சத்திய யுகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 9, 2025
பார்வையிட்டோர்: 65 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சத்திய யுகம் பிறக்கப்போகிறது என்று சொல்கிறவர்களைக் கண்டால் எனக்குக் கோபம் பொங்குகிறது. இதோ இந்தச் சம்பாஷணையைப் பாருங்கள். நான் களைப்பு மேலீட்டினால் சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டிருந் தேன். சகுந்தலா பால் வாங்கிக்கொண்டிருந்தாள். 

“பால் பச்சைத் தண்ணியா இருக்கு! வரவர ரொம்ப மோசம்! நாளைக்கு இப்படி இருந்தால் வேறே பால்காரி தான் பார்க்கணும்” என்றாள் சகுந்தலா. 

“இப்படிச் சொல்லாதிய அம்மா, எங்க நாய்க்கர் காதில் இது விழுந்தால் மனங்கொதிச்சுப் போவார்” என்றாள் பால்காரி. 

“நீ வேறு யாரை வேணுமானாலும் ஏமாற்றி விடலாம். ஆனால் என்னை ஏமாற்ற முடியாது.நானும் பால்மாடு வச்சுக் கறந்து பழகினவள் தானே?” 

ஆனால் எங்கள் பால்காரி விடும் பாலில் தண்ணீர் இருக்கிறதென்று கண்டுபிடிப்பதற்கு முன் பின் பழக்கம் தேவை இல்லை. 

“நான் இனி என்ன சொய்வது, போங்க. என்ன சொன்னாலும் உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட மாட்டேன் என்கிறதே?” 

“நாங்களும் உன்னைப்போல் பால் விற்றிருக்கிறோம்; என்றாலும் இப்படியா? எங்கப்பா ஒரு சொட்டுத் தண்ணீர்கூட விடச் சம்மதிக்கமாட்டார்!” 

“நாய்க்கர் பால் கறக்கும்போது நீங்க நேரில் வந்து பார்த்தாலொழிய உங்களுக்குச் சமாதானப்படாது. காம்பு கழுவின தண்ணியில் ஒரு துளி இருந்தாலும் கீழே கொட்டிவிட்டுக் கறப்பாரம்மா! நீங்க என்ன என்னமோ பேசிறீய? ஆள் தரந் தெரியாம இப்படிப் பேசாதீங்கம்மா. பாவம் சிறிசுதானே. கண்டபடி பேசிவிடுது” என்று என் மனைவிக்குப் புத்திமதியும் சொல்லிவிட்டுச் சென்றாள் பால்காரி. 

இந்தச் சம்பாஷணையைக் கவனித்துக்கொண்டே யோசனையில் ஆழ்ந்த நான் பிரயாண அலுப்பினால் அப்படியே சாய்வு நாற்காலியில் சற்று அயர்ந்து தூங்கி விட்டேன். சிறிது நேரத்திற்குப்பின் என் மனைவி சூடான காப்பியைக் கொண்டு வந்து முன்னால் வைத்த சத்தத்தில் தான் விழித்தேன். அதைக் கொஞ்சங் கொஞ்சமாக ருசித்துக் குடித்தேன். ஆனால் அப்படிக் குடிப்பதற்கு அதில் அதிக ருசி இல்லை. பால் நன்றாக இருந்தால்தானே காப்பி நன்றாக இருக்கும்? ஆனால் அத்தகைய பாலில் தான் தண்ணீர் விடவில்லை என்று அவள் சத்தியம் செய்வதற்குத் தயாராக இருந்தாள்!

“நாளைக் காப்பிக்குச் சர்க்கரை இல்லையே” என்றாள் சகுந்தலா. 

“அதற்கு என்ன, வாங்கி வந்தால் போகிறது” என்று அங்கவஸ்திரத்தை எடுத்துப் போட்டுக்கொண்டு வேண்டா வெறுப்பாய்க் கிளம்பினேன். 

பால்காரி வீட்டைத் தாண்டிச் செல்கையில், நாய்க்கரும் அவளும் பேசிக்கொண்டிருப்பது கேட்டது. சற்றுக் கவனித்தேன். 

ஒரு சொட்டுத் தண்ணிகூட விடப்படாதின்னு நான் செம்பைக் கவிழ்த்துவிட்டுக் கறக்கிறதென்ன,நீ இப்படித் தண்ணி விடுகிறதென்ன, இது கடவுளுக்குப் பொறுக்குமா?” என்று நாய்க்கர் சொல்லிக் கொண்டிருந்தார். 

“உங்களுக்கு உழுகத் தெரியும், விதைக்கத் தெரியும், பால் விக்கத் தெரியுமோ? உங்கள் சோலியைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருங்கள்” என்றாள் நாய்க்கரின் மனைவி. நாய்க்கரும் பெட்டிப் பாம்பாய் அடங்கி விட்டார். 

பால்காரி என் மனைவியிடத்தில் சொல்லிய வார்த்தைகள் முற்றும் உண்மை என்று அப்பொழுது தான் விளங்கியது. 

அன்று காலையில் நடந்த இன்னொரு சம்பவம் எனக்குத் திடீரென்று ஞாபகம் வந்தது. நான் என் மாமனார் வீட்டிற்குச் சென்றிருந்தேன். என் மாமனாருக்கும் மாமியாருக்கும் நடந்த ஒரு சம்பாஷணையைத் தீற்செயலாய்க் கேட்க நேர்ந்தது.

“நீ இப்படிப் பாலில் தண்ணி கலந்து விற்பது எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. கால்படி தண்ணி ஊற்றுவதனால் நீ கோட்டையா கட்டிவிட முடியும்? ஏன் இந்தப் பேராசை? சகுந்தலா இருக்கும் போது ஒரு துளி தண்ணிகூட விடமாட்டாளே!” என்றார் சகுந்தலையின் தந்தை. 

“சகுந்தலைதானே, ஆமாம்! ஒண்ணுக்குப் பாதிதான் தண்ணி விடுவாள். அதற்குமேல் விடமாட்டாள்! அநாவசியமாகப் பெண்கள், விஷயத்தில் ஏன் தலையிடுகிறீர்கள்? உங்கள் பேனா உண்டு,பேப்பர் உண்டு என்று பேசாமல் இருங்கள். எனக்குத் தெரியும் பால் வியாபாரம் செய்யும் விதம்” என்றாள் சகுந்தலையின் தாய். என் மாமனார் கூட்டிலடைபட்ட சிங்கம்போல அடங்கிவிட்டார். 

என் மனைவி பால்காரியிடத்தில் சொன்ன வார்த்தைகளும் உண்மைதான் அல்லவா! 

சத்திய யுகம் இனி எப்பொழுதோ பிறக்கப்போகிறது என்கிறார்களே, இவர்களெல்லாம் உண்மையைத்தானே பேசுகிறார்கள்! இது சத்திய யுகம் இல்லையா?

– வாடா விளக்கு முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *