மனதை மாற்றிய மன்னனின் பாடல்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 6, 2025
பார்வையிட்டோர்: 148

மாரிக் காலம். பாண்டிய மன்னர்களின் கோநகரமாம் நான் மாடக் கூடல்என்னும் மதுரை மாநகர். உறவினரின் இல்லத்து நிகழ்வைச் சிறப்பிக்க குடும்பத்துடன் சென்று சிவிகையில் இல்லம் திரும்பிக் கொண்டிருந்தார் பாண்டிய மன்னரின் அரசு அதிகாரி முகில்வண்ணன். மழை பலத்த மழையானதால் சிவிகையை நிறுத்தும்படி அவர் கட்டளையி்ட்டார். கனமழைக்கு அவரும் அவரது குடும்பத்தினரும் பணியாட்களும் ஒதுங்கிய இடம் ஒரு ரம்மியான சோலை. அந்த சோலை அருகில் மழைச்சாரல் அடிக்காத , மேற்கூரை உள்ள இடத்தில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர். அந்த சோலைக்குரியவரின் பெயரும் சோலை என்கிற சோலைமலை . அவர் ஒரு சிற்பி . அந்த இடம் தான் அவரது சிற்பக் கலைக்கூடம், உறையும் இடம் எல்லாம். உள்ளே இருந்த சோலையிடம் அவரிடம் பணிபுரிந்து வந்த மூதாட்டி பொன்னம்மா , ஒரு பெரிய மனிதரின் சிவிகை இங்கு வந்திருக்கிறது என்ற தகவலை ஓடோடி வந்து தெரிவித்தார். . கல்லிலே கலைவண்ணம் படைத்துக் கொண்டிருந்த சோலை , சோலையின் முகப்பை நோக்கி விரைந்து வந்தார். முகில்வண்ணனும் சோலையும் ஒத்த வயதினர். நடுத்தர வயதினர். முகில்வண்ணன் அரசு அதிகாரிக்கேற்ற உடைகளை அணிந்து இருந்தார். சோலை , எளிய உடைகளை அணிந்து இருந்தார். சோலை , அந்தப் பெரிய மனிதரை வரவேற்பதற்கு முன்பாகவே , பொன்னம்மா பாட்டி அனைவருக்கும் சுடுநீரும் பிட்டும் அளித்து உபசரித்துக் கொண்டிருந்தார். முகில்வண்ணன் , சோலையைப் பார்த்தார்.
சோலை வாடா என்று சொல்லி விட்டு நண்பரின் தற்போதைய நிலையை அறிந்து வாருங்கள் அதிகாரி அவர்களே… என்றார்.
முகில்வண்ணன், “வாடா என்று அழைப்பதே எனக்கு உவப்பு அளிக்கும் கல்தச்சரே”. சோலை புன்னகை பூத்தார். முகில்வண்ணனும் அவர்தம் மனைவியாரும் புதல்வியும் உள்ளே வந்தனர். அவர்கள் ஆசனங்களில் அமராமல் அந்த சிற்பக் கலைக்கூடத்தை சுற்றி சுற்றி வந்தனர். உருவாகி வரும் சிற்பங்களில் உள்ளங்களைப் பறிகொடுத்து நின்றனர். முகில்வண்ணரும் அவரது மனைவியார் திருமகளும் அந்த இடத்தின் மூலையில், வந்திருப்போர் பற்றி கவனம் கொள்ளாமல், ஒரு கட்டிளங்காளை இளைஞன், உளியால் சிற்பத்தை வடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். அழகு நிறைந்த , ஒல்லியான தேகம் கொண்ட, அவர்களது புதல்வி பூங்கோதையையும் அவன் ஈர்த்தான்.
முகில்வண்ணர் நண்பரிடம் கேட்டார்-
“சோலை , யாரப்பா இந்த பிள்ளையாண்டான்?“
“என்னுடைய பிள்ளை தான் நண்பரே அவனுடைய பெயர் அழகன் … ” பதில் அளித்தார் சோலை .
முகில்வண்ணரின் நெற்றி சுருங்கியது.
நீ தான் திருமணம் செய்து கொள்ளவில்லையே .. பின் எப்படி இத்தனை வயதில் பிள்ளை என்று அவரது நெஞ்சில் எண்ணம் ஓடியது .
“காலா காலத்தில் கல்யாணம் முடிக்காத எனக்கு எப்படி பிள்ளை என்று தானே தாங்கள் நினைக்கிறீர்கள் ? “
“இல்லை அது ஆமாம் … சோலை “
“நான் பெறாத பிள்ளை என் தங்கை வள்ளியின் ஒரே பிள்ளை இந்த அழகன். என் தங்கையின் கணவர் சாத்தன் ஒரு வணிகர் . திரை கடலோடி திரவியம் தேட கலம் ஏறி கடலோடி ஆனார். அவருடன் சென்றவர்கள் எல்லாம் தாயகம் திரும்பி விட்டனர். அவர் மட்டும் திரும்பவில்லை. மாறுபட்ட சேதிகள் வந்தன. கைப்பிடித்த கணவன் மீது மிகுந்த காதல் கொண்ட என் தங்கை , கேள்விப்பட்ட தகவல்களால் மனம் உடைந்து போனவள், உயிர் தரிக்கும் ஆசையைத் துறந்தாள். இவன் அம்மான் அடியேன் இடத்திலும் இவனுடைய சிற்றப்பன் வீட்டிலும் மாறி மாறி இருந்து வளர்ந்தவன். சிற்பக் கலையை அவனாகப் பார்த்துப் பார்த்துக் கற்றுக் கொண்டு விட்டான். “
“ஓ இப்படியாக இறைவன் உனக்கு ஒரு வாரிசை ஏற்படுத்திக் கொடுத்து விட்டான். சரி அப்பா மழை விட்டு விட்டது. நாங்கள் விடை பெறுகிறோம் ” என்றார் முகில்வண்ணர். அவர்கள் மூவரும் வாசலை நோக்கி நடந்தனர். போவதற்கு முன் முகில்வண்ணரின் புதல்வி பூங்கோதை தூங்கா விளக்கின் வெளிச்சத்தில் ஒளிர்ந்த அந்தக் கட்டுடல் இளைஞனைத் திரும்பிப் பார்த்து விட்டுச் சென்றாள். அந்தக் கட்டுடல் இளைஞனும் அவளைப் பார்த்தான்.
சோலை , சிவிகை வரை சென்று நண்பரை வழி அனுப்பி வைத்தார். பொன்னம்மா அவரிடம் கொடுத்த பூக்களும் கனிகளும் நிறைந்த மூங்கில் கூடையை நண்பரிடம் அவர் அளித்தார்.
வெய்யில் வாட்டி வதைக்கும் சித்திரை மாதத்து மதிய வேளை . சிற்பங்களுக்கு நடுவே தரையில் விரிப்பை விரித்துப் படுத்திருந்தார் சோலை. அவரது நண்பர் முகில்வண்ணர் வந்து நின்றதை அவர் கவனிக்கவில்லை. நண்பர் விசிறியால் விசிறிக் கொண்டிருப்பதை சில மணித்துளிகளில் கண் விழித்த சோலை பார்த்தார்.
“வாப்பா என்னப்பா இதெல்லாம் ? “
வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து நின்றார் சோலை . இருவரும் அங்கு இருந்த சிறிய ஆசனங்களில் அமர்ந்தனர்.
“என் மனைவியாருக்கு உன் மருமகனைப் பிடித்து விட்டது எங்கள் வீட்டு மருமகனாக்கிக் கொள்ள விரும்புகிறோம் என்று உனக்குத் தகவல் அனுப்பி வெகு நாளாயிற்றே நண்பா.. நீ பதில் எதுவும் அனுப்பவில்லையே “
“பதில் அனுப்பவுது என்ன ? நானே உன்னை நேரில் பார்த்து இருக்க வேண்டும் . ஆனால், என் மருமகன் திருமணமே வேண்டாம் என்கிறானப்பா அவன் இசைவு கூறாததால் குழம்பி நின்றேன் அடியேன்.”
அங்கு வந்த பொன்னம்மா , குளிர்ந்த தண்ணீர் நிரம்பிய குவளையை மிகவும் பணிவுடன் முகில்வண்ணரிடம் அளித்தாள். முகில்வண்ணர் வாங்கிப் பருகினார்.
பொன்னம்மா பேசினார்
“அடியாள் சில சொற்கள் பேச தாங்கள் இருவரும் அனுமதிக்க வேண்டும்.“
இருவரும் நின்று கொண்டிருந்த பொன்னம்மாளின் முகத்தை ஆராய்ந்தனர்.
