நம்பிக்கையே வாழ்க்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 26, 2025
பார்வையிட்டோர்: 938 
 
 

காமராஜ் தள்ளுவண்டியில் காய்கறிகளை வைத்து தெருத்தெருவாகச் சென்று காய் வாங்கலியோ காய் என்று கூவி, காய்கறிகளை விற்றுக் கொண்டிருந்தான். அவனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்தன. வருமானத்தில் வந்த லாபத்தை வைத்து பிள்ளைகைளை நன்றாகப் படிக்க வைத்து நல்ல இடத்தில் திருமணமும் செய்து வைத்தான். வாழ்வதற்கு ஒரு குடிசை வீடும் கட்டி முடித்தான்.

கொரோனா காலத்தில் வியாபாரம் நொடிந்து போனது. மற்றவர்களைப் போலவே குடும்பத்தை நடத்திட முடியாமல் அதிக இன்னல்களுக்கு ஆளானான். அதுவரை அவன் மட்டுமே அந்த ஊரில் காய்கறி வியாபாரம் செய்து வந்த நிலையில் தற்போது ஆளுக்கு ஆள் தள்ளுவண்டி வியாபாரத்தை ஆரம்பித்ததால் இவனது வியாபாரம் அடிபட ஆரம்பித்தது. இருந்தபோதிலும் மனம் தளராமல் நம்பிக்கையோடு அமைதியாக வருவதைக் கொண்டு மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தி வியாபாரம் செய்து வந்தான்.

அவனது போறாத காலம் அந்த ஊரில் ஒரு பெரிய மால் கட்ட ஆரம்பித்தனர். உள்ளே வந்தால் தேவையான சிறியது முதல் பெரியது வரை எல்லாப் பொருளையும் ஒரே இடத்தில் வாங்கிச் செல்லலாம் என்ற நிலைக்கு அந்த மால் இயங்க ஆரம்பித்தது.

கவர்ச்சிகரமான ஆடம்பர விளம்பரங்கள் தள்ளுபடி சலுகைகள், சுலபத் தவணை முறை, சிறுசேமிப்பு முறை, ஒன்று வாங்கினால் ஒன்று குட்டி போடும் நிலை இப்படி வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இதனால் காமராஜின் வியாபாரம் மேலும் குறைந்தது.

ஒருமுறை கோவிலுக்குச் சென்றுவிட்டு வியாபாரத்திற்குப் போகாமலேயே நொடிந்து போய் சோகமாக வீட்டிலேயே அமர்ந்து விட்டான். காலை சிற்றுண்டி எடுத்து வந்து கொடுத்த குயிலிக்கு அவனது நிலை புரியவில்லை. ஏன் என்ன ஆச்சு ஏன் இப்படி சோகமாக உட்கார்ந்து இருக்கின்றீர்கள் என்று கரிசணையோடு கேட்டாள். அதற்கு காமராஜ் புதிய மால் திறந்துள்ள விவரத்தைச் சொல்லி அது வந்த பிறகு நமது வியாபாரம் குறைந்து விட்டது. கடையை நடத்துவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன் என்று கூறி வருத்தப்பட்டான்.

அட அத விடுங்க. அதற்காகவா இப்படி வருத்தப்படுவது. நீங்க நடையை நடத்துங்க. உங்க வாடிக்கையாளர்கள் உங்களது நேர்மை உண்மை குணத்திற்காக கண்டிப்பாக உங்களைத் தேடித்தான் வருவார்கள். இதுவரை ஆண்டவன் செய்த நன்மைகளுக்கு நன்றி கூறி அவன் மேல் பாரத்தைப் போட்டு கடையை நடத்துங்க. இப்போது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டோம். ஓரளவு நமது கடைமை முடிந்து விட்டது. இனிமேல் நாம் வாழ்வதற்கான வாழ்வாதாரத்திற்காக வருமானம் வந்தால் போதும் என்று தைரியப்படுத்தினாள்.

காமராஜனும் மூட்டையிலிருந்த காய்கறிகளை வண்டியில் கொட்டிக் கொண்டு தள்ளு வண்டியை நகர்த்த ஆரம்பித்தான். அப்போது அவனது வீடு தேடி ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்த இறங்கி வந்த ஆள் அவனைப் பார்த்து நீதான் காமராஜா நான் பக்கத்திலிருக்கின்ற மாலில் இருந்து வருகின்றேன். என் முதலாளி உன்னை கையோடு அழைத்து வரச்சொன்னார் என்று கூறினான்.

அதைக் கேட்ட காமராஜ் என்ன ஆச்சோ ஏதாச்சோ நாம் ஒரு தப்பும் செய்யவில்லையே என்று புலம்ப அரம்பித்தான். உடனே அவனது மனைவி ஏங்க பயப்படுறீங்க. நாம ஒரு தப்பும் பண்ணல. எல்லாம் நல்லதுக்காகத்தான் இருக்கும். கடவுள் நம்மைக் கைவிட மாட்டார். போய் வாங்க என்று தைரிய மூட்டினாள். அவன் தயங்கி நிற்பதைப் பார்த்து சரி வாங்க நானும் வறேன் என்னதான் ஆகுதுன்னு பார்ப்போம் என்று அவளும் அந்த காரில் ஏறி அந்த கடை கட்டிடத்திற்குச் சென்றாள்.

அந்தக் கடையைப் பார்த்து இருவரும் ஆச்சரியப்பட்டனர். கடை முதலாளி இருவரையும் அன்பாக வரவேற்று அமரச் செய்து குடிக்கத் தேநீர் வழங்கினார். தான் திறந்துள்ள மாலுக்கு காய்கறி வாங்கிவர மற்றும் வியாபாரம் செய்ய நம்பகமான ஒரு ஆளைத் தேடிக் கொண்டிருந்தேன். ஒருநாள் தெருவில் உன்னைப் பார்த்தேன். உனது வியாபார நுணுக்கங்கள், வருகின்ற வாடிக்கையாளரைத் திருப்பிப்படுத்தும் அன்பான அணுகுமுறை ஆகிய அனைத்தும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால் உன்னை எனது மாலில் வேலைக்குச் சேர்த்துக் கொள்ள ஆசைப்பட்டதால்தான் உன்னை அழைத்து வரச் சொன்னேன் என்றார்.

இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இதுநாள் வரை நாம் பட்ட கஷ்டத்திற்கு ஆண்டவன் கண்ண தொறந்துட்டாரு. விடிவு காலம் பொறக்கச் செய்துட்டாரு. சரின்னு சொல்லுங்க என்று காமராஜைப் பார்த்து அவள் சொல்ல, சரிங்க என்று காமராஜ் முதலாளியைப் பார்த்;துச் சொல்ல மகிழ்ச்சி அனைவர் முகத்திலும் தாண்டவமாடியது.

நம் அன்றாட வாழ்க்கையில் நாமும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நமது வாழ்க்கையில் நடந்தவற்றை ஓரம் தள்ளிவிட்டு, நாளை என்ன நடக்கும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், இனி நடக்கப் போவதை நினைத்து நாமும் வாழப் பழக வேண்டும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்ற கீதாச்சாரம் போல நேர்;மறை நம்பிக்கையோடு வாழப் பழகுவோம். தினமும் மகிழ்வோம் பிறரையும் மகிழச் செய்வோம்.

நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *