உப்புக்காற்றில் உலரும் கண்ணீர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 26, 2026
பார்வையிட்டோர்: 712 
 
 

(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விடியலுக்காகப் பறவைகளும் பட்சிகளும் ஒலியெழுப்பி பூமியை துயிலெழுப்புகின்ற நேரத்தில்தான் நான் பிறந்ததாக அம்மா அடிக்கடி கூறுவார். இறகுகளில் ஒட்டியிருக்கும் கருமையை அள்ளி எறிந்துவிட்டு புதிய நாளுக்காகவும் புது வாழ்விற்காகவும் தம் இறகுகளை விரித்துப் பறக்கும் பட்சிகளைப்போல நானும் ஓடிக் கொண்டிருப்பதாக ஒப்பிட்டுக் கூறுவதில் ஏதோவோர் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. விடிந்தும் விடியாத இந்த அதிகாலைப் பொழுதில் பரந்தன் சந்தியை அண்மித்திருந்தது எங்களின் வாகனம். காலை ஒன்பது மணிக்கு ஆரம்பிக்க இருக்கின்ற நடமாடும் சேவைப் பிரிவினரின் சேவை முகாமில் இணைந்து கடமைகளை மேற்கொள்ள வேண்டும். இது காலம் தந்த கட்டளை. கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பதாய் கடமை களை மட்டும் செய்துவிட்டு வருவதற்கு மனம் இடம்கொடுக்கவில்லை. கடமை சேவை என்ற படி இப்படி எத்தனை அதிகாலைகளை கடந்து வந்திருக்கிறேன்.

காலையில் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படுகின்றபோது அம்மா தந்த பாற்தேனீரும் பொரிஅரிசிமா உருண்டையும் சமிபாடடைந்து விட்டது என்பதற்கு அறிகுறியாக வயிறு கார்காரென்று பசிக்கத்த தொடங்கியது. தலையை திருப்பி வாகனத்தின் பின்னிருக்கை யில் இருந்த நிலாவை பார்த்தேன். அவளுக்கும் பசிக்கிறது என்பது அவளது பார்வைமொழியில் புரிந்தது. உணவுக்கடையொன்றின் அருகில் வாகனத்தை நிறுத்தச்சொல்லி இறங்கிக் கொண்டோம். பல யுகங்களின் கம்பீரத்தினை யும் மகிழ்ச்சியையும் எழுச்சியையும் வீழ்ச்சியை யும் கண்ணீரையும் தாங்கிய மண் தன்மீது படிந்திருந்த காட்டுப்பனியின் ஈரத்தை இழந்து உலரத்தொடங்கிக்கொண்டிருந்தது. கண்ணில் தெரிந்த சில உணவுக்கடைகளின் பெயர்ப் பலகைகளில் கண்கள் விழுந்து மீண்டன. சுவையமுது உணவகம், இனியவன் தேனீரகம், பசுமை பாற்பொருட்கள் விற்பனையகம் இப்படி செந்தமிழ் உலாவிய பெயர்ப்பலகைகள் கண்ணில் தெரிந்தன. அவற்றில் சில முன்னொரு காலத்திலிருந்த தனித்துவத்தை இழந்து சில மாற்றங்களுடன் ஆங்கிலப் பெயர்ப்பலகைகளுக்கு மாறியிருந்தன. “இந்த உலகில் மாற்றம் ஒன்றுதானே மாற்றமில்லாதது”. மெல்லியதாய் இழையோடிய சிந்தனையோடு உணவகம் ஒன்றினுட்புகுந்து பயற்றம் துவையலும் தேனீரும் அருந்திவிட்டு மீண்டும் பயணப் பட்டோம். நேரம் எட்டுமணியை நெருங்கிக் கொண்டிருந்தது. பின் இருக்கையில் நிலா மடியில் வைத்திருந்த மடிக்கணனியை தூக்கி அருகிருக்கையில் வைத்துவிட்டு சிவப்பு நூலால் கட்டப்பட்டு அடுக்கியிருந்த கோப்புக் களையெடுத்து மடியில் வைத்து அவை ஒவ்வொன்றினதும் நுனித்தலைப்புக்களை திறந்து திறந்து மூடிக்கொண்டிருந்தாள். சுமாரான வேகத்தில் சென்றுகொண்டிருந்த வாகனம் கிளிநொச்சி நகரை அண்மித்திருந்தது. பீனிக்ஸ் என எழுந்து நிற்கும் இந்த நகரைப் பார்க்கும்போதெல்லாம் இனம்புரியாத உணர்வொன்று மனத்தில் எழுந்து அடங்குவதை தவிர்க்கமுடியவில்லை.

நேரம் தவறாது குறித்த நேரத்தில் அனைத்துக் கடமைகளையும் முடிக்கவேண்டும் என்கின்ற பழக்கம் இயல்பாகவே கைவரப்பெற்ற நாங்கள் குறித்த நேரத்தில் பணிக்குரிய அலுவலகத்தை வந்தடைந்து விட்டோம். வழமைக்கு மாறான பரபரப்பினை அலுவலகத்தின் வாயிலிலேயே உணரமுடிந்தது. அரச இலட்சினை பொறிக்கப்பட்ட பல கருப்பு வெள்ளை வாகனங்கள் வாகனத்தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப் பட்டிருந்தன. காலைப்பொழுதின் அவசரத்தினை தோள்களில் சுமந்திருந்த அலுவலர்கள் தங்களது வலக்கையின் சுட்டுவிரலை பெருவிரலினால் தேய்த்தபடி விரைந்து சென்றுகொண்டிருந்தார்கள். எட்டு முப்பது மணிக்கு முன்பாக வரவுப்பதிவு இயந்திரத்தில் கைவிரல் அடையாளத்தை பதித்தாக வேண்டும் என்கின்ற அவசரம் அவர்களுக்கு.

தேவையான கோப்புக்கள்சகிதம் நாங்களும் அலுவலகத்தினுட் சென்று வரவை உறுதிப்படுத்திக் கொண்டு மண்டபத்தினுட் பிரவேசித்தோம். திருவிழாக்காலத்தில் விசேட வழிபாடுகளுக்காகக் கூடியிருக்கின்ற பக்தர்களைப்போல அந்த மண்டபம் தாங்கிக்கொள்ளும் அளவிற்கு சனங்கள் நிறைந்திருந் தனர். இன்னும் ஒரு தொகுதி சனத்திரள் வந்துசேர்ந் தால் மண்டபம் நிறைந்துவிடும்போலிருந்தது. திரும்பி நிலாவைப்பார்த்தேன். அவள் கையில் வைத்திருந்த கோப்புகளை இறுக்கிப்பிடித்தபடி அமைதியாக வந்துகொண்டிருந்தாள்.

இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு எல்லாம் முடிக்கப்பட்டதாகப் பேசிக்கொள்ளப்பட்ட நாட்களில் எலும்பும் தோலுமாக வெளியேறி புளியங்குளம் சோதனைச்சாவடியை கடந்தவர்களில் இவளும் ஒருத்தி. சாவடியை கடக்கும் போது ஆண்கள் வேறு நிரையிலும் பெண்கள் வேறு நிரையிலுமாக பயணப்பட வேண்டியிருந்ததால் அவளது அப்பாவும் தம்பியும் ஒரு நிரையில் செல்ல இவளும் அம்மாவும் மற்றுமொரு நிரையிலுமாகச் சென்றிருக்கிறார்கள்.

“நானும் அம்மாவும் நிண்ட நிரையில சனம் குறைவக்கா, விரைவா வந்திட்டம் ஆனா அப்பாவும் தம்பியும் நிண்ட நிரையில நிறைய சனக்கூட்டம் நிண்டது. கனநேரமா பாத்துக்கொண்டு நிண்டனாங் கள் எனக்கு பசிவேற தலையசுத்தி மயக்கம்போட்டு விழுந்திற்றன்,எழும்பிப்பாக்கேக்க அப்பா மட்டும் தான் நிண்டவர், அம்மா அழுதுகொண்டிருந்தவா, தம்பிய விசாரிச்சுபோட்டு அனுப்புறம் எண்டு சொன்னவங்களாம் எண்டு அப்பா சொன்னார். அண்டைக்கு பொழுது படும்வரைக்கும் காத்திருந்த னாங்கள் ஆனா இருட்டினபிறகு நிக்க விடமாட்டம் எண்டு பஸ்ஸில ஏத்தி முகாமுக்கு கொண்டு வந்திற்றாங்கள். அதுக்குப்பிறகு தம்பிய தேடாத இடம் இல்ல”…

ஒருநாள் அம்மா வீட்டில் தயார்செய்த இனிப்புப்பலகாரத்தினை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று நிலாவிற்கும் கொடுத்தபோது

“அக்கா வேண்டம் அக்கா” என்று பதில் வரவே

ஏன்? என்பது போல பார்த்தேன்

“இல்ல இதுகள் எல்லாம் தம்பிக்குதான் நல்லாப்பிடிக்கும் அம்மா அடுப்பில சுடச்சுட சூட்டோடயே அரைவாசிய சாப்பிட்டு முடிச்சிருவான். எனக்கும் வையடா எண்டா தனக்குத்தானெண்டு நிப்பான். அவன் காணாம போன பிறகு நாங்கள் பலகாரமே செய்றதில்ல”. என்று தொடங்கி புளியங் குளத்து சம்பவத்தையும் சொல்லி முடித்தாள்.

“அக்கா இங்க இதப்பற்றி யாருக்கும் தெரிய வேண்டாம். பிறகு சும்மா கதைகேக்குறன் அனுதாபப் படுறன் எண்டு நோண்டிக்கொண்டு இருப்பினம். எனக்குந்த ஆறுதல் கதையள் ஒண்டும் வேண்டாம்”.

அவளைப்புரிந்து கொண்டேன். அதற்குப் பிறகு மறந்தும் அந்தக்கதையை ஆரம்பித்ததில்லை.

இப்பொழுதும் இந்தக்கோப்புக்களை இறுக்கிப் பிடித்த படி நடந்துவரும் அவளுடைய உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

சிந்தித்தபடி நடந்துசென்று எங்களுக்கான இருக்கைகளைத்தேடினேன். வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்த அலுவலர்களுக்கு கொழும்பி லிருந்து வருகைதந்திருந்த மூத்த அதிகாரிகள் தலைமை தாங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. சரியாக ஒன்பது மணியளவில் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்த வரிசையில் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு வாய் முறைப்பாடுகள் பதியப்பட்டன.

யுத்தம் தன் கண்களை மூடி ஓய்வின் சாலையில் பயணிப்பதாகவும் சுபீட்சத்தின் நிழலைப்பருகி மக்க ளெல்லாம் நிம்மதி கொள்வதாகவும் பல கதைகள் புழக்கத்தில் இருந்தாலும் பத்துமாதம் பத்திரமாய்ப் பாதுகாத்து வலிதாங்கிப் பெற்றெடுத்து முலையூட்டி வளர்த்தெடுத்து நிமிர்ந்து நிற்கும் காலத்தில் பெற்ற வளின் கண்களைப்பறித்து துாக்கி வளர்த்த தந்தையின் தோள்களைச் சிதைத்து கொடிய வல்லுாறுகளின் கால்களாற் காவிச்செல்லப்பட்டு காணாமல் ஆக்கப் பட்ட தங்களின் பிள்ளைகளைத் தேடி அலையும் முடிந்தும் முடியாத யுத்தத்தின் எச்சங்களாக அலைந்து அழுகின்ற பெற்றவர்களும் பேரப்பிள்ளைகளை தொலைத்த தாத்தா பாட்டியும் கணவனைத் தேடித் தோற்ற மனைவியும் மனைவியைத் தேடித்தோற்ற கணவனும் உடன்பிறப்புக்களைத்தேடி அழும் கூடிப் பிறந்தவர்களும் சொன்ன கதைகளால் மண்டபமெங்கும் துயரத்தின் தாழி நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.

அவர்களின் வாய் முறைப்பாடுகளை பதிவு செய்துகொண்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுகொள்ளும் அதிகாரிகள் முறையாகக்கிரகித்து பதிவுசெய்தார்களோ இல்லையோ இங்குள்ள ஒவ்வொரு தூண்களும் மண்டபச்சுவர்களும் அவற்றையெல்லாம் சுண்ணாம்புக்கரைசலினுாடே நிச்சயம் சேமித்து வைத்திருந்து வலி தாழாத ஒருநாளில் நீர்வற்றிய சிறு குளத்தின் களிமண் வெடிப்பென வாய்பிளந்து பொருமத்தான் போகின்றன. என்னால் என் காதுகளை மூடவும் முடியாமல் முழுக்கதைகளின் பாரத்தை சுமக்கவும் முடியாமல் விழித்தேன். இது என்ன மரண நிலை? தலையை நிமிர்த்தி என் மேசையின் முன்பிருந்த தாயை உற்றுப்பார்த்தேன். அவரோ தன்முறைப் பாட்டை சொல்லுவதும் கண்களை துடைத்துக்கொள்வதும் சற்று நேரம் அமைதியாக இருப்பதும் மீண்டும் கதைப்பதுமாக ஓரங்க நாடகம் போன்று விம்மிக்கொண்டிருந்தார். இறுதியில் சேலைத்தலைப்பால் தன் வாயைப்பொத்திக்கொண்டு என்ர மகளும் உங்களப்போலதான் பிள்ள நல்ல மாநிறம். எப்பிடியும் ஏதாவது ஒரு சேதி சொல்லுவியள்தானே பிள்ள? விம்மும் குரலில் கேட்டு முடித்தார். கவனமற்று நடந்துசெல்கையில் கால்களிற் பட்டு வெட்டிய கருக்குமட்டையின் எரிவென அவருடைய கேள்விகள் சுள்ளென மனதை எரிக்க எதையும் சொல்வதற்கு திராணியற்று விழித்தேன். வார்தைகளை வறுமை சூழ்ந்துநிற்க தொண்டை அடைத்து விக்கித்து நின்றேன். கவலைப்படாம் போங்கம்மா… இவற்றை மட்டுமே உச்சரிக்கமுடிந்தது என்னால். அந்தத்தாயை அனுப்பிவிட்டு தலையை திருப்பினேன்.

திரும்பிய இடமெல்லாம் இதே காட்சிதான் கண்களை எரித்தது. எவ்வளவு வலியிருக்கும் இப்படி வாய்விட்டழ? விடையற்ற வினாக்கள் துப்பாக்கி ரவைகளென நெஞ்சை துளைத்தன. சூரியன் எழுந்து அகால பாதாளத்தில் விழுவதைப்போலவும் எழுந்த போது விழுந்த சூரியக்கதிர்களெல்லாம் கொடும் தீப்பிளம்புகளாக மாறி பூமியியின் ஒவ்வொரு பகுதியையும் தீமூட்டி எரிப்பதைப்போலவும் துயின்றிருந்த பறவையினங்களும் விலங்கினங்களும் கூச்சலிட்டுக்கதறி இறகடித்துப்பறந்து அலைவதைப் போலவும் போக்கிடமற்ற மனிதர்கள் இங்கும் அங்குமாக கூக்குரலிட்டு அழுது மாய்வதைப்போல வும் ஊழியின் பிரம்மையொன்று எழுந்து அடங்கியது. மூச்சு முட்டுவதைப்போல இருந்தது. எழுந்து மதிய நேர இடைவெளிக்காக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த மண்டபத்திற்குச் சென்றேன். நீரருந்த வேண்டும்போல இருந்தது. ஒரு தண்ணீர்ப்போத்தலை எடுத்து நீர் தீர்ந்துபோகும்வரை குடித்து முடித்தேன். மதிய உணவுக்காக பார்சல் தந்திருந்தார்கள். சோறு தொண்டைக்குழிவழியே இறங்க மறுத்தது. சாப்பாடு தண்ணீரற்று காத்திருக்கும் சனங்களின் ஏக்கம் தோய்ந்த முகம்தான் மனம்முழுவதும் வியாபித் திருந்தது. நிலாவைப்பார்த்தேன் அவள் சோற்றை எண்ணிக்கொண்டிருந்தாள். அவளுக்கு அடுத்த சாப்பாட்டு மேசையிலே தலைநகரில் இருந்து வந்திருந்த அலுவலர்களில் ஒருவர் மதிய உணவின் பின்னர் வழங்கப்பட்ட குளிர்களி தனக்கு வழங்கப்பட வில்லையென குறைப்பட்டுக்கொண்டிருந்தார்.

மதிய உணவின் பின்னரான அடுத்தகட்ட பதிவுகள் தொடங்கியிருந்தன. விரக்தியும் வேதனையும் ஏமாற்றமும் சோர்வுமாக பல விம்பங்களை பிரதி பலித்தபடி வாக்குமூலங்களை தந்துகொண்டிருந்த வயோதிபர் ஒருவரின் பதிவை முடித்தனுப்பிவிட்டு அடுத்தவருக்கான பதிவிற்குரிய கோப்பை எடுப்பதற் காக திரும்பினேன்.

எப்பிடியம்மா இருக்கிறாய்? மிகவும் பழக்கப் பட்ட குரலொன்று காதில் விழவும் நிமிந்து பார்த்தேன். எதிர்பார்த்திராத கேள்வியும் கேள்விக்குரியவரும் இருக்கிறன்.

என்று நிதானித்து பதில் சொல்லிவிட்டு

இருங்க என்று முன்னிருந்த நாற்காலியைக் காட்டினேன். அமர்ந்து கொண்டார். கொஞ்சம் நிலவு கொஞ்சம் வானம் கொஞ்சம் நட்சத்திரங்கள் இவற்றின் கூட்டுக்களையெல்லாம் சேர்த்து வைத்திருந்த அந்த முகம் இப்போது களையிழந்து காய்ந்து சோர்ந் திருந்தது. நம்பிக்கையீனத்தின் கோடுகள் அவரின் முகத்தில் நிறைந்திருந்தன.

இந்த முகம்தானே மலரவனின் சாயலை அச்சுப்பிசகாமல் கொண்ட முகம்.

இந்தக்கண்கள் இந்த நீள் மூக்கு…

நீர் உம்மட அம்மா மாதிரித்தான. அதே மாதிரி மூக்கும் அதேமாதிரிக் கண்ணும். உம்மட அம்மாட போட்டோ கொப்பிதான் நீர்.

ஓ இருந்தா இப்ப என்ன? என்ர மூக்கு கூரா இப்பிடி நேர்த்தியா இருக்கெண்டு உமக்குப் பொறாம். உம்மட மூக்கு போல அதுகும் சைனா மூக்கு போல இல்லாம அழகா இருக்கெண்டு பொறாம

ஆ சைனா மூக்கோ?

ஓம்! சைனா மூக்கு சின்னனா சப்பயா …

சரி நிப்பாட்டும். இருக்கட்டும். அப்பிடியே இருக்கட்டும். சைனா மூக்குக்காரிய பிடிச்சிருக்கெண்டு பிறகேன் நீர் எனக்குப் பின்னால வந்தநீர்? நான் கோவிச் சிற்றன் இந்த வருசத்தின்ர செமிஸ்ரர் எக்சாம் முடியுற வரைக்கும் நான் கோபம். மலரவன் நீர் போகலாம்.

றேய் சாம்பவி! பிளீஸ் பிளீஸ். நான் சும்மா வம்புக்குதான் சைனா மூக்கெண்டு பகிடிவிட்டனான். 18நீர் கோபிச்சிற்றீர்

அவனது சமாதான புறா அவளது காதுகளை வந்தடையும் முன்பே மிதிவண்டியை எடுத்துக்கொண்டு கடகடவென அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன். “இருக்கட்டும் அவருக்கு நக்கல் கூடிப்போச்சு” என்று நினைத்தாலும் வாடிநிற்கும் அவனை நினைத்தால் பாவமாகத்தான் இருந்தது. எனினும்

“சும்மா வம்புக்குதானே நானும் கோவிச்சன் உண்மையாவா கோவிச்சன் இல்லையே. நாளைக்கு கதைப்பம்” என மனதுக்குள் நினைத்தபடி நகர்ந்த அந்த இனிப்பான நாட்களின் நினைவுகளில் என்னயைறியாமல் முகத்தில் புன்னகை அரும்பியது.

எதிர்பாராமல் திடீரென நிகழ்ந்த பொன்மணி யம்மாவின் வரவும் அவரின் முகமும் மலரவனையும், அவனோடான என்னுடைய பல்கலைக்கழகக் காலத் தினையும், ஒவ்வொரு சம்பவங்களையும் மீண்டும் கிளறி புது இரத்தம் பாய்ச்சியதில் நினைவுகள் பீறிட்டுப்பாயத் தொடங்கின.

மலரவன். பெயருக்கேற்றாற்போல் பொன் மணியம்மாவை பிரதி செய்த நேர்த்தியான அழகான தோற்றத்திற்குச் சொந்தக்காரன். நிதானம் தவறாத பகுத்தறிவாளன. அவனும் நானும் ஒரே ஊர்க்காரர்கள் என்ற அறிமுகத்தை தவிர கல்லுாரிக்காலத்தில் அதிகம் | பேசிக்கொள்ளாதவர்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியவன் என்றாலும் எந்தவித பகட்டுமற்று இயல்லாய் பழகும் இனிய குணம் கைவரப்பெற்றவன். இவ்வாறான நல் இயல்புகள் நிறைந்துள்ள ஒருவன்மீது யாருக்குத்தான் நல் அபிப்பிராயம் எழாது? நானும் விதிவிலக்கல்லவே? எனக்கும் அவன்மீது நல் எண்ணம் இயல்பாகவே வளர்ந்துவந்தது. அப்போதிருந்த சூழலில் யாழ்ப் பாணத்திற்கும் ஏனைய பிரதேசங்களிற்குமான தரை வழிப்பயணங்கள் முற்றுமுழுதாகத் தடைப்பட்டு திருகோணமலை காங்கேசன்துறை ஊடான கப்பற் பயணங்களும் பலாலி கொழும்பு ஊடான வான்வழிப் பயணங்களுமே சாத்தியமாக இருந்தன. அவையும் இலகுவான பணங்களன்று. பல அபாயங்களையும் நிச்சயமற்ற தன்மையினையும் கொண்ட அசாத்தியப் பயணங்களாகவே இருந்தன. வருடத்தில் ஒருமுறை அல்லது இருமுறைதான் நாங்கள் எங்களது வீடுகளுக் குச் செல்வதுண்டு. கப்பலிற்கான அனுமதிக்காகக் காத்திருந்து இலகுகாத்த கிளிகளாக ஏமாந்த கதைகளு முண்டு. அதையும் மீறி அனுமதி கிடைத்த சில சந்தர்ப்பங்களில் மாணவ மாணவிகள் எல்லோரும் ஒன்றாகச்சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் உதவியாக பயணம் செய்வோம். ஒரே ஊர்க்காரர்கள் என்பதாலோ என்னவோ மரலவனும் கரிசனையோடு உதவிகள் செய்வதற்கு தயங்கியதில்லை.

எங்களது பல்கலைக்கழகக் காலத்தில் நாங்கள் சிட்டாகப்பறந்து சிறகடித்துப்பறக்காவிட்டாலும் பல்கலைக்கழக மாணவர்களுக்குரிய இயல்புகளோடு இருக்கத்தவறியதில்லை. எங்களது பீடத்திற்குரிய கலைவாரம் ஆரம்பித்தால் கால்களில் சக்கரங்களைக் கட்டிக்கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்கின்ற நினைப்பிலேயே சுற்றிச் சுழலுவோம். எங்களுக்கு நாடகத்தின் மீது அதீத பிரியம். அன்றும் போட்டிகளுக்காக ஒரு நாடகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தோம். நாடகத்தின் ஒரு காட்சியில் நான் வீதியில் நடந்து போய் கொண்டி ருக்கும் போது திடீரென தோன்றும் கிபிர் விமானத்தின் குண்டுவீச்சின் சன்னங்களால் காயப்பட்டு நிலத்தில் வீழ்ந்து சற்றுநேரத்தில் இறந்துபோகின்ற ஒரு பெண்ணாகவும் அதை கண்டு கதறியபடி ஓடிவருகின்ற சாமானியனாக மலரவனும் நடிக்கவேண்டும். ஒத்திகை பார்க்கும்போதெல்லாம் அந்தக்காட்சி மிகத்தத்துரூப மாக இருப்பதாக எல்லோரும் பாராட்டுவார்கள். இறுதிநாள் போட்டியின்போதும் அப்படியே நடித்து முடித்து மேடையின் பின்புறத்திற்கு வந்தநான் எதேற்சையாக மலரவனின் கண்களை கவனித்தேன். அவை உண்மையிலேயே கலங்கியிருந்தன. என்ன? என்பதபோல பார்த்தேன். அருகில் வந்தவன் எதையும் யோசிக்காமல்

“சாம்பவி இப்பிடி ஒரு சம்பவம் நடந்தா உண்மையிலுமே நான் அழுது பைத்தியகாரன் ஆகீருவன்

என்று சொல்லிவிட்டு சடாரென அவ்விடத்தைவிட்டு நகர்ந்துவிட்டான். எனக்கு நிலமையைப் புரிந்துகொள்ள சில கணங்கள் பிடித்தன. எதிர்பார்க்காத அவனின் பதிலால் சற்று நிலை குலைந்தாலும் சமாளித்துக்கொண்டு நகர்ந்து விட்டேன். அடுத்துவந்த பல நாட்களில் மலரவனுட னான உரையாடலை மெல்லத் தவிர்த்து வந்தேன்.

பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு இரண்டாம் தவணைப் பரீட்சைகள் நிறைவு பெற்று நான்காம் ஆண்டு ஆரம்பிப்பதற்கு முன்னர் கிடைத்த ஒருமாத விடுமுறையில் எப்படியாவது வீடுசென்று வரவேண்டும் என்று தீர்மானித்து கப்பலிற்குப்பதிவு செய்து காத்திருந்து சில நாட்களின் பின்னர் அனுமதி கிடைக்கவே பயணப்பட ஆயத்தமாகினோம். காலை ஏழு மணிக்கெல்லாம் குறித்த செயலகத்திற்குச்சென்று பதிவுகள்இ சோதனைகள் ஒவ்வொன்றினையும் முடித்து பேருந்துகளில் ஏற்றப்பட்டு தொடர் பேருந்து அணி களாகக் காங்கேசன்துறை துறைமுகத்தினை வந்தடைந் தோம். பாவிகள் போன இடமெல்லாம் பள்ளமும் பிட்டியும் என்பதைப்போல எங்களை பீடித்திருந்த சோதனை என்கின்ற அனாயச செயற்பாடுகள் எல்லா வற்றையும் கடந்து கப்பலில் ஏற்றப்பட்டபோது நேரம் கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணியாகி அத்தனை பேரையும் ஏற்றியபின்பு கப்பல் புறப்பட பொழுது சாய்ந்திருந்தது.

பெயர்ப்பட்டியலின்படி எனக்கான இருக்கை கப்பலின் கீழ் தளத்தில் கிடைத்தது. கொண்டுவந்திருந்த தோள் பையையும் இருக்கையில் வைத்துவிட்டு அப்பாடா என்று அமர்ந்து கப்பலின் சிறிய கண்ணாடிச் சாளரத்தின் வழியே பார்வையை செலுத்தினேன். நீலமும் பாசிப்பச்சையும் கலந்த நீர்த்திவலைகளின் அசைவினை கண்கள் சற்று நேரம் அளந்து கொண்டிருந்தன. கடலலைகளின் விசையினால் ஏற்படுகின்ற வேகம் பல தொன் எடையுள்ள கப்பலை ஆட்டிய ஆட்டம் உள்ளே இருப்பவர்களை ஒருமுறையேனும் வாந்தி எடுக்காமல் விட்டுவைக்கத்தவறவில்லை. வயிற்றினுள் இருக்கின்ற குடலை வெளியில் கொண்டுவருவதைப்போன்ற வாந்தி அது. அதிகாலையில் ஆரம்பித்த பயணம் உடலையும் மனதையும் கசக்கிப்பிழிய இருக்கையில் சுருண்டு அப்படியே துாங்கியும் விட்டேன். இடையிடையே விழிப்பு எழுந்தாலும் அசதி அசையவிடாமற்தடுக்க எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேனோ தெரியாது.

தன்னுடைய உள்ளத்தின் ஓட்டத்தினை மலரவன் வெளிப்படுத்திய நாளில் இருந்து அவனுடன் முன்னர் இருந்த சகஜமான உரையாடல் ஓடிப்போய் கொஞ்சம் ஒதுங்கித்தான் போய்க்கொண்டிருந்தேன். ஆனால் இன்று அவனை பார்க்கவேண்டும் போல இருந்தது. இந்த மனம் இருக்கிறதே அது ஒரு மாயக் குரங்கு. மலரவனுடன் பாராமுகமாக சற்று ஒதுங்கி ஒதுங்கி இருந்தாலும் இந்த மாயக்குரங்கு அவனை அவ்வப்போது இழுத்துவந்துவிடுகிறது.

சரி விடியட்டும் பாப்பம்

என்றபடி காத்திருந்தேன் நேரம் அதிகாலை ஐந்து மணியை எட்டும் வரைதான் பொறுமை காக்க முடிந்தது. கீழ் தளம் என்பதனால் குளிரும் அதிகமாக இருந்தது. அதைவிட நேற்று மாலையிலிருந்து ஒரே யிடத்தில் இருப்பதும் மிகுந்த சிரமமாக இருந்தது. எழுந்து நீர் விநியோகிக்கப்படும் இடத்திற்கு சென்று முகம் கழுவிக்கொண்டேன். சோர்ந்திருந்த உடலிற்கு முகத்தில் விழுந்த தெள்ளிய நீர் ஏதோ ஒருவகையான ஆறுதலையும் பரவசத்தையும் கொடுக்க அந்தப் புத்துணர்வோடு நேற்று கப்பற் பயணத்திற்கென்றே வாங்கிவந்திருந்த உப்புச்சுவைகலந்த பிஸ்கட் பை ஒன்றினை எடுத்துக்கொண்டு கப்பலின் மேற்தளத்தை நோக்கி நடக்கத்தொடங்கினேன். விடுமுறை நாட்கள் என்பதனால் பல்கலைக்கழக மாணவர்களே நிறைந்திருந்தனர். அறிந்த தெரிந்த முகங்கள். எதிர்ப்பட்டவர்களுக்கு புன்னகையை உதிர்த்தபடி மேற்தளத்தின் பார்வைத்தளத்தில் வந்து நின்றேன்.

இந்தப்பூமியில் நிலமே இல்லையோ என எண்ணுகின்ற வகையில் இவ்வுலகின் பல அதிசயக் கதைகளையெல்லாம் தன்னுட் புதைத்தபடி கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரந்து விரிந்திருந்த கருநீலக்கடலில் மெல்ல மெல்ல எழுந்து அதே வேகத்தில் விழுந்து பின் மீண்டும் எழுந்து விடாமல் விழுந்து கொண்டிருக்கின்ற அலைகளின் மீது நுரை யாகத்திரண்டு எழுகின்ற நீரும் அந்த அலைகளின் மேல் பொன்மஞ்சட் கதிர்களைப் பரப்பியபடி எழுந்து வருகின்ற சூரியனும் கண்களில் நிறைந்து மனமெங்கும் வியாபிக்கின்ற ரம்மியமான காட்சியாகி எல்லைகடந்த ஆனந்தத்தைப் பசரிசளித்துக்கொண்டிருக்க கையோடு எடுத்து வந்திருந்த பிஸ்கட் பையை உடைத்து அதிலிருந்த உப்புச்சுவை கலந்த பிஸ்கட்டுக்களை வாயில் போட்டுக்கொண்டு இன்னும் சிலவற்றை கப்பல் கிழித்துக்கொண்டு போகின்ற நீரிற்கு அருகில் எழுந்தெழுந்து அடங்குகின்ற அலைகளில் தாங்களும் எழுந்தெழுந்து துள்ளிக்குதிக்கின்ற மீன்களுக்கும் வீசியெறிந்தேன். உணவினால் ஈர்க்கப்பட்ட அவை சற்றுநேரத்தில் கொஞ்சம் அதிகமாகி எழுந்தெழுந்து விழுந்தகாட்சி அற்புதமனநிலையினை உருவாக்க பயண அலுப்பெல்லாம் மறந்து புன்னகைத்தபடி மீண்டும் துாரத்தில் கடலைத்தழுவும் வானைப்பார்த்த படி நின்றேன். அருகில் மலரவனின் குரல் சாம்பவி என இதமாகக்காதுகளில் விழவும் திரும்பிப்பார்தேன்.

புன்னகைத்தபடி வந்தவனிடம் வானமும் பூமியும் சேர்ந்த இந்த சமுத்திரக்காட்சியை பற்றிச்சொல்லி பூரிப்படையவேண்டும்போல குழந்தை மனம் துள்ளியது.

என்ன ஒரு அழகு இல்லையா மலரவன்?

என்ன சொல்ற எண்டே தெரியேல்ல அப்பிடியிருக்கு. இயற்கை இயற்கைதான் இல்லையா வாவ். மிட்டாயைக்கண்டு குதுகலிக்கும் குழந்தையைப் போல அவனிடம் ஒவ்வொன்றாய்ச் சொல்லிக் கொண்டிருந்தேன். எமக்கு மிக இணக்கமானவர் களிடம்தானே இப்படியொரு குழந்தை மனம் கொண்டு எல்லாற்றையும் பகிர்ந்து மகிழ்ந்திருக்க முடியும். இதையும் பின்னாட்களில் உணர்ந்திருந்தேன்.

அள்ளியிறைத்த வார்த்தைகளை முடித்து திரும்பிப்பார்த்தேன். கையில் வைத்திருந்த பழப் பானத்தினை நீட்டியபடி சாந்தமாகப்புன்னகைத்தவன் அருகில் வந்து கப்பலின் விளிம்புச்சுவரில் பிடித்திருந்த என்னுடைய இடது கையின் மேல் தன்னுடைய வலது கையினை வைத்து

சாம்பவி எனக்கும் இந்தச்சூரியன் பிடிக்கும், இந்த வானம்பிடிக்குமஇ அதுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற நிலவு பிடிக்கும், அது வச்சிருக்கிற நட்சத்திரங்கள் பிடிக்கும், இன்னும் என்னென்ன இருக்கெண்டு முழுசா அறியவே முடியாத இந்தக்கடல் பிடிக்கும் என்றபடி என்னைப்பார்த்தான். எதிர்பார்க்காத அந்த சந்தர்ப்பத்தினால் சில நிமிடங்கள் சிலையென நின்றாலும் நிதர்சனத்திற்கு வந்து அவனது முகத்தினை ஏறிட்டுப்பார்த்தேன். கதை சொல்லும் அவனுடைய இரண்டு கண்கள். அந்தக்கண்களின் ஒளி என்னுட் சென்று என்னையே தேடிஎடுப்பது போல ஒரு பிரமை உண்டாகியது.

வீசி வந்த காலைக்கடற்காற்றும் மேனியை சிலிர்க்கச்செய்ய “பிரபஞ்சக்காதலன்தான் போலும்”

என பகர்ந்தபடி புன்னகைத்து மறைந்தேன்.

கப்பற்பயணம் வீடு விடுமுறை எல்லாம் கழிந்து மீண்டும் பல்கலையில் பயின்ற இறுதியாண்டு அன்று தான் பிய்த்து எடுத்த தேன்வதையில் இருந்து சொட்டுச் சொட்டாக சிந்துகின்ற தேனென இனித்து நகர்ந்து கொண்டிருந்தது. இவற்றோடு பல்கலைக்கழகத்தின் வெளியே பல அடாவடித்தனங்களும் அட்டூழியங்களும் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் கல்விக்காலமும் ஓடிக் கொண்டிருந்தது. அன்றும் அப்படித்தான் விரிவுரைகள் முடிந்து வெளியேறிக்கொண்டிருந்தேன். வளாகம் வழமைக்கு மாறாக பரபரப்பாக இருப்பதை உணர முடிந்தது. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடை பெற்றிருக்கிறது என்பதை உள்ளுணர்வு சுட்டிக்காட்ட என்னுடைய துவிச்சக்கர வண்டியை எடுப்பதற்கு செல்லவும் எனது விடுதி அறைத்தோழி மூச்சிரைக்க என்னை நோக்கி ஓடிவந்து

சாம்பவி மலரவன் மலரவனை… வார்த்தைகளை முடிக்கமுடியாமற் தடுமாற

விபரீத சம்பவங்களால் நிறைந்திருந்த காலம் என்பதால் ஏதோ விபரீதம் என்பதை சிறுபொறியென மனம் சடாரென உள்வாங்க

என்ன? மலரவனுக்கு என்ன? எங்க.. என்று முடிக்கும்முன்பே அசுர பலம் கொண்டவளென மாறிய தோழி

உந்த மூண்டாவது சந்தியில ஏதோ கிளைமோர் இருக்குதெண்டு சந்தேகத்தில சுத்தி வளைச்சவங்களாம். அதுக்குள்ள கொஸ்ரல் பெடியங்கள் எல்லாரையும் கூப்பிட்டு விசாரிச்சதாம், தலையாட்டியும் வந்ததாம். அதான் மலரவனையும் பவள்ள துாக்கி ஏத்திக்கொண்டு போட்டாங்களாம். இன்னும் ரெண்டு மூண்டு பேர் ஆரெண்டு சரியா தெரியேல்ல.

அவளது குரல் அகால பாதாளத்திலிருந்து வெளிப்படுவதைப்போல காதுகளில் விழுந்து எரிய உடல் வியர்த்து வெம்மை எழுந்து சிலிர்த்துக்குளிர்ந்து அடங்க துவிச்சக்கர வண்டியை பிடித்தபடி அசையாமல் நின்றேன். பூமியின் மீதுகொண்ட தீராப் பிரியத்தினால் வேர்முளைத்து வண்டலைத் துளைத்து வன்பாறைகளில் பின்னப்பட்டதுபோல கால்கள் அசைய மறுத்தன. மூச்சு முட்டுவதைப்போல சொல்ல முடியாத பிரம்மைகளெல்லாம் எழுந்து அடங்கின. கைகள் நடுங்க ஓ என்று கதறி அழவேண்டும் போல இருந்தது. அறைத்தோழிதான் அழைத்துச்சென்று துணையிருந்தாள். இரண்டு கிழமைகள் கழித்து மலரவனின் தாய் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அப்போதுதான் அவருக்கு போக்குவரத்து அனுமதி கிடைத்திருந்தது. திறக்காத கதவுகளையெல்லாம் தட்டிக்களைத்த அவனின் தாய் அழுத கண்ணீரோடு மீண்டும் ஊருக்குத்திரும்பினார்.

சைனா மூக்கும் ஆளும். என்ர மூக்கு நேரா நேர்த்தியா இருக்கு எண்டு உமக்குப்பொறாம்… ஏகாந்தப் பொழுதுகளையெல்லாம் விழுங்கியபடி எழுந்து வரும் மலரவனின் சாந்தக்குரல் துாரத்தில் கேட்கத் தொடங்கியது. நம்பிக்கையின் சுவர்கள் நாளுக்குநாள் மெருகிழந்து நலிந்து மெல்லச் சரிந்துகொண்டே சென்றன.

என்னம்மா?

பொன்மணியம்மாவின் குரல் கப்பல் பயணத்திலும் பல்கலைக்கழத்திலும் ஓடிக்கொண்டிருந்த மனதை மீட்டு மீண்டும் மண்டபத்திற்குக் கொண்டுவர அவரை உற்றுப்பார்த்தேன்.

பிள்ள நீயும் என்ர பிள்ள மாதிரித்தான். இத்தின வருசமா தேடித்தேடி கிடைக்காதவன் இனியும் வருவான் எண்டு எனக்கு

சொல்லத்தெரியேல்ல. ஏதோ என்ர கண் மூடுறதுக்கு முன்னால் அவன்ர முகத்த ஒருக்கா பாத்திற்றன் எண்டா என்ர உசிர் நிம்மதியா என்ர உடம்ப விட்டுப்போகும்.

தழுதழுத்து வெளிவந்தன அவருடைய வார்த்தைகள்.

ஆனா நான் இப்ப இங்க வந்தது இதெல்லாம் சொல்லி முறப்பாடு குடுக்கிறதுக்காக இல்ல. இதெல்லாத்தயும் ஒரு கண்துடைப்புக்குத்தானே உவங்கள் செய்யிறது. கொல்லைல கோழிய பிடிச்ச கள்ளரிட்டயே போய் தேடித்தா எண்டு கேக்கிற கத மாதிரித்தான் இதெல்லாம்.

நீண்ட பெருமூச்சை உள்ளிளுத்து வெளிவிட்டவர் பிள்ள நீ அவனுக்காக காத்திருக்காத.

அழுத்தமாக கூறியவரின் இறுதி வார்த்தைகள் மெதுவாக நிதானமாக என் காதுகளில் விழவும் திடுக்கிட்டுப்பார்த்தேன்.

ஓம் பிள்ள எனக்கு எல்லாம் தெரியும். ஒருக்கா லீவில வரேக்க மலரவன் சொன்னவன். எனக்குத்தெரியும் பிள்ள. நான் வாறன்.

என்னுடைய பதிலுக்கு காத்திராமல் விறுவிறுவென எழுந்து நடக்கத்தொடங்கினார். சொல்வதற்கு ஏதுமற்று அவர் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். சேலைத்தலைப்பினால் கண்களை துடைத்தபடி செல்வது புரிந்தது.

மலையை விழுங்கிய மனப்பாரம் உடலை அழுத்த அன்றைய வேலைகளை முடிந்துவிட்டு வீடு திரும்புவதற்காக வாகனத்தில் ஏறியமர்ந்தேன். ஓடிக்கொண்டிருக்கின்ற வாகனத்தின் எந்திர வேகத்தை விடவும் மிகை வேகத்தில் எண்ணங்கள் மனத்தின் சுவர்களை மீண்டும் அழுத்தி ஆழம்கொள்ளத் தொடங்கின.

மங்கை என்னும் வசந்த பருவத்தின் மீது குளிர்த்தென்றலை வீசி கொன்றைப்பூக்களை அள்ளிச்சொரிந்து என் நாட்களை பனிக்காலத்துப் புற்களின் சிறு பூக்களாக மலரச்செய்தவனல்லவா நீ! நிர்மலமான என் வானில் ஒளி வீசும் நட்சத்திரங் களைத்தூவி வெண்பஞ்சு மேகங்களை பதித்தொரு பௌர்ணமிக்காலத்தையும் பரிசளித்தவனல்லவா நீ !!

நீயற்ற இந்நாட்களில் வானையே பார்த்திருக்கும் என் விழிகளில் எரிந்து விழுகின்ற நட்சத்திரங்களைச் சேகரித்துப் பத்திரப்படுத்திவைப்பதன்றி வேறென்ன செய்வேன் யான்? விழுதலும் எழுதலும் இருத்தலும் பிரிதலும்தான் வாழ்க்கை என்றால் இந்தப்பிரிவுகள் இயல்பாய் கிடைத்தவையல்ல. இயல்பாய் எழுகின்ற பிரிவுகளையே ஏற்க மறுக்கின்ற மனது அகாலத்தில் வலிந்து எழுப்பப்பட்ட இப்பிரிவுகளைக்கடந்து எப்படி இயல்புநிலை கொள்ளும்? சரி இதுதான் காலம். இதுவரைதான் அவனோடான அவளோடான எங்களின் பயணம் என்று எண்ணி கசியும் கண்ணீரோடு காலத்தை கரைப்பதற்கும் சேதியறியா இந்நிலையை எப்படிக் கடந்து வரமுடியும்? மனம் அடுக்கடுக்காகப் பல கேள்விகளைக்கேட்டு சிறுபிள்ளையென பிழிந்து அழத் தொடங்கியது.

விடையற்ற இவ்வினாக்களின் சாட்சியாக கடைவிழி ஓரத்தில் கசிந்து விழுந்த கண்ணீர் துளியை மோதி வந்த உப்புக்காற்று கரைத்துக்கொண்டு போக மெல்லத் திரும்பி நிலாவைப் பார்த்தேன். அவள் காலையில் வைத்திருந்த அதே கோப்புக்களை மடியில் வைத்தபடி சலனமற்று வெளியைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

சொற்களற்று வெளித்திருந்த பயணத்தில் நன்கு திறந்திருந்த வாகனக் கண்ணாடியின் ஊடாக விரைந்து வந்த உப்புக்காற்று முகத்தில் மோதிச்செல்ல வாகனம் ஆனையிறவின் வற்றுக்கடலையும் உப்பு வயல்களையும் தாண்டி முடிவிலியென விரைந்து கொண்டிருந்தது.

– ஜீவநதி 12 ஆவது ஆண்டு மலர் மாசி 2019.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *