எயிற் பட்டினத்தின் மயில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: January 7, 2026
பார்வையிட்டோர்: 2,301 
 
 

அந்தி சாயும் பொழுது. செடிகளும் கொடிகளும் நிறைந்த அந்த அடர்ந்த வனத்தில் தனக்குத் தேவையான பச்சிலைகளையும் மூலிகைகளையும் பறித்துக் கூடைகளில் நிரப்பிக் கொண்டாள் ஒடிசலான அழகான இளம் பெண் பூங்குழலி . கிழக்கிலிருந்து கடல் அலைகளின் ஓசை கேட்டது. அவள் தன்னுடைய அத்தை மயிலம்மா நடத்தி வரும் ஆதுரசாலையை நோக்கி விரைவாக நடை போட்டாள். அவளுடைய தளிர்க் கரங்களைப் பிடித்து இழுத்தது ஒரு முரட்டுக் கரம் . திரும்பிப் பார்த்தாள்.

புன்னகையுடன் கட்டிளங்காளை இளைஞன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

“போகிற இளம் மங்கையின் கையைப் பிடித்து இழுப்பது கடார தேசத்தவர் வழக்கமோ?“ கேட்டாள் பூங்குழலி .

“காதலைச் சொன்னால் பதில் உரைக்காமல் போவது தொண்டை நாட்டு பெண்களின் வழக்கமாக இருந்தால் , வெளிநாட்டவன் என்ன தான் செய்வது?“ அந்த வாலிபன் பதில் உரைத்தான்.

“எங்கிருந்தோ வந்தவர் காதலிக்கிறேன் என்று சொன்னால் நான் சரி என்று சொல்ல முடியுமா ? பின்னால் ஓடி வர முடியுமா ? எந்த எந்த சீமையிலிருந்தெல்லாம் வந்தவர்கள் , எங்கள் பெண்களை மயக்கிப் பேசி நட்டாற்றில் விட்டுள்ளார்கள் . கண்ணீர்க் கதைகள் நிறைய உண்டு எங்கள் எயிற் பட்டினத்தில். வந்த வேலையை முடித்து விட்டு கப்பலேறி கடாரம் செல்லப் பாருங்கள் … நான் கத்தி ஊரைக் கூட்டினால் ஊர்த் தலைவர் உடனடியாக உம்மை கப்பலில் ஏற்றி அனுப்பி விடுவார் ”

பூங்குழலிக்கு அவனைப் பிடித்து இருந்தாலும் முகத்தில் கோபக் குறியைக் கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்டு பேசினாள்.

அந்த ஆடவன் எளிதில் அவளை விடுவதாக இல்லை.

“பூங்குழலி நீ என்னை அயல் தேசத்தவன் என்று ஒதுக்க யாதொரு காரணமும் இல்லை. நான் இந்த மண்ணின் வாரிசுதான்…”

“என் அத்தையாரின் ஆதுரசாலைக்கு நோயே இல்லாமல் நோயாளி போல் வந்து நின்றீரே.. அது போல் இது இன்னொரு பொய் வேடமா?“

“பொய்யும் இல்லை . புனைவும் இல்லை. நான் இளஞ்செழியன் .. உங்கள் அத்தையின் கணவர் நாகனாரின் கடாரத்து மனைவியார் பொன்னியின் புதல்வன். மயிலம்மா எங்கள் பெரிய அன்னை”

“திரைகடலோடித் திரவியம் போன பலரும் எயிற் பட்டினத்திற்குத் திரும்பி விட , மாமன் நாகனார் மட்டும் அங்கே இன்னொரு குடும்பத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டார் … அப்படித்தானே…? “

“என் தந்தையாரின் வாழ்வில் என்னென்னோ நடந்து விட்டன. பெரியம்மாவை ஆறுதல் படுத்தி … ”

“அவர் வளர்க்கும் அவருடைய தமையன் மகளைத் திருமணம் செய்து கொண்டு விட்டால் , அவர் கப்பலேறி உங்களுடன் கடாரம் வந்து விடுவார். அப்பாவையும் பெரியம்மாவையும் சேர்த்து வைத்து விடலாம். மிகப் பிரமாதமான திட்டம் உங்கள் திட்டம் ”

“நீ ஒத்துழைக்க வேண்டும் பூங்குழலி … இறுதி நாட்களிலாவது உன் மாமனும் அத்தையும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா ? “

இளஞ்செழியன் அவளுடைய இரண்டு கரங்களையும் பற்றிக் கொண்டான்.

பூங்குழலி தன்னுடைய கைகளை விடுவித்துக் கொண்டு விறுவிறுவென மேலே நடந்தாள்.

“உங்களுக்கு அப்பாவின் ஊர் பெண்கள் தான் வேண்டும் என்றால் நிறைய பேர் இருக்கிறார்கள் . உங்கள் செல்வச் செழிப்பை அறிந்தால் போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள்.. உங்கள் திட்டம் நிறைவேறாது ”

சொல்லிக் கொண்டே நடந்தாள் பூங்குழலி. இளஞ்செழியன் அங்கேயே நின்றான். பொழுது சாய்ந்து இருள் பரவியது.

***

மயிலம்மாவின் ஆதுரசாலை. பேரிளம் பெண் மயிலம்மா , அங்கு தங்கி சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் பருமனான பதின் பருவப் பெண் ஒருவள் வந்து நின்றாள். மயிலம்மா அவளைப் பார்த்தார்.

“தங்களைக் காண ஊர்த் தலைவரும் மற்ற பெரியவர்களும் வந்துள்ளனர். நாங்கள் வரவேற்று தோட்டத்தில் மேற்கூரை உள்ள பகுதியில் அமர வைத்து உபசரித்தோம். தாங்கள்… ”

மயிலம்மா பதில் ஏதும் பேசாமல் தோட்டத்தை நோக்கி நடந்தார். அங்கு திண்ணையில் அமர்ந்து இருந்த ஊர்த் தலைவர் , அவர் வீட்டுப் பெண்மணிகள் , மற்ற பெரியவர்கள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து வரவேற்றார் மயிலம்மா. தம்முடைய கணவரின் முகச்சாயல் கொண்ட இளஞ்செழியன் அங்கு நின்றிருப்பதை மயிலம்மா கவனிக்கத் தவறவில்லை.

ஊர்த் தலைவர் தயக்கத்துடன் பேசத் தொடங்கினார் –

“ஆதுரசாலை அமைத்து மக்களுக்கு நல்லது செய்து வருகிற மயிலம்மா..“

மயிலம்மா இடை மறித்தாள் –

“ஊர்த் தலைவர் அதற்காக எனக்கு ஏதும் வெகுமதி அளிக்க உத்தேசமா ? “

“உனக்கு எத்தனை வெகுமதிகள் தந்தாலும் போதாதே … நீ ஆற்றும் தொண்டுக்கு … நாங்கள் எதற்கு இங்கு வந்தோம் என்றால் , இந்த பிள்ளையாண்டான் உன்னுடைய பிள்ளை தான். நண்பர் நாகனாருக்கு கடாரத்தில் அவருடைய இரண்டாம் தாரத்திற்குப் பிறந்த பிள்ளை. நீ வளர்த்து வரும் உன் அண்ணன் மகளை இவனுக்கு நீ மனம் வந்து மணம் முடிக்க வேண்டும். உன் கணவரும் இது தொடர்பாக ஓலை அனுப்பி உள்ளார் … உன்னையும் இந்த பிள்ளை தன்னுடைய அப்பாவிடம் உன்னை அழைத்துச் செல்ல விரும்புகிறான்… ”

மயிலம்மா அமர்வதற்கு அங்கு ஒரு சிறிய ஆசனத்தை கொண்டு வந்து வைத்து விட்டு வீட்டுக்குள் சென்றாள் பூங்குழலி.

மயிலம்மா , “ நீங்கள் சொல்லும் சேதிகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மற்றவர் தலை சுற்றலுக்கு உபாயம் சொல்லும் எனக்கே தலை சுற்றுகிறது . பெரியவர்கள் எதிரில் அடியாள் அமர்ந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் ”

ஊர்த் தலைவர் அமர்ந்து கொள் என்ற உடன் ஆசனத்தில் அமர்ந்த மயிலம்மா திடமான குரலில் பேசினார் –

“என் அண்ணன் மகளை நான் மணிமேகலை போல் இருந்து விடச் செய்ய மாட்டேன். மருமகளுக்கு உரிய நல்லது செய்துதான் ஆக வேண்டும். உங்கள் நண்பரின் பிள்ளை , பூங்குழலிக்குப் பிடித்து இருந்தால் , கடாரச் சீமைக்குச் செல்ல அவள் தயாராக இருந்தால் , இப்போதே அவளைத் தங்களுடன் அனுப்பி வைக்கிறேன். தாங்கள் அனைவரும் முன் நின்று இருந்து திருமணத்தை நடத்தி அவளை அனுப்பி வையுங்கள். சடங்குளில் அடியாள் பங்கேற்க மாட்டேன்.

… இத்தனை காலம் எப்படி என் காலம் கடந்ததோ அப்படியே மீதமுள்ள காலத்தை அடியாள் கழித்திட தாங்கள் அனுமதிக்க வேண்டுகிறேன். தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ”

சொல்லி விட்டு எழுந்து நின்றார் மயிலம்மா . பூங்குழலி என்று அழைத்தார். வந்து நின்ற பூங்குழலி தன்னுடைய அத்தையை அணைத்துக் கொண்டாள். கண்ணீர் உகுத்தாள். “ உன்னைத் தேடி வந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள். அவர்களுடன் செல். இனிமேல் நீ அவர்கள் உடைமை ”

பூங்குழலி ” உன்னை இத்தனை காலம் தவிக்க விட்டவரின் வாரிசை நான் எப்படி நம்புவது அத்தை ? “ என்றாள்.

ஊர்ப் பெரியவரும் மற்றவர்களும் பெணமணிகளும் இளஞ்செழியனும் சிறிது நேரம் காத்திருந்தனர். மயிலம்மா மீண்டும் மீண்டும் மன்றாடியும் அவள் அவர்களுடன் செல்லாமல் வீட்டை நோக்கிச் சென்றாள். மயிலம்மா ” பெரியவர்கள் மன்னிக்க வேண்டும் ” என்றார்.

குறிப்பு:

1. எயிற் பட்டினம் என்பது தொண்டை நாட்டின் மும்முரமான துறைமுகப் பட்டினம். இன்றைய மரக்காணம் . சங்க காலத்தில் இது மிகப் பெரிய துறைமுக நகரமாக இருந்துள்ளது. சிறுபாணாற்றுப்படையில் மதிலொடு பெயரிய பட்டினம் என்று கூறப்பட்டுள்ளது. எயில் என்பது மதிலைக் குறிக்கும் .

2. எயிற் பட்டினம் உள்ள நாடு ஒய்மா நாடு – வள்ளல் ஒய்மான் நல்லியக் கோடன் என்பான் ஒய்மா நாட்டை ஆண்ட நல்லான் என்று புறநானூற்றுப் பாடல் 176 ல் கூறப்பட்டுள்ளது. ஒய்மான் ஆண்டதால் ஒய்மாநாடு

3. Periplus of Erytharaean sea – செங்கடல் செலவு என்ற நூலில் Sopatama என்று எயிற் பட்டினத்தைக் குறிப்பிடுள்ளனர்.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *