என் உயிரே… மயூரி..!
கதையாசிரியர்: ஜூனியர் தேஜ்
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: April 21, 2026
பார்வையிட்டோர்: 160
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம் – 1

‘டுப்… டுப்… டுப்… டுப்…” – சைலன்ஸர் எழுப்பிய ஓசை, புல்லாங்குழலின் இனிய நாதமாய் இழைந்து நவிஷ்னியின் செவியைக் குளிர்வித்தது, சுமார் முன்னூறு நானூறு மீட்டர் தூரத்தில் வாகனம் வந்து கொண்டிருப்பதை அவளால் துல்லியமாக உணர முடிந்தது.
‘இதோ, இன்னும் ஒரு சில நிமிடங்களில் நம் முன்னே வந்துவிடும்…!’ என்று நினைத்த மாத்திரத்திலேயே நவிஷ்னியின் மூளை மடிப்புகள் கிளர்ந்து, ‘ஜிவ்’ எனக் கிறக்கத்தில் புடைத்தெழுந்துக் கிளர்ச்சியூட்டியது.
சிறிது சிறிதாக ‘டுப்… டுப்…’ சத்தத்தின் ‘டெஸிபல்’ அதிகரிக்க அதிகரிக்க, செவியும், மனமும் குளிரக் குதித்துக் கும்மாளம் போட்டன. மகிழ்ச்சியின் உச்சியில் மயங்கி நின்றாள் நவிஷ்னி.
இறை அடியார்கள், நாயன்மார்கள், தொண்டரடிப் பொடிகள் போன்றோர் பக்தி மயக்கத்தின் துலங்கல்களாக, இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கூப்பி, திசை நோக்கி வணங்கிப் பரவசம் அடைவதைப் போல, நவிஷ்னியின் மதி முழுமையாய் மயங்கிய நிலையில், புல்லட்டின் டுப் டுப் சத்தம் வருகின்ற திசையை ஆவலுடன் நோக்கிப் பரவசத்துடன் தன் கிறக்கப் பார்வையைச் செலுத்தினாள்.
‘இது நம்ம ஆளோட புல்லட்டா இருக்கணுமே..!’ பரபரப்புடன் கூடிய ஏமாற்றம் கலந்த எதிர்பார்ப்பினால், விசனப்பட்டாள்.
ஒரு கணம் தனக்குள் பதட்டமாகவும் உணர்ந்தாள்.
‘வேற யாரு இந்த நேரத்துல வரப்போறாங்க.. நம்மாளு வண்டியாத்தான் இருக்கும்…!’ என்று மனதளவில் தன்னம்பிக்கையோடு, தனக்குத்தானேச் சமாதானமும் செய்து கொண்டாள்.
கல்லெரி தூரத்தில், ஹேர்பின் வளைவாய்த் திரும்பும் சாலைத் திருப்பத்தில் வளைந்து திரும்பியது புல்லட். வண்டி நெருங்க நெருங்க, புல்லட்டின் கம்பீரமான முகப்பு நவிஷ்னியின் கண்களுக்குத் தெளிவாய்த் தெரியத் தெரிய நம்பிக்கையின் விழுக்காடு அதிகமாகியது நவிஷ்னிக்கு.
‘‘நம்ம வண்டிதான்…’ என்பது உறுதிப்பட, பேதையின் போதை கூடியது. மூளை நரம்புகள் உட்பட அனைத்து நாடி நரம்புகளும் புடைத்துத் துடியாய்த் துடித்தன.
பதிவு எண்ணைப் பார்த்தாள். நவிஷ்னியின் கண்கள் கிறங்கின, குறு குறுத்து ஊறல் எடுத்தன கன்னக் கதுப்புகள். விளைவாக கன்னங்கள் ஜிவ் என்று உப்பலானாற் போல் சிலிர்த்தெழக் கிளர்ந்தாள்.
உள்ளங்கைகளை ஒன்றோடொன்று உரசிக் கொண்டாள். ஊறலெடுத்த கன்னக் கதுப்புகளை நமைச்சலெடுத்த உள்ளங்கைகளால் ஒத்தி மேலும் கீழும் ஓட்டித் தடவிக் கொண்டாள்;
நடு நடுவே வியர்த்து வழியும் நெற்றியை வலது உள்ளங்கையால் தேய்த்து விட்டு, அதன் மரமரப்பை அடக்கினாள்.
கண்களுக்குக் கீழ் வீசி விரிந்து உப்பி அடங்கி அலைக்கழிக்கும் இம்சையைச் சமனப்படுத்த, ஐந்து விரல்களையும் குவித்து, மாற்றி மாற்றி மசாஜ் செய்து கொண்டாள்.
சுயத் தொடல்களாலும், உரசல்களாலும், தேய்ப்புக்களாலும், மசாஜ்களாலும் தன்னைத்தானேத் தொடர்ந்து சூடேற்றிக் கொண்டே பரபரப்பாக நின்றாள். அங்குமிங்குமாய் பார்வை அலைந்தன.
ஊறல் எடுத்தன உதடுகள். ஜிவ்வென்ற இதழ்களை, கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலையும் ஒன்று கூட்டி இதபதமாய் கிள்ளிக் கொண்டு இச்சையைச் சமனப்படுத்த முயற்சி செய்தாள்.
ஊறல் மிகுதியால் உருவான ரசாயன மாற்றம், வாய்க்குள் குபுக் எனத் தேன் ஊறச் செய்தது. நிரம்பியது குடம். கட்டுப்பாடின்றிக் கொஞ்சம் ஜொள்ளாகவும் வடிந்தது.
உடம்பும் மனசும் உச்சக் கட்டத்தில் பரபரக்க, அவளால் நிலையாக ஓரிடத்தில், நிற்க முடியவில்லை. உள்ளங்கால் ஊரலெடுத்து உப்பலாய் உருண்டன. ஓரிடத்தில் இருப்புக் கொள்ளவில்லை அவளுக்கு. தவித்துத் தடுமாறின அவள் பாதங்கள்.
நடுவர், ‘பீ………………….ப்’ என்று, நீ……..ண்………ட எச்சரிக்கை விசில் கொடுத்து பின், இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிப் ‘படார்’ என்று ‘ஸ்டார்டிங்’ கட்டையை அடித்து ஒலி எழுப்பியதும் ‘சடார்’ என எழுந்து ஓடும் மராத்தான் வீரன் போல் ‘சரேர்’ என ஒரே ஓட்டமாய் ஓடிப்போய் அவனை வரவேற்க வேண்டும் என்று சர்வாங்கமும் பரபரத்தது நவிஷ்னிக்கு.
உள்ளங்கால் முதல் உச்சந் தலை வரை சர்வாங்கமும், ‘ஜிவ்’ என்று ரசாயனம் பெருகிப் பாய்ந்துப் பரவசம் கூட்டியது. மனசு பூராவும் மகிழ்ச்சிப் பொங்கிப் பிரவாகம் எடுத்துத் துள்ளாட்டம் போட்டது.
அதே நேரத்தில் இன்னொரு பக்கம், ‘புத்தி’ லேசாக விழித்துக் கொண்டது.
எப்பொழுதெல்லாம் மனம் தடுமாறுகிறதோ, அப்பொழுதெல்லாம் அனிச்சையாக புத்தி கிளர்ந்தெழுந்து, தடுமாற்றத்தைத் தடுக்க யத்தனிக்குமல்லவா; நவிஷ்னியின் விஷயத்திலும் அதுவே நிதர்சனமானது.
எழுந்து நின்ற புத்தி, மனம் போன போக்கில் நவிஷ்னி செய்யும் தவற்றைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை, புத்தியின் குறுக்கீட்டால் ஒரு கணம் தன் மனதை வலுக் கட்டாயமாக அடக்கிக் கொண்டு நின்றாள் நவிஷ்னி.
வலுக்கட்டாயமாக அடக்கிவிட நினைக்கும் எதுவும் அடங்காது திமிறி எழுவதுதானே யதார்த்தம்.
அடக்கப்பட்ட நவிஷ்னினின் மனசு திமிறியெழுந்து புத்தியிடம் விதண்டாவாதம் செய்தது. தற்போதையக் கிளர்ச்சிக்கு நியாயம் கற்பித்தது.
கண்ணெதிரில் தெரிந்த போதைச்சூழல் அலைக்கழித்தது நவிஷ்னியை.
பிரகாசமாக ஜ்வலித்த சூழலில் ஒன்றிக் கலந்தது மனம். ஒரே இடத்தில் திடமாக நிற்க முடியவில்லை அவளால். அனிச்சையாக அங்குமிங்கும் அலைந்தாள், தட்டுத் தடுமாறினாள், தட்டா மாலைச் சுற்றினாள்.
நவிஷ்னியின், கிறக்கத்தையும், தடுமாற்றத்தையும், பரபரப்பையும் அனுமானித்து விட்டான் போதை சப்ளையர்.
அடுத்த கட்ட நகர்வுக்கு ஆயத்மானான்.
வண்டியின் வேகத்தை வெகுவாகக் குறைத்தான்.
மிக மிக மெ…து…வா…க… ஸ்லோ மோஷனில் முன்னேறி வந்தது புல்லட்.
புல்லட் நெருங்க நெருங்க நவிஷ்னியின் நாடி நரம்புகள் அத்தனையும் முறுக்கேறிக் கொண்டன. உச்சி முதல் உள்ளங்கால் வரை, புடைத்துச் சிலிர்த்துத் துருத்திக் கொண்டுத் தவித்தன.
மப்பாகவும், மரமரப்பாகவும், இன்னும் என்னென்னமோ உணர்வுகளெல்லாம் வெளிப்பட்ட மாயை வாட்டின அவளை.
மனதில் சபலம் அதிகமாகி, அதன் விழுக்காடு அதிகப்பட்டபின் புத்தியை கழுத்தைப் பிடித்து வெளித்தள்ளி விட்டது. புத்தியின் நிழல் கூட இல்லாத இந்தக் கட்டத்தில் முழு வீச்சில் தன் போக்கில் பயணித்தது.
இனம் தெரியாத பரவசத்தில் சொக்கின அவள் கயல் விழிகள், கிளுகிளுத்தாள். கிறங்கினாள்.
அவள் அருகில் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனம், ‘புல்லட்’ எனும் இரும்புக் குதிரையாகத் தெரியவில்லை நவிஷ்னிக்கு. அதில் அமர்ந்தபடி கால் உந்தி நிற்கும் இளைஞன் சாதாரண சரக்கு சப்ளையராகத் தோன்றவில்லை அவளுக்கு.
அழகின் அனைத்து கூறுகளையும் அள்ளிக் கொட்டி ஜோடிக்கப்பட்ட, பேரழகாக ஜொலிக்கும் அன்னப் பறவையின் முதுகில், பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மன்மதன், கரும்பு வில்லோடும், மலர் அம்புகளோடும் தன் முன்னே எழுந்தருளி மலரம்புகளைத் தொடுக்க நாணில் அம்பேற்றித் தயார் நிலையில் நிற்பதைப் போல உணர்ந்தாள் நவிஷ்னி.
புல்லட்’டின் ஹெட் லைட், நம்பர் பிளேட், இண்டிகேட்டர்கள், பம்பர்கள், ஹாரன் எல்லாம் அன்னப் பறவையின் நெற்றியாகவும், நெற்றிப் பட்டையாகவும், பளிச் என ஜ்வலிக்கும் கண்களாகவும் அழகு மிளிரும் காதுகளாகவும் , இறக்கைகளாகவும் காட்சியளித்தன அவள் கண்களுக்கு.
அதில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தவன் தேவலோக கர்ந்தர்வனாய் தெரிந்தான்.
குறிப்பாக, அனங்கன், அங்கஜன், அந்தகன், அருங்கன், ஆனந்தன், வசந்தன், மன்ராயன், மனோசித்தன், மனோகரன், மதனன், மாறன், சேகரன், சுந்தரன், வில்லாலன், புஷ்பவனன், ராகவிந்தன், ரதி மணாளன், கந்தர்வன், காமதேவன் என்றுப் பலப் பலப் பெயர்களில் அழைக்கப்படும் மன்மதனைக் காதலும், காமமும் வழியக் கண்களால் விழுங்கினாள், ரதி தேவியாய் தன்னை வரித்துக் கொண்ட நவிஷ்னி.
ஆழ் மனத்தில் நாம் எதுவாக நினைக்கிறோமோ, அதுவாகவே ஆகிவிடுவதுதானே யதார்த்தம்.
‘நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆவாய்’ என்று கூறும் பொது மனவியல் தத்துவம் இங்கே நூற்றுக்கு நுறு உண்மையானது.
அவள் கண்களுக்கும் மனதுக்கும், பூலோகக் காட்சி முழுமையாய் மறைந்து, தேவலோகக் காட்சியாக உறுமாறியது. மன்மதனுக்கு முன் நவிஷ்னி ரதியாகவே உருமாறி விட்டாள்.
இதில் உண்மை இல்லாமலும் இல்லை.
நவிஷ்னி உண்மையிலேயே, ரதிக்குச் சவால் விடும் அழகிதான். அளந்து அளந்து, வடித்த பேரழகுச் சிற்பம் அவள்.
அவள் படிக்கும், படிக்கும் என்பதை விட, சென்று வரும், அந்த அரசுக் கல்லூரியில் நவிஷ்னிக்கு, ரசிகர் மன்றங்களே உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
புல்லட் வண்டியின் ‘ஹாண்டில் கிரிப்’பில் நான்கு விரல்களைத் தழுவி, கட்டைவிரலை ‘தம் அப்ஸ்’ போல உயர்த்திய நிலையில் முத்திரை பதித்தபடி , இடது முன் கால் விரல்களை தரையிலுல் ஊன்றியிருக்க செருப்பின் குதிகால் பகுதி தரையோடு கிடந்தது,. , வலது காலின் நடுப்பகுதியை பாதம் பதியும் லிவரில் வைத்து அழுத்தியபடி அலட்சியமாய் நின்றான் அவன்.
கப்பும் கிளையுமாக நின்ற மரத்தில் இலைகளுக்கும், சருகுகளுக்கும், சின்னச் சின்னச் சுள்ளிகளுக்கும், இடையிடையே இருந்த இடைவெளிகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அதன் ஊடே தரையிரங்கியச் சூரியக் கிரணங்கள் பல்வேறு ஆரங்களிலும் விட்டங்களிலும், வடிவங்களிலும், புல்லட் ஓட்டி உட்பட அனைவர் மீதும் அனைத்தின் மீதும் நீள்வட்ட ஒளித் துகள்களை கொட்டியிருந்தது.
இந்த ஒளிச் சிதறல்களின் பிரதிபலிப்பில் தக தகத்த புல்லட் ஓட்டியின் மேனியை கண்ணிமைக்காமல் முழுமையாய் ரசித்தாள் நவிஷ்னி. அவள் நோக்கில் கிறங்கி அண்ணலும் நோக்க ஒரு விதமான இன்பக் கிறக்கம் கிளர்ந்து எழுந்து மயக்கியது அவளை.
வெள்ளை வெளேர் என்ற மேகங்களை ஒத்தச் சிறகுகளுடன் அன்னப் பறவை, ஒய்யாரமாக நிற்க, அதன் மீது அலட்சியமாக அமர்ந்தபடி, தோகையுடன், மென்மையாய் வளைந்திருந்தக் கரும்பு வில்லை நளினமாய்ப் பிடித்துக் கொண்டிருத்தான் காமன்.
காமன் கைக் கரும்பு வில்லின் பச்சைப் பசேல் தோகைகள் ‘வா.. அருகில் வா…’ என்று தன்னை அழைப்பதாய் உணர்ந்தாள் நவிஷ்னி.
அதைத் தொடர்ந்து, காதல் கணைகளை அவள் இதயப் பகுதியில் இடைவிடாமல் ஏவுவதும், அந்த மகரந்தம் வீசும், பல வண்ண மலர்க் கனைகள் தன் மென்மையான நெஞ்சில் குத்திக் குத்தி நவிஷ்னியின் உள்ளத்தில் காதலையும் காமத்தையும் மாறி மாறிக் கிளறி விட்டது.
தான் ஒரு பூலோகப் பிறவி என்பதை முற்றிலும் மறந்தாள். தன் பெயர் நவிஷ்னி என்பது சற்றும் நினைவில் இல்லை. தான் நிற்பது ஒரு முச்சந்தியில் என்பது அறவே அவளுக்கு மறந்து விட்டது.
தேவலோக மங்கையான ரதியாக உருமாறி விட்ட பின். எதிரே மன்மதன் கனைத் தொடுக்கும் காட்சிப் படிமங்கள் நவிஷ்னியை வெகுவாய்த் தூண்டி அவள் சமநிலையை அசைத்தன.
மன்மதனை கட்டியணைத்துச் சுகம் காணப் பரபரத்தன அவள் கைகள். முத்தித் தேன் பருக ஊறலெடுத்தன அவள் அதரங்கள்.
“கம்… கம்… கம்… ஹியர்…!” –அழகாக அதரங்கள் அசைந்து அழைத்தன அவனை.
இப்போது நவிஷ்னியின் குரலில் கொஞ்சல், கெஞ்சல், எதிர்பார்ப்பு, காதல், காமம் அனைத்தும் ஒரு சேர வெளிப்பட்டன. முகம் முழுவதும் பரவியப் பசலை, மனசு முழுதும் மந்தஹாசம் ஆக்ரமித்தது.
“ஹா…ய்…” வாய் விட்டுக் கூவினாள்.
அழைப்புக்கு ஏற்றவாறு அனிச்சையாய் அவள் இரண்டு கைகளும் இறக்கைகளாய் விரிந்து மெய்ப்பட்டது.
‘வா… வா… வா… என் மேல் வந்து சாய்ந்துக் கொள், தாங்கிக் கொள்கிறேன்’, என்பது போலவும், கையில் வந்து அமர்ந்து கொண்ட காதலனை இடதும் வலதுமாய் ஆட்டித் தாலாட்டுவது போலும் இருந்தது அவளின் வடிவமான, மெருகான, கைகளின் அழகான அசைவுகள்.
அவளின் விரல் அசைவுகள், ஒரு நாட்டியத் தாரகையின் அபிநய முத்திரைகளுக்குச் சவால் விட்டாற்போல இயங்கின.
மகிழ்ச்சியும், களிப்பும் பொங்கித் ததும்பும் இன்பத் தருணமுமாக உணர்ந்த அவள், தன்னருகே அவன் எப்போது வரப்போகிறான்? அவனை அப்படியேத் தாங்கி அணைக்க வேண்டுமே! , என்று ஆசையோடும் எதிர்பார்ப்போடும் பரவசத்தில் முகிழ்ந்திருந்தாள் நவிஷ்னி.
புல்லட் ஓட்டியின் முகம் இப்போது சலனமற்று இருந்தது. எந்தவிதமான விதமான உணர்ச்சி வெளிப்பாட்டையும் அவன் முகத்தில் பிரதிபலிக்கவில்லை . உடல் மொழியாலும், செயல்பாட்டாலும் கூட எந்த எதிர் வினையுமாற்றவில்லை அவன்.
மாறாக, ‘ச்சை.. ஆள வுடு, நீயெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை;
எனக்குப் பல கஸ்டமர்கள். அதுல நீ ஒருத்தி…’ ;
உன்னை சைட் அடிப்பது என் வேலையில்லை, என் வேலையைப் பத்தி எனக்குத் தெளிவிருக்கு ; – என்பதைப் போல அலட்சியம்தான் தெரிந்தது அவனிடம்.
புல்லட் ஓட்டி, நவிஷ்னியை கிஞ்சித்தும் கண்டு கொள்ளவே இல்லை. அவளை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அவள் பக்கம்கூடத் திரும்பவில்லை. அலட்சியமாக வேறு எங்கோ பார்த்தான்.
அவன் நடவடிக்கைகள் உண்மையானதல்ல. முற்றிலும் நடிப்பு.
பெண்களைக் கவிழ்க்க, சில காமாந்தக இளைஞர்கள் நிலைக் கண்ணாடியின் முன் நின்று மணிக் கணக்காகப் பயிற்சி எடுத்துத் செயல்படுத்துகிற நடிப்பு இது.
இவன் நடிக்கிறான் என்று ஒரு பேதை அறிவதற்குள், தன் வயப்பட்டவளை வசப்படுத்தி, வாயும் வயிறுமாக ஆக்கிவிட்டுத் தப்பிவிடுவார்கள் இது போன்ற காமாந்தகர்கள்.
கெட்ட பழக்கங்கள் இல்லாத குடும்பப் பாங்கான பெண்கள், மிகச் சுலபமாக இதுபோன்ற ஆசாமிகளை மிகச் சரியாக அடையாளம் கண்டு ஒதுக்கித் தள்ளி விடுவார்கள்.
ஆனால், திசை மாறிப் போன பெண்கள் இப்படிப்பட்ட ஓநாய்களிடம் மாட்டிக் கொண்டு வாழ்க்கை பூராவும் அவதியுறுவார்கள்.
எது நம்மை அலட்சியம் செய்கிறதோ அதன் மேல்தானே ஈர்ப்பு ஏற்படுவதுதானே இயற்கை !
எது வேண்டாம் என்று ஒதுங்குகிறதோ, அதை அடைந்தே தீர ஆசைப்படுவதுதானே மனதின் குணம் !
இந்த நகை முரணான கட்டத்தில் தவித்தாள் நவிஷ்னி.
சாமுத்திரிகா லட்சணங்கள் அனைத்தையும் ஒரே உருவில் அமைத்தாற் போல, சௌந்தர்யமே வடிவாக, பளிங்குச் சிற்பம் போல் அபூர்வ முத்திரைகளுடன் அசையும் நவிஷ்னியை அலட்சியப் படுத்திய முதல் ஆணாக இருந்தான் அவன்.
‘தொண்டு கிழமாயினும், நின்றுத் திரும்பிப் பார்க்கும் அளவுக்குக் ஜ்வலிக்கும், கவர்ச்சிக் கன்னியான என்னை, ஒரு சாதாரண போதை மருந்து சப்ளை செய்யும் இளைஞன் அலட்சியப் படுத்துகிறானே..!’
ஏற்க முடியாமல் குமைந்தாள் நவிஷ்னி.
தன் வாழ்நாளில் இப்படிப் பட்ட ஒரு கசப்பான அனுபவத்தைத் முதன் முதலாய்ச் சந்தித்த அவளுக்கு இது ஒரு பேரிடியாய்த் தாக்கியது.
அந்த இளைஞனின் மீது ஏற்பட்ட ஆத்திரம் படிப்படியாய் வளர்ந்து, பூதாகாரமானது. கொலை வெறியாய் எகிறி நின்றது.
புல்லட்டில், பின்னாலிந்த கையாளை நோக்கித் திரும்பினான், அவனிடம் ஏதோ முணுமுணுத்தான், அடுத்த கணம் பின்னால் அமர்ந்திருந்த அவன் இடது காலை தரையில் அழுத்த ஊன்றி, வலதுகாலை சுழற்றி ‘சரக்’ என தரையில் இறங்கி நின்றான்.
அவன் இறங்கியதும், அலட்சியமாய், சாவி திருகி இஞ்சினை மீண்டும் உயிர்ப்பித்தவன், ‘சரக்’ என புல்லட்டை சில அடிகள் முன்னால் நகர்த்தினான். சாவியை இடது வசத்தில் திருகி, இஞ்சினை நிறுத்தினான். இடது முன்காலை, தரையில் பதித்து, எத்தி எத்திச் சில அடிகள் வண்டியைப் பின்னால் தள்ளினான்.
புல்லட்டின் பின்னால் இருந்து இறக்கி விடப்பட்டவன், இங்குமங்கும் இலக்கற்று நகர்ந்து, சுற்றும் முற்றும் வேவு பார்த்தான்.
‘தங்களை யாராவது பின் தொடர்கிறார்களா…’ என்பதை நுட்பமாக நோட்டமிட்டான்.
யாரேனும் சந்தேகத்துக்கு இடமானவர்கள் கண்களில் பட்டுவிட்டாலோ, தங்களுக்கு ஆபத்து நேருமென்று உள்ளுணர்வு சொன்னாலோ, “கம்… கம்… க்விக் க்வக் …” என்று எச்சரிக்கை செய்து, தன் கூட்டாளியைத் தப்பிக்க வைக்க வேண்டியதுதான் அவன் வேலை.
அது போல எச்சரிக்கை ஒலி வந்துவிட்டால் , அடுத்த கனம், விருட் என புல்லட்டோடு அவன் அருகில் நகர்வான் சாரதி.
ஓடுகிற வண்டியில் அவன் பாய்ந்து ஏறி அமர்வான். சிட்டாய்ப் பறந்து விடுவார்கள்.
அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தன்னை தயார் செய்து கொண்டான் புல்லட் ஓட்டி.
முதல் கட்டமாக தான் செய்யத் தீர்மானித்திருக்கும் செயலுக்குக் சாதகமாய், அந்த இழி செயலை செய்வதற்கு வசதியான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொள்ள யத்தனித்தான்.
சுற்றுச் சூழலை திறமையாய் கணித்தான்.
சாவியை வலப்பக்கம் க்ளக் எனத் திருகி, இஞ்சினுக்கு உயிரூட்டி, ஆக்ஸலேட்டர் திருகி உருமவிட்டான். போக்குவரத்துக்கு இடைஞ்சலின்றி, மயூரி நின்றிருந்த சாலையோர மரத்தடியை நோக்கி வண்டியைச் செலுத்தினான்.
வலது காலை தொண்ணூறு பாகைத் தூக்கினான். இடதுகாலை தரையில் சுழற்றி, ஸ்டைலாக இறங்கினான். சோம்பேறி ஸ்டாண்ட் போட்டுச் சாய்வாய் நிறுத்தாமல், ‘மெயின் ஸ்டாண்ட்’ போட்டு உறுதிச் சமநிலையில் புல்லட் நிறுத்தினான்.
தொழில் முறையில், நவிஷ்னியின் முன் வந்து சற்றே விலகி நின்றான். அந்த விலகல் ஆத்திரமூட்டியது அவளுக்கு.
‘நான் அவனை பக்கத்துல வரச்சொல்லி ஜாடை காட்றேன், எட்டி எட்டிப் போறான்…? ராஸ்கல்… இவனை …! வெச்சிச் செய்யலன்னா நான் நவிஷ்னி யில்லை… ’ – உள்ளுக்குள் கருவினாள் நவிஷ்னி.
நவிஷ்னி.
‘ட்ரக் அடிக்ட்.’ அதாவது ‘போதைக்கு அடிமையானவள்’
போதைக்கு அடிமையான பலரும், தொடக்கத்திலேயே அதிக மயக்கம் தரும் போதைப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தி, போதைக்கு அடிமையாக வேண்டும் என்று ஆசைப்பட்டுச் சூளுரைத்தவர்கள் அல்ல.
‘மனிதன் பழக்கத்துக்கு அடிமையாவான்!’ என்ற கூற்றுதான் எத்தனை உண்மை.
நல்ல பழக்கமாக இருந்தாலும் சரி , கெட்ட பழக்கமானாலும் சரி, தொடர்ந்து ஒன்றைச் செய்யும்போது அதற்கு அடிமையாவது மனிதன் மட்டுமல்ல விலங்குகளும்தான்.
தரமற்ற நண்பர்களின் வற்புறுத்தல்களாலும், மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்வதற்காகவும், இப்படி ஏதேனும் ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு, தொடக்கத்தில், கொஞ்சமாகத்தான் போதை யேற்றிக் கொள்கிறார்கள். நாளுக்கு நாள் ஏற்றிக் கொள்ளும் போதை மருந்தின் அளவு அனிச்சையாய் அதிகமாகிறதை அவர்கள் உணர்வதில்லை என்பதுதான் யதார்த்தம்.
நாளடைவில் ஏற்றிக் கொள்ளும் குறிப்பிட்ட, போதை மருந்துகள் முழுமையாக போதை தராமல் செயலிழந்து விடுவதால், எடுத்துக் கொள்ளும் போதை மருந்தின் வீரியத்தை கூட்ட வேண்டியிருப்பதோ. அல்லது, அடுத்த கட்டடமாக இருக்கும் சக்தி வாய்ந்த அதிக போதைப் பொருட்களையோ தேர்ந்தெடுப்பது தவிர்க்க முடியாததாகிறது.
நிலையான போதையை உறுதி செய்து கொள்ள, ஒரு முறை செலுத்திக் கொண்டதை இரு முறை மும்முறை என அதிகரித்துப் பலமுறை உட்கொள்வது அல்லது செலுத்திக் கொள்வதும் உண்டு.
இப்படியெல்லாம், ஏதோ ஒரு விதத்தில் உடம்பிற்குள் செல்லும் போதை வஸ்துக்களின் விளைவாக, நரம்புகள் விரிந்தும் தளர்ந்து கொடுத்தும் அதன் சமநிலையை இழந்துவிட, Dissosiation Identity Disorder என்கிற, தன்னை மறக்கும் நிலைக்குத் தள்ளப்படுவது வாடிக்கையாகிறது.
அதன் தொடர்ச்சியாக வருவதே Delusional disorder ? என்று சொல்லப்படுகிற ‘மனச் சிதைவு’.
அந்த மனச்சிதைவு நோய்தான் நவிஷ்னியை இப்போது முற்றிலுமாய் ஆக்ரமித்திருந்தது.
‘தக தக’ வெனத் தன் முன்னே வண்ண மயமாய் ஒளிர்ந்தபடி மாயத் தோற்றமாய்த் மயக்கும், கானல் பிறழ்வுக் காட்சிகளின் ஈர்ப்பில் மனதை முற்றிலும் பறி கொடுத்து விட்டாள் நவிஷ்னி. கண்டதே காட்சி கொண்டதே கோலமாகி விட்டது அவள் வாழ்க்கை. மாயத்தை நிஜம் என்று தீர்மானிக்கத் தொடங்கி விட்டது ஆழ் மனம். விளைவு..?
மொத்தமாகப் நவிஷ்னியின் பாதையையும் பயணங்களையும் மாற்றி போட்டு விட்டது போதை.
பாதைத் தவறிய கால்கள் என்றைக்கும் விரும்பிய ஊர் சென்று சேர்ந்ததாக வரலாறு இல்லையே? நவிஷ்னி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
கடந்த ஆறு மாத காலங்களில் வேறு வேறு இளைஞர்களின் கையால் சரக்கு வாங்கியிருக்கிறாள் நவிஷ்னி.
பல்வேறு இயல்புகளும், நடவடிக்கைகளும் கொண்ட சப்ளையர்களை கடந்துதான் வந்திருக்கிறாள் அவள். சரக்கு சப்ளை செய்பவர்களின் தோற்றங்கள் அவள் கண் முன் நிழலாடின.
கதா நாயகன் போல, வில்லன் போல, காமடியன் போல விதம் விதமாய் கலகலப்பாய், கம்பீரமாய், மிடுக்காய், எடுப்பாய், பிடிப்பாய், ஒடிசலாய், தேசலாய், இன்னும் வேறு வேறு அமைப்பிலும் முன்னெடுப்பிலும் காட்சியளித்த இளைஞர்களையெல்லாம் சந்தித்திருக்கிறாள் நவிஷ்னி.
போதை மருந்தைக் கையில் தரும் முன் அவளின் அழகை அற்புதமாய் ஆராதித்து, அணு அணுவாய் ரசித்து, கண்களால் பருகி, நாவில் சுவையரும்புகள் வெளிப்படுத்தும் தேனைச் சொட்டவிட்டு நிற்கும் இளைஞர்களின் கிளர்ச்சிகளைப் ஓரக் கண்ணால் பார்த்துப் பார்த்துப் பூரித்திருக்கிறாள்.
ஆனால் இன்று வந்த இளைஞன் மிகவும் வித்தியாசமாக, தன்னை சிறிதும் மதிக்காமல் நின்றது எரிச்சலைத் தந்தது அவளுக்கு.
போதைச் சரக்குகளை கடத்தும்போதும் சப்ளை செய்யும் போதும், சில அணுகு முறைகள் தொழில்முறையில் பின்பற்றப்படுகின்றன. இது மிகக் கச்சிதமாக வடிவமைக்கப்பட் நெட் ஒர்க்.
கடத்தல்களின் பின்னணி வேறு. கிளையண்ட்டுக் சப்ளை செய்யும் விங் வேறு.
ஒரு முறை ஒரு ஏரியாவுக்குச் சென்று சில பல வாடிக்கையாளர்களுக்குச் சரக்கு சப்ளை செய்பவனை, மூன்று மாத காலம் எந்தக் காரணம் கொண்டும் மறுமுறை அதே ஏரியாவுக்கு அனுப்புவதில்லை மேலிடம்.
போதை மருந்து சப்ளை செய்யத் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களை மூளைச் சலவை செய்யக் கொடுக்கப்படும் பயிற்சியின் முறை மிக வித்தியாசமானது.
அவர்கள் அளிக்கும் தீவிரப் பயிற்சியினால் எப்படிப்பட்ட இளகிய இதயமும் இருகிவிடும் என்பதே யதார்த்தம்.
இதுபோன்றப் பயிற்சி வகுப்புகளுக்கு சர்வதேச போதை மருந்துக் கடத்தல் பிரிவில் கொடிகட்டிப் பறக்கும் பாஸ்களும் கலந்து கொண்டு பயிற்சி அளிப்பார்கள்.
ராணுவ சிப்பாய்களுக்கு Gap Fillers என்று ஒரு அடை மொழி உண்டு.
போர்புரியும்போது முன் வரிசையில் போராடி உயிரிழப்பார் ஒரு சிப்பாய். அந்தச் சிப்பாய் இன்று காலைத் தன்னோடு சேர்ந்து காலைச் சிற்றுண்டி உண்டதையோ, தாங்கள் இருவரும் ஒன்றாகப் பயணித்துப் போர் முனைக்கு வந்தபோது தாங்கள் பேசிய பேச்சையோ, தன்னுடைய உயிர்த் தோழன் என்பதையோ, பற்றிச் சிறிதும் கவலைப் படாமல் அந்தச் செத்த உடம்பு மேலேயே ஏறி முன்னே சென்று அவன் நின்ற இடத்தை ஆக்ரமித்துப் போரைத் தொடங்க வேண்டும் என்கிற அளவுக்கு ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப் படுவதைப் போல, இங்கேயும் நெஞ்சில் ஈரம் அற்ற வகையில் செயல்படப் பயிற்சி அளிக்கப் படுகிறது.
அப்படிப் பட்ட கடுமையான பயிற்சியைப் பெற்றுவிடுவதால், தன் கூட்டாளிகளில் எவன் எங்கே எப்போது யாரிடம் மாட்டினாலும், அவனைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப் படாமல், தப்பித்துச் சென்று விடுவார்கள்.
இந்தத் தொழிலுக்கு வருபவர்களில், பெரும்பாலும், படித்த மேதாவிகள்தான். கிட்டத்தட்ட அறுபது சதவிகித இளைஞர்கள் மெத்தப் படித்தவர்கள் என்பதால், இப்படிப் பட்டப் பயிற்சிகளை மிகவும் வெற்றிகரமாக நடத்த முடிகிறது இவர்களால்.
மேலும் படித்த இளைஞர்களுக்கு, பற்பல நுணுக்கங்களை மிகவும் திறமையாகப் புரிந்து கொள்வதற்கேற்ற அறிவும் திறனும் மிகுந்திருப்பதால் மிகத் துல்லியமாகத் தங்கள் கடமையைச் செய்கிறார்கள் இவர்கள்.
சமூக விரோதச் செயல்களைச் செய்தாலும், சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வியாபார முறைகளைப் பின்பற்றப் பயிற்றுவிக்கப் பட்டிருப்பதால், இவர்கள், பெரும்பாலும் எதிலும் சிக்காமலும், எதையும் தங்கள் மேல் சிக்க விடாமலும் தப்பிக்கும் சாணக்கியம் இவர்களுக்குள் ஆழமாய்ப் பதிந்து இருக்கிறது.
‘வியாபாரம்’ என்று வரும் போது, எந்த வித தாட்சண்யத்திற்கும், எந்த வித சபல புத்திக்களுக்கும் அடிமையாகக் கூடாது என்பதுதான் இவர்களின் சித்தாந்தம்.
இன்னும் சொல்லப் போனால், போதை மருந்து சப்ளையர்களுக்கு போதை மருந்தை ஏற்றிக் கொள்ளும் பழக்கம் கூடப் பெரும்பாலும் இருப்பதில்லை.
எந்தத் துறையிலும் கருப்பு ஆடுகள் கலந்து இருப்பதைப் போல விதிகளை மீறும் சிலரும் இந்த வியாபாரத்தில் கலந்துவிடுவது உண்டு.
அது போன்ற சில சபல சித்தர்களால்தான், பொது இடங்களில், போதைக்கு அடிமையான கல்லூரி மாணவிகள் தரக்குறைவாக நடத்தப் படுகிறார்கள்.
கன்னியர்களின் போதைப் பழக்கத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மான பங்கப் படுத்தப்படுவதும் இத்தகைய ஆட்களால்தான்.
பொதுவாக, போகிற போக்கில் சரக்குகள் நகரும்.
‘எவருக்கு, எந்தச் சரக்கு எங்கு எப்படித் தந்தார்கள்…? எப்போது அதற்கான தொகை வசூலாகியது? தொகை பாக்கி யாரிடமாவது உண்டா?’ என்ற எந்த விபரங்களும் சரக்குத் தருபவனுக்குத் தெரியாது.
அது மட்டும்தானாத் தெரியாது?
சரக்கைக் கை மாற்றச் சொல்லித் ஒருவன் தருவான். அவன்தான் முதலாளியா? அவனுக்கு மேல் யாராவது பாஸ் இருக்கிறார்களா? என்றெல்லாம் எந்த விபரமும் தெரியாது.
‘மடித்துக் கொடுக்கிற சரக்கை, சுட்டுகிற இடத்திற்கோ, நபருக்கோக் கை மாற்றினால் பேசிய துகைக் கச்சிதமாக விள்ளாமல் விரியாமல் கைக்கு வந்துவிடும் என்பதில் உறுதி இருந்ததால். தங்களுக்குத் தேவையில்லாத செய்திகளைத் தெரிந்து கொள்ள முயல்வதுமில்லை அவர்கள்.
‘இது ஒரு சமூக விரோதச் செயல் என்று தெரிந்தும், கொண்டு போய்க் கொடுக்கும் சரக்கு எத்தகையது? அதன் மதிப்பு என்ன? என்று எதுவும் தெரியாமல், யாருக்காக உழைக்கிறார்கள் இந்த இளைஞர்கள்.?’
யாருக்காகவும் அல்ல. மூன்று வேளை இல்லாவிடினும், இரண்டு வேளையோ, குறைந்த பட்சம் ஒரு வேளையோ வயிற்றைக் கழுவிக் கொள்வதற்காக உழைப்பவர்கள்தான் அந்த இளைஞர்கள்.
ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் அவர்களுக்குக் கவலையில்லை. இயந்திரமாய்ச் செயல் படுவார்கள். கொடுத்த காசை பேரம் பேசாமல் வாங்கிச் செல்வார்கள்.
பல சமயங்களில், பல கஸ்டமர்களைச் சந்திக்கும்போது, டூவீலரைச் ‘சுவிட்ச் ஆஃப்’ கூடச் செய்ய மாட்டார்கள். அவ்வளவு ஏன் பல நேரங்களில், வண்டியை நிறுத்தி ஒப்புக்கு ஒரு சைடு ஸ்டாண்ட் கூடப் போடாமல், ஆமை வேகத்தில் வண்டி நகர்ந்து கொண்டிருக்குபோதே சரக்குக் கை மாறிவிடும்.
கவரில் போட்டுக் கஸ்டமர் கொடுக்கும் காசை, வண்டியின் பின்னால் அமர்ந்தவன் வாங்கி பைக்குள் போட்டுக் கொண்டு, ‘ம்’ என்பான்.
‘அந்தக் கவருக்குள் காசு இருக்கிறதா? இல்லையா?; எவ்வளவு தொகை உள்ளது?’ என்று எந்த விபரமும் தெரிந்து கொள்ள அனுமதியில்லை சப்ளையருக்கு.
ஒரு ஆர்வக் கோளாரில், சப்ளை செய்யப்பட்ட போதை வஸ்து, உறையில் எழுதப்பட்ட பெயர், முகவரி, உறையின் உள்ளே இருக்கும் தொகை, இப்படி எதையாவது தெரிந்து கொள்ள முயற்சித்தால், அவ்வளவுதான். நிலைமை விபரீதமாகிவிடும்.
எந்த நிலையிலும் மேலிடத்துக்குச் செய்தி தெரிந்துவிடும். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கட்டத்திலும் கண்காணித்துக் கொண்டே இருக்கும் பிரும்மாண்டமான நெட் ஒர்க் (வலைப் பின்னல்) அது.
பணம் வைக்காமல் வெறும் கவர் கொடுத்து கஸ்டமர் ஏமாற்றி விட்டால் என்ன செய்வது ? என்று கூடச் சந்தேகம் வரலாம் உங்களுக்கு.
அப்படி ஒரு வேளை ஏமாற்றி விட்டால் என்ன ஆகும்..? ;
சிம்பிள் ரெமடி..
ஏமாற்றிய கஸ்டமருக்கு, அடுத்த வேளைச் சரக்குத் தர மாட்டார்கள். போதை மருந்து இல்லாமல் தவிக்க விடுவார்கள்.
போதை மருந்தை கையில் வைத்துக் கொண்டு அடிக்ட்டின் அருகில் வந்து நின்று சபலத்தை ஏற்படுத்துவார்கள். தேவையைத் தூண்டுவார்கள். தேவையின் உச்சத்தில், போதைப் பொருளைப் பெற்றேத் தீர வேண்டும் என்ற தீராத வெறியோடு, சாம தான பேதம் எனும் எந்த முறையிலும் பலிக்காமல் போனால், கடைசீ முயற்சியாக காலில் விழுந்து கெஞ்சுவான் அடிக்ட்.
எப்படிக் கேட்டாலும், எவ்வளவு கெஞ்சினாலும், “தரவே முடியாது..” என்று பிடிவாதமாய் மறுத்து விடுவான் சப்ளையர்.
ஒரு வேளைச் சரக்கு நிறுத்தினாலே அடிக்ட் நிலையில் இருப்பவர்களுக்கு மிகப் பெரிய தண்டனைதான். அவ்வளவு ஏன்… ஓரிரு நிமிடங்கள் போதையைத் தரத் தாமதப் படுத்தினாலே தாங்க முடியாது அவர்களுக்கு . அப்படிப்பட்ட நிலையயில், ஒரு வாரம் சப்ளை தராமல் போக்குக் காட்டுவது என்பது மரண தண்டணைக்குச் சமமானது.
ஏமாற்றப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், கஸ்டமருக்குச் சரக்குத் தராமல் மிகப் பெரிய தண்டனை தருமே ஒழிய, கடைசீ வரை சரக்குத் தராமல் மறுத்து, கஸ்டமரை இழக்கவும் விரும்ப மாட்டார்கள். தொடர்ந்து அந்த நபரைக் கண்காணிக்கவும் ஒரு குழு செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
காரணம் – அந்த வாடிக்கையாளர் இறந்துவிட்டாலோ, அல்லது போதைப் பழக்கத்திலிருந்து வெளியே வந்து விட்டாலோ, ‘ட்ரக் பிசினஸ்’க்கு நஷ்டம் வந்துவிடும் அல்லவா?
அதனால், ஒரு அளவுக்கு மேல் தவிக்க விட மாட்டார்கள். ‘பணமே வைக்காமல் வெறும் கவர் தந்தோ, அல்லது உரிய துகைக்குக் குறைவாகக் கவரில் வைத்துத் தந்து ஏமாற்றியது தவறுதான் என்று, ஏமாற்றிய நபரை உணர வைத்து விட்டுத் தொடர்ந்து சரக்கு கொடுத்து ஆதரிப்பார்கள்.
ஒரு முறை அது போன்ற குற்றமும் தண்டணையும் அனுபவித்த பிறகு கடைசி மூச்சு வரை எந்த வகையிலும் ஏமாற்ற வேண்டும் என்று நினைக்காத, நேர்மையான கஸ்டமராய் ஆகிவிடுவார் அந்த அடிக்ட்.
புல்லட் வண்டியின் முன்புறத்தில் உப்பலாய்க் கிடக்கும் , ‘டாங்க் கவர்’ ‘கம்ப்பார்ட்மெண்டி’ல் கை விட்டுச் சரக்குப் பொட்டலத்தை எடுத்து, கை நடுக்கத்துடனும், பரபரப்புடனும், பரவசத்துடனும் நீட்டுகிற கைகளில் சரக்கைப் போட்டுவிட்டு, வந்த வேகத்தில் திரும்பியவர்களையே அதிகம் சந்தித்திருக்கிறாள் நவிஷ்னி தன் அனுபவத்தில்.
ஆனால் இன்றைய சப்ளையர் இளைஞன் மிகவும் வித்தியாசமாக நடந்து கொண்டான். அவனுடைய நடவடிக்கைகள் எரிச்சலூட்டின அவளுக்கு.
‘டிஸ்ட்ரிபியூட்’ செய்கிற வேலைக்குத் தேர்ந்தேடுக்கப்பட்ட பின், அவர்களுக்கான சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும். அதன் பிறகே அவர்கள் வாடிக்கையாளர் சேவைக்காக அனுமதிக்கப் படுவார்கள்.
வாடிக்கையாளர் சேவை என்பது கத்தி மேல் நடக்கிற மாதிரி. கொஞ்சம் ஏமாந்தால் சிக்கலில் மாட்டிவிடக்கூடும் என்பதால், நெட் ஒர்க்கின் பாதுகாப்பிற்காக, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வைத்து இன்டோர், அவுட்டோர் ஷூட்டிங் எடுப்பார்கள்.
அது என்ன ஷூட்டிங் என்கிறீர்களா..? சப்ளையர் இளைஞர் ஒவ்வொருவரையும், அழகான பருவ நங்கைக்கு போதைப் பொருள் சப்ளை செய்யச் சொல்லி, அதைத் தரும்போது அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளுமாறு நடிக்க வைப்பார்கள். பாலியல் வன் புணர்வு செய்வது போலவும் அந்த நடிகை கூப்பாடு போட்டு அலறுவது போலவும் காட்சிப் படுத்துவார்கள்.
அனைத்தையும், 360 டிகிரிக் கோணத்தில் வீடியோவும், புகைப்படங்களும் தயார் செய்து வைத்திருப்பார்கள்.
சப்ளையர் எங்கேனும் சிக்கலில் மாட்டிக் கொண்டு , தப்பமுடியாமல், சூழ்நிலைக் கைதியாகி ‘அப்ரூவர்’ ஆகும் நிலையோ, வேறு ஏதேனும் வகையில் சிக்கல்கள் வந்து விட்டாலோ, சூழ்நிலைக்கும், வழக்கின் போக்குக்கு ஏற்ப , வண்புணர்வுக் காட்சிளையோ, காமுகனைப் போலவோ, பெண்ணுடன் செட்டப் செய்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையோ வீடியோக்களையோ வெளியிட்டு, அந்த நபரை ஒட்டு மொத்தமாகக் கவிழ்த்து விடுவார்கள்.
சில இளைஞர்கள், நடிப்பை நிஜமாக்கவும் முயற்சி செய்வதுண்டு. பிரச்சனை வராத வரை அதையெல்லாம் மேலிடம் கண்டு கொள்ளாது. ஏதேனும் சிக்கல் என்றால் வைத்துச் செய்துவிடும்.
சரக்கைத் தரும் போது, சம்பா கோதுமை நிறமொத்த நவிஷ்னியின் நவிஷ்னியின் புறங்கைகளை இடது உள்ளங்கையால் தாங்கி, வெண் பட்டுப் போன்ற அவள் உள்ளங்கையில் தங்கள் குவித்த விரல்களால் கிள்ளி வழித்து, அவளை ஸ்பரிசித்த விரல் குவியலை தங்கள் உதட்டில் பொருத்தி முத்தமிட்டுக் களித்தவர்களும் உண்டு;
‘சரக்கு வாங்குபவள் தானே…!’,- என்ற உரிமையில் கன்னத்தைத் தடவி தடவிய விரல்களை முத்தமிட்டுக் களித்தவர்களையும் கடந்துதான் வந்திருக்கிறாள் நவிஷ்னி;
முத்தத்தை அவள் முன் பறக்க விட்டவர்கள்;
ஏக்கத்தோடு அவள் வனப்பைக் கண்டுப் பெரு மூச்செரிந்தவர்கள்;
இடுப்பைப் பார்த்து ஜொள்ளு விட்டவர்கள்.
ஏக்கத்தோடு, எச்சில் ஒழுகவிட்டவர்கள்… என. ரக ரகமான இளைஞர்களைப் பார்த்திருக்கிறாள் நவிஷ்னி.
சாதாரணமாக, நேருக்கு நேர், கண்ணுக்குக் கண், ஒரு பார்வைக் கூடப் பார்க்காமல், முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு மொத்தமாகத் தன்னை அலட்சியப் படுத்தும் இந்த இளைஞனைப் பார்த்தபோது ஆயாசமாக இருந்தது அவளுக்கு.
நவிஷ்னிக்கு இது முற்றிலும் புது அனுபவம் என்பதால் கொப்பளித்தது கோபம்.
கோபத்தில் உச்சத்தில், கால்களை அழுத்தமாய்த் தரையில் பதித்தாள். இறுக்கமான ‘ஜீன்ஸ் பேண்ட்’டில் டிசைன் செய்யப் பட்டிருந்த நாகரீகக் கிழிசல்களில் அவள் தொடைகள் பிதுங்கி வெளியே எட்டிப் பார்த்தன.
கால்களை மடக்கிய போது, இரண்டாம் இதயம் என்று சொல்லபப்படும், குதிரை முகம் பருத்து ஜீன்ஸ் கிழிசல்களின் ஊடாகப் பிதுங்கின…
ஆத்திரமாய்ப் பெருமூச்செரிந்ததில், இறுக்கமாக அணிந்திருந்த ‘டீ ஷர்ட்’ மேலும் இறுக்கமாகியது.
காண்பதற்கு, தேர்ந்த சிற்பி, வடித்து நிறுத்திய கருங்கல் சிற்பம் உயிர்ப் பெற்று அசைவது போலவே தோன்றியது.
நெஞ்சுக்கு நேரே டி ஷர்ட்டில் எழுதப் பட்டிருந்த, இரு பொருள் பொதிந்த ஆங்கில வார்த்தைகள் சுருக்கமில்லாமல், பளிச்செனப் சமுதாயத்திற்குப் பறைச் சாற்றியது.
போதையின் தேவை உச்சம் தொட, வலது கை ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்து, பாக்கெட் இல்லாத, ‘மிகவும் பிடிப்பான, ‘டைட் டீ ஷர்ட்டு’- ன் உள் இயல்பாக நுழைத்து ‘வாலட்’டை வெளியில் எடுத்தாள்; இடது கையில் வைத்து விரியத் திறந்தாள்;
கொத்தாய்ப் பணத்தை கிள்ளி எடுத்தாள்;
ஓட்டமும் நடையுமாய் புல்லட்டை நெருங்கினாள் நவிஷ்னி.
புல்லட் ஓட்டியின் பார்வையில் இப்போது வக்ரம் வெளிப்பட்டது .
“என்னடா அப்படிப் பாக்கறே…! ; வந்த வேலைய மட்டும் பாரு…!” என்று அதட்டினாள் நவிஷ்னி.
ஓ..! – எனக் கேவலமாய் இளித்தான் புல்லட் ஓட்டி.; அவன் முகம் மேலும் இறுகியது.
புல்லட்டை வெடுக்கென முன்னோக்கித் தள்ளினான். ‘சென்ட்ரல் ஸ்டாண்ட்’ விலகி, ‘டக்’ என மடித்துக் கொண்டது.
புல்லட்டில் தாவி ஸ்டார்ட் செய்தான்; “உட்காருடா மச்சி, பாப்பா சொல்றிச்சில்ல; வந்த வேலைய மட்டும் பாப்போம்…!”- என்றான்.
அப்போது அவன் வாய் ஒரு பக்கமாய்க் கோணியபடி விகாரமாய் இளித்தது.
உடன் வந்தவனும், வலது காலைக் தூக்கிப் போட்டுப் பின்னால் அமர்ந்தவுடன், ‘யு டர்ன்…’ போட்டான்.
நவிஷ்னிக்கு இதைப் பார்த்ததும், கை கால்கள் உதறலெடுத்தன; காரணம் இப்படி ஒரு திருப்பத்தை அவள் எதிர் பார்க்கவில்லை.
அவள் முகத் தசைகள் இறுகின;
உடம்பு புராவும் வெலவெலவென்று வந்தன ;
கால்கள் துவண்டன ; நாக்கு அன்னத்தோடு ஒட்டிக் கொண்டன. பேச்சு வரவில்லை… ;
தடுமாறியபடி அவனை நோக்கி ஓடினாள்.
மெதுவாக நகர்ந்த புல்லட்டின் பின்னே இவளும் ஓட்டமும் நடையுமாக நகர்ந்தாள். நடுங்குகிற அவள் வலது கையில் பணம் இருந்தது.
பணத்தோடு இரண்டு கைகளையும் குவித்து வணங்கினாள் நவிஷ்னி.
இப்போது நவிஷ்னியின் நாடி நரம்புகளிலெல்லாம் ஏற்பட்ட ரசாயன மாற்றத்தால் நடுக்கம் அதிகரித்தது.
போதைக்கு அடிமையாகியவர்கள் சரியான நேரத்தில் போதை மருத்தை செலுத்திக் கொள்ளாவிட்டால் ஏற்படும் ‘வித்ட்ராவல் சிம்டம்ஸ்’ என்று சொல்லக் கூடிய, எதிர்மறை விளைவுகளால் தவித்தாள் நவிஷ்னி.
அவளின் உடம்பில் தெப்பலாய் வெளிப்பட்ட வியர்வையையும், கை கால் நடுக்கங்களையும், வாய் கோணுதலையும் ‘ரியர்’ கண்ணாடி வழியாகப் பார்த்து வக்ரமாய் ரசித்தான் சப்ளையர் இளைஞன்.
கொஞ்சம் ஓட்டத்தின் வேகத்தைக் கூட்டினான். நவிஷ்னி அதை விட வேகமாக ஓடி முன்னால் வந்து நின்று ஹாண்டில் பார் அமல் இருந்த அவன் கைகளை அழுத்திப் பிடித்து வண்டியை நிறுத்திக் “சரக்கு… சரக்கு…” என்று பரிதாபமாகக் கெஞ்சினாள் நவிஷ்னி.
“சரக்கு குடு… ப்ளீஸ்… சரக்கு குடு…” கேட்டாள், கேவினாள், கெஞ்சினாள். விம்மினாள், துடித்தாள், துவண்டாள் உடம்பு பூராவும் வெடவெட வென நடுங்க வதங்கிச் சரிந்தாள்.,.
“தெனாவெட்டா பேசுன,..?” – அவள் நெற்றியை புறங்கையால் நெட்டித்தள்ளி, அவளுக்கு முகம் காட்டினான் சப்ளையர்.
“ஸாரி… ஸாரி…” என்றாள். நவிஷ்னி ;
“சரக்கு… சரக்கு… சரக்கு…” என்று விடாமல் கெஞ்சினாள்;
அவன் மிஞ்சினான்.
நவிஷ்னியின் கன்னங்களைக் தொட்டுத் தடவி வருடின அவள் விரல்கள். டக் கென கையை விலக்கிக் கொண்டான்.
கன்னத்தில் மேய்ந்த அவள் கைகளையும் விலக்கிவிட்டான்.
“சரக்கில்ல… போ..!”, – என்று அவளைப் புறக்கணித்தான்.
ஆக்ஸிலேட்டரை “ஹூம்… ஹூம்…” என்று உறும விட்டான்.
நவிஷ்னியின் பரபரப்பும், படபடப்பும் இப்போது அதி உச்சமடைச்தன.
மகுடியின் இசை லயத்தைக் கேட்ட நாகம் மதி மறந்து ஆடுவது போல, அந்த உறுமலின் பின்னணியில் தன்னை மறந்து ஏதேதோ பிதற்றினாள்.
“நீ என் செல்லம்தானே…?; மிழற்றினாள்.
ஏன் சரக்கில்லங்கறே..?” – குரல் உடைந்து கொஞ்சலுடன் கூடிய கெஞ்சலாய் வெளிப்பட்டது. மீண்டும் ஹாண்டில் பாரில் கிடந்த அவன் புறங்கைகளைப் பிடித்துக் கொண்டுக் கெஞ்சினாள்.
“இல்லன்னா இல்லதான்…! கைய எடு…!”
கடுகடுப்பாய் முகத்தை வைத்துக் கொண்டு பலமாய் அதட்டினான். நவிஷ்னியை மேலும் ‘டெம்ட்’ ஆக்கினான்.
“காசு அதிகமா வேணுமா..? இந்தா எல்லாத்தையும் எடுத்துக்க…!”
டீ ஷர்ட்டுக்கள் கை விட்டு பர்ஸை எடுத்து அப்படியே அவன் முன் நீட்டினாள்.
“உன் காசு எவனுக்கு வேணும்..?” கடுப்பாய் மறுத்தான் அவன்.
“வேற என்னதான் வேணும் உனக்கு…? கேளு தர்றேன். சரக்கு குடு…”
……………” சில வினாடிகள் மௌனம் கடந்ததும் “நீ… நீதான் வேணும்…!” என்றான் அவன்.
“பாஸ்டர்ட்…!” நாபியிலிருந்து கிளம்பி அழுத்தமாக வெளி வந்தது அவள் குரல்
“நீதான் வேண்டும்..” என்ற அந்த சப்ளையர் மீது ஆக்ரோஷமாய்ப் பாய்ந்தாள் நவிஷ்னி. அவளுக்குள் தற்காலிகமாய் விழித்தது சுய மரியாதை.
போதையின் வேட்கை, ஒரு சில கனங்களில் சுய மரியாதையை பின்னுக்குத் தள்ளி விட்டது.
“போகாதே…! போகாதே…! நீ என்ன கேட்டாலும் தரேன். என்னை எடுத்துக்கோ. சரக்கைக் கொடுத்துட்டுப் போ… ப்ளீஸ்.” கோபத்துடன் திரும்பிச் சென்றவனைக் கெஞ்சிக் கொண்டேப், பின் தொடர்ந்தாள்.
அவள் கெஞ்சக் கெஞ்ச இவன் மிஞ்சினான்.
சில தப்படிகள் அவளை ஓடவிட்டு ரசித்தான்.
‘இனிமே நம்ம இஷ்டத்துக்கு வளைக்கலாம்..” என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டான்; சாலை ஓரம் இருந்த வண்டியை நகர்த்தி, உள்ளடங்கி வளர்ந்திருத்த மரத்தடியில் நிறுத்தினான். அவளுக்கு எதிரே வந்து நிமிர்ந்து நின்றான்.
நவிஷ்னி, அவனை ஆரத் தழுவினாள். அவன் முகமெல்லாம் முத்த மழை பொழிந்தாள்.
செல்-போனை வைத்துக் கொண்டு, சுற்றிச் சற்றி வந்து அவர்களின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தினான் கையாள்.
360 டிகிரியில், ‘பளிச் பளிச்’ என புகைப்படம் எடுத்தான். முதிர்ந்த காட்சிகளை வீடியோப் பதிவும் செய்தான்.
“என்னை என்ன வேணாலும் செய். சரக்கு கொடுத்துரு. என்று மிழற்றினாள்.
“ரிமூவ் பண்ணவா…?” கேட்டதோடு நிற்கவில்லை நவிஷ்னி.
இப்படிப் பிதற்றியபோது, அவள் கை ஆங்கில (X) எக்ஸ் போல பின்னிக் கொண்டு, விரல்கள் பக்கவாட்டில் அழுத்தமாய்ப் பிடித்தபடி, ‘டி ஷர்டை’ கழற்ற ஆயத்தமானாள்.
நவிஷ்னியின் நல்ல நேரமோ, அந்தக் காமுகர்களின் கெட்ட நேரமோ… அல்லது இரண்டுமோ…
ஆளரவம் அற்ற அந்தச் சந்தின் வழியாக வந்தான் நவீனன். இந்த விபரீதத்தை நேருக்கு நேர் பார்த்தும் விட்டான்.
‘சடர்ன் ப்ரேக்’ போட்டு வண்டியை நிறுத்தினான். இறங்கி ஓடோடி வந்தான்.
போதை ஆசாமியின் புல்லட் சாவியைக் கையில் எடுத்துக் கொண்டான்.
புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தவனின் கையிலிருந்து செல்போனைப் பளிச்செனப் பறித்தான்.
“நவீனன் சார்டா…” – கையாள் கத்தினான்.
நவிஷ்னியை விட்டு விட்டு, வண்டியிலேறித் தப்பிக்க ஓடினான்.
வண்டியில் சாவியில்லை என்பதை அறித்ததும், முன் பர்ஸில் இருந்தச் ‘சரக்கை’ மட்டும் கையில் எடுத்துக் கொண்டுத், தலை தெறிக்க ஓடினார்கள் இருவரும்.
போதை வியாபாரிகளைக் கண்டு கொள்ளவில்லை நவீனன். ‘அவங்க எங்கே போயிடப் போறாங்க…! பாத்துக்கலாம்…!’ – என்ற அலட்சியமாகக் கூட இருக்கலாம்.
நவீனனின் கவனம் முழுதும் நவிஷ்னியின் மீதுதான் இருந்தது.
வழக்கமாக போதை ஊசிப் போட்டுக் கொள்ளும் நேரம் தவறிவிட்டதால், உடம்பு முழுதும் உதறல் எடுத்தது. நவிஷ்னியின் பற்கள் கிட்டித்தன. மயங்கி விழுந்தாள் நவிஷ்னி.
கைப் பேசியை உயிர்ப்பித்தார் நவீனன். அருகில் இருந்த மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவ மனைக்குத் தகவல் கொடுத்தார்.
போதை மருந்துத் தடுப்புப் பிரிவின் முக்கிய அதிகாரி என்பதால், ஒரு சில மணித்துளிகளில் 108 வந்துவிட்டது. நவீனன் சார் உத்தரவிட்டபடி, நவிஷ்னியிடம் ஏதும் தூண்டித் துருவிக் கேட்காமல், முதலுதவியும் சிகிச்சையும் செய்தது மருத்துவமனை நிர்வாகம் .”
ஒரு மணி நேரம் கழித்து மருத்துவ மனைக்கு வந்தார் நவீனன்.
“இப்ப பெட்டரா இருக்காங்க சார்..” சொல்லிவிட்டு, நவீனனை உள்ளே விட்டு, செவிலியர்கள் அனைவரும் வெளியே வந்துவிட்டனர்.
“உன் பேரு…?”
“நவிஷ்னி”
“எத்தனை நாளா இந்தப் பழக்கம்…?”
“……………..”
“எந்த காலேஜ்..! ;
“ …………”
விவரமாக விசாரணை செய்தார் நவீனன்.
“நீ செஞ்ச அசிங்கமெல்லாம் இந்த செல் போன்ல படம் பிடிச்சி வெச்சிருக்கான் அந்தக் களவானிப் பய. வீட்டுல அப்பா அம்மா ஃபோன் நம்பர் குடு. ஃபார்வேர்ட் பண்ணி விடுறேன்.” மிரட்டினார் நவீனன்.
“ப்ளீஸ் ஸார். வீட்டுக்குச் சொல்லாதீங்க சார். நான் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கறேன். இனிமே இப்படிச் செய்யமாட்டேன்…” – மன்றாடினாள் நவிஷ்னி.
“சரி, உன் வீட்ல சொல்லலை. உன் பேரண்ட் நம்பர் கொடு..” –
முதலில் தயங்கியவள், பிறகு எண்களைச் சொன்னாள்.
“இது சரியான நம்பர்தானானு நான் ஃபோன் போட்டுத் தெரிஞ்சிக்கவா?”
“வேணாம் சார். நான் என் செல்லுல போடுறேன்.”
“ஸ்பீக்கர்ல போடு.” – நவீனன் குரலில் அதட்டல் இருந்தது.
“நவிஸ்நி.. என்னடா இந்த நேரத்துல ஃபோனு. காலேசு கிடையாதா.. ஒடம்பு நல்லா இருக்கியா செல்லம்… என்னடா.. சொல்லு…” எதிர் முனையில் பேசிய தாயின் குரலில் பதற்றம் கூடியிருந்தது.
“நல்லா இருக்கேம்மா. கைத் தவறி நம்பர் வந்துருச்சு. பதட்டப்படாதீங்க.. வெச்சிடறேம்மா.!.” – என்று சமாளித்துவிட்டுக் கட் செய்தாள்.
பேசாத வார்த்தைகளுக்குத்தான் மதிப்பு மிக மிக அதிகமென்பதை நன்கு உணர்ந்த நவீனன். எதுவும் பேசாமல் நவிஷ்னியை ஒரு பார்வை பார்த்தார்.
கூனிக் குறுகினாள் நவிஷ்னி
அத்தியாயம் – 2
‘பெண் ஒரு புரியாத புதிர்;
ஒவ்வொருப் பெண்ணுக்கும் தனித்துவம் உண்டு;
பெண்ணுக்குப் பெண் குணம் மாறும்;
பெண் என்றால் பேயும் இரங்கும்;
பெண்களை நம்பாதே;
இப்படிப்பட்டக் கருத்துக்களெல்லாம் உலகளாவிய மூட நம்பிக்கைகள்.’
‘நங்கையர்களை, நல்லவள், கெட்டவள், புத்திசாலி, அறிவிலி, ஆங்காரி, பாவப்பட்டவள், பலானவள்… என்றெல்லாம் பிரித்துப் பிரித்து முத்திரை குத்தி முடக்கி வைப்பதே உலகளாவிய நடைமுறை;
இந்தப் பாகுபாடுகளெல்லாம் அடிப்படையிலேயேத் தவறானவை.’
‘நதிகள்…;
நாட்டின் அடையாளங்கள்;
காலம் காலமாகப் பெண்களை நதிகளோடு ஒப்பிடுவதையே வழக்கமாக இருக்கிறது ;
அந்த ஒப்பீட்டின் தார தம்மியங்களை, அறிய வேண்டுமானால், நதிகளின் அனைத்துக் கூறுகளையும் துருவி ஆராய்தல் மட்டுமே ஒரே வழி;
பொதுவாக ‘பெண்களை குணவதி, குணம் கெட்டவள் என்றெல்லாம் பாகுபடுத்துகிறோமே.. அது சரியா?
இருக்கும் இடத்தை வைத்து, நதி ஓரிடத்தில் குறுகலாக ஓடுகிறது, மற்றோரிடத்தில் அகன்றும் இருக்கிறது;
வாட்டத்தைப் பொறுத்து, சிலப் பகுதிகளில் வேகமாகவும், வேறு சிலப் பகுதிகளில் நிதானமாகவும் பாய்கிறது;
சூழலின் மாறுபாட்டால், தெளிந்தும், கலங்கியும், குளிர்ந்தும், வெதுவெதுப்பாகவும், பன்னீர்ப் போன்றும், பாழ்ப்பட்டும் கிடப்பது தவிர்க்க முடியாதல்லவா? .’
‘பெண்களை நதிகளோடு ஒப்பிடுபவர் இத்தனைக் கூறுகளையும் ஆராயவேண்டுமல்லவா…? ;
நதிப் பெண்களை வைத்து, மதிப்பெண் இடும்போது ஒன்று மட்டும் நிச்சயம் புலப்படும் ;
பெண்ணீயத்தின் மூல வித்து ஒவ்வொருப் பெண்ணிடமும் தீர்க்கமாக உள்ளன ;
ஆகவே, ஒன்று மட்டும் நிச்சயம். நதிமூலம் ஒன்றே ஒன்றுதான் ;
முலத்திலிருந்துப் புறப்பட்டுப் பல களங்களைக் கடந்து வரும்போது அகன்று விரிந்து பாயும் நிலையில் நிதானம் எனும் குணம் குன்றேறுகிறது ;
குறுகிக் கிடக்கும் பாதையில் மூர்க்கம் முற்றி முதிர்ந்துச் சுழன்று எகிறிச் சீறுகிறது ;
சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப இடம் பொருள் ஏவலுக்குத் தக்க, பெண்ணானவள் கன்னி காப்பதும், காதலில் விழுவதும், காமத்தில் விழுவதும், கலவியில் முகிழ்வதுமாய் ரசவாதங்கள் நிகழ்ந்து விடுகின்றன ;
எந்தச் சந்தர்ப்பச் சூழலையும் கணக்கில் கொள்ளாமல், கண்டதே காட்சியாய், கொண்டதே கோலமாய் அவள் இப்படி, இவள் அப்படி… என்றெல்லாம் சுலபமாய் முத்திரை பதித்து முகம் மலர்வதோ, முகம் சுழிப்பதோ வாடிக்கையாகி விட்டது நமக்கு;
மாறுதல்கள் சிலருக்கு விரைவில் ஏற்பட்டு விடுகின்றன. சிலறுக்கு மிக மிகத் தாமதமாகின்றன. மாறுதலே ஏற்படாமல் மாண்ட பெண்களும் உண்டு;
மாறுதல்கள் கூட மாறுதலுக்கு உட்பட்டவைதானே.!’
‘சீராய், அகலமாய், அழகாய், ஆற்றொழுக்காய், அமைதியாய் வந்த ஆறு, திடீரென ஒரு பள்ளம் வருகையில் ‘ஹோ…” என்ற பேரிரைச்சலோடு விழுவதில்லையா…? ;
விழுந்த பின் பரந்து கிடக்கும் சமத் தரையில் அமைதியாய் ஓடுவதில்லையா…? ;
தன் மேல் போர்த்தப்படும் திராவகத்தையும், ஆலைக் கழிவையும் பொறுத்துக் கொள்வதில்லையா…? ;
எல்லையில்லா நீரோட்டத்தின் களிப்பால் கரையை உடைத்து ஊழித்தாண்டவம் ஆடுவதில்லையா? ;
புயல், வெள்ளம், காற்று போன்ற இயற்கையின் சீற்றத்தால் நிலை தடுமாறிய ஆறு, எல்லாம் அடங்கிய பின், தன் சுய ஆற்றொழுக்கோடு ஓடிக் கொண்டுதானே இருக்கிறது ! ;
நதிகளுக்கு இப்படி மாற்றங்கள் சாத்தியமென்றால், இத்தனை மாற்றங்களும் நதியோடு ஒப்பிடும் பெண்ணுக்கும் சாத்தியம்தானே …! ;
சாயப் பட்டரைக் கழிவு நீர் சுழித்தோடினாலும் நதி என்கிறோம் ;
சாக்கடையாக ஓடினாலும் கூவம் ஆறு என்கிறோம் ; ஏன்? ;
அது ஆறுதான். அதில் கலக்கும் சாயக்கழிவோ, சாக்கடையோ தற்காலிகமானதுதான் ;
கண்டவையும் கலப்பதைத் தடுத்து விட்டால் அது ஜீவ நதியாகி விடுமே ;
ஆனால், ஆற்றோடு ஒப்பிட்டாலும் மாறுதலுக்கு உட்பட்டு மீளும் பெண்ணை மட்டும் ஏற்பதில்லையே ஏன்? ;
அது விரும்பத் தக்க, விரும்பத் தகாத, சமுதாயம் அங்கீகரிக்கிற, அங்கீகரிக்காத எந்த வித மாற்றமாகவும் இருக்கலாம்;
கன்னி, பத்தினி, பரத்தை, வாயாடி, வம்பி என்று ஏதாவது ஒரு நிலையில் வைத்து முத்திரை குத்தி விடுகிறோமே…? ;
இது சரியா…?’
தூக்கம் வராததால், தன் அறையில் நாற்காலியில் அமர்ந்தபடி, இப்படிப் பலவாறாக யோசித்துக் கொண்டிருந்தார் போதை மருந்துத் தடுப்புப் பிரிவின் துணை அதிகாரி நவீனன்.
“மிஸ்டர்… நவீனன். என்ன யோசனை ரொம்ப பலமா இருக்கு….? ” அறைக்குள் உரிமையுடன் நுழைந்த மேலதிகாரி அமல்தாஸ், சிரித்துக் கொண்டே கேட்டார்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லே சார். இதோ, படுக்க வேண்டியதுதான்…” என்று சமாளித்தான் நவீனன்.
“இது சரி வராது. ப்ரொக்ராம் முடிஞ்சித் திரும்பும்போது நான் உன் வீட்டுக்கு வரப்போறேன்…”
“வெல்கம் சார்…”
“எதுக்குனு கேக்கலியே…? ”
“………………………………….” – அமைதியாக இருந்தான் நவீனன்.
“நவீனனுக்கு பொண்ணு பார்த்ததுக் கல்யாணம் பண்ணி வைக்கறதா உத்தேசம் இருக்குதா… இல்லே நான் பாத்துக் கட்டி வைக்கட்டுமானு…! உன் பேரண்ட்ஸைக் கேட்கத்தான்…” – என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் அமல்தாஸ்.
பதிலுக்கு, ஒரு மாதிரிச் சிரித்து மழுப்பினான் நவீனன்.
“ஓ கே குட் நைட்…” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குத் திரும்பி விட்டார் உயர் அதிகாரி.
அத்தியாயம் – 3
“ ஐ ம் நவீனன்…” நாற்காலியின் முன் நின்றார் நவீனன்.
கல்லூரி முதல்வர் எழுத்து நின்று அவருக்குக் ஷேகை கொடுத்தார்.
“……………..” ‘நீங்க யாரு? எதுக்கு வந்திருக்கீங்க? ’ – போன்ற கேள்விகள், கல்லூரி முதல்வர் கண்களில் அப்பட்டமாய்ப் பிரதிபலித்தது.
“நான் போதை மருந்துத் தடுப்புப் பிரிவு அதிகாரி சார்..!.” தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் நவீனன்.
“ஓ…!” – என்று வியப்பொலி எழுப்பிய முதல்வர், ‘இவர் எதுக்கு என்னைத் தேடிக் கல்லூரிக்கு வந்திருக்கார்?’ – என்று எண்ணி, வியந்து விழித்தார்.
“ஒரு கம்ப்ளைண்ட் வந்திருக்கு சார்.”
“கம்ப்ளைண்டா..?” என்று அதிர்ச்சியாய்க் கேட்டது பிரின்ஸிபாலின் கண்கள்.
“எம் ஏ இங்க்ளீஷ் லிட்ல, சரளமா ‘ட்ரக்ஸ்’ நடமாட்டம் இருக்கறதா ரிப்போர்ட் வந்திருக்கு சார். சர்ப்ரைஸ் செக்கிங் பண்ணணும். உங்க ஒத்துழைப்பு தேவை சார்.”
“அப்படி எதுவும் என் வரைக்கும் வரலையே…?” – என்று இழுத்தாற்போல் சொன்னார் முதல்வர்.
“……………..” நவீனன் எதுவும் பேசவில்லை.
மொழியினால் அறிமுகப் படுத்தப் பிடிக்காமல், தன் ‘ஐ டி’ யை எடுத்துக் காட்டினார்.
“சார் நான் உங்களை சந்தேகப் பட்டுக் கேக்கலை. போதை மருந்துத் தடுப்புப் பிரிவுலேர்ந்து வந்து, எம்.ஏ., வகுப்புலப் பூந்து சோதனை செய்த விஷயம் வெளீல லீக் ஆனா கல்லூரிக்குக் கெட்ட பேர் வருமேனு யோசிச்சேன்.”
“வந்த கப்ளைண்டுக்கு நாங்க ஆக்ஷன் எடுத்துத்தானே ஆகணும்..” – என்ற நவீனன் தொடர்ந்து சொன்னார்.
“பாதுகாப்புக்குப் போலீஸ், மற்றும் தடுப்புப் பிரிவு ஊழியர்கள், மோப்ப நாய்.. எல்லாம் கேம்பஸ்க்கு வெளியேதான் இருக்கு. நான் மட்டும்தான் உள்ளே வந்தேன்.”
“சார் ஒரு ஐடியா?” – என்றார் ப்ரின்ஸிபால்
“சொல்லுங்க..” – என்றார் நவீனன்.
“அந்த க்ளாஸ் இன்சார்ஜ்ஜை வரச் சொல்றேன் சார். அவங்களுக்கு ஏதேனும் தெரியுமா’னு …”
“ஓகே.. ‘ஸ்டெப் பை ஸ்டெப்பாப்’ போவோம்ங்கறீங்க. சரி . வரச் சொல்லுங்க.”
இண்டர்காம் எடுத்துப் பேசினார் பிரின்ஸிபால்.
சில மணித்துளிகளில் பிரின்ஸிபால் அறைக்கு வந்து சேர்ந்தாள் மயூரி.
முதல்வர், மயூரியை நவீனனுக்கு அறிமுகப்படுத்தினார்.
மயூரி நவீனனைக் கண்டு ஒரு கும்பிடு போட்டாள்.
அந்த நேரத்தில் நூலக உதவியாளர் சங்கு என்ற சங்கமேஸ்வரன் முதல்வரின் அறைக்கு உள்ளே வந்தார்.
சங்கு’வைக் கண்டதும், சட்டென தன் இருக்கை விட்டு எழுந்து சங்குவின் இரு கைகளையும் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு வணங்கினார் நவீனன்.
சங்கமேஸ்வரன் நவீனனை மார்போடு அணைத்தபடி, அவன் தோளுக்குப் பின்னால் நின்ற மயூரியைப் பார்த்தார்.
“என்ன அப்படிப் பாக்கறே மயூரி, இவர் நவீனன். என்னோட விசிறி இவர்!” – என்று புன்முறுவல் செய்தார் சங்கு.
“சாரோட படைப்புகள் எல்லாம் கிளாஸிக் ரகம். குறிப்பா சமிபத்துல வெளிவந்த ‘கருப்பக் கிருஹம்’ என்கிற படைப்பு இவரோட அறிவு ஜீவித் – தனத்துக்கு ஒரு சாட்சி..” என்றார் நவீனன் உணர்ச்சி வசப்பட்டவராய்.
சற்றே நிறுத்தி, மீண்டும் தொடர்ந்தார்.
“சாரால மட்டும்தான் இப்படி ஐந்தாவது கோணத்துல சிந்திக்க முடியும். சங்கு சார் தாசன் நான்.’ சொல்லும்போது, நவீனனின் முகத்தில் ஒரு ஒளி தெரிந்தது.
அந்த ஒளியில் பிரகாசித்தில் ஜொலித்தது மயூரியின் முகம்.
டிபார்ட்மெண்ட் அறையில் எதிரெதிர் நாற்காலிகளில் அமர்ந்து பேசினார்கள் மயூரியும், நவீனனும்.
போதை மருந்துத் தடுப்புப் பிரிவின் அதிகாரியாக நவீனனைப் பார்க்கவில்லை மயூரி. சங்குவின் விசிறியாகவே அவனைப் பார்த்தாள்.
இத்தனை நாட்கள் சங்குவை மிஸ் செய்ததற்காக உண்மையிலேயே வருந்தினாள்.
சங்குவோடு அவளுக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பு அணிச்சையாக மனதில் அசைந்தது.
மயூரி இந்தக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பதவியேற்று கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் முடிந்து விட்டன.
அன்றுதான் அவள் தனியாக டிபார்ட்மெண்டில் உட்கார்ந்திருக்கிறாள்;
மதியம் எடுக்கப் போகும் எம் ஏ வகுப்புக்குத் தன்னை தயார் செய்து கொள்வதற்காக, பார்வை நூலோடு அமர்ந்திருந்தவளின் பார்வை ‘ஸ்ரீ’ என்ற சிற்றிதழைப் பார்த்ததும் மாறியது.
இந்தச் ‘சங்கு’வை எட்டு மாதங்களாகச் சந்திக்காமல் இருந்து விட்டோமே.!’ – என்று ஆயாசமாக இருந்தது மயூரிக்கு.
சுனையின் அருமைப்-பெருமைத் தெரியாமல், அதன் அருகிலேயே இத்தனை நாள் இருந்து, ‘தீர்த்தக் கரை பாவியாய்’க் கிடந்து விட்டோமே !’ என்று உண்மையிலேயே வருத்தம் கொண்டாள்.
தொடர்ந்து சங்குவைச் சந்தித்தும், அவரோடு அளவலாவியும், அவர் சிந்தனைகளைக் காதில் வாங்கியும், கண்ணால் பருகியும், கொஞ்சம் கொஞ்சமாக தன் உள்ளத்தை உயர்த்திக் கொண்டுத் ‘தன்னை உணர்ந்தாள்’.
கல்லூரியின் ஆங்கிலத் துறையில் ‘ஹெச் ஓ டி’ யைச் சேர்த்து, மொத்தம் ஏழு பேர் ;
தினம் தினம் கல்லூரிக்கு வருவதும், அமர்வதும், வீடு திரும்புவதுமாக விருதாவாய் எட்டு மாதங்களைக் கழித்துவிட்டோமே!’- என்று தன்னிரக்கத்தில் தவித்தாள் மயூரி.
ஓரிரு முறை, துறை நூலகத்துக்குத் தேவையானச் சில புத்தகங்கள் பற்றி நூலகரோடு விவாதிக்க, கல்லூரிப் பொது நூலகத்துக்குச் சென்றிருக்கிறாள் மயூரி.
அப்போதெல்லாம் இந்தச் சங்குவை அங்குப் பார்த்திருக்கிறாள். ஏனோ தெரியவில்லை அவரைச் சந்தித்துப் பேசவேண்டும், அவரிடமும் கருத்துகளைக் கேட்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை அவளுக்கு.
ஒரு வேளை நாம் விரிவுரையாளர் பதவியில் இருக்கிறோம், சங்கு ஒரு சாதாரண நூலக அட்டெண்டர் என்ற தன்முனைப்பு தன்னையறியாமல் தன்னைக் கட்டுப்படுத்தி விட்டதோ ? “ என்றும் அவளுக்குத் தோன்றியது.
இன்றைய மயூரியின் மன நிலையே வேறு. கல்லூரி முதல்வர் உட்பட, அனைத்து விரிவுரையாளர்களையும், இந்தச் சங்குவோடு ஒப்பிட்டுச் சங்குவின் உயர்வை உணரமுடிந்தது அவளால் ;
நூலக உதவியாளர் சங்கமேஸ்வரன் என்கிற எழுத்தாளர் சங்கு’வே மற்ற எல்லோரையிம் காட்டிலும் மிக மிக உயர்ந்த மனிதர் என்ற ஒரு முடிவுக்கும் வர முடிந்தது அவளால்;
முனைவர் பட்டம் உட்படப், பலப் பலப் பட்டங்களும், பதவிகளும், ஐந்திலக்கச் சம்பளமும், கௌரவங்களும், சலுகைகளும் பெற்று, உழைப்பைப் பிழைப்பாக்கிப் பொழுதுபோக்கும் அனைவர் மீதும் வெறுப்பு வந்தது மயூரிக்கு.
தன்னையே அவள் வெறுத்துக் கொண்டாள்.
பிழைப்புக்காக நூலக அட்டெண்டர் வேலை பார்க்கும் அந்தச் சங்மேஸ்வரனின் உழைப்பு ;
மாணவர்கள் கேட்கும் புத்தகத்தை சமுதாய அக்கரையோடு உடனடியாக எடுத்துக் கொடுக்கும் அக்கரை ;
சமுதாய சிந்தனையுள்ள வலிமையான எழுத்துக்களை இதயத்திலிருந்து இறக்கிக் கொண்டிருக்கிற ‘சங்கு’ என்னும் இன்னொரு பரிமாணம்.
இவ்வாறாக, சங்குவின் மீது மிகவும் மரியாதை வைத்த மயூரி, தற்போது ஒரு விசாரணைக்காகக் கல்லூரி வளாகத்திற்கு வந்துள்ள, போதை மருந்துத் தடுப்புப் பிரிவு அதிகாரி நவீனன், சங்குவைக் கண்டதும் மரியாதையாக எழுந்து நின்றதும், சங்குவின் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டுத் தொழுததைப் பார்த்தபோது மேலும் மேலும், சங்குவின் மீது மரியாதை கூடியது மயூரிக்கு..
அட… ! – என்ற மரியாதை ;
ஓ !.. என்ற பிரமிப்பு ;
அடடே..! என்ற வியப்பு ;
ஹோ… ! என்ற விழி விரிப்பு
இவைகளெல்லாம் காதலுக்கு முன் வரும் கட்டியங்கள்.
சங்குவின் மேல் அனிச்சையாய் ஏற்பட்ட, மயூரியின் பிரமிப்பும், மரியாதையும், காதலாக உருமாறி எத்தனையோ நாட்களாகிவிட்டன.
அதை அவரிடம் தெரிவிக்க நேரம் பார்த்துக் காத்திருந்த மயூரிக்கு அன்று ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்தது.
நூலக சம்பந்தமான கோப்பை முதல்வரிடம் சொல்லி, ஒப்படைத்து விட்டுத் திரும்பும்போது, மயூரியிடம் வந்தார் சங்கு.
“மயூரி, வர்ற சண்டே ஃப்ரீதான். கால் பண்றேன்.” – என்றார்
மயூரிக்கு, கால் தரையில் பாவவில்லை. மகிழ்ச்சியில் மிதந்தாள்.
– தொடரும்…
– என் உயிரே… மயூரி…! ( நாவல்), 19-03-2025, தேவியின் கண்மணி.
![]() |
இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஏழாம் பொருத்தம்…
யுவராஜ் சம்பத்
April 21, 2026
உனக்கும் எனக்கும்
பானுமதி வெங்கடேஸ்வரன்
April 21, 2026
ஒரு சனிக்கிழமை காலையில்
நிர்மலா ராகவன்
April 21, 2026
