ஆட்கள் அருகில் வேலைகள் தொலைவில்
கதையாசிரியர்: முத்தமிழ்ப்பித்தன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 28, 2025
பார்வையிட்டோர்: 113

காலை கதிரவன் தனது காந்தக் கதிர்களை பாந்தமாய் எங்கும் படரவிட்டபடி பூமியின் மேற்பரப்பை புன்னகையுடன் பார்க்கத் துவங்கிய ஓர் இனிய காலை பொழுது. அருகில் உள்ள குளத்தில் செந்தாமரை மலர்கள் மந்தாரமாய் கண் விழித்து மலர்ந்திருந்தன.
நாதமங்கலம் கிராமத்தின் கிழக்கே உள்ள வயலை நோக்கி நான்கு பேர் கொண்ட விவசாய வேலைக்குழு, மெதுவாக நடந்துசென்றது. திருமானூருக்கு அருகே உள்ள கிராமத்திலிருந்து புறப்பட்டு, முப்பது கிலோ மீட்டர் தூரம் பேருந்தில் பயணித்து, அதன் பின் சிறிது தூரம் நடந்து இந்த நாதமங்கலம் கிராமத்திற்கு விவசாய பணிக்காக அவர்கள் வந்திருக்கின்றார்கள். அக்குழுவில் உள்ள ஐங்கரன், சிவச்சந்திரன், மகேந்திரன் மற்றும் பிரான்சிஸ் — எல்லோரும் தினமும் விவசாய வேலைக்குச் சேர்ந்தே செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர்.
இவர்களைப் போன்ற சில விவசாயக் குழுவினர் தான் அந்த கிராமத்தின் பெரும்பாலான விவசாயப் பணிகளை செய்து வருகிறார்கள். இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் திருப்பூர் சென்று விட்டார்கள். எஞ்சிய பெண்கள் 100 நாள் வேலைக்கு சென்று விட, அங்கே விவசாய வேலைகளை செய்வதற்கு இவர்களை விட்டால் வேறு வழியில்லை என்ற இக்கட்டானநிலை தான் இன்னும் நீடித்தபடி இருக்கிறது.
முந்தைய நாள் அவர்கள் வேறு ஒரு இடத்தில் வேறு வேலைகளை செய்து கொண்டிருந்த போதுதான் அவர்கள் அந்த வயல்காரரை சந்தித்தார்கள். அவரிடம் அவர்கள்,
“நாலு வரப்பை சுத்தம் பண்ணிக்கொடுக்குறோம் அண்ணே, ஒரு வரப்புக்கு 500 ரூபா. ஆகமொத்தம் நாலு வரப்புக்கும் 2000 ரூபா,”
என்று பேசி முடித்திருந்தார்கள். ஆனால் வயலை நேரில் பார்த்திருக்கவில்லை. வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பட்டாபி ராமன்தான் அந்த வயலுக்கு சொந்தக்காரர்.
மறுநாள் வயலுக்குள் இறங்கியதும் எல்லாரும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக ஒற்றுமையாக இருந்தார்கள்—“இந்த வயல்காரர் நல்லவேலையில இருக்காரு. அதனால நாம ஏற்கனவே பேசின 2000-ரூபாயோட இன்னும் கொஞ்சம் சேர்த்து 2400 ரூபாயா கேட்டா அவர் கண்டிப்பாக கொடுத்து விடுவார்” என்ற எண்ணம் அவர்கள் எல்லோரிடமும் இணக்கத்துடன் இருந்தது.
வயல்காரர் பட்டாபிராமன் காலை 8 மணி அளவில் வயலுக்கு வந்தார். அவரிடம் முதலில் சிவச்சந்திரன் பேசினான்.
“ஐயா நாங்க நேத்து வயல பார்க்காம பேசிட்டோம். இங்க வந்து பார்த்தா வயல் கொஞ்சம் களிமண் பாங்கா ரொம்ப இருகளா இருக்கு. மேலும் புல்லு அதிகமா மண்டி கிடக்கு. அதனால எங்களுக்கு கொஞ்சம் வேலை மெனக்கிடும் போல இருக்கு. நீங்க ஆளுக்கு 600 ரூபாய் வர்ற மாதிரி மொத்தமா 2400 ரூபாய் கொடுத்தால் ரொம்ப நல்லா இருக்கும். என்ன சொல்றீங்க?”என்றார்.
முதலில் தயங்கிய பட்டாபிராமன் பிறகு அவர்கள் கேட்ட தொகையை தருவதாக ஒப்புக்கொண்டார். அவர்கள் சந்தோசமாக வேலையை ஆரம்பித்தார்கள்.
அப்போது ஐங்கரன் வயல்காரரிடம் பேச ஆரம்பித்தான்.
“ஐயா ஒன்னு மறந்துட்டோம். பொதுவா நாங்க என்ன வேலை செஞ்சாலும் பேசுன தொகையோட எங்களுக்கு வெத்தலை பாக்கு, காப்பி தண்ணி, போண்டா அப்படின்னு அதுக்காக ஆளுக்கு ஒரு 50 ரூபாய் கூடுதலா கொடுப்பாங்க. நீங்க அதையும் கொடுத்துருங்க.”என்று சொல்ல வயல்காரர்
“அதெல்லாம் ஊர்ல உள்ள நடைமுறை தானே. அதெல்லாம் நான் கண்டிப்பா கொடுத்துடுவேன். நீங்க வேலையை நல்லபடியா செய்ங்க” என்றார்.
அப்போது மகேந்திரன் பேசினார்.
“ஐயா இங்க பாருங்க,, களிமண் ரொம்ப ஒட்டுது. ரொம்ப கஷ்டமா இருக்கு. நாங்க வேலையை நல்லபடியா செஞ்சு முடிச்சு தரோம். ஆனா நீங்க நாங்க வேலை முடிஞ்ச உடனே கையில பணத்தை கொடுத்துடுங்க. நாங்க ரொம்ப தூரம் நடந்து போயி பேருந்த புடிச்சு ஊருக்கு போகணும்.” இப்படி அவர்கள் சொன்னதைக் கேட்டு பட்டாபிராமன் உள்ளூர சிரித்துக்கொண்டார். ஆனால் அவர் அதை வெளியில் வெளிக்காட்டி கொள்ளவில்லை.
அவருக்கு அவரது வயலை பற்றியும் அதன் மண் வகை பற்றியும் அனைத்து விவசாய வேலைகளைப் பற்றியும் நன்கு தெரியும். அவர்கள் எதற்காக இப்படி எல்லாம் சொல்கிறார்கள் என்பதும் அவருக்கு நன்கு புரிந்துதான் இருந்தது. வெகு தொலைவில் இருந்து காலையிலேயே புறப்பட்டு இங்கு வந்து கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். அவர்களுக்கு கூலியை கொஞ்சம் கூடுதலாக கொடுப்பதில் அவர் ஒருபோதும் சங்கடப்படவில்லை.
அப்போது பிரான்சிஸ் அவரிடம் பேசினார்.
”ஐயா, நாங்க இந்த வேலையை 4 பேர் செய்யறதுனால இன்னும் ரெண்டு மணி நேரத்துல வேலை முடிஞ்சிடும். அதனால நீங்க இப்பவே போய் பணத்தை எடுத்துட்டு வந்துருங்க.” இப்படி பிரான்சிஸ் சொல்ல வயல்காரர் பட்டாபிராமன் பணத்தை எடுத்து வர வீட்டிற்கு புறப்பட்டார்.
வேலை முடிந்ததும், வயல்காரரிடம் இருந்து பேசிய தொகையை வாங்கிக் கொண்டு அந்த நான்கு பேரும் தங்கள் வீட்டிற்கு புறப்பட தயாரானார்கள். இப்போது வயல்காரர் பட்டாபிராமன்
“பக்கத்துல இருக்கிறதும் என்னுடைய வயல்தான். அந்த வயல்ல வேலி ஓரத்து வரப்புகள்ல நாலு பக்கமும் செடி கொடிகளை சுத்தம் பண்ணனும். அந்த வேலையை பார்க்க நாளைக்கு நீங்க வர முடியுமா?”
இப்படி பட்டாபிராமன் கேட்க, குழு தலைவரான சிவச்சந்திரன்,
“எங்களுக்கு நாளைக்கு இன்னொரு வேலை இருக்குங்க ஐயா, இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வேணா பாக்கலாம்” என்று சொல்ல, பட்டாபிராமன்,
” சரி வாங்க பாத்துக்குவோம்.” என்று சொல்லி பட்டாபிராமன் அவர்களை வழி அனுப்பி வைத்தார்.
அருகில் இருந்த ஏரியில் அந்த நான்கு பேரும் ஆற அமர குளித்தார்கள். அவர்கள் குளிக்கும் போது ஐங்கரன், சிவச்சந்திரனிடம் கோபித்துக் கொண்டார்.
“என்ன சந்திரா, நாளைக்கு தான் ஒரு வேலையும் இல்லையே. அப்புறம் ஏன் நாளைக்கு வேலை இருக்கிறதா பட்டாபி அய்யா கிட்ட சொன்னீங்க? நாளைக்கு வந்து வேலை பார்த்தோம்னா நமக்கு நாலு காசு கிடைக்கும் இல்ல”
“அப்படி எல்லாம் சொல்றது நல்லா இருக்காது. நமக்கு வேலை இருக்கோ இல்லையோ நாம எப்போதும் ஓய்வே இல்லாம ஏதாச்சும் வேலையை பார்த்துக்கொண்டே இருக்கிற மாதிரி மத்தவங்களை நம்ப வைக்கணும். அப்படி அவங்கள நம்ப வச்சாதான் நம்ம வேலைக்கு ஒரு மதிப்பு மரியாதை கிடைக்கும். கூலியும் கொஞ்சம் கூட வாங்கிக்கலாம். என்ன நான் சொல்றது”
“என்னமோ போங்க. தானா வர்ற சீதேவிய தடியால அடிச்சு விரட்டுற மாதிரி தான் இருக்கு, இப்ப நீங்க செய்யறது.”
இப்படிச் பேசிக்கொண்டே அவர்கள் குளித்து முடித்தபின் சிறிது தூரம் நடந்து சென்று பேருந்தில் பயணித்து தங்கள் ஊர்களுக்கு சென்றார்கள்.
மறுநாள் காலை, நாதமங்கலத்தின் தெருக்களில் இளம் வெயில் படரத் தொடங்கியிருந்தது. முந்தைய நாள் வேலை செய்த களைப்பு நீங்காத போதும், எஞ்சியிருந்த சிறு தொகையை வசூலிக்கும் ஆவலில் அவர்கள் அந்த ஊருக்குள் நுழைந்தனர். வசூல்வேலையை வசீகரமாய் விரைந்து முடித்துவிட்டுத் திரும்புகையில், கால்கள் தன்னிச்சையாகப் பட்டாபிராமனின் வயல் பக்கம் திரும்பின.
அங்கே, பிரம்மாண்டமான வேப்பமரத்தின் நிழல் தரையில் கோலமிட்டிருக்க, அருகிலிருந்த ஒரு சிறு இசை பெட்டியிலிருந்து இளையராஜாவின் திரை இசை காற்றோடு கலந்து, நாதமங்கலத்தின் மேற்குப் பகுதியை நாத வெள்ளத்தில் நனைத்துக் கொண்டிருந்தது. அந்த இசையின் லயத்தில் மயங்கி, அங்கிருந்த வேப்பமரத்தடியில் அவர்கள் சற்று இளைப்பாறினர்.
அப்போது தற்செயலாகத் திரும்பிய சிவச்சந்திரனின் கண்கள் நிலை குத்தி நின்றன.
தனது வயலின் வரப்போரத்தில் பட்டாபிராமன் குனிந்து வேலை செய்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம் மாரிக்காலத்து மேகம் பொழிந்த மிதமான மழையில் மண் இளகியிருந்தது. பிடுங்க கடினமாக இருக்கும் முரட்டுப் புற்கள் கூட, அந்த ஈரப்பதம் தந்த இதத்தில் பட்டாபிராமனின் கைகளுக்கு எளிதில் வசப்பட்டு வெளியே வந்து விழுந்தன. எவ்வித ஆரவாரமும் இன்றி, ஒரு தவத்தைப் போல அவர் வேலையைத் தொடர்ந்தார்.
வேலி ஓரத்து வரப்புகளில் இருந்த செடி கொடிகளை கைகளினால் பிடுங்கி சுத்தம் செய்யும் வேலையில் தானாக, தனியாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் திரையிசை காற்றில் மெல்ல மிதந்து கொண்டிருந்தது.
நேற்று தாங்கள் “கடினமான வேலை” என்று சொல்லி பேரம் பேசிய அதே வரப்புகள், இன்று பட்டாபிராமனின் கைகளில் விளையாட்டுப் பொம்மைகளைப் போலவும் ஒரு சிநேகிதனைப் போலவும் சிறைப்பட்டு கிடந்தன.
அப்போது பட்டாபிராமன் நான்கு பக்க வரப்பு ஓரங்களில் இரண்டு பக்கங்களை அவர் ஏற்கனவே முடித்திருந்தார். மீதமிருக்கும் வேலையும் இன்னும் சில நாழிகைகளில் அவர் வசமாகப் போவதை அவரது சுறுசுறுப்பு பறைசாற்றியது.
தொழிலாளர்களை நம்பி நிலம் இல்லை, நிலத்தை நேசிக்கும் கரங்களை நம்பியே பயிர் இருக்கிறது என்பதை அந்த மௌனமான உழைப்பு அவர்களுக்கு உணர்த்தியது.
வேலையை ‘மதிப்பு’ மிக்கதாகக் காட்ட சிவச்சந்திரன் கையாண்ட தந்திரங்கள், பட்டாபிராமனின் எளிமையான உழைப்பிற்கு முன்னால் அர்த்தமிழந்து போய் அனாதையாய் கிடந்து தவித்தன. .
சிவச்சந்திரன் திகைப்புடன் அவரைப் பார்த்துக் கொண்டிருக்க, மற்ற மூவரோ உலகத்தைப் பற்றிய கவலை ஏதுமின்றித் துண்டை விரித்து, வேப்பமர நிழலின் தாலாட்டில் உற்சாகமாய் உறங்கிப் போனார்கள்.
அவர்களுக்கு அருகில் கேட்டுக் கொண்டிருந்த ஆனந்த இசை மெல்ல மெல்ல இன்னும் மென்மையாகத் தேய்ந்து கொண்டிருந்தது.
ஆட்கள் அருகில் தான் இருந்தார்கள், ஆனால் உழைப்பிற்கும் அவர்களுக்குமான தூரம் அந்த வயல்வெளியை விடப் பெரிதாகவும் பிரம்மாண்டமாகவும் அவர்களின் கனவுகளில் காட்சி தந்து கொண்டிருந்தது.
![]() |
எழுத்தாளர் பற்றிய குறிப்புகள்: பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்: 1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள் (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க... |
