சுலட்சணா காதலிக்கிறாள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 7, 2026
பார்வையிட்டோர்: 6,707 

(1986ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்  7-9 | அத்தியாயம்  10-12

அத்தியாயம்  – 10

இதற்கிடையில் கனகராஜின் தந்தையிடம் பேசி அவனைச் சேலத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்தபின் டீன் தம்முடைய அதிகார வரம்பையும் மீறி இன்னொரு காரியம் செய்தார். இப்போது அவருக்கு மேலிருந்த துணை வேந்தரின் பதவிக் காலம் அடுத்த இரண்டாண்டுகளில் முடிகிறது. இரண்டு டோம்’ தொடர்ந்து இருந்து விட்டதால் இனி அவருக்கு அந்தப்பதவி மேலும் கிடைக்க முடியாது.

உதயா பல்கலைக்கழகத்தின் புரோ- சான்ஸ்லருக்கு மிகவும் வேண்டியவர் கனகராஜியின் தந்தை. கனகராஜ் விஷயத்தில் தான் கொஞ்சம் அக்கறைகாட்டி உரிமை எடுத்துக்கொண்டு பாடுபட்டால் அவனுடைய தந்தையை ‘இம்ப்ரெஸ்’ செய்யலாம்; அதன் மூலம் அடுத்த துணை வேந்தர் பதவிக்காகச் சிபாரிசு செய்யப்படும் பெயர்களில் தன்னுடைய பெயர் முதலாவதாயிருக்க வழி செய்து கொள்ள முடியும்.

இது அவருடைய நீண்டநாள் பேராசையாக இருந்தது.

டாக்டர் (கை) யாடல் வல்லான்பிள்ளையின் மூளை குறுக்கு வழியில் யோசனை செய்தது. கனகராஜை அனுப்பிய பின், பல்கலைக்கழக நேரமாயில்லாமல் அகாலமாயிருந்தும் ஒரு பியூனை அனுப்பி சுலட்சணாவை உடனே லேடீஸ் ஹாஸ்டலிலிருந்து அழைத்து வரச் செய்தார்.

ரெஸிடென்ஷியல் பல்கலைக் கழகமாயிருந்தாலும் ஒரே காம்பஸுற்குள் டீனின் வீடு, லேடீஸ் ஹாஸ்டல், பேராசிரியர்கள் குடியிருப்பு, துணைவேந்தர் மாளிகை எல்லாம் இருந்ததாலும், இப்படி மாணவர்களைப் பொறுப்பிலுள்ளவர்கள் அழைத்துப் பேசுவதும், பொறுப்பிலுள்ளவர்களை மாணவர்கள் வந்து காண்பதும் அவ்வப்போது வழக்கம் தான், அதில் புதுமை ஒன்றுமில்லை.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் முக்கால்வாசி நாள் வெளி நாட்டுப் பயணங்களிலேயே இருந்ததனால் ‘ஃபாரின் வைஸ்சானஸலர்’ — என்றே பேராகி இருந்தது. மாணவர்கள் சம்பந்தப்பட்டவற்றை விசாரிப்பதும், நடவடிக்கைகள் எடுப்பதும் அவ்வப்போது ஆக்டிங் துணைவேந்தராயிருக்கும் ‘டல் பிள்ளை’யின் வேலைதான். அதனால் ஆக்டிங் வி.சி கூப்பிட்டனுப்புவது பற்றி மாணவர்கள் பயமோ பதற்றமோ அடைவது கிடையாது. எப்போது கூப்பிட்டாலும் உடனே போய்ப் பார்ப்பார்கள்.

இன்று சுலட்சணாவும் அப்படித்தான் அவர் கூப்பிட்டனுப்பியதும் மறுக்காமல் உடனே அவரைப் பார்க்க வந்தாள்.

அவள் தேடி வந்தபோது அவர் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்ததனால் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. கிராமந்தரத்து உயர் நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மாதிரி அந்த டீன் மாணவ மாணவிகளிடம் பழகுவார் என்பது ஊரறிந்த உண்மைதான். யாரும் அது பற்றி அதிகம் பொருட்படுத்துவது கூடக் கிடையாது. அகால நேரத்தில் இப்படிக் கூப்பிட்டனுப்பிக் காக்கப்போடுகிறாரே என்ற வருத்தம் உள்ளூர சுலட்சணாவுக்கு இருந்தாலும் பொறுமையாகக் காத்திருந்தாள்.

ஒரு பெரிய ஏப்பத்தோடும் கையில் சாப்பாட்டுக்குப் பின் உட்கொள்ள வேண்டிய ஒரு கொத்து வண்ண வண்ண மாத்திரைகளுடனும் டீன் அவள் அமர்ந்திருந்த வீட்டு முன்பக்க வாரந்தாவுக்கு வந்தார். எந்தப் பேச்சுக்கோ நேரடியாக வரத் தயங்கி வேறு எதை எதையோ ஆரம்பித்தார் அவர்.

“என்னம்மா, உன்னைப்பத்தி இந்தக் காம்பஸ்லே ஏதாவது ந்யூஸ் கேள்விப்படாத நாளே இராது போல் தோன்றுகிறதே?”

“சொல்லுங்க சார்! இப்ப என்ன புது ந்யூஸ் கேள்விப் பட்டீங்க?”

“ஒண்ணா ரெண்டா சொல்லி முடிக்கிறதுக்கு? அடுத்தடுத்துக் கேள்விப்பட்டுக்கிட்டேயிருக்கேன்.”

“என்னன்னு சொல்ல மாட்டேங்கறீங்களே?”

“அக்ரிகல்ச்சுரல் ஸ்டூடண்ட்ஸைக் கூப்பிட்டு ‘செல்’ மீட்டிங் மாதிரி அடிக்கடி ஏதோ ஆர்கனைஸ் பண்றியாமே?”

“அப்புறம்…? மேலே…”

“ஏதோ காம்பஸ் முழுக்க வேலை நிறுத்தத்துக்குக் கூட ஏற்பாடு பண்றியாமே?”

“இருக்கலாம்! ஸ்டூடண்ட்ஸோட நியாயமான உரிமைகள் என்னென்னவோ, அதை அடைய என்ன மார்க்க மிருக்கோ அத்தனை மார்க்கத்திலும் போராடத்தான் போராடுவோம்! அதைத் தடுக்க ஒரே வழி எங்கள் குறைகளை நீங்களாக முன்வந்து நிவர்த்தி பண்ணுவதுதான் சார்”.

“என்னமோ இந்த யூனிவர்ஸிடி அமைதியா நடக்கிறது உனக்குப் பிடிக்கல போலிருக்கு.”

“புயலுக்கு முந்திய புழுக்கமே அமைதியாகிவிடாது. இது அமைதியில்லை. புழுக்கம்.”

“நீயும், ‘அக்ரி’யில் படிக்கும் யாரோ ஒரு நொண்டிப் பையனும் சேர்ந்துதான் எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறீர்களாம்!”

“சரர்! மன்னிக்கணும். உங்க மாணவர்களைப்பற்றி நீங்க இன்னும் கொஞ்சம் நாகரிகமாகப் பேசலாம்னு நினைக்கிறேன். ‘ஐ.நா.வின் சர்வதேச உடல் ஊனமுற்றார் ஆண்டு –உடல் ஊனமுற்றோரும் மனிதர்களே! அவர்களை மனிதர்களாய் – மரியாதையாய் நடத்துங்கள்’ என்ற சுவரொட்டி இங்கு நம் வி.சி. அறையின் முகப்பில் இன்னும் ஒட்டப்பட்டிருக்கிறது. அதை இங்கே யாருக்காக சார் ஒட்டியிருக்கிறீர்கள்? மாணவர்களுக்காக மட்டும்தானா? ஆசிரியர்களுக்கு அந்த மரியாதை அநாவசியமா? அந்தக் ‘கல்ச்சர்’ வேண்டாமா?”

“சாரி…அந்த ‘அக்ரி’ பையன் மேல் உனக்கு இத்தனை ‘இண்ட்ரெஸ்ட்’ இருக்கும்னு எனக்குத் தெரியாமப் போச்சே?”

“யாரோ வெறும் பையன் இல்லை சார்! அவருக்குன்னு ஒரு பெயர் இருக்கு. வீராசாமி. அவரைத் தொடர்ந்து படிக்க அநுமதிக்கும்படி நாங்கள் போராடி வெற்றி பெற்றது உங்களுக்கும் யூனிவர்ஸிடி நிர்வாகத்துக்கும் அதுக்குள்ள மறந்திருக்காதுன்னு நினைக்கிறேன்.”

”மறக்கலேம்மா! அத்தனை சுலபமா மறந்துட முடியுமா அதை எல்லாம்? ஒரு எகனாமிக்ஸ் ஸ்டூடண்டுக்கு அக்ரி க்ராஜுவேட் மேலே பிடிப்பு வந்ததுதான் ஆச்சரியம்!”

“…சார்! ஏன் சுற்றி வளைக்கிறீங்க? இப்போ என்னைக் கூப்பிடனுப்பின விஷயம் என்னன்னு சொல்லுங்க… எனக்கு நேரமாகுது. லேடீஸ் ஹாஸ்டல் ‘கேட்’டை க்ளோஸ் பண்றத்துக்குள்ள போகணும். இல்லே…”

“நீ முன்னே கனகராஜோடப் பழகிக்கிட்டிருந்தே இல்லே…”

“ஏன்…?இப்பவும் பழகறேன். நாங்க கிளாஸ்மேட்ஸ். ஒரே சப்ஜக்ட் படிக்கிறோம்.பழகாம இருக்க முடியாது.”

“இப்போ அத்தனை நெருக்கம் இல்லேன்னு கேள்வி. ஏதோ மனஸ்தாபம்னு சொன்னாங்களே…”

“யார் சொன்னாங்க?… எதுக்காகச் சொன்னாங்க?…”

“வேற யாரு? கனகராஜேதான் சொன்னான். உன்னோட பழக்கம் குறைஞ்சதிலேருந்து அவன் அரை ஆளாப் போயிட்டான். உனக்குத் தெரியும்னு நெனைக்கிறேன். கனகராஜ் ரொம்பப் பெரிய ஃபேமிலியில வந்தவன். அவன் ஃபாதர் பெரிய கோடீசுவரர். நம்ம புரோ சான்ஸலருக்கு ரொம்ப வேண்டியவர்.”

“சார்! இதெல்லாம் இப்ப எதுக்கு வீணா? என்ன விஷயம்னு மட்டும் சொல்லுங்க…”

அவளை எப்படிக் ‘கன்வின்ஸ’ செய்து கனகராஜகாகப் பரிந்து பேசுவதென்று தெரியாமல் திணறினார் டீன். அவளோ அவ்வப்போது அவரது பேச்சை இடை வெட்டினாள். தவிர்த்தாள்.

“கனகராஜ் ரொம்பத் தங்கமான பையன். படிப்பில் முதல் நம்பர். தானுண்டு தன் காரியம் உண்டு என்று இருப்பான். அநாவசியமா ஒரு வம்பு தும்புக்குப் போக மாட்டான். நீ அவனைப் புரிஞ்சுக்கணும் அம்மா!”

“அந்த மாதிரி ஆளை இந்தக்காலத்திலே ஒரு மியூஸியம் கட்டி அதிலே உட்காரவச்சு ‘ஒருத்தரோட வம்புதும்புக்கும் போகாதவர்’னு ஒரு போர்டு எழுதி மாட்டினாக்கூட ஒருத்தரும் சீந்த மாட்டாங்க. நம்முடைய காலத்து மனிதன் என்பவன் நம் காலத்து வம்பு தும்புகளில் ஈடுபட வேண்டும். நம் காலத்து நல்லதை ஆதரிக்க வேண்டும். தீமையை எதிர்த்துப் போராட வேண்டும். ஒதுங்கி நின்றுகொண்டிருப்பவன் உயிருள்ளவனே அல்ல! நீச்சல் தெரிந்தவர்கள் கரையிலே நிற்கக் கூடாது.”

”உங்களுக்குள்ளே என்ன சண்டை? மனஸ்தாபமா? விரோதமா? நான் தெரிஞ்சுக்கலாமா அதை?”

“நீங்க இப்போ யாரைப்பற்றி, எந்தச் சண்டையைப் பற்றிக் கேட்கிறீங்க சார்?”

”உனக்கும் கனகராஜுக்கும் ஆகாமற் போனதைப் பற்றித்தான் கேட்கிறேன்”.

“அதுதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நீங்களே சொன்னீங்களே சார், அவர் ஒருத்தரோட வம்புதும்புக்கும் போகாதவர்னு. அப்படிப்பட்ட பரம சாத்வீக புருஷரோட் எனக்கென்ன சார் சண்டை வரப்போகிறது?”

“நீ என்னிடம் மறைக்கப் பார்க்கிறாய்?”

“எதை மறைக்கப் பார்க்கிறேனாம்…?”

“உனக்குக் கனகராஜ் மேல் என்ன கோபம் என்பதற்கான காரணத்தை..?”

“ஒருவரை நாம் கோபித்துக்கொள்ள அவர்மேல் நமக்கு ஏதாவது உரிமை இருக்கவேண்டுமே?அப்படி எந்த உரிமையும் கனகராஜ் மேல் எனக்கு இருந்ததில்லையே சார்”

“இரண்டு பேரும் நெருங்கிப் பழகினீர்கள் என்பது காம்பஸ் முழுவதுமறிந்த உண்மை…”

“பழக்கங்கள் எல்லாம் சிநேகிதங்கள் ஆகிவிட முடியாது.”

“சிநேகிதங்கள் எல்லாம் காதலாகி விட முடியாது என்று கூட இன்னொரு வாக்கியத்தையும் சேர்த்து இப்போது நம் இஷ்டப்படி சொல்லி விடலாம் அம்மா! ஏதோ இந்த யூனிவர்ஸிடி டீன் என்கிற முறையிலே ரெண்டு ஸ்டூடண்ட்ஸ் நட்பு முறிஞ்சு மனசு வேதனைப் படறதை நான் விரும்பல்லே. கனகராஜ் ரொம்ப நொந்து போயிருக்கான். எங்கிட்டச் சொல்லவே செய்தான்.”

“நான் அப்படி எதற்கும் நொந்து போகலை சார்! எப்பவும் போல உற்சாகமாகத்தான் இருக்கேன்னு அவரைப் பார்த்தா நீங்க தாராளமாகச் சொல்லலாம் சார்.”

“டீன்கிற முறையிலே இப்போ அதிகாரத் தோரணையோட நான் பேசலைம்மா! கொஞ்சம் அவுட் ஆஃப் தி வேயாக உங்கிட்டச் சொல்றேன்னு வச்சுக்க… கனகராஜோட ஃப்ரண்ட்ஷிப்பை நீ விட்டுடப் படாது” –

”உங்க யோசனையைவிட இதிலே என்னோட ‘சாய்ஸ்’ தான் இன்னும் முக்கியம். நீங்க சொன்னீங்களே ‘கனகராஜ் வம்புதும்புக்குப் போகாதவன்’னு, அது நூற்றுக்கு நூறு நிஜம். நடுத்தெருவிலே என்னை மாதிரி ஒரு பெண்ணை நாலுபேர் முரடர்கள் கையைப் புடிச்சு இழுத்தாக்கூட ‘நமக்கேன் வம்பு?’ன்னு ஒதுங்கிப் போயிடற அளவுக்கு அத்தனை பெரிய சாது சார் அவர். அவ்வளவு பெரிய சாதுவை இந்தக் காலத்திலே எந்தப் பெண்ணுமே விரும்பமாட்டாள் சார்.”

“நீ விரும்பினால் கனகராஜையே இப்போ இங்கே. கூப்பிட்டனுப்பறேன். நேரேயே பரஸ்பரம் மனம்விட்டுப் பேசி நீங்க ஒருத்தருக்கொருத்தர் சமாதானப்படுத்திக்கலாம்.”

”உங்களுக்கு அந்தச் சிரமம் எல்லாம் வேண்டாம் சார்! சற்றுமுன் அவரையும் அவர் நண்பர் சுகவனம் என்கிற மெடிக்கல் ஸ்டூடண்டையும் நானே பல்கலைக்கழகப் பூங்காவில் கூடப் பார்த்தேன். நான் ஹலோ சொல்லியும் கனகராஜ் என்கூடப் பேசவில்லை. கூச்சப்பட்டுக்கொண்டு ஒதுங்கிப் போய்விட்டார். என்னுடன் அக்ரி மாணவர் வீராசாமி இருந்ததுதான் காரணம் சார்.மேலும் இதெல்லாம் எங்கள் சொந்த விவகாரம். ஒரு டீன் தலையிட்டு இதில் ஆகப் போவது எதுவுமில்லை சார்!”

“ஏமாற்றத்தில் கனகராஜுக்கு வாழ்க்கையே வெறுத்து விடுமோ என்று நான் பயப்படுகிறேன் அம்மா! அவன் ரொம்ப விரக்தியாயிருக்கிறான். ஒரு மாறுதலுக்காக நாளைக்குச் சேலம் போகிறான். நீ விரும்பினால் தடுத்து நிறுத்தலாம்.”

“வேண்டாம்! தடுக்காதீர்கள். நான் அதை விரும்ப வில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்…”

“இந்த ஏமாற்றம் கனகராஜின் படிப்பு, எதிர்காலம், வாழ்வு எல்லாவற்றையுமே பாதிக்கப் போகிறது. அவனது குடும்பத்தில் அக்கறையுள்ளவன் என்ற முறையில்தான் நான் உன்னைக் கூப்பிட்டுப் பேசுகிறேன்”.

“மன்னியுங்கள் சார்! கூச்சமும் பயமும் உள்ள ஒரு கோழைக்காக என்னிடம் மறுபரிசீலனை எதுவும் இல்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதை நானே நாளைக் காலையில் மிஸ்டர் கனகராஜுக்கு ஒரு கடிதமாக எழுதியும் அனுப்பிவிடுகிறேன். அதில் நீங்கள் என்னைக் கூப்பிட்டுப் பேசியதைப்பற்றிச் சொல்ல மாட்டேன். அதேபோல் நீங்கள் ஒருவேளை அவரைக் கூப்பிட்டுப் பேசினாலும் என்னோடு பேசியது பற்றி அவரிடம் எதுவும் கூற வேண்டியதில்லை. மிஸ்டர் கனகராஜுக்காக நான் இரக்கப்படுகிறேன். இரக்கப்படுவது மட்டும் அவருக்குப் போதாது. ஆனால் இரக்கத்தையும் அதுதாபத்தையும் தவிர நான் அவருக்குத் தர வேறு எதுவுமில்லை சார்?”

“உன் பதில் எனக்குப் பெரிய ஏமாற்றம்தான் அம்மா…”

“ஒரு டீன் என்ற முறையில் இது உங்களுக்கு ஓர் அநுபவம் மட்டும்தான். கனகராஜின் குடும்பத்துக்கு வேண்டியவர் என்ற முறையில் வேண்டுமானால் ஏமாற்றமா யிருக்கலாம். அதை நீங்கள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் சார்!”

– அவர் அவளுக்கு விடை கொடுக்கும்போது இரவு அதிக நேரமாகியிருந்தது. லேடீஸ் ஹாஸ்டல் கேட்டில் உள்ளே விடத் தகராறு செய்தால் தம்மைப் பார்க்க வந்ததாகச் சொல்லிக் கொள்ளும்படி அவளிடம் முகப்புவரை அவளை வழியனுப்ப வந்தபோது சொன்னார் அவர்.

அவள் டீன் குடியிருப்பிலிருந்து வெளியேறிச்சென்றாள். சுற்றி வளைத்து டீன் உரையாடலைத் தொடங்கிய விதமும் கடைசியிலே வேறு வழியின்றி நேரடியாகக் “கனகராஜைக் கை விட்டு விடாதே! அவன் உடைந்து தூள் தூளாகி விடுவான்” என்ற கோரிக்கையில் கொண்டு வந்து முடித்த விதமும் அவள் முற்றிலும் எதிர்பார்த்திராதவை. வேறு ஏதாவது அரட்டல் மிரட்டல் விவகாரத்திற்காகவே டீன் கூப்பிட்டனுப்பியிருப்பார் என்றுதான் கோபத்தோடு அவள் கிளம்பி வந்திருந்தாள். வந்தபின் கோபத்தை விடப் பரிதாபமே அவளுக்குள் அதிகமாகியிருந்தது.

கனகராஜின் தந்தை புரோ – சான்ஸலரின் நண்பர், கோடீசுவரர் என்பனபோல் டீன் மூலம் அப்போது தெரிந்து கொண்ட உண்மைகள் அவள் அபிப்ராயத்தில்ந்த மாறுதலையும் உண்டாக்கவில்லை என்றாலும் டீன் எதற்காக மெனக்கெடுகிறார் என்பதை ஊகித்துக் கொள்ள முடிந்தது. டீனின் போக்கு அன்று மிகமிகச் சுபாவமாகவும் ஏறக்குறையக் கெஞ்சுவது போலவும் அமைந்திருந்தது. அறைக்குத் திரும்பியதும் கனகராஜுக்கே ஒரு சுருக்கமான கடிதத்தை எழுதி மெஸ் பையன் மூலம் காலையில் கொடுத்தனுப்ப முடிவு செய்தாள் சுலட்சணா.

அந்தக் கடிதம் போன்றதொரு கோபமான அதிர்ச்சியைக் கனகராஜுக்குத் தர அவள் விரும்பவில்லை என்றாலும் மேலும் மேலும் அவன் யார் மூலமாவது தன்னிடம் சமரசப் பேச்சுக்கு முயலக்கூடாது என்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடவே அதை எழுதினாள்.

மாலையில் பூங்காவில் தான் மறுபுறம் வீராசாமி யோடு அமர்ந்திருப்பது தெரியாமல் அவன் அந்தப் பக்கத்திலிருந்து கொண்டு சுகவனத்திடம் பேசிய பேச்சுக்களை எல்லாம் அவள் கேட்டிருந்தாள். அதனால் டீன் சொல்லிய எதிலும் அவள் சந்தேகப்படவே இல்லை. டீன் கூறிய பரிதாபகரமான விரக்தி நிலையில்தான் கனகராஜ் இருந்தான் என்பதை அவளே உணர்ந்திருந்தாள். ஆனாலும் அவனுக்கு அவள் எழுதிய கடிதத்தில் ஈரமோ ஈவு இரக்கமோ எதுவும் காண்பிக்கப்படவில்லை. தீர்மானமாக அவனுக்குப் புரியும்படி எல்லாம் எழுதிவிட்டாள்.

இரக்கத்துக்காகவோ, சிபாரிசுக்காகவோ ஒரு தொடை நடுங்கியை விரும்புவது என்பது அவளால் முடியாத காரியம். பணத்துக்காகவோ, பதவிகளுக்காகவோ, பாரம்பரியப் பெருமைக்காகவோ ஒருவரைக் காதலிப்பது என்பது அவளது கொள்கைக்கு ஒரு சிறிதும் ஒத்துவராத விஷயம். ஆனால் இவைகளை எல்லாம் விவரிக்காமல் சுருக்கமாகவே கனகராஜுக்கு எழுதியிருந்தாள் அவள்.

மறுநாள் காலையில் அவன் சேலம் புறப்படும் முன்பாக மெஸ் பையன் மூலம் தான் எழுதிய கடிதத்தைக் கனகராஜுக்குக் கொடுத்தனுப்புவதற்குத் தயாராக இரவே உறையில் போட்டு வைத்து விட்டுத்தான் படுத்தாள் சுலட்சணா

நெடுநேரம் வரை அவளுக்கு உறக்கம் வரவில்லை. சுபாவத்தில் மிகவும் கோழையாகிய கனகராஜை இந்தக் கடிதம் என்ன பாடுபடுத்தும் என் று நினைத்தபோது அவளுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. அவனால் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதுதான்.

‘டீன் சொல்லியது போல் இந்த ஏமாற்றத்தைத் தாங்காமல் கனகராஜ் தற்கொலை செய்து கொண்டால் என்ன செய்வது?’ என்பதை எண்ணியபோது அவள் உடல் சிறு நடுக்கத்தால் அதிர்ந்து குலுங்கி ஓய்ந்தது.

“என் தற்கொலைக்குச் சுலட்சணாவே காரணம் என்று அசட்டுத் தனமாக எழுதி வைத்துவிட்டு இறந்து தொலைத்தால் அதில் நம் தலை அநாவசியமாக உருளுமே’ – என்றுகூட நினைத்தாள்.

அடுத்த கணமே நினைப்பை வீராசாமியின் பக்கம் திருப்பினாள். வலது கையை இழந்து மூளியாகியும் தற்கொலையைப் பற்றியே எண்ணாமல் நம்பிக்கையோடு வாழ்க் காத்திருக்கும் அந்த ஏழைத் துணிச்சல்காரனை நினைத்துக் கொண்டபடி கனகராஜை நினைவிலிருந்து மெதுவாகவும், நிச்சயமாகவும் அகற்றி வெளியேற்றினாள்.

அத்தியாயம்  – 11

முந்திய இரவு இது நடந்த பின் மறுநாள் காலை டீன் கனகராஜைக் கூப்பிட்டு அனுப்பினார். கனகராஜ் அவரை அதிகாலையில் அவரே கூப்பிட்டனுப்பியபடி வீட்டில் போய்ப் பார்த்தான்.

”உங்கப்பா கார் அனுப்பிவைக்கிறதாகப் போன் பண்ணினாரு. ஊர்ல போய்க் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அப்புறம் வா…”

“அட்டெண்டன்ஸ் போயிடுமே சார்!”

“பரவாயில்லை! சுகவனம் எல்லா விவரமும் வந்து சொன்னான். கொஞ்சநாள் நீ இங்கே தனியா ஹாஸ்டல்லே இருக்க வேண்டாம். உன் நன்மைக்குத்தான் சொல்றேன். ஒரு மாறுதலா இருக்கட்டும். ஊர்ப்பக்கம் போயிட்டு வா…”‘

“சரி சார்…”

“ஆனா ஊர்ல போயும் இதையே நினைச்சுக் கஷ்டப்படாதே. உனக்கென்ன குறை? நல்ல குடும்பம். பண வசதி – படிப்பு எல்லாம் இருக்கு இவளை மறந்துடு. ரதியா ஆயிரம் பொண்கள் போட்டி போட்டுக்கிட்டு உனக்குக் கழுத்தை நீட்டுவாங்க. நல்ல அழகியாகவே கிடைப்பாள். வலைப்படாதே. இவ வெறும் அன்னக்காவடி. யாரோ டிரேட் யூனியன் லீடரோட பொண்ணு. நீ இங்கே திரும்பி வரணும்னா மறுபடி இந்தச் சுலட்சணவே மனசு மாறி உங்கிட்டப் பல்லை இளிச்சுக்கிட்டு வந்து நின்னாக்கூட ‘போடீ! உன்னை எவன் கண்டான்?’னு கேட்கிற திமிரோட வரணும்.”

அவன் அவரது அந்த வார்த்தைகளுக்கு அஞ்சி மிரண்டு ஓர் ஒப்புக்காகக் கிளிப்பிள்ளை போலத் தலையை ஆட்டினான்.

“போன் போட்டுத் தரட்டுமா? உங்க அப்பாவோடப் பேசறியா?”

“வேண்டாம் சாம்! நீங்க பேசினதே போறும். கார் வந்ததும் நான் ஊருக்குக் கிளம்பத் தயாராகணுமே…?”

“ஆமாம். நேத்து இராத்திரியே சுகவனம் வந்து சொன்னதும் உங்கப்பாவுக்கு ஃபோன் பண்ணியாச்சு. கார் இப்ப இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்துடும்.”

கனகராஜ் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான். அவன் விடுதிக்குத் திரும்பிப் பிரயாண ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது லேடீஸ் ஹாஸ்டல் மெஸ் பையன் அவனைத் தேடிக் கொண்டு ஒரு கடிதத்தோடு வந்தான்.

உறையிலிருந்த எழுத்திலிருந்து, கடிதம் சுலட்சணாவிட மிருந்து என்று தெரிந்தது.

“கொஞ்சம் இருப்பா! நான் சொன்னப்புறம் நீ போகலாம்”.

பையன் அறைக்கு வெளியே போய்க் காத்திருந்தான். வேகமாக அடித்துக் கொண்டு பதறும் நெஞ்சுடன் கடிதத்தைப் பிரித்துப் படிக்கலானான் கனகராஜ். கடிதம் ரொம்ப ரொம்பச் சுருக்கமாக இருந்தது.

“அன்புள்ள கனகராஜ்! நேற்றுப் பல்கலைக்கழகப் பூங்காவில் சவுக்கு வேலிக்கு இப்பால் நானும் வீராசாமியும் உட்கார்ந்திருப்பது தெரியாமல் நீங்கள் உங்களுடைய ஊர்க்கார நண்பர், எம்.டி. படிக்கும் சுகவனத்திடம் பேசிக் கொண்டிருந்ததை முழுவதும் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நான் ஒட்டுக்கேட்க நேர்ந்தது. ‘நான் காதலிக்கிறேன். சுலட்சணாதான் காதலிக்கிறாளா இல்லையா என்று தெரியவில்லை’ என்பதாக உங்கள் நண்பரிடம் நீங்கள் அழமாட்டாக் குறையாக முறையிட்டதை நானும் கேட்டேன். இன்னமும் இதற்குப் பதில் சொல்லாமலிருப்பது என்தரப்பில் நியாயமில்லை. இதோ என் பதில்:

சுலட்சணாவும் காதலித்தாள். காதலிக்கிறாள். காதலிப்பாள். ஆனால் அவள் ஒன்றும் வாயில் விரலை வைத்தால் கடிக்கத்தெரியாத பேதைப் பருவத்துப் பெண் குழந்தை இல்லை. அழகிய பொம்மைகளைக் காதலித்து அவற்றோடு விளையாடும் பருவம் கடந்துவிட்டது. தான் காதலிக்கிறவனின் குணங்களைப் பற்றிய அக்கறையோடும் பிரக்ஞையுடனுமே இனி அவளால் காதலிக்க முடியும். உங்களிடம் அந்தக் குணங்கள் இல்லை. அறவே இல்லை.

நண்பரே! சுலட்சணா இன்னும் காதலிக்கிறாள். ஆண்மையை, சமூகப்ரக்ஞையை, எதிர் நீச்சலிட முடிகிற வீரத்தை, அவளால் இன்னும் காதலிக்க முடியும். இவைகளைக் குணமாகக் கொண்ட ஒரு வீரனை, அவன் அழகனாக் இல்லாவிட்டாலும் அவளால் காதலிக்க முடியும். அவனுக்குக் கையோ காலோ இல்லாவிட்டாலும்கூட அவள் அவனைக் காதலிக்க முடியும். கையும், காலும் மூக்கும் முழியுமாக இருந்து ஆண்மையில்லா தவனாயிருந்தால் அவனை அவளால் சாதாரணமாக நேசிக்கக்கூட முடியாது.

‘காதலிக்கப் போதுமான மென்மையான உள்ளமே எனக்கு இல்லை’ என்று நீங்கள் உங்களது நண்பரிடம் குறைப்பட்டுக் கொண்டிருந்ததை நானே என் செவிகளால் கேட்டேன். ஆம்! உண்மைதான்!

கோழையைக் கண்டு சகித்துக்கொள்கிற மென்மை என்னிடம் இல்லை. தீமையைக் கண்டு சகித்துக்கொள்கிற மென்மை என்னிடம் இல்லை. கோழையை – பயந்தாங் கொள்ளியை – அடிதடிக்குப் பயந்து தன் கூட வந்த பெண் பிள்ளையைத் தனியே விட்டுவிட்டு ஓடுகிற அற்பத்தனத்தைச் சகித்துக்கொள்கிற மென்மை என்னிடம் இல்லை. நிச்சயமாக இல்லை. இனிமேலும் அப்படி மென்மை என்னிடம் ஏற்படவே ஏற்படாது என்பதும் சர்வ நிச்சயம்.

என்னிடம் காதலிருக்கிறது. அதை ‘சிவிக் கரேஜ்’ உள்ள ஒருவருக்கு – அதாவது உங்களது நண்பரே உங்களிடம் கூறினது போல் ‘சிவிக் ஹானஸ்டி’ உள்ள ஒருத்தருக்கே சமர்ப்பிக்க நான் விரும்புகிறேன். விரும்புவேன்.

அன்று பஜாரில் நீங்கள் என்னைத் தனியே விட்டுவிட்டு ஓடி ஒளிந்த போது அதிர்ஷ்டவசமாக வேறொருவர் எனக்குக் கிடைத்து விட்டார் என்பதையும் இந்தச் சமயத்தில் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது காதலை அந்தத் தீரனுக்கு வழங்கிவிட்டேன். உங்களுக்கு என் அநுதாபங்கள். இதற்கு உங்களிடமிருந்து பதில் எதுவும் நான் எதிர் பார்க்கவில்லை. தயவு செய்து பதில் அனுப்ப வேண்டாம்.

அது தேவையும் இல்லை.

இப்படிக்கு,
உங்கள் சிநேகிதியாக இருந்த
சுலட்சணா.

“நீ போகலாம்ப்பா”- கனகராஜ் தளர்ந்த குரலில் அறைக்கு வெளியே காத்திருந்த பையனிடம் கூறினான். மெஸ் பையன் தலையைச் சொரிந்தான். கனகராஜ் மணி பர்ஸைத் திறந்து ஓர் இரண்டு ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினான். பையன் அதை வாங்கிக்கொண்டு தாராளமாக ஒரு சலாம் வைத்துவிட்டுப் போய்ச் சேர்ந்தான்.

ஏற்கெனவே மறுபடி திரும்பி அங்கே வருகிற நோக்கோடு அரைகுறையாக ஒழித்திருந்த விடுதி அறையை இப்போது முழுமையாக ஒழிக்கத் தொடங்கினான் கனகராஜ். மறுபடி பதினைந்து நாட்களில் திரும்பி அங்கே வருகிற நோக்கம் இனி அவனுக்கு இல்லை.

“என்ன ரெடியாகிக்கிட்டிருக்கியா? கீழே கார் வந்து- நிக்கிது” – என்று சொல்லிக்கொண்டே சுகவனம் வந்தான். சேலத்தில் அவனது வீட்டில் பெற்றோருக்கு ஒரு கடிதம் கொடுத்தனுப்ப வேண்டியிருந்தது. அதைக் கனகராஜ் மூலமே கொடுத்தனுப்பிவிட எண்ணிக் கடிதத்தை எழுதி எடுத்துக்கொண்டு வந்திருந்தான் சுகவனம்.

ஒன்றும் பேசாமல் சுகவனம் தந்த கடிதத்தை வாங்கிக் கொண்டான். கனகராஜ்.

“மறுபடி எப்போடா திரும்பி வரே…?”

“………….”

“உன்னைத்தாண்டா கேட்கிறேன்! மறுபடி எப்போ இங்கே திரும்புவே?”

“எனக்கே தெரியாது! வருவேனோ இல்லையோ?” கனகராஜின் குரல் நைந்து உடைந்திருந்தது. கண்களில் நீர் முட்டிக் கொண்டு தளும்பி நின்றது. இன்னும் கொஞ்சம் பேசினால்கூட அழுதுவிடுவான் போலிருந்தது. சுகவனம் ஆறுதலாக அவனருகே சென்று,

“அசடே! இதுக்காகவா இப்படி மனசு உடைஞ்சு போறே? இவள் இல்லாட்டா இன்னொரு விலட்சணாடா, சுலட்சணாவை விட்டா உலகத்திலே வேற அழகான பொம்பளையே இல்லையாடா?”

அவனால் அப்படி நினைக்க முடியவில்லை. உள்ளுக்குள் ரொம்ப உறுத்தியது.

“டேக் இட் ஈஸி கனகராஜ்! சுலட்சணா இல்லாட்டா இன்னொரு விலட்சணா.” மறுபடியும் சுகவனம் அருகே வந்து கனகராஜின் தோளைத் தட்டிக்கொடுத்துச் சொன்னான். நண்பனுக்கு விடைகொடுத்தான்.

கார் பல்கலைக்கழகக் காம்பஸில் வளைந்து வளைந்து சென்று வெளியே போகும் மெயின் ரோடை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது – அங்கங்கே ‘ஸ்பீட் பிரேக்கர்கள் இருந்ததால் நின்று நின்று போக வேண்டியிருந்தது.

உள் சாலையில் ‘வசந்த மண்டபம்’ என்று அவர்கள் செல்லமாக அழைக்கும் போஸ்ட் கிராஜுவேட்ஸ் நூல் நிலையத்தின் அருகில் கார் திரும்பியபோது அதன் படிகளில் வீராசாமியைக் கைதழுவியபடி சுலட்சணா மேலேறிப் போய்க்கொண்டிருந்தாள். வெட்டுண்ட வலது கைக்குப் பதில் அவன் சட்டை பொய்யாய்த் தொங்குவதைக் காரிலிருந்தே பார்த்தான் கனகராஜ்.

‘இவளைப்போல் ஒரு பேரழகி இப்படிக் கூட நடந்து வருவதாயிருந்தால், கைகளை மட்டுமென்ன, கால்களைக் துணிந்து இழக்கலாமே?’ – என்று மனத்தில் கூடத் தோன்றியது.

இன்று நினைப்பிலே தோன்றும் இந்தக் கழிவிரக்கமான, துணிவு அன்று பஜாரில் அந்தச் சம்பவத்தின்போது நிஜமாகவே தோன்றியிருந்தால் சுலட்சணாவே தன்னைக் கைவிட்டிருக்க மாட்டாள் என்றும் சேர்ந்தே தோன்றியது. எல்லாம் கழிவிரக்கமான, இப்போது பயன்படாத வெறும் நினைவு மட்டுமே. இனி இந்த நினைவுகளால் யாருக்கு என்ன பயன்?

கார் காம்பஸை விட்டு வெளியேறி ஜி.எஸ்.டி. நேஷனல் ஹைவேய்ஸுக்கு வந்தபோது பல்கலைக் கழகக் கட்டிடங்களும் மரக்கூட்டங்களும் அவை சார்ந்த காட்சிகளும் பார்வையிலிருந்து விலகி மறைந்தன அவனுள் ஏதோ பாறையாக உறுத்தி அழுத்தியது. நெஞ்சில் ஒரே வலி. வேதனைக் கனம்.

கனகராஜ் சட்டைப்பையிலிருந்து கர்சீப்பை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு டிரைவருக்குத் தெரியாமல் மெல்ல மெல்ல மௌனமாக அழுதான். கர்சீப் நனைந்தது. கோழைகள் வேறென்ன செய்ய முடியும்? இப்படி அழத்தான் முடியும்! பாவம்!

அத்தியாயம்  – 12

கனகராஜ் சேலத்துக்கு வந்து சில மாதங்கள் கழிந்தன. நாட்கள் முடமாகி நொண்டி மெதுவாக நகர்ந்தன நடந்தன. அவன் மனநிலை தேறவேண்டும் என்று அவனுடைய தந்தை தம்மால் முடிந்த விதங்களில் எல்லாம் முயன்று செலவழித்து என்னென்னவோ உற்சாகப்படுத்திப் பார்த்தார். உதயா பல்கலைக் கழகத்திலிருந்து டாக்டர் சுகவனம் எழுதியிருந்த ஓர் இரகசியக் கடிதம் கனகராஜின் தந்தையை எச்சரித்திருந்தது. ஓரளவு பயமுறுத்தவும் செய்திருந்தது.

‘எக்காரணம் கொண்டும் அவனைக் கவனிக்காமல் தனியே விட்டு விடாதீர்கள்! சுலட்சணா விஷயத்தில் அவன் கடுமையாக ஏமாந்து போயிருக்கிறான். என்னிடம் அவன் வாயாலேயே ‘தற்கொலை அது இது’ என்று இரண்டு மூன்று முறை விரக்தியாக உளறியிருக்கிறான். இங்கிருந்து புறப்படுகிற சமயத்தில் டீனிடம் அவன் பேசியதிலிருந்தும், என்னிடம் நடந்து கொண்டதிலிருந்தும் மிக மிகச் சோர்ந்து தளர்ந்த நிலையிலிருந்தான் அவன். இங்கிருந்தோ, வேறு எங்கிருந்தோ சேலம் முகவரிக்குக் கனகராஜ் பெயருக்கு எந்தத் தபால் வந்தாலும் நேரே அவனிடம் கொடுத்து விட வேண்டாம். நீங்கள் பார்த்து சென்ஸார் செய்து அவசியமானால் மட்டும் கொடுக்கவும். ஏர்க்காடு, பெங்களூர், என்று கனகராஜை எங்கும் தனியாக அனுப்ப வேண்டாம் – மிக மிக ஜாக்கிரதை யாயிருக்கவும்! தனிமை அவனைத் தற்கொலைக்குத் தூண்டக் கூடும்,

பல்கலைக் கழகத்திலிருந்து கனகராஜ் சேலத்திற்கு வந்து சேர்ந்த இரண்டு நாளைக்குள் அவன் தந்தை பெயருக்கு ‘ஸ்டிரிக்ட்லி பிரைவேட் அண்ட் கான்ஃபிடென்ஷியல்’ என்ற குறிப்புடன் சுகவனத்திடம் இருந்து இந்தக் கடிதம் வந்து சேர்ந்திருந்தது. டீன் கூடத் தனியாக இதே எச்சரிக்கையை செய்து டெலிஃபோனில் கனகராஜின் தந்தையோடு பேசியிருந்தார். கடுமையாக எச்சரித்தும் இருந்தார்.

கனகராஜின் தந்தை தர்மராஜ் தமது பணத்திற்கும் செல்வாக்கிற்கும் புகழுக்கும் இது ஒரு சவால் என்று நினைத்தார். ‘அப்படி இவனைப் பைத்தியமாக அடித்த பெண் யார் தான்’ என்று பார்த்துவிட விரும்பினார் அவர். டீன் பிள்ளை யுடனும் சுகவனத்துடனும் ஃபோனிலேயே தமது வியப்பைத் தெரிவித்தார்:

“பையனோட படிப்பு, மூளை எதிர்காலம் எல்லாத்தையுமே இப்போ இப்பிடிப் பாழாக்கிட்டாளேப்பா. அப்படி என்னப்பா ரம்பையா திலோத்தமையா? நம்ம பையனைப் போல ராஜாவாட்டம் ஒரு பையனைக் கசக்குதா அவளுக்கு? அவனுக்கென்ன குறை? அழகில்லையா? பணமில்லையா? ‘படிப்பில்லையா?”

“எல்லாம் இருக்கலாம்! ஆனா அதெல்லாம் அந்த சுலட்சணாவுக்குப் போதுமானதா இல்லியே? அதை எல்லாம் அவ பொருட்படுத்தலியே?”

“அப்பிடி அவளென்ன பெரிய கொம்பனுக்குப் பிறந்தவளா? யாருப்பா அந்தப் பொண்ணு?”

“சுலட்சணா; மெட்ராஸ்லே சின்னச்சாமின்னு ஒரு பெரிய டிரேட் யூனியன் லீடரோட மகள்”.

“அவனைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். அப்பிடி ஒண்ணும் காசு பணமுள்ள ஆள் இல்லியே அவன்? ரொம்ப முரண்டுக்காரன். இன்னும் தொழிலாளிகளோட தொழிலாளியாக் குடிசையிலியே தானே இருக்கான் அந்த ஆளு? அவனோட மகள் தானா இந்த முரண்டு பிடிச்ச பொண்ணு?”

“அவ அப்பனைப் போலவே மகளும் முரண்டு பிடிச்சவ. ஆனால் நல்ல அழகி. கொள்கையிலே பிடிவாதக்காரி-”

“கனகராஜ் தாயில்லாப் பிள்ளை. அவனு கு ஏதாவது ஆச்சுன்னா எனக்கு வாரிசே இல்லேங்கிறது உனக்குத் தெரியாததில்லே சுகவனம்! அவனோட நன்மைக்காகவாவது நான் அந்த பெண்ணை வசப்படுத்திச் சம்மதிக்க வச்சு இந்தக் குடும்பம்கிற வண்டியிலே கொண்டாந்து பூட்டியாகணும்ப்பா…”

“அதிலே எனக்கு நம்பிக்கையில்லை. நேரே மெட்ராஸ் போயி இவ அப்பன்காரன் கிட்ட வேணும்னாப் பேசிப் பாருங்க. இவ கிட்டப் பேசிப் பிரயோசனமில்லை. இவ உங்க பேச்சுக்கு இணங்கி வசப்படறது கஷ்டம்.”

“சடார்னு அப்பிடிச் சொல்லி முடிச்சுடாதே சுகவனம். ஒவ்வொருத்தருக்கும் ஒரு விலை இருக்கும். அதைத் தெரிஞ்சுக் கிட்டா அந்த விலையைக் குடுத்து அவங்களை வாங்கிடலாம்”

“சுலட்சணாவுக்கு வேண்டிய விலை ரொம்பப் பெரிசு. அது உங்க ஸன் கிட்ட இல்லேன்னு அவளே முடிவு பண்ணியாச்சு.”

“அதென்னப்பா அப்பிடி அபூர்வமான விலை? நான் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?”

“தெரிஞ்சுக்கலாம். ஆனா உங்களுக்குப் புரியறது சிரமம். கொஞ்சம் நுணுக்கமான விலை அது.”

“உலகத்திலே உள்ள விலைதானே?”

“உள்ளதுதான்! ஆனாக் னகராஜாலே மட்டுமே குடுக்க முடிஞ்ச விலை. துரதிஷ்டவசமா அவங்கிட்ட அது இல்லை. அவனுக்காக நீங்க தர முடியாதது அது…”

“என்னப்பா புதிர் போடறே?”

“புதிர் இல்லே. இது உண்மை. ‘சிவிக் கரேஜ்’னு ஒரு இங்கிலீஷ் வார்த்தை இருக்கே…?”

“ஆமாம்! அதுக்கென்ன வந்தது இப்போ?”

“அதாவது சமூகத் துணிச்சல் – பொதுக்காரியங்களிலே தைரியம்…”

“சரிதான் மேலே சொல்லு.”

“அது உள்ள ஓர் ஆம்பிளையைத்தான் எனக்குப் பிடிக்கும்கிறா அவ…”

“அப்போ எவனாவது விட்டேத்தியாத் தெருவிலே அலையிற காலிப்பயல்தான் கிடைப்பான் அவளுக்கு..”

“நீங்க கோபமாப் பேசறீங்க! பொறுமையா மெட்றாஸ்லே அவ அப்பாவைப் போய்ப் பார்த்துக் கலந்து பேசுங்களேன். அதுலே என்ன தப்பு?”

“யூனிவர்ஸிடியிலிருந்து சேலம் வந்த நாளிலேயிருந்து ங்கே இவன் என்னமோ பறிகுடுத்தவன் மாதிரியிருகானே சுகவனம்?”

“அதுவும் எனக்குப் பிடிக்கலே? விட்டுப் பிட்டா ‘இந்த சுலட்சணா இல்லாட்டா இன்னொரு விலட்சணா’ என்று எவ்வளவோ அவன் கிட்டச் சொல்லிப்பார்த்தாச்சு. இருந்தும் அவன் மனசைத் தேத்திக்கலை. இன்னும் அவளுக்காகத்தான் உருகறான்! அவளை நினைச்சுத் தான் உயிரைவிடறான்.”

”சரி! இந்த மேட்டரை இனிமேல் எங்கிட்ட விட்டுடு! ஐ வில் டாக் டு ஹெர் ஃபாதர். இன்னிக்கே மெட்ராஸ் போறேன்” – என்று டெலிபோன் உரையாடலை முடித்தார். கனகராஜின் தந்தை தர்மராஜன். எப்படியும் ஒரு கை பார்த்துவிடுவதென்ற உறுதி வந்திருந்தது அவருக்கு.

அவர் உடனே சொன்னபடியே செய்தார். சென்னைக்குச் சென்றார். தேடி அலைந்து சுலட்சணாவின் தந்தையைக் கண்டு பிடித்துச் சந்தித்தார். தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொண்டு எல்லா விவரமும் சொல்லி நிலைமையை விளக்கினார். பொறுமையாகச் சகலத்தையும் கேட்டுக் கொண்ட சுலட்சணாவின் தந்தை தோழர் சின்னச்சாமி சுருக்கமாக ஆனால் தீர்மானமான தன் பதிலைக் கூறினார்:

“சின்ன வயசிலிருந்தே நான் அவளை ‘இதை இப்படிச் செய்; அதை அப்படிச் செய்யாதே’ – என்றெல்லாம் உத்தரவு போட்டோ, அதட்டியோ வளர்க்கலே. அவள் என் இஷ்டப்படி வளர்ந்தாள் என்பதை விடத் தன் இஷ்டப்படி வளர்ந்தாள் என்பதே சரி! பெண்ணுரிமை, பெண் விடுதலைன்னு பேசறதோட விட்டுவிடாமல் அவளுக்கு இந்தச் சுதந்திரத்தை எல்லாம் நான் உண்மையிலேயே கொடுத்தேன்”

“ஆனாலும் இப்போ அவள் நீங்க சொல்றதைக் கேட்பாள்னே எனக்குத் தோன்றுகிறது”-

“இந்த விஷயத்தில் அவள் சொல்வதை நான் கேட்கத் தயாராயிருக்கிறேன். உங்கள் மகனை அவளுக்குப் பிடித்து அவள் சரி என்றால் தாராளமாகத் திருமணம் செய்து கொள்ளலாம். உங்கள் மகனும் அவளைக் காதலித்து அவளும் உங்கள் மகனைக் காதலித்தால் எனக்கு ஆட்சேபணையே யில்லை. இது அவள் வாழ்க்கை. அவள் தீர்மானப்படி நடக்கும். என் விருப்பம்னு எதையும் அவள் மேல் நான் திணிக்கமாட்டேன். நீங்கள் உதயா பல்கலைக்கழகத்திற்குப் போய்ச் சுலட்சணாவையே பார்த்துப் பேசுங்களேன்”

அவருடைய திட்டவட்டமான இந்தப் பதிலைக் கேட்டு வேறு வழியின்றி அவரிடம் சொல்லி விடைபெற்றுக் கொண்டு உதயா பல்கலைக்கழகத்துக்குப் புறப்பட்டார் தர்மராஜ்.

தனக்கு வேண்டியவரும், உறவினருமான டீன் வீட்டில் இருந்து கொண்டு டீன் மூலமே சுலட்சணாவைக் கூப்பிட்டனுப்பினார் அவர். டீனிடம் தர்மராஜன் ஆதங்கப்பட்டார்:

“இந்த விஷயம் இவ்வளவு பெரிசாக ஆகும்னே நான் நினைக்கலே. இந்தப் பொண்ணைச் சம்மதிக்க வைக்கலேன்னா என் ‘ஸன்’னோட ஃப்யூச்சரே போயிடும் போலிருக்கு”

“கொஞ்சம் ஹார்டு நட். இவ வழிக்கு வர மாட்டாள்னு நினைக்கிறேன். ‘உன் பணத்துக்கும் குணத்துக்கும் அழகுக்கும் ஆயிரம் பொண்கள் போட்டி போட்டுக்கிட்டு வருவாங்கடா. இவளை மறந்து தொலை’ ன்னு நானே கனகராஜுக்கு இங்கே அட்வைஸ் பண்ணினேன். அவன் கேட்கலே”

“இதில் அவன் ஏறக்குறைய ‘மெண்டல்’ ஆயிட்டான்னே சொல்லலாம்.”

வீராசாமியோடு சுலட்சணா டீன் வீட்டுக்கு வந்தாள். அவர்கள் இருவரும் இப்படித் தன்னைக் கூப்பிட்டனுப்பியது அவளுக்கு அறவே பிடிக்கவில்லை என்று அவள் வந்த தோரணையிலேயே தெரிந்தது. டீனின் மிரட்டலான பாணியை அவள் வெறுத்தாள்.

பல்கலைக்கழக டீன் தர்மராஜைக் ‘கனகராஜின் தந்தை’ என்று அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

“என் குடும்பத்தின் எதிர்காலம் உன் கையிலேதான் இருக்கும்மா…நீ கொஞ்சம் பெரிய மனசு பண்ணி..?”

“ரொம்ப ஸெண்டிமெண்டலாப் பேசறீங்க. விஷயத்தை அறிவு பூர்வமாக் காரண காரியத்தோட நீங்க சிந்திக்கணும். வெறும் உணர்ச்சி பயன்படாது.”

“மெட்ராஸ் போய் உங்கப்பாவைக்கூடப் பார்த்தேன். அவர்தான் உன்னைப் பார்த்துப் பேசச் சொன்னார்.”

“அவரை எதுக்காகப் போய்ப் பார்த்தீங்க…?”

முடிந்தவரை விவரமாகத் தர்மராஜும்,டீனும் அவளுக்கு விவரித்தார்கள். அவளால் கைவிடப் பட்ட கனகராஜின் பரிதாப நிலைமையையும் எடுத்துச் சொன்னார்கள். அவள் எந்த உணர்ச்சியையும் காண்பிக்காமல் அதை எல்லாம் பொறுமையாகக் கேட்டாள்.

சுலட்சணா அதுவரை வெளியே உட்கார்த்திவிட்டு வந்திருந்த வீராசாமியைப் போய் அழைத்து வந்தாள். அவர்களுக்கு அவனை அறிமுகப்படுத்தினாள். தன் வலது கையை உயர்த்திக் காட்டி “இவர் என்னைக் காதலிப்பதற்கும் நான் இவரைக் காதலிப்பதற்கும் அடையாளமாக ‘எங்கேஜ்மெண்ட் ரிங்’ கூடப் போட்டுக் கொண்டிருக்கேன். செப்பு மோதிரம்தான். இதே விரலில் அணிய உங்க ஸன் ஒரு வைர மோதிரமே கொண்டு வந்து தந்தார். அதை நான் விரல்லே போட்டுக்கலே. உடல் ஊனமுற்றோர் நிதிக்காக ஏலம்விட்டுப் பணம் திரட்டிக் குடுத்துட்டேன். ஐஃபீல் வெரி ஸாரி… நீங்க  என்னை மன்னிக்கணும். நான் உங்க ஸன்னைக் காதலிக்கலே. காதலிக்கிறது – உடம்பின் அழகு, பண வசதி, இதை எல்லாம் பொறுத்தது என்று நான் நம்பவும் இல்லை. நான் எதிர்பார்க்கிற சில குணங்கள் யாரிட்ட இருக்கோ அவங்களிலே ஒருத்தரைத்தான் என் மனசு விரும்பும். அந்தக் குணங்கள் இவரிட்ட இருக்கு. இவரை நான் காதலிக்கிறேன்” என்றாள்.

“இதிலே மறுபரிசீலனை எதாவது உண்டாம்மா?”

“இல்லை. நிச்சயமாக இல்லை. இப்படி விஷயங்கள் மறுபரிசீலனைக்கு உரியவை அல்ல” – என்று தீர்மானமான பதிலைச் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள் அவள். ஒரு கை -அதாவது வலதுகை நுனிக்குப் பதில் சட்டைத் துணிமட்டுமே தொங்கும் முகமலர்ச்சியற்ற அந்தக் கறுப்பு இளைஞனைப் பொறாமையும் அசூயையும் பொங்கும் பார்வையால் பார்த்தார் தர்மராஜ். நினைத்ததை அடையும் வாய்ப்பைத் தாம் இழந்தாயிற்று என்ற நஷ்டம் அவருள் உறைத்துப் புரியத் தொடங்கியது. வெறும் முக அழகை – பணத்தை – பதவிகளை – அவற்றால் – வரும் பவிஷுகள் – செல்வாக்குகள் இவற்றைத் தவிர வேறு எதையுமே பெரிதாக மதித்திராத அந்தப் பரம்பரைப் பணக்காரர் தம் வாழ்வில் முதல் முதலாகக் ‘கொள்கைகளும் வீரமுமே அவற்றை எல்லாம் விடப் பெரியவை – மதிக்கத் தக்கவை’ என்று பிடிவாதமாகக் கூறிக் கொள்கைகளையும் சமூகத் துணிச்சலையுமே காதலிக்கும் அதிரூபவதியான இளம் பெண் ஒருத்தியைக் கண்ணெதிரே கண்டு அயர்ந்து போனார். இப்போது சுலட்சணா அவர் பார்வையில் இரட்டை மடங்கு அழகியாய்த் தோன்றினாள். அவள் உடம்பை விட உள்ளம் அதிக அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது மறுபடியும் அவருக்கு உறுதியாகத் தெரிந்தது.

(முற்றும்)

– முள் வேலிகள் (நாவல்), முதற்பதிப்பு: ஆகஸ்ட் 1986, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.

NaPa2 'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *