ஆயிரம் ரூபாய்
கதையாசிரியர்: முனைவர் பூவண்ணன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 26, 2025
பார்வையிட்டோர்: 1,077
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாலை மணி ஐந்து இருக்கும்.
நகரத்திலிருந்து கிராமத்தை நோக்கிச் செல்லும் பாதையில் முத்துவும், கோபாலனும் சென்றுகொண் டிருந்தனர். இருவரும் இணைபிரியாத நண்பர்கள். ஒன்பதாம் வகுப்பில் படிப்பவர்கள். கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி இல்லாததனால், நகரத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்
அவர்கள் நகரத்தின் அருகில் நடந்துகொண் டிருந்தனர். கிராமத்திற்கு இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும்.
“முத்து, நமது ராமுவைப் பார்த்தாயா? அவன் இன்று காரிலே வந்து இறங்கினான். நாம் கூடப் பெரிய பணக்காரர்களாக இருந்தால், காரிலே வரலாம்” என்றான், கோபாலன்.
“ஆமாம், கார்கூட வேண்டாம். ஆளுக்கொரு சைக்கிள் இருந்தாலும் போதுமே!” என்றான் முத்து.
“முத்து, கதைகளில் திடீரென்று ஏழைகள் பணக்காரர்களாகிறார்கள்! எதிர்பாராத விதமாய் சிலருக்குப் புதையல் கிடைக்கிறது! நமக்கும் அப்படி ஒரு புதையல் கிடைத்தால் எவ்வளவு நல்லது!” – கோபாலன் சொன்னான்.
“நல்லதுதான்! யார் இல்லை என்று சொன்னது ஆனால் கிடைக்கவேண்டுமே!” என்று பதிலளித்தான் முத்து.
அவர்கள் நடந்து சென்ற பாதையின் இருபுறமும் அடர்ந்த புதர்களிருந்தன. முத்து ஒரு புறத்திலிருந்த புதர்களைப் பார்த்தவாறு நடந்தான் திடீரென்று, “கோபால், அதோ அது என்ன?” என்று ஒரு புதரைச் சுட்டிக் காட்டினான்.
முத்து காட்டிய இடத்தைப் பார்த்தான் கோபாலன். அவன் கண்களையே நம்ப முடியவில்லை! அந்தப் புதர் அருகில் ஒரு கட்டு நோட்டுக் கிடந்தது!
“முத்து, கரன்ஸி நோட்டுப் போலிருக்கிறதே!” என்று ஆச்சரியத்துடன் சொன்னான் கோபாலன்.
“போல என்ன? அதுவேதான்!” என்றான் முத்து. கோபாலன் பாய்ந்து சென்று அதை எடுத்துக் கொண்டான். மீண்டும் பாதைக்கு வந்தான். யாராவது பார்க்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்தான். சிறிது தூரத்தில் யாரோ ஒருவர் வந்து கொண்டிருந்தார். உடனே, நோட்டுக் கட்டை மறைத்துக்கொண்டு முத்துவின் கையைப் பிடித்து இழுத்தவாறு வேகமாய்ச் சென்றான்.
சிறிது தூரம் வந்ததும், ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதனடியில் இருவரும் உட்கார்ந்தனர். கோபாலன் பாதையைப் பார்த்தான். அங்கு எவருமே இல்லை. உடனே, மறைத்துவைத்த நோட்டுக் கட்டை எடுத்துப் பார்த்தான்.
ஒரு கட்டு நோட்டு! அவ்வளவும் புத்தம் புதிய பத்து ரூபாய் நோட்டுக்கள்! அந்தக் கட்டில் நூறு நோட்டுக்கள் இருந்தன! புதையல் கிடைக்குமா என்று பேசிக்கொண்டு வந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்திருக்கிறது!
“முத்து, உண்மையில் நாம் அதிர்ஷ்டசாலிகள்! ஆயிரம் ரூபாய் கிடைத்திருக்கிறது!”
“ஆமாம், அவ்வளவும் பத்து ரூபாய் நோட்டுக்கள்! நாம் செலவழிப்பதற்கு ஏற்றவாறு கிடைத்திருக்கிறது. நூறு ரூபாய் நோட்டாக இருந்திருந்தால் நம்மால் மாற்ற முடியாது.”
“இதை என்ன செய்யலாம்?”
“முதலில் இரண்டு சைக்கிள் வாங்கி விடலாம். மிச்சப் பணத்திற்குக் கடை வீதிக்குப் போய் வேண்டியதை வாங்கிக் கொள்ளலாம்.”
“ஆமாம். அப்புறம் நல்ல சினிமாப் பார்க்கலாம். அதுவும் இரண்டரை ரூபாய் டிக்கட்டிலே ராஜாமாதிரி உட்கார்ந்து பார்க்க வேண்டும். ”
இருவரும் ஆயிரம் ரூபாயை எப்படி எப்படியெல்லாம் செலவழிப்பது என்று திட்டம் போட்டனர். ஆனால், திடீரென்று கோபாலனுக்கு ஒரு சந்தேகம் தோன்றிவிட்டது. “இந்தக் கட்டு புதிதாக இருக்கிறதே! இதை இழந்தவர், நோட்டின் எண்களைக் குறித்து வைத்திருந்தால்..?” என்றான்.
“அதெல்லாம் நூறு ரூபாய் நோட்டுக்குத்தான் செய்வார்கள்” என்றான் முத்து.
“எதற்கும் இரண்டு நாட்கள் பொறுத்துச் செலவழிப்போமே” என்று யோசனை சொன்னான், கோபாலன்.
அன்று வெள்ளிக்கிழமை. சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் பள்ளியில்லை. அதனால் பணத்தைத் திங்கட்கிழமை செலவழிக்க முடிவு செய்தனர்.
அதுவரை பணத்தை யார் வைத்திருப்பது? “என்னிடம் வேண்டாம். என் அண்ணன் என்னுடைய பை, மேஜை அறை, பெட்டி எல்லாவற்றையும் அடிக்கடி ஆராய்ந்து பார்ப்பார். அவரிடம் இந்த ஆயிரம் ரூபாய் சிக்கிக் கொள்ளும்” என்றான் கோபாலன்.
“என் வீட்டில் மட்டுமென்ன! யாரும் என் பையைப் பார்க்கமாட்டார்களா? அப்படிப் பார்த்து எடுத்துவிட்டால் நான் உன்னிடம் என்ன பதில் சொல்வது? என் அப்பாவுக்குத் தெரிந்தால் ஆபத்து!” என்றான் முத்து.
பணத்தை த எங்கே பாதுகாத்து வைப்பது? இருவரும் பலமாக யோசித்தனர்.
“முத்து, நான் ஒன்று சொல்கிறேன்; கேட்கிறாயா?” என்றான் கோபாலன்.
“என்ன? சீக்கிரம் சொல்”
“அதோ, அங்கே ஒரு பாழடைந்த கிணறு இருக்கிறதல்லவா?”
“ஆமாம், அதற்கென்ன?”
“அதில் கொஞ்சம் கூடத் தண்ணீர் கிடையாது. அடியில் வெறும் கற்களாகவே இருக்கின்றன. சுலபமாக நான் இறங்கிவிடுவேன். அங்கே ஒரு பெரிய கல்லுக்கு அடியிலே நம் பணத்தை மறைத்து வைப்போம். திங்கட்கிழமை காலை எடுத்துக் கொள்ளலாம்.”
“நல்ல யோசனை கோபால். உம் புறப்படு.”
உடனே இருவரும் புறப்பட்டனர். அங்கிருந்து ஒரு பர்லாங் தூரத்தில் ஒற்றையடிப் பாதைக்கு அருகில் இருந்த பாழுங் கிணற்றை அடைந்தனர்.
கோபாலன் கிணற்றில் இறங்கினான். இறங்கியதும் மேலே நின்றுகொண்டிருந்த முத்து, நோட்டுக் கட்டைக் கீழே போட்டான். கோபாலன் அதை அப்படியே இரு கையாலும் பிடித்துக்கொண்டான். பிறகு, கிணற்றிலிருந்த ஒரு பெரிய கல்லின் அடியில் மறைத்து வைத்தான். அடையாளம் தெரிவதற்காக அந்தக் கல்லின்மேல் தன் பேனாவிலிருந்த மையைக் கொட்டி வைத்தான். பிறகு, மேலே வந்துவிட்டான்.
திங்கட்கிழமை காலை பள்ளிக்கூடம் போகும் போது, அங்கு வந்து பணத்தை எடுத்துக்கொள்வது என்று இருவரும் முடிவு செய்தனர். அதன் பின் இருவரும் மகிழ்ச்சியுடன் வீட்டைநோக்கி நடந்தனர்.
அடுத்த இரண்டு நாட்களிலும் முத்துவும், கோபாலனும் சதா ஆயிரம் ரூபாயைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். ‘சைக்கிள் வாங்கலாமா? நாம் போனால் சைக்கிள் தருவார்களா? வீட்டில் சைக்கிள் ஏது என்று கேட்டால் என்ன சொல்வது ? ஆயிரம் ரூபாயில் கொஞ்சம் ஏழைகளுக்குக் கொடுக்கலாமா?’ – இப்படிப் பலப்பல யோசனைகள்.
கடைசியாக அவர்கள், எதிர்பார்த்த திங்கட் கிழமை வந்தது. பத்து மணிக்குத்தான் பள்ளிக்கூடம். ஆனால், அன்று இருவரும் ஆறு மணிக்கெல்லாம் பள்ளிக்குச் செல்லத் தயாராக இருந்தனர். அவர்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘ஏன் என்றுமில்லாமல் இவ்வளவு அவசரப்படுகின்றனர்?’ என்று எண்ணினர். அவர்களுக்குத் தெரியுமா ஆயிரம் ரூபாய் கிணற்றுக்கு உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிற விஷயம்!
காலை எட்டு மணிக்கெல்லாம் புத்தகங்களை எடுத்துக் கொண்டு, அப்பாவிடம் போனான் முத்து. “அப்பா, நான் பள்ளிக்குப் போகிறேன்” என்றான்.
“இதற்குள் என்னடா அவசரம்? மணி எட்டுத் தானே! இன்றைக்கு நான்கூட நகரத்துக்கு வரப் போகிறேன். வண்டி கட்டச் சொல்லியிருக்கிறேன். இருவரும் வண்டியில் போகலாம்” என்றார் அப்பா.
“அப்பா, கோபாலன் என்னைவிட்டுத் தனியாகப் போகமாட்டானே! நான் அவனுடன் போகிறேன்” என்றான் முத்து.
உடனே அப்பா, “சரி, கோபாலனும் வண்டியில் வரட்டுமே! நம் வண்டி நகரத்துக்குப் போகும்போது நீங்கள் நடந்தா போவது? தினமும் தான் நடக்கிறீர்களே! இன்றாவது வண்டியில் போகலாம்” என்றார் அப்பா.
அப்பாவை மேலும் வற்புறுத்த முடியாது என்பதை அறிந்தான் முத்து. உடனே கோபாலனிடம் சென்று செய்தியைக் கூறினான். “என்ன செய்வது? உன் அப்பாவுடன் வண்டியில் போக வேண்டியது தான்” என்று கோபாலனும் சம்மதித்தான்.
அன்று மாட்டுவண்டியில் கோபாலனும், முத்துவும் சென்றனர். வண்டி ஆலமரத்தை அடைந்ததும், இருவரும் ஒருவரைப்பார்த்து ஒருவர் அர்த்தத்துடன் சிரித்தனர். இவ்வளவுக்கும் வண்டியிலிருந்து பார்த்தால், பாழுங் கிணறு தெரியவே தெரியாது!
அன்று மாலை! –
பள்ளி முடிந்ததும், முத்துவும் கோபாலனும் நேராகப் பாழுங் கிணற்றை நோக்கி நடந்தனர். அந்த இடத்திற்கு அவர்கள் வந்துவிட்டனர். ஆனால், அங்கே…?
பாழுங் கிணற்றையே காணவில்லை! இருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை! “கிணறு எங்கே போயிற்று? இதென்ன கனவா; நினைவா!” என்று குழம்பினர்.
“முத்து, நாம் ஏமாந்துவிட்டோம். ஆயிரம் ரூபாயை அநியாயமாக இழந்து விட்டோம்” என்று வாய்விட்டுக் கதறினான், கோபாலன்.
“என்ன கோபால்! என்ன நடந்தது? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே!” என்று கேட்டான் முத்து.
”முத்து, இங்கிருந்த பாழுங் கிணற்றை மூடி விட்டனர். இதோ பார், வட்டமாகப் புதியமண் தெரிகிறது” என்று காட்டினான் கோபாலன்.
இருவர் முகங்களிலும் ஏமாற்றமும், வருத்தமும் குடிகொண்டன.
காலையில் மலர்ந்த தாமரைகளைப்போல் மகிழ்ச்சியுடன் சென்றனர் இருவரும். ஆனால், மாலையிலோ கசங்கிய மலர்களைப் போல வாடிய முகத்துடன் வீடு திரும்பினர்.
இரவு மணி ஏழு இருக்கும்!
தினமும் முத்துவின் வீட்டுக்குப் பத்திரிகை வருவது வழக்கம். முத்து அன்றையப் பத்திரிகையை எடுத்துக் கொண்டு கோபாலனிடம் ஓடினான்.
“கோபால், நாம் ஆயிரம் ரூபாய் போனதற்காக வருத்தப்படவே தேவையில்லை. மகிழ்ச்சியடைய வேண்டும்!” என்றான்.
கோபாலன் பத்திரிகையை வாங்கி, முத்து காட்டிய இடத்தில் பார்த்தான்.
“பாழுங்கிணறு மூடப்பட்டது” என்ற தலைப்பில் பொதுமக்களின் வேண்டுகோளின்படி நகரத்துக்கு அருகே, ஒற்றையடிப் பாதையில் அபாயகரமான இடத்தில் இருந்த பாழுங் கிணற்றை முனிஸிபாலிடியார் மூடிவிட்டதாகச் செய்தி வெளியாகியிருந்தது.
அதன் கீழிருந்த மற்றொரு செய்தியைப் படித்ததும் கோபாலன் திடுக்கிட்டான். திரும்பவும் ஒருமுறை அதைப் படித்தான்:
‘நகரில் கள்ள நோட்டு
ஆகஸ்டு, 20
நேற்று பிற்பகல் கள்ள நோட்டு அச்சடிக்கும் கந்தசாமி பிடிபட்டான். ஆனால், பிடிபட்டபோது அவனிடம் நோட்டுக்கள் இல்லை. போலீஸார் மிரட்டிக் கேட்ட பிறகுதான், கிராமத்திற்குச் செல்லும் பாதையின் ஓரத்திலுள்ள புதரில் போட்டதாகக் கூறினான். அவன் கூறிய இடத்தில் நோட்டுக்களிருந்தன. தற்போது கந்தசாமி காவலில் வைக்கப்பட்டிருக்கிறான். வழக்கு விசாரணை விரைவில் நடக்கும்.’
இதைப் படித்ததும் கோபாலன் முத்துவைப் பார்த்தான். கோபால், “அவசரத்திலே அவன் புதரில் நோட்டுக் கட்டுகளைப் போட்டிருக்கிறான். அப்போது ஒன்று தவறி வெளியில் விழுந்துவிட்டிருக்கிறது. அதுதான் நம் கையில் சிக்கியது! நல்ல வேளை, அது பாழுங்கிணற்றில் அகப்பட்டுக்கொண்டது! இல்லை யென்றால் அதை மாற்றப் போய் நாமும் மாட்டிக் கொண்டிருப்போம்” என்றான் முத்து.
“ஆமாம், முத்து! நல்ல வேளை; தப்பித்தோம்!” என்று மகிழ்ச்சியுடன் கூறினான் கோபாலன்.
கண்டெடுத்த ஆயிரம் ரூபாய் கை நழுவிப் போய் விட்டதே என்று முதலில் வருத்தப்பட்டவர்கள், முடிவில் அதற்காக சந்தோஷப்பட்டனர்.
– அன்புத் தாத்தா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1957, பாரி நிலையம், சென்னை.
![]() |
பூவண்ணன் (வேள்ள தாமோதர கோபாலகிருஷ்ணன்; பிறப்பு: 5 செப்டம்பர் 1932 - இறப்பு: ஜனவரி 11, 2013) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். சிறார்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தமிழ் இலக்கியம், சிறார் இலக்கியம் குறித்து ஆராய்ந்து வரலாற்று நூல்களைப் படைத்தார். தனது இலக்கியப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றார். பூவண்ணன் - Tamil Wiki நேர்காணல்: டாக்டர் பூவண்ணன் (2005) http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1072 பூவண்ணன்,…மேலும் படிக்க... |
