சுமக்காதவர்கள்….!
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 20, 2026
பார்வையிட்டோர்: 1,068
(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12
அத்தியாயம் – 9
அடுத்த நாள். பள்ளிக்கூடம் விட்டு மாலை…
“நேத்து மாலை பள்ளிக்கூடம் விட்டதும் எங்கோ போனே பிலோமினா?”
அறைக்குத் திரும்பும் அவளை.. தலைமை ஆசிரியை ஏஞ்சலின் அவளை வழியில் மடக்கி கேள்வி கேட்டாள்.
பார்வையில் கூர்மை. ஆளைப் புரட்டிப் பார்க்கும் சந்தேகம் இருந்தது.
“ஏன்?”
“நான் உன்னைத் தேடினேன்.”
“எதுக்கு?”
“நாம நடத்தப் போற விளாயாட்டு விழாவிற்குப் பரிசு பொருட்கள் வாங்கலாம்ன்னு முடிவு. நீ நம்ம பள்ளி ஸ்போர்ட்ஸ் செக்கரட்டரி. ஆலோசிக்கனும்ன்னு தேடினேன். காணோம். எங்கே போனே?”
‘இவள், தான் சென்ற இடம்…. தெரிந்து கேட்கிறாளா? தெரியாமல் கேட்கிறாளா?! இல்லை, உண்மை சொல்வேன், பொய் சொல்வேன் என்று எதிர்பார்க்கிறாளா. சோதனை செய்கிறாளா?!’ இவளுக்குள் யோசனை ஓடியது.
“என்ன யோசனை?”
“சாமியாரைப் பார்க்கப் போனேன்.”
“ஏன்? கலாவைப் பத்தி ஆலோசனையா?”
‘உண்மையைச் சொல்ல முடியாது. இல்லை தனிப்பட்ட விசயம். எங்களுக்குள் சொந்த விசயம்! என்று சொன்னால் அதற்கும் ஆபத்து!‘
“ஆமாம்.” அவள் எடுத்துக் கொடுத்த வழியிலேயே நுழைந்தாள்.
“என்ன?”
“அவள் பழையபடி இருக்கிறாளா, படிக்கிறாளான்னு கண்காணிச்சு சொல்லச் சொன்னார்.”
“ஃபாதரா?“
“ஆமாம்.”
“எப்படி இருக்காள்?”
“பழைய பாதிப்புகள்எதுவுமில்லாமல் சரியாய் இருக்காள்.”
“இது பேசவா ஒரு மணி நேரம்?!”
‘ஆக இவள் ஒரு மணிநேரம் தேடினாள் இல்லை கண்காணித்திருக்கிறாள்!’ துல்லியமாக புரிந்தது.
“ஆமாம். ஆள் இங்கே புதுசு. என்பதால்… அப்படியே பள்ளிக்கூட தோற்றம் வளர்ச்சி விசாரிச்சார். நேரம் போனதே தெரியவில்லை.”
ஏஞ்சல் முகத்தில் கொஞ்சமாய் நம்பிக்கை வந்தது போல் தெளிவு.
“சரி. உள்ளே வா”. தனது அறைக்கு அழைத்துச்சென்றாள்.
“உட்கார்.” அமர்ந்தாள்.
இவளும் எதிர் நாற்காலியில் அமர்ந்தாள்.
“சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு விழாவை நல்லா சிறப்பா கொண்டாடனும். பரிசுப் பொருட்களும் முன்னைவிட விலை அதிகம், தரமானதாய் இருக்கனும். என்ன செய்யலாம்?”
‘இப்படி திடீரென்று ஆலோசனைக் கேட்டால்…!?‘ பிலோமினாவிற்குள் வழி பிதுங்கியது. விழித்தாள்.
“பொருட்கள் வாங்க சென்னைக்குப் போகலாம்ன்னு திட்டம் போட்டிருக்கேன். அங்கே நாம நெனைச்சது போல் நிறைய பொருட்கள்…விலை மலிவு, குறைவாய் வாங்கலாம். அப்புறம் ஆறுதல் பரிசு, நல்லா படிக்கிற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுகள் கொடுப்பதாய் யோசனை. அதற்கு நல்ல புத்தகங்கள் வாங்கனும்ன்னு திட்டம். சென்னைக்குப் போனால் நாலு பதிப்பகங்கள் ஏறி தேடி வாங்கலாம்ன்னுதான் அங்கே போறதுன்னு முடிவு. நல்ல யோசனையா?” கேட்டாள்.
“நல்ல யோசனை மேடம்.”
“என்னென்ன பொருட்கள், புத்தகங்கள் வாங்கலாம்?”
“யோசிக்க அவகாசம் வேணும் மேடம்!“
“நானே நல்ல பொருட்கள் பொருட்கள் புத்தகங்களாய் வாங்கி வந்துவிடவா?”
“செய்யலாம் மேடம்.”
“நீயும் வர்றீயா?”
“நீங்க விருப்பப்பட்டால் வர்றேன்.”
“வரவேணாம்ங்குறது என் அபிப்பிராயம். காரணம் நீ பத்தாம் வகுப்பு ஆசிரியை. முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி எண்ணிக்கை அதிகமா இருக்கனும். நீ வந்தால் அது கெட்டுடும். இதையெல்லாம் உத்தேசித்துதான் உனக்குப் பதில் சிஸ்டர் எலிசபெத்தைக் கூட்டிப் போறேன். அவுங்க ஆறாம் வகுப்பு. பாதிப்பு இருக்காது. துணைக்கு உடற்பயிற்சி ஆசிரியர் பாலன் வர்றார்.”
“….”
“உனக்கொன்னும் ஆட்சேபனை இல்லையே?”
“இல்லை மேடம்.”
ஏஞ்சலுக்குப் பிலோமினாவை சமாதானப்படுத்திவிட்ட திருப்தி வந்தது,
இவளுக்கும் தன்னை விட்டுவிட்டதில் மகிழ்ச்சி.
“என்னைக்குக் கிளம்புறீங்க மேடம்?”
“அங்கே போய் ஒரு வாரம் தங்கி ஆற அமர பொருட்கள் வாங்குறதா ஐடியா. பயண ஏற்பாடுகள் செய்து கிட்டிருக்கேன். பேருந்து டிக்கெட் வாங்கச் சொல்லி இருக்கேன். அடுத்த வாரம் புறப்படலாம்.“
‘அப்பா! ஒரு வாரத்திற்குச் சுதந்திரம். லாரன்சை எந்தவித பயமும் இல்லாமல் சந்தித்துப் பேசலாம்!’ பிலோமினாவிற்குள் சின்னதாய் மகிழ்ச்சி துளிர் விட்டது.
மதர் சுப்பிரீயர் இவள் அளவிற்குக் கண்டிப்பு, கறார் இல்லை. அவள் அநாவசியமாக மற்றவர்கள் விசயத்தில் மூக்கை நுழைக்க மாட்டாள்.
பிலோமினா.. விடைபெற்றுக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
ஏஞ்சல் ஒதுக்கிவிட்டு செல்வதும் ஒரு நல்ல காரணம்தான். எல்லா தனியார் ஆங்கிலப் பள்ளிகளிலும்… பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரிய ஆசிரியைகளுக்குத்தான் பொறுப்புகள் அதிகம். எந்த வருடமும் இப்படித்தான். இந்த மாணவ மாணவிகளின் தேர்ச்சிதான் பள்ளிக்கூட வளர்ச்சி, விளம்பரம், நட்சத்திர அந்தஸ்த்திற்கு உதவி. அதனால் மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும். அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டுமென்பதற்காக இவர்கள் ஆரம்பம் முதலே கடுமையாக உழைத்து அரைப் பரீட்சை காலமான டிசம்பர் மாதத்திலேயே எல்லா பாடங்களையும் முடித்து விட்டு சனவரி முதல் மார்ச் தேர்வு தொடங்கும் நாள்வரை சனி ஞாயிறு விடுமுறைகள்கூட விடாமல் மாணவ மாணவிகளைப் பள்ளிக்கு வரவழைத்து படிக்கச் சொல்லி பயிற்சி கொடுத்து மாடாக உழைப்பார்கள்.
இப்படிப்பட்டத் தனியார் உயர்நிலைப் பள்ளிகள் மாணவ, மாணவிகளைத் தேர்விற்கு அனுப்புவதிலும் சில சூழ்ச்சிகள் வைத்திருக்கிறார்கள்.
அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களையும் கண்டிப்பாக தேர்ச்சி பெறுபவர்களையும் தரம் பிரித்து.. தங்கள் பள்ளியின் பெயரில் அனுப்புவார்கள். சந்தேகப்பட்டவர்களையெல்லாம் தனித் தேர்வு எழுதுவர்கள் போல் விண்ணப்பங்கள் பூ ர்த்தி செய்து அனுப்புவார்கள். இது ஒரு குயயுத்தி! நுாத்துக்கு நுாறு தேர்ச்சி என்று மார்தட்டிக் கொள்ள வசதி.
சனிக்கிழமை விடுப்பு.
பத்து, பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் பள்ளி முதல் மாடி, இரண்டாம் மாடி, மரத்தடி விளையாட்டிடம் என்று ஆக்கிரமித்திருந்தார்கள்.
வகுப்பு ஆசிரியைகளில் மூன்று பேர் தங்கள் தாங்கள் வகுப்பறைகளில் அமர்ந்து தங்கள் வேலைகளில் இருந்தார்கள். பிலோமினா தன் மாணவ மாணவிகளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள்.
தலைமை ஆசிரியை ஏஞ்சல்… சென்னை பிரயாண ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தாள். சலவைக்குப் போட்டிருக்கும் தன் துணிமணிகளை எடுக்கவும் வேறு பொருட்கள் வாங்கவும் அவள் எலிசபெத்தோடு நகரத்திற்குச் சென்றிருந்தாள். ஏஞ்சல் இப்போது எங்கு சென்றாலும் துணைக்கு அவள்தான்.
பிலோமினாவோடு எலிசபெத்தும் கன்னிகாஸ்திரி படிப்பு, பயிற்சு முடித்தவள்தான் என்றாலும் அவள் போக்கு வேறு. தன்னோடு பிடித்தவர்களிடம்தான் ஒட்டுவாள். ஒரு சிலரிடம்தான் கலகலப்பாகப் பழகுவாள். பெரிய ஆட்களிடம் பேசுவாள்.
தன் வகுப்பு மக்களைக் கண்காணித்த பிலோமினா பொழுது போகாமல் மூன்றாவது அடுக்கு மொட்டை மாடிக்குச் சென்றாள்.
அங்கிருந்து பார்த்தால் பள்ளி பின் பக்க சந்தில் படிக்கும் மாணவ மாணவிகள் தெரிவார்கள். அதோடு மட்டுமில்லாமல் மாதாக்கோயில் பாதிரியார் இருப்பிடம் தெரியும்.
லாரன்ஸ்…அறைக்கதவு சாத்தி இருந்தது, வரண்டா வெறிச்சோடி இருந்தது. உள்ளே ஆள் இல்லை. கீழே வண்டி நிறுத்துமிடத்தைப் பார்த்தாள். லாரன்சு ஹீரோ ஹோண்டா இல்லை.
அப்படியே பின் பக்கம் சென்று சுற்றுச்சுவருக்கும் கட்டிட இடைவெளிக்கும் இடைப்பட்ட சந்தில் டைப்பட்ட சந்தில் மாணவர்கள் படிக்கிறார்களா? பார்த்தாள். பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் அருவி விட்டுக் கொண்டிருந்தான். இவளையும் அறியாமல் வெட்கம் வந்து முகத்தைச் சிவக்க வைத்தது.
‘ச்சே !’ அதே சிவப்பில் மாடியை விட்டு கீழிறங்கினாள்.
மேலே இவள் சென்றது தெரியாமல் யாரும் இல்லை என்கிற தைரியத்தில் மாடிப்படி மையத்தில் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு மாணவனும் மாணவியும் இவள் தலையைக் கண்டதும் அலறி அடித்துக் கொண்டு கீழே ஓடினார்கள்.
‘இந்த வயதில் என்ன, நடப்பு, துணிச்சல்!? ‘
இவளுக்குள் சடாரென்று ஆத்திரம் துளிர்த்தது
‘இது வயது கோளாறு. பருவக்கிளர்ச்சி!’ என்று அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தாலும்… “இது தப்பு!” வாய் முணுமுணுத்தது.
‘ஆண் பெண் புரிதல் வேண்டும். இடைவெளி கூடாது. இனக் கவர்ச்சி வேண்டாம் என்பதற்காகத்தான் பெரும்பாலும் மாணவ, மாணவிகள் கலந்து படிக்கும்.. இரு பாலர்கள் பள்ளி. இதையும் மீறி ஆர்வக் கோளாறு கைக்கு எட்டும் பழமாக நினைத்து சிலர் தவறு செய்யும் போது என்ன செய்ய முடியும் நல்ல பயிர்கள் இருந்தால் இடையே ஒன்றிரண்டு களைகளும் இருக்கத்தான் செய்யும். கண்காணித்து கண்டித்துத்தான் திருத்தவேண்டும்.’ பிலோமினா…மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு கீழிறங்கினாள்.
‘சதீஷ்! செண்பகம்!’ அவர்கள் பெயர்களை மனதில் குறித்துக் கொண்டாள்.
முத்தக் காட்சி மனதுக்குள் புகுந்து பழைய நினைவுகளை மலர்த்தியது.
***
வழக்கம் போல் பிலோமினாவும் லாரன்சுவும் கல்லுாரிக்கு மட்டம் போட்டுவிட்டு பூங்காவில் ஓரம் ஒதுங்கி…. தனி இடத்தில் இருந்தார்கள்.
“பிலோமினா! ஒரு முத்தம் கொடேன்!” லாரன்சு கெஞ்சலாகக் கேட்டான்.
“உதை விழும்!” இவள் முறைத்தாள்.
“என்ன சினிமா வசனம் விடுறே ? முத்தம் கொடுத்தால் என்ன கற்பா அழியும்?” முயக்கினான்.
“அந்த ஆசை வேற இருக்கா?! இதுக்கு அதுதான் முதல்படி. முதல்ல நெருங்கி உட்கார்றது. அடுத்து தொடுறது. அடுத்து முத்தம். இப்படி கொஞ்சம் கொஞ்சமாய்ப் பயம் விலகி கடைசியில பெரிய தப்பு. உன்னை முதல் நெருங்கி உட்காரவிட்டு தொடவிட்டதே தப்பு, நகரு!” கை காட்டி நகர்ந்து அமர்ந்தாள்.
“நீ என்ன அந்த காலத்து அம்பிகாபதி அமராவதி காதல் போல இருக்கே!?” என்ற லாரன்ஸ் அவளை சடாரென்று தன் பக்கம் இழுத்து சாய்த்து… அப்படியே கவிழ்ந்து உதட்டில் முத்தம் கொடுத்தான்.
எதிர்பாராதது என்றாலும்….இவளுக்குள் சிலீரென்று மின்சாரம்,
“ஏய்! பொறுக்கி, கம்மனாட்டி! மோசம்!“ திட்டி விலகி எழுந்தாள்.
“கர்த்தரே! காப்பாற்று!” வேண்டினாள்.
“எதுக்கு இப்போ அவரை வீணாய் இடையில இழுக்கிறே?“
“என்னைக் காப்பாத்திக்க”
“அவர் காப்பாத்த மாட்டார்.”
“என்ன நீ சாமி இல்லாத கட்சியா?!” துணுக்குற்றாள்.
“இல்லே. சாமி ஒன்னுன்னு சொல்ற சாதி.”
“புரியலை?”
“ஆதியிலேர்ந்து இன்னையக் காலகட்டம் வரை எல்லாரும் எல்லாக் கோயிலுக்கும் போறாங்க. எந்த தெய்வமும் நீ அன்னிய மதம் என்னைத் தொடாதே, வணங்காதேன்னு சொல்றதில்லே, தள்ளறதில்லே. மீறினால் உன் கண்ணைக் குத்திடுவேன், காதைச் செவிடாக்கிடுவேன், உயிருக்கு ஆபத்து உண்டாக்கிடுவேன்னு செய்யறதில்லே, பயமுறுத்துறதில்லே. இப்படி ஒரு சேதி நிகழ்வு நிகழ்வு நடந்ததாய்ச் சரித்திரம் கெடையாது. ஆக..கடவுள் ஒன்னு. அவர் எல்லாரையும் தன் மக்களாய் நினைக்கிறார்ங்குறதுதான் உண்மை. இதுதான் என் சித்தாந்தம். கொள்கை.”
“அன்னை மேரின்னு அன்னைக்குக் கட்டு மரத்துல ஒரு கிருஸ்த்துவன் ஒதுங்கலைன்னா வேளாங்கண்ணி இல்லே. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிப்பு செய்யலைன்னா இங்கே கிருஸ்த்து மதமில்லே. முகலாயர்கள் இங்கே படையெடுக்கலைன்னா… இஸ்லாமில்லே. எல்லா மதத்தவர்களும் அன்னிய நாட்டுல படையெடுக்கும் போது எதிரி கோயில்களை அழிச்சிருக்காங்க சாமி சிலைகளை உடைச்சிருக்காங்க. துாக்கி கடல்ல வீசி இருக்காங்க. அதுக்காக அந்த தெய்வங்களெல்லாம் ஆத்திரப்பட்டு அவுங்களை அழிக்கலை. இவன் சாமியும் தடுக்கலை. மனுசன்தான் மனுசனை அழிச்சிக்கிட்டான். இன்னைக்கு எத்தனையோ கோயில்கள் கேட்பாரற்று இடிஞ்சு குட்டிச்சுவராய் இருக்கு. இதெல்லாம் ஒரு காலத்துல கொண்டாடின கோயில்கள்தான். அந்த தெய்வம் எங்கே போச்சு ? இப்போ ராம ஜென்ம பூ மி விவகாரம் ரெண்டு மத மனுசன்கள்தான் மோதிக்கிறாங்களேத் தவிர தெய்வங்கள் சும்மா கிடக்கு கிடக்கு. ஏன்…. தெய்வமே இல்லே. நிறைய பேசலாம் பிலோமினா. நம்மை மீறி ஒரு சக்தி இருக்கு. அதுதான் தெய்வம்.”
“உயிரோட இருக்கிற எவனும் காளிம்மன், மாரியம்மன், அல்லா, ஏசு, கர்த்தர், அந்தோனியார், மேரி, மாதான்னு கும்பிடவேணாம். ஆண்டவான்னு மனசு இறைஞ்சு கை கூப்பினால் போதும். மனம் சுத்தமா இருக்கும். மதம் அழிஞ்சுடும். விசயம் புரிஞ்சவங்க யோசிக்கிறாங்க. ஆனா… இது ஒரு புது மதமாகிடுமோன்னு பயப்படுறாங்க.”
‘அப்பாடி என்ன வேகம், துடிப்பு!’ இவளுக்கே அவனைப் பார்க்கப் பிரமிப்பாய் இருந்தது,
‘அப்படியெல்லாம் உணர்ச்சி பிழம்பாய் இருந்த லாரன்சு இன்றைக்கு….?’ எல்லாவற்றையும் அழித்து மரமாய் மரக்கட்டையாய்….பிலோமினாவிற்கு நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.
‘அப்படியே இருந்திருக்கலாம் லாரன்சு லாரன்சு!‘ நினைக்க அவளையும் அறியாமல் அவன் முத்தம் பதித்த உதடுகளை விரல்களால் வருடினாள்.
அப்படியே…சதீஷ், செண்பகத்தைத் தேடினாள்.
அத்தியாயம் – 10
அவர்களைக் கண்டு பிடிப்பது கண்டு பிடிப்பது ஒன்றும் குதிரைக் கொம்பாய் இல்லை. இவள் பிரயாசைப்படவுமில்லை.
ஆசிரியைப் பிலோமினா இப்படித்தான் கீழிறங்கி வரவேண்டும் என்று எதிர்பார்த்து அவர்கள் இரண்டாவது மடக்கின் ஓரத்தில் நடுக்கத்துடன் நின்றார்கள்.
இவள் தலையைக் கண்டதும், “எங்களை மன்னிச்சுடுங்க மிஸ்!” கைகளைப் பிசைந்து கலங்கினார்கள்.
தவறுக்காக வருந்தும் சாயல் அவர்களிடம் தெரிந்தது. இருந்தும் பிலோமினா பேசவில்லை.
“தலைமை ஆசிரியையிடம் சொல்லி எங்க படிப்பைக் கெடுத்துடாதீங்க மிஸ். எங்க அப்பா அம்மா காதுல விழுந்தா எங்களுக்கு அடி, அவமானம்.”
நடுக்கம், வியர்வை, கண்ணீர்….! உணர்ந்த பின் என்ன செய்ய முடியும்?!
“இது உண்மையான புரிதல்ன்னா மன்னிக்கிறேன்.” முகத்தை இறுக்கிக் கொண்டு சொன்னாள்.
“சத்தியமா இனிமே நாங்க இந்த மாதிரி தப்பு பண்ண மாட்டோம் மிஸ்.” அவன் அழுதான்.
“ஆமாம் மிஸ்.“ செண்பகத்தின் முகத்தில் மாலை மாலையாய்க் கண்ணீர். செருமல், விசும்பல்.
“ஆங்கிலப்படத்துல ஆணும் பெண்ணும் முத்தம் கொடுத்துக்கிறாங்களே. நாம கொடுத்துப் பார்ப்போம். அதுல என்ன இருக்குன்னு நான்தான் இவளை அழைச்சுப் போய்….”
‘தொலைக்காட்சிப் பெட்டி… வீட்டிற்குள் வந்து இந்த பிஞ்சு மனங்களிலெல்லாம் எப்படி நஞ்சை விதைக்கின்றது?’ நினைக்கவே இவளுக்கு அருவருப்பாய் இருந்தது,
“கர்த்தர் மேல ஆணையா சத்தியமா தப்பு செய்ய மாட்டேன்னு சொல்லுங்க.”
சொன்னார்கள்.
“சரி. போய் படிங்க.”
அவர்கள் முகக்கலக்கம் நீங்கி, பாரம் விலகியவர்களாய் ஓடியது திருப்தியாக இருந்தது, மலையாய் மிரட்டிய சுமை பனியாய்க் கரைந்தது போலிருந்தது.
அப்படியே பால்கனிக்கு வந்து மாணவ மாணவிகளை நோட்டமிட்டாள். எல்லாரும் புத்தகத்தை விரித்து படிப்பில் மும்முரமாய் இருந்தார்கள்.
சிலர் கொஞ்சம் சத்தம் போட்டு முணுமுணுப்பாய்ப் படித்தார்கள். அது அவரவர் இயல்பு என்ன செய்ய?
எவராவது ஒருத்தர் பாடத்தில் சந்தேகம் கேட்கிறார்களா? பார்த்தாள். இல்லை.
போரடித்தது. கீழே வந்தாள். கடைசி மாடி இறங்கும் போது வாசல் காவலாளி கனகசபை சின்னப்பையன் ஞாபகம் வந்தது.
தரை தளத்தில் இறங்கி திரும்பினாள்.
அவனுக்கு மாடிப்படி அடியைத்தான் அடைத்து அதில் ஒரு நிலை கதவு பொருத்தி அறை, ஒண்டிக்கட்டை ஒற்றை ஆளுக்கு அது போதும்.
வாசல் கதவு திறந்திருந்தது,
பள்ளிக்கூட விடுப்பு நாட்களில் அவன் எங்கும் செல்வதில்லை. படித்துக் கொண்டுதானிருப்பான். தபால் வழி கல்வியில் அவன் பி.காம் படிக்கிறான். நல்ல சாந்தமான முகம். இப்போதும் அவன் தரையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான்.
வாசலில் பிலோமினா தலையைக் கண்டதும் வாரிச்சுருட்டிக்கொண்டு “வாங்க மேடம்!” எழுந்தான்.
“என்ன படிக்கிறே?”
“ஆனந்தவிகடன்!”
“பி.காம் படிக்கலையா?”
“இப்போதான் அதை படிச்சு முடிச்சு ஒரு மாற்றத்துக்காக இது படிக்கிறேன் மேடம்.‘
“வேற என்ன படிப்பே?”
“கையில எந்த பத்திரிக்கை கெடைச்சாலும் படிப்பேன் மேடம்”
“பத்திரிக்கையெல்லாம் முன்னே மாதிரி தரமா இல்லேன்னு பேசிக்கிறாங்களே?”
விழித்தான்.
“சினிமா செய்திகள், உப்பு சப்பில்லாத சரக்கு. சமாச்சாரங்கள்ன்னு கொட்டி பக்கத்தை நிரப்பி வைக்கிறாங்களாமே! கேள்வி. உண்மையா…?”
“தெ… தெரியலை மேடம்” தடுமாறினான்.
“சரி ஏதாவது ஒரு பத்திரிக்கை கொடு புரட்டறேன்.”
கொடுத்தான். ஆனந்தவிகடன்.
எடுத்துக்கொண்டு அடுத்திருந்த ஒய்வறைக்குள் நுழைந்தாள். அங்கு…
ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு ஆசிரியை வீதம் பத்தாம் வகுப்பிற்கு இரண்டு, பன்னிரண்டாம் வகுப்பிற்கு இரண்டு என்று மொத்தம் நான்கு ஆசிரியைகள் வந்திருந்தார்கள். அவர்களில் பிலோமினாவைத் தவிர மற்ற மூவரும் திருமணம் முடித்து பிள்ளை பிள்ளை குட்டி பெற்றவர்கள். தங்கள் தங்கள் புருசன்களைப் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தவர்கள் இவள் தலையைக் கண்டதும் பேச்சை நிறுத்தி தங்கள் கைகளிலுள்ள மாணவர்கள் நோட்டுகளைத் திருத்துவர்கள் போல் பாவனை செய்தார்கள்.
‘ஏனிந்த திருட்டுத்தனம்? தங்கள் குடும்ப விவகாரம். கணவர் விசயங்கள் கன்னிகாஸ்திரிகள் காதில் விழக்கூடாது தப்பு! என்கிற எண்ணமா? எந்த கன்னிகாஸ்திரி…அம்மா, அப்பா, குடும்ப நடப்பு, மனித நடப்பு, இயல்பு…என்று எதுவும் தெரியாமல் வானத்திலிருந்து குதித்தார்கள்…?!’
பிலோமினா அவர்களைச் சட்டை செய்யாமல்… தனியே அமர்ந்து பத்திரிக்கையைப் புரட்டினாள்.
ஜெயும் மாருதியும் தாங்கள் வரைந்த பெண்களின் முன் பக்க அழகை கவர்ச்சியாய்க் காட்டி இருந்தார்கள். இரண்டு சினிமா விமர்சனங்கள் இருந்தது. ‘இது ஒரு காதல் கதை!’ என்று ஒரு படத்தின் விமர்சன முடிவில் இருந்தது, பசக்கென்று இவள் உள்ளத்தில் பழைய நினைவுகள் பற்றியது.
***
ஒரு நாள் மதியம். கல்லுாரி.
ஆசிரியர்கள் வராததால் மாலை இரண்டு வகுப்புகளுமே மட்டம் என்பதால் விடுப்பு விட மாணவ மாணவிகள் வீட்டிற்கும் சினிமாவுக்குமென்று உற்சாகமாய்ப் பறந்தார்கள்.
லாரன்சு அவசரமாக வந்து வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்த பிலோமினாவை மறைத்தான்.
‘ந்த..! சினிமாவுக்குப் போவலாமா ந்த!” கேட்டான்.
“இது என்ன பட்டிக்காட்டான் பேச்சு, இந்தே..?” முகம் சுளித்தாள்.
“இது பட்டிக்காட்டான் பேச்சா? பட்டினத்தான் பேச்சும் இப்படித்தான்! வயசுக்கு வந்த பொண்ணும் பையனும் பேசும் போது டி, டா போடக்கூடாது. அப்படி பேசினா… என்ன பொண்டாட்டியா புருசனான்னு பெரிசுங்கள் காதுல விழுந்தா கேட்கும். பேர் சொல்லி அழைச்சாலும் இதையே சொல்லி என்னமோ உரிமை உள்ளவன் போல அழைக்கிறேங்கும். வா போன்னாலும் ஆடா மாடான்னு மட்டையடி அடிக்கும். இதனால பள்ளிக்கூடம் வர்றீயாந்தே ? போறீயாந்தே ? படிக்கிறீயாந்தே ? ந்தே சேர்ந்துக்கும். ஏன் தோழிகள் கூட அப்படித்தான் பேசிக்குவாங்க.”என்றான்.
“ஆமாந்தே!” இவள் மறுமொழி கூற…
“அப்படி வா வழிக்கு?” முகம் மலர்ந்தான்.
“என்னாந்தே கேட்டே?” தொடர்ந்தாள்.
“சினிமாவுக்குப் போவலாம்ன்னுந்தே!”
“நான் வர்லேந்தே.”
“ஏன்ந்தே?”
“தியேட்டர்ல யாராவது தெரிஞ்சவங்க பார்த்து வீட்டுல சொன்னா முதுகு தோளு பிஞ்சிடும்ந்தே?”
“தெரிஞ்சவங்க அங்கே வரமாட்டாங்கந்தே.”
“நாம போறது பலான படமாந்தே?”
“இல்லேந்தே. ஆங்கிலப்படம்!“
“எந்த படத்துக்கும் நான் வர முடியாதுந்தே?”
“ஏந்தே?“
“அசிங்கமா இருக்கும்ந்தே!”
“இதுல அசிங்கமெல்லாம் இல்லேந்தே.”
“நான் படத்துக்கே வர்லேந்தே.”
“ஏந்தே?“
“நீ திருட்டுப் பையன்ந்தே. சும்மா உட்கார்ந்திருக்கும் போதே முத்தம் கொடுத்தவன். இப்போ பக்கத்துல உட்கார்ந்து இருட்டுல என் காலை உரசுவே கையைப் புடிப்பேந்தே?”
“ஹை..! அப்படி செய்யலாமா?!”
“கூடாதுந்தே.”
“அடுத்து என்னென்ன செய்வேன்?”
“என் மேல சாய்ஞ்சு…”
“சாய்ஞ்சு…?”
“மெல்ல உதட்டைக் கன்னத்துக்குக் கொண்டு வருவேந்தே. கன்னம் மூச்சுக் காத்துல சுடும்!”
”ஐயோ…. ஐயோ…!” உற்சாகம் தாங்கமுடியாமல் குதித்தான்.
“அடுத்து எனக்கும் கிரக்கம் வந்து…”
“வந்து…?”
“அப்புறம் அக்கம் பக்கம் உள்ளவங்க படம் பார்க்கமாட்டாங்க. நம்மைப் பார்ப்பாங்க.”
“இதெல்லாம் இல்லாம படம் பார்க்கிறது வீண்ந்தே!”
“அதுக்குத்தான் நான் வரலைந்தே.”
”ஆளை வளைக்க முடியாது. சாய்க்க முடியாது!’ என்று தெரிந்த பின் லாரன்சு காற்று போன பலுான் போல ஆனான்.
‘என்ன கொஞ்சல் குலவல் பேச்சு! அன்றைக்குச் சினிமாவிற்குப் போயிருந்தால் கூட இந்த சுவாரஸ்யம் இனிமை இருந்திருக்காது!’ நினைக்க பிலோமினாவிற்குள் பெருமூச்சு வந்தது.
‘லாரன்சு எங்கே?’ கேள்வி தொற்றியது.
‘சாப்பாடு..?’ நினைத்தது.
***
இரவு ஒன்பது மணிக்கு மேல் அவன் அறையில் விளக்கு எரிந்தது.
‘எங்கே சென்று வந்தான்?’ பிலோமினா விளக்கை அணைத்து விட்டு படுத்தாள்.
தூக்கம் வரவில்லை. சன்னலுக்கு வெளியே பார்த்தாள். நிலவு பால் போல் எரிந்து கொண்டிருந்தது.
‘மொட்டை மாடிக்குப் போய் உலாவலாம். இந்த பால் நிலவும் சிலுசிலு காற்றும் உள்ளம், உடலுக்கு இதமாய் இருக்கும்!’ நினைத்து வெளியே வந்தாள்.
விடுதியில் விடி விளக்குக்கூட எரியாமல் எல்லா விளக்குகளும் அணைந்திருந்தது, மெல்ல படியேறி மொட்டை மாடிக்குச் சென்றாள்.
பனி இல்லா பால் நிலவு. ரம்மியமாக இருந்தது, கீழே பார்த்தாள். பள்ளிக்கூட மர நிழல்கள் திட்டுத்திட்டாக இருந்தது. நிழல்களில் என்னென்னவோ உருவங்கள். பார்த்துக்கொண்டே இருக்கும்போது…
விடுதியை விட்டு கீழே ஒரு பெண் உருவம் வெளியே வந்து மர நிழல்களின் வழியே நடந்தது.
யாரும் விழித்திருக்கமாட்டார்கள் என்ற அலட்சியம். எதையும் லட்சியம் செய்யாமல் என்னவோ வைத்ததை எடுக்கச் செல்வது போல் பள்ளிக்கூட கட்டிடத்தை நோக்கிச் சென்றது. ‘யார்?’ உற்றுப் பார்த்தாள். கொஞ்சம் நிலவு வெளிச்சம் பட்டு ஆள் தெரிந்தது.
‘பத்து மணிக்கு மேல் இவள் எங்கே செல்கிறாள்? அங்கு செல்ல வேண்டிய காரணம்?’ உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
உருவம் பள்ளிக்கூட படி ஏறி… மாடிப்படி பக்கவாட்டில் மறைய… பிலோமினாவிற்குள் குப்பென்று வியர்த்தது.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
