அவத்தொழிலாளர்
கதையாசிரியர்: கி.ராஜநாராயணன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 14, 2026
பார்வையிட்டோர்: 1,582
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஐயா எடசெவலுக்கு காரு எப்பொ?”
“திக்கட்டு எங்கெ போடுராக ஐயா?”
“அய்யா…அய்யா…?”
காக்கியூனிபாரம் அணிந்து கண்ணுக்குத் தட்டுப்பட்ட ஒவ்வொரு கண்டக்டர் டிரைவரிடமும்கூட அந்தப் பட்டிக்காட்டுக் கிழவி கேட்டுக்கொண்டே இருந்தாள் பிச்சைக்காரி கேட்பதைப்போலத் தொயந்து.
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வார் யாருமில்லை அங்கே.
பஸ்ஸ்டாண்டு ஏஜெண்ட் ஒருவன் கொசுவலை முண்டாபனியன் அணிந்து அதன்மேல்த் தூய மெல்லிய ஜிப்பாவை அந்தப்பனியன் தெரியும்படி போட்டுக்கொண்டு, இடுப்பில் அகலமான பச்சை நிற துணிபெல்ட்; அதில் மணிப்பர்ஸ் எல்லாம் வைத்துத் தைத்திருந்ததும் ஜிப்பாவழியாகத் தெரிந்தது. தலை ஜோராக சுருள்சுருளாக மோதிரங்களை வரிசைப்படுத்தி அடுக்கி ஒட்ட வைத்ததுபோலிருந்த ஒன்றினுள் ஒரு பென்சலை சொருகிக்கொண்டு ராஜகம்பீரமாக ஸ்டேஜினுள் நுழையும் ராஜபார்ட் கெட்டாங்கேடாக லாந்திக் கொண்டு வந்தான்.
கிழவிக்கு எப்படியோ அவனைப்பற்றித் தெரிந்திருந்ததுபோலும். “ஐயா எடசெவலுக்குத் திக்கட்டு எப்பக் குடுப்பாக?” என்று பொக்கை வாயால் மரியாதைச் சிரிப்போடு கேட்டாள்.
பல்இல்லாத அவளுடைய வாய் சில்லரை எடுக்கத் திறக்கும் ஜிப்பில்லாத மணிப்பர்சை அவனுக்கு ஞாபகப்படுத்தியது. அவன் ‘யானைமேல்ப் போகும் சுண்ணாம்புக்காரன்.’ இவளுக்கெல்லாம் பதில்ச் சொன்னால் அவனுடைய ‘கவுரதை’ என்னாவது? கிழவியை தன் பார்வையிலிருந்து உதறிவிட்டு வேறு ஏதாவது கண்ணுக்குக் ‘குளிர்ச்சியாக’க் கிடைக்குமா என்று சுற்றுமுற்றும் பார்த்தான். கிடைக்காது போகவே கிழவிபேரில் அவனுக்கு எரிச்சலாக வந்தது.
கிழவி அவன் பின்னாலேயே நடந்துகொண்டு அதேபோல அந்தக் கேள்வியையே கேட்டாள்.
அதற்கு அவன் “எடச்சவளா…?” என்று நையாண்டியாகக் கேட்டுவிட்டு “அங்கெ போயி உக்காளுங்க; பௌவு கூப்டுவாக” என்று சொன்னான்.
டிரைவர்களும் கண்டக்டர்களும் ஒரு ஆனந்தமான விளையாட் டில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த பஸ்ஸ்டாண்டில் மூட்டை தூக்கிப் பிழைக்கும் கூலிகளில் ஒருவனுக்குப் பதினெட்டு வயசிருக்கும். நல்ல தடியான திரேகம். மொட்டைத்தலை. அரைஊமை. அதோடு வாய் படு கொன்னல். மேல்த்துண்டு இல்லாமல் இடுப்பில்மட்டும் எப்போதும் இறுக்கிய தார்பாய்ச்சு. மொழுமொழு என்று கொழுத்த கருமொழுகாய் இருக்கும் அவன் திரேகத்தைப் பார்க்கிறவர்களுக்கு, ஓங்கி அதில் ஒரு இறுக்கு வைக்கக் கை துறுதுறுக்கும்போலும்.
எதிர்பாரா சமயத்தில் ஒரு கண்டக்டரோ டிரைவரோ அவன் முதுகில் ஒரு குடுப்புக் கொடுப்பான். வீல் என்று அவன் அடித்தவன் மேல் பாயும்போது மற்றவன் அதைவிட வேகமாக ஊமையனின் முதுகில் ஒன்று கொடுத்து அவனை திசை திருப்புவான். அடிகளும் வேதனையும் தாங்கமுடியாமல் போகும்போது அந்த அனாதை, ஓடிச் சென்று ஒரு பெரிய்ய கல்லை இரண்டு கைகளாலும் தூக்கிக்கொண்டு வருவான். ஆனால் அவனிடமுள்ள நல்ல குணம் யார்மீதும் அதைப் போடமாட்டான்.
இப்பொழுதுதான் போடப் போவதுபோல் இருக்கும்; அவ்வளவு தான். கொஞ்சநேரத்திலெல்லாம் அடிகள் திமுதிமுவென்று விழும்; ஆனால் யார் அடித்தார்கள் என்றே அவனுக்குத் தெரியாது; சுற்றி நின்றுகொண்டு அப்படி ஒரு அடிமுறை!
கேவிக்கேவி அழுதுகொண்டே அவன் தன்னை அடித்தவர்களை ஆத்தா அக்கா பொண்டாட்டிப்பிள்ளை என்று அவன் மொழியில் தாறுமாறாக ஏசுவான். அதைக்கேட்டு அந்தத் தொழிலாளர்கள் கை கொட்டிச் சிரிப்பார்கள்.
யார் யாரிடமோ தாங்கள் பட்ட துன்பங்களையும் யார் யார்மீதோ தாங்கள் காட்டவேண்டிய ஆங்காரத்தையும் எவ்வித முகாந்தரமும் இல்லாமல் இந்த மூட்டை தூக்கிப் பிழைக்கும் அனாதையிடம் காட்டிக்கொண்டிருந்தார்கள்.
இது தினம் தவறாமல் நேரம் தவறாமல் நடக்கும் கண்கொண்டு பார்க்கமுடியாத ‘கங்காச்சி’.
திருநெல்வேலிக்கு டிக்கெட் போடுவதாக யாரோ சொன்னார்கள். கிழவியம்மாள் விரைந்தாள்.
பலாச்சுளையை ஈக்கள் மொய்த்ததுபோல கண்டக்டரைச் சூழ ஒரு கூட்டம்.
திருநெவேலி இருக்கா? என்பதுதான் முதல்க் கேள்வி. பூராவும் திருநவேலியாகவே இருக்கவேணடும். அதில் ஒரு சொகம் இருக்கிறது. இடைவழியில் பஸ்ஸை நிறுத்தவேண்டாம்; மத்தியில் இறங்கு கிறதுகளை எண்ணித் தொலைத்து மீதிகளைக் கணக்குப் பார்க்க வேண்டாம்; டிக்கெட் புஸ்தகத்தை எடுத்துக் கிறுக்கவேண்டாம்; அதில் ஒவ்வொண்ணு சரியாகச் சில்லரை கொண்டுவராமல் நோட்டுகளை வேறு நீட்டும்; எம்புட்டுச் சிரமம்.
இந்தத் திருநெவேலி போகிற சனியன்கள் சரிய்யாக ஒத்தை ரூபாய் நாப்பத்திரெண்டு பைசாவைக் கொண்டுவந்து தொலைக்கிறதே யில்லை. இப்பொதான் பெரிய்ய இதுகள்மாதிரி அஞ்சிரூபா பத்துரூபா நோட்டுகளைக் கொண்டுவந்து நீட்டுகிறது.
யாரோ ஒரு வெளியூர் ஆசாமி; இந்த ஊர்த்தடத்துக்கே புதுசு போலிருக்கு. திருநெவேலிக்கு டிக்கெட் கொடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன் நேரே டிக்கெட் கொடுப்பதற்கென்றே கட்டிப் போட்டிருக்கும் கவுண்ட்டர் ரூமைப் பார்த்துப் போனார். சரியான பைத்தாரமனுசன் போலிருக்கு. அவர்கள் ஊரில்க்கண்டு அப்படிக் கொடுக்கிறார்களோ என்னமோ. இது எங்க ஊரு. இந்த பஸ் ஸ்டாண்ட் இவர்களுடைய ராஜ்யம். கொடி ஒண்ணுதான் பறக்கலை.
கண்ணாடிபோட்ட அந்த வெளியூர் ஆசாமி புத்தம்புதிய பத்து ரூபாய் சலவை நோட்டை கண்டக்டரிடம் நீட்டி “ஒரு திருநெல்வேலி” என்று சுத்தமான தமிழில் சொன்னார்.