“நேற்று வரை தங்கள் பிள்ளையானவர் திருமணம் வேண்டாம் என்று சொல்லி வந்தார். நான் நமது பாண்டிய மன்னரின் பாடலை விளக்கமாக எடுத்துரைத்தேன். ‘ மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தம் வாழ்நாளே ‘ – சொந்த குழந்தையைப் பெற்று அதன் குறும்புகளிலும் மழலையிலும் மகிழாதவன் வாழ்வு பயனில்லை என்று செங்கோல் ஏந்திய மன்னர் , எழுதுகோல் எடுத்து விளம்பிய பாடலை விரிவாகச் சொன்னேன். தங்கள் பிள்ளை மனம் மாறினார். திருமணம் செய்து கொள்கிறேன். நம் கலைக்கூடத்துக்கு வந்த மாமாவின் நண்பர் மகளையே மணக்கிறேன். எனக்கு தயக்கம் . மாமாவிடம் நீயே சொல்லி விடு என்று அழகர் கேட்டுக்கொண்டார். இதை தங்களிடம் கூற தக்க தருணம் பார்த்திருந்தேன். இப்பொழுது பெரியவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் நேரத்தில் இயம்பினேன். “
ஆடவர் இருவரும் முகம் மலர்ந்தனர். முகில்வண்ணர் , தாம் அணிந்து இருந்த முத்துமாலையைக் கழற்றி பொன்னம்மாவிடம் அளித்தார். பொன்னம்மா , சோலையைப் பார்த்தார். அவர் முக குறிப்பால் இசைவு தந்ததும் பொன்னம்மா மாலையைப் பணிந்து பெற்றுக் கொண்டார்.
“அம்மையே நீர் சொன்ன நல்ல சேதிக்காக மட்டும் அல்ல இந்த முத்துமாலை . மன்னரின் பாடலை மனதில் கொண்டு அதனை நீர் எடுத்து இயம்பினீரே அதற்காகத் தான் இந்த முத்துமாலை…” என்ற முகில்வண்ணர் எழுந்து நின்றார். சோலையிடம் சொன்னார்” நான் விடை பெறுகிறேன் அப்ப.. மங்கல தருணத்திற்கான ஏற்பாடுகளை செய்கிறேன். முதலில் என் இல்லக்கிழத்திக்கு இந்த தகவலை சொல்ல வேண்டும் வருகிறேன் ” என்று கூறிக்கொண்டே வாயிலை நோக்கி விரைவாக நடந்தார். சோலை புன்னகையுடன் பொன்னம்மாவைப் பார்த்தார்.
குறிப்பு:
இந்தப் புனைகதைக்கான ஆதாரம் –
1) பாண்டிய மன்னர் அறிவுடை நம்பி இயற்றிய சங்கப் பாடல்
புறநானூறு – 188
“படைப்புப்பல படைத்து பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ்செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே “
2) எண்ணற்ற நூல்களைப் படைத்திட்ட தமிழறிஞர் மு.வ. அவர்களின் ‘தமிழ் நெஞ்சம்’ நூலின் உணர்த்துதலும் உணர்தலும் என்னும் கட்டுரையில், மு.வ அவர்கள், அறிவுடை நம்பியின் இந்த செய்யுள் பற்றிப் பேசுகிறார். அதிலிருந்து ஒரு துளி இதோ:
“பாண்டியன் உள்ளம் மிக உயர்ந்த உள்ளம். உலக வாழ்வினை உள்ளவாறு அறிந்து பொது நலம் விழைந்த உள்ளம். ஆதலின், அவ்வுள்ளத்தில் வீடு தோறும் குழந்தைகளின் ஆடற்செல்வம் மலிய வேண்டும் என்று காதல் கொண்டான். இவனே சான்றோன். ஈன்ற குழவி எடுத்து வளர்த்தல் சான்றோரைத் தேர்ந்து தேர்தலாகப் போற்றப்பட்டதன்றோ? அக் குழந்தைகளின் அசைவிலும் நடையிலும் ஆடலிலும் பேரின்பம் காணும் மனம் உடைய பாண்டியன், சான்றாண்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்பதில் ஐயம் உளதோ?”.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
