்கார்ந்து ஒரு தாள்ப் பையைத் தலைகீழாக தட்டிக்கொண்டிருந்தாள். அதிலுள்ளிலிருந்து பொடிப்பொடி சிலேட்டுக் குச்சிகள் ஒரு மூன்றாவது இருக்கும்; நாலைந்து சாக்பீஸ் துண்டுகள் இரண்டு மூன்று தீப்பெட்டிப் படங்கள், ஒரு தீப்பெட்டி, மடித்துவைத்த ஒரு டிராமா நோட்டீஸ் இவ்வளவும் விழுந்து குவிந்தது. ராமய்யங்காரும் மற்றவர்களும் சிரித்தார்கள். குழந்தைகள் மிரண்டு எங்களை நோக்கின.
பையன் சிணுங்கிக்கொண்டே வந்து அவன் அம்மாவின் முந்தானையைப் பற்றிக் கொண்டான். ராமய்யங்கார் அவனுக்கு பட் க்ஷணமும் காபியும் கொடுத்தார். அதற்கான துட்டை எடுத்துக் கொடுக்க மனிபர்ஸில் கை போவதற்குமுன் ராமய்யங்காரின் கைகள் என் கைகளைப் பிடித்துக்கொண்டன. ஆச்சரியத்தோடு பார்த்தேன்.
“பரவாயில்லை”
எனக்கு சங்கடமாய்ப் போய்விட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.
உள்ளே நகைகளைப்பற்றி சம்பாஷணை நடந்துகொண்டிருந்தது. ராமய்யங்கார் வெத்திலைச் செல்லத்தை என்பக்கம் தள்ளி, தான் வெற்றிலை போட ஆரம்பித்தார். வெற்றிலைப் பழக்கம் இல்லை எனக்கு. அவர் போடுவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். இடது காலை ரட்ணக்கால் போட்டுக்கொண்டு மோதிரவிரலில் சுண்ணாம்பை எடுத்துக்கொண்டார். வெற்றிலையின் முதுகு நரம்பு களை சுகமாக ஒன்றுவிடாமல் பெயர்த்து எறிந்துவிட்டு சாவகாசமாக சுண்ணாம்பைத் தடவி அழகாக மடித்து அசைபோட்டார். இடை இடையே பாக்குத்தூளையும் போட்டு கலவையின் தரத்தை உயர்த்தி, ரத்தத்தின் சிகப்பிற்கும் மேலே கொண்டுபோனார். அப்புறம் புகை யிலையை அள்ளிக் குதப்பிச் சிகரம் வைத்தார். பார்த்துக்கொண்டே இருந்த எனக்கும் போடுவோமா என்ற ஆசையால் செல்லத்தின் பக்கம் கையை நீட்டினேன். ராமய்யங்கார் தடுத்துவிட்டார்.
“வேண்டாம் பழக்கமில்லையென்றால் வேண்டாம்”
எனக்கு இப்படி ஒரு அண்ணா இருந்தால் தேவலை என்று பட்டது.
நந்தினியைக் கண்டிக்கும்போதெல்லாம் அவர், “அபிஷ்ட்டு” “அபிஷ்ட்டு” என்று சொல்லுவார்.
இந்த வார்த்தையை நாங்கள் இதுவரை கேள்விப்படாததால் எங்களுக்கு அது வேடிக்கையாக இருந்தது. என் மனதிற்குள்ளேயே பல தடவை அப்படிச் சொல்லிப் பார்த்துக்கொண்டேன். அதற்கு என்ன அர்த்தமோ எங்களுக்குத் தெரியாது!
“ஒரு நாளைக்கு எவ்வளவு விற்பனையாகும்?”
“ஏழு ரூபாயிலிருந்து எட்டு ரூபாய் வரை; சில நாளைக்கு பத்திலிருந்து பன்னிரெண்டுமாகும்.”
“கடன் நிறைய போகுமா?”
“இல்லை; வேண்டுமென்றே கொடுக்கிறதில்லை என்று வைத்திருக்கிறேன்,” நான் எதோ சொல்ல வாய் திறப்பதற்குள் ராமய்யங்கார் தொடர்ந்து,
“-இதில் அபவாதத்திற்கு என்ன இருக்கப்போகிறது?”
இந்த மூடஜனங்களுக்கு மத்தியில் எப்படி கறாராக இருக்க முடிகிறது இவரால்! ஆச்சரியமாக இருந்தது எனக்கு. ஓசிப்பதினி விடவில்லை என்பதற்காக ஒரு பனைஏறியின் மரங்கள் எல்லாவற்றிலு முள்ள முட்டிகளை உடைத்து, பாளையையும் வெட்டிஎறிந்த ஜனங்கள் இவர்கள். இதை அவரிடம் சொன்னபோது அலட்சியமான சிரிப்புடன்,
“நாம் பரிசுத்தமாக இருந்துகொண்டால் எதுவும் நம்மிடம் வராது; எதுவும் ஒன்றும் செய்யாது.”
“நம்பிக்கையில்தான் எவ்வளவு அழுத்தம்!”
ரிப்பேர் முடிந்துவிட்டதென்று சொல்லி டிரைவர் கூப்பிட வந்து விட்டான். நாங்கள் பிரியவேண்டிய நேரம் வந்துவிட்டது. விடை பெற்றுக்கொள்ள ஆரம்பித்தோம்.
குங்குமம், பழம், வெற்றிலை முதலியன என் மனைவிக்குக் கொடுத் தார்கள். சுமங்கல்யத்திற்குச் செய்யும் இந்த மரியாதை உள்ளத்தைக் கவர்ந்தது. அரியதான இவர்கள் பண்பாட்டை எண்ணி வியந்தேன்.
புறப்படும்போது ராமய்யங்கார் என் கைகளைப் பற்றி, “சௌக்கிய மாகப் போய்வாருங்கள். வரும்போது இந்த ஏழையின் குடிசையில் தங்கிப்போக வேணும்” என்றார்.
அவருடைய கைவிரல்கள் அல்லித்தண்டுபோல் ஜில் என்று இருந்தது. வணங்கிப் புறப்பட்டோம். உள்ளம் ஆனந்தத்தால் தத்தளித்தது.
பயணத்தின் மூன்று நாளும் எங்களுக்கு சதா இவர்களைப்பற்றிய பேச்சுத்தான்.
எங்கள் பையன் விஷமம் பண்ணும்போதெல்லாம் நான் அவனை, “அபிஷ்ட்டு” “அபிஷ்ட்டு” என்று சொல்லுவேன். அவனும் என்னை பதிலுக்கு “அபிஷ்ட்டு; அபிஷ்ட்டு” என்பான். காரண காரியமில் லாமலே அடிக்கடி ஒருவருக்கொருவர் இப்படிச் சொல்லி மகிழ்வோம். என் மனைவியோ முகம் சுளிப்பாள். நாங்கள்கூட கொஞ்சம்தான் அதைச் சொல்லுவோம். அவள் பராக்குப் பார்க்கும்போது அவளுக்கு நேராகக் கையை நீட்டி அப்படிச் சொல்லுவோம்!
பிரயாணம் முடிந்த மூன்றாவது நாள் திரும்பும்போது ராமய்யங் காருக்கு, பச்சைப் பாக்கும் தளிர் வெற்றிலையும் வாங்கிக்கொண் டோம்; நந்தினிக்கு சண்பகப்பூவும் பழங்களும் வாங்கிக்கொண்டோம்.
கயத்தாறை அடுத்து வரும்போது மேல்காற்று வந்துவிட்டது. இன்னும் கொஞ்சநேரத்தில் ராமய்யங்காரைப் பார்த்துவிடுவோம் என்ற சந்தோஷம் எனக்கு. எங்கள் பையன் பூவையும் பழங்களையும் கையில் எடுத்துக்கொண்டான். என் மனைவி மாத்திரம் உம்மென்று இருந்தாள்.
அதே சாயங்கால நேரம். டிரைவர் காரை நிறுத்திவிட்டு எங்களைப் பார்த்தான். எனக்கு விளங்கவில்லை.
“அந்தக் கடையைக் காணலையே?”
வேகமாக அடித்த என் நெஞ்சின் சப்தம் எனக்கே கேட்டது.
இது என்ன; இது என்ன அநியாயம்?
எங்கள் பக்கத்தில் நின்றிருந்தது நான்கு கருகிப்போன மண் சுவர்கள்! மடாரென்று காரின் கதவைத் திறந்து இறங்கினேன். காற்று ஓவென்று இரைந்தது விஷ்ஷ் என்று சீட்டி அடித்தது. சில சமயம் கெக்கலி கொட்டி நகைத்தது. காற்றின் எதிர்ப்புறம் சாய்ந்து நடந்து முன்னேறினேன்.
‘ஆமாம்; இது ராமய்யங்கார் வசித்த வீடுதான்’
என் முகத்தில் சாம்பல் வீசி அடித்தது.
உள்ளம் விசித்தது.
“ராமய்யங்கார்; ராமய்யங்கார்” என்று உரக்கக் கூவவேண்டும் போல் இருந்தது.
காரின் பக்கம் வந்து சேர்ந்து நின்றேன்.
“நந்தினி, அவர்கள் எல்லாம் எங்கேப்பா காணோம்?”
தூரத்தில் ஆட்டு இடையர்கள் பாடும் குரல் கேட்டது. கைகளைக் குவித்து வாயருகே வைத்து நானும் டிரைவரும் சத்தம் கொடுத்து
அவர்களைக் கூப்பிட்டோம். மேல்துண்டை வீசி அவர்களை வரும்படி ஜாடை செய்தோம்.
இரண்டு பையன்கள் ஓடிவந்தார்கள்.
“இங்கே ஒரு ஐயர் கடை வைத்திருந்தாரே… எங்கே காணோம்? ஏன் இந்தக் கடை இப்படி இருக்கிறது?” என்று கேட்டோம்.
“அய்யோ பாவம்; அந்தக் கண்ராவியை ஏன் கேட்கிறீர்கள்; அவர் உயிர் பிழைத்ததே பெரிய காரியம்”
“பாவிப்பயல்; எவனோ அவர். கடைக்குத் தீ வைத்துவிட்டான்.”
“தீ வைத்துவிட்டானா; எதுக்காக?”
“எதுக்காக வச்சானோ; அவன் விளங்கமாட்டான்… பாவம், அவர்கள் கட்டின வேட்டி துணிகளோடதான் வெளியே வரமுடிஞ்சது. அந்த வயசான ஆச்சியம்மா வீட்டுக்குள்ளரயே மயக்கம்போட்டு விழுந்திருச்சாம். அந்த அய்யருதான் அந்த அம்மாவையும் தோளில் தூக்கிப் போட்டுக்கிட்டு வெளியே வந்தாராம். உயிர் பிழைச்சதே பெரிய காரியம்.”
நிற்கவே முடியவில்லை. காரினுள் வந்து உட்கார்ந்தேன். நாங்கள் பேசிக்கொண்டதின் அர்த்தம் ஒன்றுமே எங்கள் பையனுக்கு விளங்க வில்லை என்பது அவனுடைய பீதி நிறைந்த முகம் காட்டியது. அவன் தன் தாயின் முந்தானையை பலமாகப் பற்றிக்கொண்டிருந்தான். அவன் காலடியில் பழங்களும் பூக்களும் சிதறிக் கிடந்தன.
டிரைவர் காரின் கதவுகளை அறைந்து சாத்தினான். நான் என் மனைவியைக் கவனித்தேன். அந்தக் கறுப்பு முகத்திலிருந்து ஒன்றையும் அறிந்துகொள்ள முடியவில்லை.
– தாமரை, ஜூலை 1960.
| கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
என்னுயிர் நின்னதன்றோ!
அனந்த் ரவி
October 21, 2026
விளக்கேற்ற வந்தவள்
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
October 21, 2026
தெய்வசிகாமணி
மு.வீ.சங்கமுத்துப்பிள்ளை
October 21, 2026