“சில்லரை மாத்தீட்டு வரணும்” என்று பட்டென்று பதில் சொன்னார் கண்டக்டர். இந்தமாதிரி ரூபாய் நோட்டைப் பார்த்ததே இல்லையென்று நினைத்துவிட்டார் போலிருக்கு என்றிருந்தது கண்டக்டரின் மேல்க்கொண்ட பார்வை; கண்டக்டரின் எதிரே மலை போல் சில்லரை குவிந்திருந்தது. குவிந்திருந்தால் என்ன; சில்லரை கொடுக்கவேண்டுமென்று எந்த சட்டத்தில் சொல்லி இருக்கிறது?
“ஐயா, பொம்பளையாளு; ஒரு எடசெவல் குடுங்க ஐயா…” கிழவி தடுமாறி கூட்டத்தில் இடிபட்டுக்கொண்டே வந்து கெஞ்சினாள். ஒரு சிவன் பார்வை பார்த்தார் கண்டக்டர் அவளை. கடவுள் அவருக்கு நெற்றிக்கண் கொடுக்காமல் அவரே வைத்துக்கொண்டுவிட்டார்; குணம் தெரிந்துதானே குதிரைக்கும் அவர் கொம்பு தரவில்லையாம்.
கிழவியைப் பார்த்த அந்த பார்வையில் நகைச்சுவை ஏதும் இல்லை; ஆனாலும் தங்களுக்கு டிக்கெட் கிடைக்கும் என்று நம்பி சுற்றிலும் காத்துக்கொண்டிருந்தவர்கள் சிரித்தார்கள்.
நல்ல தெறிச்ச திருநெவேலி டிக்கட்டுகளாக மட்டும் ஏற்றிக் கொண்டு அந்த மூக்குவைத்த பஸ் இடைவழிப்பயணிகளை ‘அத்தாந்த ரத்தில்’ விட்டுவிட்டுப் புறப்பட ஆரம்பித்தது. அதே டயத்தில் சங்கரன் கோவில் பஸ்ஸும் புறப்பட்டது. நாலாட்டின்புத்தூர் வரை ரெண்டு பஸ்களுக்கும் வேகத்தில் போட்டாப் போட்டி உண்டு; டிரைவர்கள் என்றால் சும்மாவா! அவர்களுடைய பெயருக்கு முன்னால் பட்டங் கள் உண்டு. இந்த பஸ்ஸை ஓட்டுகிறவர் பெயர் சூறாவளி சுப்பையா. அந்த பஸ்ஸை ஓட்டுகிறவர் பெயர் பெரும்புயல் பெரியசாமி.
திருநெவேலி பஸ் தன்னை அனாதரவாக விட்டுவிட்டுப் புறப்பட்டுப் போவதைப் பார்த்த அந்தக்கிழவிக்கு தன்பேரன் சுப்பையா தன்னைவிட்டுட்டு உயிர் பிரிவதைப்போல் தெரிந்தது. அவன் உடம்பு மோசமாகிவிட்டது என்று தகவல் தெரிந்துதான் புறப்பட்டாள் அவள். “கடவுளே இந்த வயசுகாலத்தில் என்னைக் கொண்டுட்டுப் போகப்படாதா..” என்று வாய்விட்டு தன்னையே சபித்தாள்.
கண்டக்டர்களின் “ரொயிற்” என்ற ரைட் ஒலி கொடுக்கப் பட்டதும் மூக்குவைத்த அந்த இரண்டு பஸ்களுமே வேகமாகப் புறப்பட்டன போட்டி போட்டுக்கொண்டு.
கொஞ்சதூரம்தான் வந்திருக்கும். அதுக்குள் ரயில்வேக்காரன் கேட்டை இழுத்துச் சாத்திவிட்டான்.
அதனாலென்ன; இன்வாய்ஸ் எழுதுறது.
“சேங்கரங்கோயில்” பஸ்கண்டக்டரின் குரல் வெங்கலத்தினால் செய்தது. முன்பு அவன் காப்பி ஹோட்டல் சர்வராக வேலை பார்க்கும்போது “ஒரு தோசை ஸ்பெஷே..ல்..என்று குரல் கொடுத்தால் ஏழு ஹோட்டல் சரக்குமாஸ்டர்களுக்குக் கேட்கும். இப்பவுங்கூட பஸ் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதே ஸ்பெஷல் தோசை பாணியில் “பின்னாலே ஒரு பிளஷா……ர்” என்று டிரைவருக்குக் குரல் கொடுப்பான்.
இப்போது அந்தக் கண்டக்டர் தன் இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டே டிரைவருக்கு இன்வாய்ஸ் சொன்னான் இப்படி.
ஒம்பது கழுகு
ஏழு வானரம்
மூணு காக்கா
ரெண்டு கல்லு
அஞ்சி குருவி
நாலு ஆடு
அறியாதவர்கள் பஸ்ஸினுள் இருப்பது மனுஷாள் இல்லையோ என்று எண்ணத் தோன்றும். ஆனால் அது அவ்வளவும் கழுகுமலை, வானரமுட்டி, காக்காத்தோப்பு, கல்லூரணி, குருவிகுளம், நாலு ஆட்டின்புத்தூர் இப்படி ஊரின் பெயர்கள்.
பஸ் இடைசெவலை அடுத்து வந்துகொண்டிருந்தது. சீந்தரிப்பான குளிர்வாடை பஸ்ஸினுள் சீறித்தாக்கியது. ஒரு பச்சைக்குழந்தையை சளிக்காய்ச்சலோடு மடியில் படுக்க வைத்துக்கொண்டிருந்த ஒரு அம்மாள் குழந்தைமேல் குளிர்காற்றுத் தாக்காமல் இருக்க பஸ்ஸின் ஜன்னல் திரையை அவிழ்க்க ஆரம்பித்தாள்.
“யாரு திரையெ அவிழ்க்கிறது?” என்று புலிக்குரலில் கண்டக்டர் ஒரு அதட்டுப் போட்டான்.
இடைசெவலின் ரோட்டோரத்திலுள்ள மயானத்தில் கூட்டமாக இருந்தது. எருவை அடுக்கி அதன் மேல் ஒரு பையனின் உடலைப் படுக்கவைத்திருந்தது. தலையிலிருந்து கால்வரை பயணப்பீஸால் மூடப் பட்டிருந்தது. முகத்தில் வாய்க்கு நேராகமட்டும் ஒரு ஓட்டை போடப்பட்டிருந்தது.
கூட்டத்திலிருந்த எல்லோருடைய கண்களும் பஸ்ஸையே பார்த்துக்கொண்டிருந்தன. பஸ் நிற்கவில்லை.
கிழவியால் தன் பேரனுக்கு வாய்ககரிசி போடமுடியாமல் போய்விட்டது.
இவைகள் எல்லாம் நடந்துமுடிந்து சரியாக ஐம்பது ஆண்டுகள் கழிந்து…..
இப்பொழுது அந்த பஸ் நிலையம் அங்கு இல்லை. ஏதோ ஒரு பூங்காவனத்துக்குள் நுழைவது போலிருக்கிறது. பஸ்களெல்லாம் ராட்சச பிளஷர்கார்கள்போல இருக்கிறது. சப்தம் செய்யாமல் தரையை ஒட்டி வேகமாகப் பருந்தைப்போல் பறந்து செல்கின்றன.
இதோ இருக்கும் இவர்களெல்லாம் தேவர்களா கண்டக்டர்கள் தானா? வயசான ஒரு கிழவியைக் கைலாகு கொடுத்து காரில் ஏற்றிவிடுகிறானே!
இப்போதெல்லாம் கிழவர்களுக்கும் குழந்தைகளுக்கும்தான் முதல் மரியாதை, உட்கார்ந்துகொள்ளும் ஆசனங்கள்கூட பிளஷர் காரில் உள்ளவைபோல சுக சௌகரியமுள்ளவை.
இடைவழி ஊர்களுக்கென்று தனீ பஸ்களும், நேராகப் போவதற் கென்று தனீ பஸ்களும் இருப்பதால் முன்னைப்போல் இடைஞ்சல் இல்லை.
பழைய பஸ் ஏஜெண்ட்கள் காலாவதியாகிவிட்டார்கள். இப்பொழுது நிஜமான வரவேற்பாளர்கள் இருக்கிறார்கள்.
பஸ் போய்க்கொண்டிருக்கிறது. காய்ச்சலோடு அம்மாவின் மடியில் ஒரு குழந்தை படுத்திருக்கும் இடத்துக்கு கண்டக்டர் வருகிறார்.
“அம்மா காத்து குளிர்ந்து அடிக்கிறதே; ஜன்னலை மூடி விடுங்களேன்” என்று அன்போடு சொல்லி அவனே அந்தக் கண்ணாடி ஜன்னலை மேலே ஏற்றி அடைக்கிறான்.
நாம் வசிக்கிறது இப்பொழுது பூலோகமில்லை; தேவலோகம்.
– கதை எழுதிய வருஷம் 1965.
| கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நீ இல்லாத உலகத்திலே….!
வளர்கவி
October 21, 2026
அஞ்சல் நிலைய அதிகாரி
பூ.சோமசுந்தரம்
October 21, 2026
பிழி திறன்
உரு.வளவன்
October 21, 2026