அப்படியும்! இப்படியும்!
கதையாசிரியர்: டி.என்.இமாஜான்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2026
பார்வையிட்டோர்: 80
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ஏங்க உங்க தம்பி வீட்டு கல்யாணம் இன்னும் ரெண்டு நாளிலே நடக்கப் போவுது, அதுக்கு இன்னும் கூட உங்களுக்கு அழைப்பு வரலியே!’ கணவன் ஜலாலிடம் ரஹீமா கேட்டுக் கொண்டிருந்தாள்.
‘அவன் எங்கே ரஹீமா எனக்கு அழைப்பு அனுப்ப போறான்? சில மாசங்களாவே அவன் என் கூட ஒழுங்காக பேசறதில்லே, அதிலேயும் அவனோட அந்தஸ்து இப்ப ரொம்ப உயர்ந்திடுச்சு. நாமளோ ரொம்பவும் பஞ்சக் கோலத்திலே இருக்கோம். நம்மையெல்லாம் கல்யாணத்துக்கு கூப்பிட்டா அது அவங்க கௌரவத்துக்கு ஒத்து வருமா? ‘வார்த்தைகள் ஜலாலிடமிருந்து ஆதங்கத்தோடு வெளிவந்தன.
‘இதுலே அவங்க கௌரவம் பாக்கறதுக்கு என்னங்க இருக்கு! நம்ம என்னதான் ஏழையாக இருந்தாலும், அது உங்க கூடப் பிறந்த தம்பி மகன் கல்யாணம் இல்லியா? அவங்க எப்படி உங்கள புறக்கணிக்க முடியும்? கல்யாண வேலைகளிலே ஒரு சமயம் மறந்துட்டாங்களோ என்னவோ!’ ரஹீமா விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
‘ரஹீமா நீ புரியாம பேசறே! இப்பவெல்லாம் காலம் முன்பு மாதிரி இல்லே, உலகத்திலே எல்லாமே மாறிப் போச்சு. அது மாதிரியே மனிதர்களும் ரொம்பவும் மாறிட்டாங்க, எது எப்படியோ அவன் குடும்பம் நல்லா இருந்தா எனக்கு தான் சந்தோஷம்!’ ஜலாலின் வார்த்தைகள் சோகத்தைத் தாங்கி வெளிவந்தன.
ஜலாலின் தம்பி மகன் கல்யாணம் இன்று இரவு நடக்க இருக்கிறது. கடைசி வரை அழைப்பு வரவேயில்லை.
கடிகார முள் சளைக்காமல் ஓடிக் கொண்டிருந்தது. கல்யாண நேரத்தையும் தொட்டது.
‘என்னங்க, நீங்க தான் கொஞ்ச நேரமாவது கல்யாணத்துக்கு போய்ட்டு வாங்களேன்!’ ரஹீமா சொல்லிக் கொண்டிருந்தாள்.
‘எப்படி ரஹீமா நான் அழைப்பு இல்லாம போக முடியும்?’
‘பரவாயில்லீங்க. என்னதான் இருந்தாலும் உங்க தம்பி மகன் உங்களுக்கும் மகன்தானே, கொஞ்ச நேரமாவது போய் கல்யாணப் பந்தலிலே நின்னுட்டு. வாங்க!’ கணவனை வற்புறுத்திக் கொண்டிருந்தாள் ரஹீமா.
இறுதியாக ஒருவாறாக ஜலாலும் கல்யாணத்துக்கு சென்று வர ரஹீமாவிடம் சம்மதித்து, கல்யாணத்துக்கு சென்றார்.
அங்கு கல்யாண வீட்டில் இவரை வரவேற்க யாரும் இல்லை. கல்யாண வீட்டின் அந்தத் தோற்றம் மிகவும் ஆடம்பரத்தை பறைசாற்றிக் கொண்டிருந்தது.
ஜலால் கல்யாண வீட்டில் பந்தலின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். ஜலாலின் தம்பி காசிம் இவரைக் கண்டும் காணாதது போல இருந்து கொண்டார்.
கல்யாண ஊர்வலம் ஆரம்பமானது. ஜலால் தூரத்தில் நின்றே மகனை வாழ்த்தி விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
மனைவி ரஹீமாவிடம் கல்யாண வீட்டில் தன்னை யாரும் கண்டு கொள்ளாததைப் பற்றி சொல்லி, ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார்.
நாட்கள் உருண்டது. அது மாதமாகிப் போய் வருடத்தைத் தொட்டது.
ஜலால் தனது ஒரே மகள் ரெஜினாவின் கல்யாணத்தை நடத்த ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். விரைவாகவே கல்யாண ஏற்பாடுகளை முடித்து, மிகவும் முன்னதாகவே, தன் தம்பி காசிம் வீட்டுக்கு நேரில் சென்று, பத்திரிகை தந்து ஜலாலும், ரஹீமாவும் அவர்களை பலமுறை அழைத்தனர்.
தனது தம்பி காசிம், எப்படியாவது தன் மகள் ரெஜினாவின் கல்யாணத்திற்கு வந்துவிடுவான் என ஜலால் நம்பிக் கொண்டிருந்தார்.
கல்யாண நாளும் நெருங்கியது. சில மணிகளுக்குப் பின் கல்யாணம் நேரமும் நெருங்கியது. காசிம் கல்யாணத்துக்கு வந்த பாடில்லை.
அந்த நேரத்திலும் ஜலால் ஒரு ஆள் விட்டு காசிமை அழைத்து வரச் சொன்னார்.
‘ரபீகா இந்த நேரத்திலும் எங்க அண்ணன் ஆள் விட்டு கல்யாணத்துக்கு கூப்பிட்டு அனுப்பியிருக்கார். கொஞ்ச நேரமாவது போய் தலையை காட்டிட்டு வந்து விடட்டுமா!’ மனைவியிடம் கேட்டுக் கொண்டிருந்தார் காசிம்.
‘நீங்க கல்யாணத்துக்கு போனீங்கன்னா அது நம்ம கௌரவத்துக்கு ஒத்து வராது. பேசாம வீட்டிலேயே இருங்க!’ ரபீகா, காசிமிடம் விவாதித்துக் கொண்டிருந்தாள்!
– நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!, முதற் பதிப்பு: 2005, மல்டி ஆர்ட்ஸ் கிரேஷன்ஸ், சிங்கப்பூர்.
தொடர்புள்ள சிறுகதைகள்
அப்பாவுக்கு ஒரு கடிதம்
என்.ஸ்ரீதரன்
August 16, 2026
காலம் கடந்து விட்டது
இரா.துரைமாணிக்கம்
August 16, 2026
எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!
ஆர்.மணிமாலா
August 16, 2026