இதயம் நிறைந்தவரும்… இயந்திர அரக்கனும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 18, 2026
பார்வையிட்டோர்: 1,436 
 
 

 அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் – 7

அத்தியாயம் – 5

“I miss you so soooo…. much miss. When will I see you again?”

கண்ணீர்த் துளிகள் கனம் தாங்காமல் கைப்பேசி திரையில் எழுத்துக்களாக விழ…

பிரிவிற்கு பிறகான என் எஞ்சிய பள்ளி நாட்கள், எண்ணத்தில் வலம் வர, அந்த நாட்கள் அவ்வளவு எளிதாய் ஒன்றும் இருந்து விடவில்லை. 

தொடக்கத்தில், என்னோடு சேர்ந்து என் பள்ளிச் சுவர்களும் ஏமாற்றத்தோடு நின்றிருக்க, அவர்கள் இல்லாத மாற்றத்தோடு அந்த வகுப்பறை எதிர் இருக்க, கனவா இருக்குமோ? வந்துடுவாங்களா? மறுபடி வந்தா எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்புகளுடன் நாட்கள் நகர, அவ்ளோ தான் என்று மனதிற்கு உறைத்த அன்றிலிருந்து, என் பெற்றோரின் அளவு கடந்த அன்போடும், மற்ற அன்பர்களின் அருகாமையோடும் சற்றே மாற்றிக் கொள்ள பழகியிருந்தேன் எனலாம். மறந்து விட அல்ல.

அதற்குப் பிறகு வகுப்பறையின் வாசல் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. 

இனி என்னால் பயன் இல்லை இடம் பெயர்ந்து விடு என்ற என் ஜன்னல் ஓர இருக்கை, அதனிடம் விடை பெற்று இரண்டாம் இடத்திற்கு இடம் பெயர்ந்தது, 

அவர்கள் இன்றி எதிர்ப்படும் அவர்கள் வகுப்பறை, முதல் பாட வேளையில் கேட்கும் வேறு ஒரு குரல், அவர்கள் அங்கு இல்லாததை சத்தமாய் உரைக்க, “அழுது விட்டால் தான் என்ன?” என்னும் அளவிற்கு கலக்கத்தை அதிகப்படுத்த காலமும் சற்று நடக்கத் தொடங்கி இருந்தது. 

பின்னர் எல்லாம் ஆசையாய் நான் பள்ளி சென்ற அந்த பாதையை அவசரத்திற்கு மட்டுமே பயன்படுத்த, பயன்படுத்திய அன்றெல்லாம் சற்று அதிகமாகவே பயணிக்கும் அவர்கள் நினைவுகள், நிறுத்தம் என்ற ஒன்றே இல்லாது, நில்லாது நிரப்பும் விழிகளை.

கைப்பேசி அதிகம் இல்லாத காலத்தில் கடிதத்தில்  Respected English Teacher  என எழுதுவதா? அல்ல My Dear English Teacher என எழுதுவதா? என குழம்பியது. 

என் நினைவுப் பெட்டியினுள் புதையலாய் ஒளிந்து இருக்கும், அவர்கள் எனக்கு அனுப்பிய முதல் கடிதம், என் பெயருக்கு முன் My Dear என தொடங்கி இருந்த ஒரே ஒரு ஒற்றைக் கடிதம்.

இடையிடையே எட்டிப் பார்க்கும் நினைவுகள் இரு விழிகள் நனைத்தது, இயலாமையால் இமைகள் மூட நாட்கள் நகர்ந்து, நானும் வளர்ந்து, கல்லூரியும் செல்ல அவ்வப்பொழுது காது தொடும் கைப்பேசியில் அவர்கள் குரல். 

வானொலி போல கேட்டுக் கொண்டு மட்டுமே இருந்த எனக்கு ஒரு நாள் காணொலியில் முதன் முதலாய் கண்ட போது, பார்த்து விட்டேன் என இதயம் பறக்க, பார்க்க விடாமல் கண்ணீர் மறைக்க, கனவா? நனவா? கனவாய்த் தான் இருக்குமோ என்ற  என்னிடம், கன்னம் தொட்ட கண்ணீர் கனவில்லை என்று உணர்த்த, உணர்ந்து முடிப்பதற்குள்ளேயே கண்களை நிறைத்து விட்டு கானலாகிப் போனது காணொலி.

அதை என் பள்ளித் தோழிகளுடன் பகிர்ந்து கொண்ட போது உங்க மிஸ்ஸ பாத்துட்டியா, பேசினியா,  அப்பவாது பேசினியா? என்று ஆவலாய் கேட்க, பேசினேனோ,  இல்லையோ  ஆமா! ஆமா! என் மிஸ், என் மிஸ் னு உள்ளுக்குள் ஒரே  ”குளு குளு வெண் பனி போல” பாடல் தான். 

என்ன கல்லூரி முடிந்து பள்ளிக் கூடம் னு சொல்றேன்னு பாக்குறீங்களா? ஆமா அன்னிக்கு சொன்னேனே இங்கிலிஷ் டீச்சர் ஆவேன்னு, இப்பொழுது நான் ஒரு பள்ளியின் ஆங்கில ஆசிரியை, என் மாணவர்கள் நான் வருவதை எட்டி எட்டிப் பார்த்து  “இங்கிலிஷ் மிஸ் வர்றாங்கடா” எனும் போது நினைவுகள் சுமந்த புன்னகையுடன் வகுப்பறைக்கு செல்கிறேன். நிமிடத்திற்கு ஒரு முறை நினைவு கொள்கிறேன்.

ஏன் இந்த பாடத்தை, இந்த துறையை தேர்வு செய்தீர்கள்? என நேரில் கேட்டாலும் நேர்முகத் தேர்வில் கேட்டாலும் ” Because I Love My English Teacher” என்றே பதில் அளிக்கிறேன். 

இந்த நினைவுகள் நிரம்பி வழியும் போதெல்லாம் நேரம் போவதே தெரியாமல் காலம் இனிக்கும். “அதுக்கு அப்பறம் மிஸ்ஸ பாத்தீங்களா? எப்ப பாத்தீங்க என்றெல்லாம் கேட்கும் போது மட்டும் கண்கள் பனிக்கும். 

இப்படியான கடந்து போன காலத்தின் சுவடுகள் காட்சிகளாய், கண்களுக்குள்  நடந்து செல்ல களைப்பில் சற்று கண் அயர, இமைத் திரை சற்று மூடி இடைவெளி விட, 

அன்று… ஒரு நாள்…

அத்தியாயம் – 6

விரல் தொடும் தூர இடைவெளியில்,  குரல் ஒன்று தொட்டு அழைக்க, விரைந்து நான் திரும்ப, விழிகளில் நீர் நிரம்ப, விழித் திரையில் விழுந்த முகம் கண்டு, இதயம் அதன் இருப்பை சற்று அதிகமாய் உணர்த்த, இமைக் கதவு வழி திறக்க, இரு விழியும் நீர் சுரக்க, கண்ணீர் துடைக்கும் உற்ற நண்பன் கடமை அதை மறக்க, காத்திருந்த வலியதுவோ, கண்ணீராய் வழிந்தோட, அளவில்லா மகிழ்ச்சியில் அரை பக்க மூளையதும் அயர்ந்து விட, அனிச்சையாய் இந்த நிகழ்வெல்லாம் நினைவுப் பேழையில் பதிந்து விட, அரை நிதானத்தில் அருகே மீண்டும் குரல்,  “நல்லா இருக்கியாடா, பேசுடா,  என்னடா பேசவே மாட்ற, ஏண்டாம்மா” எனும் போது, கடமை மறந்த இதழ்களின் மேல் கடும் கோபம் தான் எனக்கு. 

எனக்கு முன்னரே எட்டி எட்டிப் பார்க்கும் கண்ணீருக்கு எத்தனை முறை தான் புரிய வைப்பதோ தெரியவில்லை? அவங்க என் மிஸ் என்று. 

எத்தனை முறை சொன்னாலும் சற்றும் ஏற்றுக் கொள்வதும் இல்லை, மாற்றிக் கொள்வதும் இல்லை.  எட்டிப் பார்த்து எட்டிப் பார்த்து முகம் மறைக்கும் கண்ணீரை கடுமையாய் எச்சரித்தவாறே கண்ணீரின் திரை அகற்ற, 

கலைந்தது கண்ணீர்த் துளியோடு என் கனவும்.

கனவா? என்கிறீர்களா?  

கனவு தான். கனவானால் என்ன? நனவானால் என்ன? கண்டது அவர்களை அல்லவா? என்று கண்டதையே எண்ணி எண்ணி இதயம் இசைத்திருக்க , நீ மட்டும் இறுகி இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நேரம் பார்த்திருக்கலாம் என்று இமைகளை கடிந்து கொண்டே, கைப்பேசியை திறக்க, அதில் இயந்திர திருடன் கடத்திச் சென்று ஈரைந்து வருடங்கள் கழித்து கைக்கு கிடைத்த இதயம் நிறைந்தவரின் புகைப்படம் புன்னகைக்க, அத்துடன் அடிக்கடி ஆசையாய் அருகில் நிற்பது போல் ஒட்டிப் பார்த்து சேமித்து வைக்கப்பட்ட புகைப் படங்களும் அவர்களை பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தை அதிகப்படுத்தியது. 

எழுத்துகளாகி தன் ஏக்கத்தை தீர்த்துக் கொண்ட எழ வியலா வார்த்தைகளின் காணொளிகள் , கண்களை நிறைத்து விட, இந்த கண்கள் அவர்களை கண்ட போதாவது உலருமோ? இல்லை கண்டால் என்னென்ன உளருமோ? என தெரியவில்லை. 

என்று காண்போம்? எங்கு காண்போம்? எவ்வாறு காண்போம்? என்று விழிகள் விடாமல் வினா எழுப்ப தொடங்கி இருக்க, அதை என்ன தான் சொல்லி நானும் ஏய்ப்பதோ? என்று தான் காணும் தருணம் வாய்ப்பதோ? வினாக்கள் வெவ்வேறாயினும் கூட எதிர்பார்க்கும் பதில் என்று எதிரில் பார்ப்போம் என்பதற்கானது தான்.

நேரில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று இதயம் பலவாறாய் சிந்தனை செய்ய,

“எதிர்பார்த்த முகம் பார்த்து
இதழ் பூத்திடும்…
எதிரில் பார்த்த கணம் தன்னில்
இமை வேர்த்திடும்…
அழகான கவியாக…
மனம் கோர்த்திடும்…
அழியாத நினைவாக
தினம் காத்திடும்…
அழகான நேரம்….
அதற்காக நானும்….
அறியாத குழந்தை போல்
ஆண்டவனிடம் வேண்டுவேன்”

என்று பாடவே ஆரம்பித்து இருந்தது. 

நினைத்த போதெல்லாம் நினைவுகளாக அருகில் வந்து விடும் அவர்கள் நிஜத்தில் வருவது எப்போதோ தெரியவில்லை முதன் முதலில் காணொலியில் கண்டதை நினைவு கொண்ட கண்கள் அந்த நினைவோடு சேர்ந்து நீரிலும் மூழ்கியது.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *