சதீஷின் சந்தோஷம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 9, 2026
பார்வையிட்டோர்: 2,137 

அந்த முதியோர் இல்லத்து வாசலில் காரைக்கொண்டுவந்து நிறுத்தினான் பத்ரி. அருகில் அமர்ந்திருந்த மகன் சதீஷ், “அப்பா..இங்கதான் தாத்தாவை விட்டிருக்கீங்களா?” என்று பத்துவயது சிறுவனுக்கே உரிய ஆர்வமுடன் கேட்டபோது பத்ரிக்கு முகம் வெளிற ஆரம்பித்தது.

‘ராதிகா மட்டும் சற்று பொறுமையை கடைப்பிடித்திருந்தால் அப்பாவுக்கு இந்த நிலமை வந்திருக்காது’ என்று பத்ரிக்கு மனசு அரற்றியது.

அம்மா இறந்து போனதும் கிராமத்திலிருந்து சென்னைக்கு தன் வீட்டிற்கு வந்துவிட்ட அப்பாவை இரண்டுவருடங்களாய் நன்றாகத்தான் கவனித்துக்கொண்டான் பத்ரி பேரனோடு விளையாடிக்கொண்டு கோயில்குளம் என்று ராமநாதனும் சந்தோஷமாகத்தான் இருந்தார். ராதிகாவிற்குத்தான் வேலைக்கும் போய்க்கொண்டு மாமனாரை கவனிக்க விருப்பமில்லாமல் போனது. ராமநாதன் நீரழிவு வியாதி்க்காரர் வேறு. நேரத்திற்கு சாப்பிட ஏதாவது கொடுக்கவேண்டும், கோதுமை சாதம் சமைக்கவேண்டும், சக்கரை இல்லாத காபியை அவருக்கு மட்டும் நினைவாய் கொடுக்கவேண்டும். எல்லாவற்றையும் விட வீட்டில் இருக்கிற விலைமதிப்புவாய்ந்த பொருட்களுக்கு பாதுகாப்பாய் ராமநாதனை தனியே வீட்டில் விட்டு காலை ஒன்பது மணிக்கு ஆபீஸ்போனால் மாலை ஆறுமணிக்குத்திரும்பவேண்டும். கிராமத்துக்கார மாமனாருக்கு விதரணை போதாது யார் வந்து கதவைத்தட்டினாலும் திறந்துவிடுகிறார், தோட்டக்காரன்முதல் தபால்காரர் காய்கறிக்காரர்வரை அனைவரிடமும் வெட்டி அரட்டை அடிக்கிறார் வீட்டைத் திறந்துபோட்டுவிட்டு வாசலில்போய் நிற்கிறாராம்

“காலம் கெட்டுக்கிடக்கிறது எவனாவது உங்கப்பா கழுத்தை நெறிச்சிப்போட்டு வீட்ல இருக்கிறதை கொள்ளை அடிச்சிட்டுப்போயிடுவான்..பேசாம அவரைக்கொண்டுபோய் முதியோர் இல்லம் எதிலாவது சேர்த்துடுங்க…நானும் நிம்மதியா இருப்பேன்” என்றாள் ஒருநாள்.

பத்ரிக்கு அப்போது அதில் சம்மதமில்லை.ஆனால் அடுத்த சில நாட்களில் நிஜமாகவே விலாசம் கேட்கிற சாக்கில் திருடவந்தவனை நல்லவேளையாய் அப்போது தலைவலி என்று வீடுவந்த ராதிகா பார்த்துவிட்டு அடித்து விரட்டினாள்.”ஏன் மாமா எவன் வந்தாலும் கதவைத்திறக்கறீங்க? அறி்வே கிடையாதா உங்களுக்கு? உங்களால கஷ்டப்பட்டு சம்பாதித்தது எல்லாம் போயிடும்போல இருக்கு. லாப்டாப், சாமிரூம் வெள்ளிவிளக்குன்னு கைக்கு கிடைச்சதை அவன் எடுத்துட்டு ஓடினாலே லட்சத்துக்கு மேல ஆகும். வெறுங்கையை வீசிட்டு கிராமத்திலேருந்து வந்தீங்க வந்த இடத்திலும் வெறுமையாக்காம விடமாட்டீங்களா?”

கேட்டுக்கொண்டே வந்த பத்ரிக்கும் எரிச்சலாகிவிட்டது. அப்போது எடுத்த தீர்மானத்தின்படி அடுத்தஓரிருநாட்களில் ராமநாதனைக்கொண்டு ஒருமுதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டான்..ஆயிற்று ஒரவாரத்திற்குமேல் சேர்த்து. ‘தாத்தாவைப்பார்க்கலாம்ப்பா”என்று சதீஷ் நச்சரிக்கவும் இன்று கிளம்பி வந்துவிட்டான்.

கார்க்கதவைத்திறந்து கீழே குதிக்காத குறையாய் இறங்கினான் சதீஷ்.

பத்ரியும் கொஞ்சம் கனத்தமனத்துடன் இல்லத்தின் உள்ளே நுழைந்தான்.

ராமனாதனின் அறைக்கு இருவரும் நுழைந்தபோது அவர் ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்தவர் “தாத்தா” என்ற சதீஷின் குரல்கேட்டு வியப்புடன் நிமிர்ந்தார்.

“சதீஷ்கண்ணா..வாப்பா..பத்ரி..வாவா! எப்படி இருக்கே?” என்றுகேட்ட தன் அப்பா தெளிவாக இருப்பதைக்கண்டான்.

“அ ..அப்பா! ஸாரிப்பா…வேற வழி இல்லாம உங்கள இங்க கொண்டு விட்டுட்டேன்” நா தழுதழுத்தான் பத்ரி.

ராமநாதன் சிரித்தபடி சதீஷை மடியில் ஏற்றிக்கொண்டு, “அடடே பத்ரி என்னடா இப்படி வேதனைப்படறே? சதீஷ் மாதிரி பேரக்குழந்தை அருகில் இல்லை என்பதைத்தவிர இங்க எனக்கு என்ன குறை? ஏசி ரூம் வேளைக்கு டயபடீ்ஸ் ஆட்களுக்கான சத்தான சாப்பாடு! நேரம்பார்த்து மருந்து எடுத்துதர ஊழியர்கள். காலைல கூட்டுவழிபாடு. வளாகத்துல காலாற வாக்கிங். மாலைல மனமகிழ்மன்றத்துல ஏதும் கலைநிகழ்ச்சி அல்லது இசைவிருந்து. படுக்கப்போகிறவரை பலபேரோட பேசி அனுபவங்களைப்பகிர்ந்துகொள்கிறோம். சந்தோஷமா இருக்கேன் பத்ரி!” என்றார் உற்சாகக்குரலில்..

பத்ரிக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

விடை பெற்றுவெளியே வந்தபோது சதீஷ் கேட்டான். “அப்பா! பள்ளிக்கூடம் விட்டுவீடுவந்தா வீட்டில் முன்னே தாத்தா இருப்பார் நல்லா பேசிவிளையாடி சந்தோஷமா என் பொழுது கழியும். உங்களுக்கும் அம்மாவுக்கும் ஆபீஸ்விட்டு வீடுவந்தா என் கூடப் பேசவும் நேரம் இருக்கறதில்ல எனக்கு தனிமைல ரொம்ப வருத்தமா இருக்குப்பா…நானும் தாத்தா மாதிரி சந்தோஷமா இருக்க விரும்பறேன்…அப்பா! என்னை மாதிரி சிறுவர்களுக்கு இங்கே இடம் உண்டா?”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *