வாழ்விலே ஒரு நாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2026
பார்வையிட்டோர்: 986 
 
 

தூக்கம் கலைந்ததும் கொஞ்ச நேரம் அப்படியே படுத்துக்கொண்டு இருந்தான். வீட்டில் மற்றவர்கள் எழுந்து அவரவர் வேலையைப் பார்க்க தொடங்கிவிட்டார்கள்.

இவன் வீட்டில் எப்போதும் காபிதான் போடுவார்கள். ஆனால் இவனுக்கோ டீ தான் பிடிக்கும். காலையில் டீயோ காபியோ குடிக்காவிடில் அன்று முழுவதும் ஏதோ ஒன்றை இழந்து விட்டதுமாதிரி இருப்பதுடன் தலைவலி வேறு மண்டையை பிளந்து விடும்.

இன்று டீ குடிக்கலாம் என்று எழுந்து படுக்கையை சுருட்டி வைத்து விட்டு டீ கடைக்குக் கிளம்பத் தயார் ஆனான்.

கடையுனுள் அமர்ந்து அங்கிருந்த தினசரிகளைப் பார்விையிடத் தொடங்க டீ மாஸ்டர் இவனுக்காக தேநீர் தயாரிக்கத் தொடங்கினார். இவன் டேஸ்ட் அவருக்கு நன்கு தெரியும்.

கலங்கிய செம்மண் நீரில் காசநோயாளி துப்பிய சளி போல உருவமைப்பில், சூடான சுவையான தேநீர் என்பது இவன் தேவை என அவர் அறிவார்.

மேற்கூறிய முறையில், தேநீர் “ஸ்டாங்காக” இருக்க வேண்டும் என இவன் தன் நண்பர்களிடம் தேநீர் அருந்தும் போதெல்லாம் கூறியதின் பலன் அவர்களில் பலர் டீ, காபி போன்ற பானங்களை மறுத்து நல்வாழ்வு வாழ்ந்து வருகின்றார்கள்.

டீ குடித்து விட்டு பிறகு வீடு திரும்பி ஏதோ ஒரு புத்தகத்தைப் படிக்க தொடங்குகையில் போன் ஒலித்தது. போனை அட்டெண்ட் செய்த அம்மா உனக்குத்தான் போன் என்றாள்.

போனில் இவனின் நண்பன் ஊரில் இருந்து இங்கு வந்துள்ளதாகத் தெரிவித்தான். நலம் விசாரிப்புகள் முடிந்தபின் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள்.

இவன் வீட்டில் இருந்து கிளம்பும்போது, அம்மா சாப்பிட்டுவிட்டு போ என்றும், எங்கே போகிறாய் என்றும், கேட்க, இவன், ‘வேலைக்குத்தான்,’ என்றும் பதிலளித்தான். இவனுக்கு ஏதும் வேலை இல்லை என்று அம்மாவுக்கு தெரியும். என்றாலும், ‘சரி, சரி வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் திரும்பி வந்துடு,’ என இவனும் சாப்பிட்டு விட்டு வீட்டை விட்டு கிளம்பினான்.

இருவரும் சந்தித்துக் கொள்ள நிர்ணயித்த இடத்தில் (பேருந்து நிலையம்) அவன் இவனுக்கு முன்னதாக வந்து காத்திருக்கக் கூடும் என்றும் அல்லது இவன் அவனுக்கு முன்னதாக சென்று காத்திருக்க நேரலாம் என இவன் நினைத்துக் கொண்டான்.

இவனுக்கு முன்னதாகவே அவன் அங்கு வந்து காத்து இருந்தான். நீண்ட கால இடைவெளிக்குப் பின்பு சந்தித்த மகிழ்ச்சியை இருவரும் அடைந்தார்கள்.

சிறிது நேரம் அங்கேயே பேசிய பின்னர் தேநீர் அருந்தலாம் என அங்கிருந்து கிளம்பி சுகாதாரம் கருதி பல கடைகளைப் புறக்கணித்தப்பிறகு ஒரு சுமாரான கடையைத் தேர்ந்தெடுத்து அங்கு தேநீர் பருகியபடி தாங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இவர்கள் படித்தபடிப்பு படிப்பு முடிந்தவுடன் தொழில் செய்யும் இடத்திலும் உடன படித்தவர்களை அவர்கள் தொழில் செய்யும் பட்சத்தில் அவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புள்ள தொழில் கல்வி என்பதால் இப்போது இவன் சந்திக்கும் நண்பர்கள் பெண்கள் பற்றிய விவரங்களை அவன் இவனைக் கேட்டு அறிந்து கொண்டான். (காரணம் அவன் வெளி ஊரில் இருப்பதினால்) தேநீர் குடித்து முடித்தும் பல மணித்துளிகள் இருவரும் அங்கேயே பேசிக்கொண்டு இருந்தார்கள். இனியும் அங்கு இருக்க வேண்டாம் என்ற மன நிலையை அடைந்த பின் இருவரும் எழுந்து தேநீர்க்கான தொகையைச் செலுத்தி விட்டு வெளியேறினார்கள்.

பிறகு எங்கு போகலாம் எனப் பேச்சைத் தொடர்ந்து திரைப்படம் என முடிவு செய்தனர். அந்நகரில் நடைபெறும் திரைப்படங்கள் பற்றிய தர நிர்ணயம் விவாதங்கள் செய்து குறிப்பிட்ட திரைப்படங்கள் எந்தத் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்படுகிறது என அறிய இயலாமல் பல திரையரங்கங்கள் ஒரே வளாகத்தில் அமைந்திருக்கும் குழும திரைவளாகம் ஒன்றை தேர்வு செய்து அங்கு செல்லும் பேருந்து நிலையத்தில் பேசிக் கொண்டே பேருந்துக்குக் காத்திருக்த் தொடங்கினார்கள்.

அங்கு சென்ற பிறகு இவர்கள் பார்ப்பதற்குத் தகுதியான திரைப்படம் ஒன்றும் இல்லை என்றும் மேலும் பேசுவவற்கு நிறைய விஷயங்கள் உள்ளன என்றும் திரைப்படம் பார்க்கச் சென்றால் பேச இயலாது எனவே வேறு எங்காவது செல்லலாம் என முடிவு செய்தனர்.

அப்போது பொழுது நன்பகலாக இருந்தபடியால் மதிய உணவை ஏதாவது ஒரு உணவு விடுதிக்குச் சென்று பசியாறலாம் என முடிவு செய்து ஒரு உணவு விடுதியைத் தேடி அடைந்தனர்.

உணவு உண்டபின் மீண்டும் இவர்களின் (இலக்கற்ற ) பயணம் தொடர்ந்து இவர்களுடன் படித்த பலரும் வீடு, மனைவி, மக்கள், வாகனம், என வாழ்வின் குறிக்கோள் என சமூகம் நிர்ணயித்தபடி நிலையில் இருக்க தாங்கள் நிலை மட்டும் ஏணிப்படி இருக்கிறது என தர்க்க காரண காரியம் அறியும் முறைப்படியும் விவாதித்தும், எந்தத் தீர்க்கமான சரியான விடையும் கிடைக்காததால் விதிதான் இதற்குக் காரணம் என்றும் இந்நிலைமை மாறும் என்றும் (எந்த ஒரு நம்பிக்கை தரும் நிலைப்பாடுகள் இல்லை எனினும் ) நம்பிக்கை கொண்டனர்.

இவன் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் காலம் கடத்தி வருபவன், அவனோ மணம் புரிந்து இரு குழந்தைகளுக்குத் தந்தை ஆகிவிட்டான். இவன் தன் தந்தையின் சொற்ப வருமானத்தில் வாழ்பவன், அவனும் அப்படித்தான் எனினும் ஒரு குடும்பத்தை நடத்த ஏதும் வருமானம் ஈட்டாமல் எப்படி வாழ முடிகிறது என மனதில் வியப்பு கொண்டான். அவனும் இவனை பற்றி அவ்வாறே எண்ணி வியப்பு கொண்டிருக்க கூடும் என்றும் இவன் நினைத்து கொண்டான்.

இருவரின் நடையும் பேச்சும் தொடர்ந்து இவர்களைக் கடந்து சென்ற பெண்களை இவர்களை பார்த்தப் பார்வையில் இருவரும் தாங்கள் இன்னும் இளமையையும் வசீகரத்தையும் இழக்கவில்லை என்றும் இவர்களின் நண்பர்கள் பலரும் தலை நரைத்து வயோதிக தோற்றம் அடைந்திருப்பதை ஒப்பீடு செய்து தங்கள் இளமையான தோற்றம் குறித்து பெருமிதம் கொண்டனர்.

ஆனால் அவ்வயோதிக தோற்ற நண்பர்கள் இவர்களைப் போல் இலக்கின்றி கடும் வெயிலில் இந்நகரச் சாலைகளில் அலைந்து கொண்டு இருக்காமல் நவீன சிற்றுந்துகளில் பயணம் செய்துகொண்டு இருக்கும் நிலையை நினைத்து தாங்களின் நிலையை ஒப்பிட்டு உள்ளூர மன வருத்தம் கொண்டார்கள் எனினும் ஒருவருக்கு ஒருவர் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் நடையையும் பேச்சையும் தொடந்தார்கள்.

நேரம் சாயுங்காலப்பொழுது ஆனபின் இந்நகரில் நண்பர்கள் அமர்ந்து பேச பூங்காக்கள் மற்றும் கடற்கரை அல்லது வேறு இடம் இல்லை என்பதால் கடற்கரை செல்ல முடிவெடுத்து அங்கு சென்றனர்.

இரவு வரை அங்கேயே இருந்து மீண்டும் மீண்டும் தங்கள் வாழ்பனுபவங்கள் மற்றும் வாழ்வின் அபத்தநிலை போக்கு குறித்த பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் வீடு திரும்ப முடிவெடுத்துப் பிரிந்தார்கள்.

இவன் இரவு நேர சேவை பேருந்தில் இரவின் குளுமையையும் உடலைத் தழுவும் காற்றின் மென்மையையும் வெறிச்சோடிய சாலையில் விரையும் பேருந்தின் வேகத்தையும் அனுபவித்துக்கொண்டு வீடு திரும்பினான்.

வீட்டில் எல்லோரும் தூங்கிவிட்டு இருந்தார்கள். அம்மாவை தவிர உணவு பரிமாறினாள். இவனிடம் இருந்து பழரசவாடையோ, சிகரெட் வாடையோ வரவில்லை என்பதை அறிந்த திருப்தி அவள் முகத்தில் தெரிந்தது.

இவன் சாப்பிட்டு முடிந்ததும் கொஞ்சம் பால்குடியோண்டா என இவன் வேண்டாம் என்று தலையசைத்து விட்டு படுக்கையை தலையணையையும் சுருட்டி எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்று படுக்கையை விரித்துவப் படுத்துக்கொண்டு வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களையும் தேய்ந்துபோன பாதி நிலவையும் பார்த்துக் கொண்டு இருந்தான். பிறகு தூக்கம் வர தூங்க தொடங்கினான்.

– நவீன விருட்சம் 77–78

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *