மூன்று கடிதங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி திராவிடநாடு
கதைப்பதிவு: December 3, 2025
பார்வையிட்டோர்: 197 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தக் கலியாணத்தைப் பார்த்தாக வேண்டுமென்று எனக்கு ஒரே துடிப்பு, கடன் வாங்கிக் கொண்டு கிளம்பினேன் கிள்ளிக்கு. என் அத்தை மகள் முத்தம்மாவையும் பார்த்துவிட்டு வரலாம் என்று ஆசைதான் உங்களிடம் உண்மையைச் சொன்னால் தவறல்ல, சொல்லிவிட்டேன்! கலியாணம். வேம்புக்கும் அரசுக்கும்!

கிள்ளியிலே, முத்து, மாணிக்கம், மீனாட்சி, அபுரூபம், அகிலாண்டம், இன்னாசிமுத்து, இபுராகீம், சொக்கன், மாரிமுத்து என்று இப்படிப் பலர் உண்டு, எனக்குத் தெரிந்தவர்கள்; பல கலியாணங்களும் நடந்திருக்கின்றன; நான் சென்றதில்லை, ஒய்வு ஏது, இங்குதான் ‘சர்வஜன சகாயநிதி’யில் எனக்குக் கடுமையான வேலையாயிற்றே, லீவு தருவாரா, மானேஜர் மார்க்கபந்து சாஸ்திரி. இந்த வேம்பு – அரசு கலியாணத்தை மட்டும் எப்படியும் பார்த்துத் தீர வேண்டும் என்று எனக்கு ஒரே ஆவல், ஏன் என்கிறீர்களா, வேப்பஞ் செடிக்கும் அரசஞ் செடிக்கும் கலியாணம் அது, அடிக்கடி நடைபெறக் கூடியதா, கிள்ளிகள் மறைந்து கொண்டல்லவா வருகின்றன.

தற்செயலாகத்தான் இந்தக் கல்யாணச் ‘சேதி’ எனக்குத் தெரிந்தது – நான் மும்முரமாக ஈடுபட்டிருந்த பகுத்தறிவு படிப்பகத்தில், ‘பலகணி’ பத்திரிகையில் கொட்டை எழுத்தில் இந்தக் கலியாணச் செய்தி வெளி வந்திருந்தது. மாஜி மந்திரி பாஜிராவ் அதன் ஆசிரியர். கலியாணம் செய்து கொள்ளும் பக்குவமடைந்த எவ்வளவோ பேர், பணவசதி இல்லாததால், மனப் பசியைப் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஊராரைச் சொல்லுவானேன். எனக்கே ஒரு ஆயிரம் ரூபாய் இருந்தால் முத்தம்மா இப்போது, இங்கு இருப்பாள்! இப்படி நிலைமை இருக்கிறது, கிள்ளியில், வேம்புக்கும் அரசுக்கும் கலியாணமாம். அதற்குத் தங்கநாணயம் தணிகாசலம் கச்சேரியாம், பொய்க்கால் குதிரையாம், போகர் பரம்பரை பொய்யாமொழியர் திரிசடையும் ‘விரிசடையும்’ என்ற காலட்சேபம் செய்கிறாராம். பாயாசத்துடன் விருந்தாம். எல்லாம் பக்தர்கள் உபயமாம், இந்தப் பக்தியையும் அதை எடுத்துக்காட்ட பணத்தையும் திரட்டும் பொறுப்பை. பூமிநாத முதலியார் ஏற்றுக் கொண்டிருக்கிறாராம்!

இவ்வளவும் ‘பலகணி·யில் வெளிவந்தது. இந்த வேம்பு – அரசு திருமணம். இனியும் நெடுங்காலத்துக்கு நடக்கப் போவதில்லை, கண் இருக்கும்போதே பார்த்து விடுவோம். முடியுமானால், இந்த முயற்சி எவ்வளவு பைத்யக்காரத்தனமானது என்பதை எடுத்துச் சொல்லுவோம் – யார் கேட்டாலும் கேட் காவிட்டாலும் முத்தம்மா இருக்கிறாள், கேட்க! என்று எண்ணினேன். கடன் பெறுவது கஷ்டமான காரியமல்ல பழகிப் போன காரியம் கிள்ளி – வந்து சேர்ந்தேன் – முத்தம்மாவைக் கண்டு பேசினேனா என்று கேட்கிறீர்களா? அதிகமாகக் கிளறாதீர்களய்யா, நீங்கள் என்ன செய்திருப்பீர்கள், உங்கள் முத்தம்மாவைக் கண்டால்!

வேம்பு – அரசு திருமணம் வெள்ளிக்கிழமை -நான் கிள்ளிக்கு நாலு நாள் முன்னதாகவே வந்து விட்டேன் சிலரிடம் இலேசாகப் பேசிப் பார்த்தேன், ‘பைத்யக்காரப் பிள்ளை!’ என்று கேலி செய்தார்கள்.

அத்தை வீட்டுத் திண்ணையில் ஆயாசத்தோடு உட்கார்ந்து கொண்டிருந்தேன். சுருள் கத்தி சுந்தர வாத்தியார் மீசையை முறுக்கியபடி வந்தார் – கையிலே கடிதத்துடன்!

‘சுருள்கத்தி’ விளையாட்டிலே அவருக்கு நிகர், அந்தப் பக்கத்திலேயே யாரும் கிடையாது – சிலம்பக் கூடம் நடத்தி வந்தவர்-வாத்தியார் பட்டம் அதனால்தான். கிள்ளையிலும் அதைச் சுற்றிப் பத்து மைலுக்கும் அவர் வைத்ததுதான் சட்டம். “போக்கிரி! தன்னந் தனியாக இராக் காலத்திலே போகும்போது கத்தியாலே குத்தி விடுவான், நமக்கேன் அவனிடம் பகை” என்று பேசிக் கொள்வார்கள்; எதிரே பார்க்கும்போது, “வாத்தியாரே! சௌக்யமா?” என்று கேட்பார்கள். “ஆண்டவன் புண்யத்திலே சௌக்யத்துக்குக் குறைவு இல்லை” என்று அவரும் சொல்லுவார்.

“தம்பீ! பட்டணத்துத் தம்பிதானேடா அது” என்று கேட்டுக் கொண்டே அருகே வந்தார், பார்வை பழுதாகிக் கொண்டு வருகிற வயது.

“ஆமாம். வாத்யாரே! நான்தான், நடராசன்” என்றேன்.

“நல்ல வேளையாய்ப் போச்சுது இதோ பாரு, ஒரே அடியா மூணு கடுதாசி வந்திருக்கு. முத்தாகிட்ட கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கேட்கலாம்னு வந்தேன். ராஜாவே இருக்கிறப்போ. ராணியைத் தேடுவானேன். படி” – என்று சொல்லியபடி மூன்று கடிதங்களைக் கொடுத்தார், பக்கத்திலே உட் கார்ந்தார்.

ஒரு கடிதத்தைப் பிரித்தேன். அனுமார் படம் போடப்பட்டு, அதனடியில் அனுமத் உபாசகர் ஜேஹிந்து ஜோதிட சபா, என்று அச்சிடப்பட்டிருந்தது.

“படி! படி!” என்று ஆவலுடன் கேட்டார்.

சீமான் சுந்தரத்துக்கு, பகவத் கடாட்சத்துடன், தெரிவிப்பது என்னவென்றால், இப்பவும் உன்னுடைய, பெயர் வாசிக்கும், கடிதம் எழுதிய நேரத்துக்கும் பிறந்த வருஷம் மாதம் தேதி குறித்து அனுப்பி இருந்ததுக்கும் சேர்த்து, ஜோதிடம் கணித்துப் பார்த்தாகி விட்டது.

உம்முடைய ‘ஜாதகம்’ யோக ஜாதகம்; அதாவது, நல்ல கீர்த்தியும், பெயரும் இருக்கும். ஐஸ்வரியத்துக்குக் குறைவு இல்லை, அது இல்லை என்ற குறையும் உமக்கு இராது. ஆரோக்கிய விஷயத்தில், உமக்கு அவ்வளவு யோக ஜாதகமாக இல்லை.

இப்போது உமக்கு ஒரு நல்ல கிரஹம்’ உதவியாக வந்து சேர்ந்திருப்பதால், கூடிய சீக்கிரத்தில் தனம் தானியம் கிடைப்பதோடு, பெரிய இடத்திலே சினேகமும், மனச் சந்தோஷமும், கௌரவமும் ஏற்படும். ராஜ பார்வை ஏற்படலாம்; அதாவது சர்க்காரிடமிருந்து விசேஷமான சன்மானங்கள் கிடைக்கும்.

மற்றபடிக்கு, உம்முடைய ஜாதகமோ, வேண்டிய வாளுடைய ஜாதகமோ அனுப்பி வைத்தால், முழு ஆயுள் பலன் எழுதி அனுப்பப்படும். அனுமன் காணிக்கை ஆறு ரூபாய் அனுப்பவும், ஆசீர்வாதம்.

அனுமத் உபாசி ஜே ஹிந்து

படித்துக் கொண்டு வரும்போதே ‘வாத்தியார்’ குதூகலமடைந்தார்! “சன்மானம்’னு சொல்றாரே தம்பீ, அதிலேயும் சர்க்கார்லே இருந்து சன்மானம்னு சொல்றாரே. எனக்கு எதுக்குச் சர்க்கார் சன்மானம் தரப் போவுது, நான் என்ன எலக்ஷன்லே நிக்கறவனா, ராவ் பகதூரு பகல் பகதூரா! விளங்கலியே” என்று கேட்டார்.

நான் என்ன பதில் சொல்ல! “அளப்பு வாத்யாரே! வெறும் அளப்பு!” என்றுதான் சொல்ல வேண்டும். சொன்னால், கோபம் தானே வரும், ‘வாத்தியார்’தான், ஜோதிடர் எழுதி இருந்ததை அப்படியே நம்பிப் பூரித்துக் கிடக்கிறாரே. மற்றோர் கடிதத்தைப் பிரித்தப் படித்தேன்.

வந்தேமாதரம் ஸ்டோர்.
வரதப்ப செட்டியார்.

என்று அச்சிடப்பட்ட தாளில் எழுதப்பட்டிருந்தது.

“வந்தேமாதரம் இஸ்ட்டோரா? அது என்ன தம்பீ வரதப்பசெட்டியாரு, யாரு..?” என்று வாத்யார் கேட்டார். நான் கடிதம் எழுதியவர் பெயர், என்ன என்று பார்த்தேன். சின்னசாமி சேந்தமங்கலம் என்று இருந்தது, சொன்னேன்.

”அடடே! நம்ம சின்னான்? என் மருமவனுக்குத் தம்பி..படி, படி” என்றார் வாத்யார், படித்தேன்.

மகாராஜராஜஸ்ரீ வாத்யார்க்கு, சின்னசாமி நமஸ்காரம். நம்ம தலையிலே பெரிய இடி விழுந்து போச்சு, அண்ணனைப் போலிசிலே பிடிச்சி இருக்கறாங்க – கொலைக்குத்தத்துக்காக – வீடு பூராவும் இழவு விழுந்த மாதிரி இருக்குது. யாரார் காலிலேயோ நானும் அண்ணியும் விழுந்து கும்பிட்டும் அண்ணனை விடமாட்டேன்னு சொல்லிவிட்டாங்க அண்ணிக்கு மயக்கம், வந்துடிச்சி; போன தை மாசம் நீ ஒரு பாவிப் பயலை, அனுப்பி வைச்சதாலே வந்ததுதான் இந்த ஆபத்து. பால்காவடி வேல் சாமியாராலேதான், அண்ணன் இப்ப, ஜெயிலிலே இருக்குது – அவனையும் அடைச்சி வைச்சிருக்காங்க, எங்க வீட்டுத் தோட்டத்திலே, பெரிசா புதையல் இருக்குதுன்னு சொல்லி அண்ணனை ஏமாத்தி இருக்கிறான் அந்தப் படுபாவி. அண்ணன் பைத்யக்காரத்தனமா அதை நம்பிக்கிட்டு, அவன் சொன்னபடி ஐஞ்சு வயது பையனைக் ‘காவு’ கொடுத்துதாம் பக்கத்துத் தெருவு பையன். போலீசுக்கு எட்டிப் போச்சு – அண்ணனைப் புடிச்சிகிட்டாங்க. உடனே ஒரு நூறு ரூபா, கைமாத்து வாங்கிகிட்டு, வரணும். மறக்காம, பணம் வாங்கி வர வேணும். இங்கே ஊரே, அண்ணன் மேலே விரோதமா இருக்கறதாலே ஒத்தைக்காசுகூட கடன் கிடைக்கல்லே. நம்ம போறாத வேளை, குடிமுழுகுது. உடனே வரணும்.

சின்னசாமி

ஊரையே மிரட்டுகிற ‘வாத்யார்’ பட்ட வேதனையைப் பார்த்து, எனக்குப் பரிதாபமாக இருந்தது. “ஐய்யய்யோ! என் தலையிலே இடி விழுந்துதே! கொ காலைக் குத்தம்னு இலேசானதில்லாவே, நான் என்னா செய்வேன்” என்று கண்ணீர் விட்டபடி சொன்னார்.

மூன்றாவது கடிதத்தைப் பிரித்தேன் – வாத்தியார் தலையில் கைவைத்துக் கொண்டு, சோகமாக இருந்தார், படிக்கும்படிக்கூடச் சொல்லவில்லை எனக்கும் கடிதத்தை ஒருவாறு பார்த்தவுடன், படிக்கத் தோன்றவில்லை – மடித்து உரையிலே போட்டுவிட்டு “சேந்தமங்கலம் போகிற ஏற்பாட்டைப் பாருங்க, வாத்தியாரே!” என்றேன்.

”என்னடாப்பா சொல்றே!” என்று அழுது கொண்டே கேட்டார்.

“கிளம்பறேண்டாப்பா, கிளம்பறேன் – என் மருமவன் கதி இப்படி ஆச்சே. . .” என்றார். சொல்லிவிட்டு “இந்த இழவிலே என்னா இருக்கு, படிடாப்பா, என் தலைக்கு இன்னும் என்ன தீம்பு வருமோ, படி” என்றார். படிக்க என் மனம் இடம் தரவில்லை. “இது ஒண்ணுமில்லை, வாத்யாரே, யாரோ ஒருத்தரு. எதை எதையோ எழுதி இருக்கறாரு, வேப்பமரம், அரசமரம் கலியாண விஷயமாக” என்றேன்.

“என்ன எழவோ, படிச்சிச் சொல்லு” என்றார் – மீற முடியவில்லை, படித்தேன்.

சுருள் கத்தி சுந்தரவாத்தியாருக்கு, அருள் வாக்கு அம்பலவாண குரு, எழுதியது.

நம்ம கிள்ளையிலே, நடக்கற சகல காரியத்துக்கும், நான் உன்னை நம்பி இருக்கிறவன் என்பது உனக்கே தெரியும். அதனாலேதான், நம்ம அருள்சாமி கோயில் தோப்பு ‘குத்தகை’ இந்த வருஷம் உனக்கு கொடுத்திருக்கிறது, கவனப்படுத்தத் தேவை இல்லைன்னு நினைக்கறேன்.

கிள்ளையிலே, பூமிநாதர் புண்ய காரியமாக ‘வேம்பரசு விவாஹ சுபமுகூர்த்தம்’ செய்கிறார் என்கிறதாகக் கேள்விப் பட்டு, மெத்தச் சந்தோஷமானேன்-நம்மதோப்பிலே இருந்து அவர் கேட்கற இளநீரு, வாழை, தர வேண்டியது கூடமாட இருந்து ஆகவேண்டிய காரியத்தைக் கவனிக்க வேண்டியது. நீ, கிணத்துத்தவளை மாதிரி இருக்கறதாலே, உனக்கு ஊர் விவகாரம் தெரியாதில்லை. சொல்லி வைக்கிறேன்.

இப்ப, ஒரு தறுதலைக் கூட்டம் கிளம்பி இருக்கு. சாமி இல்லை, பூதம் இல்லை, ஜோதிடம் பொய், ஆரூடம் அர்த்தமில்லே; கோயில் வேண்டாம், கொளம் வேண்டாம்னு கூவிக் கொண்டு, நல்ல காரியத்தைக் கெடுக்கறானுங்க.

கிள்ளையிலே நடக்கப் போகிற, வேம்பரசு விவாஹத்தை பைத்யக்காரத்தனம் என்று சொல்லி, பேசி, ஏசி, கலாட்டா செய்ய, அந்தப் பசங்க ஏற்பாடு செய்கிறதாக வதந்தி வந்திருக்குது. நம் மதம், எப்படிப்பட்டது, என்கிற விசேஷம், மகத்துவம், இந்த மதி கெட்டவனுங்களுக்குத் தெரியாது. உன்னைப் போல இருக்கிறவங்களுக்குத் தெரியும். அதனாலே, நம்ம ஊரிலே எந்த ஒரு கலகமும் நடக்காதபடி, பார்த்துக் கொள்ள வேணும். வாய் மிரட்டு கைமிரட்டு எதைச் செய்ய வேணுமோ அதைச் செய்து. நம்ம பூமிநாதர் காரியத்துக்குக் குந்தகம் வராதபடி பார்த்துக் கொள்ள வேணும். இங்கே இருந்து இந்த கழகத்தானுங்களுடைய ஆள் ஒருத்தன், முன்னதாகவே, கிள்ளைக்கு வந்திருக்கிறானாம் நடராசன்னு பேராம் – ஆசாமியை, முதலிலே கவனிச்சுக்கோ பிறகு மத்ததுங்க தலைகாட்டாது, கேசுக்குப் பயப்படாதே, நான் இருக்கிறேன்.

இப்படிக்கு,
குருநாதன்

சிரமப்பட்டுத்தான் படித்தேன் – அவ்வளவு சோகத்துக் கிடையிலேயும், வாத்தியார் சிரித்தார்.

“தம்பீ! மூணு கடுதாசியும் ஒண்ணா வந்ததே – என் கண்ணு தொறந்தது. இந்த ஜோசியக்காரனுங்க, சாமி வேஷக்காரனுங்க, குருவுங்க இவங்களை நம்பறது, பைத்யக்கார வேலை, இப்பத்தான் புரியுது மூணு ரூபாயை முள்ளங்கி பத்தை மாதிரி அனுப்பினேன் அந்த அனுமார்காரன் எனக்கு ‘வெகுமானம்’ கிடைக்கப் போவுதுன்னு ஒரு அண்டப்புளுகு – கடிதம் அனுப்பினான். அங்கே என் மறுமவன், சாமியார் பேச்சாலே கொலைகாரனானான். இப்ப இந்த அகப்பட்டதைச் சுருட்டற ஆசாமி உன்னை உதைக்கச் சொல்லி, எனக்குத் தூபம் போடறான். பார்த்தாயா வேடிக்கையை, நான் ஒரு மடயன், இப்படிப்பட்ட விஷயத்தை எல்லாம், நம்பிகிட்டுக் கிடந்தேன் புத்தி வருது இப்பத்தான்” என்றார்.

எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தில், என்னிடம் நூறு ரூபாய் இருந்தால், அவரிடம் அப்போதே கொடுத்து சேந்தமங்கலம் அனுப்பி விடுவேன் – நான்தான் மாதம் நாற்பதுக்கு மார் உடையும்படி வேலை செய்பவனாயிற்றே.

சுக்கு நூறாகக் கடிதங்களைக் கிழித்துப் போட்டபடி வாத்தியார், “இந்த ஜோசியக்காரனுங்க, சாமியாடற பசங்க, கொளம் குட்டையைக் காட்டி மூட்டை அடிக்கிறவனுங்க இவனுங்களை நம்பினா. நம்பினவன் தலையிலே இடிதான் விழும் – இதோ என் தலையிலே விழுந்ததே. தெரியலையா” என்று கூறிக் கொண்டே போகிறார்.

முத்தம்மாவின் குரல் கேட்கிறது, குழந்தையைக் கூப்பிடுகிறாள். என்னைத்தான்.. எனக்கல்லவா, அவளுடைய ‘பிளான்’ தெரியும்! போகிறேன்!

– 14-1-1954, திராவிடநாடு.

Peraringnar_Anna காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *