பட்டுப் பாவாடை
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நத்தம் கிராமத்தில் நல்லம்மாள் குடும்பம், ‘வெந்ததைத் தின்போம், வந்தால் சாவோம்’ என்றெண்ணும் வெந்துயரக் குடும்பம். பூர்வீகக் கிகிஸ்தவர்கள் தாம். அவள் கணவன் செல்லத்துரை கடைசி முறையாகக் கொழும்பிற்குப்போய் நான்கு வருடங்கள் முடிந்து விட்டன. கடந்த இருபது ஆண்டுகளாகக் கொழும்பிற்கும் தமிழ்நாட்டிற்கும், மாறி மாறி ஆண்டுமாறியாக அலைகிறார்; கையில் நாலு காசு சேர்ந்தபாடில்லை.
நான்கு பிள்ளைகளையும், நல்லம்மாள் மாடாய் உழைத்து வளர்த்தாள். ஒரு மாதத்திற்கு முன்பே ‘நாளை புறப்படுகிறேன்’ என்று கடிதம் வந்துவிடும். மிரட்டுக் கொழும்புப் பெருட்கள் தவிர நூறோ, இருநூறோ கொண்டு வருவார். ஒன்றிரண்டு மாதங்கள் அனுபவித்து விட்டு. கப்பல் கட்டணத்திற்குக் கையிலுள்ள கடிகாரத்தையும், கொழும்புக் குடையையும் விற்று விட்டு கொழும்புக்கு ஓடி விடுவார்.
கொழும்பில் தேத்தண்ணீர் கடைகளுக்கு அடுப்பு எரிக்க சிரட்டைக்கரி போடுவது அவரது தொழில், அதில் ஓரளவு மிச்சமுண்டு. ஆனால் அனைத்தையும் சூதாடி இழப்பதாகக் கேள்வி. கொழும்பில் ஏற்பட்ட கொடுமையான வெள்ளத்திற்குப் பிறகு (1957) அவரிடமிருந்து கடிதமோ, ணமோ எதுவும் கிடையாது. அவர் இருந்த கண்டிநகர்ப் பக்கம் வெள்ளச்சேதம் அதிகம் என்று பத்திரிகைகளிலும் செய்திகள் வந்தன.
பாவம், நல்லம்மாள் பிள்ளைகளுக்காக உயிர் வாழ்ந்தாள்; கடின உழைப்பால் அவள் உடல் உடைந்த ஓட்டைப்போல் ஒட்டிப்போயிற்று. ஒவ்வொரு முறையும் அவள் புருஷன் கொழும்பிலிருந்து வந்து போகும்போது ஒரு பிள்ளைச் செல்வத்தைத் தந்துபோவார். செல்லத்துரையின் செல்வம் இதுவே!
இரண்டு பெண், இரண்டு ஆண். தாய்க்குத் தலைமகள் தானியேல் சீனி மிட்டாய் விற்றுத் தினம் நாலணா கொண்டு வருவான். அடுத்த பையனுக்கு எட்டு வயது. கடைசி இரண்டும் பெண் குழந்தைகள். செல்லத்துரை வயதாகிறது. நான்கு கடைக்குட்டி குழந்தைக்கு சிலோனுக்குப்போன ஆறாவது மாதம் பிறந்த குழந்தை. அவள் பெயர் இரத்தினம். பிறந்த மேனியாய், தூசிபடிந்த கையாய், புழுதியில் புரண்டு திரியும். அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் நாட்களைக் கழிக்கும். அவள் தன் பிள்ளைகளின் ஆடையணிகளைப் பற்றிக் கவலைப்பட முடியுமா?
2
கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இன்னும் இரு தினங்கள் கூட இல்லை. தங்கள் தகுதிக்குத் தகுந்தபடியெல்லாம் வீடுகளை அலங்கரித்தனர். கோவிலுக்கு மேளக்கச்சேரியும், வாணவேடிக்கையும் வருவதாகக் குழந்தைகள் குதூகலத்துடன் பேசிக்கொண்டனர். பெண் பிள்ளைகள் வளையல் போடுவதிலும், கோடி உடுப்புகளைத் தோழிகளிடம் காட்டி மகிழ்வதிலும் முனைந்திருந்தனர். நல்லம்மாள் மட்டும் எதுவும் தோன்றாமல் ஏங்கிய உள்ளத்துடன், கலங்கிய கண்களுடன் பண்டிகையை எதிர் பார்த்தாள்.
இவ்வருடம் மழை குழையடித்து விட்டது. புன்செய் பயிர்கள் காய்ந்து கருகி விட்டன. உழைப்பை மட்டும் நம்பி வாழும் மக்கள் முகத்தில் மலர்ச்சி இல்லை. நல்லம்மாளுக்கு யார் கடன் கொடுப்பார்கள்? அவளுக்குக் கடனே தேவையில்லை. யாராவது இரண்டு நாட்களுக்கு வேலை கொடுத்தால் அதுவே போதும்.
கடந்த மாதம் முழுவதும் சோளக்கஞ்சிதான். பண்டிகையன்றாவது பிள்ளைகளுக்கு நெல்லுப் பருக்கை கொடுக்க வேண்டாமா? அவளின் ஏமாற்றம் நிறைந்த கண்கள் சிலவேளைகளில் ‘தபால்காரன் தன்னை நோக்கி வரமாட்டானா?’ என்று தேடும்; மறுகணம் கண்ணீரைக் கொட்டும்.
கொழும்பில் ஏற்பட்ட கொடிய வெள்ளத்தில் அல்லது அதைத் தொடர்ந்து அங்கு நடந்த மொழிக் குழப்பத்தில் உயிருக்கு ஏதாவது…. இப்படி நினைக்கும் போதே அவள் கண்கள் குளமாய்ப் பெருகின.
3
அன்று இறைவன் பிறப்புப் பண்டிகை, தலைமகன் தானியேல் ஐந்தாறு கிராமங்கள் சுற்றி சீனிமிட்டாய் விற்றுவிட்டு நாலணா மிச்சம் கொண்டு வந்தான். சோளம் வாங்கிக் குத்தி சமைத்துச் சோறு போட்டாள்.
கோவில் மண்டபத்தில் கொட்டு அடித்ததுதான் தாமதம், குழந்தைகள் தங்கள் கோடி உடுப்புகளை மாட்டிக்கொண்டு கோவிலுக்குக் கிளம்பினர். மேளம் வந்த நேரத்திலிருந்துதானே குழந்தைகளுக்குப் பண்டிகை ஆரம்பிக்கிறது?
ஓய்வுபெற்று சொந்தக் கிராமத்தில் வந்து சகல வசதிகளோடு குடியிருக்கும் டிப்டி கலெக்டர் தேவதாசின் பேத்தி மேரியும், இரத்தினமும் தெருவில் நல்ல பழக்கம். மேரிக்கும் நான்கு வயதுதான் இருக்கும். அவள் கட்டிக்கொண்டு வந்திருந்த நைலான் லேஸ் கவண் எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது. புழுதி மயமாய் பிறந்த மேனியாய் நிற்கும் இரத்தினத்திற்கு அவள் பக்கம் நெருங்கவே அச்சமாய் இருந்தது. அவள் உடுப்பைப் பிடித்துப் பார்க்க இரத்தினத்தின் விரல்கள் துடித்தன. ஏதோ கூச்சத்தால் அவள் தன் கண்களை மூடிக்கொண்டாள்.
பட்டுப் பாவாடைகள், ஜப்பான் சில்க்குகள், ஜரிகை ஜாக்கட்டுகள், கர்நாட்டிக்துணிகள், பாப்ளிங் சர்ட்டுகள்…. இத்தியாதி கோடி உடுப்புகள் முரமுரத்தன. கெட்டி மேளம் முடுக்கி முழங்கின.
இரத்தினம் வீங்கிய முகத்தோடு வீட்டிற்கு ஓடினாள். ஏங்கிக் கொண்டிருந்த தாயிடம் போய் சிணுங்கினாள். தாயின் ஐந்து விரல்களும் இரத்தினத்தின் முதுகில் அப்படியே பதிந்தன. எஞ்சியிருந்த கொஞ்சம் சோளக்கஞ்சியையும் குடித்துவிட்டு மீண்டும் நடையைக் கட்டினாள், இரத்தினம்.
பூப்போட்ட பட்டுப்பாவாடைகள்… எத்தனை நிறத்தில்… எத்தனை விதத்தில் அடேயப்பா…. அனைத்தும் அவளுக்குப் பூதாகாரமாகக் காட்சி தந்தன.
இரத்தினம் தன் வீட்டிலிருந்து கிறிஸ்தவக் கோவிலுக்குப் போகும் வழியில் ஓர் இசக்கியம்மன் கோவில் இருக்கிறது. அதைத் திடீரென்று பார்த்த நின்றாள். இசக்கியம்மனுக்கு மிக அவள் பிரமிப்பும், பூரிப்பும் நிறைந்து அழகான ஒரு பட்டுப்பாவாடை கட்டி, சந்தனம் தெளித்து, செந்துர்க்கம் பொட்டும் வைத்திருந்தது. யாரோ நேர்ச்சையாக அன்றுதான் கட்டியிருக்க வேண்டும். அந்தப் பட்டுப்பாவாடையிலுள்ள பூக்கள் மூன்று நிறங்களில் ஒளி வீசின.
அங்கு யாருமில்லை. அதைப்பற்றிக் கவலையுமில்லை. இரத்தினம் பக்கத்தில் ஓடினாள். பாவாடைச் சுருக்கை இழுத்தாள். தன் இடப்பில் சுற்றிக்கொண்டு நேரே கோவிலுக்கு ஓடினாள். எல்லாக் குழந்தைகளும் ஊமைக் குழலை வேடிக்கை பார்ப்பதை விட்டு இரத்தினம் கட்டியிருந்த பட்டுப்பாவாடையை வேடிக்கை பார்த்தனர். நைலான்லேஸ் மேரி, விளையாடச் சேர்த்துக்கொண்டாள். பட்டுப்பாவாடை இரத்தினத்தையும் இரத்தினத்திற்குப் பரம திருப்தி.
விடிந்தது, ஊரில் ஒரே பரபரப்பு. ‘இசக்கியம்மன் பட்டுப்பாவாடையை யாரோ உரிந்து கொண்டு போய்விட்டார்கள் – வேண்டுமென்று செய்த வேலை நாத்திகத்தாரின் கொழுப்பு- கிறிஸ்து பிறப்பின் பண்டிகையன்று இந்தக் கேவலம் நடந்து விட்டதால், இசக்கியம்மன் பக்தர்களுக்கு ஆத்திரம் அதிகமாயிருந்தது. கோபம் தலைக்கேறியது. பக்தி என்பது எல்லோருக்கும் பொதுதானே?
விஷயம் தெரிந்த நல்லம்மாள் தர்மகர்த்தாவின் காலை பிடித்துக் கெஞ்சி வேண்டினாள். ‘குழந்தை உடுத்தி விட்டதால் துணி தீட்டாகிவிட்டதென்று’ பட்டுப்பாவாடையை வாங்க மறுத்து விட்டார்கள். யேசுவின் அடியாளான நல்லம்மாள், ‘சாமிக்குக் கட்டியதைத் தன் பிள்ளை கட்டக்கூடாதென்று’ அதைத் தூக்கி எறிந்து விட்டாள்.
இசக்கியம்மனும், இரத்தினமும் நிர்வாணமாயினர்.
- முதலில் பிப்ரவரி 1959 ‘வாலிபர் தோழன்’ இதழில் வெளியானது.
- 1971 -நூறு ஜீவனுள்ள கதைகள் என்ற நூலிலிருந்து எடுத்தது.
- சென்னை – கருத்தரங்குகளில் வெகுவாக விவாதிக்கப்பட்டு, பாராட்டும் பெற்ற கதையாகும்.
– ஆர்.எஸ்.ஜேக்கப் சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: March 2, 2026
பார்வையிட்டோர்: 51
