கல்யாண சாப்பாடு
கதையாசிரியர்: நிர்மலா சந்திரசேகர்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: March 15, 2026
பார்வையிட்டோர்: 119

திருமணப்பத்திரிக்கை வைக்க,காலையிலேயே வருகிறேன் என்று சொன்ன என் நண்பன் சாயங்காலம் தான் வந்தான் அவன் மனைவியுடன். “காலையில், தாம்பரம் பக்கம் போக வேண்டியதாகிடுச்சிடா”. பெரிய சில்வர் தட்டில் ஸ்வீட் பாக்ஸ் உடன் பூ, பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் குங்குமத்துடன்.
இருவரும் என் மனைவியையும், மகன்களையும் அழைத்து ”குடும்பத்துடன் எல்லோரும் கண்டிப்பாக முகூர்த்தம், ரிசப்ஷன் என்று ரெண்டுக்கும் வந்திடனும்டா”
“நீங்களும் வந்திடனும்” என்று அவன் மனைவி என் மனைவியின் கையை பிடித்து “கண்டிப்பாக வந்திடனும் காயத்திரி” என்றார்.
வந்தவனை கார் வரை வழி அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்தேன். “கேட்டியா காயத்திரி, என் க்ளோஸ் ப்ரென்ட். எந்த சாக்கும் சொல்ல கூடாது. சண்டே கல்யாணம். சேடர்டே ரிஷப்ஷன். பிள்ளைகளுடன் போறோம்” என்று ஆர்டர் போட்டு விட்டு வெளியே போனேன்.
“அப்ப பாக்கலாம். இன்னும் பத்து நாள் இருக்கு” என்றாள். ஆயிற்று அந்த பத்து நாளும் ஓடி போயிற்று.
இன்றைக்கு தான் ரிஷப்ஷன். காலையிலுருந்தே பிள்ளைகளை கிளப்பிக் கொண்டிருந்தேன்.
“அப்பா என்னமா ஒரே வெரட்டறாரு. ப்ரெண்டு, ப்ரெண்ட்னு. வரலைனா என்ன பண்ணுவாராம்.”
கோபப்பட்ட மகன்களை மனைவி சமாதானப்படுத்தி அனைவரும் கேப் புக் பண்ணி கல்யாணத்திற்கு கிளம்பினோம்.
ரெட்டேரி தாண்டி போய் நின்றது கேப்.
சரியான கூட்டம். நண்பர் வட்டங்களை தேடி பிடித்து கலந்து விட்டோம். மனைவிகள் அனைவரும் சேர்ந்துவிட்டனர்.
பிள்ளைகளுக்கு தான் கம்பெனி கிடைக்கவில்லை. இருவரும் தனித்து இருந்தனர்.
எதற்கெடுத்தாலும் சிரித்தபடியே, க்யுவில் நின்று ‘கிப்ட்’ கொடுக்க போட்டோவிற்கு, குடும்பத்துடன், போட்டோவிற்கு போஸ் கொடுத்து விட்டு நண்பனின் மகனிடம வாழ்த்து, தெரிவித்து கட்டி பிடித்து கை குலுக்கினேன்.
“அங்கிள், எல்லாம் சாப்பிட்டுதான் போகனும்” என்றான் மாப்பிள்ளை. அது முடிந்ததும் டைனிங் ஹாலில் நுழைந்தோம் குடும்பத்துடன். சரியான கூட்டம். உள்ளே நுழைந்து விட்டோம். பரிமாற ஆரம்பித்து விட்டனர்.
வாழை இலை போடப்பட்டது. தண்ணீர் பாட்டில் வைத்தனர் மற்றொருவர். பரிமாறுபவர்கள் அனைவரும் யூனிஃபார்ம் போட்டிருந்தனர்.
பரிமாறுபவர்களுக்கு இன்ஸ்ட்டெரக்ஷன் கொடுத்தபடி ஒருவர். ஸ்வீட், பாசந்தி வைத்தபடி ஒருவர். சின்ன டப்பாவில் பாதாம் ஸ்வீட் வைத்தபடி மற்றொருவர்.
நாக்கில் எச்சில் ஊறியது. இளநீர் பாயசத்திற்கு ஒருவர் ப்ளாஸ்டிக் கப் வைத்துக் கொண்டே போக, மற்றொருவர் ஸ்வீட் போளி வைத்துக்கொண்டே போனார்.
காஜுகத்ளி. பதான் ஸ்வீட் பதம் பார்த்திட வேண்டியது தான்.மனைவி முறைத்தாள்.
கட்லட் பரிமாறப்பட்டது. அடுத்து பனீர் டிக்கா, ரொமாளி ரொட்டி,பொடி இட்லி.
திரும்பவும் ஒரு வரிசை வெஜ் ரைஸ், சாம்பார் சாதம். இவைகள் சாப்பிட்ட பிறகு இலையில் இடம் கொஞ்சம் குறைந்தவுடன் வய்ட் ரைஸ் பரிமாறப்பட்டது. சாம்பாரா, வத்தகுழம்பா? என்று கேட்டு வத்தக்குழம்பு ஊற்றினார். பிறகு ரசம் சாதம்.
பக்கத்து சீட்டில் இருந்தவர்கள் எல்லாம் எழ ஆரம்பித்து விட்டனர். ஆனால் நான் நின்றிருந்த முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர், இன்னும் ரசம் சாதம் உறிஞ்சி உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்து.
இப்பொழுது தான் பின்னால் நின்றிருந்த என்னை பார்த்தபடியே “சாரி கொஞ்சம் லேட் பண்ணிட்டேன்” என்றபடி இருக்கையை விட்டு நகர்ந்து சென்றார்.
அவர் நகர்ந்த பிறகு அவர் பின்னால் நின்றுருந்த நான் இப்பொழுது தான் அவரின் இருக்கையில் அமர்ந்தேன் எங்கள் குடும்பத்துடன்.