தினம் ஒரு பாண்டியன் எக்ஸ்பிரஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 14, 2026
பார்வையிட்டோர்: 1,156 
 
 

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதவு தட்டும் ஓசை கேட்டதும் அண்ணாச்சி அரைத் தூக்கத்தில் குரல் கொடுத்தார். “மணி வண்டி வந்திருச்சு போல, ஆள் யாருன்னு பாரு”.

வராந்தாவில் தூங்கிக்கொண்டிருந்த மணி சட்டை யில்லாத உடம்பில் நெஞ்சுவரை கைலியை இழுத்துச் சுற்றிக்கொண்டு போய்க் கதவைத் திறந்தான். கையில் பையுடன் ஒரு நடுத்தர வயதுக்காரர் வாசலில் நின்று கொண்டிருந்தார், பொழுது ஏறக்குறைய விடிந்து கொண்டிருந்தது.

“பாண்டியன் வந்திருச்சா” என்று வந்தவரைக் கேட்டான் அவர் தலையை அசைத்து ஆமா என்று சொல்லும் போது மணி கதவைத் திறந்து கொண்டிருந்தான். அவரை இதற்குமுன் மணி பார்த்ததில்லை, என்றாலும் அந்த வீட்டிற்கு வருகிறவர்கள் அநேகமாக பாண்டியன் எக்ஸ்பிரஸில் தான் வருவார்கள்’ அண்ணாச்சி ஊர்ப்பக்கமிருந்து சென்னைக்கு வருகிறவர்களுக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ்தான் பிடிக்கும்? தோதுங்கூட.

வந்த ஆள் முகத்தில் கவலை, பரபரப்பு. சட்டை வேட்டியில் பிரயாணக் கசங்கல்கள். “அண்ணாச்சி இருக்காகள்ள” என்று படபடப்புடன் கேட்டார், மணி கொட்டாவி விட்டுக்கொண்டே “பயப்படாதீங்க’ அண்ணாச்சி இங்கெதான் இருக்கார் தூங்குறார்” என்றான்.

வந்தவர் மிகுந்த கவனத்தோடு வீட்டிற்குள் நுழைந்தார். ஹால் முழுக்க சுவர்களில் வண்ண வண்ணப் புகைப்படங்கள். மறைந்த தலைவர்கள் முதல் இன்றுள்ள மந்திரிகள் வரை அண்ணாச்சி தோள் மேல் கைபோட்டு நின்றார்கள். ஒரு படத்தில் அண்ணாச்சி ஒரு மந்திரிக்கு பொன்னாடை போர்த்துகிறார். இன்னொரு படத்தில் மந்திரியே அண்ணாச்சிக்கு மாலை போடுகிறார்.

அண்ணாச்சிக்கு வாசித்துக்கொடுத்த வரவேற்புப் பத்திரங்கள் தங்க அச்சில் சாண் அகல தங்க நிற ஃப்ரேம்களுக்குள் ஆள் உயரத்தில் மாட்டப்பட்டிருந்தன. அதிகாலை அமைதியில் இவைகளைப் பார்க்கப் பார்க்க வந்தவருக்கு அண்ணாச்சியைப் பற்றி ஊர்ப்பக்கம் பேசிக்கொள்வது சரிதானென்று தோன்றியது. ஏற்கெனவே இருந்த மரியாதையோடு பயமும் வந்தது. திருப்தியுடன் அண்ணாச்சி படுத்திருந்த அறைக்குள் நுழைந்தார்.

அரசியலில் அண்ணாச்சி வெகுகாலத்து ஆள். எந்தக் கட்சியிலிருந்தாலும் அண்ணாச்சிக்கு ஆள்பலம் அதிகம். அவர் சொன்னால் கேட்க என்று கூட்டம் கூட்டமாய் அவர் ஜாதி ஆள்களும் கொத்துக் கொத்தாய்ப் பல கிராமங்களும் உண்டு. அண்ணாச்சி கையில் தூண்டில் கம்பு மாறும். தூண்டில் முள் மாறாது. அவர் எப்போதோ எம்.எல்.ஏ. வாகி மந்திரியாகி இருக்க வேண்டியவர்.

‘அண்ணாச்சி ரொம்ப வெவரமானவருதான். ஆனா கெடச்ச பிடியை நறுக்குனு பிடிச்சிக்கத் தெரியலை. ஒரு கூட்டம் புதுசாக் கெளம்பி மேலெ வந்துரும் போல தெரிஞ்சா லாபமோ நஷ்டமோ ஓடிப் போயி மொதல்ல நிண்ணுறணும்ல. இவரு நிதானிச்சுப் போயி நிற்கிறதுக்குள்ளெ முன்னெ போன ஆளு ஓடியாந்து. அண்ணாச்சி ஒங்க சப்போட்ல தான் நான் எம் எஸ்.ஏ. ஆகணும். மந்திரியாகணும்’னு வருது. ரொம்பப் பெருமையா நின்ன எடத்திலெயே, கெடக்காரு அண்ணாச்சி என்பான் மணி.

ஆனால் மெட்ராசில் எந்த வேலையானாலும் அண்ணாச்சியைப் பார்த்தால் முடித்துக் கொடுப்பாரென்பது மதுரைக்கு மேற்கில் பிரபல்யமான செய்தி. எம்.எல் ஏக்களும் மந்திரிகளும் அண்ணாச்சி சொல்லைத் தட்ட மாட்டார்கள் என்பது அந்தப் பக்கத்தில் உள்ள பெரிய ஆள்கள் மத்தியில் ஆழமான நம்பிக்கை.

மதுரைப் பக்கத்தில் அண்ணாச்சி அரசியல் பண்ணிக் கொண்டிருந்தபோது மாதத்தில் ஏழெட்டுத் தடவைகள் யாரையாவது கூட்டிக்கொண்டு மெட்ராஸ்வந்து மந்திரிகளைப்பார்த்துப் பலமாதிரிக் காரியங்களை முடித்துக் கொண்டிருந்தார். ஊரி லிருந்து மதுரைக்கு வருவது, மதுரையில் ரயிலேறி மெட்ராஸ் போவது லாட்ஜில் சிலசமயம் தொடர்ந்து ஒரு வாரம் இரண்டு வாரமென்று தங்குவது; திரும்பி ஊர்போய் சேர்வதெல்லாம் ஒரு கட்டத்தில் அண்ணாச்சிக்கு அலுப்பை தந்து விட்டது. மெட்ராசிலே யே வீடெடுத்துத் தங்கி விட்டார்; கூட மணி துணைக்கு.

குடும்பத்தை கிராமத்திலேயே விட்டு விட்டார். அண்ணாச்சியின் பழக்க வழக்கங்களுக்கு பெண்டாட்டி பிள்ளைகள் பக்கத்திலிருப்பது சரிப்பட்டு வராது. பணம் காசு அனுப்புவது; பத்தில் கூடி எட்டில் கூடி போய்ப் பார்த்துவிட்டு வருவதோடு உறவுகளை நிறுத்திக் கொண்டார்.

ஊர்ப்பக்கம் செல்வாக்கும் அரசியலுமாயிருந்த போது தொண்டர்களும் ஜாதிக்காரர்களும் எல்லாத் தலைவர்களையும் அழைப்பது போலவே இவரை யும் அண்ணே அண்ணே’ என்று தான் கூப்பிட்டார்கள். ஒரு தடவை யாரோ ஒரு விவரமில்லா. ஆள் அண்ணே என்று தெனாவட்டமாக நாலுபேர் முன்னால் கூப்பிட்டு விட்டான். இவருக்கு சுளீரென்று கோபம் வந்து கூடியிருந்த ஆள்கள் முன்னால் பொரிந்துவிட்டார். “இங்கெ பாரு, உருண்டை உருண்டையா மொகங்களை வைச்சுக் கிட்டே ஒரே மாதிரி மீசைகளை வைச்சுக்கிட்டு ஒரே மாதிரி துண்டுகளைப் போட்டுக்கிட்டு ஒருத்தனுக்கு கொருத்தன் வித்தியாசந் தெரியாமத் திரியிரவன் களைப் போயி அண்ணே எண்ணேண்ணு சொல்லு. நான் அப்படியான ஆளில்லை. கூப்பிடணும்னா அன்பா மரியாதையா அண்ணாச்சின்னு கூப்பிடு. அதுதான் கேக்க நல்லாயிருக்கு”. அதற்கப்புறம் எல்லோரும் பெரிய பதவிகளில் உள்ளவர்கள் வரை தட்டுத்தடுமாறி அண்ணாச்சி என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். இப்போது புதிதாய்ப் பழகுகிற ஆள்களுக்கு அண்ணாச்சிதான் இவர் பெயர்.

வந்தவர் அண்ணாச்சி படுக்கைக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்; கூட மணி. இப்போது மணி கைலி யைச் சரியாகக் கட்டி சட்டை போட்டு சகிதமாக வந்து நின்றான். அண்ணாச்சிக்குத் தூக்கம் கலைந்து விட்டது என்றாலும் கண்ணைத் திறக்காமல் படுத் திருந்தார். அவருக்கு ரொம்பத் திருப்தி. பொழுது சரியாகத்தான் விடிந்திருக்கிறது. மதுரையில் முதல் நாள் புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் அவர் பங்கிற்கான ஆளை வழக்கம்போல கொண்டு வந்து சேர்த்துவிட்டது. திருப்தியும் சந்தோஷமுமாய் கண்ணைத் திறக்க முயன்றார். உடனே திறக்க முடிய வில்லை. கண் எரிச்சல் அதிகமாயிருந்தது. சிரமப் பட்டு விழித்தார்.

வந்தவர் கையிரண்டையும் கூப்பி அண்ணாச்சியை கும்பிட்டார். அண்ணாச்சி பாதி கும்பிடோடு நிறுத்தி, “அடெ! காசியா? என்ன உம்புட்டு தூரம்?” என்றார். கண் எரிச்சல் தாங்க முடியவில்லை. வந்தவர் பதில் சொல்லுமுன், “மணி செம்புல தண்ணி கொண்டாடா” என்றார்.; வந்தவரைப் பற்றி அவ்வளவாய் அலட்டிக் கொள்ளாதது மாதிரியும் இருக்க வேண்டும்.

காசி வந்த காரியத்தை மெதுவாகச் சொல்லத் தொடங்கினார். கேட்டுக் கொண்ட அண்ணாச்சி முகம் கழுவித் துடைத்தார். ”மணி மூணு காப்பி வாங்கியாடா, ரொம்பத் தூரத்திலிருந்து வராத ஆளு வந்திருக்கான்”. மணி பிளாஸ்கோடு வந்தான் அண்ணாச்சி காசெடுக்கக் கிளம்பும்போது காசி சட்டென்று அண்ணாச்சியை அமுக்கி உட்கார வைத்து விட்டுப் பையிலிருந்து ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து மணியிடம் கொடுத்தார். மணி கிளம்பிப் போனதும் மறுபடி வந்த வேலையை பற்றி விஸ்தாரமாய்ச் சொல்லி கொண்டிருந்தார்.

மணி வந்து காப்பியை ஊற்றி இரண்டு பேருக்கும் கொடுத்தான். காப்பியைக் குடித்துக்கொண்டே கேட்டு முடிந்ததும் “இது ஒடனேயே பாக்க வேண்டிய சங்கதியா இருக்கு. நீ பத்து நாளு முந்தியே வந்திருக்கணும் காசி. நம்ம பக்கத்தாளுகளுக்கு கத்தி கண்ணுலெ தெரிஞ்ச ஒடனேயே சுதாரிக்கத் தெரி யாது. கழுத்துக்கு வந்ததும்தான் அண்ணாச்சி ஞாபகம் வருது. சரிசரி மந்திரியப் பாத்து கலெக்டருக்கு போன் பண்ணச் சொல்லிருவோம்” என்றார்.

“அண்ணாச்சினு வந்துட்டேன். வெறுங் கையாப் போனா நான் தோளிலே துண்டும் போட்டு ரோட்டுலெ நடக்க முடியாது”, என்றார் காசி.

“சரி அது தான் எல்லாத்தையும் சொல்லிட்டியே கெளம்பற வேலையைப் பாரு. மந்திரிய வீட்டிலெயே பாத்திருவோம். அரை மணியிலே குளிச்சுட்டு ரெடியாயிரணும்”.

காசிக்கு வந்த வேலை பாதிக்கும்மேல் முடிந்த திருப்தி. எழுந்து அவசரம் அவசரமாகக் காலை வேலை களைக் கவனிக்க ஆரம்பித்தார். அண்ணாச்சிக்குக் கண் எரிச்சல் இன்னும் அடங்கவில்லை. பல் விளக்கிக் கொண்டே “மணி மந்திரியப் பார்க்கப் புறப்படு ணும், சட்டை வேட்டி இருக்கா பாரு”, என்றார்

மணி பெட்டியைத் திறந்து பார்த்து விட்டு ஒரு சீட்டுடன் வந்தான். காசி குளித்து விட்டு வந்து ஈரத்துண்டோடு நின்று கொண்டிருந்தார்.

”முந்தாநாள் அர்ஜெண்டிலெ போட்டதை வாங்யாந்துறேன்” என்றான் மணி. அண்ணாச்சி பிரஷோடு ரூபாயெடுக்கப் பெட்டியருகில் போனார். “நீங்க இருங்க”, என்று அண்ணாச்சியைப் பிடித்து நிறுத்திவிட்டு லாண்டரி சீட்டை வாங்கிப் பார்த்து விட்டு பண்ணிரண்டு ரூபாய் கொடுத்தார்.

அரைமணி நேரத்தில் அண்ணாச்சி டெரிகாட்டன் வேஷ்டி, மஞ்சளில் சில்க் ஜிப்பா, பவுடர் முகத்தோடு கமகமவென்று வாசம் கிளம்ப வாசலுக்கு வந்து விட்டார் முழநீளத்தில் வெள்ளைத் துவாலைய் துண்டு ஒன்று தோளில். கையில் ஆகப் பெரிசாட ஒரு டைரி. டைரிக்குள் மடித்து மடித்து ஏராளமாய்க் காகிதங்கள். அந்தா இந்தா என்று மணியும் வெள்ளையும் சுள்ளையுமாய்க் கிளம்பினான். காசி ரிக்காச்டுகளைப் பைக்குள்ளிருந்து பதனமாயெடுத்து பிளாஸ்டிக் பையில் போட்டு எடுத்துக் கொண்டு கிளம்பி வந்தார்.

மணி ஓடிப்போய் டாக்ஸியோடு வந்து முன்கதவைத் திறந்துவிட்டான். அண்ணாச்சி உட்கார்ந்து சாய் சீட்டின் மேற்பரப்பில் கைபோட்டு விரல்களால் தாளம் போட்டு ஆயிரம் கார்களுக்குச் சொந்தக்காரனைப் போல் அலட்சியமாய் உட்கார்ந்திருந்தார் காசியும் மணியும் பின்னால் உட்கார்ந்தார்கள்.

“உடுப்பிக்குப் போ” என்றார் அண்ணாச்சி டாக்ஸி டிரைவரிடம்.

“சாப்பிட்டு மந்திரி வீட்டுக்கெல்லாம் போகணும். சாயங்காலம் வரை ஒங்க டாக்ஸிதான்”, என்றான் மணி.

அண்ணாச்சி பக்கத்தில் உட்கார்ந்து டிபன் சாப்பிட்டுக் கொண்டே காசி வந்த காரியத்திற்கு மேலும் மேலும் அழுத்தங் கொடுத்துப் பேசிக் கொண்டேயிருந்தார். எதிரில் உட்கார்ந்து நாலு ப்ளேட்களுக்கு மேல் காலி செய்து கொண்டிருந்த மணியைப் பார்த்தவாறு காசி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

தட்டில் பில் வந்ததும் காசி ஒரு எந்தரம் போல ரூபாய் நோட்டுகளை எடுத்து வைத்து விட்டு அண்ணாச்சியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடிவந்து டாக்ஸியில் ஏறிக்கொண்டார்

மந்திரி வீட்டுக் காம்பவுண்டு ஒரு பெரிய விளை யாட்டு மைதானம் போலிருந்தது டாக்ஸிகளும் கார்களும் ஆட்டோக்களும் ஒரு ராஜ வைபவத்திற்கு வந்தவைபோல் நிறைந்திருந்தன. காசிக்கு லேசான கிலி, கூடவே ஓரு சந்தோஷம் ‘அண்ணாச்சி -மாதிரி நமக்கும் ஒரு ஆளு இல்லைனா இம்புட்டுப் பேரோடு போட்டி போட்டு உள்ளே போய் மந்திரிகளைப் பார்க்க முடியுமா’ என்று நினைத்துக் கொண்டார்.

அங்கு வந்து போன ஆள்களுக்குக் குறைவில்லாமல் அண்ணாச்சி போட்டிருந்த ஜிப்பா, கட்டியிருந்த வேட்டி, முகக் கம்பீரம் பற்றியெல்லாம் காசிக்கு ரொம்பப் பெருமையாயிருந்தது. அடுத்த தடவை அண்ணாச்சி ஊருக்கு வரும் போது ரொம்ப மரியாதை தெரியும் படியாக ஏதாவது அண்ணாச்சிக்குச் செய்யவேண்டு மென்று தோன்றியது.

பி.ஏ வைத் தாண்டி சோபாக்களிலும் பெஞ்சுகளிலும் உட்கார்ந்திருக்கும் பெரிய பெரிய அதிகாரிகளையும் பிரமுகர்களையும் தாண்டிக் கொண்டு அண்ணாச்சி மந்திரி வந்து உட்காரும் அறைக்கு முன்னால் போய் நின்று கொண்டார். பி. ஏ. பியூன், வேலைக்காரன் எல்லோரும் அண்ணாச்சியைப் பார்த்துக் கும்பிட்டது காசியை உச்சிக்குக்கொண்டு போய் விட்டது. மந்திரி வந்து உட்கார்ந்து கொஞ்ச நேரத்திற்கெல்லாம். நாலைந்து பேருக்குப் பின்னால் அண்ணாச்சி உள்ளே நுழைந்துவிட்டார் காசியுடன்.

மந்திரி அண்ணாச்சியைப் பார்த்து ஒரு முழுக்கும்பிடு போட்டார். அண்ணாச்சி அதைவிடப் பெரிய கும்பிடாய் போட்டுவிட்டு மந்திரிக்கு எதிரில் உட்கார்ந்து மள மள வென்று ஊர்ப்பக்கத்து நிலைமைகள், மந்திரியின் சுற்று பயண விவரங்கள், முதல் நாள் மாலை பேப்பரில் வந்த மந்திரியின் அறிக்கை பற்றியெல்லாம் ஒரு சிநேகிதருடன் பேசுவது போலப் பேசினார்.

கடைசியாய்க் காசி சம்பந்தமாய் வந்த விஷயத்தைப் பற்றிச் சுருக்கமாய்ச் சொன்னார்.

“கலெக்டர்ட்ட சொல்லணும். அவ்வளவு தானே, சொல்லிட்டாப் போச்சு” என்றார் மந்திரி.

காசி உணர்ச்சி வசப்பட்டு நேரடியாக மந்தியிரிடம் அந்த விஷயத்திற்கு அழுத்தங்கொடுத்து திடீரென்று பேச முயன்ற போது, “அதுதான் நான் சொல்லிட்டன்ல. அமைச்சரும் போன் பண்றேன்னுட்டார்ல. அப்புறம் என்ன”,
என்று காசியைத் தடுத்து விட்டார். திரும்பி மந்திரியிடம் நம்ம ஊர் ஆளுகளுக்குக் காரியம் முடியனும்கிற அக்கறை பாதி தான். அமைச்சர்ட்ட ஆதியோடந்தமாப் பேசணுங் கிற ஆசை தான் ரொம்ப. சுத்த வெவரங்கெட்ட ஆளுகய்யா, அப்ப நான் வரட்டா” என்று சொல்லி விட்டுப் பெரிய கும்பிடாய்ப் போட்டுக் காசியை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தார். எல்லாம் ஐந்து நிமிடங்களுக்குள்.

“அண்ணாச்சி மஹா கெட்டி. மந்திரிக்கு நேரம் எவ்வளவு முக்கியம், அவர் வேலைகள் எவ்வளவு என்பதையெல்லாம் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்; அதற்கேற்றாற்போல நடந்து கொள்கிறார். இல்லையென்றால் அடிக்கொரு தரம் வந்து போயிருக்க முடியுமா” என்று காசி நினைத்து கொண்டார்.

பிஏ யிடம் மந்திரியைப் பார்த்தது, பேசியது பற்றி அண்ணாச்சி விரிவாகச் சொன்னார்.

“காசி முழு  வெவரங்களையும் சுருக்கமா எழுதி ஸார்ட்ட குடு” என்றார். காசி சிரத்தைய்யா ரிக்கார்டுகளைப் பார்த்து விவரங்களை எழுதிக் கொடுத்தார். பியூன், வேலைக்காரன், பி.ஏ. எல்லோரிடமும் அண்ணாச்சி காந்தச் சிரிப்பும் கும்பிடுமாய் விடைபெற்றுக் காம்பவுண்டுக்கு வந்தார்.

காம்பவுண்டுக்குள் நின்ற டாக்ஸிகளின் டிரைவர்களில் ரொம்பப் பேர் அண்ணாச்சியைப் பார்த்து மரியாதையுடன் இறங்கி நின்று கும்பிட்டார்கள். அண்ணாச்சி கும்பிட்டதும் குப்பிடாதது மாதிரி கையை லேசாய்த் தூக்கி தூக்கிய வேகத்தில் கீழே தாழ்த்தி விட்டு டாக்ஸியிலேறினார்.

வெயில் ஏறிக் கொண்டிருந்தது. அண்ணாச்சிக்கு சட்டை நனைந்து திட்டுதிட்டாய் உடம்பில் ஒட்ட ஆரம்பித்தது. டாக்ஸியை ஓரத்துப் பெட்டிக்கடை அருகில் நிறுத்தச் சொன்னார். மனி ஓடிப்போய் சோடா எலுமிச்சம்பழம் உப்பு போட்டு இரண்டு கிளாஸ்கள் நிறையக் கொண்டுவந்து அண்ணாச்சி யிடமும் காசியிடமும் கொடுத்தான். காசி ஒரு கையில் சோடா கிளாஸை வாங்கிக் கொண்டே மறு கையில் பையிலிருந்து ரூபாய் நோட்டை எடுத்து மணியிடம் கொடுத்தார்.

டாக்ஸியை பீச் ரோட்டில் விடச் சொன்னார் அண்ணாச்சி. கோட்டைக்குப் போய் யார் யாரையோ பார்த்தார். டைரியிலிருந்து காகிதங்களை எடுத்துப் பார்த்து மாடிகளில் ஏறி இறங்கி ஒவ்வொரு இடமாய் நின்று பேசிவிட்டு வந்தார். சேப்பாக்கத்தில் நாலைந்து ஆபீஸ்களுக்குள் போனார். மௌண்ட் ரோட்டில் இரண்டு ஆபீஸ்களுக்குப் போனார்.

போன இடங்களிலெல்லாம் அண்ணாச்சி ஜிப்பாப் பையில் கைவிடுமுன்பு காசி ஐந்து பத்து ஐம்பது நூறெனறு ஆள்முகம் பார்த்து தரம் பார்த்துக் கொடுத்துக் கொண்டே வந்தார். அண்ணாச்சிக்கு வேர்வை பெருகிக் கொண்டே வந்தது. இரண்டு தடவைகள் டைரியை’ காசியிடம் கொடுத்துவிட்டு சின்னத் துவாலையைப் பிழிந்து விட்டார்.

பகல் ரெண்டு மணி ஆனபோது அண்ணாச்சி டாக்ஸியை வீட்டிற்கு விடச் சொன்னார். வீட்டு வாசலில் இறங்கியதும் அண்ணாச்சி வராந்தாவிலேயே சட்டையைக் கழற்ற ஆரம்பித்தார். கைலியைக் கட்டிக்கொண்டு வேஷ்டியை அவிழ்த்துப் போட்டார். காசி பெரிய பெரிய நோட்டுகளாகப் பையிலிருந்து எண்ணி எடுத்துக் காலையிலிருந்து சென்னையில் வலம் வந்த டாக்ஸிக் கணக்கை முடித்தார்.

உள்ளே நுழையும்போது அண்ணாச்சி, “மணி இந்தத் துணிகளை அர்ஜண்டிலெ போட்டுட்டு வா” என்றார். அண்ணாச்சி அன்று காலை முதல் மதியம் வரை போட்டிருந்த சட்டை, வேட்டி, பனியன், அண்டர்வேயர் ஆகியவைகளை அள்ளிக் கொண்டு மணி லாண்டரிக்குப் போனான்.

ஃபேனைப் போட்டுக்கொண்டு அண்ணாச்சிரொம் ரொம்பத் திருப்தியாகவும் கலகலப்பாகவும் வெற்று உடம்போடு நாற்காலியில் அமர்ந்தார். காசி மெல்ல அண்ணாச்சியிடம், “சாப்பாடு வாங்கிட்டு வரச் சொல்லலாமா, போய் சாப்பிட்டு வந்திரலாமா?” என்றார்.

“சாப்பாடு கெடக்கட்டும் விடு, மெட்ராஸ் எப்படி இருக்கு காசி? அண்ணாச்சிக்கு மெட்ராஸ் காசி படுதா? ரொம்பக் கூரான ஆளுகளாச்சே. மதுரை பக்கத்தாளுக, கூரோட சொல்லு” என்றார் அண்ணாச்சி.

“அதையெல்லாம் மொகத்துக்கு நேராகச் சொல்லக் கூடாது. இருந்தாலும் அண்ணாச்சி கேட்டதாலெ சொல்றேன், மெட்ராஸை நீங்க மிதிச்சுக்கிட்டிருக்கீக” சொல்லிவிட்டுத் திரும்பினார் காசி. மணி வந்துவிட்டான். காசி தொடர்ந்தார். “மணி அப்படீன்னா என்ன அர்த்தம் தெரியுமா, அண்ணாச்சி காலடியிலெ கெடக்கு  மெட்ராஸ்”.

அண்ணாச்சி சப்தமில்லாமல் சிரித்துக் கொண்டார். கால்களை இன்னும் கொஞ்சம் நீட்டி ஆட்டிக் கொண்டிருந்தார். திடீரென்று.

“மணி காசி நம்ம வீட்டுக்கு இப்பத்தான் மொதல் தடவையா வந்திருக்கான். பொட்டியிலே பணம் எடுத்துக்கிட்டுப் போயி மருந்து வாங்கிட்டு வா” என்றார் அண்ணாச்சி.

காசிக்கு இந்த சேதிகள் எல்லாம் ஓரளவு தெரியும். மருந்து என்றால் விஸ்கி என்பது பெரியவர்கள் கொடுத்த அர்த்தம். பெட்டியைத் தேடிப் போன மணியின் கையைப் பிடித்து நிறுத்தி பையிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து “அண்ணாச்சிக்குப் பிடித்தமானதாப் பார்த்து வாங்கிட்டு வாங்க” என்றார்.

பொழுது அடைகிற நேரத்தில் எல்லோருக்கும் விழிப்பு வந்து. விட்டது காசிதான் ரொம்ப அலங்கோலமாய்க் கிடந்த ஆள். மணி தட்டி எழுப்பிக் காசியை நிற்க வைத்தான்.

“பாண்டியன் எக்ஸ்பிரசைப் பிடிச்சு இன்னைக்கே ஊருக்குப் போகணும்னு சொன்யளே”, என்றான்.

எல்லார் கண்களிலும் எரிச்சல் கங்குகளைப் போல் கண்கள் சிவந்து கிடந்தன. காசி பையில் துணிமணி களைச் சுருட்டி வைத்தார், மணியைக் கூப்பிட்டாச் பையிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார். “‘ராத்திரிக்கு’ அண்ணாச்சிக்கு வேண்டியதைக் கேட்டு வாங்கிக் குடுத்துரங்க மணி. நான் இருந்து செய்யணும். எதிரி வீட்டு வாசலுக்கு வந்துட்டான். அதனாலெதான் இப்பவே கெளம்ப வேண்டியிருக்கு” என்றார்.

அண்ணாச்சி இருட்டிற்குள் உட்கார்ந்திருப்பது போல் கண்ணை இடுக்கி உட்கார்ந்திருந்தார்.

“அண்ணாச்சி நாளைக்கு மறுபடி ஒருவாட்டி மந்திரி யைப்பாத்து கலெக்டருக்கு போன் பண்ணியாச்சான்னு பாத்திரணும்.ை நான் அண்ணாச்சியை இன்னிக்கு ரொம்ப தொந்தரவு பண்ணிட்டேன். வர்ரேன் அண்ணாச்சி” என்று சொல்லிக் கொண்டே பையிலிருந்து பத்து நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து மேசை மேல் வைத்தார். மணியிடம் “மணி நான் ரூபாயை இப்படி வைக்கவும் அண்ணாச்சி ஒரு மாதிரிக் கோவமாப் பாக்கிறாக; வேறொண்ணுமில்லெ. நாளைக்கு என் சம்பந்தமா வேலையிருக்குல்ல போகவர செலவுக்குத்தான்”.

அண்ணாச்சி அசட்டையாய்ப் பார்த்தார்: காசி மணியிடம் அவசரப்பட்டார். “மணி ஒரு ஆட்டோ புடிங்க, இப்பப் புறப்பட்டாத்தான் பாண்டியனைப் பிடிக்க முடியும்”

***

மதுரையிலிருந்து அன்று மாலை சென்னையை நோக்கி ஒரு பாண்டியன் எக்ஸ்பிரஸ் கிளம்பிக் கொண்டிருந்தது. கவலையும் பதட்டமுமாய் ஒருவர் உட்கார்ந்து விரல்கள் நடுங்க சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். பக்கத்துப் பிரயாணி அந்த ஆளிடம், “எதுவரை?” என்றார். அந்த ஆள் பதில் சொன்னார்.

“மெட்ராஸுக்குத்தான். நம்ம அண்ணாச்சி அங்கெ இருக்கார். ஒரு முக்கியமான வேலை சம்பந்தமா அவரைப் பார்க்கப் போய்க்கிட்டிருக்கேன்.”

– பூவுக்குக் கீழே (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 1987, அன்னம் (பி) லிட், சிவகங்கை.

கந்தர்வன் கந்தர்வன் (க.நாகலிங்கம்) (பெப்ரவரி 3,1944-ஏப்ரல் 22,2004) தமிழ் எழுத்தாளர், முற்போக்கு இலக்கிய அழகியலை சார்ந்து எழுதியவர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்)யுடன் தொடர்புகொண்டிருந்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பை வகித்தார். தொழிற்சங்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். கந்தர்வனின் முதல் சிறுகதை 'சனிப்பிணம்' 1970 -ல் தாமரையில் வெளிவந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்து அதில் பணியாற்றினார். கண்ணதாசன் இதழில்இலக்கிய விமரிசனங்கள்,சிறுகதைகள், கவிதைகள் எழுதினார். தாமரை, சுபமங்களா, சிகரம், செம்மலர், ஆனந்த விகடன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *