கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 22, 2026
பார்வையிட்டோர்: 367 
 
 

(1965ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இதழ் 13-15 | இதழ் 16-18 | இதழ் 19-21

ஏடு 3 – காதல் வேட்டை

இதழ் 16 – விருந்துக்குப் பின்

ஆக்டேவ் மூரட் காதலுணர்ச்சிக்கு என்றும் அடிமையாயிருந்ததில்லை. காதலை ஒரு விளையாட்டு வேட்டையாகவும், பெண்டிருலகத்தை ஒரு வேட்டைக் காடாகவுமே அவன் நினைத்து வந்திருந்தான். அவன் தீங்கற்ற அமைந்த நற்குணம், பிறர்க்குதவும் பண்பு, சொல் திறம் ஆகியவை அவனுக்கு மக்கட் குழுவி னிடமே பொதுவாகவும் பெண்டிரிடம் சிறப்பாகவும் மிகுதி செல்வாக்கு அளித்தது. ஆகவே அவன் காதல் வேட்டையை எல்லாரும் கேலி செய்தனரேயன்றி எவ ரும் கண்டித்ததில்லை. அவன் நாடிய எந்தப் பெண் மணியும் அதனை அசட்டையாக உதறித் தள்ளிவிடவும் இல்லை. அவன் காதலை ஒரு சூதற்ற விளையாட்டாகக் கருதினான் என்றால் அவன் நாடிய பெண்டிர் அதைத் தங்கள் அழகுக்கும் பண்புக்கும் உரிய ஒரு சான்று என்றே கொண்டு பெருமை யுற்றனர். அவன் காதல் வேடிக்கைக் காதலாயிருந்ததனால், அதற்கு இரையாகி எந்தப் பெண்ணும் வாழ்விழக்கவோ வருந்தவோ நேர்ந்துவிடவில்லை. 

ஆனால் இன்று வேடன் ஒரு புதுமாதிரி விலங் கின்மேல் காதல் வலையிட வேண்டி வந்தது. விலங்கு அவன் வலையையே மதிக்கவில்லை. அவன் காதலைத் தனக்குரிய பெருமையாக ஏற்கவில்லை. அக் காதல் தத்துவத்தைக் கூட முகத்துக்கு நேரே மறுத்து, அவனை அவமதித்து விட்டது. மாது சிராம்மோனைப் புறக்கணித்து விட்டு அவன் இளவரசன் டிலீஞ்சிடம் சென்றபோது, அவன் உள்ளம்தான் உளைந்தது. அவள் அமைதியைச் சிறிதும் இழந்ததாகத் தோற்ற வில்லை. விருந்தில் மீண்டும் அனைவரும் கூடியிருந்த போதும் அவள் அவனை நாடாமலே இருந்தாள். ஆனால் அவன் கண்கள் அவளை விட்டகல முடியவில்லை. அவளையே அவன் பார்த்துக்கொண்டிருப்பதை ஒன் றிரண்டு தோழர் கவனித்துப் புன்னகை செய்து கொண்டனர். ஆனால் அவன் வேறு எதையுமே கவனிக்க முடியாதவனாகவே இருந்தான். 

விருந்தினரிடையே பேச்சு பழைய ஃபிரஞ்சு நாட்டுப் பண்பாடு, அதன் நகர நாகரிகப் போக்கு, இவற்றுக்கெதிராக ரூசோ ஒருபுறமும் அரசி மறு புறமும் வழக்கில் கொண்டு வந்த நாட்டுப்புற இயற்கை வாழ்வார்வம் ஆகியவற்றின் உயர்வு தாழ்வுகளைப் பற்றி ஊசலாடிற்று. பண்பரசியும் பேச்சுக் கலையில் வல்லவளுமான மாது சிராம்மோன் பேச்சை வேறு பச்கம் திருப்பி மீண்டும் நல்லிணக்க உணர்ச்சியை உண்டு பண்ணினாள். ஆக்டேவ் மூரட் இதனைக் கவனியாமலில்லை. அவள் அழகு, பண்பு ஆகிய வற்றின் உயர்வைக்கண்டு, அவள் செல்வநிலையையும் உயர்குடி மதிப்பையும் எண்ணுந்தோறும் அவன் உள்ளம் உள்ளூர உடைவுற்றது. ஏனெனில் அவன் அவளை எவ்வாற்றானும் பெறமுடியாத நிலையை அவை வற்புறுத்தின. அவள் பாரிஸ் அழகரசி. செல் வத்தில் புரள்பவள். அவன் நாடோடி. அவன் வரு வாய் மிகச் சிறிது. செலவு பெரிது. அவ்வருவாயும் சமய வாழ்வை யெண்ணி அவனுக்குத் தரப்பட்ட செல்வ வருவாயாதலால், மணமாகாத நிலையில் மட்டுமே அவனுக்கு உரியது. லாரைனை மணப்ப தென்றால் அவன் முற்றிலும் ஓட்டாண்டியாகத்தான் மணக்க வேண்டிவரும். மணமில்லாக் காதல், மறை தொடர்பு மட்டும்தான் இந்நிலையில் எண்ணக்கூடியது. ஆனால் மண உறவிலேயே இத்தனை உயர்வு தாழ்வு கடக்க வேண்டியிருக்கிறது. மற்ற உறவு எண்ணு வதற்கும் இடமற்றது. அவன் இப்போது தன் காதல் தத்துவத்தையே மதிக்கவிலலை. என் செய்வது? என் செய்வேன் என்று இடையறா ஏக்கத்திலாழ்ந்தது அவன் உள்ளம். 

காதலை அவன் பழித்த காலமெல்லாம், நகையாடிய காலமெல்லாம், அது அவனை எள்ளி நகையாடும் காலம் வரும் என்று அவன் எண்ணவேயில்லை. 

காதல் என்பது மலருக்கு மலர் தாவுவது என்று தான் அவன் எண்ணியிருந்தான். காதல் என்பது மலருடன் ஒன்றுபட்டு அதன் வாழ்வில் வாழ்ந்து அதன் மாள்வில் மாள்வது போன்றது என்பதை அவன் இப் போதுதான் கண்டான். ஆனால், இவ் எண்ணம் முன்பு வந்திருக்கக் கூடாதா? இளமையின் முற்பகல் கழிந்து- நிலையான காதலற்றவன் என்ற பெயர் படியப்பெற்று- இல்லறம் நாடிப் பொருள் மீத்து வையாது வாடாவாரி யாய்ச் செலவு செய்து கடன்பட்டு-இறுதியில் காதல் வாழ்வையே கனவுகாண முடியாத நிலையை எய்திவிட்டான் அவன். காதலிற் சறுக்கியதும் தன்னையொத்த- தன்னிலும் எளிய இடங்களை விட்டு அரண்மனை வாழ் விலும் கலை வாழ்விலும் உள்ளோர்க்கும் எளிதில் கருத முடியா உயர் கொம்புக் கனியிலா கண்படிய வேண்டும்? இவற்றையெல்லாம் எண்ணிக்கொண்டே விருந்து மாளி கையில் சுழன்றுகொண்டிருந்தது மூரட்டின் உள்ளம். 

அவன் கலையில் கண்ட கனவுக் காதல்கூட இத் தகைய உயரிடம் நாடவில்லை. அவன் மடத் துறவியா யிருக்கும்போது புனை பெயரில் எழுதிய புனைகதை அலைனில். பேரரசன் முல்லை நிலத்து அயர் நங்கை யாகிய அலைனை விரும்பிப்பெற்று மண்ணுலகில் வானுலக இன்பந்துய்க்கிறான். ஆ! லாரைன் மட்டும் ஓர் அலைனா யிருந்தால்! அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போலந்துக்கோ, அல்லது நாகரிக மக்கட் குழுவினுக்கெட்டாத ஸைபிரியாப் பாலைவனத்துக்கோ கொண்டுசென்று, தனியான காதல் உலகொன்றைப் படைத்து வாழ்ந்திருக்கலாமே ! ஆனால், நனவு கனவி லிருந்து எத்தனை தொலை? இளவரசர் அணுகத் தயங் கும் அவள் அழகும் பீடு நடையும் இறுமாந்த அமைதி யும் எங்கே? பேதைமைக் கனவுக் கோட்டைகளெங்கே? அவள் நடமாடும் உலகில் தான் நடமாடுவதே தன் தாயின் உயர்குடிப் பழக்கம், தன் கலை ஆகியவற்றின் பயன்களாயிற்றே ! நல்லெண்ணத்தாலும் பெருந்தன் மையாலும் காணப்பெற்ற இடத்தை உரிமையாகப் பெற எண்ண முடியுமா? 

விருந்து மாளிகையிலிருந்து அவன் உடல் எப் படியோ தள்ளாடித் தள்ளாடிக் கோமகள் மாளிகை யிலுள்ள தன் அறை அடைந்தது. அவன் உள்ளம் விருந்து மாளிகையைச் சுற்றியும் லாரைனின் கறுப் பங்கியைச் சுற்றியுமே வட்டமிட்டது. நெடுநேரம் துயில்கொள்ளாதிருந்து அவன் கண்கள் உறுத்தத் தொடங்கின. அப்போதுதான் அவன் கருத்துத் தான் இருக்குமிடத்தையும் சூழ்நிலையையும் கவனித்தன. 

அறைக் கதவு தாழிடப்படாமலிருந்தது. அதைச் சென்று தாளிட்டான். பலகணி வழியாகக் குளிர்வாடை வீசிற்று. அவ்வாடை மீண்டும் உள்ளத்தைச் சுழல விட்டது. அவன் மடத்தைவிட்டு வந்தபின் திரிந்த நாடுகள், கண்ட காட்சிகள், செய்த போர்கள்; அதில் அவன் பெற்ற விருதுகள் அவன் உள்ளத்தைத் துளைத் தன. இவை எல்லாம் செய்தும் யாது பயன் ? யார் மதித்தென்ன ? மதியாது போயென்ன ? தன்வாழ் வில் இனிக் குறிக்கோளற்றவன், நோக்கமற்றவன் ஆனோமே என்று எண்ணி ஏங்கினான். 

“மீண்டும் லாரைனைக் காண- -அவள் நட்பைப்பெற முயற்சி செய்யலாமா ?” என்று அடிக்கடி கேட்டது அவன் உள்ளத்தினுள் ஒளிந்திருந்த ஆவல். அறிவு விடை தந்தது; ‘அதனாற் பயன் என்ன, பேதை மூரட் ! உனக்கு நாக்குக் கடுநாக்கு. உயர்குடியின ரிடம் பேச-உயர்குடி நங்கையரை வசப்படுத்த-அந் நங்கையரசியைக் கனிவிக்கப் போதிய இனிய நயம் உனக்கு ஏது ? உன் தோற்றம் ! கோமாளிகளில்கூட நீ நல்ல கோமாளியல்லவே! உன் உயர்குடி வாழ்வு- உன் கலை இவை அணுகப் போதும்- வெறுப்பைச் சிறிது மாற்றப் போதும். அதற்குமேல் அவாக் கொள் ளாதே !” அவா பின்னும் கூறிற்று: “கிடைப்பதில்லை என்று தெரிந்துவிட்டால், பின் முயற்சி செய்து பார்ப் பதில் தவறென்ன ? வந்தால் வராது வேறு வருகிறது. வராவிட்டால் அதனால் வரும் புதிய கேடு ஒன்று மில்லையே. ஆகவே போய்ப் பார்.” 

இவ்வூசலாட்டங்களுக்கிடையே அவன் கண்ணடைத்தது. அவன் எப்போது கண்ணயர்ந்தான் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் பலகணி வாயில் வழி கதிரவனொளி அவன் படுக்கைமீது பரவும்வரை அவன் தூங்கிக்கொண்டுதான் இருந்தான். 

இதழ் 17 – கனல் பற்றுகிறது

‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ மின்னாததெல் லாம் மண்ணல்ல !! லாரைனின் அழகு, செல்வம், பண்பு ஆகியவற்றை மூரட் எவ்வளவு உயர்வாக மதித்தாலும் தவறில்லை. உண்மையில் அவை அவன் அவளை அறிய அறிய அவன் பிடிக்கு மேலும் மேலும் எட்டாதவை யாகவே இருந்தன. ஆனால் அவன் தன்னைப்பற்றி எண்ணிய எண்ணங்களும் தன் காதலின் பொருத்த மின்மை பற்றிக்கொண்ட கவலைகளும் உண்மையில் அவ்வளவு மோசமாக இல்லை. அவன் கடன் பட்டிருந் தது உண்மை. அவன் பணப்பற்றும் திறமையுமுள்ள வனல்ல; அவன் போலந்துப் பண்ணையை, அவன் ஆட்கள் மனம்போலவே மேல்பார்க்க விட்டு விட்டிருந் தான். இப்போது அவன் பாரிஸ் வாழ்வு அவற்றின் வருமானத்தை அடகு வைத்து அடகு வைத்து அவற் றின் செல்வாக்கைமுற்றிலும் கெடுத்துவிட்டன. ஆனால் அவன் திறமையுடன் அப்பண்ணையை ஆண்டிருந்தால் கூட அவன் செல்வம் லாரைன் மதிப்புக்குப் பல கல் பின் இடைந்தே இருந்திருக்கமுடியும். அவன் மதிப்புப் பெறுவதானால், பொருள் காரணமாக என்றுமே பெற்றிருக்க முடியாது. அவன் தோற்றமும் அப் படியே. ஆனால், லாரைன் இவற்றைவிடக் கலையில், குணத்தில், அன்புள்ளத்தில்தான் ஈடுபடுபவள் என் பதை அவன் இன்னும் அறியமாட்டான், அவன் புலமை, கவிதை நயம், அவள் கலையுள்ளத்தில் ஏற்கனவே வடு உண்டுபண்ணியுள்ளது என்பதை அவன் கவனிக்கவும் இல்லை. தவிர, அவளை அறியும்தோறும் அவள் உயர் வடைவதுபோலவே, அவனை அறியும் தோறும் அவனும் பிறரால் உயர்வடையத்தக்க பெருமைகள் உடைய வனே. அவன் நாடோடி வாழ்வு முழுவதும் இன்ப வாழ்வாகக் கழிந்த வாழ்வு அன்று. எத்தனை ஏழைக் குடியானவர்கள் குடும்பங்களோ அவன் பெயரைத் தெய்வத்தின் பெயருக்கு அடுத்தபடியில் வைத்துப் பேணிய துண்டு. அவன் காதல் வேட்டைகளும் உண் மையில் உயிர்பலிகொள்ளும் விலங்கு வேட்டைகளல்ல. பிற நாட்டரசரை வென்று அவர் நாடுகளையோ செல் வங்களையோ கொள்ள எண்ணாமல், புகழ் அறுவடை மட்டும் நாடிய பண்டைய அரசர்போல, அவன் தன் இன்பப் பொழுது போக்கு மட்டும் நாடி, வண்டுகள் போல் மலருக்கு மலர் தாவினான். மலர்கள் அதனால் கேடுறவில்லை-பயன்பெற்றன என்பதை வண்டு கவ னிக்காவிடினும், அது வண்டின் பண்பை உயர்த்துவ தாகவே இருந்தது. அவன் செய்த போர்களும் பிழைப்பு-செல்வம்-ஆட்சி உரிமை நாடிய போர்களல்ல. காதல் விளையாட்டைப்போல அதுவும் அவனுக்கு ஒரு வீர விளையாட்டாகத்தானிருந்தது. ஆனால், காதல் விளையாட்டில் உள்ளூர இருந்த உள்ளக்கனிவுபோலவே. இங்கும் அவனிடம் இயற்கையாக ஒரு உள்ளார்வம் இருந்து செயலாற்றிற்று. எந்தப் போரிலும் அவன் ஆதிக்கக்காரர் பக்கம் நின்று போரிடவில்லை. கவிஞன் பைரனைப்போல, அடிமைப்பட்ட மக்களுக்காகவே அவன் போராடினான். ஆகவே, அவன் போர் வீரம் காரணமாகப் பெற்ற பதக்கங்கள், அவன் போர் வீரத் துக்கு மட்டும் சின்னங்களாயமையவில்லை. அவன் விடுதலை யார்வத்துக்கும் சின்னங்களாயமைந்தன. மேலும் அவன் போர்ச் செயல்கள் குருதி கொப்புளிக் கும் செயல்களோ கொடுமை நிறைந்த செயல்களோ ஆக அமையவில்லை. தன் நேச நாட்டினராயினும் சரி, எதிரி நாட்டினராயினும் சரி; போர் வீரர் அல்லாத இடத்தில் அவன் தாக்கியதில்லை. போர் செய்யாத போதும் தாக்கியதில்லை. அடைக்கலம் புகுந்தவரை அவன் கைவிட்டது கிடையாது. பெண்டிர், குழந்தை கள் ஒரு தமையனிடம் ஒரு மாமனிடம் அகப்பட்டால் எப்படி நடத்தப் பெறுவரோ அப்படித்தான் நடத்தப் பட்டனர். போரின் குழப்பத்தைப்’ பயன்படுத்தி மாதரை அவன் துன்புறுத்தியதோ உள்ளங் கலங்கச் செய்ததோ அரிது. 

இத்தனையும் லாரைனுக்கு அவனைக் காணும் சமயத் தில் தெரியாது. ஆனால், அவனைக் கண்டது முதல் அவள் தப்பெண்ணங்கள் குறையாமலிருக்க முடியாது. நல்லெண்ணம் பெருகாமலிக்க முடியாது. காதலுக்கென,  அன்புக்கென, நட்புக்கெனப் பண்பட்டிருந்த அவள் கலையுள்ளம் முன் ஒரு கணவனிடம் மட்டுமே நட்புப் பெற்றது. குழந்தைகளிடம் மட்டுமே அன்புக்கு ஒரு புகலிடம் கண்டது. ஆனால், காதலுக்குரிய அவள் உள்ளத்தின் ஏழைமை நரம்புகளும் அதற்குரியார் கை விரல் படக் காத்துக்கொண்டுதானிருந்தன. அவள் இளமை அகன்றுவிடவில்லை. ஆனால், அத்தகைய விரல்கள் வராவிட்டால், அவை அவளையும் அறியாமல், என்றும் காத்துக்கொண்டுதான் இருந்திருக்கும். 

காலையில் மூரட் எழுந்ததும், பகலொளி அவன் தயக்கங்களை மட்டுமன்றி அதன் நம்பிக்கையையே சிதறடித்து விட்டது போன்றிருந்தது. அவன் அறை யின் அலங்கோலம் அவன் உள்ளத்தைத் தைத்தது. “ஒருவேளை எப்படியோ அவள் இசைந்தால்கூட, நம்மை அறிந்த நண்பர்களெல்லாம் நாளை தலை யசைத்துக் கிண்டல் செய்வார்களே; கடனைத் தீர்க்க நல்ல வழி கண்டுபிடித்தானப்பா என்று. அதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியுமா? காதலினும் மானம் பெரிது. இவ்வுணர்ச்சியைப் பிஞ்சிலேயே கொய் தெறிய வேண்டுமென்று அவன் உறுதி செய்துகொண்டிருந்தான். 

அச்சமயம் இரவில் விருந்திடையே அவனைச் சந்தித்த இளவரசன் டிலிஞ் அவ்விடம் வந்தார். கவிஞன் கலை நங்கையிடம் ஈடுபட்டதை அவன் விருந் திலேயே கண்டு கேலி செய்தவர். ஆகவே, “லாரை னைக் காணவே புறப்பட்டேன். அவளிடம் பேசும் போது உங்கள் பக்கத்துணையும் இருந்தால் நலம் என்று எண்ணி அழைத்துப் போகவே வந்தேன்” என்று அவர் கூறியதும் மூரட் அவர் கேலி செய்வதாகவே எண்ணி னான். “நான் அப்பக்கம் திரும்புவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்” என்று மனச்சலிப்புடன் கூறினான். 

டிலீஞ், “நண்பரே! உன் மனநிலையை நான் நன்கறிவேன். ஆனால், நீர் அதுபற்றி இத்தனை கவலை கொள்ள வேண்டியதில்லை. எட்டாக் கனி மீதுள்ள ஆவல் என்றும் நிறைவேறாத ஆவலாகவே இருப்பதில் கேடில்லையல்லவா? அதை அடக்கப் பார்ப்பதனால் அது வளரும். கண்டு மகிழும் நிலையில் அதனை அமைத்து வைப்பதே சரியான வழி. காதற் கலைஞராகிய உங்க ளுக்கு நான் இதற்குமேல் சொல்ல வேண்டியதில்லை. வாருங்கள் போகலாம்” என்று அழைத்துச் சென்றார். 

மாது சிராம்மோனின் மாளிகை அரண்மனைக்கும் நாட்டுப்புறக் குடிலுக்கும் இடைப்பட்ட நிலையில் பண் பும் எளிமையும் கலந்த ஒரு விருந்தாயிருந்தது. காலத் துக்கொத்த புதிய மாதிரி கட்டட அமைப்பு, பொருள் -கள், படிவங்களுடன், பழமையின் அமைதியும் அதில் குடிகொண்டிருந்தது. இயற்கையின் பத்திலீடுபட்ட அவள் கலைச் சுவை ஒவ்வொரு சிங்காரப் பொருளிலும் நிலைக் கண்ணாடி, படங்கள், மணப் பொருள்கள், சாயப் பொருள்கள் யாவற்றிலும் காணப்பட்டன. ஆனால், உடலழகையும் சிறுமைப்பட்ட இன்பத்திலும் முழுதும் ஈடுபட்டவர்களின் போலிப்பகட்டு அதில் இடம் பெற வில்லை. அதன் அழகு முற்றிலும் தாய்மையின் அழகை நினைவூட்டும் தன்மையுடையதாயிருந்தது. 

பணியாள் சார்லட் அவர்களை வரவேற்றான். தலைவி குளித்துக்கொண்டிருப்பதாகவும், விரைவில் வந்துவிடு வாள் என்றும் கூறி அவன் அவர்களை முன்கட்டில் அமரும்படி கூறினான். இருவரும் சிறிது நேரம் அமர்ந் திருந்தனர். டிலீஞ் மாளிகையைச் சென்று சுற்றிப் பார்வையிடலாமே என்றழைத்தார். மூரட் “நான் இன்னொரு தடவை பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் சென்று பார்த்து வாருங்கள்” என்று சொல்லிவிட்டு அங்கேயே அமர்ந்திருந்தான். தலைவியே அதனை வந்து காட்டும்போது பார்த்துவிடும் வாய்ப்பு இருக்கட்டும் என்று அவன் உள்ளம் உள்ளூரக் கூறியிருக்க வேண்டும். அத்துடன் பணியாட்களுக்குரிய பண்புடன் சார்லட் தன் தலைவியின் குணச் சிறப்புக்கள் பற்றி அளக்கத் தொடங்கினான். தன் உள்ளத்தை ஆட் கொண்ட மாதினைப் பற்றிய இவ்வெதிர்பாராப் புகழ்க் காவியத்தில் அவன் தங்குதடையின்றி ஈடுபட்டான். தன் காவிய வர்ணனைக்கு இத்தனை மதிப்புக் கொடுத்த விருந்தினன்மீது பணியாளுக்கும் தன்னையறியாத பாசம் ஏற்பட்டது. 

லாரைன் உடல் இப்போது முன்னைய நாள் இரவி னும் மிகுதி வாட்டமுற்றிருந்தது. இது விருந்தின் களைப்பு மேலீட்டினால் ஏற்பட்டிருக்கக்கூடும் என மூரட் தனக்குள் விளக்கங் கூறிக்கொண்டான். அவள் வரும்போதே அவள் குச்சுநாய்கள் அவளை எதிர்கொண் டழைத்தன. கூண்டிலிருந்த பூவைகள் ‘வருக’ ‘வருக’ என்று குலவின. அவள் மூரட்டை வரவேற்றவண்ணம் நாய்களைக் கையிலெடுத்துக்கொண்டு பூவைகளை நோக்கிப் புன்முறுவல் செய்தாள். 

“வாருங்கள், கவிதையஞ் செல்வரே ! விருந்து கழிந்தபின் நண்பருடன் உரையாடாமலிருக்க முடிவ தில்லை. நீங்கள் வந்தது நல்லதாய்ப் போயிற்று. இல்லையானால் நான்தான் உங்களைப் போன்ற நண்பர் களைத் தேடிப்புறப்பட வேண்டும்” என்றாள் அவள். 

“எத்தனை இயற்கையான வரவேற்பு ?” என்று அவனால் எண்ணாமலிருக்க முடியவில்லை. 

இதற்குள் டிலீஞ் அவர்களும் வந்துவிட்டார். சிறிது அவர்கள் பேசிக்கொண்டிருந்த பின் லாரைன், “இங்கிருப்பதைவிட என் கலைக்கூடத்தில் வந்திருந் தால், இன்னும் அமைதியாக உரையாடலாம். அத்துடன் என் புத்தம் புதிய படைப்புக்களை நானும் உங் களுக்குக் காட்ட வேண்டாமா?” என்றாள், 

லாரைனின் புதிய படைப்பு அவள் பிள்ளைகள் இரு வரையும் தீட்டி அவள் வரைந்துகொண்டிருந்த படமே. அவள் அருமைக் குச்சு நாய் அருகில் வால்குழைத்து நின்றது. படத்தின் கடைசித் திட்டம் முடியும் தறு வாயில்தான் இருந்தது. அவள் புதிய படைப்பு என்று கூறியபோது மூரட் அவள் மொழி பெயர்ப்பைத்தான் எண்ணியிருந்தான். ஓவியக் கலைஞனை இங்கே காண்போம் என்று எண்ணவில்லை. கலைஞருக்குரிய பொறாமை சிறிது அவன் உள்ளத்தில் தலைகாட்டி மறைந்தது. “அம்மணி, தாங்கள் வெறும் கலைஞராகப் பிறக்காதது நன்றாயிற்று. எழுத்துக் கலை அரசு, ஓவியக் கலையரசு ஆகிய இரண்டரசுகளையும் பிடித்துக் கொண்டு தாங்கள் கலைத் தொழிலாளருக்குத் தலையிடி உண்டாக்கிவிடுவீர்கள்” என்றான். 

தற்புகழ்ச்சியை எளிதில் விரும்பாத லாரைன்கூட புன்முறுவல் பூத்தாள். தன் மகிழ்ச்சியை ஓரளவு மறைத்துக்கொண்டு, “கவிஞனாயிருந்து கொண்டு போர் வீரர்களுக்குரிய பதக்கங்களையும் பெறும் தங் களைவிட நான் அவ்வளவு பெருங்குற்றவாளி ஆக மாட்டேன்” என்றாள். 

டிலீஞ் ஓவியத்தில் அக்கரையுடையவர். அவர் படங்களைப் பாராட்டியதுடன், “நீங்கள் எதையும் தொடங்குவதும் அப்படியே விட்டுவிட்டுப் புதுமுயற்சி யில் ஈடுபடுவதும் வழக்கமாயிற்றே. இதையும் அப்படி விட்டுவிடாதீர்கள்” என்றார். 

லாரைன், “இதோ உங்கள் முன்னிலையில் இப்போதே முடித்துவிடுகிறேன். உங்களைப்போல் ஊக்குபவர் இல்லாததனால்தான் நான் பாதியில் விட்டு வைத்து விடுகிறேன்” என்று கூறி, வண்ணப் பெட்டி யும் தூரிகையும் எடுத்து வேலை தொடங்கினாள். டிலீஞ் அதனையே உற்று நோக்கியிருந்தார். 

மூரட் இச்சமயத்தை அவள் நூல் அடுக்குகளைப் பார்ப்பதில் செலவிட்டான். அவற்றுட் பெரும்பகுதி அவள் வாசிக்கும் ஃபிரஞ்சு, ஆங்கில, இலத்தீனக் கவிதைகள். ஒரு சில அவள் மொழி பெயர்ப்புக் கை யெழுத்துக் கட்டுகள், புது நூல்கள் ஒரு சிலவே இருந் தன. ஆனால், அதில் தனது புனைகதை ‘கோலகொண்டா அரசி அலைனும்’ இருக்கக் கண்டான். ஆசிரியனின் உடைமையார்வத்துடன் அவன் அதை எடுத்து நோக் கினான். அதன் முதற்பக்கத்திலேயே “என் மனத்துக் குப் பிடித்த புனைகதை-லாரைன்” என்று எழுதப்பட் டிருந்தது. தன்னைப்பற்றி அவன்கொண்ட அவநம்பிக் கையின் ஒரு கூறு அவனை விட்டகன்றது. 

இதற்குள் படம் முடிவடைந்துவிட்டது. அதனை அருகிலுள்ள நிலை மேடையில் வைத்துவிட்டுத் திருப் பிய லாரைன் அவன் கையிலுள்ள புத்தகத்தை நோக்கி “என் உள்ளத்தின் மறைதிற வொன்றை என்னைக் கேளாமல் எடுத்துத் திறந்துவிட்டீர்களே” என்றாள். 

மூரட் இதுகேட்டு முதலில் திடுக்கிட்டுவிட்டான். ஆனால், அவள் முகப்பார்வையிலிருந்து தான்கொண்ட பொருளில் அவள் பேசியிருக்க முடியாது என் உணர்ந்துகொண்டான். அவள் குறிப்பறிய எண்ணி, “தங்கள் மறைதிறவு என்ன, அதை நான் அறியலாமா?” என்றான். 

லாரைன், “அதுதான் உங்கள் கண்முன் இருக் கிறதே. ‘என் மனத்துக்குப் பிடித்த புனைகதை” என்று அதில் எழுதியிருக்கிறேன். அவ்வாசிரியர் இயற்கை யின் வாழ்வில் முற்றிலும் ஒன்றுபட்டுள்ளார். நானும் அதுபோலவே ஈடுபட்டுள்ளேன். இந்நூலாசிரியர் என் உள்ளத்தைக் கொள்ளைகொண்டதுபோல வேறு எவரும் கொண்டது கிடையாது. கொள்ளப்போவதில்லை. 

மூரட் கலையுள்ளமும் அதனை விஞ்சிக் காதலுள்ள மும் இன்ப உணர்ச்சியினால் துடிப்புற்றது. “அம்மணி அதை எழுதியது யார் என்பதைத் தாங்கள் அறிந்து கூறுகிறீர்கள் என்றே நினைக்கிறேன்” என்றான். 

லாரைன், “அவர் உள்ளத்தை அறிகிறேன். ஆனால், அவர் யார், பெயரென்ன என்பதை அறியேன். அறிந் தால் கட்டாயமாக அவர் நட்பை நான் விரும்புவேன். நீங்கள் அறிவீர்களா ?” 

மூரட்டினால் சிரிக்காமலிருக்க முடியவில்லை. 

அவளுக்கு உண்மையினைப் பற்றிய ஐயம் சிறிதே நிழலாடிற்று. 

“அதை எழுதியது ஒருவேளை நீங்களாயிருக் குமோ ?” 

“தங்கள் உள்ளத்தின் ஏற்பை உணர்ந்தபின் நான் என்று மகிழ்ச்சியுடன் சற்றுப் பெருமையுடனும் ஏற்றுக் கொள்கிறேன். நான் மடத்தின் துறவியாகப் பயிற்சி பெறும் நிலையில் எழுதியதால் புனைபெயருடன் வெளி யிட்டேன். ஆனால், அப்படியும் அது நான் என்பது பலருக்கும் தெரிந்துவிட்டது. வால்த்தேர்கூட அந் நூலைப் பாராட்டினாராம். ஆனால், இப்பாராட்டுக்களின் விளைவு விசித்திரமானது. பாரிஸ் அரண்மனை வாயில் எனக்கு அடைக்கப்பட்டது அதனாலேதான்.” 

லாரைன் கையிலிருந்த தூரிகை சட்டென கீழே விழுந்தது. அவள் எதிர்பாராத தின்பண்டம் பெற்ற குழந்தைபோலக் கைகளைக்கொட்டி ‘ஆ, அலைனின் ஆசிரியர் நட்பை நான் ஏற்கெனவே பெற்றுவிட்ட தற்காக மகிழ்ச்சி. ஆயினும் முதலில் மூரட்டாகவே தங்களை வரவேற்கிறேன். அலைனின் ஆசிரியராக மீண்டும் ஒருமுறை உங்களை மனமார வரவேற்கிறேன். தங்கள் கலைஒளி அடிக்கடி என் சிறு குடிலில் வந்து ஒளியூட்ட வேண்டும் என்பது என் மனமார்ந்த விருப் பம். இங்கே நீங்கள் விருந்தினராக வருவதாக எண்ண வேண்டாம் ! இதை இனி தங்கள் இல்லமாகப் பாவிக்க” என்றாள். 

காணும் மகிழ்ச்சி மட்டுமே யேற்று அத்துடன் ஆர்வத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற டிலீஞின் பரிந்துரை ஏற்றுவந்த மூரட் காணும்மகிழ்ச்சி கடந்து நெருங்கிய நட்புரிமையே பெற்றுவிட்டதுபற்றி அகமகிழ்வு கொண்டான். நன்கு தொடங்கியது நன்கு முடிவுற இனி வழியுண்டு என்ற நம்பிக்கை பிறந்தது. 

அவன் உள்ளத்தின் சோர்வு அகன்றது. அதே சமயம் லாரைன் உள்ளத்தில் அவளறியாது மறைந்து லாவிய உருவிலாக் காதல் நட்புருவில் கருக்கொளத் தொடங்கிற்று. அவள் இன்னும் உளமார்ந்த நட்பிலீடு படுவதாகவே எண்ணினாலும், ஒரு நாளிலேயே நட் பெல்லையைத் தாண்டி அவ்வுணர்ச்சி தன் இயல்பைச் செயற்படுத்திக் காட்டிற்று. 

டிலீஞ் மாளிகையை விட்டகலும்போது வழியில் மூரட்டின் முதல் வெற்றிபற்றிப் பாராட்டுச் செலுத்தினார். 

இதழ் 18 – உள்ளங்களின் இணைப்பு

அரண்மனை யரசரும் மாளிகை மன்னரும் குடிசை யிளவரசிகளை நாடி மணம் பெற்றதாகத்தான் கலைஞ ரும் கவிஞரும் கனவு காண்பது வழக்கம். மூரட்டே அலைனில் அத்தகைய காதற் கனவைத்தான் தீட்டி யிருந்தான். ஆனால், அலைன் ஆசிரியர் வாழ்வில் புகுந்த காதல் இதற்கு நேர்மாறாயிருந்தது. இங்கே குடிசையரசன்,  நாடோடி மாளிகை மங்கையை நாடினான். இப்புதிய காதலின் இன்பமும் புதிதாகவே இருந்தது. 

அலைனை எழுதியபோது மூரட் மடத் துறவியாகப் பயிற்சிபெற்று வந்தான் என்ற குறிப்பு லாரைனுக்கு அவன் வாழ்க்கைப் புதிர்களில் ஆர்வம் தூண்டிற்று. அவன் மடத்துறவு வாழ்க்கை, அதில் அவன் ஈடுபடு வதற்கான காரணம், துறவிகள் பற்றிய அவன் கருத் துக்கள் ஆகியவற்றிலிருந்து தொடங்கி அவன் தாய், அவள் காதற் கலைவாழ்வு, மன்னன் ஸ்டானிஸ் லாஸுடன் அவள் நட்பு; வழியிடை அவள் தன்னைப் பெற்றெடுத்த புதுமை வரலாறு ஆகிய யாவற்றையும் லாரைன் அவனிடமிருந்து சிறுகச் சிறுகக் கேட்டு, அவன் வாழ்வில் எல்லையற்ற ஆர்வங்கொண்டாள். குடிசைகளில் அவன் திரிந்து அங்கே அடைந்த இனிய அனுபவங்கள், பிற்பட்ட நாடுகளில் அவன் திரிந்து மக்களுக்கு ஊட்டிவந்த விடுதலை ஆர்வம், அவ்விடு தலைப் போர்களில் அவன் ஈடுபட்டு ஆற்றிய செயல்கள் நிகழ்ச்சிகள் ஆகியவை அவளுக்குத் தன் வாழ்க்கை யின் நிறைவேறாக் கனவுப் பகுதிகள்போல் இன்பமும் பொறாமையும் தந்தன. அவள் மூரட்டின் புறத்தோற் றத்தை மறந்தாள். அவன் எளிமையை மறந்தாள். அவனிடம் அவள் கொண்ட மதிப்பு நட்பினைத் தாண் டிற்று. அவள் பற்றும் பாசமும் மற்ற எல்லா உறவு களையும் தாண்டிற்று. 

குடும்பத் தலைவரின் மனப்போக்கை முதன்முதல் குறிப்பாய் அறிபவர்கள் பணியாட்களே. சார்லட்டுக் குத் தலைவியிடம் பற்றும் அச்சமும் உண்டு. அதே சமயம் எவருடனும் அவள் நெருங்கிப் பழக அவள் இடம் கொடுப்பதில்லை. எவருடனும் அவள் உரை யாடும்போதும் அவள் சமயமறிந்து இடைமறிப்பது வழக்கம். ஆனால், தலைவி மூரட்டுடன் உரையாடும் போது அவள் அடிக்கடி அப்பாற் சென்று அவர்களைத் தனியே உரையாடலில் தம்மை மறக்கும்படி விட்டு விடுவாள். காதலென்னும் இன்பப் படுகரில் படிப்படி யாகச் சறுக்கி அமிழ்ந்துவந்த காதலரும் இதனை இயல் பென ஏற்றமைந்தனர். 

குழந்தைகள் அடிலியும் அகஸ்டியும் முதன்முதலில் மூரட்டைக் கண்டு விலகி நின்றன. முதன் முதலில் அவனிடம் அச்சம்விட்டுத் தாவியது அடிலியே… ஆக்டேவ் மூரட் அவளை ஒன்றும் விழுங்கிவிடாதது கண்டு அகஸ்டியும் பக்கத்தில் வந்து விளையாடத் தொடங்கினான். குறும்புமிக்க இரு சிறுவரும் தாயிடம் பற்றுதலைவிட அச்சமேமிகுதி உடையவராயிருந்தனர். அத்துடன் அடிக்கடி அவள் வாசிப்பு, கலை, கவிதை யினால் அவர்களுடன் அவள் முழு நேரம் கழிக்கவோ, அவர்களைக் கவனிக்கவோ முடியவில்லை. பணியாட் களே அவர்களை மிகுதி கவனிக்க வேண்டியதா யிருந்தது. 

மூரட் அவர்களுக்கே தன் முதலிடம் தந்து அவர் கள் வேறு துறையில் ஈடுபட்டிருக்கும்போதே தன் வேலைகளில் கவனம் செலுத்தினான். அத்துடன் பிள்ளை களைப் புதுவிளையாடல்களில் ஈடுபடுத்தவும், அவர் களைத் தோட்ட வேலை, பயனுடை விளையாட்டுத் தொண்டுகள், பணியாட்களுக்கு உதவி செய்தல் ஆகிய வற்றில் அவன் சிறிதுசிறிதாகப் பயிற்றினான். அதனால் அவர்கள் பயிற்சியில் அவன் தாய்க்கு ஏந்தலாகவும் தாயினும் திறமையுடையவனாகவும் இருந்தான். தன் வாழ்வில் கவலையற்றிருந்த அவன் தன்னிலும் தன் பண்ணை வாழ்வில் லாரைன் அசட்டையா யிருந்ததைக் கவனித்து மெல்ல மெல்ல அவள் கவனிக்காத துறை களில் கவனம் செலுத்தினான். 

அவன் வீட்டாட்சி, குடும்ப ஆட்சி, பண்ணையாட்சி ஆகிய யாவும் ஒரு சில நாட்களில் புதுவாழ்வாக மாறின. யாரையும் அதட்டாமலே தன்வயப்படுத்தி ஆட்கொள்ளும் அவன் இயல்பு லாரைனின் புறக்கணிப் பாட்சியைத் திறமை வாய்ந்த அன்பாட்சியாக மாற்றிற்று. 

பிள்ளைகள் லாரைனை நேரடியாகத் தொந்தரவு செய்யாதவாறு தான் அவ்விருவரையும் வைத்து விளை யாட்டுக் காட்டிக்கொண்டே லாரைனுடன் உரையாடி அவளை மகிழ்விக்கும் கலையில் மூரட் தேர்ச்சி காட்டி னான். பணியாட்கள்கூட இதனால் அவனை ஒரு நொடி காணாவிட்டால், அவனையே நாடுபவராயினர். லாரைனி டம் அவன் தன் காதலைத் தெரிவிக்கவேயில்லை. அவள் தன் காதலில் ஈடுபடுவதை அவன் விரைவு படுத்தவு மில்லை. ஆனால், அதற்குள் அம்மாளிகை முழுவதை யுமே அவன் தன் காதற் கோயிலாக மாற்றிவிட்டான். 

அம்மாளிகையின் ஒவ்வொரு பகுதியும் காட்சியும் லாரைன் உள்ளத்தை மூரட் உள்ளத்துடன் ஒன்று படுத்த உதவின. ஒவ்வொரு மலரின் மணத்தையும் அவர்கள் இருவரும் ஒருங்கே நுகர்ந்தனர். ஒவ்வொரு மாலை வானழகிலும் அவர்கள் இருவரும் ஒருங்கே ஈடுபட்டுத் தம்மைக் கடந்து ஒரே இன்பவாரியில் திளைத்தனர். இருவரும் சேர்ந்து கட்டிய மனக்கோட் டைகள் எத்தனையோ ? சில சமயம் அடிலியும் சில சமயம் அகஸ்டியும் அம்மனக்கோட்டைகளின் புறச் சின்னங்கள் போல அவர்கள் இருவர் கைகளையும்பற்றி இடையே உலவுவர். அல்லது ஒருவர் மடியிலிருந்து ஒருவர் மடிக்குத் தாவுவர். 

 இத்தனைக் கிடையிலும் அவர்களிடையே காதல் என்ற சொல் ஒலிக்கப்படவே யில்லை; நட்பின் எல்லை கடந்து ஒரு சொல், ஒரு குறிப்புக்கூட நிகழவேயில்லை. லாரைன் இன்னும் கைமைச் சின்னமான கறுப்புடை யிலேயே இருந்தாள். 

ஆனால் உடை கறுப்பு உடையாயிருந்தாலும் அதிலும் தோற்ற நடை உடை யணிகளிலும் அவள் முன்னிலும் இப்போது மிகுதி கருத்துச் செலுத்தி யிருந்தாள். அவள் காதல் ஏற்படுத்திய மாறுபாடு இது மட்டுமே. 

நட்பின் முயற்சியான அவர்கள் காதலில் ஒளிப் யில்லை-நாணமில்லை உலகத்தைப்பற்றிய சிந்தனை யில்லை. அதே சமயம் உடல் சார்ந்தெழும் சிறுமைக் காதலின் தன்னலம், பரபரப்பு, சிறு பொறாமைப் பொச்சரிப்புக்கள் ஆகிய எவையும் அதன் அமைந்த போக்கில் இடையீடாகவில்லை. தத்தம் குழந்தைப் பருவம், குடும்பச் சூழல்கள், உறவினர், நண்பர்பற்றிய செய்திகள் எதுவும் அவர்கள் பேச்சுக்களிடையே தங்கு தடங்கலின்றிப் பேசிக் கொள்ளப்பட்டன. இறந்த காலத்தில் உலவி, நிகழ்காலம் அளாவி, எதிர்காலத் தைப் பற்றிய எண்ணமற்றதாயிருந்தது அவர்கள் ஊடாட்டம். 

லாரைன் அலைனின் ஒவ்வொரு வரியையும் ஒரு நூறு தடவை படித்திருந்தாள். எல்லாரிடமும் அவள் அதனை மேற்கோள் காட்டுவது வழக்கம். அலைன் ஆசிரியரிடம் அதனை மேற்கோள் காட்டுவதில் அவளுக் குச் சிறிது நாணம் இருந்தது. ஆகவே, அவள் “அலைனின் ஆசிரியரைக் காண முடியுமா? கண்டால் எவ்வளவு நற்பேறு என்றுதான் நான் முன்பெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தேன். கண்ட பிற்பாடுகூட முதலில் இது ஓர் அரிய வாய்ப்பாயிற்று என்றுதான் எண்ணினேன். ஆனால், இப்போது எண்ணுகிறேன்- அலைன் ஆசிரியர் நீங்கள் என்று தெரிந்திருந்தால் நான் தங்கள் நட்பை விரும்பியிருக்க மாட்டேன்” என்றாள். 

மூரட்: ஏன் அப்படி? 

லாரைன்: நான் என் அலைனிலிருந்து மேற்கோள் காட்ட முடியாதல்லவா? 

மூரட் : ஏன் காட்ட முடியாது? தன் நூலிலிருந்து மேற்கோள் காட்டப்பெறுவதை விரும்பாத கலைஞன் இருப்பானா ? 

லாரைன்: கலைஞன் விரும்பலாம். ஆனால் மேற் கோள் காட்டுபவர்களுக்கு அதில் என்ன மனநிறைவு கிடைக்கும்? எதிரிக்குத் தெரியாத ஒன்றை-புதிதான ஒன்றைப் பேசுவதிலல்லவா, அவை இருக்கக் கூடும். 

மூரட்: தாங்கள் பேசுவது எதுவானாலும் எனக்குப் புதிதாகவே இருக்கும். 

லாரைன் முகம் இவ்வாசகத்தினால் நாணமிகுந்து சிவந்தது. அவள் 

முகத்தைச் சிறிது திருப்பிக் கொண்டாள். அவன் அதை மாற்ற மேலும் “தங்கள் உரையாடற்கலை கலைக்கும் கலைப்பண் பூட்டும்” என்றான். 

காதல் அம்புகளிலிருந்து கூடத் தன்னைக் காத்த அந்நட்பு அவளை மிகவும் வயப்படுத்திற்று. “இவ்வளவு இனிய கற்பனைகளை, இவ்வளவு நயமிக்க அறிவுப் பண்பை நீங்கள் எவருக்கும் தெரியாமல் இதுவரை எங்கே மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர்கள்? தங்களை நான் முன்பே கண்டு பழகியிருந்தால் எவ் வளவோ நன்றாயிருந்திருக்கும்” என்றாள், 

தன் பேச்சின் போக்குத் தன் உள்ளத்தைத் திறந்து காட்டுவதுடன் நிற்கவில்லை-தன் உள்ளத் திரைக்குப் பின் அரைகுறையாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரே ஒரு மறை செய்தியையும் வெளிப்படுத்திவிடத் தக்கதாகும் என்று அவள் கண்டாள். கண்டு பேச்சை உடனே மாற்றினாள். 

“தங்கள் நண்பர்களைப் பற்றியெல்லாம் மிகவும் பேசுகிறீர்கள். பகைவர்களாக எவரையும் குறிப்பிட வில்லை. தங்களுக்குப் பகைவர்களே கிடையாதென்று நினைக்கிறேன்.” 

மூரட்: ஏன் கிடையாது? மடத்துத் துறவியரில் பெரும்பாலார் என்னை வெறுப்பவர்கள்தாம். தங்களைப் போன்ற அரண்மனை வாணர்களில் தாங்கள் நீங்கலாக எவரும் என் கூட்டுறவுக்கு இடந்தரமாட்டார்கள். 

லாரைன்: துறவியர் ஏன் தங்களைப் பகைக்க வேண்டும்? 

மூரட்: நான் துறவியாகப் பயிற்சிபெற விருந்த வன் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களே! 

லாரைன் உண்மையில் அவர் மடத்தில் கல்விப் பயிற்சி பெற்றார் என்றே நினைத்திருந்தாள். காதல் வேடராகிய மூரட் ஒரு துறவியாக விருந்தார் என்ற எண்ணம் அவளைக் குலுங்கக் குலுங்க நகைக்க வைத்தது. அதுபற்றிய விவரங்களை யெல்லாம் அவள் முழுதும் கேட்டாள். பின் அரண்மனை வாணர் தங் களைப் பகைப்பானேன் என்று பின்னும் புதுத் தூண்டுதல் தந்தாள். 

ஆக்டேவ் மூரட், தான் பாதையிற் பிறந்த பாலன் என்பதையும், தாயின் தங்கு தடையற்ற போக்கிலேயே தான் வாழ்ந்த வகையையும் கூறினான். 

லாரைன் அவன் கைகளைத் தன் கைகளால் பற்றிக் கனிவுடன் “அன்பரே, நம் இருவர் நேசமும் இப்போது முழுநிறைவுடையதாகிறது. நான் வெளிப் பார்வைக்கு வேறுவகைப்பட்ட சூழ்நிலையில் பிறந்தாலும் பிறப்பு முதல் இன்றுவரை தங்களைப்போல அன்புக்கும் அறி வாதரவுக்கும் அலைந்தவளே!” என்று கூறித் தன் குழந்தைகாலத் துன்பங்கள், அப்பாவிச் சிறுமியான தன் தமக்கையின் துன்பமிக்க வாழ்வு, முடிவு, ஒரு சிறு குச்சு நாய் தவிரத் தான் ஆதரவற்றுத் தவித்தது, இறுதியில் நல்லமைதியையும் விடுதலையையும் நாடியே நற்குணமிக்க முதியோனாகிய கோமான் சிராம்மோனை மணந்தது ஆகிய எல்லாச் செய்திகளையும் விரித்துரைத்தாள். 

இருவர் வரலாறுகளும் இருபெருங் காவேரிகளாக வந்து ஒன்றிவிட்டன. 

ஆக்டேவ்மூரட் இவ்வாழ்வுடன் தன் வாழ்க்கையி லுள்ள மற்றும்பல ஒப்புமைகளை எடுத்துக் காட்டினான். தானும் ஒரு நாயுடன் நாயாக ஒரே கொட்டிலில் வளர்க்கப்பட்டதையும், தன் பிள்ளைமைக் காலத் துயரங்களை உடன்பிறப்புப் போன்றிருந்த அந்த நாயிடம் கூறி ஆறுதல் பெற்றதையும் அவன் விரித் துரைத்தான். அத்துடன் லாரைனைப் போலவே தானும் முன் ஓவியம் வரைவதில் சிறிது விருப்பங்கொண் டிருந்ததாகவும், தன் பெரியதாய் ஒருத்தியின் படத்தை உள்ளபடியே சுருக்கு, திரைகளுடன் வரைந்துவிட்ட தாகவும் அதனாலேயே அச்செல்வ உறவினர் ஆதரவை இழந்ததாகவும் எடுத்துரைத்தான். 

லாரைன் மீண்டும் சிரித்தாள். “நீங்கள் எல்லா வற்றையும் உள்ளதை உள்ளபடியே சித்திரிப்பவர் களானால், உங்களைக் கண்டு நானும்கூடத்தான் அஞ்ச வேண்டும். எங்கே பெண்களாகிய எங்கள் சிறுமைகளை யெல்லாம்… 

மூரட் அவளைப் பேச விடவில்லை. 

“பெண்ணின் பெருமைகளைப் பாடும் திறம் ஆண் களுக்கு இன்னும் இல்லை-அதன் பின்னல்லவா சிறுமைபற்றிப் பேசவேண்டும்” என்றான். 

அவள் மீண்டும் பேச்சை மாற்றினாள். அதே சமயம் நட்பு என்னும் புறப்போர்வையுட் பொதிந்து அவள் ஒரு காதல் கோரிக்கை விடுத்தாள். “அன்பரீர், கலைத் துறையில் தாங்கள் எனக்கு ஓர் உதவி செய்யவேண் டும் என்று விரும்புகிறேன்.” 

அவள் கோரிக்கை என்னவாயிருக்குமோ என்று அவன் வியப்படைந்தான். “தங்களுக்காக என்ன உதவியாயினும் செய்யத் தயங்கமாட்டேன்” என்றான். 

லாரைன்: இன்னதென்று தெரியாமலே இவ்வளவு எளிதாக வாக்குறுதி கொடுத்துவிட்டீர்களே! அந்தமட் டில் எனக்கு நல்லதுதான். நான் கை பழக குழந்தை களையும் நாயையும் பூவையும் பார்த்துப் பார்த்துத் தான் வரைகிறேன். அவர்களோ அவையோ ஒரு நிலையில் படத்துக்கு அமைந்திருக்க முடிவதில்லை. கலையருமையை அவர்கள் அறியமாட்டார்கள். நீங்கள் என்முன் இருந்து படித்துக்கொண்டிருப்பதானால், தங்களைப் பார்த்துப் படம் வரையலாம் என்றிருக் கிறேன். 

மூரட்: சிலை போலிருக்கச் சொல்கிறீர்கள். அது தானே நீங்கள் விரும்பும் கலைப்பண்பு! நல்லது. எவ் வளவு நேரம் இருக்க வேண்டும்? 

லாரைன்: அதற்குள் நேரக் கணக்கிடுகிறீர்களே! ஒரு நாளைக்கு அரை மணி நேரம் இருந்தால் போதும். 

மூரட்: ஒரு நாளைக்கு அரை மணியா? அப்படி யானால் நாள் கணக்கில் திட்டமிடுகிறீர்கள் போலிருக் கிறதே! 

லாரைன்: ஆம்…சிலபல நாட்களாகும். ஒரேயடி யாக இருப்பது உங்களுக்கும் சிரமம். எனக்கும் மற்ற வேலைகளைப் பார்க்கவேண்டுமல்லவா? அத்துடன்… 

மூரட்: அத்துடன் என்ன? சும்மா சொல்லுங்கள். 

லாரைன்: இதைச் சாக்கிட்டுத் தங்களைத் தொடர்ச்சியாக இங்கே அழைக்கலாம் அல்லவா? இத் தகைய பட்டுக் கயிற்றினால் தானே நாடோடிப் பறவை யாகிய உங்களைக் கட்டி வைக்கமுடியும்? 

பட்டுப் பொதியினுள் பொதிந்த அவள் காதல் அழைப்பு அவன் உள்ளத்தைக் குளிரச்செய்தது. துணி வற்ற தன் விருப்பத்தை அவள் மதித்தாள் என்பதை அவள் ஆர்வ இணக்கம் அவனுக்கு அறிவித்தது, 

உரையாடல் கலப்பு உள்ளக் கலப்பாயிற்று. 

– தொடரும்…

– வாடாமல்லி (நாவல்), முதற்பதிப்பு: ஜூலை 1965, சேகர் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *