கடவுள் ஒரு பாவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 18, 2026
பார்வையிட்டோர்: 100 
 
 

நாளொன்றுக்கு, மூன்று முறை வந்து செல்லும் டவுன் பஸ், கொட்டகுடி வந்து சேர்ந்தது. அந்த ஊரோடு, அதற்கு என்ன முறைப்பாடோ தெரியவில்லை. உறுமியபடி யோசனை செய்த பேருந்து, கிராமத்திற்குள் செல்லாமல், கண்மாய் கரையோடு திரும்பி சென்றது.

‘இறங்கியவர்களுக்காவது மனசாட்சி வேண்டாமா’ அவர்களும் ஒருவருக்கொருவர் டுக்கா போட்டு கொண்டதை போல, வெவ்வேறு திசையில் நடந்தனர். ஒன்றுக்கும் உதவாத ஊரைச் சேர்ந்த, அழகம்மாள், பெருமாத்தை மட்டும் ‘எங்களுகென்ன வந்தது இந்தா பாருங்க எங்க பந்தாவை’ என்பது போல, போட்டி போட்டு தலையை சொறிந்து கொண்டு நின்றனர்.

தலையை சொறிந்து,மூளையை உசுப்பியதில் வழி தெரிந்ததா…? இருந்தாதானே அதை உசுப்ப..! வழி தெரியவில்லை.

பொடுகு படர்ந்த தாலையிலிருந்து, முகத்துக்கு எதிரே புழுத்துபோன அவலாக உதிர்ந்த, அசடுகள்தான் தெரிந்தது.

’சரி..வாடி போவோம்’ என்று, கெக்கொலியிட்டு சிரிப்பதுபோல் விருப்பிளந்து கிடந்த, கள்ளிகுடி கண்மாயில் நடந்தனர்.

வியர்வை திவாலைகள் சொட்ட, மூக்கறுபடுவதற்கு முன்பிருந்த சூர்ப்பனகையாக சென்றவர்களை, “அடியே எங்கேடி போய்ட்டு வாரீக” என்ற குரல் வழிமறித்தது.

உண்ட கடனை கழித்துவிட்டு, கருவேல மரக்கிளைகளை விலக்கியபடி வந்து நின்றnள் குமுதா. அவளிடம் “ஆஸ்பத்திரி போய்ட்டுவாரோம்” என்றனர்.

“கொளந்தை பொறந்திருச்சா..?”

“பொண்ணு பொறந்திருக்கு. அப்புடியே அவுக அப்பாரை உரிச்சுவச்ச மாதிரி, லட்சணகட்டியா கெடக்கா, ஏன்டி போக்கத்தவளே, நீ பாக்க போகலையா…?”

“சரி அது கெடக்கட்டும்” என, எந்த வார்த்தையும் பேசாதவள், உண்ணி கடித்த நாய் உதறுவது போல, வாயுவேகத்தில் நடந்தாள்.

இரண்டு வாரங்களுக்கு பிறகு கைகுழந்தையுடன், இதயராணி அழைத்து வரப்பட்டாள். மூன்றாவதும் பெண்ணாக பிறந்துவிட்டதால், வாசலில் காலை வைக்கவிடாமல், சகோதரிகள் தடுத்தனர்.

‘ஏதோ அவளுக சம்பாதிச்சு, வீட்டை கட்டுன மாதிரி விரட்டுறாளுக’ என்று மனசுக்குள்ளேயே முனகினாள், எதிர் வீட்டிலிருந்த நீலா. ஏனென்றால், கோணல்மாணல்கள் குடியிருந்த வீட்டில்,அவளால் வாயை திறந்து வார்த்தைகளை வெளியேற்ற முடியவில்லை. ‘அட, சண்டாளதனமே’.

களேபரம்… ஊரே கூடியது. கேள்வி பட்ட காளியம்மாள், ரசமாக கொதித்துதான் போனாள்..சம்பவ இடத்திற்கு வந்து, மருமகளை உடனடியாக அழைத்து சென்றாள்.

“பாத்தியா மக்களை பெத்த மகரா சின்னா இந்த அம்மாவுக்குதான் பொருந்தும், மருமகளை தெருவுல நிக்க விடாம, கூட்டிட்டு போய்டுச்சு, இதான் பெரியவீட்டு பொம்பளை” என்று கூடி நின்றவர்கள் மெச்சினர்.

ஊர் போய் சேர்ந்தார்கள்…

பள்ளி பருவத்தில், தாவணியுடன் இருந்தஜெயந்தியும், கொடியரசியும் நாத்தனாருக்கு செவிலியராக மாறி, சேவகம் செய்தனர். பேசுவதற்காகவே பிறந்த,மணிமேகலையின் ஆறுதலான வார்த்தைகளும், நாக்குக்கு ருசியான பேச்சியம்மாளின் சமையலும், பிறந்த வீட்டில் பட்ட அவஸ்தையையும், அவமானத்தையும் மறக்க செய்தது.

அஷ்டலக்ஷ்மியின் அவதாரங்களாக வளர்ந்த, இதய ராணியின் முதலிரண்டு குழந்தைகளும், பள்ளிக்கு சென்றனர்.

மகாலக்ஷ்மி மீது, கலைமகளுக்கு என்ன கோபமோ. ‘சுட்டுப் போட்டா லும் எட்டத்தில்தான் நிற்பேன்’ என்றது படிப்பு.

‘ம்ம்..ஹும். வந்து எட்டி கூட பாக்கலையே’

அதுக்கென்ன.. கூப்புட்டதும் வாரதுக்கு நம்ம சப்பாத்தா , படிப்புன்னா வரும்போதுதான் வரும் என, பேத்திகளுக்கு ஆதரவாக பேசினாள் பாட்டி காளியம்மாள். ஹேஸ்யமான இந்த பதிலால், புறணி பேசிய நாக்குகள் சுளுக்கி கொண்டன.

ஆண்டுகள் கடந்தன. ‘முதல் இரண் டு குழந்தைகளும், பருவமெய்தியபோது, ‘அவர்களின் தகப்பனார் பொதுவாழ்வில் உச்சபட்ச வளர்ச்சியை எட்டினார்.

விசேஷங்களுக்கு செல்பவர்கள் கூடிகூடி பேசினார்கள்(‘அமர்ந்து கொண்டு தான்…நின்றிருந்தால் கும்மியடிப்பது மாதிரி இருந்திருக்கும்’) இரண்டு பெண்களையும் மருமகளாக்கி கொள்வதில், சால் சாப்பு பேச்சும் சவடால் நெளிப்பும் தெரிந்தது (‘இடுப்பு இருந்ததான்னு கேக்குறீங்களா, சே..சே..சதை இருந்தது, அதை வச்சுதன் அவ்வளவு மேனாமினுக்கலும்’)

மூத்தவள் தந்தைவழியிலேயே, மணமுடிக்கப்பட்டாள். உயிர் கொணட சிலை போல, நடமாடிய இரண்டாவது மகளுக்காக, வரன்கள் கதவை தட்டின.

‘எப்படியாவது அவளை வீட்டின் குலமகளாக்க வேண்டும்’ என்று நினைத்தனர். அவர்களை பற்றி, எல்லாம் தெரிந்தவர்களை போல, அருமை பெருமைகளை, பெற்றவர்களின் காதுகளுக்கு போகுமாறு அளந்தனர்.

“பொண்ணுனா பொண்ணில்லே, தங்கமா ஜொலிக்கிறா… ஆனா என்ன, பெரிய வைராக்கியம் புடிச்சவலாம்”.

“அதென்னடி வராக்கியம், நா இதுவரைக்கும் கேள்விபட்டதேயில்லையே”என்றாள் பாப்பா.

“நல்ல வேளையா போச்சு… நமக்கு அதுயிருந்தா வயித்துக்கு என்ன செய்றது. அந்த பொண்ணோட அப்பா, தனி கிராமத்துக்கே சொந்தகாரன், அதனால் கூட அப்டி இருந்திருக்கலாம், தன் தேவைக்காக அப்பா அம்மாகிட்டே கூட, கைநீட்டி பைசா வாங்கமாட்டாளாம்”.

“அதுசரி….பொண்ணோட அப்பா எந்த மாதிரி?”.

அவரும் இந்த பொண்ணு மாதிரி தான். இடிஞ்சு போகயிருந்த பல பேரோட வீட்டுக்கூரை, இவரு செஞ்ச உதவியாலே தப்பிச்சது. ஆனா,பொறந்த வீட்டுக்கும், வளந்த வீட்டுக்கு மட்டும் எதுவுஞ் செஞ்சதே கிடையாது. அப்படியொரு வைராக்கியகாரரு, கேட்டா என்னோட லட்சியம்பாரு”.

“அப்டினா ரொம்ப நல்லதா போச்சு” என்று, படையெடுத்தார்கள். “சிகப்பா இருக்கவங்கெள்ளாம், நல்ல மனுசங்க” என்று உறுதியாக நம்பியவர்கள், இரண்டாவது மகளை, சொந்தத்திலேயே திருமணம் செய்து வைத்தனர்.

ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பெயர் அன்பு தென்வளவன். தகிக்கும் வெப்பமும், தாறுமாறாக வீசும் காற்றும்கூட.

தீண்டாத அளவுக்கு பொத்தி பொத்தி வளர்த்தாள் அம்மாகாரி.இதனால், வாழ்க்கையின் முக்கால் பகுதியை, அம்மாவின் அன்பு மழையிலேயே நனைய வேண்டுமென்பது அவனது ஆசை.

விதியாரை விட்டது. “நல்லவர்கள் வாழக்கூடாது என்ற கெட்ட எண்ணம்,கடவுளுக்கும் இருக்கும் போல”(‘அவரு படைச்ச மனுஷனுக்கு இருக்கும்போது,’அந்த பாவி பய கடவுளுக்கு இருக்காதா என்ன?’) இளம் வயதிலேயே, பெற்ற மகனை நட்டாற்றில் விட்டுவிட்டு மறைந்து போனாள்.

அழுதான்… அரற்றினான்..பெரியம்மாவின் அரவணைப்பில், பிரிவு துயரிலிருந்து சன்னஞ்சன்னமாக விடுபட்டான்…

உமையாள் பாலில் சம்பந்தர் வாழ்ந்தது போல வாழ்கிறான். அவன் நினைத்ததை கேட்கும்முன் பூர்த்தி செய்யும், தாத்தா, அம்மாச்சியால் சந்தோஷம்தான்.இல்லாத அம்மாவை தவிர, அவனுக்கு வேறு எந்த ஆசையுமில்லை.

இதனால் பொழுது அவனை சந்தோசப்படுத்தியதா, அல்லது பொழுதைஅவன் சந்தோஷபடுத்தினானா என்கிற அளவுக்கு மகிழ்ச்சி.

அப்போதுதான், உறவினர் வீடுகளில் “வாய் பத்திரம் கை பத்திரம்” என்ற சொல்வடையை மறந்த சிலபல சிறுக்கிகள், அளந்து கொண்டிருந்த வம்பில், அன்பு வளவனின் சந்தோஷத்திற்கு, தீ வைத்து கொண்டிருந்தனர்.

“எங்க கந்தரவள்ளியை என்ன பாடுபடுத்திருப்பாங்க அவங்க வீட்டுலே.. அந்தப் பாவமெல்லாம் சும்மா விடுமா…அதான் அவுகளுக் கே திரும்பி நடக்குது”

’குடுமியை கொடுத்த ஒருத்தி, இதெல்லாம் தப்பில்லையா’ என்றாள்.

’என்ன தப்பிருக்கு, அவளுக்கு புருஷன் செத்துபோய்ட்டான். அந்த பையனுக்கு பொண்டாட்டி இல்லை. இந்த மாதிரி சமயத்திலே, அவுக ரெண்டுபேரும் லவ் பன்னா என்ன…?

இதனை கேட்டபடி இருந்த சிலர், ‘அவசரத்திலே தாலி கட்டி, ஆத்திரத்துக்கு புள்ளை பெத்தவ, என்னமா வெளையிரா’என்று எழுந்து சென்றனர்.

அம்மாவை இழந்ததென்தென் வளவன், அப்பாவை நம்பியிருந்தான். இதுபோன்ற வதந்திகள், அவனை இமை மூடவிடாமல், இரவை பகலாக்கின. சோர்ந்து போனான்.

மறுநாள் காலை, அரசு வேலை ஒன்றுக்கு பரிந்துரை கடிதம் வாங்க, ஒரு கிராக்கியோடு சாவு கிராக்கியாக வந்தான், சமையல்காரியின் மருமகன்.

வேலை சம்பந்தமாக பேசினான். அவரும் கடிதத்தை கொடுத்து” முடிச்சிடலாம்” என்றார்.

சிறிது நேரத்திற்கு பின், எதிரே உட்கார்ந்த தென்வளவன், முகபாவனையை ஒருமாதிரியாக காட்டினான். பெரியம்மாவு க்கும் அவன் உள்ளத்தில் இருப்பதை உள்வாங்கி கொள்ள முடியவில்லை

“தாத்தாவோட பாணியே தனியா தெரியுதே. நன்மையை செஞ்சு எப்புடி தொல்லையை வாங்கிக்காரு”

அப்போது கிறிஸ்தவ போதகர்கள் சிலர், துண்டுச் சீட்டுகளை நீட்டியபடி, கடவுள் காப்பாற்றுவார் என்றனர் அதை வாங்கிய அன்புவின், நீண்டநாட்களுக்கு பிறகு புன் முறுவல். அரை மணி நேரத்திற்கு மேலாக, மந்தாரமாக இருந்த வானத்திலிருந்து சாரல்மழை.

முற்றத்தில் நின்றபடியே சாரல்மழையை கையில் வாங்கினான் அன்பு, அம்மாவின் ஆனந்த கண்ணீராக நினைத்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *