உங்களுக்கு மாத்திரந்தான்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 9, 2025
பார்வையிட்டோர்: 66 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவு சுமார் எட்டு மணி இருக்கும். “அம்மா, பசு நெய் இருக்கிறதா? இரண்டு மூன்று நாட்களாய் இருமல் புகைந்து கொண்டே இருக்கிறது” என்று ஐந்து நிமிஷ நேரம் இருமினார் ஒரு கிழவர் 

“செட்டியாருக்கு இல்லாத நெய்யா? உள்ளே வாருங்கள்” என்றாள் செல்லம்மாள். 

“என்ன விலை?” என்று கேட்டார் மூக்கஞ் செட்டியார். 

“விலையைப்பற்றிக் கவலை வேண்டாம். எவ்வளவு வேண்டும்?” 

“அரைப்படி ஒரு படியா வாங்கப் போகிறேன்? அரைக்கால் படிதான் வேண்டும்.”
 
“எல்லோருக்கும் எட்டணா என்று தான் விற்கிறேன். மூக்கஞ் செட்டியார் தகப்பனாராச்சே என்று உமக்கு ஏழணாவுக்குக் கொடுக்கிறேன்.” 

“அரைக்கால்படிக்கு ஆறாணாத்தானே விலை? நீங்கள் ஏழணா கேட்கிறீர்களே?” 

”உமக்காகத்தான் இந்த விலை. படி நாலு ரூபாய்க்குக் குறைந்து பசு நெய் யார் கொடுக்கிறார்கள்? நான் நெய் விற்பதே இல்லை. நீர் இருமல் என்று கேட்கிறதனால்தான் கொடுக்கிறேன். மருந்துக்கென்று கேட்டால் ஒரு சாமானை இல்லை என்று சொல்லக்கூடாது.” 

“சரி, என்னிடத்தில் அதிகமா வாங்கிவிடப் போகிறீர்கள். விடுங்கள்” என்று ஜாடியைக் கீழே வைத்தார் கிழவனார். 

“வேறு ஒருவருக்கும் சொல்லாதீர். உமக்கு மாத்திரந்தான் இந்த விலை!” என்று ரகசியமாய்ச் சொன்னாள் செல்லம்மாள். 

ஏழணாவை வாங்கிக் கை கப்பெட்டியில் போட்டுப் பூட்டிவிட்டு, “இன்று ஓரணா அதிக லாபம்” என்று தனக்குள்ளேயே சொல்லிச் செல்லம்மாள் மனம் பூரித்தாள். 

சுமார் ஐந்து நிமிஷத்திற்குப் பின் அவளுடைய கணவர் சீதாராமையர் கையில் ஒரு காகிதப் பொட்டலத்தை ஏந்திக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார். 

“இதென்ன வாங்கிக்கொண்டு வருகிறீர்கள்?” என்று செல்லம்மாள் கேட்டாள். 

“காலையிலே உப்புமாவுக்குச் சீனி இல்லை என்றாயே?” 

“நல்லவேளை, வாங்கிக்கொண்டு வந்துவிட்டீர்கள்! சொல்லிவிட மறந்துவிட்டேனே என்று நினைத்தேன். என்ன விலை?” 

“சௌக்கியந்தான். நமக்காக வீசை ஏழணாவுக்குக் கொடுத்தான். ஒருவரிடத்திலும் சொல்லாதே” 

“நாசமாய்ப் போச்சு! உங்களை யார் சாமான் வாங்கச் சொன்னது? எப்போதும் போல் நான் வாங்கிக் கொள்ள மாட்டேனோ? ஊரெல்லாம் வீசை ஆறணாவுக்கு விற்கிறது. அநியாயமாய் ஓரணாவைத் தொலைத்துவிட்டு வந்திருக்கிறீர்களே!” 

“வீசை ஆறணாவுக்கு விற்கிறதா? ஏமாற்றி விட்டானே! அந்தப் பயல் என்ன சொன்னான் தெரியுமா? ‘சாமி! உங்களுக்கு மாத்திரந்தான் இந்த விலை! வேறொருவருக்கென்றால் இப்படிக் கொடுக்கமாட்டேன்’ என்றல்லவா சொன்னான். இருக்கட்டும் நாளைக்குச் சொல்கிறேன்.” 

“யார் கடையில் வாங்கிக்கொண்டு வந்தீர்கள்?” 

“மூக்கஞ் செட்டியார் கடையில்தான்.”

“அப்படித்தான் நான் நினைத்தேன்” என்றாள் செல்லம்மாள். 

“ஏன்?” 

இந்தக்கேள்விக்கு எதிர்பாராத இடத்திலிருந்து பதில் வந்தது. பாலு படித்துக்கொண்டிருந்தான். “ஆகையால் பிள்ளைகளே! தினை விதைத்தோர் தினை அறுப்பர்; வினை விதைத்தோர் வினையறுப்பர்” என்று பாடத்தை முடித்து விட்டு, “அம்மா, பாடம் படித்துவிட்டேன். சாதம் போடு” என்று ஓடிவந்தான். அவன் நாலாவது வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறான்.

– வாடா விளக்கு முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *