காதலில்லா காதல்…!
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: December 26, 2025
பார்வையிட்டோர்: 10,781
(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11

சுகாசினி நிறுத்திப் பார்த்த அந்த காட்சி தொலைக்காட்சியில் நின்றது போலவே சங்கர் மனதிலும் அப்படியே நின்றது.
‘ஆளை கைபேசியில் தொடர்பு கொள்ளலாமா, இல்லை… நேரடியாய் சென்று விசாரிக்கலாமா?’ யோசனை ஓடியது.
கைபேசி, தொலைபேசியில் தொடர்பு என்பது ஆள் அருகில் இருந்துகொண்டே தொலைவில் இருப்பதாகப் பொய் சொல்லலாம். போலீஸ் என்றால் தப்பிருந்தால் ஆள் தலைமறைவாகலாம். ஆள் இருக்கிறானோ இல்லையோ நேரடியாய்ச் சென்று ஆளைப் பிடிப்பதுதான் சரி.
காவல் நிலையம் வந்து இன்ஸ்பெக்டர் இளையராஜாவிடம் சொல்லி அனுமதி பெற்றுக்கொண்டு பேருந்து ஏறினான்.
சுகாசினி எதற்காக அந்தக் காட்சியை மட்டும் நிறுத்திப் பார்த்தாள்?!
நல்ல நண்பன், தோழன், சகோதரனை இழந்த சகோதரனை இழந்த துக்கம், தாக்கமா இல்லை….பெற்றத் தாயுடன் கையும் மெய்யுமாய்க் கண்ட காட்சியின் கொதிப்பா? ராசாத்தியின் மிரண்ட முகத்திற்கும் இதுதான் காரணமா? அப்பாவிடம் சொல்லி அவனைக் கண்டித்து வேலையை விட்டுத் தூக்கி முகத்தில் விழிக்காதே ஓடு துரத்த… அப்படியா சேதி, உன்னைப் பழி வாங்குறேன்டி சாத்தையன் பாய்ச்சலா? எப்படி இந்தக் கொலை, விபத்து, முடிச்சு?
சாத்தையனின் விபரத்தைச் சம்பந்தப்பட்டவர்கள் கொடுக்கிறார்கள் என்றால்…. ஆள் இருக்கிறானா இல்லையா? துரோகி ஒழி! என்று அவனும் கொலை செய்யப்பட்டு மறைக்கப்பட்டானா?! சங்கரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. தூக்கம் வராமல் புரண்டு..தூங்கினான்.
பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர். முதுகுளத்தூரிலிருந்து வண்டான்குளம் 3 கி.மீ. செம்மண் பாதை. வானம் பார்த்த பூமி. நடந்துதான் செல்ல வேண்டியிருந்தது.
சரியான குக்கிராமம். ஐம்பது வீடுகளுக்கு மேல் இல்லை. ஐந்தாறு ரயில் ஓட்டு வீடுகளைத் தவிர மற்ற எல்லா வீடுகளும் கூரை வீடுகள். எல்லா வீடுகளிலும்
ஆடுகளை அடைக்க ஆட்டுப்பட்டிகள், மாட்டுக் கொட்டகைகள். கும்பல் கும்பலாக செம்மறி, வெள்ளாடு, கொடி ஆடுகள்.
கிருட்டிணன் – சரஸ்வதி வீட்டைக் கேட்டதுமே.. கிராமத்தின் கடைசி வீடு. வழி போக்கர்கள் சொன்னார்கள்.
இடையில் மூன்று பேர்களாக வந்த ஒருவரில், “நீங்க போலீசா?” விசாரித்தார்.
“ஆமாம். ஏன்?”
“ராமையன் மறுபடியும் தப்பு செய்துட்டானா?”
“ராமையன்னா?!”
“அதான் கிருட்டிணன் தலைப்புள்ளை. எங்கேயோ திருடிட்டான்னு ரெண்டு வருச தண்டனைக்குப் பிறகு இப்போதான் செயிலேர்ந்து திரும்பினான். ஆளை ரெண்டு நாளாய்க் காணலை. மறுபடியும் திருட்டு. நல்ல நேர்மையான மனுசன். அவருக்குப் போய் இப்படி ஒரு திருட்டுப் புள்ள.” அவர் நொந்துக் கொண்டு நடந்தார்.
கடைசி வீடு. திண்ணை வைத்த கூரை வீடு. வாசலில் வெக்கையைத் தணிக்க தென்னங்கீற்றுப் பந்தல். கீழே கயிற்றுக் கட்டில். அதன் எதிரில் பெஞ்சு. இவைகளில் உட்கார்ந்தால் உள் வீடு தெரியும் தாழந்த கூரை. வாசலில் நிற்கும் ஆளைக் கவனிக்காமல் உள்ளே பெண், பிள்ளைகள் பேச்சுக் குரல்.
“சார்!” அழைக்க சங்கர் வாயெடுத்தான்.
பின்னால் ஆறடி உயரத்தில் பருமனான ஆள். இடுப்பில் வேட்டி. அதன் மேல் பச்சை வண்ண பெல்ட். தலையில் முண்டாசு. கையில் தடி. மேலே கை வைத்த மல் துணி பனியன். காடு மேடுகளில் திரிய காலில் முரட்டு டயர் செருப்பு. ஹிட்லர் மீசை. ஆனால் சாந்தமான, நேர்மையான முகம்.
“யாருங்க?”
“சார்… கிருட்டிணன்..?”
“நான்தான்! உட்காருங்க.”
அவர் கயிற்றுக் கட்டிலில் அமர இவன் பெஞ்சில் அமர்ந்தான்.
“ஐயா மோர் சாப்பிடுறீயளா? சரசு! மோர் ஊத்தி வாம்மா.”
“வேணாம் சார்.”
“வெய்யல்ல வந்திருக்கீக. சாப்பிடுங்க.”
அள்ளிச் சொருகிய கொண்டை புடவையில் அந்த கிராமத்து பெண் நன்றாக பளிச்சென்று துலக்கிய பித்தளை சொம்பில் மோர் கொண்டு வந்தாள். இரண்டு டம்ளர்களில் கொடுத்தாள்.
“வெள்ளாட்டுப் பால் குடிங்க. நல்லா இருக்கும்.” குடித்தார். குடித்தான்.
அருமையாக இருந்தது.
“என்னைத் தேடி வந்தியளா?” துண்டால் கோணார் வாயைத் துடைத்தார்.
“இல்லே ஐயா… உங்க பையன் சாத்தையன்.”
“அவன்தான் சென்னைப் போனவன் திரும்பலையே…!”
‘திரும்பலையா?!’ பேசாமல் துணுக்குற்றான்.
“ஆமாம்ய்யா. பத்தாம் வகுப்புக்கு மேல படிப்பு ஏறாம தறுதலை சினிமா சினிமான்னு பார்த்து பைத்தியமாய் திரிஞ்சுது ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் கொஞ்சம் பணத்தைத் தூக்கிக்கிட்டு ஒழிஞ்சுது. அப்புறம் எப்பவோ ஒரு நாள் நான் ஒரு மொதலாளி வீட்ல வேலை செய்றேன். சவுக்கியமா இருக்கேன்னு அந்த ஓட்டு வீட்டு போன்ல ஓடிப்போன ஆறு மாசம் கழிச்சு பேசுனிச்சு. அதுக்கடுத்து பேச்சையும் காணோம். மூச்சையும் காணோம். அப்புறம் ஒரு தபா ஆயிரம் பணம் அனுப்பிச்சு. அவ்வளவுதான்.”
“அவன் போன வருசமே இங்கே ஊர் திரும்பிட்டான்.”
“அங்கே ஏதாவது பிரச்சனையா?”
“இல்லே. அம்மா அப்பாவைப் பார்க்கனும். தங்கச்சிக்குத் திருமணம் முடிக்கனும்ன்னு காசு பணம் வாங்கிட்டுத் திரும்பிட்டான்.”
“தங்கச்சிக்குத் திருமணமா? எனக்கு அஞ்சும் ஆம்பளைப் புள்ளைங்க. மூத்ததும் அடுத்ததும் தவிர மத்தது எல்லாம் ஆடு மேய்க்கிற பொழைப்பு. கொஞ்சம் பணத்தைச் சேர்த்துக்கிட்டு கழுதை அங்கதான் எங்கேயாவது சினிமா கம்பெனியா சுத்தும். பாருங்க.”
எழுந்தான்.
ஐயா… நீங்க?”
“நான் சினிமாக்காரன் அவன் நண்பன்!” விடைபெற்றுக்கொண்டு நடந்தான்.
“ஐயோவ்….!” கிருட்டிணன் குரல்.
சங்கர் திரும்பிப் பார்த்தான்
“ராமையா! ஐயாவைக் கொண்டு முகுதுகுளத்தூர்ல விட்டுடு.” வீட்டு எதிரில் சைக்கிளில் நின்றவனைத் துரத்தினார்.
என்ன அருமையான உபசரிப்பு, குணம்! இவருக்குப் போய்…! சங்கர் வந்தவன் சைக்கிளில் அமர்ந்தான்.
சாத்தையன் இங்கு வரவில்லை. ஆள் இல்லை. கிருட்டிணன் சொன்னது போல் சென்னையில் இருக்க வேண்டும். இல்லை… சங்கர் புத்தி விபரீதமாக வேலை செய்தது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கி…. கைபேசி எடுத்து சாத்தையன் எண்கள் அழுத்தினான்.
“நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் உபயோகத்தில் இல்லை. சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.”
மறுபடி மறுபடி முயற்சித்தான். எல்லாம் அதே பதில்.
ஒன்று கைபேசி தொலைய, திருடப்பட… எடுத்தவன் சிம்மைக் கழற்றி எறிந்திருக்க வேண்டும். அல்லது… ஆளை அடித்து கொலை செய்து புதைத்து சிம்மைப் பிரித்து சிம், கைபேசி இரண்டும் உபயோகத்தில்லை. இல்லை கேட்டோம் என்தபற்காக உபயோகத்தில்லாத சிம்மோ வேறு எவர் எண்ணோ கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆள் வீட்டிற்கு வரவில்லை. சென்றதாக ராசகோபாலன் ராசாத்தி சொன்னது பொய்யா இல்லை சாத்தையன்தான் இவர்களிடம் சொல்லி கிளம்பி அங்கேயே சுற்றுகின்றானா? – சங்கரைச் சுழற்றிச் சுழற்றி கேள்விகள் அடித்தது.
கைபேசி ஒலித்தது. பார்த்தான் இன்ஸ்பெக்டர் இளையராஜா.
“சொல்லுங்க சார்?”
சொன்னார்.
அவ்வளவுதான் சங்கர் சுறுசுறுப்பானான். பேருந்து ஏறி, தன் வீட்டில் விழுந்து, சீருடை மாட்டி பறந்து காவல் நிலையம் வந்து, பேசி, ராசகோபாலன் எண்கள் அழுத்தி… “சார்! விபத்து ஏற்படுத்தின லாரி, ஆள் ஸ்டேசனில் இருக்கான். நீங்களும் மேடமும் மட்டும் உடனே வாங்க சின்ன சிக்கல்.” சொல்லி போனை வைத்தான்.
பதினைந்து நிமிடத்தில் ராசகோபாலன், ராசாத்தி காவல் நிலையத்திற்குள் பரபரப்பாய் நுழைய… இளையராஜா, சங்கர் அருகருகில் உட்கார்ந்திருந்தார்கள்.
ஏட்டு எதையோ எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாய் இரண்டு கான்ஸ்டபிள்கள்.
“எங்கே சார்?” ராசகோபாலன் இவர்கள் அருகில் வந்தார்.
“உட்காருங்க….”
இருவரும் நாற்காலியில் அமர்ந்தார்கள். முகங்களில் ஆளைப் பார்க்கும் ஆவல், அவசரம், அச்சம், கலவரம்.
“சார் ஆரம்பிக்கலாமா?” சங்கர் இளையராஜாவிடம் அனுமதி கேட்டான்.
அவர் தலையசைத்தார்.
சங்கர் நாற்காலி நுனிக்கு வந்து…. “சார்! மேடம்! நீங்க ரெண்டு பேரும் நடந்ததைச் சரியாய்ச் சொன்னீங்கன்னா… ஆளைப் பார்த்துட்டு உடனே கிளம்பலாம் இல்லே.. உண்மையை மறைச்சு பொய் சொன்ன குற்றத்துக்கு உங்க மேல் வழக்கு சேரும்.” பார்த்தான்.
இருவர் முகத்திலும் திகிலடித்தது. ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். ஒரு நிமிடத்திற்கு மேல் வாயையேத் திறக்க வில்லை இறுக்கமானார்கள்.
“சரி. நான் சொல்றேன். சொல்றதுல தப்பு இருந்தா மட்டும் திருத்தம் சொல்லுங்க இல்லேன்னா கம்முன்னு இருங்க.
“உங்க மகளுக்கும் சாத்தையனுக்கும் கள்ள உறவு. வலிய கொண்டாடி உறவு. வயசு கோளாறு சாத்தையன் உடம்பைப் பார்த்து ஆசை. கையும் மெய்யுமாய்ப் பார்த்தது மேடம். அவுங்க கணவரான உங்களிடம் சொல்ல….நீங்க மகள், அவன் கைபேசி சிம்களைப் பறிச்சு, உடைச்சு இனி ரெண்டு பேருக்கும் தொடர்பே கூடாது கண்டிச்சு, கணக்குத் தீர்த்து வெளியே அனுப்பிச்சு, பெண்ணுக்குத் திருமணம் முடிக்க தீர்மானச்சு மாப்பிள்ளைப் பார்த்தீங்க.
“இதில் சிக்கினவன்தான் பணத்துக்கு ஆசைப்பட்ட நட்ராஜ்! உங்க தகுதி தராதரத்திற்குக் கொஞ்சமும் பொருத்தம் இல்லாததினால தன் உறவு சனம் நட்பு வாயை அடைக்க சொன்னது செவ்வாய் தோசம்! இதை நான் ஆமாம் சாமியிடம் கேட்டேன். விசாரணையில் சொன்னான்.
“என்ன அதிர்ச்சியாய்ப் பார்க்குறீங்க? சாமியைப் போய் மரியாதை இல்லாம அவன் இவன்னு பேசுறானேன்னா?!. மனுசன் எவனும் சாமியே இல்லே. ஏன் சாமியே இல்லே! அப்புறம் எப்படி இந்த அயோக்கியப் பயல் சாமி?
“எந்த கஷ்டம் நஷ்டம் வந்தாலும் ஆமாம் சாமியிடம் ஆலோசனை கேட்கிறது உங்க வழக்கம். அதன்படி ரெண்டு பேரும் அவனிடம் உண்மையைச் சொல்லி ஆலோசனை கேட்க… அவன் சட்டுபுட்டுன்னு இப்படி காரியத்தை முடி சங்கடத்துக்கு செவ்வாய் தோசத்தைப் போடு. சொல்லி அனுப்பினான்.. வந்து பெண்ணுக்கு நல்லது கெட்டது சொல்லி முடிச்சாச்சு.
கண்டிக்கப்பட்டு வெளியேறிய சாத்தையனுக்கு உங்க மேல் கோபம். தான் தொட்டதை அடுத்தவன் அனுபவிக்கக்கூடாதுங்குற ஆவேசம். இதுக்காகவே கிளீனரா சேர்ந்து லாரி கத்துக்கிட்டான். சமயம் பார்த்தான். பத்தாம் நாள் லாரி ஏத்தி காரியத்தை முடிச்சு ஆந்திரா போனான். நான் கொலைன்னு சந்தேகப்பட்டு விசாரணையைத் தொடங்க… இன்ஸ்பெக்டர் ஐயா….எனக்குத் தெரியாம விபத்து லாரியைப் பிடிக்க முயற்சி எடுத்து மொத்த வாக்கு மூலத்தையும் அவனிடம் வாங்கி காரியத்தை முடிச்சிட்டார். சாத்தையன் சிறையில் இருக்கான் பாருங்க.”
”’சார்! மேடம்! சங்கர் துப்பறிஞ்சதை வைச்சு சொல்றேன். இந்தக் கொலைக்கு முக்கியக் காரணம் காதலில்லாக் காதல்!” என்றார் இன்ஸ்பெக்டர் இளையராஜா. ராசகோபாலன், ராசாத்தி அவரை அதிர்ச்சியாய்ப் பார்த்தார்கள்
“நடராஜ்! கொஞ்சம் வசதி வாய்ப்பாய் வாழனும்ன்னு மனசுக்குள் ஆசை. அதனால் ரெண்டு சம்பளம் நிம்மதியாய் வாழலாம்ன்னு சியாமளாவை விரட்டிப் பிடிச்சான். காதலிக்கிறேன்னு அவளைக் கட்டுக்குள் வைச்சான். கனவில் கூட நினைச்சுப் பார்க்க முடியாத பணம், சொத்து, சுகம் எல்லாம் வருதுன்னு தெரிஞ்சதும் பெண் நொண்டி, மாற்றுத் திறனாளியாய் இருந்தாலும் பரவாயில்லேன்னு சுகாசினியை முடிச்சான். நீங்க குறுக்கிடாமல் இருந்தால் அவன் சியாமளாவை திருமணம் முடிச்சு சந்தோசமாய் இருந்திருப்பான். இது முதல் காதலில்லாக் காதல்!”
“அடுத்து சுகாசினி! வயசு, கல்லூரி கலாட்டா, இன்டர்நெட் கசமுசாப் படங்கள், நல்லப் பெண்கள்தான் எல்லாம் முடியும், ஒரு மாற்றுத் திறனாளியால் முடியாதா என்கிற உந்துதல், மாற்றுச் சிந்தனை… சாத்தையன் மேல் பட அவன் தன் அறைக்கு வரும்போதெல்லாம் மட்டுமில்லாமல் தானாய் அழைத்தும் கவர்ச்சியாய்ப் படுத்து, காட்டி… சாத்தையன் விசாரணையில் அது ஒரு தனிக்கதை, வலிய வளைச்சிருக்கு. அது பிடிச்சிருக்க…. மாத்திரையெல்லாம் போட்டு நாளுக்கு நாள் தொடர்ந்திருக்கு. இது ரெண்டாவது காதலில்லாக் காதல்.”
“இருவரையும் மன்னிச்சு…. திருமணம் முடிச்சிருந்தால் சந்தோசமாய் வாழ்ந்திருப்பாங்க. ஒரு வேலைக்காரனை மாப்பிள்ளையாய் ஏத்துக்கிறதா என்கிற மான அவமானம் உங்களை அப்படி யோசிக்க விடாம, செய்ய விடாமல், செய்ததின் பலன் நட்ராஜ் வரன்.”
“கடைசியாய் சாத்தையன். அவனுக்கும் காதலில்லா காதல்தான். ஆள் ரொம்ப யோக்கியம். அப்பழுக்கில்லா ஆள். வழியே இல்லாமல்தான் உங்க மகளிடம் சரணாகதி இருக்கான். மத்தப்படி சுகாசினி மேல் அவனுக்குக் காதல், காமம் கிடையாது. வெளியேறியவன் அனுபவித்தவரை லாபம்ன்னு சும்மா இருந்திருக்கலாம். தன் அவமானம்….தனக்குக் கிடைச்சது அடுத்தவனுக்குக் கிடைக்கக்கூடாது, தான் தொட்டதை எவனும் தொடக்கூடாது என்கிற ஆவேசம், கோபம் வெறியாய் மாறி… கொலை! விபத்துன்னு சுலபமா தப்பிச்சுடலாம். இல்லை… ஆந்திரா, மகராஷ்ட்டிரான்னு வெளி மாநிலம் போய் தலைமறைவாய் வாழந்திடலாம்ன்னு தப்பா நினைச்சான். இது அவன் தப்பு.”
“சார் ! இங்கே தப்பு செய்த மூணு பேருக்குமே தண்டனைக் கிடைச்சிருக்கு. ஒரு பெண்ணைக் காதலிச்சு கைவிட்டக் குத்தம் நட்ராஜ்க்கு மரணம். உங்க மகள் செய்த தப்பு…கிடைச்ச வாழ்க்கையைத் தொலைச்சு….சாத்தையன் நினைப்பு, உருகல். அடுத்து சாத்தையன், செய்த கொலைக்குச் சிறை.”
“சார்! உலகத்துல நடக்கும் சண்டை, சச்சரவு, கொலை, கொள்ளை, புரட்சி மொத்தத்துக்கும் மண், பெண் மட்டுமே மூலக்காரணம். இது ரெண்டுக்கும் உள்ளே உள் பிரிவுகள்தான் போட்டி, பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, பணத்தாசை, பதவி ஆசை…. இத்தியாதிகள்.”
“சார்! சியாமளாவுக்கு வாழ்க்கை கிடைச்சுடும். உங்க பெண் மனசை மாத்தி மறு திருமணம் முடிங்க. இல்லே…. சாத்தையன் தண்டனை முடிச்சு வெளியே வரும்வரை காத்திருந்து மணம் முடிங்க. இல்லே…. பெயில்ல எடுத்து முடிங்க.” முடித்தார்.
ராசகோபாலன், ராசாத்தி அவர் சொன்னதை ஏற்றுக்கொள்வதைப் போல் மௌனமாய் இருந்தார்கள்.
சங்கர் திருப்தியாய் இளையராஜாவைப் பார்த்து புன்னகைத்தான்.
(முற்றும்)
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
