சமயபுரத்தம்மன் மானநஷ்ட வழக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி திராவிடநாடு
கதைப்பதிவு: December 3, 2025
பார்வையிட்டோர்: 199 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காருண்யமுள்ள சர்க்காருக்கு,

சகல ரோக நிவாரணமளித்த, சகல சம்பத்தும் சௌபாக்யமும் அருளி, சாந்தி சந்தோஷம் தந்து, சகலருக்கும் அருள் பாலித்துவரும் சமயபுரத்தம்மன், அனுப்பி வைக்கும், மான நஷ்ட வழக்குக்கான துவக்கக் கடிதம் இது,

மதச்சார்பற்ற சர்க்கார் என்று சொல்லிக்கொண்டாலும், எந்த மத சம்பந்தமான திருவிழாவுக்கும், நல்ல நாளுக்கும், பூஜை நாளுக்கும் ‘லீவ்’ கொடுத்து, மக்களைக் கோயில் குளம் சென்று, பக்தியைக் காட்டிடும் சடங்கு சம்பிரதாயங்களைச் செய்யும்படித் தூண்டியும், காய்ந்த வயிறுபடைத்த மக்கள் கோபத்துடன் எதிர்ப்புக் காட்டும்போது, பக்தி செய்யுங்கள், சகல கஷ்டமும் தீர்ந்துபோகும் என்று கூறிப் பஜனையின் மேம்பாட்டை எடுத்துக் கூறியும், கோபுரத்தைக் கோலோச்சுமிடத்துச் சின்னமாகக் கொண்டிருப்பதன் மூலம், மதத்தை மறந்து விடவில்லை என்பதைத் தெள்ளத் தெளியக் காட்டியும் வருகிற காரணத்தால், இந்தச் சர்க்கார், மதத்தை, குறிப்பாக இந்து மதத்தை, சிறப்பாக புராண மதத்தைக் கட்டிக் காத்திடும் வீரம் கொண்டது என்பது விளக்கமாகத் தெரிவதால், எனக்குத் தகுந்த நியாயம் கிடைக்கும் என்ற பரிபூரண நம்பிக்கையுடன் இந்த ‘மகஜரை’அனுப்புகிறேன்.

காருண்யமிக்க சர்க்காரில் அங்கம் வகிக்கும் பாக்கியம் பெற்ற அமைச்சர்கள். அடிக்கடி மதத்தின் அவசியத்தையும், ஆலய வழிபாட்டினால் கிடைக்கும் மேம்பாட்டையும் மக்களுக்கு எடுத்துக் கூறி வருவது கேட்டு, நான் புளகாங்கிதமடைந்தேன். அதிலும் ஆச்சாரியார் செய்து வந்த அரிய சத்கதா காலட் சேபத்தைக் கேட்டு ஆனந்தத் தாண்டவமாடினேன். நாட்டை ஆளும் பெரும் தலைவர்களே இவ்வண்ணம் இதோபதேசம் செய்யும்போது, பகுத்தறிவு என்றும் விஞ்ஞானம் என்றும், முன்னேற்றம் என்றும் மூலக்காரணத்தைக் கண்டறிவது என்றும் ஏதேதோ கூறிக்கொண்டு, காவியங்களைக் கட்டுக்கதைகள் என்றும், அந்தக் கட்டுக்கதைகள் கவைக்கு உதவா என்றும் வெட் டிப் பேச்சுப் பேசிக்கொண்டு, இதற்கென்ன காரணம், அது எப்படிப் பொருந்தும், இது எங்ஙனம் நடந்திருக்கும், இப்படிச் செய்வது அறிவுள்ள செயலா என்றெல்லாம் கேட்டுக் கேட்டு விதண்டாவாதம் பேசியும் சில பலர், மதத்தின் செல்வாக்கை புராண இதிகாச சாதிகளின் ஆதிக்கத்தை எதிர்த்தொழிக்க முயற்சித்து, வெற்றி எப்படிக் காணமுடியும்! இதை எண்ணும் போதே எனக்கு, ‘ஆயிரம் இளநீர் அபிஷேகம்’ செய்யும்போது ஏற்படும் ஆனந்தத்தைவிட அதிகம் உண்டாயிற்று, இவ்வளவு பக்திமான்களாக, இருப்பதால் தான் நான், நம்பிக்கையுடன், இந்த ‘மனு’ அனுப்பி வைத்திருக்கிறேன்.

வெளிப்படையாகக் கூறிக்கொண்டால், தவறு என்ன? முதலிலே எனக்குத் துளியும் விருப்பம் உண்டாகவில்லை வெட்கமாகக்கூட இருந்தது. எங்கே கேலி பேசவும் கேவலமாகக் கருதவும், இது இடங்கொடுத்து விடுகிறதோ என்று அஞ்சினேன், பிறகு தீர்க்கமாக யோசித்ததில், நமது பக்தரிடம் முறையிட்டுக் கொள்வதிலே ல தவறு இல்லை, கேவலமும் இல்லை என்ற தைரியம் பிறந்தது; பிறகுதான் இதனை எழுதினேன். மறந்தே போனேன். இத்துடன் வைத்திருக்கும் பொட்டலத்தில் ஆறு வேப்பிலைச் சருகு இருக்கும். குங்குமமும் இருக்கும்; மகா சக்தி வாய்ந்தது, எடுத்து உபயோகித்துக் கொண்டு இகபர சுகம் பெறக் கடவீர்களாக!

என்னைப்பற்றி விளக்கத்தான் வேண்டி இருக்கிறது. ஏன் என்றால், வழக்கு அல்லவா தொடுத்திட வேண்டிய ‘காலம்’ வந்து விட்டது. அதனால்தான், தற்பெருமை என்று தயவு செய்து யாரும் எண்ணி விடாதீர்கள்.

திருச்சிராப்பள்ளிக்கு அருகே உள்ள ‘தேவதை’ நான்.

பெயர், சமயபுரத்தாள் – என் பெயரே ஊருக்குமாகி, சமயபுரம் என்று இருப்பதை உலகு அறியும்.

இந்தச் சமயபுரத்திலே, திருக்கோயில் கொண்டு எழுந் தருளியிருக்கும் என்னை, மஹாதேவி! மாதா அம்மை! அருளும் தாய்! எவ்வரமும் அருளும் எங்கள் சமயபுரத்தம்மை! எந்த ரோகமும் போக்கும் இறைவி! என்றெல்லாம் கூறுவர்.

கோயிலும், என் கோயிலின் செல்வாக்கும், மெள்ள மெள்ள, ஆனால் நிச்சயமாக வளர்ந்து வளர்ந்து, நான், சகலரும் போற்றும் சமயபுரத்தம்மை ஆனேன்.

என்னை நாடிடாத பேர்வழிகள் இல்லை. பாடிடாத திருவாயில்லை! எவ்வளவு உருக்கமான கீதங்களைக் கேட்டிருக் கிறேன்.எப்படிப்பட்ட அருமையான அர்ச்சனைகள், என் மெய் சிலிர்த்துவிடுகிறது. இப்போது எண்ணிக்கொண்டாலும்.

பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமன் ரங்கநாதன், மிகமிக நீண்ட காலமாக ஸ்ரீ ரங்கத்தில் ‘ராஜாங்கம்’ நடத்திக் கொண்டு வருகிறான் என்றாலும் என்னுடைய ஆலயத்தின் புகழ். அவனையே எழுந்து வந்து பார்த்துவிட்டுப் போகச் செய்க என்று எண்ணவேண்டிய அளவிலே வளர்ந்தது.

தங்கச் சிலைபோன்ற என் குழந்தைக்கு, தாயே! கண்ணிலே ‘பூ’ விழுந்துவிட்டது – போடாத மருந்தில்லை, தேடாத டாக்டரில்லை, எதிலும் எள்ளளவு பலனும் கண்டேனில்லை, அம்மையே! உன் சன்னிதியில் கொண்டு வந்து கிடத்திவிட்டேன் இனி உன் அருள்தான், இந்தப் பொற் கொடியைக் காப்பாற்ற வேண்டும், கோயில் கோயிலாகச் சுற்றிப் பெற்றெடுத்த குழந்தையம்மா இது! சமயபுரத்தாளே! உன் மகிமையைத் தெரிந்துதான் இங்கே வந்து அடைக்கலம் புகுந்தேன், உன் பாதத்திலே இந்தக் குழந்தையை வைத்து விட்டேன், இனி நீயே துணை, நீயே கதி, உன் ‘பிச்சை’தான் இந்தக் குழந்தை. நீ கண் திறந்து பார்த்தால்தான் குழந்தை பிழைக்கும்! தாயே! தங்கத்தாலே கண்மலர் செய்து காணிக்கை தருகிறேன்! வெள்ளித் தொட்டில் செய்துவைக்கிறேன்! ஆயிரம் இளநீர் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்! ஐயாயிரம் ஆரஞ்சு படைக்கிறேன்! பால் பாயாசத்துடன் பருப்பு வகையுடன். பரமான்னம் செய்து படைக்கிறேன். உன் திரு விளக்கு வைக்கிறேன், திருவிழா நடத்துகிறேன், தேவி! தயாபரி! தேனாபிஷேகம் செய்விக்கிறேன் சமயபுரத்தம்மே சகலருக்கும் தாயானவளே! உன் அருளைத் தாருமம்மா. உன்னாலே ஆகுமம்மா! என்றெல்லாம் பூஜிப்பார்கள்! நினைத்தாலே, பெருமூச்சு விடவேண்டும் போலிருக்கிறது!

ஆண்டு எட்டு ஆயிற்று எனக்கான அதே நாளில் மணமான எதிர்வீட்டு ஏமலதாவுக்கு. நாலாவது குழந்தை – நாரும் நரம்புமாகத்தான் இருக்கிறது. என்றாலும் நாலாவது குழந்தை!

என் பாழும் வயிற்றிலேயோ இதுவரை ஒரு பூச்சி புழுவும் இல்லை! சாப்பிடாத டானிக் இல்லை, பார்க்காத லேடி டாக்டர் இல்லை, டஜன் கணக்கில் லோத்ரா சாப்பிட்டாகிவிட்டது. சித்த வைத்ய செந்தூரமும் ‘டப்பி டப்பி’யாகச் சாப்பிட்டாகிவிட்டது, ராமேஸ்வர முழுக்காயிற்று, ஊஹும்! பலன் இல்லை, சமய புரத்தம்மே! நீதான் எனக்கு ஒரு குழந்தை அருள வேண்டும்,என் குலம் தழைக்க அருள்பாலிக்க வேண்டும், சொத்து இருக்கிறது இலட்சக்கணக்கில். சுகம் இருக்கிறது பிறர் பார்த்துப் பொறாமைப்படும் வகையில் வாரி எடுத்து அணைத்துக்கொள்ள ஒரு குழந்தைதான் இல்லை. ஒரு பிள்ளைக்கனி அமுதை தாயே! நீதான் தரவேண்டும்! பிறந்ததும், உன் சன்னதிக்கு கொண்டு வந்து, குழந்தையின் எடைக்கு எடை வெள்ளி தருவேன் பெண்ணானால் சமயபுரத்தாள் என்றே பெயரிடுவேன். பிள்ளையானால் சமயபுரத்தரசன் என்று பெயர் சூட்டுவேன், இன்னமும் என்னைச் சோதிக்காதே என்னம்மே! உன் அருளைத் தாருமம்மா! என்று உள்ளம் உருக உருக வேண்டிக் கொள்வார்கள்.

என்னமோ ஏதோ என்று இருந்துவிட்டேன் சொரிந்ததால் ஏற்பட்ட கீறல் என்று எண்ணிக்கொண்டேன்; ஆனால் கீறல்; வளர்ந்து வளர்ந்து, வாடைமிகும் நீர் கசிய லாயிற்று, நாட்டு வைத்தியர் பார்த்தார், இங்கிலீஷ் மருந்தும் சாப்பிட்டாயிற்று, தேவி! இது மறையக் காணோம். பார்க்கப் பயங்கரமானதாகிவிட்டது, பக்கம் சென்றால் நாற்றமடிக்கிறது என்று எனக்குத் தெரியாமல் என் மனைவியே, அடுத்த வீட்டுக் காரியிடம் பேசிக் கொள்கிறாள், என்ன கர்மமோ! என்ன பாபம் செய்தேனோ! எனக்கு வந்தது இந்த நோய்! குஷ்டம் என்கிறார்கள் தேவீ! குஷ்டமாம் இது! யாருக்கு என்ன குறை செய்தேனோ, குலதெய்வமே! எனக்குக் குஷ்டம் ஏன் வந்ததோ போகக்காணோம்! உன் கோயிலைச் சுற்றினால், தீராத ரோகமில்லை என்று தெரிந்தவர்கள் சொன்னார்கள். உன் கண் பார்வை பட்டால் போதும். கடும் குஷ்டம் நொடியில் போய் விடுமே. பொன்நிற மேனியை, தேவீ! நீ நினைத்தால் தர இயலாதா! சகல சக்தியும் உன்னிடம் இருக்கும் போது, சமயபுரத்தாளே! இந்தப் பாவியின் குஷ்டத்தைப் போக்குவதா ஆகாத காரியம்? என் சக்தியானு சாரம், நான் கைங்காரியம் செய்வேன் அம்மையே! வீடு வாசலை விற்றுக்கூட நான் உனக்குக் கைங்காரியம் செய்வேன்! இந்தத் தீவினையைத் துடைத்துவிடம்மா! தீராத வல்வினைையத் தீர்த்து வைக்கும் பேராற்றல் பெற்றவளே! சீராரும் சமயபுரத்தே செங்கோ லோச்சிப் பாராளும் மாதாவே, பாரம்மா என் கதியை! என்று கண்ணீர் கசியும் நிலையில் கை கூப்பித் தொழுது நிற்பார்கள்.

பாலம் வேண்டும், பள்ளிக்கூடம் வேண்டும், பாதை வேண்டும். வேலை வேண்டும், பல பொருளின் விலைகுறைய வேண்டும். பாரமான வரி குறைய வேண்டும் என்று பன்னிப்பன்னி எழுதிப் பாமரமக்கள் தொல்லை தருகிறார்கள். தெரியும் எனக்கு. அந்தத் தொல்லையுடன் சேர்ந்து நானும் தொல்லை தருவதாக எண்ணிக்கொள்ளாதீர் கடிதத்தின் அளவைக் குறைத்துக் கொள்கிறேன் மனதிலே உள்ள கஷ்டம் மலை போலிருக்கிறது. அதனால் இவ்வளவு கூறவேண்டி வருகிறது. இனிச் சுருக்கிக் கூறுகிறேன், குழந்தை வேண்டியும், நோய் நீக்கச் சொல்லியும், பித்தத்தைப் போக்கச் சொல்லியும் பேய் பிசாசை ஒட்டச் சொல்லியும், பொருள் வேண்டியும் பிழைப்பு வேண்டியும், தக்க இடத்தில் வரன்வேண்டியும், விரோதியைத் தரை மட்டமாக்க வேண்டியும் என்னை நாடி பக்தர்கள் சாரை சாரையாக வந்த வண்ணம் இருப்பர்!

நடந்து வருவர், குடும்பம் குடும்பமாக வருவர், குளித்துக் குங்குமம் அணிந்து வருவர், இடுப்பில் குழந்தையுடன் வருவர். வைரத்தோடணிந்த வத்சலாவும் வருவாள்; வயிற்று வலிக்காரி வேலாத்தாளும் வருவாள்; காசநோய் பிடித்த கனவானும் வருவான்; மேகநோய் பிடித்த மைனரும் வருவான். இன்ன குலத்தார், இன்ன ஜாதியார் என்றில்லை; சகலரும் வருவர், சம்பிரமமாகப் பூஜைகள் செய்வர்; சோடசோபசாரம் செய்வர் சொர்ணாபிஷேகம் செய்வர்; தோத்திரம் செய்வர்; துதிபாடுவர்; அபிஷேகம் நடக்கும், ஆராதனை செய்வர்; ஓயாது நடக்கும். ஒரு குறையுமின்றி நான், ஈடு எதிர்ப்பின்றி எட்டுத்திக்கும் என் புகழ் பரப்பி, இலட்சோப லட்சம் மக்களின் ‘இஷ்டதேவதையாகி, கெம்பீராமாகக் கொலுவீற்றிருந்து வந்தேன் இப்போதோ… நெஞ்சு பகீர் என்கிறது; நாளை நடப்பதை யார் அறிவார் என்று எண்ணி அழலாமா என்றுகூடத் தோன்றுகிறது. வந்தது பேரிடி! விபத்து, பெரும் விபத்து வந்திருக்கிது என் அரசுக்கு அபாயம், என் அந்தஸ்த்துக்கு ஆட்டம் கொடுத்திருக்கிறது, என் செல்வாக்கைச் சிதைக்கச் சதி நடைபெறுகிறது. என் கோலாகல வாழ்வுக்கு வேட்டுவைக்கக் கொடியவர்கள் கிளம்பியுள்ளனர், என் செய்வேன், எப்படி இதிலிருத்து தப்பிப் பிழைப்பேன் என்று எண்ணும்போதே, குலை நடுக்கமெடுக்கிறது.

செந்தமிழ் நாட்டிலே எனக்கென்று ஏற்பட்டு தழைத்து வந்துள்ள செல்வாக்கைச் சிதைக்கும் சிறு செயலை மிகத் துணிவுடன் செய்கிறார்கள், சிறுமதியாளர்கள். அச்செயலைக் கண்டிக்காமல், சீரழிவான அந்தப் போக்கை எதிர்க்காமல் இருப்பது மட்டுமல்ல, மக்கள் அதனை ஆதரிக்கவும் செய்கிறார்கள்.

எடுத்துக்காட்டுக்காகக் கூறுகின்றேன், கோபத்தால் சாபமிடு கிறேன் என்று தவறாகக் கருதிவிட வேண்டாம், மக்களிடம் செல்வாக்குப் பெற்று சட்டப்படி மந்திரிகளாகி சர்க்காரை நடத்திச் செல்கிறீர்கள். உங்கள் கண் எதிரிலேயே உங்களைத் துச்சமென்று மதித்து, உங்கள் ஆணையை மதியாமல், ஒரு கூட் டத்தார் ‘போட்டி சர்க்கார்’ அமைத்து, அதனைப் படாடோபமாக விளம்பரம் செய்து, பாமர மக்களின் ஆதரவைத் திரட்டி, எமது அமுலுக்கு அடங்கி நடந்துவாரீர் என்று கட்டளைகள் பிறப்பித்தால் உங்களுக்குக் கடுங்கோபம் பிறவாதா, மனம் பதறாதா! சகல விதமான அதிகாரமும் பெற்று, ‘கண்கண்ட தெய்வமாய்’, ‘கடாட்சிக்கும் தேவியாய்’ அரசோச்சி வந்து கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு போட்டி சர்க்கார்’ அமைத்திருக்கிறார்கள். புல்லர்களின் செயலல்லவா, இது! புன்னகையா பிறக்கும் இதனைக் கண்டு! உங்களிடம் உண்மையை உரைப்பதிலே தவறென்ன, நான் உங்களுக்காக அனுப்பியுள்ள வேப்பிலையிலே என் கண்ணீர் கலந்திருக்கிறது! அவ்வளவு மனக்கஷ்டம்!

எப்படிப்பட்ட செல்வாக்கு எனக்கு என்று எண்ணு கிறர்கள்? விரதமிருப்போர் எவ்வளவு! வீழ்ந்து வணங்கினோர் எவ்வளவு! என் சன்னதியை நாடிவந்த மோடார்கள் எவ்வளவு வகையானவை, என்னைப் பூஜித்த பூபதிகள் எவ்வளவு!! பூரித்துப் போகாமலிருக்க முடியுமா? ஆயுள் தண்டனை பெற்று, ஆண்டு இரண்டு சிறையில் அடைபட்டிருந்த ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர், வெள்ளைக்கார நாட்டு பாரிஸ்டரும், அவர் கண்டு மெச்சிப் பாராட்டத்தக்க அறிவாற்றல் கொண்ட சென்னை பாரிஸ்டர் எதிராஜும் காட்டிய திறமையால், விடுதலை செய்யப்பட்டார் உடனே பாகவதர், என் சன்னதிக்கு வந்தார், பயபக்தி விசுவாசத்துடன் தொழுதார். பூஜைகளைச் செய்தார். இசையால் அபிஷேகம் செய்தார் – என் செல்வாக்கு எவ்வளவு என்பதை விளக்க ஒரு சிறு எடுத்துக்காட்டு! இப்படிப்பட்ட என் செல்வாக்கு சீரழியும் காலமும் பிறந்ததே என்று எண்ணும் போது என் மனம் எரிமலையாகித்தானே தீரும். சலிக்காமல் என் கோயிலைச் சுற்றினர், சளைக்காமல் என் நாமத்தைப் பூஜித்தனர் என்னால் ஆகாதது எதுவுமில்லை என்று வாயாரப் பேசினர் – அவர்கள் கேட்ட வரம் அவ்வளவும் கொடுத்தேனா. தீராத வல்வினையைத் தீர்த்துவிட்டேனா, கோரிக்கைகளை நிறைவேற்றினேனா என்று கேட்கவோ, ஆராயவோ, என் ”பக்தகோடிகள்* எண்ணம் கொள்ளவில்லை. தொழுத வண்ணம் இருந்தனர், இப்போது நான் அழுதவண்ணம் இருக்கிறேன்! பழமலையைக் கண்டேன், பால் குளம் கண்டேன், பட்டாடை போர் போராக, பலகாரவகை குவியல் குவியலாக, பரிமள கந்தம் பலவகை புஷ்பம் பலகாததூரம் மணம் பரப்பும் அளவுக்குக் கண்டேன்! கண்ட பிறகு, எனக்குக் கலக்கமா பிறக்கும்? குறைகளைத் தீர்த்து வைத்தாலும், இயலாது போயினும், இந்தப்பக்தர்களும் நமக்கு ஒரு குறையும் வைக்க மாட்டார்கள் என்று எண்ணிக் களித்தேன். இறுமாந்தும் கிடந்தேன். பாமர மக்கள் மட்டுமா, என் பக்தர்களாக இருந்தனர்? பாரிஸ்டரும், டாக்டரும், என்ஜினியரும், கலெக்டரும், போலீஸ் அதிகாரியும் போர்வீரரும், என் கோயிலை வலம்வரக் கண்டேன்! அவரவர் அவரவருக்கு ஆதிக்கம் இருக்கும் துறைகளிலே இருந்த மற்றவர்களை என்னிடம் அழைத்து வரும் தூதுவராயினர்! என் துரைத்தனத்துக்கு அடங்கி இருந்தவர்கள், சாமான்யமான வர்களல்ல! அப்படிப்பட்ட எனக்கு…!!

சமயபுரத்தம்மையைத் தரிசிக்கச் செல்கிறேன் சமயபுரத் தாளுக்குப் பூஜை நடத்தினேன் – சமயபுரத்தம்மைக்கு வேண்டிக் கொண்டிருக்கிறேன் என்று ஊ ஊர் மக்கள் பேசிடக் கேட்டு உள்ளம் மகிழ்ந்து இருந்து வந்த எனக்குக் காதிலே நாராசம்போல் விழலாயிற்று. வேறோர் பேச்சு!

சமயமாவது, புரமாவது, பூஜையாவது வினையைத் தீர்ப்பதாவது-அருளாவது ஐஸ்வரியம் தருவதாவது என்று பேசி, மதத்தை மடைமை என்றும், புராணத்தைப் புரட்டு என்றும் இதிகாசத்தை இழிவுப் பெட்டகமென்றும் சடங்குகளை மூட நம்பிக்கை என்றும், சாஸ்திரங்களைச் சூழ்ச்சிகளென்றும் பேசித் திரியும், புதுயுக ராட்சகர்களான சுயமரியதைக்காரர்களின் எதிர்ப்பு என்னை இழிநிலைக்குக் கொண்டு வந்தது போலும்! அந்த ஆசாமிகள், சமயபுரத்தம்மையை நம்பி சக்கையாகாதே! உழைத்து உழைத்துப் பெற்ற பணத்தை ஊதாரித்தனத்துக்குச் செலவிடாதே! நடமாடும் கோயிலுக்குப் பூஜை செய். நயவஞ்சகர் காட்டும் பாதையில் செல்லாதே, என்று சண்ட மாருதப் பிரசாரம் செய்து, என் பக்தர்களின் மனதைக் களைத்து என் செல்வாக்கைக் கெடுத்து வருகிறார்கள் போலும் என்று எண்ணி, இதுதானா அம்மே! இன்றே ஒரு தடை உத்தரவு போட்டு அந்தத் தான் தோன்றிகளைத் தாக்கித் தகர்த்துவிடுகிறோம். தாயே! அவர்களுடைய பேச்சு, எழுத்து, பாட்டு, கூத்து, எதையும் நாட் டிலே பரவாதபடி, ‘வேலி’ கட்டுகிறோம். விசாரத்தை விடு, என்று எனக்கு ஆறுதல் கூற முன்வராதீர் ஐயன்மீர்! எனக்கு வந்துவிட்ட இடியும் இழிவும் கயமரியாதைக்காரர்களால் ஏற்படவில்லை. எல்லாம் நம்மவர்க்கள் செய்கிற காரியமேதான். எனக்கு நாசம் விளைவிக்கும் பேர்வழிகள், பக்தி குறைந்தவர் களல்ல, பரமன் எங்கு இருக்கிறார் என்று கேட்பவர்களல்ல, பாடு படாமல் வாழ எண்ணுபவன் பாமரரை ஏயக்கக் கட்டிவிட்ட பொய்யும் புரட் டும்தான் புராண இதிகாசம் என்று பேசுபவர் களல்ல – எல்லாம் பக்தர்களால் வந்த வினைதானய்யா, பக்தர்களால் வந்தவினைதான்!!

எவ்வளவோ கோலாகலாமாக இருந்தவரும் எனக்கு மானநஷ்டம் ஏற்படும் விதமான செயல் பகிரங்கமாக நடைபெறுகிறது.

என் மகிமையைக் குறைத்து, என் புகழுக்குக் களங்கம் தேடும் காரியம் நடைபெறுகிறது. வெகு அருகாமையில், மிக ஜரூராக.

சமயபுரத்துக்குச் சில கல் தொலைவிலே ஒரு பட்டிக்காடு யாரும் அதன் பெயரைக் கேட்டிருக்கமாட்டார்கள் – ஒரு முக்கியத்துவமும் கிடையாது – இப்போதோ அதன் பெயர், பிரக்கியாதியாகிவிட்டது – சமயபுரமாகிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்களேன், வயிறு எரிந்துதான் சொல்கிறேன்.

புறத்தாக்குடி என்பது அந்த குக்கிராமத்தின் பெயர், சேர்ந்தாற்போல் நூறு பேரைக்கூடக் காண முடியாது அங்கு. அப்படிப்பட்ட இடம் இப்போது திமிலோகப்படுகிறது. இருபது முப்பது மைல் சுற்றளவுக்கும் உள்ள சிற்றூர் பேரூர்களிலிருந்து திரள் திரளாக மக்கள் சென்ற வண்ணமிருக்கிறார்கள். ஆணும் பெண்ணும், காய்ந்ததும் மினுக்கித் தெரிவதும், கால்நடையாகவும் காரிலும், கையில் காசு உள்ளதும் வயிற்றுப்பசி கொண்டதும். குறட்டைத் தலையும் பகட்டு நடையும், எல்லா ‘ரகமும்’ புறத்தாக்குடி! புறத்தாக்குடி!! என்று செல்வதைக் காண்கிறேன்.

ஆஹா! என்ன மகிமை, என்ன மகிமை! எப்படிப்பட்ட சக்தி! எப்படிப்பட்ட சக்தி! என்று பேசுகிறார்கள், என் காது குடைகிறது. கண் கசிகிறது.

கண் பார்வையைத் திரும்பப் பெற்றான்! கோர்ட்டில் வழக்கு கெலித்தது! குழந்தை, இருபது வருஷமாக இல்லாமலிருந்த வருக்குப் பிறந்தது, இத்தனைக்கும் புருஷனுக்குக் கொடிய குலைநோய் கொல்லுகிறது! புதையல் கிடைத்தது, மேகம் பறந்தது. குஷ்டம் மறைந்தது! காலிழுப்பு கைவலிப்பு, எல்லாம் தீர்ந்தது என்று கதை கதையாகப் பேசுகிறார்கள் – புளுகுதான், ஆனால் அது இன்று பஞ்சாமிர்தமாகிவிட்டது.

என் கண் எதிரில், என் அரசு நடைபெறும் இடத்துக்கு அருகே, என் மகிமையை, அருளைப் போற்றிப் புகழ்ந்து, வாழ்த்தி வணங்கிக் கொண்டிருந்த அதே மக்கள், செச்சே! என்ன மதியீனம், எவ்வளவு மனக் குழப்பம், எத்துணை நன்றி கெட்ட தனம், இப்போது அதே மக்கள், என்னை எவ்வளவு பக்தியுடன் நாடி வந்தார்களோ, அதேவிதமாக, புறத்தாக்குடி செல்கிறார்கள்! எங்கும் என் நாமமே நாதமாக இருந்து வந்தது; இன்றோ எங்கும். எவரும் புறத்தாக்குடி, என்று புகழ்பாடி ஆடுகிறார்கள். கண்டால். வேதனை எவ்வளவு ஏற்படும் எனக்கு!

யாரோ ஒரு சாமியாராம் – ஆயிரம் ஆயிரம் சாமியார்கள் என் அடிபணிந்து நான் இட்ட பிச்சையை உண்டு வாழ்ந்தார்கள் அவனை ஒரு பூனை கடித்தாம்; அவன் இறந்து போனானாம் அவனைச் சாகடித்த பூனையை ஒரு நாய் கடித்திருந்ததாம், அந்த நாய்க்கு வெறி பிடித்ததாம் – கதையைக் கேட்டாலே, கேவலம் தோன்றும் – வெறிபிடித்த நாயிலிருந்து கதை ஆரம்பமாகிறது. நாய் பூனையைக் கடிக்க, பூனை சாமியாரைக் கடிக்க, சாமியார் இறந்து பட, அந்தச் சாமியார் இறந்த இடத்திலே இருக்கும் ‘சாம்பலை’ எடுத்துப் பூசிக் கொண்டால் சகல சித்தியும் கிடைக்கிறது என்று நம்பிக்கொண்டு, துளியும் தெளிவு இல்லாமல் கும்பல் கும்பலாகப் புறத்தாக்குடி செல்கிறார்கள். இந்தப் பக்தர்கள்!!

ஒரு முக்கியமான சர்க்கார் அவசரமாகக் கவனிக்க வேண்டிய தகவல் இதிலே தொக்கி இருக்கிறது – என் செல் வாக்கைச் சிதைக்கும் விதமாக முளைத்துள்ள இந்தப் புது புனித ஸ்தலத்துக்குக் காரணமாக இருந்த சாமியார், கிறிஸ்துவர். இந்து அல்ல! உடனே இதைக் குறித்துக் கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன். புறத்தாக்குடிக்குப் புற்றீசல் போலச் செல்பவர்கள், இந்துக்கள் – அங்கே இருந்து இன்று என்னை இம்சிக்கும் நிலையை உண்டாக்கி விட்டவர், கிறிஸ்துவர். இந்து மதம் நமது சொந்த மதம் புராதன மதம், மூவாதி தேவர்களால் தரப்பட்ட மூலமதம், அவதாரங்களைக் கொண்ட மதம், ஆழ்வாராதி நாயன்மார்களைக் கண்டமதம். அப்படிப்பட்ட மதம் இருந்தும். அதிலே பிறந்து வளர்ந்தவர்கள், ஒரு கிறிஸ்துவச் சாமியாரின் சாவிடத்தைப் புனித இடமாகக் கொண்டு, புறத்தாக்குடி செல்கிறார்கள், பொறுத்துக் கொள்ளக் கூடியதுதானா இனி!

நல்லவேளை, அந்த நாயையும் பூனையையும் மறந்து விட்டார்கள் – சாம்பல் அளவோடு நிற்கிறார்கள்!!

என்னை நாடி,என் புகழ் பாடி, என் மகிமையைப் பேசி, என் செல்வாக்கு என்றும் அழியாதது என்று நான் பரிபூரணமாக நம்பும்படி இதுநாள் வரையில் நடந்து கொண்டு வந்தவர்கள், இன்று ஏன் புது இடம் செல்கிறார்கள், புறத்தாக்குடி ஓடுகிறார்கள்?

“நல்ல டாக்டரை அழைத்து வந்து காட்டப் போகிறேன்” என்று வைத்யம் பார்த்துவரும் டாக்டரிடம் கூறினால் என்ன பொருள்? கேவலப்படுத்துவதுதானே!

அழகான பெண் கிடைக்கவில்லையா? என்று நண்பனிடம் அவன் நண்பன் கேட்டால் என்ன பொருள். இருப்பவள் அவலட் சணம் என்பதுதானே!

சமயபுரத்தாள் நானிருக்க, சகலருக்கும் தாயாக நானிருக்க, வேண்டும் வரம் அருள நான் இருக்க, நெடுங்காலமாக நான் இருக்க, நேற்று முளைத்த இடத்துக்கு, மந்தை மந்தையாகச் செல்வதா! அக்ரமமல்லவா?

சமயப்புரத்தாளைத் தொழுது வந்தோம். ஒரு பலனும் இல்லை; சகல சக்தியும் படைத்தவள் என்று நம்பினோம், ஒரு குறையும் தீரவில்லை, வீண்வேலை இந்தப் பூஜை, வெட்டி வேலை அங்குச் செல்வது, கால் கடுப்பும் பொருள் இழப்பும்தான் கண்ட பலன், புறத்தாக்குடி என்றோர் இடத்திலே புதுமை ஒன்று நடைபெறுகிறதாம், அங்குக் காலமான சாமியாருடைய சாம்பல். சகல நோயையும் போக்கி, சகலமும் சித்திக்கும்படி செய்கிறதாம். இனி அங்குச் செல்வோம், நமது குறையைத் தீர்த்துக்கொள்ள என்று எண்ணித்தானே இந்த மக்கள், அங்குச் செல்கிறார்கள். என்மீது நம்பிக்கை இல்லை என்றுதானே பொருள்? என் மகிமை வெறும் கட்டுக்கதை, கவைக்கு உதவாது என்றுதானே அவர்கள் கூறாமற் கூறுகிறார்கள்! எப்படி இருக்கும் என் மனம், நீங்களே சொல்லுங்கள். என்னமோ கடவுள் விஷயம், நமக்கென்ன தெரியும் என்று சொல்லி விடாதீர்கள். எனக்கு வந்த கஷ்டம் போல் உங்களுக்கும் நாளை வரக்கூடும் ஆகவே சிந்தனை செய்யத்தான் வேண்டும்.

திருவல்லிக்கேணி கடற்கரையில் அலங்கார மேடை அமைத்து ஆயிரம் விளக்கு போட்டு, அன்பர்காள்! நண்பர்காள்! என்று நீவிர் பேச ஆரம்பித்த காலை, பதினாயிரக் கணக்கிலே கூடி இருந்த மக்கள். எங்கோ ஒரு மூலையில் எவனோ ஒருவன் அன்புகெழுமிய தோழர்களே! என்று பேசத் தொடங்கியதும், உங்கள் எதிரே இருந்த கூட்டம் எழுந்து அங்குச் சென்றால். உங்களுக்கு உள்ளம் எப்படி இருக்கும்? கடல் பொங்கி இந்தக் கருத்தற்றவர்களை மூழ்கடிக்காதா, கடுங்காற்றுக் கிளம்பி, இதுகளின் கண்களிலே மணலை இறைத்து ஒழிக்காதா, என்றுகூட எண்ணுவீர்களல்லவா!

இப்போது எண்ணிப் பாருங்கள், புறத்தாக்குடி சம்பவம் என் மனதை என்ன பாடுபடுத்தி இருக்கும் என்பதை.

மானமே பறிபோகிறது. நான் வாழ்ந்து வந்த வாழ்வே நாசமாகிறது. என் கீர்த்தி கரைகிறது, செல்வாக்கு சிதைகிறது. புதிதாக முளைத்த இடம், புண்ய ஸ்தலமாம். என் சமயபுரத்தின், மகிமையைக் கெடுப்பதா, அதைச் சகித்துக் கொண்டு நானும் ‘தேவி’யாக இருப்பதா! பக்தியின் மேம்பாடு தெரிந்தோரே! பழமையைப் போற்றும் சீலர்கள்! புராண காலத்தைப் பொற்காலம் என்று கூறும் புண்யர்காள்! இது என் பிரச்னை மட்டுமல்ல. நன்றாக எண்ணிப் பாருங்கள். இது பொதுப் பிரச்னை, நாம் அனைவரும் கூடிப் பேசிப் பரிகாரம் கண்டாக வேண்டிய, சிக்கலான பிரச்னை.

புது இடம் தேடுகிறார்கள் என்றால், பழைய இடத்திலே நம்பிக்கை நசிந்துவிட்டது என்றுதானே பொருள் – இவ்வளவு காலமாக ஏமாந்தார்கள் என்பதுதானே இதன் பொருள் – என்று பேசுகிறார்கள்-அவர்கள் தானய்யா, சு.ம.க்காரர்கள்.

இது எத்தனை நாளைக்கோ? இன்னொன்று முளைக்கும் வரையிலும்!! என்று ஏளனம் செய்கிறார்கள்.

அவ்வளவு புரட்டு, ஒவ்வொன்றாக அம்பலமாகிறது என்று இடித்துரைக்கிறார்கள்!

எது அப்பா! மகிமை மிகுந்த இடம், சமயபுரமா? புறத்தாக்குடியா? என்று கேட்டுக் கேலிபேசுகிறார்கள். உண்மை யான பக்தியும் கடவுள் நம்பிக்கையும் கொண்டவர்கள் இப்படியா சட்டை மாற்றுவதுபோல தொழுகை இடத்தை மாற்றிக் கொண்டிருப்பார்கள்? தெளிவு இருந்தால், இவ்வளவு காலத்துக்குப் பிறகா சமயபுரம் இவ்வளவுதான் என்ற புத்தி பிறக்கும்! என்றெல்லாம் பேசுகிறார்கள்.

வீணாக அவர்கள் மீது கோபித்துக்கொண்டு பயன் இல்லையே! நானிருக்க, இன்னொரு அற்புதவான் கிளம்பலாமா? இப்படிப் போட்டியும் பொறாமையும் பொச்சரிப்பும் பூசலும் இருந்தால், அவ்வளவும் புரட்டு என்றுதானே, அவர்கள் பேசுவார்கள்.

ஆகவே, ஐயன்மீர்! என் செல்வாக்கைச் சிதைத்து மதிப்பைக் குலைத்து, மகிமையைப் பழித்து, மதத்தின் மீதே மக்களுக்குச் சந்தேகம் பிறக்கும் விதமாக, புறத்தாக்குடி நடை பெறுவதால், மதத்தைக் காப்பாற்றவும், என் மகிமையைப் பாதுகாக்கவும், உடனே ஒரு தடை உத்திரவு பிறப்பித்து, புறத்தாக் குடியை மூடிவிட வேண்டும். இல்லையானால் எனக்கும் இழிவு உங்களுக்கும் கேவலம்.

உற்பத்தியைப் பெருக்கு என்பது இன்றைய சர்க்காரின் கொள்கை, வேறு எதிலே உற்பத்தியைப் பெருக்க முடியா விட்டாலும், புண்யஸ்தல உற்பத்தியையாவது பெருக்குவது சரி தானே, என்று நம்மவர் சிலர், விஷய மறியாமல் வாதாடுகிறார்ளாம்.

இந்தத் துறையில் உற்பத்தி பெருகப் பெருக, ஏற்கனவே உள்ளவைகளின் மதிப்பு மடிகிறது என்று பொருள் மொத்தத்திலே இந்தத் துறையின் மதிப்பே கெடும்.

மேலும், புறத்தாக்குடிக்குக், காரணம், கிறிஸ்துவர், அதனை மறவாதீர்! சத்யமேவஜெயதீ! ரகுபதி ராகவ, ராஜா ராம்! இவை நமது மந்திரங்கள், கவனமிருக்கட்டும்.

நிலைமையின் நெருக்கடியையும், பிரச்சினையின் பயங்கரத்தையும் உணர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கா விட்டால், புறத்தாக்குடியானும், அவனுக்கு உடந்தையாக நீங்களும் இருந்து கொண்டு என் மானத்தைக் கெடுக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டி, மான நஷ்ட வழக்குத் தொடுக்க தீர்மானித்து விட்டேன். பூஜாரி, வெற்றி என் பக்கம் நிச்சயமாக இருக்கும் என்று உறுதி அளிக்கிறான். எனக்கே கூடத் தெரியும், என் சன்னதிக்கு எத்தனையோ ஜட்ஜுகள் வந்து போயிருக்கிறார்கள்.

என்னமோ எழுதினேன் என்று பாராமுகமாக இருக்க வேண்டாம். உடனே பரிகாரம் தேடித் தரவும்.

இங்ஙனம்,
பலகாலமாக மகிமையுடன்
வாழ்ந்து வரும்
சமயபுரத்தம்மை.

குறிப்பு :- அரசியல் காரியம் அதிகமாக இருக்கிறது என்று சாக்குக் கூறிவிடாதீர்கள், நமது அரசியலே மதத்தின்மீது கட்டப் பட்டிருக்கிறது என்பதை உங்களுக்குக் கவனப்படுத்துகிறேன். மேலும் இப்போது, காங்கிரசை எதிர்த்த உழைப்பாளி கட்சி போன்றவைகளைக் கூட பதவி கொடுத்துச் சரிப்படுத்தி விட்ட தால், சர்க்காருக்கு தொல்லையே கிடையாது என்று பூஜாரி கூறுகிறான், புதிய மந்திரி பக்திமானாம் – இங்கே வருகிறாரா, புறத்தாக்குடி போகிறாரா, தெரியவில்லை. என் விஷயத்தை உடனே கவனித்து ஆவன செய்யவும்.

திருச்சி, மே 2-தங்கள் தீராத நோய்கள் தீருமென்ற நம்பிக்கையில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இங்கிருந்து 12 மைல் தூரத்திலுள்ள புறத்தாக்குடி கிராமத்துக்கு வந்தவண்ண மிருக்கின்றனர்.

திருச்சி, சென்னை பிரதான சாலையில் புறத்தாக்குடி இருக்கிறது. அங்க வாழ்வோர் பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கர்கள். ஹிந்துக்கோயில் மாதிரி நூறு வருஷத்துக்கு முன் கட்டப்பட்ட ஒரு மாதா கோயில் அவ்வூரில் இருக்கிறது. மாதா கோயிலை ஒட்டியுள்ள மயானத்தில் பல வருஷங்களுக்கு முன், அருகிலுள்ள இருங்கலூர் கிராமத்தில் வசித்த பூஜ்யர் முடியப்பர் அடக்கம் செய்யப்பட்டார்.

கடந்த சில தினங்களாகப் பெரும்பாலும் ஹிந்து முஸ்லிம்; பெண்கள் உள்பட ஏராளமான நோயாளிகள் மாதாகோயிலுக்கு வந்த வண்ணமிருக்கின்றனர். நோயாளிகள் பலர் துர்த் தேவதைகளால் பீடிக்கப்பட்டவர்களாம்.

அடைப்புள்ள ஒரு இடத்தில், நோயளி அவர்கள் உட்கார வைக்கப்படுகின்றனர். கொஞ்ச நேரம் கழித்து அவர்கள் வெளியே வருகின்றனர். அவர்களைப் பீடித்துக் கொண்டுள்ள துர்த்தேவதைகள் பறந்து விடுவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். தேவதை போய் விடுவதாகக் கூறியது பற்றி மூன்று முறை பிரமாணம் செய்யுமாறு நோயாளிகளிடம் மாதா கோயிலைச் சேர்ந்தவர்கள் கையில் தீச்சட்டி வைத்துக் கொண்டு கேட்கின்றனர்.

பின், நோயாளி அருகிலுள்ள பனந்தோப்புக்கு ஓடி. அங்குள்ள மரத்தில் தலையால் முட்டுகிறார். கோயிலைச் சேர்ந்தவர் நோயாளியின் தலை உரோமத்தைக் கொஞ்சம் கத்தரித்து மரத்தில் கட்டுகிறார், இத்துடன் சிகிச்சை முடிகிறது துர்த்தேவதை நோயாளியை விட்டு நீங்கிவிட்டதாகக் கருதப்படுகிறது.

குஷ்டம், பார்வைக் குறைவு போன்ற நோயுள்ளவர்களும் இங்கு வருகின்றனர்.

எனினும் சிகிச்சை உண்மையானதுதான் என யாரும் உத்தரவாதமளிக்க முன்வரவில்லை. ஆனால் ஜனங்கள் பெருவாரியாக வந்த வண்ணமிருக்கின்றனர். இதனால், போக்குவரத்து, சுகாதாரப் பிரச்சனைகள் வேறு தோன்றியுள்ளன.

– 16-5-1954, திராவிடநாடு.

Peraringnar_Anna காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *