கைக்கடிகாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 18, 2026
பார்வையிட்டோர்: 117 
 
 

கோயம்புத்தூரை நோக்கி அந்த இரயில் புறப்பட்டதும் அந்த ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் இருந்த அந்த 50 வயது பெரியவரை பார்த்துக்கொண்டிருந்தேன் . அவரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றிற்று. காரணம் அவர் கையில் கட்டிக்கொண்டிருந்த வாட்ச்.மிகவும் பழைய கைக்கடிகாரம்.

அவருக்கு அய்ம்பது வயதிருக்கலாம்.தன்னுடைய படுக்கை விரிப்புகளை எடுத்து சரியாக விரித்து போட்டு விட்டு தான் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலை தலைக்கு அருகில் வைத்துக்கொண்டார்.

பார்க்கும் போது நவ நாகரிக மனிதராக ,ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் பெரிய அதிகாரி போல ஒரு தோற்றத்தில் இருந்தார்.அடிக்கடி தன் கைக்கடிகாரத்தை பார்த்துக்கொண்டிருந்தார்.அவருடைய செய்கை புதிதாக இருந்தது. ஆனால் இரயில் புறப்பட்ட பின்னரும் அந்தக் கடிகாரத்தைப்பார்த்தவுடன் எனக்கு புரிந்து விட்டது.

அவருடைய தோற்றத்திற்கும் அவர் கட்டியிருந்த கடிகாரத்துக்கும் பொருத்தமாக இல்லாமலிருந்தது. வந்து அமர்ந்த அரை மணி நேரத்தில் ஒரு அம்பது முறையாவது அந்தக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தார். முதல் முதலில் பார்க்கின்ற பொழுது அவர் ஏன் அந்த கடிகாரத்தின் நேரத்தை அடிக்கடி பார்க்கிறார் .ஒரு வேளை டென்ஷன் பேர் வழியாக இருக்குமோ என நினைத்தேன்.

போகப் போகத்தான் யூகித்தேன். உண்மையில் அவர் நேரத்தை பார்க்கவில்லை. அவர் அந்தக் கடிகாரத்தை ஒட்டி அவருக்குள் ஏதோ மலரும் நினைவுகள் இருக்கலாமென்று எனக்கு பட்டது.

அந்தக் கைக்கடிகாரத்தை யார் கொடுத்திருப்பார்கள். நான் யோசித்துக் கொண்டிருந்தேன். என் கணிப்பும் அவருடைய சொல்லும் பொருந்துதாவென பார்க்க நினைத்தேன்.

இந்தக் கடிகாரம் அவருக்கு ராசியான ஒரு கை கடிகாரமாக இருக்கலாம் அல்லது அவருடைய அப்பா அம்மா வாங்கித் தந்ததாக இருக்கலாம்.மிகவும் ரசித்து அதை மிகவும் பாதுகாப்பாக உணர்வோடு தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த கைக்கடிகாரத்தின் பின்னால் இருக்கிற ஒரு கதையை கேட்க வேண்டும் போல இருந்தது.

அதற்கான தருணங்களுக்காக காத்துக்கொண்டிருந்தேன். டிக்கெட் பரிசோதனை செய்து முடித்தபிறகு தொடங்கலாம் என்று இருந்தேன். அவரை பார்த்தப் பொழுது முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாத ஒரு முகத்தில் இருந்தவர் கடிகாரத்தை தொட்டுப்பார்த்து தனக்குத்தானே சிரித்துக்கொண்டார்.

அந்த சிரிப்பில் தந்தையின் சாயல் இருந்ததுக் கண்டு மௌனமாக சிரித்தேன். பேசிக் கொள்ளவில்லை.

“அம்மாவுக்கு போன் செய்தேன்.அம்மா ட்ரெயின் கிளம்பிடுச்சி.நான் சாப்பிட்டிட்டேன். நீ சாப்பிட்டாச்சா. ஆமாம் வந்துடுவேன் ஒண்ண்னு பிரச்சினையில்லே..நீ ஜாக்கிரதையாக இரு.அப்புறம் அம்மா நான் உனக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினேன். கேட்டீங்களா.”

அம்மாவிடமிருந்து பதில் இல்லை. “அம்மா லைனில் இருக்கீங்களா..”

“ம்ம் இருக்கேன்”

“கேட்டீங்களா”

“ம்ம்ம் கேட்டேன் வா .வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்” என்றாள்.

வழக்கமாக கோபப்படும் அம்மா கோபப்படவில்லை என்பது மகிழ்ச்சியாக இருந்தது. மனதுக்குள் மகிழ்ச்சி அலையாய் பரவியது. அது முகத்தில் எதிரொலித்தது. ஊருக்கு கிளம்பும் முன் அம்மாவுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தாள் யாழிசை.

அந்த வாய்ஸ் மெசேஜை மீண்டும் ஒரு முறை ஹெட்போன் போட்டு கேட்டாள்.

அம்மா நீங்க பிடி கொடுத்து பேச மாட்டேங்கிறீங்க. எப்ப கேட்டாலும் அப்புறம் பதில் சொல்றேனு தப்பிக்கிறீங்க. என் கல்யாணத்துக்கு முந்தி உங்களுக்கொரு நல்ல துணை அமைய வேண்டுமென வேண்டிக்கிறேன்.கடைசி வரை உன் கூட இருக்கனும்னு நினைக்கிறேன். ஆனால் எதிர் காலம் என்னை அப்படி வச்சிருக்குமா தெரியாது. நீ உன் சொந்தக்காலுல நிக்கிற மனுஷி.எனக்காக வாழ்க்கையே ஓடாய் தேய்ச்சுது போதும். இனி உங்களுக்காக வாழ பழகிக்கொள்ளுங்க.என்ன இவ பெரிய மனுஷியா பேசறேனு நினைக்காதீங்க. என் வாழ்க்கைக்கு நீங்க பெரிய மனுஷின்னா உங்க வாழ்க்கைக்கு நான் பெரிய மனுஷிதான்.

நீங்க நெனச்சப்படி ஆசைப்பட்ட படி, நான் ஒரு அரசு உத்தியோகத்துல சேரப்போறேன். ஆர்டர் வந்திடும். இப்ப இருக்கிற இந்த பிரைவேட் கம்பெனி வேலையை நான் ராஜினாமா செஞ்சுடுவேன்.

உனக்கு கிடைச்ச ஒரே வாழ்க்கையை எனக்காக தூக்கி எறிஞ்சிட்டு வந்துட்டே. இனி எனக்காக வாழ்ந்தது போதும். உனக்காக வாழனும். என் அம்மா முதுமை காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கணும்.

உங்களிடம் நான் ஏற்கனவே சொல்லியது போல இப்ப வேலை பார்க்கிற ஆபிஸ்ல ஒருத்தர் இருக்காரு. எனக்கு அவர நல்லாத் தெரியும். அவரப்பத்தி உங்க கிட்ட பல முறை சொல்லியிருக்கேன். அவருக்கு ரெண்டு பெண்குழந்தைங்க .அவருடைய மனைவி யார் கூடவே ஓடிப்போயிட்டாங்க. குழந்தைகளை நல்லா படிக்க வச்சி ஒரு பொண்ணூக்கு கலயாணம் செய்து வச்சிட்டாரும். இனி அடுத்த பொண்ணூக்கு வரன் தேடிக்கிட்டு இருக்காரு. அவரு பொன்ணுக்கு கலயாணம் முடிச்ச கையோட தன்னைப்போல தனியாக இருக்கிற ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையோட தன் வாழ்க்கையும் இணைஞ்சிருக்கணூம் பேசிக்கிட்டு இருப்பாரு.

நீங்க எனக்காக ஒரு முறை நல்லா யோசிச்சுப் பாருங்க. நீ சரின்னு சொன்னா மட்டும் நான் அவர்கிட்ட போய் கேட்கலாம்னு இருக்கேன்.

தயவுசெய்து எனக்காக உன் வாழ்க்கையை பற்றி யோசிங்கம்மா. அவளது குரல் கம்மிற்று. வச்சிடரேன்.

அந்த வாய்ஸ் மெசேஜ் முடிந்தது.

டிக்கெட் பரிசோதகர் வந்தார்.செக்கிங் முடிந்த பிறகு இனி ஏதாவது பேசனும் ஆனால் அவர் கண்ணை மூடி யோசிப்பது போல தோன்றீற்று.

ஒரு சின்ன டிபன் பாக்ஸில் இரண்டாக சுருட்டப்பட்ட சப்பாத்தி முட்டை பொரியல் செய்து ரோல் செய்து எடுத்து வந்திருந்தேன்.

“சார் நீங்க தப்பா நினைக்கலைன்னா சாப்பிடுறிங்களா”

“நீங்க சாப்பிடுங்க எனக்கு பசிக்கல. பசிச்சா பழம் இருக்கு. அப்புறம் சாப்பிட்டுக்குவேன்”

“இரவு பசியோடு படுக்கக்கூடாதுன்னு அம்மா சொல்லுவாங்க .நீங்க ஒரு சப்பாத்தி சாப்பிடுங்க” என்று டிபன் பாக்ஸில் ஒரு மூடியில் வைத்து முட்டைப்பொரியலோடு ஒரு சப்பாத்தியை கொடுத்தாள்.

தன்னிடம் இருந்த ஏலக்கி பழத்தை நான்கு கொடுத்தார். பிறகு அந்த சப்பாத்தியை பெற்றுக் கொண்டார். சாப்பிட்டுப் பார்த்தார்.நன்றாக இருந்தது. இது கடையில் வாங்கியது போலில்லை. வீட்டில் செய்தது.

“உங்க அம்மா நல்லா சமைப்பாங்க போலிருக்கே”

“இது நான் சமைத்தது சார். நன்றி”

“சார் உங்க கிட்டஒண்ணு கேட்கலாமா. அந்த கைக் கடிகாரம் உங்க தோற்றத்திற்கும் உடைக்கும் பொருத்தமாக இல்லையே சார்”

“ஆமாமம்மா, அது இருபத்தைந்து வருடத்துக்கு முந்தி காலேஜ்ல படிச்ச ஒரு நண்பர் கொடுத்தது. வாட்ச் ஓடல, ஆனாலும் இன்னிக்கு சும்மா கட்டியிருக்கேன்”.

“நீங்க யோசிக்கிறத பார்த்தா அந்த நண்பர்..ஒரு பொண்ணா இருக்கனும்னு தோணுது சார். நான் சரியா சொல்ரெனா”

“ம்ம்ம் சரியாத்தான் சொல்றீங்க பெண் குழந்தையில்லையா. டக்குனு பாயிண்டை பிடிச்சிட்டீங்க..”

மீண்டும் அவர் யோசனையில் மூழ்கினார். நான் தொந்திரவு செய்ய விரும்ப வில்லை. அவர் கடந்த காலத்தோடு தொடர்பிலிருக்கும் போது நிகழ்கால கேள்விகள் இடையூறாக இருக்கலாம்.

அவருக்குள் நினைவுகள் அலை பாய்ந்துக்கொண்டிருந்தன. இந்தக் கைகடிகாரம் தன் மனதுக்கு பிடித்தவளுக்காக அவர் வாங்கிக் கொடுத்தது. இருவரும் திருமணம் செய்துக்கொள்ள தயாராக இருந்தார்கள். ஆனால் அவளைச் சந்திக்க இருந்த இரவில் அவளுடைய தோழி செளமியா அவளுக்காக வாங்கி கொடுத்த கைக்கடிகாரத்தை திருப்பி தந்து விட்டாள். கொடுக்கும் போது இனிமேல அவளை தொந்திரவு செய்யாதீர்கள், நாளைக்கு அவளுக்கு அவசரக் கல்யாணம், எல்லாம் உங்களாலே என்றாள்.

இனி எதுவும் செய்ய முடியாது. அந்தக் கைகடிகாரத்தை வாங்கிக் கொண்டு சென்னைக்கு போனவன் அங்கிருந்து கொல்கொத்தாவில் வேலை கிடைத்து அங்கேயே தங்கி விட்டான். அவனுக்காக பேச யாரும் இல்லை.

அவன் ஒரு ஆசிரமத்தில் வளர்ந்தவன். அவன் சாதி மதம் எதுவும் தெரியாது. அவனுடைய உழைப்பால் ஒரு கெமிக்கல் கம்பெனியில் நல்ல உத்தியோகம் அந்தக் கம்பெனியில் மேலாளர் பதவியில் பலகாலம் இருந்தான்.

நல்ல சம்பாத்தியம் .வந்த பணத்தையெல்லாம் தான் வளர்ந்து வந்த தன்னை ஆசிரமத்திற்கு கொஞ்சம் கொடுத்து விட்டு மீதிப்பணத்தை தன் நண்பன் மூலமாக படிக்க வசதியில்லாத குழந்தைகளுக்கு பணம் அனுப்புவான்.

அப்படி அவனுடைய பணத்தில் படித்த ஒரு பெண் தற்போது டெபுட்டி கலெக்டாராகி இருக்கிறாள்.அவள் தன்னை சந்திக்க விரும்புவதாகவும் தன்னிடம் ஆசீர்வாதம் வாங்க நினைப்பதாகவும் சொல்லியிருக்கிறாள்.அந்தக்குழந்தையின் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ளவும் ஆசீர்வதிக்கவும் இந்தப்பயணம் .

இந்தப்பயணத்தில் தன் பழைய காதலியை சினிமாவில் வருவது போல எங்காவது பார்த்து விட மாட்டோமா என ஒரு ஏக்கம் அவன் மனதில் இருப்பதால் இருவருக்கும் பொதுவான அந்த கைக்கடிகாரத்தை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறான்.

அவனுக்குள் ஒரு கேள்வி இருந்தது. தன்னை கல்யாணம் செய்துக்கொள்ளா விட்டாலும் பரவாயில்லை. அந்தக் கைக் கடிகாரத்தையாவது தன் நினைவாக வைத்திருக்கலா மில்லையா. ஏன் அதை திருப்பி த் தந்தாளென்றூ கேட்க நினைத்தான். அதற்கு சந்தர்ப்பம் இருக்குமா தெரியாது.இருப்பினும் நட்பாசை .யாரை விட்டது.

இரயில் மதுரை வந்ததும் முதல் பெட்டியில் ஏறி வந்த தினகரனை கட்டிபிடித்துக் கொண்டு “எப்படிடா இருக்கே” என்றேன். பரஸ்பரம் விசாரிப்புகளுக்குப்பிறகு என்னுடைய சூட்கேஸை எடுத்துக்கொண்டு “இது ஓண்ணுதானே” என்றான்.
“ஆமாம்” என்றேன். “எப்படிடா இருக்கு வாழ்க்கை”.

“வாழ்க்கை நல்லா போய்கிட்டு இருக்கு. நீயும் என்னை மாதிரி ஒரு கல்யாணம் செஞ்சிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும், சரி அதப்பேசி பிரயோசனமில்லை. வா”

“கொஞ்சம் இருடா என் கூட இருந்த பொண்ணூ பாத்ரூம் போயிருக்கா. அவங்க வர வரை அந்தப்பெட்டியை பார்த்துக்கனும் இல்லையா”

அப்போது யாழிசை வந்தாள். “ரொம்ப நன்றி சார்” என்று கைகூப்பினாள். “இதுதான் நீ சொன்ன பொண்ணா”. “ஆமாம்” என்றேன்.

“ஆனால் எங்கேயோ பார்த்த முகமாக இருக்கு”.

“உனக்கு எப்போதும் இப்படித்தான்.வா போகலாம். உன் சப்பாத்திக்கு நன்றி”. சிரித்துக் கொண்டே வெளியேறினார்கள்.

அவள் பொறுமையாக தன் பைகளை எடுத்துக்கொண்டு கிளம்பும் போது அவளுக்கு சட்டென்று ஞாபகம் வந்தது ஒரு முறை தலையனைக்கடியில் மொபைல் போனை வைத்து விட்டு சிறிது தூரம் சென்றதும் மீண்டும் ஓடி வந்து பார்த்த போது அப்போதுதான் ஒவ்வொரு பெட்சீட்டாக மடித்துக்கொண்டே வந்த அந்தக் கம்பார்ட்மெண்டின் அட்டெண்டர் அவளுடைய தலையணைய எடுக்கப்போகும் போது அண்ணா ஒரு நிமிஷம் என்றாள். அந்த தலையணையை எடுத்துப் பார்த்த பொழுது அவளுடைய மொபைல் இருந்தது.

அது போல இன்றைக்கும் தேடினாள். அவள் தலையணைக்கடியில் எதுவும் வைக்கவில்லை. அந்தப் பெரியவரின் தலையைணையை எடுத்துப் பார்த்தாள். அவருடைய பர்ஸ் இருந்தது. படுக்கும் போது சொல்லியிருந்தார். சில சமயத்தில் மறந்து விடுவேன். கொஞ்சம் ஞாபகப்படுத்துங்க என்று.

சரியாக மறந்து விட்டார். அவசரமாக வெளீயே வந்து எட்டிப்பார்த்தாள். அவர் தென்படவில்லை. தன் பைகளை எடுத்துக்கொண்டு ஆட்டோ கார் நிற்கும் இடத்தில் தேடினாள். இல்லை.யாரிடமாவது கொடுக்கலாமென்றால் அவர்கள் கொடுப்பார்களா. சந்தேகம் வர தன் பையில் வைத்துக்கொண்டு ஆட்டோ பிடித்து வீட்டுக்குச் சென்றாள்.

அவள் போன அடுத்த அய்ந்தாவது நிமிடத்தில் அவளுடன் பயணம் செய்த வரும் அவருடைய நண்பரும் வேக வேகமாக ஆட்டோவிலிருந்து இறங்கி ஓடினார்கள். அவர் பயணம் செய்த பெட்டி சுத்தமாக இருந்தது. அட்டெண்டரை கேட்டார்கள். அந்த தலையணையில் எதுவுமில்லையென்று சொன்னார்.

கொஞ்சம் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள். ஆட்டோ ட்ரைவர்கள் சிலரிடம் கேட்டார்கள். “சார் நீங்க சாயந்திரம் எதுக்கும் வந்து பாருங்க. ஒத்தையா வந்து ஆட்டோவில் ஏறினவங்களை நீங்க சொல்ற பொண்ணை கண்டு பிடிச்சிடலாம்” என்றார்கள். கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

“அந்தப்பெண்ணின் பெயரைக்கூட கேட்க மறந்துட்டேன்” என்றார்.

“சரி விடு .அதுதான் ஆட்டோ ட்ரைவர் சொன்னாரில்லே கண்டு பிடிச்சிடலாம். கண்டிப்பாக அந்தக்கைகடிகாரம் உன்னை விட்டுப் போகாது” என்றார் அவருடைய நண்பர்.அந்தக்ககை கடிகாரத்தை அந்தப்பரிசில் வைத்திருந்தார் அவர்.

ஆட்டோவில் வந்து இறங்கியவுடன் காசு கொடுக்கும் போது அந்த ஆட்டோ ட்ரைவரிடம் சொன்னாள் யாழிசை.

“அண்ணா ரயில்வே ஸ்டேஷனில் என்னைத்தேடி யாராவது வந்து கேட்டாங்கன்னா. என் வீட்டுக்கு அவர கூட்டிட்டு வாங்க. என் கூட டிராவல் பண்ணினவர் தன் கைகடிகாரத்தை விட்டுட்டு போய் விட்டார்” என்று அதை காட்டினாள். “அந்தப் பழைய கடிகாரத்தைத் தேடி யாரும்மா வரப்போறார்” என்று கிண்டலாக சொல்லி விட்டு கிளம்பினார்.

“அம்மா” என்று ஆசையோடு வந்து கட்டிக்கொண்டாள். “என்ன பேச்சு ஆட்டோ ட்ரைவரிடம்.”

“ஒன்ணுமில்லேம்மா. என் கூட ட்ரெயின்ல வந்தவர் தன் பர்சை மறந்து விட்டுட்டு போயிட்டார். அந்தப்பர்சுல அவர் பெரிசா மதிக்கிற ஒரு வாட்ச் இருந்தது.எனக்கு கண்டிப்பாக தெரியும். அதைத் தேடி அவர் என் அடையாளம் சொல்லி வந்து விசாரிப்பார். அதுததான் அப்படி விசாரிச்சார்ன கூடிக்கிட்டு வாங்கன்னு சொன்னேன்”

“நீ அங்கேயே வச்சுட்டு வந்திருக்கலாம்ல்லே”

“வந்திருக்கலாம்தான், ஆனால் அது அவர்கிட்டே பத்திரமா சேரும்னு சொல்ல முடியுமா.”

“அவருக்கு அந்த வாட்ச் எவ்வளவு முக்கியம்னு எனக்குத் தெரியும்” என்றாள்.

குளித்து முடித்து விட்டு அம்மாவின் சமையலை சாப்பிட்டாள்.அந்தப்பர்சில் ஏதாவது போன் நெம்பர் இருக்கிறதாவென பார்த்தாள் .நிறைய கார்டுகள் இருந்தன.அவர் பெயர் தெரியாமல் எந்த நெம்பர் அவருடையதென்று தெரியவில்லை.கொஞ்சம் பணமும் அந்த கைக் கடிகாரமும் இருந்தது.

“அம்மா நீங்களும் வாங்க. பாஸ்டரை பார்க்க போகலாம்.அவர் எத்தனை மணிக்கு வரச்சொன்னார்”.

“தெரியலே” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அலை பேசி அடித்தது.

“அம்மா பாஸ்டர்தான் கூப்பிடுறார்”.

“வணக்கம் பாஸ்டர் இப்பத்தான் வந்தேன் .ம்ம் நல்லா இருக்கேன். நீங்க..பரவாயில்ல பாஸ்டர் வரட்டும் நான் ரெடியாயிடுவேன். வாங்க” என்றாள்.

“அம்மா பாஸ்டர் அவங்களை கூட்டிக்கிட்டு நம்ம வீட்டுக்கே வருகிறாராம் அவங்களுக்கு வேறு வேலை இந்தப்பக்கதுல இருக்காம்.உங்களுக்கு ஆட்சேபணை இல்லையானு கேட்டாரு. நான் சரின்னு சொல்லிட்டேன்”.

“இதுல ஆட்சேபணை செய்ய என்ன இருக்கு.உன் படிப்பு செலவை பாஸ்டர்தான் பாத்துக்கிறாரு. அவர் எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்.”

“பாவம் ம்மா அவர் ,தன் பர்ஸ் தொலைச்சிட்டு தேடுவார். அவருக்கு என் முகம்தான் ஞாபகத்துக்கு வரும்”

“இப்போதைக்கு நம்ம வேலையைப்பாரு. அப்புறம் ஊர் வேலையை பார்க்கலாம்.”

இரண்டு மணி நேரம் கழித்து கார் நிற்கும் சத்தம் கேட்டது.யாழிசை வெளியே வந்து பார்த்தாள்.

பாஸ்டர் இறங்கிக்கொண்டிருந்தாள் .அவரோடு ரயிலில் தன்னோடு பயணித்த அந்தப் பர்சை தொலைத்தவரும் வந்தார்.

“வணக்கம் பாஸ்டர்.வாங்க சார் வாங்க உங்க ப்ர்ஸ் என்னிடம்தான் இருக்கு.ஆமாம், உங்களுக்கு எப்படி பாஸ்டரைத் தெரியும்”

“யாழிசை. இவரை உனக்குத் தெரியுமா”

“ஆமாம் பாஸ்டர் இரவு நான் வந்த அதே ரயிலில் இவர் இருந்த கம்பார்ட்மெண்டில் நானும் பயணீத்தேன் அவர் அவருடைய விலை மதிப்பு மிக்க ஒன்றை தவற விட்டு விட்டார். எடுத்து வைத்திருக்கிறேன்.”

“இன்றைக்கு உங்களுக்கு நாள் நல்லா இருக்கு.எல்லாம் கர்த்தரின் செயல்” என்றார். “இனி நீங்க மாலை ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டியதில்லை இளங்கோ” என்றார்.

“பாஸ்டர்..நீங்க போங்க தினகர் வரட்டும் அவன் கூட நான் வரேன்”.

தினகரன் பின்னாடி தன் காரில் வந்தான்.என்னடா வெளீயே நிக்கிற உல்ளே போய் உட்கார வேண்டியதுதானே’’

“அந்தப்பர்ஸ் கிடைச்சிடுச்சுன்னு உன் கிட்ட சொல்றதுக்காகத்தான் காத்திட்டிருக்கேன்”

“எப்படிடா”

“அவங்க வீட்டுக்குத்தான் நாம வந்திருக்கோம்”

“அப்படின்னா அந்தப்பொண்ணூ நீ ஸ்பான்சர் செய்யும் பொண்ணுதான் போல. எல்லாம் நன்மைக்கே”

“சார் என்ன வெளீயிலே நின்னிட்டீங்க. வாருங்கள்” என்றாள் யாழிசை

“இவர் என் நண்பன்”

“அதுதான் ஸ்டேஷனில் பார்த்தேனே” என்றாள்

வந்தவர்களோடு பேசிக்கொண்டிருந்தாள் யாழிசை.

“யாழிசை இவர்தான் உனக்கு ஸ்பான்சர் செய்யும் சார்..கர்த்தர் எனக்கு முன்பே அவர உனக்கு அறிமுகப்படுத்தியிருக்காரு” என்று இளங்கோவை அறிமுகப்படுத்தினார் பாஸ்டர். அவர் காலில் விழுந்து ஆசீர் வாதம் வாங்கினாள். “நன்றாக இரும்மா” என்று வாழ்த்தி தான் கொண்டு வந்த பரிசு பொருளை யாழிசையிடம் கொடுத்தார்.

“சார் இந்தாங்க உங்க பர்ஸ்” என்றாள். வாங்கி திறந்துப் பார்த்தனர் இளங்கோ. அந்தக்கைகடிகாரம் இருந்தது.

அப்போது சமையலறையிலிருந்து வந்த யாழிசை அம்மாவைப்பார்த்ததும் தினகரன் ஆச்சரியப்பட்டான்.

“வாசுகி நீயா..எப்படி இருக்கே.டேய் வாசுகிடா..” ஆச்சரியம் தாளாமல் தன் நண்பன் இளங்கோவிடம் சொன்னான். வாசுகியைப்பார்த்து இருப்பத்தைந்து வருஷமாச்சு. இளங்கோ வாசுகியை பார்த்துக்கொண்டிருந்தார்.

வாசுகி ஆச்சரியத்துடனும் நிதானமாகவும் அதே நேரத்தில் சந்தோஷமாகவும் “தினா நீ எப்படி இருக்கே” இளங்கோவைப்பார்த்து “நீங்க எப்படி இருக்கீங்க..” என்று கேட்டாள் வாசுகி.

“நல்லா இருக்கேன்..நீங்க..”

“ம்ம்ம் காப்பி குடிங்க” என்றாள்.

பாஸ்டர் கேட்டார். “இளங்கோ உங்களுக்கு வாசுகியைத் தெரியுமா.இவங்கதான் யாழிசையின் அம்மா’’

“வாசுகியைத்தெரியும். நாங்க எல்லோரும் காலேஜ்ல ஒண்ணா படிச்சவங்க..ஆனால் இப்பத்தான் யாழிசையின் அம்மா என்று தெரியும்”

நீண்ட பெரு மூச்சு விட்டார் இளங்கோ எத்தனை வருஷமாச்சு வாசுகியைப் பார்த்து. அந்த வீட்டில் ஒவ்வொருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தார்கள்.

பாஸ்டர் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு யாழிசைக்கு ஜெபம் செய்து விட்டு கிளம்பினார்.

தினகரன் பாஸ்டரை அனுப்பி விட்டு வரேன், “நீ பேசிக்கொண்டிரு” என்று சொல்லி விட்டு நாகரீகம் கருதி வெளீயே வந்தான். இளங்கோ வாசுகிக்கு தான் கொண்டு வந்த அந்த கைக்கடிகாரத்தை காட்டினார் இளங்கோ.

அதை வாங்கிக்கொண்ட வாசுகி கேட்டாள்.

“இந்த வாட்ச்சை எப்போவாவது பழுது பார்த்திருக்கீங்களா”

இல்லையென்பது போல தலையாட்டினார். இளங்கோவிடம் அதன் பின் பக்கம் கழட்டச் சொன்னாள். அம்மாவின் செய்கை இளங்கோவுக்கும் யாழிசைக்கும் வியப்பை தந்தது. எதற்கு பின் பக்கத்தை கழட்டச் சொல்கிறாளென்று.

கொஞ்சம் நேரத்துக்குப்பிறகு அதை கழட்டினார் இளங்கோ அந்தக் கைக்கடிகாரத்தில் மிக மெல்லிய தாளில் எழுதப்பட்டுருந்தது. “நான் கர்ப்பமாக இருக்கின்றேன்” என்று. அதை இளங்கோவிடம் காண்பித்தாள்.

இளங்கோ கண் கலங்கினார். யாழிசையைப்பார்த்தார். வாசுகி ஆமாம் என்பது போல தலையசைத்தாள்.

யாழிசைக்கும் புரிந்தது.

கோசின்ரா கோ.ராசேந்திரன் என்ற இயற்பெயர் கொண்டவர் கவிஞர் கோசின்ரா. கடந்த பதினைந்து வருடங்களாக கவிதை எழுதி வருகிறார். இவருடைய அரசியல் கவிதைகள் பிரபலமானவை. சமூக எதார்த்தங்களின் மீது இவருடைய உக்கிரமான பார்வை கவிதைகளாகிறது. "என் கடவுளும் என்னைப் போல கருப்பு" என்பது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. "சமூகத்தில் பிரச்னைகள் எழுகிற போதெல்லாம் என்னுடைய விமர்சனங்கள் கவிதைகளாக வெளிவருகின்றன" என்கிறார். இவருடைய இரண்டாம் தொகுப்பு "பூனையின் கடவுள்" புது எழுத்து வெளியீடு.மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *