பலிபீடம்
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: February 26, 2026
பார்வையிட்டோர்: 5,940
(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கைத்தராசை எடுத்து, சாக்குகளின் மடிப்புக்குள் குப்புற வைத்து, உருட்டுக்கட்டாகச் கருட்டினான் மாரிச்சாமி. வெளியே முற்றத்தில் சைக்கிள் நின்றது. அகலக் கேரியரில் குறுக்காக வைத்து போல்ட் போட்டு மாட்டியிருந்த செவ்வகப் பலகையில் சாக்குச் சுருட்டை வைத்து பின்னல் கட்டாகக் கட்டிக் கொண்டான்.
படிகளைப் பொறுக்கித் துணிப்பைக்குள் போட்டான்.
“எம்மா…”
சத்தமாய் இரைந்த அவன் குரலில் சிடுசிடுப்பு. “என்னடா”- மாட்டுக் கொட்டகையிலிருந்து அம்மாவின் அசரீரி.
“அரைக்கிலோ படியைக் காணலியே, எங்கே?” “திண்ணை மூலையிலே கெடந்துச்சு.”
“இன்னோரு படிக்கல்லு?”
“நா பாக்கலேப்பா. நேத்து நீ கொண்ணாந்து போட்ட படிக்கல்லையெல்லாம் திண்ணையிலே போட்டு வச்சேன். அதான் எனக்குத் தெரியும்.”
“ச்சே! அப்ப… அந்த அரைக்கிலோ படி எங்க போச்சு?”
“நீ எந்த ஊர்லே போய்த் தொலைச்சியோ… நா என்னத்தைக் கண்டேன்?”
அம்மாவின் விட்டேற்றியான பதில் எரிச்சலூட்டியது. மானாங்காணியாக சீறிக்கொண்டு வந்த
கெட்ட வார்த்தைகளை உதட்டுக்குள்ளேயே அடக்கிக் கொண்டான்.
“இந்த நாசமத்துப் போற வீட்லே… ஒரு எழவும் ஒழுங்கா இருக்காது. எல்லாம் தாறுமாறுதான்.”
எரிச்சலான முணுமுணுப்போடு துணிப் பையை ஆண்டில்பாரில் மாட்டினான். ஒரு சுழற்றுச் சுழற்றி முக்கோண பாரில் போட்டுக் கொண்டான். மணி ஏழு இருக்குமா? சிலோன் வானொலியில் பொங்கும் பூம்புனல் துவங்குகிற இசை.
காலைச் சூரியன் சுள்ளென்று கண்ணுக்குள் உறுத்துகிறது. பெடலில் காலை வைக்கும் முன் மாரிச் சாமி நிமிர்ந்து சகுனம் பார்த்தான்.
நிறைகுடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு எதிரில் வந்த ஒரு தாவணி. ஒரு திருப்தி. ஸ்டாண்ட் கிளிப்பை வலது பாதத்தால் சுதாரிப்பாகத் தட்டி விட்டு, சைக்கிளை நகர்த்தினான்.
இடது கையை ஆண்டில்பாரிலும், வலது கையை சீட்டிலுமாக வைத்து ஸ்டைலாக பெடலை மிதித்துத் தாவினான். ஃபிரிவீல் இரைச்சல் மனசுக்கு உற்சாகம் தர, தேவையில்லாமல் பெல் அடித்துக் கொண்டே…
தெருவைக் கடந்து, தெற்காகத் திரும்பி, நடுத் தெருவில் தொட்டு, டீக்கடையில் வந்து நிறுத்தினான், மாரிச்சாமி.
இங்கு ஒரு டீ குடித்துவிட்டு ஏவாரத்துக்குப் போனால், சரக்கு நிறைய விழும். நல்ல லாபம் கிடைக்கும். அது ஒரு ராசி, நரி முகத்தில் முழித்த மாதிரி…
“அண்ணே… ஒரு டீ போடு.”
“என்ன… தூரவா?”
“பட்டிகளுக்குத்தான்…”
டீ கிளாஸை கழுவிக் கொண்டே கடைக்காரர், “நேத்து நல்ல பட்சியாமே… ரெண்டு குவிண்டால் பருத்தி கெடைச்சதாமே… மூணுலோடு அடிச்சீயாமே…”
“ஆமா… கெடைச்சு என்ன செய்றது? சொமந்ததுதான் மிச்சம். வேற ஒண்ணுமில்லே.”
“லாபமில்லையா? ஏன்?”
“வெலையிலேயும் அமுக்கிட்டாங்க… எடையும் நினைச்ச மாதிரி வரலை.”
“ஒரு கிலோவை முக்காக்கிலோன்னு அடிச்சு எடை போடுறதுலே கொம்பனாச்சே நீ? பெறகெதுக்கு எடை கொறையுது.”
“எங்களை மாதிரியான சில்லறை ஏவாரிகளை மொட்டையடிக்குறதுக்குன்னே பருத்தியாபீஸ் இருக்குல்லே? வெறகுத் தராசு வைச்சிருப்பாக. லேசுலே ஆடாது. கொண்டு போய் நாங்க பருத்தியைப் போட்டா… அவங்க வைச்சதுதான் வெலை. போட்டதுதான் எடை…”
புண்படுத்தாத ஒரு பரிகாசச் சிரிப்போடு டீக்கிளாஸை நீட்டினார், டீக்கடைக்காரர்.
“நீங்க சம்சாரிகளை ஏமாத்தி கள்ளத்தராசு போட்டு மொட்டையடிச்சா… உங்களை பருத்தி யாபீஸ்காரங்க வழிச்சு விட்டுறாங்களோ….? ‘பிச்சை எடுக்குமாம் பெருமாளு, அதைப் பிடுங்குமாம் அனுமாரு’ங்கிற கதைதானா?”
“ஆமா….”
“இளிச்சவாயன் சம்சாரிதான். எல்லோருக்கும் இவன்தான் இரை குடுக்க வேண்டியிருக்கு?”
“அதுலே சந்தேகமென்ன? சம்சாரியோ சமுத்திர மோன்னு சும்மாவா சொல்றாக? எல்லாரும் இவன் மேலேதான் ஓடம் வுடுவாக.”
டீ உதட்டில் பிசினாக ஒட்டியது. நல்ல ஸ்ட்ராங் டீ. கனத்த டீயின் துவர்ப்பு கலந்த இனிப்பு ருசி நாக்கில் படிந்து, உள்ளுக்குள் இறங்கியது.
ஆனால் கடைக்காரனின் தொணதொணப்பு எரிச்சலூட்டியது. எல்லை மீறி மூக்கை நீட்டித் துழாவுவதைச் சகிக்க முடியவில்லை.
காசைப் போட்டுவிட்டு, சைக்கிளை எடுத்தான்.
‘டீயை குடுத்துட்டு துட்டை வாங்கிப் போட வேண்டியதுதானே! என்னத்துக்காக இந்த விசாரிப்பு? லாபம் வந்தா என்ன? இவுகளுக்கு என்ன வந்துச்சு? நட்டம் வந்ததைச் சொல்லிட்டா… ஈடு குடுத்துருவாகளா? ஊரான் பொரணியை பேசிச் சிரிச்சாத்தான்… வயிறே நெறையுமோ.. இவுகளுக்கு?’
ஓடையைத் தாண்டி சைக்கிள் விரைந்தது. மேயப் போகிற செம்மறி மந்தைகள், எருமைகளை விலக்கிக் கொண்டு பாய்ந்தது.
டீக்கடை எரிச்சலிலிருந்து நினைவை உருவிக் கொள்ள முயன்றான். அண்டிராயர் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். ரூபாய் பத்திரமாக இருந்தது.
ரோட்டின் இரு மருங்கிலும் மிளகாய் தோட்டங்கள். வாய்க்கால்களில் வரிசை வரிசையாக அகத்திகள். கூலிவேலைக்குப் போய்க் கொண்டிருக்கிற மனிதர்கள். பொழுதுக்கும் பாடுபடணும்.
யார் யார் நிலத்துலோ வேர்வை சிந்தி விளைய வைக்கணும். வயிற்றுப் பாட்டுக்குக்கூட கூலி கிடையாது. டீ குடிக்கக் கூட காசு மிஞ்சாது.
அதனால் தான்… இவன் மம்பட்டியை தலையைச் சுற்றி எறிந்து விட்டு, இந்த சைக்கிளைப் பிடித்தான்…
…அஞ்சாம் கிளாஸ் வாத்தியாரின் அடிதாங்க முடியாமல் மெட்ராஸுக்கு ஓடியவன். பலசரக்குக் கடையில் பழைய கஞ்சியை குடித்துவிட்டு வேலை செய்தான். ஆறு வருஷப் பாடம் அடிகளிலும் பசியிலும் பட்ட வேதனைப் பாடம்.
துட்டைப் பார்க்க நேர்வழியே கிடையாது. துட்டுதான் வாழ்க்கை, மரியாதை, துட்டு இல்லாதவனை நாய்கூடச் சீந்தாது.
எந்த வழியிலாவது துட்டைப் பிடித்துவிட்டால் போதும். அப்புறம் துட்டே துட்டு கொடுக்கும்.
ஆறு வருஷத்தில் வியாபாரத்தின் சூதுவாது எல்லாம் புரிந்து விட்டது. தராசை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்பதெல்லாம் அத்துப்படி…
மம்பட்டியை எறிந்து விட்டு சைக்கிளைப் பிடிப்பதற்கும், பிடித்த பிறகும், அந்த ஆறு வருஷப் பாடம்தான் வெளிச்சம்…
ஆற்றுப்பாலம் நெருங்குகிறது… சைக்கிள் தெற்காகத் திரும்பவா, வடக்குத் திசையில் வளையவா?
எந்த ஊர்ப்பக்கம் போகலாம்…? மனசில் முண்டுகிற யோசனைகள்.
கரிசல்குளம் பக்கம் போகலாமா? அங்குதான் பருத்தி நிறைய விழும். ஒவ்வொரு வீட்டிலேயும் சில்லறைப் பருத்தியாகவே இருபது கிலோவுக்குக் குறையாமல் கிடைக்கும். விலையும் படிந்து வரும். மத்தியான நேரங்களில் பெண்கள்தான் இருப்பார்கள்.
அவர்கள் மனம் குளிரப் பேசிச் சிரித்துக் கொண்டே, மனம் போல எடை போடலாம்.
கரிசல்குளம் என்று நினைத்தவுடன் மனசுக்குள் நறுக்கென்று எறும்பு கடித்தது.
பத்து நாளைக்கு முன்னாடி அங்கே போனது. அதற்கப்புறம் அந்த ஊர்ப்பக்கம் தலைவைத்துகூட படுக்கவில்லை. மனசுக்குள் பயம்.
இன்றைக்குப் போனால்… வேப்ப மரத்தில் கட்டிப் போட்டுதான் விசாரிப்பார்களோ! தோலை உரித்து விடுவார்கள். உடம்பு புண்ணாகிப் போகும்.
ஆனால்.. அங்குதான் நிறைய பருத்தி விழும். லாபம் கிடைக்கும்.
பயமும் சபலமும் மனசுக்குள் மல்லுக்கட்ட சைக்கிள் தன் போக்கில் வடக்காகத் திரும்பியது. இன்னும் அஞ்சு மைல். இரண்டு ஊர்கள். பிரயோசன மில்லாத ஊர்கள். தாண்டிப் போய் விட்டால் அந்த ஊர். பக்கத்தில் தொம்பக்குளம். சம்சாரிகள் பெருத்த ஊர்கள். வியாபாரக் குணமில்லாத சம்சாரிகள். தாராள மனசுகள்.
‘நம்பளை நம்பித்தானே சில்லறை ஏவாரிக ஜீவனம். அவங்களுக்கும் அலையுறதுக்கு நாலு காசு கெடைக்கட்டும்’ என்று நினைக்கிற பெருந்தன்மைக் குணம்.
ஆனால், ஏமாற்றுவதைச் சகித்துக் கொள்ள மாட்டார்கள். ஏமாற்றுகிறவன் சிக்கிவிட்டால்… நீக்குப்போக்கான யோசனை யெல்லாம் கிடையாது.
ஊர் மைய வேப்ப மரத்தில் கட்டிப் போட்டு விடுவார்கள். வந்த ஜனமெல்லாம் காறித்துப்பும்.
ஊர் கூடி பஞ்சாயத்துப் பேசி… போட்ட அபராதத்தைக் கட்டினால்தான்… விடுதலை.
இப்படித்தான் போன வருஷத்துக்கு முந்தின வருஷம்…
பெரிய அரவை மில்லுக்கு லாரி லாரியாகப் பருத்தி வாங்கி லோடு அனுப்புகிற பெரிய வியாபாரி. மற்ற வியாபாரிகள் எவனும் தலைநீட்ட முடியாதபடி, குவிண்டாலுக்கு முப்பது, நாற்பது என்று விலையை கூடுதலாக வைத்து விடுவார்.
ஊர் முழுக்க எல்லா வீட்டுப் பருத்திகளையும் அவரே வாங்கினார். ஒவ்வொரு வீட்டு முன்னாடியும் எடைபோட்டு முடித்து மலை மலையாக பருத்தித் தாட்டுக்கள்.
கட்டுக்கட்டாய் பணம் கொண்டு வந்து ரொக்கம் கட்டித்தான் பருத்தி மருகையைப் புரட்டுவார். ஊர் முழுக்க இவரைப் பற்றித்தான் பேச்சு.
பலநாள் கள்ளன் ஒருநாள் சிக்கத்தானே செய்வான்? சிக்கிவிட்டார்.
மேல வீட்டுக்காரர் வீட்டில் பெரிய அம்பாரமாய் பருத்தி. மும்முரமாய் எடை போட்டு முடிந்த நேரம். வீட்டுக்காரர் எங்கிருந்தோ ஒரு பத்து கிலோ படிக்கல்லைக் கொண்டு வந்தார். இந்த வருஷ சீல். புதுப் படிக்கல்.
வியாபாரியின் தராசுத் தட்டில் ஏற்கெனவே கிடந்த படிகளை இந்தப் புதுப்படியால் எடை போட்டால்… வியாபாரியின் படிக்கல் நானூறு கிராம் கூடுதலாக இருந்தது. அப்படியானால் குவிண்டாலுக்கு நாலரை கிலோ பருத்தி கூடும். அது களவு. இருபது ரூபாயை விலையில் கூட்டிவிட்டு, திருட்டுத்தனமாய் ஐம்பது ரூபாய் பருத்தி எடுத்துக்கொண்ட தந்திரம் பிடிபட்டது.
கசாமுசாவென்று சத்தம். ஊரெல்லாம் செய்தி தீயாகப் பரவ… காட்டிலிருந்து ஜனமெல்லாம் வந்து சேர… பாவம் அந்த வியாபாரி.
வேப்ப மரத்தில் கட்டப்பட்டார்.வசவு நாறிப் போயிற்று. ‘ஊரைக் கொள்ளையடிச்ச பாவி’ என்று வசவும் சாபமும் கொஞ்சமில்லை. நாலு தலை முறைக்குப் போதும்.
அப்புறம் என்ன… அபராதத்தைக் கட்டிவிட்டு, தலை தொங்கிப் போனவர்தான்… அரை உசுராய் ஆகிப் போனார். அப்புறம் தராசைத் தொடவேயில்லை.
மாரிச்சாமிக்குள் பக்கென்றது.
‘அவ்வளவு பெரிய ஏவாரிக்கே அந்தக் கதி என்றால்… நமக்கு?’
வலது கால் பெடலைவிட்டு வழுக்கிக் கொண்டு போனது. பயத்தால் உள்ளங்காலில் கூட வியர்க்கிறதா…?
மனசை அரிக்கிற நமைச்சலான எண்ணங்களை மாற்ற விசிலடித்தான். விசிலில் ஏதோ ஒரு பாட்டைக் கொண்டுவர, அதுவும் நழுவிப் போய்விட…
‘இன்னைக்கும் அந்த ஊருக்குப் போகாம்… வேற ஊருக்குப் போயிட்டா என்ன?’
சீட்டைவிட்டு எழும்பி, எம்பி எம்பி பெடலை அழுத்தினான். லேசாக அடிக்கிற மாரி மூலைக் காற்று. அதைப் பொருட்படுத்தாமல் முன்னேறுகிற சைக்கிள்.
வானத்தில் உரசிக் கொண்டு நிற்கிற உலக்கையாக சிமிண்டாலைக் குழாய். அதிலிருந்து தொடர் கற்றையாக குபுகுபுவென்று வருகிற புகை. தென் மேற்குத் திசையில் நகர்ந்து… விரிந்து… பரவி…
‘நாம செய்ஞ்ச தப்பைக் கண்டு பிடிச்சிருப்பாகளா? கண்டு பிடிச்சே கேட்டாலும்… பத்து நாளாச்சு… ஏதாச்சும் சொல்லி மழுப்பிவிட முடியாதா? நாளாயிட்டால் எந்தச் சூடும் கொறைஞ்சுதானே போகும்? பெரிய பெரிய துரோகமெல்லாம்… காலப் போக்கிலே கரைஞ்சு, மறந்து போறதில்லியா?’
மனப் பயத்தை கொஞ்சம் தளர்த்துகிற ஆறுதலான நினைவுகள்.
மனசின் இறுக்கம் சற்று நெகிழ்ந்து சுபாவமாய் சுவாசிக்க முடிகிறது. நெற்றியிலிருந்து அரும்பி வழிகிற வியர்வை… கண்ணுக்குள் கரிக்கிறது.
பத்து நாட்களுக்கு முன்பு…
***
பொழுது மயங்கி, கருகருவென்று இருட்டுகிற நேரம். சைக்கிள் திணறியது. ஒன்றின் மேலாக ஒன்றாக படுக்கை வசத்தில் போட்டுக்கட்டிய நாலு மூட்டைப் பருத்தி. ஒன்றேகால் குவிண்டால் கனம் இருக்கும்.
சைக்கிள் நகர மறுத்தது. எம்பி எம்பி பெடலை மிதித் தால்தான் நகரும். மூச்சுத்திணறியது. வண்டி நிலைகொள்ளாமல் அலம்பியது.
ஆனால், மாரிச்சாமிக்குள் உற்சாகம்.
சுமையை உணராத மகிழ்ச்சி. பெரிய வேட்டையில் ஜெயித்து விட்ட சந்தோசம்.
மூன்றே வீட்டில் மொத்தப் பருத்தியும். மூன்று வீட்டிலும் பெண்கள் தான் இருந்தனர்.
அவர்களிடம் குளிர்ச்சியாகப் பேசிச் சிரித்து எடைபோட்டான். அவர்கள் மயங்கித் திளைக்கிற மாதிரிப் புகழ்ச்சியாய் பேசணும். பூரித்துப் போவார்கள். அதுதான் இவனது சொக்குப்பொடி.
பேசிச் சிரித்துக் கொண்டே தராசைப் பிடித்தான். ஒன்றரைக்கிலோ எடைக்கல்களைப் போட்டான். பேச்சுவாக்கில் தராசின் இடது பக்கம் கொக்கியைத் தூக்கிப் போட்டுக் கொண்டான். அவர்கள் கவனிக்கவில்லை.
குவித்துக் கிடந்த பருத்தியை பார்த்த முதல் பார்வையிலேயே மதிப்பிட்டு விட்டான். நாற்பது கிலோவுக்கு குறையாது. கொக்கி போட்ட தராசு அதை முப்பத்திரண்டு கிலோ என்று நிறுத்திக் காட்டி விட்டது.
அந்த அம்மா கூடப் புலம்பினார்கள்.
“நாலு துலானுக்குக் கொறையாதுன்னு அய்யா சொன்னாக. முப்பத்திரண்டு கிலோதான் வந்துருக்கோ…” “அம்மா, உங்க கண்ணு முன்னாலே தானே எடைபோட்டேன்? தராசு பொய்யா சொல்லும்?”
“என்ன மாயமோ… எனக்கு அம்மச்சமாத்தான் (சந்தேகம்) இருக்கு…”
“வேணும்னா.. இன்னொரு தடவை எடை போட்டுக் காட்டட்டா…?
“வேண்டாம்ப்பா… ரூவாயைக் கணக்குப்பாரு…”
“ஆட்டும்மா…”
அந்த அம்மாவின் முகம் ஒரு மாதிரியாகி விட்டது. சுமுகத்தன்மை இல்லை. கண்களில் சந்தேக நிழல்.
இவனுக்குள் உதைப்பு. ‘மாட்டிக் கொள்வோமோ?” படபடக்கிற மனசோடு சைக்கிளில் லோடு பண்ணிக் கொண்டு, பரபரவென்று புறப்பட்டான்.
பருத்தியாபீஸில் கொண்டு வந்து போட்டான். நிகரமாய் 22 கிலோ கூடுதலாயிருந்தது. லாபம் வேறு. எல்லாம் சேர்த்து, 270 ரூபாய் லாபம். நல்ல வேட்டை.
அன்றைக்கு மாரிச்சாமிக்கு தலைகால் புரியாத சந்தோஷம். முகமெல்லாம் சிரிப்பு. சக சில்லறை வியாபாரிகளுடன் கேலியும் கிண்டலுமாய் சீண்டி விளையாடினான்.
வீட்டிற்குத் திரும்புகிறபோது, ஒரு கிலோ காராச்சேவும், ஒரு கிலோ பூந்தியும் வாங்கிக் கொண்டான்.
***
இன்று அதுவே பூதமாக வந்து நின்று அச்சுறுத்துகிறது. அருவமான பூதம். உள் மனசுக்குள் நடுக்கம். பயந்த மனசில் கன்னாபின்னாவென்று கற்பனைகள். பயங்கரம் பயங் கரமாய்க் காட்சிகள்… வேப்பமரம்…. விளக்குமாறு அடிகள்…
இந்தச் சில்லறை ஏவாரப் பிழைப்பே இப்படித் தான். காற்றும் வெயிலும் பாராமல் மைல் கணக்காய் ஊர் ஊராய் அலையணும். தெருத் தெருவாய் சுத்தணும்.
“பருத்தி இருக்கா… பருத்தி” என்று தொண்டை கிழியக் கத்தணும். சரக்கு இருந்தால் விலை பேசணும். அதற்கு ஆயிரத்தெட்டு பொய்கள், நடிப்பு, ஏமாற்று எல்லாம் செய்யணும். அப்புறம் எடைபோடுவது என்றால், முயல் பிடிக்கிற நாய் மாதிரி நூறு பம்பல் பம்மிப் பதுங்கணும். முழிச்சிருக்கிற முழிகளை வலி தெரியாமல் தோண்டி எடுக்கணும்.
தொழில் பார்த்தாகணும். ரெண்டு துட்டைப் பார்த்தாகணும். அப்புறம், இப்படிப் பயந்து பயந்து சாகணும்.
இதை விட்டுவிட்டு எந்தத் தொழிலுக்குப் போனாலும் இதே கதைதானே! ஒன்று ஏமாறணும். இல்லே, ஏமாத்தணும். ரெண்டும் இல்லாம மனுசன் வாழ முடியலியே… ச்சே! இது என்னயா பொழப்பு!
வாழ்க்கையே பலிபீடம்தானா? பலியாக வேண்டும். இல்லையென்றால் பலிகொடுக்க வேண்டும், வேறு வழியே இல்லையா…?
சைக்கிள் ஊருக்குள் நுழைந்து விட்டது. மனசுக்குள் பூரான் ஊர்கிற மாதிரியோர் அரிப்பு, பயம்.
பஜாரில் டீக்கடை முன் வண்டியை நிறுத்தினான். குப்பென்று உடலெங்கும் வியர்வை. நசநசப்பு. சட்டைப் பட்டனை அவிழ்த்துவிட்டு காலரைத் தூக்கிவிட்டான். கைலியில் முகம் கழுத்து எல்லாம் துடைத்துக் கொண்டான்.
கடைக்குள்ளிருந்து வெளிப்பட்ட பெரியவர், புகை நிறக் கதர்த் துண்டை போர்த்தியிருந்தார்.
“என்னப்பா… பருத்தி ஏவாரியா?”
“ஆமாய்யா… உங்க வீட்லே பருத்தி கெடக்கா?”
“இல்லேப்பா… நீ ஆமநாட்டு ஏவாரிதானே?”
“ஆமய்யா.”
“தெக்குத் தெரு ஓட்டு வீட்டம்மா ஒன்னைத் தேடித் தேடி விசாரிச்சுக்கிட்டு இருந்தாகளே…”
இவனுக்குள் நறுக்கென்று குத்திகிற முள். கொடுக்கை நீட்டிக் கொண்டு நெருங்கி வந்த தேள், கொட்டியே விட்டது. ‘மாட்டிக்கிட்டோம்.’
மனசுக்குள் வியர்வை, படபடப்பு. ‘இப்படியே திரும்பி ஓடிவிடலாமா’ என்று தவிக்கிற மனசு. வேப்பமரத்தை மிரட்சியோடு பார்த்தான். ‘ஓடிப்போயிட வேண்டியதுதான்.’
சைக்கிளை நெருங்கினான். ஆண்டில்பாரைப் பிடித்த கையில் வியர்வை. ஸ்டாண்ட் கிளிப்பைத் தட்டிவிட்டு, சைக்கிளை நகர்த்த முயன்றபோது,
மறித்துக் கொண்டு ஒரு வாலிபன்.
“எங்க அம்மா ஒன்னைக் கூப்புட்டாக.”
மனசு படபடத்தது. நாக்கெல்லாம் உலர்ந்து போய்… பயத்தில் உதடு பிரிய மறுத்தது.
“எதுக்கு?”
“எதுக்கோ?”
“அப்புறமா வர்ரேன்.”
“இல்லே… கையோட கூட்டிட்டு வரச் சொன்னாக.” வேப்பமரத்தின் நிழல் வெப்பமாய்த் தகித்தது. சிக்கியாகி விட்டது. இனி மீள வழியேயில்லை.
தலைக்கு மேல் வெள்ளம். இனி சாண் என்ன, முழம் என்ன!
அவன் பின்னால் சைக்கிளை உருட்டினான் மாரிச் சாமி. சூறாவளிக்குள் சிக்கிய பச்சிலையாக இவன். இருதயம் தட.தடக்கிறது. வயிற்றுக்குள் பகீர்… பகீர் உணர்வு.
வீட்டு முற்றத்தில் சைக்கிளை நிறுத்தி, வீட்டுக்குள் நுழைந்தான். கால்கள் பின்னலாடியது. வெய்யிலிலேயே இருந்த இவன் கண்களில், சட்டென்று வந்து மோதிய வீட்டு நிழலிருட்டு. இமைகளை அழுந்த மூடினான். உள்ளுக்குள் மிதந்த வர்ணரேகைகள்.
நா வறண்டது. எச்சிலெல்லாம் கட்டியாகி விட்டது. வார்த்தை அதற்குள் சிக்கிக்கொள்ள…
“என்னம்மா…..”
“யாரு, ஏவாரியா?”
“ஆமம்மா…”
மனசுக்குள் திக் திக் திக்…
“ஏதாச்சும் தொலைச்சுட்டுத் தேடுனீயா?”
“இல்லியே… என்னம்மா?”
“தொலைச்ச படிக்கல்லைத் தேடக்கூட மதியில்லாம இருக்கிற நீயெல்லாம், ஒரு ஏவாரி தானா?”
அன்பான கண்டிப்போடு வந்த கேள்வி. மனசின் பாரம் சட்டென்று நழுவ… இறுக்கம் தளர்ந்து இயல்பாய்த் துடிக்க… பயம் தொலைந்த இடத்தில் ஆறுதல் ஒரு குளிர்ச்சியாய் வந்து உட்கார…
நல்ல வேளை… இவர்கள் ‘அதைக்’ கண்டு பிடிக்கலை. உள்ளுக்குள் மகிழ்ச்சியான குழப்பம்.
“என்னம்மா விஷயம்?”
“நீ அன்னிக்கு போட்டுட்டுப் போய்ட்டே. நா எடுத்து வெச்சேன். வந்தா, குடுத்துரணும்ணு தேடுனேன். நீ இன்னிக்குத்தான் வந்துருக்கே. ஒன்னோட முதல் எனக்கு எதுக்கு? இந்தா எடுத்துக்க ஒன்னோட அரைக்கிலோ படி.”
படிக்கல்லைக் கையில் எடுத்தான். என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவனுள் எங்கோ ஒரு மூலையில் வேதனை. தாங்க முடியாத வலி. குத்தெடுக்கிற உளைச்சல்.
ஒரு படிக்கல்லைக்கூட ஒளித்துக் கொள்ள விரும்பாத இந்த அம்மாவிடமா… அன்று கொக்கி போட்டு எடையை ஒளித்தேன்…? இத்தனை நாணயமான சம்சாரிகளிடமா, நான் அநியாயமாய்… சாமர்த்தியமாய்… திருடுகிறேன்…? ச்சே! ஒரு குழந்தையின் நெஞ்சில் மிதித்துவிட்ட ஒரு கொடிய சுய உளைச்சல்.
பயம் இருந்த மனசில்… இப்போது இந்த வலி.
படிக்கல்லும், தொழிலும், வாழ்க்கையும் பாறையாய் கனக்கிறது. உடம்பிலுள்ள சக்தியெல்லாம் கரைந்து போய்விட்ட உணர்வு.
ஏதோ நல்ல வார்த்தைகள் சொல்லிவிட்டு வெளியேறிய மாரிச்சாமிக்குள் மனக்குழப்பம். அசூயை. பிழைப்புப் போட்டியில் சாக்கடைப் பன்றியாய் இழிந்து போய்விட்டதை உணர்ந்த மனக்கசப்பு.
“பருத்தி இருக்கா… பருத்தி” என்று சத்தம் போட மனசில் தெம்பில்லை. எங்கோ ஒரு தடங்கல். தொண்டைக்குள் ஓர் அழுத்தம்.
***
ஏகப்பட்ட யோசனைகள்.
மனசு ஒரு நிலைப்படவில்லை. ஒரு டீயைக் குடித்துவிட்டு, கிடந்த பேப்பர்களைப் பார்த்தான். நேரம் ஊர்ந்தது. பசிப்பதை உணர்ந்தான்.
சைக்கிளை உருட்டிக் கொண்டு அடுத்த ஊருக்குள் நுழைந்தான். பசி வயிற்றைக் கிள்ள… தெருவில் நடந்தான். பசி… பசி… பசி… புறவாழ்வின் அசுர நிஜமாக… பசி.
“பருத்தி இருக்கா… பருத்தி” என்று கத்திக் கொண்டே சைக்கிளை உருட்டினான். கத்த முடிகிறது. இப்போது.
அவன் நழுவவிட்டிருந்த அரிவாளை எடுத்து அவன் மனசுக்குள் சொருகி, ஓங்கவைத்துவிட்டது பலிபீடம்.
– சுபமங்களா, 1989.
– விரல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 1995, கங்கை புத்தக நிலையம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
