திருவாளர் N.மன்னார் ராமன், இலக்கம் 1 கோபுரத்தெரு, ஸ்ரீவில்லிபுத்தூர்
கதையாசிரியர்: ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்
கதைத்தொகுப்பு:
குடும்பம் 
கதைப்பதிவு: March 9, 2026
பார்வையிட்டோர்: 38
(A Boswell to Johnson matter of narration)
“மன்னார் ராமன் செய்த எல்லாக் கோணங்கித்தனங்களையும் அடியேன் சகித்துக் கொள்ளுவேன். ஆனால், வாய் பேச முடியாத தன் சொந்தத் தங்கையை எழும்பூர் ரயில் நிலையத்தில் அம்போவென்று தவிக்க விட்டு விட்டு, தான் மட்டும் சொந்த ஊருக்குத் திரும்பிய அந்தச் செயலை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்.”
***
புத்தகங்களை வாசிப்பதை விட, மனிதர்களை வாசிப்பது வெகு சுவாரசியமாக இருக்கும். ஒரு நாவல் என்பது ஆகச்சிறந்த இலக்கிய வடிவம் என்றும், அது ஜீவியத்தின் ஒளிரும் ஒரு புத்தகம் என்றும் புகழ் பெற்ற பிரித்தானிய புனைவாளரான டி.ஹெச்.லாரன்ஸ்1 கருதுகிறார். எனினும், மனிதர்களை விடவா ஒரு சிறந்த இலக்கிய வடிவம் இருந்து விடப்போகிறது?!
நம் கண் முன்னே ரத்தமும், சதையுமாக நடமாடும் மனிதர்கள், ஜீவனுள்ள புத்தகங்கள் அல்லவா? இவர்களை வாசிப்பதை விட, வேறு எந்த இலக்கிய வடிவம் சிறந்ததாக இருக்க முடியும்? இந்தப் பீடிகையுடன் திருவாளர் N. மன்னார் ராமனின் சரித்திரத்தை விவரிக்கிறேன்.
எங்கள் ஊரில், கிழக்கு மேற்காய் நீளும் கந்தாடைத்தெருவில் சகல முக்கிய இடங்களும் அமைந்தது தற்செயலானது தான். இந்த வீதியின் அருகே இருக்கும் பாவை பாடிய நாச்சியார் ஆண்டாள் கோவில், ஒன்றரை நூற்றாண்டுகளைக் கடந்த இந்து மேல்நிலைப்பள்ளி, வெள்ளைக்காரன் காலத்து சார்பதிவாளர் அலுவலகம், ஹிந்து பண்டாபீஸ், தனியார் நூலகம், புகழ் பெற்ற ஜவுளிக்கடைகள். இவையெல்லாவற்றையும் விட அடியேன் அடிக்கடி செல்ல விரும்பியது திருவாளர் N. மன்னார் ராமனின் கோபுரத் தெரு வீட்டுக்குத் தான்.
சி.எம்.எஸ். பள்ளியின் ஆசிரியர் ராகவன் சாரின் வீட்டுக்கு எதிரில் சகலரும் வந்து அமரும் திண்ணையில் தான் இக்கட்டுரையின் நாயகன் மன்னார் ராமனை முதன் முதலாய்ச் சந்தித்தேன். அரைக்கைச் சட்டையும், கார்ட்றாய் பேண்டும், மூவாயிரத்து எழுநூற்று ஐம்பத்து எட்டு தோல் சுருக்கங்கள் கொண்ட சிறிய ஓவல் வடிவ முகத்தில் ஒரு அரை வட்டக் கண்ணாடியும் அணிந்து கொண்டிருந்தார். அவருடைய ஒட்டு மொத்த உடல் எடையே 14 கிலோ தான் இருக்கும், அவர் அணிந்திருக்கும் உடைகளோடு சேர்த்து.
அதே தெருவில் குடியிருந்து வந்த டைப்பிஸ்ட் வரதன் மாமா தன் வீட்டு வாசலில் “Expert in Court matters” என்று போர்டு ஒன்றை மாட்டி வைத்திருப்பார். கோர்ட் விஷயங்களை டைப் அடிப்பவர். அந்தத்தொழில் செய்தே தனது இரண்டு பெண்களையும் கரையேற்றி விட்டார். ஆனால், வரதன் மாமாவுக்கு டைப் அடிப்பதைப்பற்றி ஒன்றுமே தெரியாது ; எல்லாமே தப்புத்தப்பாக டைப் அடிப்பார் என்று மன்னார் ராமன் கேலியாக விமர்சிக்க ஆரம்பித்த போது, எங்கள் பேச்சு ஆரம்பமானது. வரதன் மாமாவைப் பற்றிச் சொல்லும் போது, “He is a full-fledged cipher” – அவர் ஒரு முழு பூஜ்யம் என்று சொன்ன போது, நான் என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். அங்கு தான் எங்கள் நட்பு தொடங்கியது.
அவரது வீடு எங்கே என்று விசாரித்துக்கொண்டேன். அதே தெருவின் கிழக்கு முனையில் தான் அவரது வீடு இருக்கிறது என்று சொன்னார். அடுத்து வரும் நாட்களில், அவரைச் சந்திக்க ஆவலாதியாய் இருந்தேன். பிழையின்றி ஆங்கிலம் பேசுவோரைக்கண்டால், எனக்கு ஆச்சரியம் மேலிடும். அவர்களை வியந்து பார்ப்பேன்.
அவரது வீட்டில் அவரைச் சந்தித்த நாள் அற்புதமானது என்பேன். மேற்குப் பக்கமாய் வாசல் வைத்த அவரது வீடு, பழைய காலத்து சுண்ணாம்புக் காரை வீடு. வாசலில் மூங்கில் தப்பையில் கதவு. உள்ளே பழுப்பு நிறத்தில் சுவர்கள். வடக்குப் பக்கச் சுவரில் இருக்கும் ஜன்னல் வழியாய் வீட்டுக்குள் வரும் சூரிய வெளிச்சம். எனக்குப் பழைய காலத்து வீடுகளின் அமைப்பைப் பார்ப்பதில் இருக்கும் ஆவல், அவற்றைப் பார்க்கும் போது வரும் வியப்பு, ஒரு போதும் தணிந்ததில்லை. ,
பகல் நேரங்களில் அவரது வீட்டின் முன்புறம், தண்ணீர் தெளிக்கப்பட்டு, பளிச்சென்று இருக்கும். உள்ளே சின்ன ரேழி. அதைத்தாண்டினால், மையக்கூடம். இரண்டாய்ப்பிரிந்து, ஒரு புறம் மடப்பள்ளி. மற்றொரு புறம் கொல்லைப்புறம் செல்வதற்கான பாதை. அவரது வீட்டுத் திண்ணையில் இருந்த நீள அந்தக்காலத்து மர பெஞ்சில் அமர்ந்து கொண்டு நாங்கள் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்போம். அது, ஒரு குறிப்பிட்ட பொருளில் இல்லாமல், அனைத்துத் தலைப்புகளிலும் அலைந்து கொண்டிருக்கும். இலக்கியம், அரசியல், சினிமா, ஐரோப்பாவின் நிலைமை, குற்றாலத்தில் அருவிக்குளியல், திருக்கோவில்களில் அரசு செய்யும் திருட்டு, உள்ளூர் தாசில்தார் சேர்த்த சொத்துக்கள், ஸ்ரீவில்லிபுத்தூரின் முன்னாள் மனிதர்கள், விலைவாசிப் பிரச்சனை, அவ்வப்போது கொட்டித் தீர்க்கும் அடிக்கும் அடை மழை, ராஜபாளையத்து சப்பட்டை மாம்பழம், என்று சகலத்தைப் பற்றியும் நாங்கள் பேசிக்கொண்டிருப்போம். அவரது ஆங்கிலம், இலக்கணச் சுத்தமாக இருக்கும். எந்த ஒரு வாக்கியத்திலும் இருக்கும் இலக்கணப் பிழையை கண்டுபிடித்துத் திருத்தி விடுவார். அவரது வீட்டின் திண்ணையில், பகல் பொழுதிலும் நல்ல குளிர்ச்சி இருப்பதைக் கண்டிருக்கிறேன். மேற்குப்பக்கம் பார்த்த வாசலின் மூங்கில் தப்பைக்கதவின் வழியாக கிழ-மேலாக கந்தாடைத் தெருவில் நடக்கும் போக்குவரத்தை நாள் முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம். சந்தியா காலத்திற்கு மேல், வீட்டிற்குள் நாற்பது வாட்ஸ்
பல்புகள் ஒளி தந்து கொண்டிருக்கும். விளக்குகளைப் போட்ட பின்பு, யாராவது வீட்டிற்குள் நடமாடினால், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கனவுலகில் நடமாடுவது போலக்காட்சி தரும்.
பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கி, இருபதாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த ஆங்கில இலக்கியத்தின் ஜாம்பவான்கள் எவரையும் மன்னார் ராமன் அறிந்திருப்பார். அவரது புத்தகச் சேகரிப்பு ஒரு சிறு நூலகம் என்று தான் சொல்ல வேண்டும். சென்னை, நாக்பூர், கல்கத்தா, பாம்பே, ஹைதராபாத், கொச்சின், புது டில்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், ஆக்ரா என்று அவர் சுற்றாத ஊர்கள் இல்லை. எங்கு போனாலும், நல்ல புத்தகங்களைத் தேடிப்பார்த்து, வாங்கி வந்து விடுவார்.
ஆங்கில செவ்வியல் இலக்கியத்தின் முற்பிதாக்களான ஆலிவர் கோல்ட்ஸ்மித், டாக்டர் சாமுவேல் ஜான்சன் அலெக்சாண்டர் போப், அடிசன் அண்ட் ஸ்டீல், சார்ல்ஸ் லேம்ப், சாமுவேல் ஸ்மைல்ஸ் ஆகியோர் மரித்த பிறகும், அவர்களை அனுதினமும் நினைத்துக் கொண்டிருந்தது அவர்களது சொந்த இனமாகிய ஆங்கிலேய இனம் அல்ல. நமது மன்னார் ராமன் தான் என்று அடித்துச் சொல்லுவேன். டாக்டர் சாமுவேல் ஜான்சன் எழுதிய கரடுமுரடான ஆங்கிலத்தை அப்படியே மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு, நினைத்த போது அதை ஒப்பிப்பார் ராமன்.
தான் ஒரு நாள் இரவு நடைப்பயிற்சி போன போது ஒரு கிராமத்துக்காரனைப் பார்த்ததைப் பற்றி சாமுவேல் ஜான்சன் சொன்ன வரிகளை ராமன் அப்படியே வார்த்தை பிசகாமல் சொன்ன போது, அது என் மனதில் கல்வெட்டு போல எழுதப்பட்டு விட்டன.
“While I was perambulating in the nocturnal hours of the previous day through the combined latitudes and longitudes, I spied a rustic, whom I interrogated and with the rotary motion of the cudgel in my hand, I made his perpendicularity into horizontality.”
ஒரு நீதிபதி, நீதிமன்றத்தில் கேட்ட கேள்விக்கு ஆங்கில ஜாம்பவான் டாக்டர் சாமுவேல் ஜான்சன் தந்த பதில் தான் இது. ஜான்சன் முந்தைய நாள் இரவில், நகரின் தெருக்களில் குறுக்கும், நெடுக்குமாக சாவதானமாகப் போய்க்கொண்டிருந்த போது, ஒரு கிராமத்தானைக் கண்டு, அவனிடம் ஏதோ கேள்வி கேட்டதாகவும், பிறகு, தனது கையில் இருந்த கைத்தடியைக்கொண்டு அவனை ஓர் அடி அடித்து, நின்றிருந்த அவனைத் தரைமட்டமாக வீழ்த்தியதாகவும் சொல்லியிருந்தார். இதை ராமன் என்னிடம் விளக்கிய போது, அசந்து போய் விட்டேன்.
இதே போல, ஒரு பெண்ணிடம், ஒரு சிட்டிகை மூக்குப்பொடியை ஜான்சன் எவ்வாறு கேட்டார் என்பதற்கு இன்னொரு நீண்ட வாக்கியத்தைச் சொன்னார்.
Madam, will you please allow me to dip my digital extremities into that odoriferous concavity and extract therefrom some pulverised atoms which when blown through my nasal cavities would cause grateful titillation to my olfactory nerves?
இதைத் தமிழில் அவ்வளவு எளிதாக மொழிபெயர்க்க முடியாது என்றெண்ணுகிறேன்.
கோல்ட்ஸ்மித் எழுதிய “விக்கார் ஆஃப் வேக்ஃபீல்ட்” என்ற நூலைப்பற்றி அவர் விவரித்ததை செவி குளிரக் கேட்டுக்கொண்டே அவரது வீட்டுத் திண்ணையில் நேரம் போவதே தெரியாமல் அமர்ந்திருப்பேன். அந்த நூலை மதராஸ் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சர் சி.பி. முத்துசாமி ஐயர் நூறு முறை ( ஆமாம். நூறு முறை தான் ) வாசித்திருப்பதாகவும் அறிந்து கொண்டேன். ஷேக்ஸ்பியரை முறையாக வாசித்தவர் மன்னார் ராமன். அவர் அடிக்கடி, மேற்கோள் காட்டியதும் ஷேக்ஸ்பியர் மற்றும் சாமுவேல் ஜான்சனிலிருந்து தான்.
ஒரு தடவை நாங்கள் இருவரும் அமர்ந்தால், இரண்டு அல்லது மூன்று மணி நேரமாவது உரையாட வேண்டும் என்பது அவர் எனக்கு விதித்த நிபந்தனை. அவருக்குச் சமமாக இலக்கிய சம்பாஷணை செய்ய எங்கள் சிறிய ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருவரும் இல்லாதது துரதிருஷ்டமே. சாமுவேல் ஜான்சன் எழுதிய புதினங்களான “தி ரேம்ப்லர்” மற்றும் “தி ஐட்லர்” என்ற நூல்களைக்குறித்து, அவர் விளக்கிச் சொன்னதை இன்று வரை நினைவில் வைத்திருக்கிறேன். நூலகத்தின் மர அலமாரியிலிருந்து ஆர்வமுள்ள ஒரு வாசகரால் அது எடுக்கப்பட்டு, ஒரு சில பக்கங்கள் வாசித்து முடிப்பதற்குள், அவசர அவசரமாக அது மீண்டும் அதே அலமாரியில் வைக்கப்பட்டதாம். காரணம், ஜான்சனின் ஆங்கிலம் அவ்வளவு கரடு முரடானது.
1980’களில் பொழுதுபோக்கு என்பது திரையரங்கில் மட்டும் தான். பலரும் நூலகத்திலோ. அல்லது வீட்டிலோ, புத்தகமும் கையுமாக அமர்ந்து வாசித்துக்கொண்டிருந்த காலம். பருவ இதழ்களின் விற்பனை உச்சம் தொட்ட காலம் அது. தினசரிகளின் முகத்தில் தான் தமிழகமே விழித்தது. அந்தக் கால கட்டத்தில், அவர் நாள் தவறாமல், நூலகம் செல்லுவார். நிறைய வாசிப்பார். அவர் தொடாத ஆங்கில நூல்களே இல்லை.
இப்படிப்பட்டவருக்கு என்ன தொழில் என்று நீங்கள் கேட்பீர்கள். எந்தத்தொழிலும் கிடையாது. ஆனால், எல்லாத் தொழிலும் தெரியும். மெடிக்கல் ரெப்பாக வேலை செய்திருக்கிறார். அவரது மாதச் சம்பளம் தரப்படாத போது, தன்னிடம் கம்பெனி தந்த மருந்து பாட்டில்களை விற்று அந்தப்பணத்தை எடுத்துக்கொண்டதாக அவரே என்னிடம் சொன்னார். பள்ளி ஆசிரியர் வேலை தெரியும். ஒரு தடவை, தெற்கு ரத வீதியில், ஜெயராம் ஷெட் அருகே ஜான் ஸ்டீபன் நடத்தி வந்த “பி.டி.சி. டூட்டோரியல் கல்லூரி”யில் 1௦, 12 வகுப்பில் தவறிப்போன மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்போனார். மாதச் சம்பளம் ரூபாய் ஐநூறு. இரண்டு மாதங்கள் அங்கு வேலை பார்த்தார். தினசரி, அரைக்கைச் சட்டையும், கார்ட்ராய் பேண்டும் அணிந்து கொண்டு வேலைக்குப் போய் விட்டு வந்தார்.
அவரது தரம் உயர்ந்த ஆங்கிலத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், மாணவர்களும், டூடோரியலின் முதல்வரும் திணறினார்கள். வின்ஸ்டன் சர்ச்சில் தான் மறு ரூபம் எடுத்து வந்திருக்கிறாரோ என்று டூட்டோரியல் கல்லூரியின் முதல்வர் ராமச்சந்திரன் பலரிடமும் சொல்லி வியந்தார். சிவகாசியில், தீப்பெட்டி தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில், கடிதப் போக்குவரத்தைச் சில ஆண்டுகள் பார்த்துக்கொண்டிருந்தார். பண வரவு இல்லாத போது, தெவசங்களில், பிராமணார்த்தம் சாப்பிட்டு தட்சிணை வாங்கிக்கொண்டு வந்திருக்கிறார்.
தான், மைசூர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பட்டம் பெற்றதாக என்னிடம் சொன்னார். அவரது திருமணப்பத்திரிக்கையிலும் அவ்வாறு அச்சிடப்பட்டிருப்பதை நானே கண்டேன். ஆனால், அவரது எம்.ஏ., சான்றிதழ்களை நான் பார்க்க வேண்டும் என்று கேட்ட போது அவர் காட்ட மறுத்து விட்டார். மகாராஷ்ட்ராவிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த “மாள்வா கிரானிக்கிள்” என்ற இதழின் நிருபராக சில காலம், தான் வேலை பார்த்ததாக அவர் சொன்னார். ஐம்பதுகளில் இருந்த அவர், எங்கள் ஊரில் இருந்த வழக்கறிஞர்களுக்கு பிராது தயார் செய்து தந்து பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார். கற்றறிந்த வழக்கறிஞர்கள் கூட அவரிடம் வந்து சிவில் வழக்கின் பிராதுகளைத் எழுதி வாங்கிக்கொண்டு போவார்கள்.
அவர் சொல்வது தான் கட்டணம். அதை வழக்கறிஞர்கள் தந்தே ஆக வேண்டும். தலையில் விக் வைத்த ஆங்கிலேய நீதிபதிகள் உரைத்த முத்து முத்தான ஆங்கிலத் தீர்ப்புகள் தொகுக்கப்பட்டிருக்கும் பழைய லெதர் பைண்டிங் போடப்பட்ட ப்ரீவி கவுன்சில், க்வின்ஸ் பெஞ்ச் தீர்ப்புகளை அவர் எடுத்து வைத்துக்கொண்டு வரி வரியாக விளக்கி அர்த்தம் சொன்ன போது, நான் வியப்படைந்தேன். அவர் இருந்திருக்க வேண்டிய இடம், சென்னை உயர் நீதிமன்ற வளாகம். அங்கே இருக்கும் மூத்த வழக்கறிஞர்களுக்கு இவர் ரொம்ப உதவிகரமாக இருந்திருப்பார். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, எங்க ஊரிலேயே அவர் தங்கி விட்டார்.
அவரது குடும்பம் நாக்பூரில் இருப்பதாகவும், தன் மனைவியும், இரண்டு பிள்ளைகளும், அங்கேயே வளர்ந்து வருவதாகவும், தன் பிள்ளைகளுக்கு நான்கு மொழிகள் தெரியுமென்றும் அவர் பெருமையுடன் சொன்னார்.
அவரது குடும்பத்தைப்பற்றி அவர் கொஞ்சம் தான் என்னிடம் சொல்லியிருந்தார். இரண்டு உடன் பிறந்தோர் அவருடன் வீட்டிலேயே இருந்து வந்தனர். ஒருவன் நம்பி. பத்தாம் வகுப்பு படித்து முடிப்பதற்குள்,, பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியரே சோர்ந்து, வெறுப்படையும் அளவுக்கு படிப்பில் அவன் இழுத்துக்கொண்டிருந்தான். பத்தாம் வகுப்புச் சான்றிதழை வைத்துக் கொண்டு, அமெரிக்காவிலோ, பிரான்சிலோ, ரஷ்யாவிலோ வேலை கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தவன், அப்படி நடக்காததால், சோர்வுற்று, வீட்டிலேயே கிடந்து உழல ஆரம்பித்தான். ஆறரை அடி உயரம் கொண்ட நம்பி, வெறும் எலும்புக்கூடு நடந்து போவதைப் போலத்தான் நடந்து போவான். அது ஸாம்பி போலத்தான் இருக்கும். சிவப்பேறிய கண்கள், பின்புறம் இழுத்து வாரிய தலைமுடி. அழுக்கு அப்பிக்கொண்டு நிற்கும் நான்கு முழ வேஷ்டி. அடிக்கடி பீடி குடிக்கும் பழக்கம். இது தான் மன்னார்
ராமனின் தம்பி, நம்பியின் அறிமுகம். “My brother is an expert in cycling” என்று மன்னார் ராமன், தனது தம்பி, நம்பியைப் பற்றிச் சொன்ன போது, நம்பியின் சைக்கிள் ஓட்டும் திறமைக்காக, அவனுக்கு டி வி. எஸ். கம்பெனியில் தலைமை நிர்வாகியாக பதவி வகிக்கும் பெரிய அலுவலக வேலை கிடைத்து விடும் என்று தான் நானும் எண்ணிக்கொண்டிருந்தேன்.
வீட்டில் இன்னொரு ஆத்துமா, ராமனின் தங்கை பத்மா. காது கேளாத. தெளிவாய்ப் பேச முடியாத ஒரு பெண். கவண் போல வளைந்து விட்ட கால்கள். வளர்ச்சி குன்றி மெலிந்து, ஒடுங்கிய உடல். குச்சியாய் உடம்பு. சாய்ந்து, சாய்ந்து தான் நடப்பார். ஆனால், முகமோ, எப்போதும் பிரகாசமாய் எலுமிச்சை நிறத்தில் ஜொலிக்கும். நெற்றியில் எப்போதும் இருக்கும் ஒற்றைக்கோடான சிவப்பு ஸ்ரீசூர்ணம். இந்தப்பெண்ணுக்குத் திருமணம் ஆகவில்லை. ராமன், இல்லாத போது, நான் அவரது வீட்டுக்குப்போனால், பத்மா தான் என்னை வரவேற்பார். அவர் பேசுவதைப் புரிந்து கொள்வது ரொம்ப கஷ்டம். ஆனால், ஒவ்வொரு தடவையும் அவர் என்னிடம் பேசும் போது, “ராமன் முண்டம். ராமன் முண்டம்” என்று தான் பேச ஆரம்பிப்பார். ஒரு தடவை, என்னிடம் ஒரு இன்லான்ட் கடிதத்தைக் கொடுத்து அதைத் தபாலாபீஸில் சேர்த்து விடச்சொன்னார். அதன் உறை மேல் இருந்த முகவரியில், கோயம்புத்தூர் விலாசம் எழுதியிருந்தது. அந்த விலாசத்தில், “N. அச்சுதன்” என்று எழுதியிருந்தது. அச்சுதன் என்ற அந்த பிரகஸ்பதி, ராமனின் சகோதரன் என்று உடனே கண்டு கொண்டேன். இவருக்கு எத்தனை சகோதர, சகோதரிகள் என்ற கணக்கும் எனக்குத் தெரியாது.
எந்த வேலைக்குமே போகாமல், இவரால் எப்படி காலட்ஷேபம் செய்து கொண்டிருக்க முடிகிறது என்று எண்ணிப்பார்த்ததுண்டு. இவரது ஆங்கிலமே இவருக்கு அன்றாடம் சோறு போட்டதுண்டு. “தமிழ் ஒரு நுய்சன்ஸ். தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி. தமிழ் படித்தால் பிச்சை தான் எடுக்க வேண்டும். புலவர்கள் எல்லாம் பொய்யர்கள்” என்று வெண் தாடி வேந்தர், பகுத்தறிவுப்பகலவன் சொல்லி வைத்து விட்டுப்போனது யாருக்குப் புரிந்ததோ இல்லையோ, நம்ம மன்னார் ராமனுக்கு ரொம்பவே புரிந்து விட்டது. தமிழ் சோறு போடாது. ஆங்கிலம் காப்பாற்றும் என்று ரொம்பத் தெளிவாக, நம்பிய அவர், ஆங்கிலத்தில் நொண்டியடிக்கும் உள்ளூர் வக்கீல்களின் தயவில் வயிறு வளர்த்து வந்தார்.
சிவில் வழக்கின் பிராதுகளைத் தமிழில் எழுதினாலே போதும். ‘சட்டை போடாத குடியானவனுக்கு எதற்கு ஆங்கிலத்தில் பிராது? எத்தனை பேருக்கு ஆங்கிலம் புரியும்?’ என்றெல்லாம் எங்க ஊரு வக்கீல்கள் எண்ணாத காரணத்தால், நமது மன்னார் ராமனுக்கு மவுசு அதிகமாகியது. சாயங்கால வேளைகளில், அவர் வெகு சாவகாசமாக தனது கோபுரத் தெருவில் உள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்டு, தெக்குப்பக்கமாகச் சென்று, தெற்கு ரத வீதி என்னும் கச்சேரி ரோட்டில் நடந்து போவார். எங்காவது ஒரு வக்கீலின் ஆபீஸ் தென்பட்டால், உள்ளே நுழைந்து விடுவார். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பத்து
நிமிடங்கள் பேசிக்கொண்டிருப்பார். வந்திருப்பவரின் தகுதி, திறமை ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வக்கீல், தனது தமிழ் பிராது ஒன்றை இவரிடம் கொடுத்து, அதை மொழி மாற்றம் செய்யக் கேட்டுக்கொள்ளுவார். இவருக்கு அடித்தது யோகம். அதை வாங்கிக் கொள்ளுவார். வீட்டுக்கு வந்து ஒரே நாளில் அதை மொழியாக்கம் செய்து கொடுத்து விட்டு, சில்லரையை வாங்கிக்கொண்டு நேராக பலசரக்குக் கடைக்குப் போய் விடுவார். அவரது சம்பாத்தியம், வீட்டுக்குப் பலசரக்கு வாங்க மட்டுமே பயன்பட்டது. அவர் பார்த்தது கிட்டத்தட்ட துபாஷி வேலை தான். ஆனால், அவரது ஆங்கிலம் பட்லர் ஆங்கிலம் அல்ல என்று கண்டிப்பாகச் சொல்லுவேன். பழைய ஒரு பக்கக் காகிதங்கள் மற்றும் ஒரு பால் பாய்ன்ட் பேனா இருந்தால் போதும், எதையாவது எழுத ஆரம்பித்து விடுவார்.
என் அப்பாவிடம் இவரைப்பற்றிக் கேட்டேன்.
“மன்னார் ராமனா, அவன் ஒரு ப்ராடாச்சே.. அவன் அப்பா, டவுட்டா2 இருந்தார்.”
“டவுட்டுன்னா என்னப்பா ?”
‘பல வக்கீல்களுக்கு கேஸ் கிடைக்காது. அவங்களுக்கு கேஸ் பிடிச்சுக் கொடுக்கற ப்ரோக்கர் தான் டவுட். இவனோட அப்பா பேரு திரளி நாராயண ஐயங்கார். அவரும் ஒரு டவுட்டு தான். நிறைய சொத்து வெச்சுருந்தார். எல்லாத்தையும் வித்துட்டு ஒண்ணுமில்லாம ஆயிட்டார். அவருக்கு ஆறு பிள்ளைகள். எல்லாரும் அட்ரசே இல்லாம போயிட்டாங்க.”
“இந்தாளு கிட்ட இப்ப என்ன இருக்கு ?”
“வீடு மட்டும் தான் வெச்சுண்டுருக்கான்.”
மன்னார் ராமனின் அம்மாவைப்பற்றி என் அப்பா சொன்னதை இங்கு எழுத முடியாத நிலைமையில் இருக்கிறேன்.
ஸ்ரீவில்லிபுத்தூரின் சாலைகளில் நாங்கள் ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டே நடந்து போன போது எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தவர்கள் உண்டு. அநேகமாக நான் கற்றுக்கொண்ட ஆங்கிலத்தில் பெரும்பான்மை அவரிடமிருந்து கற்றுக்கொண்டது தான் என்பேன். இங்கிலாந்தில் பாரட்லா படிப்பைத் தரும் நான்கு சட்டக் கல்லூரிகளின் பேர்களை அவர் வரிசையாக ஒப்பிப்பார்.
“க்றேசஸ் இன். லிங்கன்ஸ் இன். மிடில் டெம்பில். இன்னர் டெம்பில். இங்க தான், பாரட்லா படிக்க முடியும். இந்த நாலுமே பெஸ்ட் இன்ஸ்டிட்யூஷன்.”
“அப்படியா?”
இணைய தளங்கள் இல்லாத அக்காலத்தில் இவர் சொல்வதே சரி என்று நம்பிக் கொண்டேன். டில்லியின் கார் காலம் பற்றி அவர் தந்த வருணனைகள் அபாரம். அங்கு உள்ள பூங்காக்கள், வீதிகள், கட்டிடங்கள், அலுவலகங்கள், மரங்களில் புஷ்பிக்கும் பூக்கள், வீதிகளில் நடமாடும் மக்கள், அங்கு கிடைக்கும் உணவு, தெருவோரங்களில் விற்கப்படும்
பழங்கள், பெரிய புத்தகக்கடைகள் என்று டில்லியை வார்த்தைகளிலேயே என் கண் முன்னே காட்டி விடுவார். அந்தக்கால கட்டத்தில் நான் நிறைய வாசிக்க ஆரம்பித்திருந்தேன். இந்த இந்த லிட்டரேச்சர் புத்தகம் இப்படிப்பட்டது என்று விலாவாரியாக அவர் விளக்கி ஆற்றுப்படுத்திய போது, எனக்கு ஒரு கல்லூரிப் பேராசிரியரே தேவையில்லாமல் இருந்தது.
“நான் அடுத்த வாரம் டெல்லி போறேன்” என்பார்.
“எதற்காக?” என்பேன்.
“I have my business there.”
“என்ன பிஸ்னஸ்?”
“லா. லிடரேச்சர்.”
“எனக்கு அப்போது, பதினெட்டு வயது. லாவும், லிட்டடேரச்சரும் வைத்துக்கொண்டு ஒருவர் பிஸ்னஸ் பண்ண முடியும் என்று எனக்கு எண்ணத் தோன்றவில்லை.
டில்லி புறப்பட்டால், திரும்பி வர ரெண்டு வாரங்கள் ஆகும். டில்லியில் தான் பார்த்த இடங்கள், சந்தித்த மனிதர்களைப் பற்றி விலாவாரியாகப் பேசிக்கொண்டிருப்பார். டில்லியில் இருக்கும் “கல்காட்டியா, புக் வர்ம்” ஆகிய புத்தகக் கடைகளில் தான் தேடிப்பார்த்து வாங்கிய புத்தகங்களைப் பற்றிப் பேசுவார். அவரது வீட்டின் மேல் மாடியில் இருந்த அடைசலான சிறு அறையில், அவர் வாங்கிய, வாசித்த புத்தகங்கள், அவரது அப்பா காலத்திலிருந்து வீட்டில் தங்கி விட்ட புத்தகங்கள், யாவும் சேகரம் செய்யப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு புத்தகத்தையும் தனது கையில் வைத்துக்கொண்டு அதை ஒரு புரட்டு புரட்டி விட்டு, அதைப்பற்றி அவர் அறிமுகம் செய்து பேசும் போது, நான் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பேன். அவருக்குள் இன்னொரு டாக்டர் சாமுவேல் ஜான்சன் இருப்பதை அப்போது அறிந்து கொண்டேன்.
நாட்கள் செல்லச்செல்ல அவரைப்பற்றி அறிந்து கொள்ளும் சுவாரசியம் அதிகரித்துக் கொண்டே போனது. அவரது, நடை, உடை, பாவனை, அவரது தோற்றம் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு அவர் கொஞ்சம் மனநிலை பிறழ்ந்தவர் என்றெல்லாம் அனுமானித்தவர்கள் உண்டு. ஆனால், அவரிடம் தெரிந்தது ஒரு ஆங்கிலோ – இந்தியனின் பாவனைகள். அல்லது பதினெட்டாம் நூற்றாண்டின் பிரித்தானிய இலக்கிய வட்டத்தின் மரபியல் ரீதியிலான பாவனைகள் என்று தான் எனக்குத் தோன்றியது.
இவரது வீட்டுக்கு அருகே, கந்தாடைத்தெருவில், வாடகை வீட்டில் குடியிருந்து வந்த ஆராவமுதன் எனக்கு நண்பன் தான். எஸ்.எஸ்.எல்.சி. மட்டுமே படித்த அவனுக்கு எந்த ஒரு உருப்படியான வேலையும் கிடைக்கவில்லை. நான் 1980-களின் கால கட்டத்தைச் சொல்லுகிறேன்.
ஒரு நாள் சந்தியா கால வேளையில், காய்கறி மார்கெட் அருகே என்னைப் பார்த்த ஆராவமுதன்,
“என்ன மன்னார் ராமன் கிட்ட ரொம்ப நெருங்கிப் பழகுறீங்களாமே?!”
“ஆமா, இப்ப என்ன ?”
“பாத்து இருங்க. அந்தாளு ஒரு மாதிரி. பலர் கிட்டயும் ஏமாத்தி பிராடு வேலை பண்ணியிருக்கான்.”
“எனக்கு தெரியாதே ! நீங்க சொல்லித்தான் தெரியும்.”
“அவன் சரியான போர் ட்வென்டி. பாத்து நடந்துக்கங்க.”
“சரி!”
“நீங்க எனக்கு வேண்டப்பட்டவங்க. அதனால சொல்றேன்.”
“தேங்க்ஸ் !”
“அவனோட பொண்டாட்டி எங்க போனாங்கன்னு தெரியுமா ?”
“அவங்க, நாக்பூர்ல இருக்கறதா அந்தாளு சொன்னாரு.”
“நாக்பூர்ங்கறது சரி தான். ஆனா, அவங்க ஏன் நாக்பூர் போனாங்கன்னு அந்தாளு உங்க கிட்ட சொன்னானா ?”
“தெரியாதே !”
“இவன் ஒரு மாதிரி. இவனோட வைப் ரொம்ப நல்லவங்க. தங்கமான குணம். அவங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க. ரெண்டுமே ஆண் பிள்ளைகள் தான்.”
“ஆமா, அவர் சொன்னாரு !”
“அவர்னு சொல்லாதீங்க. அவன்னு சொல்லுங்க.”
“என்ன இருந்தாலும் படிச்சவரில்லையா ?!”
“படிச்சவன் தான். ஆனா, படிச்சவன் என்ன காரியம் பண்ணி வெச்சான் தெரியுமா?”
“என்ன பண்ணினான்?”
“இவனோட வைப் பேரு கமலா. ராத்திரி நேரத்துல அவங்க கிட்ட படுத்துக்கிட்டு இருக்கற போது வெறி வந்து, இவன், அவளோட மார்புல கடிச்சு வெச்சுட்டான். ராத்திரி பூராவும் அந்தக் கமலாவை சித்திரவதை பண்ணியிருக்கான் இந்த மெண்டல். இது பல நாட்கள் நடந்துருக்கு. எந்தப் பொண்ணுக்கும் பொறுமை உண்டு. ஒரு நாளா, ரெண்டு நாளா? தினசரி, இவன் அவளோட மார்புல காயம் வர்ற அளவுக்கு கடிச்சு வெப்பான். இவனோட வைப் இந்த அக்கிரமத்தைத் தாங்கிக்க முடியாம, ஒரு நாள் வீட்டை விட்டு வெளிய ஓடி
வந்துட்டா. இவங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுல இருக்கற ஒரு கொத்தனாரு, அந்தக் கமலா மேல இரக்கப்பட்டு, தன்னோட வீட்டுல பாதுகாப்பா தங்க வெச்சுக்கிட்டாரு. இவங்களோட அப்பா நாக்பூர்ல இருக்காரு. அந்தக்கொத்தனாரு, இந்தப்பொண்ணோட அப்பாவுக்கு விலாவாரியா லெட்டர் போட்டு, அவரை உடனே இங்க ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரவழைச்சு, அந்தப் பொண்ணை அவங்க அப்பாவோட நாக்பூருக்கே அனுப்பி வெச்சுட்டாரு. அன்னிக்கு இவன் வைஃப் கமலா, இவனை விட்டுட்டுப் போனவங்க தான். அப்புறம் திரும்பி வரவே இல்லை. இவன் தான் அப்பப்ப போயி, வைபையும், பிள்ளைங்களையும் பாத்துட்டுத் திரும்பி வருவான்.”
“இவன் என் கிட்ட, டில்லி போறேன்னு சொல்றான்.”
“இவனுக்கு அங்க என்ன வேலை? இவனோட கதை ஒண்ணும் அங்க ஆவாது. இவன், நேரா அந்த நாக்பூருக்குப் போவான். அங்க இவனோட மாமனார், சரி, தொலைஞ்சு போறான்னு நெனைச்சுக்கிட்டு, வீட்டுக்குள்ள வெச்சு, பத்து நாளைக்கு சோறு போடுவாரு இவன் நல்லா, மாமியார் வீட்டுச் சமையலை ஒரு பிடி பிடிப்பான். இவனோட மாமனார், ஊருக்குப் பொறப்படுற போது, இவன் கிட்ட வழிச்செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைப்பாரு. அங்க நாக்பூர்ல தங்கிட்டு, இங்க வந்து, டில்லிக்குப் போனேன்னு கதை விடுறான். யாரு போயி இவனைப் பாக்கப்போறா?”
சுற்றுப்புறச்சூழல் மாசடைந்த இவ்வுலகில், நோய் நொடி இல்லாமல், ஒரு மனிதனும் வாழ முடியாது என்று எண்ணுகிறேன். ராமனுக்கு ஆஸ்துமா வியாதி இருப்பது எனக்குத் தெரிய வந்தது. அடிக்கடி நெஞ்சில் சளி கட்டிக்கொள்ளும். அருகே எங்காவது சுவரில் துப்பி விடுவார். வீட்டின் கூடத்தில், தரையின் சிமென்ட் பூச்சு அரிக்கப்பட்டு, சிவப்பு சதுரச் செங்கல்கள் தெரிந்து கொண்டிருந்தது. சுற்றுச் சுவர்கள் கிருத யுகத்தில் வெள்ளையடிக்கப்பட்டது போலக் காட்சியளித்தன. அந்தக் கூடத்தின் ஓரத்தில், பழைய, அழுக்கு மெத்தை ஒன்றை விரித்து, அதன் மேல் படுத்துக்கொண்டு ராமன் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார். அவரது வியாதிக்கு “டெட்ரால்” என்ற மாத்திரை உண்டு. அதன் விலை பத்து பைசா. வடக்கு ரத வீதியில் பாண்டியன் மெடிக்கல் ஷாப்பில் ஒரு டெட்ரால் வாங்கி, அங்கேயே வாய்க்குள் போட்டுக்கொள்ளுவார். ஆஸ்துமா அவரது உடலை உருக்கிக் கொண்டிருந்தது. அவரோ, எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஏதோ ஓர் ஆங்கில நாவலை வாசித்துக்கொண்டிருப்பார். இரவும், பகலும் தொடர்ந்த புத்தக வாசிப்பு அவரது உடலை மெலிய வைத்தது. “அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு”3 என்று சாலமோன் தீர்க்கதரிசி கூறுகிறான்.
புலமையும், வறுமையும் சேர்ந்தே இருக்கும் என்று அந்நாளில் நம்மவர்கள் கூறிய கூற்று எத்தனை மெய்யானது தெரியுமா? இது இந்தப் பாரத தேசத்துக்கு மட்டுமல்ல. எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் என்று தான் எண்ணுகிறேன். சரஸ்வதியும், லட்சுமியும் ஒரே இடத்தில் வாசம் பண்ணுவதில்லை.
இந்த மன்னார் ராமன் ஏதாவது ஒரு சின்ன வேலைக்குப் போயிருந்தாலும் கூட, அவரது நிலைமை ரொம்ப மோசமடைந்திருக்காது. ஆனால், எந்த ஒரு வேலைக்கும் போக விருப்பமில்லாமல் இருப்பவரிடம், வறுமை தங்கி விடும். லட்சுமி போயி, தரித்திர தேவி வந்து விடுவாள். குந்தித்தின்றால், குன்றும் மாளும் என்ற பழமொழியை மன்னார் ராமன் அறிந்திருக்கவில்லை.
கந்தாடைத்தெருவும், கோபுரத் தெருவும் சந்திக்கும் வட-கிழக்கு மூலையில், தான் குடியிருக்கும் கதவு எண். 1-ம் நம்பர் வீட்டை ராமன் ரூபாய் இருபதாயிரத்துக்கு ஒத்திக்கு வைத்திருந்தார். அதை ஒத்திக்கு வாங்கியவர் இராஜபாளையத்தைச் சேர்ந்த பூத்தானம் தங்கவேல் என்ற ஒரு பாத்திரக் கடைக்காரன். ஓரிரு முறை என்னை அவரது வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்.
இருபதாயிரத்தை வைத்துக்கொண்டு எத்தனை மாசம் காலம் தள்ள முடியும்? நான் சொல்வது 1980’ களின் கால கட்டத்தை. வீட்டில் வைத்திருந்த சிறு சிறு தங்க நகைகளை விற்றுச் செலவு செய்ய ஆரம்பித்தார்.
“இப்படி ஒவ்வொண்ணா வித்துக்கிட்டிருந்தா, கடைசியில என்ன பண்ணுவீங்க?” என்று அவரிடம் கேட்டேன்.
“உன்னிடம் எதுவுமே இல்லாவிட்டாலும், உன்னிடம் உழைத்துச் சம்பாதிக்க விரல்கள் இருப்பதை மறந்து விடாதே” அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு” என்றார் ராமன்.
அவரது வீட்டில் இருந்த நகைகள் ஒவ்வொன்றாய் வீட்டை விட்டு வெளியேறி, பெரிய கடை பஜாரில் உள்ள நகைக்கடைகளில் வந்த விலைக்கு விற்கப்பட்டன. தங்கை பத்மா அணிந்திருந்த வளையல்கள், மூக்குத்தி, காது தோடு என ஒவ்வொன்றாய் அந்த வாய் பேசாத ஜீவனிடமிருந்து கழட்டி எடுத்து விற்க ஆரம்பித்தார் ராமன்.
அவரது வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஆங்கில, இலக்கிய சம்பாஷணைகளில் ஈடுபட்டிருக்கும் தருணங்களில், அவரைப்பற்றி நான் அறியாதன அறிந்தேன். “கண்டறியாதன கண்டேன்”.
அரிசிக் கடை வைத்திருந்த செட்டியாரிடம் அரிசி வாங்கிய வகையில் அவர் நிறைய கடன் வைத்திருந்தார். ஒரு நாள், செட்டியார் கடன் வசூல் செய்ய நேராகவே அவரது வீட்டுக்கு வந்து விட்டார்.
நான் அப்போது திண்ணையில் அமர்ந்திருக்கிறேன். அரிசிக்கடைச் செட்டியார் என்னருகே அமர்ந்தார். ராமன் என்னருகே உக்காந்து கொண்டு, கடன் பாக்கியைக் கேட்க வந்த செட்டியாரைச் சமாளிக்க ஆரம்பித்தார்.
“செட்டியார், அவ்வையார் என்ன சொல்றாங்க தெரியுமா? கம்பன் என்ன சொல்றாரு தெரியுமா? அவ்வையார் சொல்றாரு “தோழனோடும் ஏழைமை பேசேல்” அப்படிங்கறாங்க. இதுக்கு என்ன அர்த்தம்? நமக்கு நெருங்கிய நண்பன் கிட்டயும் நம்மோட பணக்
கஷ்டத்தைப் பத்திப் பேசக்கூடாதுன்னு அர்த்தம். கம்பன் கூட இதப்பத்தித்தான் சொல்றாரு. கணியன் பூங்குன்றனார் என்ன சொன்னார்…..சீத்தலைச் சாத்தனாரும் அதைத் தான் சொல்றாரு….”
தமிழ் இலக்கியத்தில் வறுமையைப்பற்றி யார் யாரெல்லாம் என்ன சொல்லியிருக்காங்களோ, அதையெல்லாம் பட்டியல் போட்டுச் சொல்ல ஆரம்பித்தார். எல்லாரைப்பற்றியும் சொன்ன அவர், உழைக்காமல் இருப்பதைப்பற்றி மேற்கோள் காட்டவில்லை.
ஒரு நீண்ட இலக்கிய உரையாற்றிய மன்னார் ராமன், என் கண் முன்னேயே எப்படியோ அரிசிக்கடைச் செட்டியாரைச் சமாளித்து அனுப்பி விட்டார். சில கடன்காரர்கள் வந்த போது, பணத்திற்குப் பதிலாக, அவரது வீட்டில் இருந்த பொருட்களைத் தந்து அனுப்பி விட்டார்.
செட்டியார் போன பின்பு, தனது தம்பி நம்பியைக் கூப்பிட்டு, “நம்பி, வீட்டுல அரிசி ஜாஸ்தியா செலவாகுது. மத்தியானம் சாப்பிடுற போது, குறைச்சு சாப்பிடுப்பா” என்றார்.
ஒரு நாள் ஒரு கடன்காரன் வந்த போது, வீட்டில் இருந்த வெங்கலப் பாத்திரங்களை ஒரு சாக்கில் போட்டு, அவனிடம் தந்தார்.
எப்போதும், நான் அவர் வீட்டுக்குப் போகும் போது, சூடான காபி கிடைக்கும். ருசியான ஃபில்டர் காபியை விட, அவரது ஆங்கிலம் தான் எனக்கு ரொம்ப ருசியாகத் தென்படும். சில மாதங்கள் கழித்து, அவரது வீட்டுக்காப்பியில் சர்க்கரை இல்லாமல் இருந்தது. “இது ஷுகர்லெஸ் காபி” என்றார் மன்னார். காபிக்கு சர்க்கரை வாங்கக்கூட வசதியில்லாமல் இருக்கிறார் என்று எனக்குப் புரிந்தது.
முன்னோர்கள் விட்டுச்சென்ற அந்நாளைய பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள், குத்து விளக்குகள், பண்டம் பழஞ்சாமான்கள், வீட்டை விட்டு கொஞ்சம், கொஞ்சமாய் வெளியேற ஆரம்பித்தன. அவரது வீட்டுக்குள் ஒரு நாள், நாற்காலி, மேஜைகளைக் காணவில்லை. என்ன விஷயமென்று கேட்டேன். அவைகளை அடமானம் வைத்து விட்டதாகக் கூறினார். எங்கள் ஊரில் அடகு பிடிக்கும் வட்டிக்கடைக்காரர்கள் நிறையப்பேர் கிடையாது. மேல ரத வீதியில் தியாகராஜன் செட்டியார் வட்டித்தொழில் செய்து வந்தார். வேறு யாரும் வட்டித்தொழில் செய்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அநேகமாக, ராமன் வீட்டு மரச்சாமான்கள் அவரிடம் தான் அடகுக்குப் போயிருக்க வேண்டும்.
ஒரு நாள், மாலை வேளையில் அவரது வீட்டின் மையக்கூடத்தில் அமர்ந்திருந்த போது, சுவர்க்கடிகாரமும் இல்லாமல் இருந்ததைக் கண்டேன். அதுவும் அடகுக்குப் போய் விட்டது. வீட்டின் மாடியில் இருந்த சிறு அறையில் வைத்திருந்த நூற்றுக்கணக்கான புத்தகங்களை கச்சேரித் தெரு வக்கீல் அன்புச்சாமி ஒரு விலை கொடுத்து வாங்கிக் கொண்டதாக அவர் சொன்னார்.
அவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் இருக்கும் துளசி மாடம் ரொம்ப அழகானது. கொல்லைப்புறத்தின் பின்புறம், எப்போதும் வாகன சந்தடி நிறைந்த கீழ ரத வீதி. அங்கே உள்ள நிழல் தரும் மஞ்சணத்தி மரத்தின் கீழே அமர்ந்து, நாங்கள் ஆங்கிலேயர்கள் மறந்து விட்ட செவ்விலக்கிய நூல்களை அசை போட்டுக் கொண்டிருந்தோம். அதே மஞ்சணத்தி மர நிழலில் அமர்ந்து தாஸ் கேபிட்டல் நூலின் எல்லாத் தொகுதிகளையும் தான் வாசித்ததாகவும், கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்கள் அருமை என்றும், அவை நடைமுறைக்கு சாத்தியமற்றவை என்றும் ராமன் திட்டவட்டமாக என்னிடம் சொன்னார். சில நாட்கள் கழித்து கொல்லைப்புறத்திற்குள் நான் நுழைந்த போது, சட்டை போடாத கூலியாள் ஒருவர், கோடாரியால் மஞ்சணத்தி மரத்தை வெட்டிக்கொண்டிருந்தார்.
“ஐநூறு ரூபாய்க்கு இதை வித்துட்டேன்” என்றார் ராமன்.
மதுரை அருகே இருக்கும் சோழவந்தானில் உள்ள எனது கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். அவ்வப்போது ஊருக்குத் திரும்பி வருவேன். எனது வீட்டு வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு, ராமனின் வீட்டுக்குப் போய் விடுவேன்.
கோபுரத்தெரு வீட்டில் இருந்த பொருட்கள் ஒவ்வொன்றாகக் காணாமல் போய்க் கொண்டிருந்தன. திருட்டு போகவில்லை. ஒவ்வொன்றாய் விற்றுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ராமன். ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று, அவரது வீட்டு முற்றத்தில், மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்யும் போது, அவரது அருகில் அமர்ந்து கொண்டு கவனித்துக் கொண்டிருந்தேன். நிறைய பேசினார். எங்கள் தலைக்கு மேலே முற்பகல் வெயிலின் வெளிச்சம் வீட்டின் முற்றத்தில் வீழ்ந்து கொண்டிருந்தது. சாதாரண சமையல் தான். இருப்பினும், அதை ரசனையோடு செய்து கொண்டிருந்தார். அவர் பேசப்பேச அது எல்லாமே எனக்குத் தகவல்கள் தான். ஒரு கலைக்களஞ்சியத்தின் அருகே நான் அமர்ந்திருந்தேன். ஒவ்வொரு பலசரக்குப் பொருளுக்கும் ஆங்கில வார்த்தை என்னவென்று சொன்னார். சீரகத்துக்கு cumin seed என்று ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும். கொத்தமல்லிக்கு கோரியாண்டர் என்று சொல்ல வேண்டும். அது தவிர மசாலாப் பொடிகள் ஒவ்வொன்றுக்கும் ஆங்கிலப் பெயர்கள் என்னவென்று சொல்லிக்கொண்டே சமையல் செய்து கொண்டிருந்தார். கடுகு, உளுத்தம் பருப்பு இட்டு எண்ணையில் தாளிப்பதற்கு “seasoning” என்ற ஆங்கில வார்த்தை உண்டு என்றார். மன்னார் ராமனுடன் நீடிக்கும் இத்தகைய அமர்வுகள் எனக்கு முறை சாராக் கல்வி வகுப்புகளாகவே அமைந்தன. அவரது மொழி, அதன் பிரயோகங்கள், கைகளைக் குலுக்கி அவர் பேசும் உடல் மொழி, உச்சரிப்பு, ஆகியவை எனக்கு கல்லூரிப் பேராசிரியர்கள் சொல்லித்தராததைச் சொல்லித் தந்தன.
வீட்டுச் சமையல் செய்து கொண்டிருப்பதில், அவருக்கு ஏதோ சலிப்பு தோன்றியிருக்க வேண்டும். அரிசிக்கடை செட்டியாருக்கும், பலசரக்குக் கடைக்காரனுக்கும் எத்தனை நாள் கடன் சொல்லுவது? வீட்டுச் சமையலை விட்டு விட்டு, பிறகு, வடக்கு ரத வீதியில் இருந்த சுந்தரம் கபேயில் கணக்கு வைத்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். ( தான் மட்டும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் ). ஒரு சிகரெட் அட்டையில் அவரது சாப்பாட்டுக்கணக்கு
எழுதப்பட்டிருந்தது. இரவு நேரங்களில், கீழ ரத வீதியில், தேரடி அருகே உள்ள திருப்பதி தென் திருப்பதி திறந்த வெளி ஹோட்டலில் கணக்கு வைத்துக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டார். கணக்கு மட்டும் தான் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக்கணக்கு காந்தி கணக்காகத் தான் இருந்தது. ஒரு போதும் ரொக்கம் செலுத்தி தீர்க்கப்படவில்லை….
என் கல்லூரிக்காலம் முடிவுற்றது. சில காலம் ஒன்றும் செய்யாமல் வீட்டிலேயே தெண்டச் சோறாக இருந்தேன். என் நூலக வாசிப்பு தொடர்ந்தது. ராமன் என்னிடம் சொல்லியிருந்த எட்வர்ட் கிப்பனின் “தி டிக்லைன் அண்ட் ஃபால் ஆஃப் ரோமன் எம்பயர்” என்ற நீண்ட சரித்திர நூலின் ஆறு தொகுதிகளையும் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். “எவரி மேன்ஸ் லைப்ரரி”யின் ஆறு தொகுதி கொண்ட வெளியீடு அது. மொத்தம் சுமார் மூவாயிரம் பக்கங்கள். எனக்கு அதை வாசித்து முடிக்க இரண்டரை ஆண்டுகள் ஆனது. சோர்வடையாமல் அதைத் தொடர்ந்து வாசித்தேன். ராமனின் வாசிப்புக்கு முன்னால் என் வாசிப்பு ரொம்பக் கொஞ்சமே.
ஒரு நாள் காலையில், பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து போய்க்கொண்டிருந்த போது, ஒரு சைக்கிளை நம்பி ஓட்டிக்கொண்டு போக, அதன் பின்புறத்தில், ராமன் அமர்ந்திருந்தார். இடுப்பில், இளம் பச்சை நிறத்திலான பழைய சேலையை கிழித்து சுற்றிக்கொண்டு அமர்ந்திருந்தார். ஒரு எலும்புக்கூடு, இன்னொரு எலும்புக்கூட்டை வண்டியில் வைத்து ஓட்டிக்கொண்டு போவதைப் போன்ற அக்காட்சியைப் பார்த்து சிரித்து விட்டேன். வீட்டில் இருந்த வேஷ்டி, சட்டை, துணிமணிகள் எல்லாம் என்னவாயின என்று நான் ராமனிடம் கேட்கவில்லை. அதையும் ஒரு விலைக்கு அந்த ஆள் விற்றிருப்பார் என்று தான் எண்ணிக்கொண்டேன்.
வீட்டில் நடுக்கூடம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக, தங்கை பத்மாவின் சேலையைக் கிழித்து அதைக் கூடத்துக்கு வெளியே தொங்க விட்டிருந்தார். தட்டு முட்டுச் சாமான்கள் எதுவும் இல்லாமல் வீடு பளிச்சென்று இருந்தது. புத்தகங்கள், மேசை, நாற்காலி. சுவர்க்கடிகாரம், சமையல் பாத்திரங்கள், கொல்லைப்புறத்தில் கழித்துக் கட்டப்பட்ட பழைய பாத்திரங்கள், இரும்பு, தகரச் சாமான்கள், துணிமணி மூட்டைகள், அப்பாவின் உடைந்த சாய்வு நாற்காலி, பழைய மரக்கட்டில், திண்ணையில் இருந்த மரப்பெஞ்சு, கொல்லைப்புறத்தில் நெடிதாய் வளர்ந்து நிழல் தந்து கொண்டிருந்த மஞ்சணத்தி மரம், இப்படி எதையும் விட்டு வைக்காமல், எல்லாவற்றையும் விற்று விட்டு, வெறும் ஆளாய் அவர் அந்தக் காலி வீட்டில் குடியிருந்து வந்தார். உடலுக்குள் இருந்து, அவரது உயிரை உருக்கிக் கொண்டிருந்த ஆஸ்துமா வியாதி, வர வர அதிகரித்துக்கொண்டே தான் போனது.
வீட்டைப் பெருக்கி, தண்ணீர் தெளித்து கோலமிடும் வேலைக்காரிக்குக் கூட சம்பளம் தரவில்லை. இருந்தால் தானே தர முடியும் !?
ஒரு நாள் மத்தியான வேளையில் அங்கு அமர்ந்திருந்தேன்.
“நம்பி, இங்க வா. தூக்கு வாளியை எடுத்துக்கோ. நேராப் போயி, பஸ் ஸ்டாப் பக்கத்துல சூடா இருக்கும். வாங்கிண்டு வா. சூடா. சூடா….” என்றார் ராமன்.
நம்பியும், ராம பிரானின் சொல் தட்டாத இலக்குவனனைப்போல ஒரு தூக்கு வாளியை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டான்.
எனக்கு சந்தேகம் வந்தது. சூடா என்ன வாங்கப்போறான்? காப்பியா, டீயா? வெயில் மண்டையைப் போட்டுப் பொளக்குற மத்தியான நேரத்துலயா காபி சாப்பிடுவாங்க?! நான் வெளியே போய், அவனைப் பின்தொடர்ந்தேன். நேராக, கீழ ரத வீதி பஸ் ஸ்டாப் அருகே, கோதண்டம் பிள்ளை ஹோட்டலின் அருகே இருக்கும் டீக்கடைக்குப் போனவன், அங்கே டீ மாஸ்டரிடம் அந்தத் தூக்குவாளியை நீட்டினான். டீ மாஸ்டர் புரிந்து கொண்டு, அதில் நிறைய வெந்நீர் ஊற்றித் தந்தான். நம்பி அதை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பி வந்தான். ராமன் அதை வாங்கி, ஒரு தம்ளரில் ஊற்றி உறிஞ்சி, உறிஞ்சிக் குடித்தார்.
வெறும் வெந்நீரையே ஆகாரமாக உட்கொள்ளும் அளவுக்கு இந்த மனிதன் பக்குவப்பட்ட நல்ல யோகி போலாகி விட்டார் என்று எண்ணிக்கொண்டேன். என் வீட்டில் யாரோ கொண்டு வந்து தந்த கல்யாண நிகழ்ச்சியின் பட்சணங்கள் இருந்தன. அதை எடுத்துக் கொண்டு வந்து அவருக்குத் தந்தேன். திருப்தியாய்ச் சாப்பிட்டார்.
“Boswell to Johnson” என்ற சொற்றொடரை ராமன் தான் எனக்குச் சொல்லித் தந்தார். ஒருவருக்கு நெருக்கமாக இருந்து கொண்டு, அவரது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து, அதை எழுத்தில் பதிவு செய்பவருக்கு இந்த “பாஸ்வெல் டு ஜான்சன்” என்ற சொற்றொடர் பொருந்தும். ராமனுக்கு நான் ஒரு பாஸ்வெல் போலவே ஆகியிருந்தேன். எங்க ஊரிலும் எங்களை இணையராகவே கருத ஆரம்பித்து விட்டனர்.
அவ்வப்போது என்னிடமிருந்து சிறு சிறு தொகைகளை வாங்கிக்கொள்வார் ராமன். அதையெல்லாம் கணக்கில் கொள்ள முடியாது. எல்லாவற்றையும் அவர் ரெட்டத்தனையாய்த் திருப்பித் தருவதாகச் சொன்னார். நான் அதை நம்பவில்லை.
வீட்டின் பேரில் வாங்கிய அடமானக்கடன் அதிகரித்தது. மேலும், மேலும் இருபதாயிரம், இருபதாயிரமாக வாங்கி, அந்தப்பணத்தை வைத்து வீட்டுச் செலவை சமாளித்துக்கொண்டு வந்தார் ராமன். வீட்டின் உட்புறம் வெகு சுத்தமாக இருந்தது. இரவில் வீட்டைப் பூட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. அவரிடம் இருந்த துணிமணிகளின் எண்ணிக்கை எத்தனை என்று விரல் விட்டு எண்ணி விடலாம்.
சென்னையில் குக்கர் விற்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் தற்காலிகப் பணி கிடைத்து பயிற்சிக்காக அங்கு தங்கியிருந்தேன். பயிற்சி முடிந்ததும் மதுரையில் பணி நியமனம் செய்து அனுப்பினார்கள். அது ப்ரெஷர் குக்கர் விற்கும் வேலை. மதுரையில் என்னால் ஒரு குக்கர் கூட விற்க முடியவில்லை. எனக்கு விற்பனைத் திறன் கிடையாது என்று முடிவு செய்து கொண்டேன். வீட்டில் சேகரமாகும் பழைய பேப்பர், கொல்லைப்புறத்தில் இருக்கும் பழைய இரும்பு, தகரங்களை எடுத்துக்கொண்டு போய், பஜாரில் உள்ள ஒரு கடையில்
போட்டு, தராசில் எடை போடுவதைப் பார்த்து விட்டு, பணம் வாங்கிக்கொண்டு வருவது என் வழக்கம். அந்த ஒரு இடத்தில் தான், நான் விற்பனையாளராகி இருப்பேன். மற்றபடி, எனக்கு பொருள் விற்பனை எதுவும் செய்யத்தெரியாது. ப்ரெஷர் குக்கர் விற்கும் வேலையை விட்டு விட்டு, சொந்த ஊர் திரும்பி விட்டேன்.
கந்தாடைத் தெருவில் இருந்த என் நண்பன் ஸ்ரீவத்சனின் வீட்டுக்குப்போனேன்.. ஸ்ரீவத்சனின் அம்மா யசோதா, எனக்கு இனிப்பு தந்து, தன் பையன் ஸ்ரீவத்சனுக்கு தெற்கு ரயில்வேயில் வேலை கிடைத்திருப்பதாகச் சொன்னார்.
“ரொம்ப சந்தோஷம்!”
“ஆமா, ஸ்ரீவத்சனுக்கு எங்க போஸ்டிங் போட்டுருக்காங்க ?”
“முதல்ல திருச்சிக்குப் போய் ஜாயின் பண்ணிட்டான். அனேகமா, சீக்கிரத்துல மெட்ராசுக்குப் போயிருவான். உங்களுக்கு காபி கொண்டு வர்றேன்.”
காபியை ஆற்றிக்கொண்டிருக்கும் போது, யசோதா, என்னிடம்,
“உங்களுக்கு விஷயம் தெரியுமோ என்றார்?”
“என்ன விஷயம்?”
“உங்க ப்ரண்ட் மன்னார் ராமன் என்ன பண்ணிட்டார் தெரியுமா?”
“என்ன பண்ணினாரு? நானும் அவரைப்பத்திக் கேக்க மறந்துட்டேன்.”
“அவருக்கு என்ன பணக்கஷ்டமோ தெரியல. அவர், தன்னோட தங்கை, பத்மாவைக் கூட்டிண்டு, மெட்ராஸ் போயிருக்கார். அங்க, எக்மோர் ஸ்டேஷன்ல அந்தப்பொண்ணை பிளாட்பார்ம்ல உக்கார வெச்சுட்டு, நான் வர்றேன்னு சொல்லிட்டு, அப்படியே அவள அங்கயே விட்டுட்டு, ஊருக்குத் திரும்பிட்டார். அந்தப்பொண்ணு பத்மாவுக்கு வாய் பேச முடியாது. நடக்க முடியாது. அவளோ, திகைச்சுப்போய், திரு திருன்னு பாத்துண்டு, ஸ்டேஷன்ல பிளாட்பாரம் பெஞ்சுல உக்காந்துண்டுருந்தாளாம் அந்த வழியா வந்த ரோந்து போலீஸ்காரர் ஒருத்தர் அந்தப்பொண்ணு யாருன்னு விசாரிச்சுருக்கார். அந்தப்பொண்ணுக்கு பேச வரல. கையை அசைச்சு அசைச்சு, ஏதோ பேசியிருக்கா. அந்தப் போலீஸ்காரருக்குப் புரிஞ்சு போச்சு. அவர், அந்தப்பொண்ணை ஸ்டேஷனுக்கு வெளிய கூட்டிக்கிட்டு வந்து, அங்க இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வர்ற திருவள்ளுவர் பஸ்ல ஏத்தி விட்டுட்டு, பஸ் சார்ஜ் கொடுத்து, பஸ் கண்டக்டர் கிட்டச் சொல்லி, அந்தப்பொண்ணை ஸ்ரீவில்லிபுத்தூர்ல இறக்கி விடச் சொல்லியிருக்காரு. அந்த நல்ல மனசு கொண்ட பஸ் கண்டக்டர் பத்மாவைக் கொண்டு வந்து இங்க இறக்கி விட்டுருக்காரு. அந்தப்பொண்ணு இங்க வீட்டுக்கு வந்து பாத்தா, அவளோட வீட்டுல வேற ஒருத்தர் இருக்காரு. மன்னார் ராமன், தன் வீட்டை, அடமானத்துக்கு வாங்கியிருந்த ராஜபாளையம் பூத்தானம் தங்கவேலுக்கு அதை வித்துட்டு, எங்கயோ போயிட்டாரு. அவரோட தம்பி நம்பி எங்க போனாருன்னு
தெரியல. அந்த வாய் பேச முடியாத பொண்ணு பத்மா, என்ன பண்றதுன்னு தெரியாம, தெருவுலயே பக்கத்து வீட்டுப் படியில உக்காந்துண்டிருந்தா. அப்புறம் யாரோ சொல்லி விட்டு, பிராமணர் சங்கத்துல இருந்து வரதன் மாமா வந்து, அந்தப்பொண்ணை ஒரு அனாதை ஆஸ்ரமத்துல கொண்டு போய்ச் சேத்துட்டார். மன்னார் ராமன் இப்ப எங்க இருக்கார்னு தெரியல” என்றார்.
நான் திடுக்கிட்டு, நாற்காலியில் அமர்ந்திருந்தேன். தொண்டை வறண்டு போனது. நெஞ்சம் திக்கென்று அடைத்துக்கொண்டது. வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை.
வீட்டுக்கு வெளியே பார்த்தேன். வெளியே சிறு தூறல் போடத் தொடங்கியிருந்தது. கந்தாடைத்தெருவில் இருட்டு கவிழத் தொடங்கியது.
மன்னார் ராமன் செய்த எல்லாக் கோணங்கித்தனங்களையும் அடியேன் சகித்துக் கொள்ளுவேன். ஆனால், வாய் பேச முடியாத தன் சொந்தத் தங்கையை எழும்பூர் ரயில் நிலையத்தில் அம்போவென்று தவிக்க விட்டு விட்டு, தான் மட்டும் சொந்த ஊருக்குத் திரும்பிய அந்தச் செயலை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்.
அனுபந்தம் :
பூத்தானம் தங்கவேலிடம் அடமானம் வைக்கப்பட்டிருந்த ராமனின் வீடு, மன்னார் ராமனால், கிரயத்துக்கு அவரிடமே விற்கப்பட்டது. பிறகு, உள்ளூர் கேபிள் டி.வி. உரிமையாளர் க்ளாரன்ஸ் அதை ரூபாய் இரண்டரை லட்சத்துக்கு பூத்தானம் தங்கவேலிடமிருந்து கிரயத்துக்கு வாங்கினார். க்ளாரன்ஸ் என் நெருங்கிய நண்பர். திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் ஆங்கிலிக்கன் சபையைச் சேர்ந்த வெள்ளாளர் கிறிஸ்தவர். அவர், அந்த வீட்டை முற்றிலுமாக இடித்து விட்டு, ஒரு மேல் மாடி வைத்து நன்கு கட்டி, அழகுற அந்த இடத்தை மாற்றி விட்டார். வீட்டின் முன்புறம் ஒரு தையலகம் நடத்தி வருகிறார் அவரது மனைவி. அந்த வீட்டைக் கடந்து போதெல்லாம் நான் அமர்ந்து ஆங்கிலப்பாடங்கள் கற்றுக்கொண்ட அந்த வீட்டின் அகலமான திண்ணையை சூட்சும வடிவில் நினைவில் கொள்ளுவேன். அங்கு சிறிது நேரம் அமர்ந்து விட்டு வரலாமே என்ற எண்ணம் தோன்றும். ஆனால், அங்கு திண்ணை இல்லை. மன்னார் ராமனும் இல்லை.
அடிக்குறிப்புகள் :
1. “…the novel the “supreme form of literature” and the “one bright book of life” because it alone portrays the “whole man alive”—uniting body, soul, mind, and emotion. –“Why the Novel Matters”-by D.H. Lawrence. “புதினம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?” – டி.ஹெச்.லாரன்ஸ்.
2. டவுட் – ( tout ) ஒரு வழக்கறிஞருக்கு வழக்குகள் பிடித்துக் கொண்டு வரும் தரகர்.
3. பழைய ஏற்பாடு, சாலமோன் அருளிச் செய்த பிரசங்கியின் புஸ்தகம் 12 : 12
![]() |
அடியேனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர். தொழில் தனியார் பள்ளி ஆசிரியர். இது வரை மொழிபெயர்ப்பு, புனைவு இலக்கியம், குறு நாவல்கள், கட்டுரை நூல்கள், ஆங்கிலக்கவிதை, தமிழ்த்திரைக்கதை, என்று 15 நூல்கள் வெளியிட்டுள்ளேன். எமது 3 நூல்களுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை நூல் வெளியிட நிதி தந்துள்ளது. தொலைந்து போன கால்டுவெல் ஐயரின் நூல்களை மீட்டெடுத்து, மீள் பதிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்.அலமேலு…மேலும் படிக்க... |
