கங்காதரனின் மகிழ்ச்சி தருணம்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 28, 2025
பார்வையிட்டோர்: 137

மிகப் பெரிய தனியார் பள்ளிக்கூடம் அது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக கங்காதரன் பணி புரிந்த இடம் அது. அவர் சுற்றிச் சுற்றி வலம் வந்த பள்ளி வளாகம். ஆம். கங்காதரன், அந்தப் பள்ளிக்கூடத்தின் தலைமை உதவியாளர். சனிக் கிழமை. பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் முடிந்து மாணவமணிகள் வீட்டுக்குச் சென்ற பின்னர், கங்காதரன் தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றார். ஏதோ பதிவேடுகளைப் பார்த்துக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர் குலாம் மசீஹ் தலை நிமிர்ந்தார்.
“என்ன கங்கா … வீட்டுக்குப் போகலையா ? “
“சார் ஒங்க கிட்ட கொஞ்சம் பேசணும் “
“சொல்லுப்பா …”
“ … சார் எனக்கு வயசாயிடுச்சு எத்தனை வருசம் வேலை செஞ்சுகிட்டே இருப்பேன் .. என்னை வேலைலேந்து விட்டுறீங்களா .. அம்பது வருசமா இந்த பள்ளிக்கூடத்துல வேலை செஞ்சுட்டேன் … “
“நீங்க தானே ஹெட் ப்யூன்… போதும்ன்னு தோணிடுச்சா ? … வீட்ல இருந்து என்ன செய்யறதா உத்தேசம் ? மனைவி தான் அவசரப்பட்டு மேல போய்ட்டாங்க இல்ல “
“ஹரித்துவார் போயிடலாம்னு இருக்கேன் .. “
“அப்ப சரி … நான் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதறேன் . பார்ப்போம் .. “
“வரேங்க ஐயா ” கங்காதரன் தலைமை ஆசிரியரை வணங்கி விட்டு அங்கிருந்து சென்றார்.
இரண்டு நாட்கள் கழித்து மதிய நேரத்து மணியை அடித்து விட்டுப் போய்க் கொண்டிருந்த கங்காதரனை பள்ளி அலுவலக எழுத்தர் கிருபாசாகர் அவரை அழைத்தார்.
“உனக்கு ஒரு சந்தோசமான செய்திப்பா “
“அதான் தெரியுமே கிருபா சார் … எச்எம் எனக்கு மேலிடத்துல பேசி எனக்கு பென்சன் தொகை வர ஏற்பாடு பண்ணி இருக்காரு … இன்னும் ஒரு வாரத்துல என்னை விட்டுடப் போறாங்க …. “
“ அது பழைய நியுஸ் … உனக்கு பேர்வெல் நிகழ்ச்சி நடத்தப் போறாங்க …”
“அப்படின்னா என்ன கிருபா சார் ? “
“அது என்ன சொல்வாங்க …பிரிவுபசார நிகழ்ச்சி பிரியா விடை கொடுத்தனுப்பற நிகழ்ச்சி .. “
“நான் இத்தனை வருசமா இங்க வேலை செய்யறேன் … யாருக்குமே இப்படி நடத்தினது இல்லையே … “
“அதைப் பத்தி உனக்கு என்ன ? உனக்கு நடத்தறாங்க உனக்குப் பிடிச்சதை வாங்கி கொடுக்க சொல்லி இருக்காரு எச்எம் … ஒரு ராமாயண புத்தகம் , மீரா பஜன் புத்தகம்…”
“ஒரு கைக்கடிகாரம் …. “
“அப்புறம் சொல்லு … கேட்டு வாங்கிக்காம விட்டுட்னேன்னு நெனச்சகிட்டு இருக்கப் போற … “
“சார் ஒரு கிராம்போன் …. ரிகார்ட் கூடவே தருவாங்க இல்ல… “
“ஆமாம் கேட்கறதுக்கு ரிகார்ட் கூட வரும் .. சரி நான் வாங்கி வைக்கறேன். “
கிருபா சார் அங்கிருந்து சென்றார். கங்காதரனுக்கு அடுத்த நிலையில் உள்ள ராமு என்னும் உதவியாளர் கங்காதரன் அருகில் வந்தார்.
“ஏன் அண்ணே … அவங்களே போகச் சொல்லாத போது நீங்க ஏன் போறீங்க … ? “
இரண்டு துடுக்குதனமான 11 ஆம் வகுப்பு மாணவர்கள் , அவர்களுடைய உரையாடலுக்குள் புகுந்தார்கள் .
“அவரு ஹரித்துவாரு போறாரு தெரியாதா உங்களுக்கு ? கங்கா அண்ணா ஒங்க பேரு கங்கா கங்கா கிட்டேயே போறீங்க நாங்க ஹரித்துவார் வந்தா ஒங்க வீட்டுக்கு வரலாமா ? “
“நீயும் வா பாபுவும் வரட்டும் ராமுவும் வரட்டும் எல்லாரும் வாங்க … “
“ஒங்க வீடு புறாக் கூண்டு மாதிரி இருக்கும் இதுல எல்லாரையும் கூப்பிடறீங்க .. “
“வீடு சின்னதுப்பா மனசு பெரிசு ” என்றார் கங்காதரன். அனைவரும் புன்னகை பூத்தனர்.
பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற இருந்த நாள். அன்று காலையில் பள்ளியில் பார்க்க வேண்டிய தன்னுடைய பணிகளை முடித்து விட்டு , பள்ளியில் உள்ள தன்னுடைய அறையில் தாம் ஒப்படைக்க வேண்டிய பொருட்களை எல்லாம் கங்காதரன் ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார். பள்ளியில் தூய்மைப் பணியைப் பார்க்கும் பெண்மணி ராணி அங்கு வந்து நின்றார்.
“எல்லாம் ஒழுங்குப்படுத்தறயா ஒப்படைக்கறதுக்கு …ம்ஹூம் இத்தனை நாள் இங்க இருந்த …. நாளையிலிருந்து இந்த இடத்துக்கு அந்நியன் ஆயிடுவ இல்ல … “
“ என்ன சொல்றே நீ ராணி “
“ஆமாம் நீ நாளையிலிருந்து இந்த இடத்துக்கு வேத்து மனுசன் தானே ? “
என்று சொல்லிவிட்டு அந்தப் பெண்மணி அங்கிருந்து நகர்ந்து விட்டார். அவர் பேசி விட்டுச் சென்ற வார்த்தைகள் அவருடைய செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவர் அறையைப் பூட்டிக் கொண்டு வேகமாக தலைமை ஆசிரியரின் அறையை நோக்கிச் சென்றார்.
தலைமை ஆசிரியரின் அறைக்கு வெளியே ஒரு ஓரத்தில் ஸ்டூலில் கங்காதரன் அமர்ந்து கொண்டிருந்தார். ராமு அவர் அருகில் வந்தார்.
“உன்னை எங்கே எல்லாம் தேடறது ? பங்சனுக்கு வா எல்லாரும் காத்துகிட்டு இருக்காங்க … “
“இல்ல பங்சன் வேண்டாம்பா .. நான் வேலைய விடல இங்கேயே இருக்கப் போறேன் … “
“இது என்ன … ஹரித்துவார் திட்டம் எல்லாம் ஆச்சு ? புண்ணியம் தேட வேணாமா ? சாதுக்களை தரிசனம் பண்ண வேணாமா ? “
“இவ்வளவு அன்பு காட்டறீங்க கருமமே கண்ன்னு இருக்கீங்க உங்கள விட எல்லாம் சாது வேற யாரு ? பள்ளிக்கூடத்தை விட வேற புண்ணியத்தலம் எது ? “
“எல்லாம் சரிதான் … எச்எம் சார் ஒத்துகிட்டாரா ? “
“அவர்கிட்ட கெஞ்சி கேட்டுகிட்டேன் என் உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் இங்கேயே இருக்கேன் ன்னு … அவர் ஒத்துகிட்டாரு… ஆனா உனக்குத்தான் கஷ்டத்தை உண்டு பண்ணிட்டேன் … என் ஹெட் ப்யூன் பதவிக்கு நீ வந்திருக்கணும் நான் முட்டுக்கட்டை ஆயிட்டேன் இல்ல ..”
“நான் உன் கூட இத்தனை நாள் வேலை செஞ்சும் நீ என்னைப் பத்தி புரிஞ்சுகிட்டது இவ்வளவுதானா ? .. “
கங்காதரன் ராமுவின் தோள்களை வாஞ்சையுடன் வருடினார்.
கங்காதரன் என்று தலைமை ஆசிரியர் உரத்த குரலில் அழைத்தார். கங்காதரன் அவரது அறைக்குச் சென்று அவர் எதிரில் நின்றார். ராமுவும் உடன் வந்து நின்றார்.
“கங்கா , உன்னை வேலைய விட்டு அனுப்பல இந்த நிகழ்ச்சி பிரிவு உபசார நிகழ்ச்சி இல்ல .. நீ நம்ம பள்ளிக்கூடத்துல ஐம்பது வருஷமா ஈடுபாட்டோட வேலை செஞ்சதுக்காக பாராட்டு விழா … வாங்க ரெண்டு பேரும் . நிகழ்ச்சி நடக்கிற ஹாலுக்குப் போவோம். “
தலைமை ஆசிரியர் குலாம் மசீஹ் எழுந்து நின்றார். கங்காதரனின் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. அவருக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது.
(முதுபெரும் இந்தி எழுத்தாளர் ஶ்ரீசுதர்சன் அவர்களின் (1896- 1967) ‘கங்காசிங்’ என்ற கிளாசிக் இந்தி சிறுகதையின் சுருக்கமான தமிழ் வடிவம் இந்தச் சிறுகதை. இவர் முதுபெரும் இந்தி யதார்த்த எழுத்தாளர் பிரேம்சந்த் அவர்களின் சம காலத்தவர்.)
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
