இரட்டை வேடதாரிகள்
கதையாசிரியர்: கே.என்.சுவாமிநாதன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 20, 2025
பார்வையிட்டோர்: 147
(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கார்த்திக் கல்லூரி ஒன்றின் நிர்வாகத் துறையில் பணியிலிருந்தார். அவருடைய வீட்டில் மின் சாதனங்கள் சில பழுது அடைந்து இருந்தன. பழுது பார்த்து எல்லாவற்றையும் சீர் செய்வதற்கு மின்னியல் வல்லுநர் மணியை அழைத்திருந்தார் கார்த்திக். “மணி, சீர் செய்வதற்கு ஏதேனும் உதிரி பாகங்கள் தேவைப்பட்டால் ரசீதுடன் வாங்கி வந்து விடுங்கள். நான் எல்லாவற்றிற்கும் சேர்த்து வேலை முடிந்தவுடன் பணம் கொடுத்து விடுகிறேன்” என்றார் கார்த்திக்.
மின் சாதனங்களை சீர் செய்தவுடன் பழுது பார்ப்பதற்கு வாங்கிய பாகங்கள் கொண்ட ரசீதையும், வேலை செய்ததற்கான கூலி ரசீதையும் கொடுத்தார் மணி.
மணிக்குப் பணம் கொடுக்கும் போது கார்த்திக் “மணி, நீ மின்னியல் கடையில் உதிரி பாகங்கள் வாங்கிய போது கடைக்காரர் உனக்கு பத்து சதவிகிதம் விலையில் தள்ளுபடி கொடுத்திருப்பார். ஆகவே மின்னியல் கடையின் ரசீதில் பத்து சதவிகிதம் கழித்துக் கொடுக்கிறேன்” என்றார்.
கல்லூரி சென்ற கார்த்திக்கை கல்லூரி முதல்வர் கூப்பிட்டு, “கார்த்திக், கல்லூரி நூலகத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்குப் பாடப் புத்தகங்கள் வாங்க ஒப்புதல் கிடைத்துள்ளது. நாம் எப்போதும் வாங்கும் புத்தகக் கடையில் தேவையான புத்தகங்கள் வாங்கி வாருங்கள்” என்றார்.
தேர்வு செய்த புத்தகங்களுக்கு ரசீது போடும் போது கடைச் சிப்பந்தி சொன்னார். ‘ஐயா, பள்ளி கல்லூரிகளுக்கு நாங்கள் பத்து சதவிகிதம் தள்ளுபடி தருவோம். ஆகவே உங்கள் கல்லூரிக்கு ஐயாயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்” என்றார்.
கார்த்திக் கடை சிப்பந்தியிடம் சொன்னார் “கல்லூரிக்கு ரசீது அனுப்பும் போது ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ரசீது அனுப்பு. அந்த தள்ளுபடி ஐந்தாயிரம் ரூபாயை என்னிடம் கொடுத்து விடு.”
நாட்டில் இது போன்ற இரட்டை வேடதாரிகள் அதிகம்.
–
![]() |
பொறியியல் பயின்று, அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பணி புரிந்து, பின்பு, 15 ஆண்டுகளாக கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன். “யு-டியூப் – ஸ்வாமிமேடிக்ஸ்” என்ற சேனலில், சுலப கணிதம் குறித்து ஆங்கிலத்தில் விளக்கி வந்தேன். கோவிட் ஊரடங்கு என்னை கதை, கட்டுரை, எழுத ஊக்கம் அளித்தது. கதைகள், கட்டுரைகள் வெளியான இதழ்கள் - தினமலர்-வாரமலர், கலைமகள், அமுதசுரபி, தினமணி, சிறுவர்மணி, கதிர், நம் உரத்த சிந்தனை,…மேலும் படிக்க... |
