ஆர்வி (ஆர். வெங்கட்ராமன்) (டிசம்பர் 6, 1918 – ஆகஸ்ட் 29, 2008) தமிழில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதிய எழுத்தாளர். இதழாளர். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டவர்.
தினமணியில் 2011-இல் வந்த ஒரு கட்டுரை இதோ:
இருபதாம் நூற்றாண்டு கண்ட சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் – படைப்பிலக்கியவாதிகளுள் குறிப்பிடத்தக்கவர் ஆர்வி என்று அழைக்கப்படும் ஆர்.வெங்கட்ராமன்.
தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், 1918-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் நாள், இராமையர்-சீதாலட்சுமி இணையருக்குப் பிறந்தவர். பள்ளிப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்ட பிரசாரக் கூட்டங்களில் பங்குகொண்டு துண்டுப் பிரசுரங்கள் எழுதித் தருவது, பத்திரிகைகளுக்குச் செய்தி அனுப்புவது போன்ற பணிகளில் ஈடுபட்டார். பள்ளி இறுதி வகுப்பு முடிந்ததும் விடுதலைப் போராட்டத்துக்காக முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
1956-ஆம் ஆண்டு வெளிவந்த இவருடைய “அணையா விளக்கு’ நாவல் பரபரப்பாகப் பேசப்பட்டது. “ஆதித்தன் காதல்’ என்ற சரித்திர நாவலில் கொஞ்சி விளையாடிய தமிழ் நடையையும், “திரைக்குப் பின்’ நாவலின், புயல் வர்ணனைகளையும் படித்தவர்களால் மறக்க முடியாது.
வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம், ஆர்வி.யின் இளம் உள்ளத்தில் சுதந்திர வேட்கையைக் கிளர்ந்து எழச்செய்தது. 12-ஆம் வயதில் கதராடைக்கு மாறிய ஆர்வி, வாழ்நாள் முழுவதும் கதராடையே அணிந்து வந்தார்.
1941-இல் நடைபெற்ற தனி நபர் சத்தியாகிரகத்தில் பங்கு கொண்டு மூன்று மாதம் சிறைத்தண்டனை பெற்றார். அப்போது, இவருடைய பள்ளிச் சான்றிதழ்களைப் போலீசார் பறித்துச் சென்றுவிட்டனர். நாட்டு விடுதலைக்காக ஊர் ஊராகச் சென்று, தீவிரமாகப் பிரசாரம் செய்து, போராட்டங்களில் கலந்துகொண்டு, சான்றிதழ்களை இழந்து, சிறைத்தண்டனை அனுபவித்து பல இன்னல்களுக்கு ஆளாகியும்கூட சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்காக வழங்கப்படும் ஓய்வூதியத்தையோ, சலுகைகளையோ அனுபவிக்கவில்லையாம்.
ஆர்வி., பத்தாம் வகுப்புப் படிக்கும்போது எழுதிய முதல் சிறுகதைதான் “தனிக் குடித்தனம்’. பள்ளிப் பருவத்திலேயே ஆனந்த விகடன், கலைமகள் போன்ற பிரபல பத்திரிகைகளுக்குச் சிறுகதைகள் எழுதத் தொடங்கிவிட்டார் ஆர்வி.
1942-ஆம் ஆண்டு அப்போதைய “இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழின் ஆசிரியரான கே.சந்தானம், ஆர்வியை சென்னைக்கு அழைத்துவந்து, கல்கியிடம் அறிமுகம் செய்து வைத்தாராம். கல்கியில் பணியில் சேர இருந்த ஆர்வி, தற்செயலாகக் கலைமகள் காரியாலயத்தில் கி.வா.ஜ.வைச் சந்திக்க நேர்ந்ததும், அதன் பயனாகக் கலைமகள் அலுவலகத்திலேயே பணியில் அமர்ந்ததும் தனிக் கதை. கலைமகள் பத்திரிகையை இலக்கியத் தரம் வாய்ந்த உயர்ந்த பத்திரிகையாக வளர்த்ததில் ஆர்வியின் பங்கு மகத்தானது. மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று பிரபலமாகப் பேசப்படும் பல மூத்த எழுத்தாளர்களைக் கலைமகளில் எழுதவைத்த பெருமையும் ஆர்வியைச் சேரும்.
கலைமகள் நிறுவனம் 1950-இல் “கண்ணன்’ என்ற சிறுவர்களுக்கானப் பத்திரிகையைத் தொடங்கியபோது அதன் ஆசிரியர் பொறுப்பு ஆர்வியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆர்வியின் அனுபவம், கற்பனை வளம், எழுத்தாற்றல் இவை தமிழில் சிறுவர் இலக்கியம் வளர உரமாக அமைந்தன. புதுமையான நடையில் அற்புதமானச் சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் கண்ணனில் எழுதினார். கண்ணன் வாயிலாக, பாரபட்சமின்றி பல இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி, ஊக்கமூட்டி எழுத வைத்தார். குழந்தை இலக்கியத்திற்காகக் கலைமகள் நடத்திய “கண்ணன்’ இதழ் வெளிவந்த 22 ஆண்டுகள், தமிழில் குழந்தை இலக்கியத்தின் பொற்காலம் என்று சொல்லலாம்.
கல்கியைத் தலைவராகக்கொண்ட தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவாகக் காரணமாகி, அதில் இணைச் செயலாளராகவும் பணியாற்றினார். விக்கிரமன், சாண்டில்யன், த.நா.குமாரசுவாமியுடன் சேர்ந்து எழுத்தாளர்கள் தங்கள் நூல்களைத் தாங்களே வெளியிட்டுக்கொள்ள உதவும் வகையில் “தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம்’ அமையவும் காரணமாக இருந்தவர் ஆர்வி.
குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மூன்று ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியதோடு, அன்றைய குடியரசுத் துணைத் தலைவர், ஜாகிர் ஹுசேன் முன்னிலையில் சென்னையில் பிரம்மாண்டமான முறையில் குழந்தை இலக்கிய மாநாட்டை நடத்தினார்.
உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் கிளையைச் சென்னையில் தொடங்கியதோடு, “ஆதர்ஸ் கில்டு’ என்ற இந்திய எழுத்தாளர் அமைப்பின் சென்னைக் கிளை உருவாகக் காரணமாக இருந்து, அதன் செயல் உறுப்பினராகவும் இருந்தார்.
ஆர்வியின் அணையா விளக்கு, குங்குமச் சிமிழ், சந்திரகிரிக் கோட்டை ஆகிய நூல்களுக்கு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசுகள் கிடைத்தன. காரைக்குடியில் நடைபெற்ற குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் ஏழாவது குழந்தை இலக்கிய மாநாட்டில், கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் ஆர்வி.
2004-ஆம் ஆண்டு 27-வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான விருது ஆர்விக்கு வழங்கப்பட்டது. 33-ஆம் ஆண்டு கம்பன் விழாவில் சிறந்த எழுத்தாளருக்கானப் பாராட்டும், பொற்கிழியும் வழங்கப்பட்டன.
ஆர்விக்குத் திருமணம் நடந்தபோது அவருடைய வயது 18; மனைவி பட்டம்மாவின் வயது 13. தமது எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து, நான்கு மகன்களையும், மூன்று மகள்களையும் நன்றாகப் படிக்கவைத்து, நல்ல இடத்தில் திருமணமும் செய்துவைத்து, தம் 90-வது அகவை வரை நிறைவான வாழ்க்கை வாழ்ந்த ஆர்வி, 2008-ஆம் ஆண்டு ஆகஸ்டு 29-ஆம் தேதி காலமானார்.
தமிழ்ப் படைப்பிலக்கியம் வாழ-வளர உழைத்த சில மூத்த எழுத்தாளர்களுள் முன்னிலையில் இருக்கும் ஆர்வியின், நூல்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டு, பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதே பலரது பேரவா!
– நன்றி: https://s-pasupathy.blogspot.com/
அஞ்சலி – நிகரில்லா ஆர்.வி.
‘ஆர்.வி. அமரராகி விட்டார்” என்னும் செய்தியால் அதிர்ந்த இதயம் இன்னும் சமனப்படவில்லை. தொண்ணூறு வயதைப் பூர்த்தி செய்த ஆர்.வி. நினைவு தெரிந்த நாளிலிருந்து நெடும் பயணம் முடியும் வரை மடிப்புக் கலை யாத தூய கதராடையில் திகழ்ந்தவர். நாட்டு விடுதலைக்காக விழைவுடன் சிறை சென்ற பேனா வீரர். அதற்கான சலுகை களைப் பெறாத சுத்தமான தியாகி!
இளம்வயதிலேயே படைப்பிலக்கிய உலகில் தடம் பதித்த ஆர்.வி.யை -ஆனந்த விகடன், சுதேசமித்திரன், கல்கி என அனைத்துப் பிரபல இதழ்களும் அங்கீகரித்தன.
‘கலைமகள்’ நிறுவனமோ, இவரைத் தனது ஆசிரியர் குழுவிலேயே இணைத்துக் கொண்டு அரவணைத்தது. கி.வா.ஜ. தலை மையில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.. தி.ஜ.ர. போன்ற மேதைகளுடன் ‘மஞ்சரி’யில் பணியாற்றும் நல்வாய்ப்பும் கூடியது. பின்னர், “கண்ணன்” சிறுவர் இதழின் ஆசிரியராகி, இளைய தலைமுறையின் இணையற்ற முன்னோடியாக முத்திரை பதிக்கும் சூழ லும் உருவாயிற்று.
“அந்தாளில், ஒரே நேரத்தில் நான்கு பெரிய பத்திரிகைகள் ஆர்.வி.யின் தொடர்கதைகளை வெளியிட்டன!” என் பது, நேர்த்தியும், யதார்த்தமுமான இவ ரது எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டு.
அணையா விளக்கு, ஆதித்தன் காதல், திரைக்குப் பின், தேன்கூடு, யுவதி, சவிதா, குங் குமச்சிமிழ் போன்ற படைப்புகளால் இவருக்கு விருதுகளும், பரிசுகளும் கிட்டின.
சிறுவர் இலக்கியம் செழிக்கவே இவர் சித்தம் ஒன்றி உழைத்தார்; சிகரம் அடைந்தார்.
அறிமுக எழுத்தாளர்களைக் கண்டு பிடித்துப் புகழ் சேர்க்க, ஆர்.வி. ஆண்டு தோறும் நாவல் போட்டி நடத்துவார்; இரண்டு படைப்புகளைத் தேர்ந்தெடுத்துப் பரிசளிப்பார்.
இவர் சாதி மதங்களைக் கடந்து ஜே.எம். சாலி, மேரியண்ணா, சாருகேசி, லெமன், ரேவதி, ஏவி.எம். ஹாஜா, ஜோதிர் லதாகிரிஜா, அம்பை, தே.பார்த்தசாரதி என மிகப் பலரை உய்த்துணர்ந்து வளர்த்தெடுத்தார்.
நிறைவான பெருவாழ்வு வாழ்ந்த இந்த இலக்கியவாதியை, இன்னொருவருடன் ஒப்பிட முடியாது! ‘ஆர்.வி.க்கு இணை, ஆர்.வி.யே!’ என்பதுதான் இவருக்கான தனிச்சிறப்பு.
– இலக்கியவீதி இனியவன், கல்கி 19.10.2008.
அஞ்சலி – கண்ணன் ஆசிரியர் ஆர்வி காலமானார்…
ஒரு காலத்தில் பல தமிழ்ப் பத்திரிகைகளில் ஒரே நேரத்தில் பல தொடர்கதைகள் எழுதிக் கொண்டிருந்தார் ஆர்வி.(ஆர். வெங்கட்ராமன்). 250க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 19 நாவல், 2 மொழிபெயர்ப்பு நூல், 6 குறுநாவல், 1 பொது அறிவு நூல், 1 கட்டுரை நூல், 2 நாடகம், 26 சிறுவர் நூல் என ஏராளமாக எழுதியவர். சித்திரக்கதை என்ற பெயரில் கொலை, கொள்ளை போன்றவற்றைக் கலந்து எழுதிச் சித்திரவதை செய்யாமல். பல சிறந்த படக் கதைகள் படைத்தவர். ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம் இதழில் சித்திரக் கதைகள் எழுதிவந்தார். திருவெம்பாவைக்கு எளிய உரை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
தமிழ் அகாதமி அவார்ட் வாங்கிய சந்திரகிரிக்கோட்டை போன்ற சிறுவர் கதைகள், பெரியவர்களாலும் மறக்க முடியாதவை. குங்குமச் சிமிழ், அணையாவிளக்கு, யுவதி ஆகிய படைப்புகள் தமிழக அரசு பரிசு, தங்கப் பதக்க விருது போன்ற சிறப்புகள் பெற்றவை. கலைமகள், மஞ்சரி இதழ்களின் நீண்ட நாள் துணையாசிரியர், 1950 முதல் 22 ஆண்டு கண்ணன் சிறுவர் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
இவருக்குப் புரூஃப் திருத்தக் கற்றுத் தந்தவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. கண்ணன் தீபாவளி மலர்களில் எழுதிய எழுத்தாளர்களில் ஒருவர் ராஜாஜி. முன்னணி எழுத்தாளர்களான ஜோதிர்லதா கிரிஜா, ‘விழுதுகள்’ ரமணியன், ஜே.எம். சாலி, மஞ்சரி லெமன் போன்ற பலர் தொடக்க காலத்தில் கண்ணனில் எழுதியவர்களே.
இவரது புகழ்பெற்ற நாவலான அணையா விளக்கு, புதினப் பக்கங்கள் பகுதியில் நாடகமாகி, வானொலி மூலம் காற்றில், அணையாமல் ஒளிவீசியது. சிறுவர் நிகழ்ச்சிகள், கல்வி ஒலிபரப்புகள், அழகிரிசாமியின் படைப்புகள் குறித்த கலந்துரையாடல் என இவரது வானொலி இலக்கியப் பணி குறிப்பிடத்தக்கது.
குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர் ஜாகீர் உசேன் தொடங்கி வைத்த குழந்தை எழுத்தாளர் மாநாட்டைப் பொறுப்பேற்று நடத்தியவர். தேசீயப்பத்திரிகையாளர் சங்கத் தலைவராக இருந்தவர். காந்தியவாதி. ஏப்ரல் 1941ல் தனி நபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு, இரண்டரை மாதம் சிறையிலிருந்தார். சாண்டில்யன், பி.கோதண்டராமன் ஆகியோர் ஒத்துழைப்போடு தோன்றிய முதல் தமிழ் எழுத்தாளர் சங்க நிறுவனர்களில் முக்கியமானவர்.
மனைவி பட்டம்மாள். 3 பெண்கள், 3 பிள்ளை கள். ஆர்வியின் மாப்பிள்ளைகளில் ஒருவரான மாயூரனும் எழுத்தாளரே. (தற்போது மாமனாரைப் பற்றி ஒரு நூல் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.) கடைசிப் பெண் கீதா கோபாலகிருஷ்ணன் சென்னை வானொலி நிகழ்ச்சி அமைப்பாளர் .
இறுதி நாட்களில் சற்று நோய்வாய்ப் பட்டிருந்தாலும் மற்றபடி மகிழ்ச்சியாகவும் மலர்ச்சியாகவும் தான் வாழ்ந்தார் ஆர்வி. அன்பான மனைவி, மிகுந்த தந்தைப் பாசத்தோடு இயங்கிய மக்கட் செல்வங்கள் என அவர் வாழ்வு இனித்தது. பிரபல எழுத்தாளர் கு.ராஜவேலு, (சுதேசமித்திரன் ஆசிரியரும் தி.ஜானகிராமன், சிட்டி ஆகியோரின் உற்ற நண்பருமான) சுதேசமித்திரன் சீனிவாசன் என அவரது நட்பு வட்டம் நாள்தோறும் அவரைச் சந்தித்து அவர் வாழ்வில் நட்பின் நறுமணத்தைச் சேர்த்துக் கொண்டிருந்தது.
சென்னையில் வயதான குழந்தையாக வெள்ளை மனத்தோடு 90 ஆண்டுக்கு மேல் நிறைவாழ்வு வாழ்ந்த ஆர்வி, அண்மையில் காலமானார். அவர் காலமானாரே தவிர அவரது எழுத்துக்கு என்றும் அழிவில்லை.
– ஆதிரை, அமுதசுரபி அக்டோபர் 2008.
வாழ்வில் 1000 வளர் – அன்பார்ந்த ஆசிரியர்
பாண்டவர்கள் ஒரே ஓர் ஆண்டுதான் அஞ்ஞாத வாசம் செய்தார்கள்… பாண்டவர் சகாயன் கண்ணனோ முப்பத்தோர் ஆண்டுகளாக அஞ்ஞாத வாசம் செய்கிறான். ஆம்-இவன் 20 ஆம் நூற்றாண்டுக் கண்ணன்; இதிகாச காலக் கண்ணன் இல்லை. இவன் பாலர் குலத்தின் பாசத்துக்கு உரிய பத்திரிகை கண்ணன்…
சென்ற நவம்பர் 2002 மஞ்சரி சிறப்பு தீபாவளி இதழில் கண்ணான் பக்கங்கள் சில மறுபிரசுரம் ஆனாலும் ஆயின; நானா திசைகளிலிருந்தும் ஏராள விசாரிப்புகள்…
பள்ளிப் பிராயத்தில் தங்களுக்கெல்லாம் கிடைத்த கண்ணன் தோழமை, பட்டது. தங்கள் வாரிசுகளுக்குக் கிட்டாமல் போனதே என்கிற ஆதங்கம் அத்தனை விசாரிப்புகளிலும் தொனித்தது.
22 ஆண்டுகளே வெளிவந்தாலும், வெளியீடு நின்று 31 ஆண்டுகள் உருண்டோடியும் கண்ணனை ஆசிரி யர் ஆர்வியை எவரும் மறக்கவில்லை.இதை எண்ணி வியப்பதா – விம்மிதம் அடைவதா?
இலக்கியவீதி இனியவன் கண்ணன் கண்டு இனம் காட்டியவர்களில் ஒருவர் {கண் ணன்- ஆர்விக்கே இப்படி ஒரு பெயர்)
இனியவன், இலக்கியவீதி வெள்ளிவிழாவின் 7-8 ஆம் உலாக்களை சிறார் இலக்கிய விழிப்புணர்வுக்காகவே நடத்தினார்.
8ஆவது உலா ஆசிரியர் ஆர்வி மற்றும் கண்ணன் அன்பர்களின் கனா நனவுச் சந்திப்பு. இதுபற்றி டிசம்பர் 2002 மஞ்சரியிலேயே செய்தி வெளியிடப்பட்டது.
சந்திப்புக் கூடம். சென்னை மேல மாம்பலம் மீனாக்ஷி விஹார் கல்யாண கூடம்.
சந்திப்பு நாள்: டிசம்பர் 14 – 2002, சனிக்கிழமை.
நேரம் முற்பகல் 10 மணி முதல் (விருந்தோடு) பிற்பகல் 2 மணி வரை.
ஏற்பாடு இனியவனுடன், ஜே.எம்.சாலி, மாயூரன், சகாக்கள் எஸ். விசுவநாதன், தே.பார்த்தசாரதி, ரேவதி, வாதூலன் இன்னபிற கண்ணன் பட்டரை உருப்படிகள்.
சென்ற டிசம்பர் 6 இல்தான் ஸ்ரீ ஆர்வி ஆயிரம் பிறையாளராய் 84 ஆம் ஆண்டில் அடி பதித்தார். அதைத் தொடர்ந்து, இந்த விழா ஏற்பாடானதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
தற்போது ஆர்வி எந்தப் பதவியிலும் இல்லை. வேறு ஏதும் பத்திரிகைக்கு ஆசிரியரும் இல்லை. எனவே அவருக்குப் பாராட்டு விழா எடுத்தவர் களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இருக்க நியாயம் இல்லை. ஆக, முற்றும் அன்பும் மரியாதையும் கொண்டு எடுத்த அதிசய விழா இது.
1947 இல் ஸ்ரீ என். ராமரத்னம் சுலைமகள் அதிபர், புது முயற்சியாக மஞ்சரி டய்ஜெஸ்டை ஆரம்பித்தார். அவ்வாறே 1950 இல் சில லட்சியங் களுடன் கண்ணன் சிறார் இதழை ஆரம்பித்தார்.
முதலில் கண்ணன் மாத இதழாக வந்தது. பின்னர்தான் மாதம் இருமுறை ஆனது. மஞ்சரி டய்ஜெஸ்ட் ஆங்கில மாதம் முதல் தேதி வரும். கலைமகள் தமிழ் மாதம் முதல் தேதி வரும். எனவே மாதம்தோறும் மஞ்சரியோடு ஒரு கண்ணன், கலை மகளோடு ஒரு கண்ணன் உலா வந்தது.
விரைவிலேயே கலைமகள் குடும் பத்துக் கண்ணன், தமிழ்க் குடும் பத்துப் பத்திரிகைகளில் ஒன்றாக இடம் பிடித்தது. இளம் வாசகர்களின் இதயங்களிலும் இடம் கொண்டது.
ஸ்ரீ ஆர்விதான் கண்ணன் ஆசிரியர். கல்கி அலுவலகத்தில் பணி ஏற்க இருந்த இவர், கலைமகள் காரியாலயத்தில் வேலைவாய்ப்புப் பெற்றார். எல்லாம் நம் கண்ணனை முன்னிட்டுத்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கலைமகளில் நிறையக் கதை- கட்டுரைகளை வழங்கியதோடு, மஞ்சரி பாஷை ஆசிரியர்களில் ஒருவ ராகவும் தம் பங்கு பணிகளைச் செய்தார். கண்ணன் ஆசிரியராக 22 முழு ஆண்டுகள் ஆற்றிய சேவைக்காக, அன்றைய பாராட்டு விழா என்பது குறிப்பிடத் தக்கது.
கலைமகள் குடும்பத்து இதழ் என்பதால் ஸ்ரீ கிவாஜ, திஜர, காஸ்ரீஸ்ரீ, ஸேனா, தாமோதரன் ஆகியோரோடு, ராஜாஜி, வாரியார், டாக்டர் மு.வ, கி.சந்திரசேகரன், க.சந்தானம், கி. ராமசந்திரன், ராஜி, நாமக்கல் கவிஞர், கொத்தமங்கலம் சுப்பு, பெ. தூரன், தமிழ் ஒளி முதலிய பலர் கண்ண னில் ஆர்வத்தோடு எழுதினார்கள்.
மூத்த எழுத்தாளர்கள் இத்தனை பேர் எழுதினாலும் சிறார்களுக்கு இளம் எழுத்தாளர்கள் எழுதுவது தானே சிறப்பு! இந்தச் சிந்தனைக் குத்தான் செயல்வடிவம் தந்தார் ஸ்ரீ ஆர்வி. தாமே கண்ணனில் தொடர் கதைகளும் சித்திரக் கதைகளும் படைத்து இளம் தலைமுறைக்கு வழி காட்டினார். புகுப் புது எழுத்தாளர்கள் -கவிஞர்கள் கண்ணன் மூலம் உரு வாக, தொடர்ந்து வாய்ப்பு அளித்தார்.
தொடக்க காவத்தில் ஸ்ரீ எஸ்.வி.ரமணி (பின்னர் கலைமகள் பொறுப்பாசிரியர்), ஆர்.நடராஜன் (எ) தில்லைநாதன் – இவர் கண்ணன், மஞ்சரி, கலைமகள் மூன்றிலும் பணியாற்றியவர்) பின்னர் லெமன் (எ) லெக்ஷ்மணன் (தற்போது மஞ்சரியில் மூவருமே கண்ணனில் பயிற்சி பெற்றவர்கள்.
எதை எழுதினாலும் அதில் இலக்கியத் தரம் இருக்கும்படி கண்காணித்தார் ஆர்வி. கண்ணன் தொகுதிகளைப் புரட்டுபவர்களுக்கு இந்த உண்மை கட்டாயம் புலப்படும். அத்தகைய கண்ணன் படைப்பாளிகளின் பாச வெளிப்பாடுதான் இந்தப் பாராட்டுவிழா.
பத்திரிகை என்றால் சித்திரகாரர்கள் இல்லாமலா! கண்ணன் சித்திரகாரர்கள் குழாம், கலைமகள் ஓவியர்கள் ஸாமி, சங்கர் (அம்புலிமாமா), சுப்பு,சுசி, மகான் இவர்களோடு திரு. ரெஸாக், விச்சா[கல்கி சாமா), ஸாகர், பாபு, கோபுலு, நடனம், உமாபதி, ராமு, அருண், மணி, ஆழி தவிர கீதா, சுதர்ஸன் முதலிய கேலிசித்திரகாரர்கள்…
விழா அன்று, திரு. ரெஸாக் இந்த முதுமையிலும் வந்து ஸ்ரீ ஆர்வியோடு, நட்புறவைப் புதுப்பித்துக் கொண்டார். ஜே.எம்.சாலியின் விகடன் சகாக்கள் ஸ்ரீ முகுந்தன், ஓவியர் ஸாரதி ஆகியோரும் வருகை தந்தனர். ஜே.எம். சாலியின் குடந்தை கல்லூரி சகா தென்கச்சியார் வந்திருந்தார். அவரைப் பேச விடா விட்டால் விழா களைகட்டுமா? இனியவன் அவரை மேடைக்கு அழைத்து விட்டார். அவரும் வாய்ப்பை வீணடிக்காமல் தமக்கும் கண்ணான் பத்திரிகைக்கும் இருந்த இல்லாமல் போன தொடர்பை சுவையாய் விவரித்தார்.
இடையே தென்காசி ஓவியர் மணியம் வாய்திறவாமல் ஒரு பக்கம் அமர்ந்து விழா நாயகர் ஆர்வியையும், தென்கச்சியார், ரமணியன் என்று சிலரை சித்திரமாக வரைந்து அசத்தினார்.
இறை வணக்கத்தோடு (ஜி.ஆர்த்தி) தொடங்கியது விழா. மதியொளி சரஸ்வதி விழாவினருக்கு அளித்த பாராட்டுரையை வாசுகி பத்ரிநாராயணன் வாசித்தார்.
இனியவனின் வரவேற்புரையை அடுத்து சிங்கை ஜே.எம்.சாலி பேசலானார். தாம் கண்ணனுக்கு அறிமுகமானதோடு, ஆனந்தவிகடனுக்கும் அறிமுகமாக ஆசிரியர் ஆர்விதான் காரண புருஷர் என்றார்.
அகிலனை, கிவாஜவின் செல்லப் பிள்ளை என்பார்கள். அதேபோல், ஜே.எம்.சாலி ஆர்வியின் செல்லப் பிள்ளை என்பது அப்போது புரிந்தது. சாலியின் முன்னேற்றத்துக்கு ஆர்வி தான் ஒரு தந்தை போல் இருந்து ஊக்கம் அளித்தவர்.
ஜே.எம். சாலியை அடுத்து, தே. பார்த்தசாரதி தம்முடைய நகைச்சுவை எழுத்துக்குக் கண்ணன் அளித்த ஆக்கத்தையும் ஊக்கத்தையும் எடுத்துக் கூறினார். கண்ணனில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதியுள்ள ரேவதி ஈ.எஸ்.ஹரிஹரன், ஆசிரியர் ஆர்வி நல்கிய ஆதரவு குறித்துப் பேசினார்.
நாகை பாஸர் கண்ணனில் வெளி யான தம் முதல் பாடலை (பிள்ளையார் பாடலை) பாடிப் பரவசப்படுத்தினார்.
ஜோதிர்லதா கிரிஜா, அம்புலிமாமா சாமா, மாயூரன், கூத்தபிரான், ராஜ ரங்கன், நெல்லை ஆ.கணபதி, இளையவன் (வாழ்த்துப்பா), ரமணீயன், மாயன், பா.நா. பாலசுப்பிரமணியன், கே.சுந்தரேசன் எல்லாருமே தனி ஈடு பாட்டுடன் கண்ணன் கால நினைவு களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
மயிலாடுதுறை சின்னஞ்சிறுகோபு, கண்ணன் இதழ்களையும் மலர்களை யும் தேடித்தேடிச் சேகரிப்பவர். கண்ணன் சின்னம் (வெண்ணெய்த் தாழி கிருஷ்ணன்) எந்தப் பத்திரிகைச் சின்னத்தையும் விட அழகானது என்றார். அதைப் பெரிதாக்கி வண்ணண ஓவியமாக அனைவருக்கும் காண்பித்தார்.
கண்ணன் மீதும் தம் மீதும் அத் தனை பேர் வைத்துள்ள அன்பையும் மதிப்பையும் கண்டு ஸ்ரீ ஆர்வி நெகிழ்ந்து போனார். அந்த நாளில் எழுத்து ஒன்றையே நம்பி எதிர்நீச்சல் போட்டுத் தம் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வந்ததாகச் சொன்னார். கண்ணன் எழுத் தாளர்கள் பலர் நாடெங்கும் நல்ல பதவிகளில் அமர்ந்திருப் பதைக் கூறிப் பெருமிதப்பட்டார். கண்ணன் எழுத்தாளர் யாருமே சோடையில்லை என்றார்.
மணிக்கொடி கால எழுத்தாளர்கள் பலரும் பின்னர் கலைமகளில் எழுதிப் பிரபலமானவர்கள். கண்ணன் கால எழுத்தாளர்களும் பின்னர் பிரபல பத்திரிகைகளில் எழுதிப் புகழ் பெற்றார்கள் என்று தம் ஏற்புரையில் ஸ்ரீ ஆர்வி விளக்கினார்.
அபிமானிகளின் அழைப்பை ஏற்றுக் குடும்ப சகிதம் வந்திருந்தார் ஸ்ரீ ஆர்வி. பலர் தனித்தனியே அன்பளிப்புகளை நல்கி மரியாதை செய்து மகிழ்ந்தார்கள்.. குடும்பத்தினர் சார்பில் அவருடைய புதல்வர் பிரசாத் விழா அமைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் ஏற்பாடான இந்த நிகழ்ச்சிக்கு கண்ணன் அன்பர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஒத்துழைப்புத் தந்தார்கள்; விழா வெற்றி பெற்றது என்று அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார் சாருகேசி…
கண்ணன் கதைகள் பாடல்கள் எல்லாம் கலைஞன் பதிப்பகம் மூலம் நூல் வடிவு பெற உள்ள செய்தியை இலக்கியவீதி இனியவன் தெரிவித்தார். அனைவரும் அதை ஆரவாரமாகக் கைத்தட்டி வரவேற்றார்கள்.
அவர்களுக்காக ஒரு செய்தி…
கடந்து போன யுகசர்ப்பத்தின் வால்பகுதிக் கதை மகாபாரதப் பின்னணி… ஸ்ரீதினகர் ஜோஷியின் குஜராத்தி புதினம். அதன் ஹிந்தி வடிவம் தர்மயுக் இதழில் தொடராக வந்தது. அதன் தமிழ் வடிவம் மஞ்சரியில் பிரசுரத்துக்காக வந்து காத்திருக்கிறது.
இதில் உள்ள விசேஷம் – தமிழில் அந்தப் புதினத்தின் தலைப்பு, பல நூறு கண்ணன் அபிமானிகளின் இதயக் குரலை எதிரொலிப்பதே…
இதோ அந்தத் தலைப்பு:
கண்ணா மீண்டும் வாராயோ ?
கண்ணன் கழகம்:
ஊர்தோறும் கண்ணன்| (கழகங்கள் அன்று பிரபல ) மானவை. சிறார் இடையே ஒற்றுமையும் நாட்டுப்பற்று போன்ற நல்லுணர்வுகளும் வளர வாய்ப்பு அளித்தன கண்ணன் கழகங்கள்.
ஸ்ரீ ஜெயேந்திரர்(எம்.சுப்பிரமண்யன்) பூர்வாஸ்ரமத்தில் ஆர்வி ரசிகர் · கண்ணன் கழக அங்கத்தினர் என்பது இன்றைய தலைமுறைக்குப் புதிய இனிய செய்தி. கண்ணன் கழக அலுவல்களைக் கவனிக்க சௌந்தரம் ஸ்ரீனிவாசன் அமர்த்தப்பட்டார். கண்ணன் இதழிலும் கதை கட்டுரைகள் எழுதியவர் இவர், கண்ணன் உதவியாளரும் கூட! கலைமகள் காரியாலயத்தில் பணியில் அமர்த்தப்பட்ட முதல் பெண்மணி இவரே!
– எல்.ஏ.கே; மஞ்சரி ஜனவரி 2003.