ஒரு நெகடிவ் அப்ரோச்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 2, 2026
பார்வையிட்டோர்: 104 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அவுட்டோர் போகலாம் வருகிறீர்களா…” என்றார் நண்பர். ஒரு வேலையும் இல்லாமல், சும்மா பேசிப் பொழுதைக் கழிப்பதைக் காட்டிலும் வெளியே போவது உத்தமம் என்று நினைத்து, 

“எந்த ஊருக்கு…” என்றேன். 

“வில்லியனூருக்குப் பக்கத்தில், இங்கு நம்ப வட்டச் செயலாளனாய் இருக்கிறானே பட்டாபிராமன், அவனோட அப்பா செத்துட்டார். படம் எடுத்துக்கிட்டு, கோயிலையும் பார்த்துட்டு வரலாம்…” என்றார் நண்பர். 

வில்லியனூர் கோயில் விசேஷமானது. அதைக் காட்டிலும் கோயில் குளம் விசேஷேமானது. பாசி படர்ந்த குளம். சில்லென்று வீசும் குளக்கரைக் காற்று. மனசு கட்டுகளை அறுத்துக் கொள்ளும். மேயும். 

போட்டோ கிராபியைப் பத்தி ஓர் அட்சரம் கூடத் தெரியாத நானும், ஏதோ ஒரு பெரிய ஆள் போலக் கேமராவைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு அவரோடு கிளம்பினேன். 

வில்லியனூர் பஸ்ஸைப் பிடித்து, கிராமாந்தர ஜனங்களோடும், வியர்வை, அழுக்கு, விளக்கெண்ணெய், கருவாடு, குழந்தைகள், வெற்றிலை வாசனைகளோடு பிரயாணம் பண்ணி தேர் முட்டி வந்து இறங்கினோம். 

எங்களுக்கு வழிகாட்ட என்றும், எங்கள் சௌகர்யத்துக்கு என்றும் ஓர் ஆள் மாட்டு வண்டியோடு வந்து இருந்தான். 

மாட்டு வண்டிப் பிரயாணம் ஒரு தனி சுகம் போங்கள். காலத்தின் கழுத்தில் கயிறு போட்டு, அதை ஸ்தம்பிக்க வைக்கும் இந்த மாடுகளும், இரண்டு பக்கமும் வளர்ந்து ஒசியும் நாற்றுகளும், எங்கோ கத்திக் கொண்டிருக்கும் பெயர் தெரியாத குருவியும்… 

பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ளத் தக்கனவாய் விளங்கும் எழவு வீடுகள்… புராணக்காலத்து வாத்தியங்களாய், விநோதமான இசை எழுப்பிக் கொண்டிருந்தார்கள் நால்வர். நான்கு பேர்களுமே சுயப்பிரக்ஞை இன்றி போதையில் இருந்தார்கள். இருந்தும் தாளமே இல்லாத தாளம் ஒன்றை அவர்கள் தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். 

இரு சாரியிலும் இருக்கும் குடிசை வீடுகளுக்குச் சற்றும் ஒவ்வாத வகையில், வெளுத்த சட்டை வேஷ்டிகளோடும், துண்டு களோடும், பிரமுகர்கள் எனப்பட்டவர்கள் ஆங்காங்கே கும்பல் கும்பலாக நின்றிருந்தார்கள். இவர்கள் எல்லாம், செத்தவரின் மகனை, அவருடைய கௌரவத்தை மேம்படுத்தவே அங்கு வந்தவர்கள் போல் இருந்தார்கள். 

விட்டுவிட்டு அழுகுரல்கள் எழுந்தன. மூன்று நிமிஷம் அழுது, பிறகு ஐந்து நிமிஷங்கள் பேசி, ஓய்வெடுத்துக் கொண்டு, தங்களைத் தாங்களே உற்சாக மூட்டிக்கொண்டு இந்த மாறுபட்ட சூழலை ரசித்தவர்களாய் மிக சுவாரஸ்யமான கதியில் அழுது கொண்டி ருந்தார்கள் பெண்கள். சில குழந்தைகள், வீட்டில் அற்புத நிகழ்ச்சி நடப்பது போலப் பாவித்துக்கொண்டு உள்ளுக்கும் வெளிக்குமாக ஓடியும் விழுந்தும், எழுந்து கொண்டும் இருந்தார்கள். 

அந்நிய நாட்டுத் தூதுவனைத் தன் தர்பாரில் வரவேற்கும் ராஜாவைப் போல, பட்டாபி எங்களை மிக கௌரவமாக வரவேற்றார். 

ஒரு நீள பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருந்த ஊர்ப் பெரியவர் கள் எனப்பட்டவர்கள் எழுந்து எங்களை உட்காரச் சொன்னார்கள். பட்டாபி ஓர் ஆளை ஏவி, இரண்டு நாற்காலிகளை, பக்கத்து ஆரம்பப் பள்ளிக் கூடத்தில் இருந்து எடுத்து வரச் சொல்லி, அதில் உட்காரச் சொன்னார். 

துரதிருஷ்டவசமாக எனக்குக் கிடைத்தது காலுடைந்த ஒரு நாற்காலி. என் கவனம் முழுமையையும் அதன் உடைந்த காலிலேயே செலுத்த வேண்டி வந்ததால், நான் தவித்துப் போனேன். 

சுவரில் தொங்கிக் கொண்டிருந்த தலைவர்கள் எல்லாம் என்னைப் பார்த்துச் சிரிப்பது எனக்குப் புரிகிறது. 

டீ வந்தது. மனிதர்கள் டீ என்கிற ஒரு பானத்தை எவ்வாறு எல்லாம் தயாரிக்கக் கற்றுக் கொண்டார்கள் என்று வியந்து கொண்டே குடித்து வைத்தோம். 

பிறகு போட்டோ எடுக்கும் சடங்குகள் தொடங்கின. 

செத்தவர், செத்தவர் போலவே காட்சியளித்தார். வெளுத்த சட்டையும், வேஷ்டியுமாய் அவரை அலங்கரித்தார்கள். நீட்டிப் படுத்திருந்த அவரை சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருப்பவராய்ச் செய்து, தலைப்பாகை என்கிற முண்டாசுக் கட்டினார்கள். 

இது போன்ற காரியங்களைச் செய்வதற்கு என்றே ஊரில் ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள். இவர்கள் காரியம் செய்வதாகப் பேர். ஆனால் இவர்கள் சப்தம் மட்டுமே போடுவார்கள். மற்றவர்கள் குறிப்பாகப் பெண்களே இந்தக் காரியங்களில் ஈடுபட்டு இருந்தார்கள். 

எழவுக்கு வந்த பெண்கள் பலரும் செத்தவரைச் சுற்றி நின்று கொண்டு, அவருக்குப் பட்டாபிஷேகம் நடப்பதைப் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

ஒரு பெரிய மாலையை அவர் கழுத்தில் மாட்டி முடித்ததும், ‘இப்போ போட்டோ எடுக்கலாம்’ என்றார்கள். பிறகு நினைத்துக் கொண்டு, செத்தவருக்கு நாமம் போட்டார்கள். இதில் விசேஷ அக்கறை எடுத்துக் கொண்டு ஒருவர் அரை மணி நேரம் இதைச் செய்தார். 

பிறகு நண்பர் படம் எடுத்தார். நான் ‘நகருங்கப்பா… நகருங்கம்மா… போட்டோவை மறைக்காதீங்க…” என்றெல்லாம் டைரக்ட் செய்தேன். 

எங்கள் வருகையும், படப்பிடிப்பும், செத்தவருக்கும் செத்தவரின் மகன் பட்டாபிக்கும்… ஒரு விசேஷ கௌரவத்தையே ஏற்படுத்தி விட்டதாக அவர்… பட்டாபி வண்டியில் ஏற்றிவிடும் போது கூறினார். 

வில்லியனூர் கோயிலில், கோகிலாம்பாளையும், அவள் கணவரையும் தரிசித்து விட்டுக் குளக்கரையில் பொழுது போக்கி னோம். குளம், ஆறு போன்ற நீர் நிலைகளைப் பார்த்து விட்டால், நண்பருக்கு ஒரு மாதிரியான வயிற்று உபாதை ஏற்படும். கோயில் நந்தவனத்திற்குப் பக்கத்திலேயே மறைவாகச் சென்று விட்டு, சூழலில் இருந்த புனிதத்தையே மாசு படுத்தி வந்தார். பல்வேறு விஷயங்களையும் பற்றிச் சுகமான லயிப் போடு பேசிக் கொண்டிருந்து விட்டு ஊர் திரும்பினோம். 

ஸ்டூடியோவில் உடனே டெவலப் பண்ணலாம் என்று இருட்டு அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டார் நண்பர். நான் சிகரெட்டை பற்ற வைத்து ரெண்டு இழுப்பு இழுத்திருக்க மாட்டேன். அலறிக் கொண்டு ஓடி வந்தார். 

“என்ன…” 

“பிலிம் எக்ஸ்போஸ் ஆயிடுச்சி…” 

‘ஆ!’ 

“சுத்தமா விழல்லே…” 

“சுத்தமாவா?” 

“கொஞ்சம் கூட விழல்லே…!” 

“எத்தனை டேக்…” 

“ஒண்ணே ஒண்ணுதான்…” 

“ஐயய்யோ…! ஏன் இப்படி பண்ணீங்க…? எப்பவுமே செத்துப் போனவங்களை ரெண்டு, மூணு தடவை எடுப்பீங்களே!” 

“என்னமோ கெட்ட நேரம்…” 

செத்துப் போனவருக்கா அல்லது அவருக்கா என்பது தெரியவில்லை. 

“என்ன பண்ணப் போறீங்க…” 

“என்ன பண்றது… சமாளிக்க வேண்டியதுதான்…” 

ஏற்கெனவே செத்துப் போனவர்களின் நெகடிவ்களை எல்லாம் எடுத்து ஆராய்ந்தார். 

பட்டாபியின் தகப்பனாரைப் போல உருவம் பொருந்தியவர் என்று ரெண்டே ரெண்டுதான் கிடைத்தது. வயசானவர்கள் எல்லாம் ஒரே மாதிரி உருவம் கொண்டவர்களாய் இருந்திருந்தால், என்ன சௌகரியமாய் இருந்திருக்கும். கிடைத்த ரெண்டிலும், ஒருவர் நீட்டிப்படுத்திருந்தார். ஒருவரே சாய்ந்து கொண்டு இருப்பதாகத் தோற்றமளித்தார். துரதிருஷ்டம் என்னவென்றால், பட்டாபியின் தகப்பனாருக்கு தாடி இருந்தது. ஒரு வார தாடி. நெகடிவ்காரருக்கு சுத்த ஷவரம். அதோடு இவருக்குத் தலைப்பாகை, நாமம், மாலை எதுவும் இல்லை. 

அடுத்த நாள் ஒரு ஓவியனை அழைத்து வந்தார். இவன் மகா கலைஞனாகத் தன்னை நினைத்து இருப்பவன். எனவே மகா ஓவியனை. கலைஞர்கள் தொழில் செய்து பிழைப்பதாவது? நேர்ந்து கொண்ட தொழிலைச் செய்யாமல் இருப்பதே ஒரு கலைஞனின் மேதைத்தனம் என்று நினைப்பான். 

இவனைச் சாராயக்கடை ஒன்றில் சந்தித்து, கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து ஸ்டூடியோவுக்குக் கூட்டி வந்தார். 

கலைஞன் தலை குப்புற கவிழ்ந்து கொண்டு முழு போதையில் உட்கார்ந்திருந்தான். அவன் தலையை நிமிர்த்தி நிமிர்த்தி செய்ய வேண்டியதை விளக்கிச் சொன்னார். 

ஒரு வழியாகச் செத்துப் போனவருக்குத் தாடி முளைத்தது. அவரே முண்டாசுக் கட்டிக் கொண்டார். தனக்குத் தானே நாமம் இட்டுக் கொண்டார். ஒரு மாதிரியாக எங்களை எல்லாம் பயமுறுத்திக் கொண்டிருந்தார். 

பட்டாபி வரும் நாளை மிக ஆவலுடனும், பயத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். 

அந்த நாளும் வந்தது. அவரும் வந்தார். தந்தையின் படத்தை மகன் பார்த்தார். சில நிமிஷங்கள் வரை கூர்மையாகப் பார்த்தார். 

“தள்ளி வச்சுப் பார்க்கணும்பா…” 

பட்டாபி போட்டோவை தள்ளி வைத்துக் கொண்டு பார்த்தார். மேசை மேல் வைத்துவிட்டு எட்ட நின்று பார்த்தார். கடைசியாக. 

“என்ன அண்ணே- அப்பாவோட முகம் மாதிரியே இல்லியே…” என்றார். 

“கரெக்ட்… எப்படி இருக்கும்… செத்துப் போன பின்னாலே முகம் மாறிடும்பா… உயிர் போயிடுச்சு என்கிறோமே… அப்படின்னா என்ன? முகம் மாறிச்சுன்னு அர்த்தம்… நாம்ப எல்லாம் வெறுங் கண்ணால பார்க்கிறோம்…! 

“கேமரா கண்ணோட பார்க்கணும்பா… அப்பத்தான் தெரியும்… உயிர்போன பின்னால நம்ம முகமெல்லாம் எப்பிடி மாறிப் போயிடு துன்னு… கேவலம் மனுஷன் பொய் சொல்லுவான்… மூவாயிரம் ரூபா கேமரா பொய் சொல்லுமா…!” 

“சொல்லாது அண்ணே…!” 

“அதான் கேட்டேன். நீ கையில் வச்சு இருக்கிறது வெறும் புரூப் தானே… பெரிசா போட்டுட்டா எல்லாம் சரியாப் போயிடும்… கலராவே பண்ணிடறேன்… என்ன சரி தானே…” 

“செய்யுங்க… உங்களுக்குத் தெரியாததை நான் என்ன புதுசா சொல்லிடப் போறேன்…!” 

குறித்த காலத்தில் அவர் வந்தார். சின்ன போட்டோவில் இருந்த செத்துப் போனவர் விஸ்வரூபம் எடுத்து நின்றதைப் பார்த்தார். நான் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். 

“இது என் அப்பா இல்லேடா…!” என்று கத்தப் போகிறார் என்று எதிர்பார்த்தேன். அவர் கத்தவில்லை. மௌன்ட்டை பாக் செய்து கொண்டு அரைமணிநேரம் வரைக்கும் அரசியல் பேசிக் கொண்டிருந்தார். 

பட்டாபி பரம சந்தோஷத்துடன் போட்டோவை வாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். 

“டிபன் சாப்பிடலாம் வாங்க…” என்றார் நண்பர். ஓட்டலுக்குப் போனோம். 

மசால் தோசை சாப்பிட்டோம். காபி சாப்பிட்டோம். வெளியில் பெட்டிக்கடை ஓரம் நின்று சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு நண்பர் சொன்னார். ‘பிரபஞ்சன், உருவம் எதுவானால் தான் என்ன? பழைய அப்பாவா இருந்தால் என்ன? நாம் உருவாக்கின அப்பாவா இருந்தால் என்ன? பட்டாபி கண்களை மூடிக்கொண்டு அப்பாவை நினைத்துக் கொள்ளும் போது அவர் மனசுக்குள் தோன்றப் போவது அவரோட அப்பாதானே… வேதத்தில்கூட சொல்லி இருக்காமே… கோயில், விக்ரகம் எல்லாம் பாமரர்களுக்குத்தான்; படித்தவர்க்கு இல்லேன்னு… உங்களுக்குத் தெரிஞ்சு இருக்குமே…” என்றார். 

திடீரென்று பெட்டிக்கடை மரமாகிவிட்டது. கார் ஹாரன் குயிலோசையாகி விட்டது. ரேடியோவின் டப்பா சங்கீதம் வேத கோஷமாகிவிட்டது போட்டோக்காரர், ரதத்தில் உட்கார்ந்து கொண்டு உபதேசம் செய்து கொண்டிருந்தார். 

– 1990

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

பிரபஞ்சன் பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *