மீண்டும் குழந்தையாக்கு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 9, 2025
பார்வையிட்டோர்: 66 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோயம்புத்தூரிலிருந்து இரவு 7-10 மணிக்கு மேட்டுப்பாளையத்திற்குப் புறப்படும் ரெயில் வண்டிமீது எனக்கு எப்பொழுதுமே வெகுப் பிரியம். விசேஷ வேலை ஒன்றும் இல்லாவிட்டாலும், அந்த ரெயிலில் பிரயாணம் செய்யும் ஆனந்தத்திற்காகவே நான் பெரியநாய்க்கன் பாளையம் வரை அடிக்கடி போய்விட்டு வருவது வழக்கம். வெள்ளிக்கிழமை. பள்ளிக்கூட வாரத்தின் கடைசி நாள். பெரியநாய்க்கன்பாளையத்திற்குச் செல்லலாம் என்று ஓர் ஆசை எழுந்தது. ரெயில் கோயம்புத்தூர் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்ததும், ஜன்னலண்டை ஒரு பெஞ்சியில் சௌகரியமாய் உட்கார்ந்துகொண்டேன். ரெயில் புறப் பட்டது. 

நீலகிரி மலைத்தொடரிலிருந்து,இனிமையான காற்று மனோகரமாய் வீசிக்கொண்டிருந்தது. அந்த மந்தமாரு தத்தின் முழு இன்பத்தையும் அநுபவித்துக்கொண்டே, பின்னால் சாய்ந்தேன். கண்கள் மூடின; ஆம், புறக் கண்கள் மூடின ; அகக் கண்கள் திறந்தன. வண்டி வேக மாய் ஓடிக்கொண்டிருந்தது. வேகமாய் ஓடும் ரெயிலில் பிரயாணம் செய்யும்பொழுதெல்லாம், என் மனத்தில் உயரிய எண்ணங்களும் சிறந்த சிந்தனைகளும் தோன்றுவது வழக்கம். 

எதிர்பாரா விதமாய்த் திடீரென்று என் சிந்தனை கலைந்தது. கண் விழித்தேன். ஒரு பிச்சைக்கார வாலிபன் பாடிக்கொண்டிருந்தான். பதினேழு. பதினெட்டு வயசு இருக்கலாம். உடம்பில் ஒன்றும் இல்லை. இடுப்பில் மட்டும் ஓர் அழுக்குத் துணி உடுத்திருந்தான். அதுவும் அநேக இடங்களில் கிழிந்திருந்தது. 

அவன் பாடிய பாட்டில் சொற்சுவை பொருட்சுவை அதிகம் இருந்ததாகச் சொல்ல முடியாது. சந்தத்தையே பெரிதாகக் கருதி, பொருளைச் சிறிதும் கவனியாது, பதங்களைச் சேர்த்து இயற்றப்பட்டிருக்கும் அப்பாட்டு மிகக் கீழ்த்தரமானது. ஆயினும் அன்று அவன் பாடிய போது, அது என்னை மிகவும் வசீகரித்தது. அவன் குரலில் ஒரு சக்தியும் இனிமையும் இருந்தன. மந்த மாருதத்தில் இனிய ஒலி அலைகளை எழுப்பிக்கொண்டு, அது எங்கள் காதில் மோதியது. ‘பாரதத் தாய் வீரசக்தி யாலே உதித்தோம்” என்று அவன் பாடியபொழுது என் உடம்பெல்லாம் சிலிர்த்தது. பின்பு அவன் தாளம் போட ஆரம்பித்தான். வயிற்றுக்குத் தாளம் போடும் வாலிபன், வயிற்றிலேயே தாளம் போட்டது மிகப் பரிதாபகரமாக இருந்தது. அடித்து அடித்து அவன் வயிறெல்லாம் காய்ந்திருந்தது. 

“இந்தியர்க்குச் சொந்தமா யிருந்த பொன்னாடு என்று அவன் உருக்கமாய்ப் பாடிய சமயம் இந்தியாவின் அடிமைக் கதை முழுவதும் என் கண் முன்னால் தோன்று வதுபோல் இருந்தது. ஏழை மக்கள் வாடுகின்ற சில நன்னாடு” என்று அவன் பாடியபோது என் கண்களில் கண்ணீர் தத்தளித்தது. வாலிபனது ஏழைமைத் தோற்றமே அந்த அடிக்கு உயிர்ச் சித்திரமாய் விளங்கியது.பாட்டு முடிந்தது.ஏன் அதற்குள் முடித்து விட்டான் என்று வருந்தினேன். 

“கதரைப் பற்றி ஆயிரம் பிரசங்கங்கள் கேட்டாலும், இந்த ஒரு பாட்டுக்குச் சமானமாகாது, ஸார்” என்றார் ஒருவர். 

அந்த அபிப்பிராயத்தைப் பூர்ணமாய் அங்கீகரிக்க எனக்கு இஷ்டமில்லை. ஆகையால் மௌனமாய் இருந்தேன். 


கையில் இரண்டு மூன்று காலணாக்களைக் குலுக்கிக் கொண்டு, வாலிபன் ஒவ்வொருவரிடமும் சென்று, காசு கேட்டு வந்தான். அங்ஙனம் இருக்கையில், திடீரென்று டிக்கட் பரிசோதகர் ஒருவர் வண்டிக்குள் நுழைந்தார். வெண்ணெய் திரண்டு வரும்போது, தாழி உடைந்தது போல ஆயிற்று. வாலிபன் திடுக்கிட்டு நின்றான். 

“எஸ். ஐ. ஆர். கம்பெனிக்கு இவர்களெல்லாம் ஸ்வீகார புத்திரர்கள், ஸார்!” என்று சொல்லிக் கொண்டே கையை நீட்டினார். 

“ஜன சமூகத்தின் சட்ட பூர்வமான புத்திரர்கள் என்று ஏன் சொல்லக் கூடாது?” என்றேன் நான். 

நான் ஏதோ ஹாஸ்யமாகச் சொல்லிவிட்டேன் என்று அவர் ‘கட கட’ என்று சிரிக்க ஆரம்பித்தார். நான் சொல்லியது அவருக்கு விளங்கவில்லை என்று அறிந்துகொண்டேன். பேசாமல் டிக்கட்டை எடுத்துக் காண்பித்தேன். பிரயாணிகளின் டிக்கட்டுகளை எல்லாம் பரிசோதித்த பிறகு, பையனுடைய கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு, ஒரு பெஞ்சியில்போய் உட்கார்ந்தார். 

“எங்கேடா ஏறினாய்?’ 

“கோயமுத்தூரில்,எசமான்!”

“டிக்கட் ஏண்டா எடுக்கவில்லை?” 

பாவம்! பையன் இதற்கு என்ன பதில் சொல்வான்? மெளனம் சாதித்தான். 

“உங்கப்பன் வீட்டு ரெயிலாடா, டிக்கட் இல்லாமல் போவதற்கு?” என்று சொல்லிக் கன்னத்தில் ‘பளீர்’ என்று ஓர் அறையும் கொடுத்தார். 

“சாமி! சாமி! அடிக்காதிங்க சாமி!” என்று கெஞ்சினான் வாலிபன். 

“காசு எவ்வளவடா வைத்திருக்கிறாய்?” 

“ஒண்ணே காலணா, சாமி!” 

“கொடு இங்கே!” 

பையன் சற்றுத் தயங்கினான். மீண்டும் ஓர் அறை கன்னத்தில் விழுந்தது. 

“சாப்பாட்டுக்கு ஒண்ணுமில்லை, சாமி!” 

“கொடுடா இங்கே!” என்று அதட்டினார் டிக்கட் பரிசோதகர். காலணாக்கள் ஐந்தும் அவர் கையில் வந்து சேர்ந்தன. 

“இவ்வளவுதானா?” 

“ஆமாங்க சாமி.”

“உள்ளத்தைச் சொல்.” 

“சத்தியமாய்ச் சொல்கிறேன், எசமான்.” 

“திருட்டுப் பயலே! உங்கள் சங்கதியெல்லாம் எனக்குத் தெரியுமடா! எங்கே வேஷ்டியை உதறு, பார்ப்போம்.” 

பையன் வேஷ்டியை உதறிக்கொண்டே, “ஒண்ணுமில்லை எசமான்” என்றான். 

“பொய் சொல்லி, ராஸ்கல்! பின்னாலிருக்கும் முடிச்சு என்னடா?.” 

“பொடிமட்டை எசமான்” 

“உனக்குப் பொடிமட்டை வேறு கேடா? எங்கே அவிழ் பார்க்கலாம்.” 

“வேறே ஒண்ணுமில்லை, சாமி.” 

“எடுடா, பார்க்கலாம்.” 

பையன் குடலில் நெருப்பு விழுந்ததுபோல இருந்தது.

“இன்னும் அவிழ்க்காமல் இருக்கிறாயா?” என்று ஓர் அறை அறைந்தார் டிக்கட் பரிசோதகர். 

”சாமி! சாமி!” என்று சொல்லிக்கொண்டு அவன் ஒரு பொடி மட்டையை அம்முடிச்சை அவிழ்த்து, வெளியில் எடுத்துக் காட்டினான். 

”நீ கெட்ட கேட்டுக்கு உனக்குப் பொடி வேறு”. பையன் கன்னத்தில் மீண்டும் ஓர் அடி விழுந்தது. அடி விழுந்த அதிர்ச்சியில் பொடிமட்டை கீழே விழவே, ‘கலீர்’ என்று சத்தம் கேட்டது. டிக்கட் பரிசோதகர் திடுக்கிட்டுக் குனிந்து அதை எடுத்தார். அதற்குள் இரண்டணாச் சில்லறையாக ஒன்றரை ரூபாய் இருந்தது!

அதைக் கண்டதும், ” திருட்டுப்பயலே!” என்று பையனை ஒரு மிதி மிதித்தார். 

”பொய் சொல்லும் பயல்களைக் கண்டால், எனக்குக் கொஞ்சமேனும் பிடிப்பதில்லை, ஸார்!” என்றார் என்னைப் பார்த்து. 

“வாஸ்தவம். திருட்டுப் பயல்களைக் கண்டாலும் எனக்குப் பிடிப்பதில்லை” என்றேன் நான். 


இதற்குள் பெரியநாய்க்கன்பாளையம் வந்து விட்டது. பிச்சைக்காரனுடைய கேஸ் இன்னும் முடிய வில்லை. ஆகையினால் நான் தூங்குபவன்போல் பாசாங்கு செய்தேன். 

மெல்லிய மலைக்காற்று, ரெயிலின் ‘கடகட’ச்சத்தம், நடுநடுவே டிக்கட் பரிசோதகரின் உறுமல், வாலிபனின் பரிதாபக் குரல், இடையிடையே ஏக்கம், பெருமூச்சு, ஒரு குழந்தையின் அழுகை, தாயின் அதட்டல், ஒரு கிழவனின் இருமல் – இவை ஒன்றையும் கவனியாது, மனிதனை விதி இழுத்துக்கொண்டு போவதுபோல, ரெயில் எங்களை இழுத்துச் சென்றது. 

“மேட்டுப்பாளையம்! மேட்டுப்பாளையம்!” என்று ஒரு போர்ட்டர் கத்தினான். 

 நான் திடுக்கிட்டு எழுந்தேன். டிக்கட் பரிசோத கரையும் பிச்சைக்காரனையும் காணவில்லை. விரைவாக இறங்கிப் பிளாட்பாரத்தில் எங்கும் தேடிப் பார்த்தேன். காணவில்லை. கடைசியில் ஸ்டேஷனின் ஓர் ஓரத்தில் இரண்டு உருவங்கள் இருளில் நிற்பதைக் கண்டு அவற்றை அணுகினேன். 

“தீபாவளிக்குப் புதுத் துணி வாங்குவதற்காகக் கால் கால் அணாவாகச் சேர்த்து வைத்த காசு!” என்று அழுதான் வாலிபன். 

பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை எங்கேயாவது மீளுவது உண்டா? கடைசியில் ஒன்றும் பிரயோஜன மில்லை என்று கண்டதும், “இன்னைக்கி முழுதும் ஒண்ணும் சாப்பிடவில்லை, எசமான். இட்டிலி வாங்குவதற்கு அரையணாவாவது கொடுங்க, சாமி” என்று கெஞ்சினான். டிக்கட் பரிசோதகர் காதில் ஒன்றும் விழவில்லை. பேசாமல் போய்விட்டார். வாலிபன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு சென்றான். என் கையிலிருந்த சொற்பக் காசை அவன் கையில் கொடுத்து விட்டு நான் ஊருக்குள் போனேன். 


மேட்டுப்பாளையம் எனக்குப் புதிது. படுப்பதற்கு இடம் அகப்படாமல் தெருத் தெருவாய் அலைந்தேன். கடைசியில் ஒரு வீட்டுத் திண்ணை சிறிது செளகரியமாய் இருப்பது கண்டு, அங்கே சென்று உட்கார்ந்து, சிறிது நேரம் அன்று ரெயிலில் நடந்த சம்பவத்தைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன். உள்ளே யாரோ ஒருவர் பேசும் சப்தம் கேட்டது. 

“‘கனகம், உனக்கு ஒரு பட்டுப் பாவாடைக்குத் துணி வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன், பார்த்தாயா?” 

“எங்கே, அப்பா!” 

“அப்பா!” என்று சொல்லிக்கொண்டு ஒரு குழந்தை சந்தோஷமாய் ஓடிவந்தது. 

குழந்தை துணியைப் பார்த்ததும் குதூகலத்துடன், “இதோடு எனக்கு அஞ்சு பட்டுப் பாவாடை யாகுது, ஏனப்பா” என்று கூத்தாடியது. பின்பு திடீரென்று ஏதோ ஒரு விஷயம் ஞாபகம் வந்ததுபோல், சொல்ல ஆரம்பித்தது: “இன்னைக்கி ஒரு விசேஷம், அப்பா. எனக்கு ஜிலேபி வாங்குவதற்கு அம்மா ஒரு அணாக் கொடுத்தாள். உடனே நான் கடைவீதிக்கு ஓடினேன். அங்கே ஒரு பிச்சைக்காரன், பாவம்! அழுதுகொண்டிருந் தான். ‘ஏண்டா அழறே?’ என்று கேட்டேன். அதற்கு அவன் என்ன சொன்னான், தெரியுமா அப்பா? இன்னைக்கி அவன் ரெயிலில் வந்துண்டிருந்தானாம். அவன் கிட்ட டிக்கட் இல்லையாம். அதுக்காக அவன் தீபாவளிக்கு வேஷ்டி வாங்க வெச்சிருந்த ஒண்ணரை ரூபாயைப் பிடுங்கிக் கொண்டார்களாம். ‘ஏண்டா உங்கப்பா டிக்கட் வாங்காம விட்டா?’ என்று நான் கேட்டேன். ‘எனக்கு அப்பா அம்மா யாருமில்லை’ என்று அவன் சொன்னான். அப்பா! பின்னே அவன் எப்படி அப்பா டிக்கட் வாங்கு வான்? எனக்கும் அம்மாவுக்கும் நீதானே டிக்கட் வாங்கித் தரே ? நீ இல்லாட்டா நான் டிக்கட் வாங்காமத் தானே போவேன்? அப்போ, ரெயில்காரன் நான் போட்டிருக்கிற வளையல், சங்கிலி இதெல்லாம் பறிச்சிக்குவானா, என்ன? அதென்ன நியாயம்? நீயும் அந்த ரெயிலில்தானே வேலை பாக்கிறே? ரெயில்காரங்கிட்ட இதெல்லாம் நீ சொன்னா என்னப்பா?” 

குழந்தையின் தந்தை சிறிது நேரம் மௌனமாக இருந்தார். “அப்புறம் நீ என்ன பண்ணினே? ஜிலேபி வாங்கிண்டு வந்திட்டாயா?” என்று கேட்டார். 

“அதென்னப்பா அப்படிக் கேக்கிறே? அவன் அழுத அழுகையைப் பாத்தா, நீயானா அங்கேயே அவனுக்கு ரெண்டு வேஷ்டி எடுத்துக் கொடுத்திட்டு வந்திருப்பே. நீ நிறையக் காசு வச்சிருக்கே. நான் என்னப்பா பண்றது? அம்மா கொடுத்த ஓரணத்தான் இருந்தது. அதை அவன் கையிலே கொடுத்து. ‘இந்தா, இப்ப ஓரணா வச்சுக்கோ, நாளை எங்க அப்பாட்டயாவது அம்மாட்டயாவது ஒரு ரூபாய் வாங்கிண்டு வந்து ஒனக்குத் தரேன்’ இன்னு சொல்லிட்டு வந்தேன். நாளைக்கு ஒரு ரூபாய் தரயா. அப்பா?” 

இந்தச் சமயம் இன்னொரு குரல் கேட்டது. பேசியது குழந்தையின் தாய் போலும். “ஏண்டி, கனகம்! ஜிலேபி அங்கேயே சாப்பிட்டுவிட்டேன் இன்னு சொன்னியே. எங்கிட்டப் பொய்தானே சொன்னே?” 

தாய் சொன்னதைச் சிறிதும் கவனியாமல், “நாளைக்குத் தரயா, அப்பா?” என்று மீண்டும் கேட்டது குழந்தை. 

“என் கண்ணே! நாளை ஒனக்கு இரண்டு ரூபாய் தருகிறேன், அம்மா. அந்தப் பிச்சைக்காரனுக்குக் கொடு” என்று தழுதழுத்த குரலில் தந்தை சொன்னார். 

நான் ஆச்சரியமுற்றேன். அந்தக் குழந்தையையும், அதன் தந்தையையும் பார்க்க ஆவலுற்று, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். குழந்தையின் முகம் மல்லிகைப் பூப்போல மலர்ந்திருந்தது. அதன் தந்தையின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. அவருடைய முதுகுதான் என் பக்கம் இருந்தது. களி பொங்கிய கனகத்தின் முகத்தில், திடீரென்று ஒரு மாறுதல் ஏற்பட்டது. மிக்க ஆச்சரியத்துடன், “ஏனப்பா நீ அழறே?” என்று கேட்டது. 

“ஏ ஈசா! என்னை மீண்டும் குழந்தையாக்க மாட்டாயா?” என்று விம்மல்களுக்கும் விக்கல்களுக்கும் இடையே தந்தை பிரலாபித்தார்.

– வாடா விளக்கு முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *