சிவகாமியின் செல்வன்
கதையாசிரியர்: சாவி
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: சாவி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 6, 2025
பார்வையிட்டோர்: 222
(1990ல் வெளியான வாழ்க்கை வரலாறு, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம் – 7

இந்தி பிரசாரசபை வெள்ளி விழாவில் கலந்து கொள்வதற்காக 1946 ஆம் ஆண்டில் காந்திஜி தமிழகத்திற்கு வந்திருந்தார். அவர் ஒரு வார காலம் தியாகராய நகரில் தங்கி யிருந்தபோது அவரைத் தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் தமிழ் நாட்டில் மூலைமுடுக்குகளிலிருந்தெல்லாம் வந்து கூடியிருந்தார்கள். ஆகஸ்ட் போராட்டத்துக்குப் பின் காந்திஜி யின் புகழும் காங்கிரசின் செல்வாக்கும் நாட்டு மக்களிடையே பெரும் அளவில் ஓங்கியிருந்தன. அப்போது காமராஜ்தான் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர். ஆனாலும் காந்திஜி எப்போது சென்னை வருகிறார். எந்த ஸ்டேஷனில் அவரைச் சந்தித்து வர வேற்பு அளிக்க வேண்டும் என்பதெல்லாம் காமராஜுக்கு தெரியவில்லை. எல்லா ஏற்பாடுகளும் போலீசாருக்கு மட்டுமே தெரிந்திருந்தன.
எல்லா விவரங்களையும் போலீசார் மூடு மந்திரமாகவே வைத்திருந்தார்கள். ராஜாஜி, சர். என்.கோபாலசுவாமி ஐயங்கார், இந்தி பிரசார சபா காரியதரிசி சத்திய நாராயணா போன்ற ஒரு சில முக்கியத் தலைவர்களுக்கு மட்டுமே விவரம் தெரிந்திருந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா என்ற முறையில் மகாத்மாஜியை நேரில் சென்று வரவேற்கும் பொறுப்பு காமராஜிடம் இருந்தது. ஆனாலும் அவருக்கு எந்த விவரமும் தெரியாததால் நேராக இந்தி பிரசார சபைக்குப் போய் விசாரித்தார்.
ராஜாஜி முதலியவர்கள் ஏற்கெனவே காந்திஜியை வரவேற்கப் புறப்பட்டுப் போய்விட்டார்கள் என்கிற தகவல் மட்டுமே காமராஜுக்குக் கிட்டியது. இன்னும் கொஞ்சம் நேரத்தில் காந்திஜி வந்து விடுவார்; அதற்குள் அவர் இறங்கும் ஸ்டேஷனைக் கண்டுபிடித்து ஆக வேண்டும். இதற்கு என்ன செய்வது? காமராஜுக்கு ஒன்றும் புரியவில்லை.
இந்தச் சமயத்தில் காமராஜின் நண்பரும் பத்திரிகை நிருபருமான திரு கணபதி அங்கே வந்து சேர்ந்தார். மகாத்மாஜி எந்த ஸ்டேஷனில் ரயிலை விட்டு இறங்கப் போகிறார் என்கிற ரகசியம் பத்திரிகைக்காரர் என்ற முறையில் அவருக்குத் தெரிந்திருந்தது. கணபதி தம்முடைய காரிலேயே காமராஜரை அழைத்துக் கொண்டு அம்பத்தூர் ஸ்டேஷனுக்குப் பறந்து சென்றார். அந்த ஸ்டேஷனில்தான் மகாத்மாவை வரவேற்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.
காந்திஜி ரயிலை விட்டு இறங்கியதும் காங்கிரஸ் தலைவர் காமராஜ் தம் கையோடு கொண்டு போயிருந்த பெரிய மாலையைப் போட்டு அவரை வரவேற்றார்.
இந்தி பிரசார சபையின் வெள்ளி விழா முடிந்ததும், மகாத்மாஜி பழனிக்கும் மதுரைக்கும் ரயில் மார்க்கமாகவே யாத்திரையாகச் சென்றார்.
அந்தப் பயணத்தின் போது ராஜாஜியும் மகாத்மாவுக்குத் துணையாகச் சென்றிருந்தார்; காமராஜும் போயிருந்தார். காந்திஜியிடம் ராஜாஜிக்கு அதிகச் செல்வாக்கு இருந்த காரணத்தினாலே என்னவோ, காமராஜ் அந்தப் பயணத்தின் போது சற்று ஒதுங்கியே இருந்தார்.
பழனி ஆண்டவர் சந்நிதியில்கூட ராஜாஜிக்கும், காந்திஜிக்கும் தான் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தார்கள். காந்திஜியும் ராஜாஜியும் பழனிமலைப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தபோது காமராஜும் கூடவே போய்க் கொண்டிருந்தார். பத்திரிகைக்காரன் என்ற முறையில் நானும் போயிருந்தேன். அப்போது ராஜாஜி காமராஜரைக் காட்டி, “இவர்தான் காமராஜ், காங்கிரஸ் பிரசிடெண்ட்” என்று காந்திஜிக்கு அறிமுகப்படுத்தினார்.
காந்திஜி, “எனக்குத் தெரியுமே!” என்று பதில் கூறினார்.
மதுரைக்கும், பழனிக்கும் போய் வந்த பிறகுதான் காந்திஜி ‘கிளிக்’ (ஒரு சிறு கும்பல்) என்று காமராஜ் குழுவைக் குறிப்பிட்டார். காந்திஜி தங்களைப் பார்த்து இப்படிச் சொன்னது காமராஜுக்கும், அவரைச் சேர்ந்த காங்கிரஸ் காரர்களுக்கும் பெரும் வேதனையை அளித்தது. அதைத் தொடர்ந்து மதுரையில் ராஜாஜிக்கு எதிராகப் பெரிய ஆர்ப்பாட்டமும் கலவரமும் நடந்தன.
காமராஜீ மகாத்மாஜியைக் கண்டிக்கும் முறையில் ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை வருமாறு:
“ஹரிஜனில் தம் கையெழுத்துடன் எழுதியுள்ள மகாத்மா வின் கட்டுரை எனக்கு மிகுந்த திகைப்பை உண்டாக்கியது. நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். சட்டப்படி காரியக் கமிட்டியை அமைத்தது நான்தான். ஆகவே, காந்திஜி யின் குறிப்பு எனக்குத்தான் பொருந்த முடியும். சென்னையிலும் தமிழ் நாட்டிலும் காந்திஜி போகுமிடங்களுக்கெல்லாம் நானும் போய்க் கொண்டிருந்தேன். எப்பொழுதும் அவர் கூப்பிடும் தூரத்தில்தான் நான் இருந்தேன். காரியக் கமிட்டி அங்கத் தினர்கள் பலரும் கூடவே இருந்தனர். தமிழ் நாட்டுக் காங்கிரஸ் விவகாரங்கள் பற்றிக் காந்திஜி இங்கிருந்த போது எங்களிடம் எதுவும் பேசவில்லை. அங்கே போனபின் ‘கும்பல்’ என்ற வார்த்தையை அவர் உபயோகித்துள்ளது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.
சட்டசபை வேலைத் திட்டம் தேச சுதந்திரப் போராட் டத்தைப் பலப்படுத்துவதற்கு ஒரு சாதனம் என்பதைத் தவிர. அதில் எனக்கோ, என் சகாக்களுக்கோ அதிக நம்பிக்கை கிடையாது. என் நிலையை விளக்கி நான் பல மேடைகளில் பேசியுள்ளேன். எது என்னவாயினும் நான் சட்டசபை வேலைத் திட்டத்தில் எந்தவிதப் பதவியும் பெற ஆசைப்படவில்லை.
காந்திஜியின் கட்டுரைக்குப் பின் பார்லிமெண்டரி போர்டிலிருந்து நான் ராஜிநாமா செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. ஏனென்றால், இந்தச் சண்டை முழுவதும் சட்டசபைத் திட்டத்தால் ஏற்பட்டதுதான்.
டி.எஸ். அவிநாசிலிங்கம், சி.என். முத்துரங்க முதலியார்,. ஓ.பி. ராமசாமி ரெட்டியார், ருக்மிணி லட்சுமிபதி ஆகிய நால்வரும், தாங்களும் ராஜிநாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதினர். ஆனால் தேர்தலுக்கு முன் நமக் குள்ள அவகாசம் மிகக் குறுகியதாயிருப்பதால் அனைவரும் மொத்தமாக ராஜிநாமா செய்ய வேண்டாம் என்று அவர்களை நான் கேட்டுக் கொண்டுள்ளேன். என் வேண்டுகோளுக்கிணங்கி அவர்கள் போர்டில் இருக்கச் சம்மதித்துள்ளனர்.
என்னைப் பொறுத்தவரை நான் ராஜிநாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இருபது ஆண்டுகளாக நான் விசுவாசத்துடன் பின்பற்றி வந்துள்ள தலைவர் காந்திஜி. அவரிடம் என் பக்தி இன்றும் எள்ளளவும் குறையவில்லை. என்னால் அவருக்கு வருத்தம் ஏற்பட வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளதே என்ற காரணத்தால்தான் நான். ராஜிநாமா செய்யத் தீர்மானித்துள்ளேன். மாகாண போர்டும், மத்திய போர்டும் எந்த முடிவுகளைச் செய்தாலும் அவற்றை நான் மனப் பூர்வமாக ஏற்றுக் கொள்வேன் என்று இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உறுதி கூறுகின்றேன்.”
காமராஜின் அறிக்கையைப் படித்துப் பார்த்த காந்தி மீண்டும் ஹரிஜன் பத்திரிகையில் விளக்கம் எழுதினார். ‘கிளிக்’ என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதியில் தவறான அர்த்தம் எதுவுமில்லை என்று சமாதானம் கூறி, காமராஜ் தம்முடைய ராஜிநாமாவை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனாலும் காமராஜ் தம்முடைய முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.
அந்த ஆண்டு நடைபெறவிருந்த அசெம்பிளித் தேர்தலுக் கான பார்லிமெண்டரி போர்டில் காமராஜ் இல்லை. பார்லிமெண்டரி போர்டார் ராஜாஜியின் உதவியுடன் அபேட்சகர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனாலும் சில நாட்களுக்கெல்லாம் சூழ்நிலை சரியில்லை என்பதை அறிந்து கொண்ட ராஜாஜி, தாம் காங்கிரஸ் விவகாரங்கள் எதிலும் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று அறிக்கை வெளி யிட்டுவிட்டு விலகிக் கொண்டார்.
அப்போது டாக்டர் வரதராஜுலு நாயுடு காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதினார்:
“காந்தி தர்மத்தைப் பரப்புவதிலும், காங்கிரஸ் திட்டங் களை செயல்படுத்துவதிலும் காமராஜ் தென்னாட்டிலேயே முதன்மையானவர். அவரைக் குறித்துத் தாங்கள் தவறாக எழுதியது சரியல்ல. இவ்விஷயத்தில் தாங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
காந்திஜி நாயுடுவுக்கு உடனே பதில் எழுதினார்:
“உங்கள் இஷ்டப்படியே நடந்துக் கொள்கிறேன். இந்தத் தகராறில் இனி நான் ஈடுபடுவதில்லை” என்பதே அந்தப் பதில். ராஜாஜியை ‘ஒரு சிறு கும்பல்’ எதிர்ப்பதாகக் காந்திஜி எழுதியதும் தமிழ் நாட்டில் ஒரு பெரிய கொந்தளிப்பே ஏற்பட்டுவிட்டது. ராஜாஜி கோஷ்டி, காமராஜ் கோஷ்டி என்று இரு பிரிவுகள் தோன்றின.
1942ல் அலகாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மகா நாட்டில் ராஜாஜி பாகிஸ்தான் பிரிவினை குறித்து ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்குச் சாதகமாகப் பதினைந்து வோட்டுக்களே கிடைத்ததால் தீர்மானம் தோற்றுப் போயிற்று. இதனால் ராஜாஜி அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி யிலிருந்தும் காரியக் கமிட்டியிலிருந்தும் ராஜிநாமா செய்து விட்டுத் தம்முடைய பாகிஸ்தான் பிரசாரத்தைச் சுதந்திரமாக நின்று நடத்தினார். ராஜாஜியின் இந்தப் போக்கு தமிழ்நாடு காங்கிரஸுக்குப் பிடிக்கவில்லை; அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக ‘நோட்டீஸ்’ கொடுத்தது.
இந்தச் சமயத்தில் காந்திஜி ராஜாஜிக்கு ஒரு யோசளை கூறினார்.காங்கிரஸ் அங்கத்தினர் பதவி, அசெம்பிளி பதவி இரண்டையும் அவர் ராஜிநாமா செய்து விட வேண்டு மென்பதே அந்த யோசனை. காந்திஜியின்படியே அந்த இரண்டு பதவிகளையும் ராஜிநாமா செய்து விட்டு ஆகஸ்ட் போராட்டத்தையும் எதிர்க்கத் தொடங்கினார் ராஜாஜி. இவையெல்லாந்தான் காங்கிரஸ்காரர்களுக்கு ராஜாஜியின் மீது கோபம் உண்டாகக் காரணங்களாயின.
இதைத் தொடர்ந்து 1946ல் தென்னாட்டுக்கு வந்த காந்திஜி ‘கிளிக்’ என்று சொன்னதும் காங்கிரஸ்காரர்களின் கோபம் எரிமலையாக வெடித்தது.
அத்தியாயம் – 8
ஆகஸ்ட் இயக்கத்துக்குப் பிறகு, இந்தியாவில் நடைபெற்ற பெரிய தேர்தல் 1946 இல் தான். இந்தத் தேர்தலில் காங் கிரசுக்கு எல்லா மாகாணங்களிலும் மாபெரும் வெற்றி கிட்டியது. அப்போது நம்முடன் கேரளாவும், ஆந்திராவும் சேர்ந்திருந்தன.
அந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காம ராஜ் சாத்தூர் – அருப்புக் கோட்டைத் தொகுதியில் போட்டி யின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சிக்கு மொத் தம் 165 சீட்டுக்கள் கிடைத்திருந்ததால் மந்திரி சபை அமைக்கக் கூடிய ஒரே மெஜாரிட்டி கட்சி அதுவாகத்தான் இருந்தது.
அடுத்தாற்போல் யாரைச் சட்டசபைக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுப்பது, யாரை முதலமைச்சராக்குவது என்ற பிரச்னை காங்கிரஸ் மேலிடத்தில் எழுந்தது. அப்போது அபுல்கலாம் ஆஸாத் காங்கிரஸ் ர். வல்லபாய் படேல் மத்தியப் பார்லிமெண்டரி போர்ட் சேர்மனாக இருந்தார்.
மற்ற மாநிலங்களிலெல்லாம் யார் முதன் மந்திரி என்ற பிரச்னைக்கே இடமில்லாமல் போய்விட்டது. காரணம், 1937ஆம் ஆண்டில் யார் முதலமைச்சராயிருந்தார்களோ அவர்களே 1946லும் முதல் மந்திரியாக வந்தார்கள்.
உ.பி.யில் பந்த்தும், பம்பாயில் பி.ஜி. கேரும், மத்தியப் பிரதேசத்தில் சுக்லாவும், பீகாரில் கிருஷ்ண சின்ஹாவும் பழைய படியே முதலமைச்சர்களானார்கள். சென்னை மாகாணத்தில் மட்டும் பழைய முதன் மந்திரியான ராஜாஜி முதல் மந்திரியாக வர முடியவில்லை. துரதிருஷ்டவசமாக அச்சமயம் ராஜாஜி காங்கிரசிலிருந்தே விலகியிருந்தபடியால் யாரை முதல் மந்திரியாகப் போடுவது என்ற பிரச்னை மேலிடத்துக்கு ஏற்பட்டது.
காந்திஜி, ஆஸாத் போன்ற தலைவர்கள் ராஜாஜியே முதல் மந்திரியாக வர வேண்டும் என்றும் அவருடைய சேவையைச் சென்னை மாகாணம் இழந்து விடக்கூடாது என்றும் விரும் பினார்கள். காரியக் கமிட்டியிலும் அம்மாதிரி ஒரு தீர் மானத்தைப் போட்டு, சென்னைச் சட்டசபைக் கட்சிக்கு அனுப்பி வைத்தார்கள். காங்கிரஸ் தலைவர் அபுல்காம் ஆஸாதும், காந்திஜியும், காங்கிரஸ் மேலிடமும் ராஜாஜி முதல் மந்திரியாக வருவதை விரும்பிய போதிலும், சென்னைச் சட்டசபை காங்கிரஸ் கட்சி அவர்கள் விருப்பத்தை ஏற்க வில்லை.
“அப்படியானால் சட்டசபைக் கட்சித் தலைமைக்கு யாரைப் போடலாம் என்பதற்கு, பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் அந்தப் பட்டியலிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்துச் சொல்கிறோம்” என்று மேலிடம் கூறியது. அதற்கும் சென்னைச் சட்டசபைக் கட்சி ஒப்புக் கொள்ளவில்லை.
இதற்கிடையில் ஆந்திரக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பிரகாசம், கேரள காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாதவமேனன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் காமராஜ் மூவரும் டில்லிக்குப் புறப்பட்டுச் சென்று காந்திஜி, படேல், ஆஸாத் மூவரையும் சந்தித்துப் பேசினார்கள். பட்டாபி சீதாராமய்யா, ராஜாஜி, காளா வெங்கடராவ், கோபால ரெட்டி போன்ற தலைவர்களும் அப்போது டில்லியில் இருந்தார்கள்.
காந்திஜி, ஆஸாத், படேல் மூவருமே ராஜாஜிதான் முதல் மந்திரியாக வர வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். அவர்கள் காமராஜை அழைத்துப் பேசும்போது, “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டனர்.
“எங்களுக்குள் இப்போது எந்தவித வேற்றுமையுமில்லை. ஆந்திரா, தமிழ்நாடு பேதமுமில்லை. ஆகையால் நமக்குள் யாரை வேண்டுமானாலும் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம்” என்று கூறினார் காமராஜ்.
காந்திஜிக்குப் பிரகாசத்தைப் போடுவதில் விருப்பமில்லை. பொதுமக்கள் கொடுத்த பணமுடிப்பைப் பிரகாசம் தம் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்ற அதிருப்தி மகாத்மாவுக்கு இருந்தது.
காந்திஜியின் கருத்துக்கு விரோதமாகப் பிரகாசத்தைப் போடுவதில் காமராஜுக்கு இஷ்டமில்லை. அப்படியானால் மிஞ்சியிருப்பவர்கள் ராஜாஜியும் பட்டாபி சீதாராமய்யாவும் தான்.
“பட்டாபி, ராஜாஜி, பிரகாசம் மூவருமே சேர்ந்து மந்திரி சபை அமைத்தால் என்ன?” என்று கேட்டார் ஆஸாத். பட்டாபி இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
மறுநாள் மகாத்மா பட்டாபியைச் சந்தித்துப் பேசிய போது, ”சென்னைக் காங்கிரஸ் சட்டசபைக் கட்சி ராஜாஜி யைத் தலைவராகத் தேர்ந்தெடுக்குமா?” என்று கேட்டார்.
*சந்தேகந்தான்!” என்றார் பட்டாபி.
“அப்படியானால் உங்களைத் தேர்ந்தெடுக்கட்டுமா?” என்று கேட்டார் காந்திஜி.
“அதைக் காமராஜிடந்தான் கேட்க வேண்டும்,” என்று கூறினார் பட்டாபி
மகாத்மாஜி காமராஜரைச் சந்தித்துப் பேசியபோது,”சரி. ராஜாஜி தலைவராக வருவதில் கஷ்டம் இருந்தால் வேண்டாம். பட்டாபி வர முடியுமா?” என்று கேட்டார்.
“ராஜாஜி ஒத்துழைத்தால் இது சாத்தியமாகலாம்” என்று கூறினார் காமராஜ்.
“நான் ராஜாஜியைப் பார்த்துப் பேசி ஒத்துழைக்கச் சொல்கிறேன்” என்றார் காந்திஜி. ராஜாஜி எதையுமே விரும்பாததால் தலைமைப் போட்டியிலிருந்தே விலகிக் கொண்டார்.
இந்த சமயத்தில் பிரகாசம் மேலிடத்தாரிடம் தம் பெயரைச் சொல்லுமாறு காமராஜரிடம் கேட்டுக் கொண்டார்.
“மேலிடத்தாரிடம் பேசும்போது நீங்கள் சும்மாவே உட் கார்ந்திருக்கிறீர்கள்; அப்புறம் என்னிடம் வந்து உங்கள் பெயரைச் சொல்லி வற்புறுத்துகிறீர்களே! நீங்களேதான் சொல்லுங்களேன்!” என்று கடிந்து கொண்டார் காமராஜ்.
இதற்குள், “நீங்கள் ராஜாஜியை ஆதரித்தால் உங்களுக்கு மந்திரிப் பதவி கிடைக்கும்” என்று யாரோ பிரகாசத்திடம் சொல்லியிருக்கிறார்கள். பிரகாசத்துக்கு மந்திரிப் பதவியின் மேல் ஆசை. அதனால், “சரி, ராஜாஜியை ஆதரிக்கிறேன்” என்று டில்லியில் கூறிவிட்டுச் சென்னை வருவதற்குள் அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டு விட்டார். பிரச்னை இவ்வாறு குழம்பி போகவே, “உங்கள் இஷ்டப்படி செய்து கொள்ளுங்கள்” என்று மேலிடத்தார் சும்மா இருந்து விட்டார்கள்.
சென்னைக்கு வந்ததும் பிரகாசம் சட்டசபைக் கட்சித் தலைமைக்குத் தாம் போட்டியிடப் போவதாகக் கூறினார். காந்திஜி சொன்ன பிறகு பிரகாசத்தை ஆதரிக்கக் காமராஜின் மனம் இடம் தரவில்லை. எனவே பிரகாசத்துக்குப் போட்டியாக முத்துரங்க முதலியாரைக் கட்சித் தலைமைக்குப் போட்டியிடச் செய்தார். இந்த போட்டியில் ராஜாஜி கோஷ்டியினர் நடுநிலைமை வகித்தனர். இதனால் பிரகாசமே வெற்றி பெறும் படியாயிற்று.
காமராஜுக்கு இதில் வருத்தமோ, அதிருப்தியோ கிடையாது. “பிரகாசத்தோடு ஒத்துழைக்க வேண்டாம்” என்று காமராஜரிடம் சிலர் யோசனை கூறினார்கள்.
“சட்ட ரீதியாகத் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பிறகு பிரகாசத்தோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பது முறையல்ல” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார் காமராஜ். ஆயினும் பிரகாசம் மட்டும் காமராஜ் பேச்சைக் கேட்காம லேயே காரியங்களைச் செய்து கொண்டிருந்தார். மந்திரி சபையில் மாதவ மேனனைச் சேர்த்துக் கொள்ளுமாறு காமராஜ் பிரகாசத்திடம் கூறினார். ஆனால் பிரகாசம் அப்படிச் செய்யா மல் ராகவ மேனனைப் போட்டுக் கொண்டார். காமராஜ் நினைத்திருந்தால் தாமே அப்போது மந்திரியாகி இருக்க முடியும். பதவிக்கு அவர் ஆசைப்படவில்லை. பதவி ஆசை இல்லாதவர் யாருக்கும், எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை அல்லவா? மனத்தில் நியாயம் என்று பட்டதை யாரிடமும் அஞ்சாமல் எடுத்துச் சொல்லலாமல்லவா? அந்த உறுதி காமராஜுக்கு மட்டுமே இருந்தது.
இதற்குப் பிறகு கொஞ்ச காலத்துக்குள்ளாகவே பிரகாசம் மந்திரி சபை ஆட்டம் கண்டு விட்டது. அவரைப் பிடிக்காத சிலருக்கு எதிராகக் கையெழுத்துக்கள் சேகரித்து அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தார்கள். காமராஜக்கு இதில் இஷ்டமில்லை. “இன்னும் சில நாட்களில் சட்டசபைக் கட்சித் தலைமைக்குத் தேர்தல் நடக்கப் போகிறது. அப்போது வேண்டுமானால் பிரகாசத்தை நீக்கிவிட்டு வேறு தலைவரைப் போட்டுக் கொள்ளலாம். அதற்குள் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் எதற்கு?” என்பது காமராஜின் எண்ணம்.
அப்போது டில்லியில் அரசியல் நிர்ணயச் சபைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தமிழ்நாடு, கேரளம். திரம், கர்நாடகம் ஆகிய நாலு இடங்களுக்குமாகச் சேர்ந்து சுமார் நாற்பத்தெட்டு அங்கத்தினர்கள். அ.தி. சபையில் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒரு நாள் இடைக்காலச் சர்க்காரில் மந்திரியாக இருந்த ராஜாஜியின் வீட்டில் கூடி ஒரு தீர்மானம் போட்டார்கள்.
“வரும் சட்டசபையில் கட்சித் தலைமைத் தேர்தலின் போது பிரகாசத்தை நீக்கிவிட்டு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுப்பது, வரப்போகும் புதிய தலைவர், தேவைப்பட்டால் தகுதி உள்ள ஒருவரை முதலமைச் சராக நியமிப்பது” என்பதே அந்தத் தீர்மானம். இப்படி ஒரு தீர்மானத்தை எழுதி, அங்கு வந்திருந்தவர்கள் எல்லாரும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்கள்.
ஆனாலும் பிரகாசம் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென்பதில் சிலர் திவிரமாக இருந்ததால் அவர்களுடைய விருப்படியே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதென்று முடிவாயிற்று. இதற்கிடையில், “கொஞ்சம் பொறுங்கள், நான் வந்து சமரசம் செய்து வைக் கிறேன்” என்று சொல்லிக் கொண்டு ஆசாரிய கிருபளானி சென்னைக்குப் பறந்து வந்தார்.
நிலைமை முற்றிப்போகவே, “நான் முதன் மந்திரியாக இருந்தால் போதும்; என் மந்திரி சபையில் யாரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள்” என்று பிரகாசம் கூறினார். காமராஜரிடம் வந்து, “நீங்கள் யாரைச் சொல்கிறீர்களோ அவர்களை மந்திரி சபையில் சேர்த்துக் கொள்கிறேன்” என்றார்.
“இப்போது அதுவல்ல பிரச்னை. உங்களை நீக்கிவிட்டு வேறொருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்காக இன்று கூடியிருக்கிறோம். இந்தச் சமயத்தில் எங்களுக்கு வேண்டிய ஆட்களை மந்திரி சபையில் போடுவதாகப் பேரம் பேசுகிறீர்களே, முதலில் நீங்கள் வெளியேறுங்கள். அப்புறந்தான் மற்றச் சங்கதி!” என்றார் காமராஜ்.
இப்படித் துணிந்து சொல்லும் தைரியம் அப்போது காமராஜுக்கு மட்டுமே இருந்தது. காரணம், அவர் எப்போதும் எந்தப் பதவிக்கும் ஆசைப்படாமல் இருந்ததுதான்.
அத்தியாயம் – 9
“பிரகாசம் தம்முடைய மந்திரி சபையில் மாதவ மேனனை மந்திரியாகச் சேர்த்துக் கொள்ளவில்லை. அதனால்தான் காமராஜுக்குப் பிரகாசத்தின்மீது கோபம்” என்று பலர் தவறான எண்ணம் கொண்டிருந்தார்கள். ஆனால் உண்மை நிலை அதுவல்ல; பிரகாசத்தின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்காகச் சிலர் அப்போது முனைந்து வேலை செய்தபோது காமராஜ் அவர்களைத் தடுத்து. அப்படிச் செய்யக் கூடாது. பிரகாசத்தைப் பிடிக்கவில்லை என்றால், அடுத்தாற்போல் சட்டசபைக் காங்கிரஸ் கட்சித் தலைமைக்குத் தேர்தல் நடக்கப் போகிறது. அப்போது வேறொருவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் போகிறது” என்று கூறியது தான் உண்மை.
அவர் சொன்னபடியே 1947ஆம் வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற சட்டசபைக் காங்கிரஸ் கட்சித் தலைமைத் தேர்தலில் பிரகாசத்துக்குப் பதிலாக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரைத் தேர்ந்தெடுத்தார்கள்.
அந்தக் காலத்தில் சட்டசபைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுவது வழக்கம். எனவே 1948ல் நடைபெற்ற தேர்தலில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டி யாருக்கு எதிராக பிரகாசம் மீண்டும் போட்டியிட்டார். அப் போதும் பிரகாசத்தால் வெற்றி பெற முடியவில்லை. காரணம் ஆந்திராவைச் சேர்ந்த காளா வேங்கடராவ், சஞ்சீவ ரெட்டி போன்றவர்களே பிரகாசத்துக்கு எதிராக வேலை செய்தார்கள்.
அதற்கடுத்தாற்போல் தேர்தல் நடந்தபோது ஓமந்தூர் ரெட்டி யாருக்கு எதிராக டாக்டர் சுப்பராயனை நிறுத்தி வைத்தார்கள். இதற்குள் ஓமந்தூர் ரெட்டியார். ஆட்சி மீது சில காங்கிரஸ் காரர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருந்தது. காரணம், ரெட்டி யார் ரொம்பக் கண்டிப்புக்காரர். காங்கிரஸ்காரர்கள் யாரும் அவரிடம் போய் எவ்விதச் சலுகையும் பெற்றுவிட முடியாது. எனவே, ரெட்டியார் மீது சில காங்கிரஸ்காரர்களுக்குக் கோபம் இருந்ததில் என்ன வியப்பு?
தலைவர் தேர்தலில் தோற்றுப் போன பிரகாசம் கோஷ்டியும் ராஜாஜி கோஷ்டியும் ஒன்று சேர்ந்து டாக்டர் சுப்பராயனைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கத் திட்டம் போட்டு வேலை செய்து கொண்டிருந்தது. எனவே, சலுகை பெற முடியாத காங்கிரஸ் காரர்களின் எதிர்ப்போடு இவர்களுடைய எதிர்ப்பு சேர்ந்துக் கொள்ளவே ஓமந்தூர் ரெட்டியார் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லாமல் போயிற்று.
ரெட்டியாரிடம் சிலர் இதை எடுத்துச் சொன்னபோது, “ரொம்ப சரி, நான் தலைவர் தேர்தலிலிருந்து விலகிக் கொள்ளத் தயார். அப்படியானால் எனக்குப் பதில் யாரைப் போடப் போகிறீர்கள்?” என்று கேட்டார்.
“பக்தவத்சலத்தைப் போடலாம்” என்று சிலர் சொன்னார்கள்.
“பக்தவத்சலம் வேண்டாம். அவருக்குப் பதிலாகக் குமாரசாமி ராஜாவைப் போடுவதாயிருந்தால் நான் விலகிக் கொள்கிறேன்” என்றார் ரெட்டியார்.
காமராஜுக்கு இதில் எந்தவிதமான ஆட்சேபமும் இல்லை. பக்தவத்சலந்தான் வர வேண்டும் என்ற கட்டாயமும் அவருக்கு இல்லை.
குமாரசாமி ராஜாவுக்கு அப்போது உடல்நிலை சரியில்லாத ததால் ஜெனரல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண் டிருந்தார். அவரிடம் போய் இதைப் பற்றிச் சொன்னபோது அவர் வியப்பில் ஆழ்ந்து போனார்.
ஓமந்தூர் ரெட்டியாரிடம் சலுகை பெற முடியாத” காங்கிரஸ்காரர்கள் காமராஜிடம் போய் ரெட்டியாரைப் பற்றிப் பலவாறு புகார் செய்தபோதும் அவர் வாயை திறக்க வில்லை.பிரகாசம் தம் பேச்சைக் கேட்கவில்லை என்பதற்காகவும் காமராஜ் கோபப்படவில்லை.
பக்தவத்சலத்தைக் கட்சித் தலைவர் தேர்தலுக்கு நிறுத்தப் போவதாகச் சொன்னபோது ராமசாமி ரெட்டியார், “அவர் வேண்டாம். குமாரசாமி ராஜாவைப் போடுங்கள்’ என்று சொன்னதையும் காமராஜ் ஆட்சேபிக்கவில்லை. முதலில் பக்தவத்சலத்தைத் தலைவராக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தபோதிலும் கடைசி நிமிடத்தில் அதை மாற்றிக் கொண்டு குமாரசாமி ராஜாவுக்காக வேலை செய்து ராஜாவை வெற்றி பெறச் செய்தார்.
இதெல்லாம் எதைக் காட்டுகிறது?
காமராஜுக்குச் சொந்த முறையில் யாரிடமும் விருப்பு வெறுப்புக் கிடையாது என்பதைத்தானே!
1949-ல் அமைந்த குமாரசாமி ராஜா மந்திரி சபை 1952-இல் பொதுத் தேர்தல் நடந்து முடியும்வரை நீடித்தது.
சென்னையில் காங்கிரஸ் கட்சிக்குள் ஒற்றுமை நிலவுவதிலும் காங்கிரஸ் ஆட்சி சிறப்பாக நடைபெறுவதிலும் காமராஜுக்கு எவ்வளவு அக்கறை இருந்ததோ அந்த அளவுக்கு மத்தியில் நேரு ஆட்சிக்கும் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்கும் சுமுகமான உறவு இருக்க வேண்டுமென்பதில் இருந்தது.
அகில இந்தியக் காங்கிரஸ் விவகாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு காமராஜுக்கு முதன்முதல் 1931-இல் கிடைத்தது. அந்தத் தொடர்பு இன்றுவரை நீடித்திருக்கிறது. அது மட்டுமல்ல; காங்கிரஸ் மேலிடத்திலும், காந்திஜி, நேரு, படேல், ஆஸாத் போன்ற பெருந் தலைவர்களிடத்திலும் காம ராஜின் செல்வாக்கு அபரிமிதமாகப் பெருகியது.
அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்குத் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகச் செல்லும் பெருமை அதற்குமுன் திரு. எஸ். சீனிவாசய்யங்கார், ராஜாஜி ஆகியோருக்கு மட்டுமே இருந்தது. அவர்கள் இருவருக்குப் பிறகு அந்தப் பெருமையை அடைந்தவர் காமராஜ்தான். நேருவின் தலைமையிலும், அவருடைய ஆட்சியிலும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார் காமராஜ். இதனால் நேருவுக்கு விரோதமான சக்தி எதுவாயிருப்பினும் அதை உடைத்தெறிய அவர் தயங்கியதே இல்லை.
1948- ஆம் ஆண்டு இறுதியில் அகில இந்தியக் காங்கிரஸ் பிரசிடெண்ட் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் டாக்டர் பட்டாபி சீதாராமய்யாவும் புருஷோத்தம தாஸ் தாண்டனும் போட்டியிட்டார்கள். பட்டாபி சீதாராமய்யா ஏற்கனவே ஒருமுறை அகில இந்தியக் காங்கிரஸ் தலைமைக்குப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவர். அந்தத் தோல்வியை குறித்து மகாத்மா, ‘பட்டாபியின் தோல்வி என் தோல்வி என்று கூறியது சரித்திர முக்கியத்துவம் பெற்றது. மீண்டு பட்டாபி தாண்டனுடன் போட்டியிட்டபோது அவரை வெற்றி அடையச் செய்வதில் காமராஜ் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். அச்சமயம் நேருஜியின் மந்திரி சபையின் கொள்கைகளைக் குறை கூறுவதே தாண்டனுடைய தொழிலா யிருந்தது. இதனால் தாண்டன் வெற்றியைக் காமராஜ் விரும்பவில்லை. ‘தாண்டன் வெற்றி பெற்றால் அவர் அமைக்கும் காரியக் கமிட்டிக்கும் நேருஜிக்கும் இடையே ஒற்றுமை இராது. தகராறுகள் வளரும். இதனால் நேருஜி பிரதமர் பதவியிலிருந்தே விலகக்கூடும். இது தேசத்துக்கு நல்லதல்ல. ஆகையால் நேருஜியின் மந்திரி சபைக்கும் அதன் கொள்கைகளுக்கும் ஒத்துப் போகக் கூடிய, ஆதரவு தேடித் தரக்கூடிய வகையில் கமிட்டி அமைய வேண்டும். அதற்குப் பட்டாபி சீதாராமய்யாவின் வெற்றிதான் முக்கியம்’ என்று எண்ணினார் காமராஜ். அதனால் பட்டாபிக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் அவர் வேலை செய்தார். அதன் பயனாகப் பட்டாபிக்கு நல்ல ஆதரவு கிட்டியது. ஆந்திராவில் கூடப் பட்டாபிக்கு அவ்வளவு ஆதரவு கிட்டவில்லை.
கடைசியாகத் தலைவர் தேர்தலில் வோட்டுக்களை எண்ணிப் பார்த்தபோது பட்டாபிக்கே வெற்றி கிட்டியது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்கப் பாடுபட்டவர் காமராஜ் தான் என்பதை நேருஜி புரிந்து கொண்டார். காமராஜின் சக்தி எத்தகையது என்பதை அவர் அறிந்து கொண்டதும் அப்போதுதான். அதற்குப் பிறகு காமராஜின் பெருமையை அவர் உணர்ந்தது. ஆவடி காங்கிரசின்போது. இந்த தேர்தலில் தாண்டன் வெற்றி பெற வேண்டுமென்று சர்தார் படேல் விரும்பினார். ஆனால் அவர் விருப்பத்துக்கு மாறாகக் காமராஜ் வேலை செய்து பட்டாபியை வெற்றி பெறச் செய்தது படேலுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அச்சமயம் படேல் காமராஜைப் பார்த்து, “உங்களுக்கு என் மீது என்ன கோபம்?” என்று கேட்டார்.
”உங்கள் மீது எனக்கு என்ன கோபம் இருக்க முடியும்?” என்றார் காமராஜ்.
“பின் ஏன் பட்டாபி வெற்றி பெறப் பாடுபட்டீர்கள்?”
“தமிழ்நாட்டில் பட்டாபிக்கு ஆதரவு இருந்தது. அவர் வெற்றி பெற்றார். அவ்வளவுதான்!” என்றார் காமராஜ்.
அப்புறம் 1950-இல் தாண்டன் காங்கிரஸ் தலைவரான போது காமராஜ் எதிர்பார்த்தபடியே காரியங்கள் நடக்கத் தொடங்கின. அவர் அமைத்த காரியக் கமிட்டி நேருவுக்குத் திருப்தியாக இல்லை. அதை மாற்றியமைக்கும்படி அவர் தாண்டனிடம் கூறினார். தாண்டன் அதற்கு இணங்க மறுத்தார். அதனால் நேருஜி காரியக் கமிட்டியிலிருந்தே விலகும்படி நேர்ந்தது.
– தொடரும்…
– சிவகாமியின் செல்வன், சாவியில் தொடராக வெளிவந்த காமராஜரின் அரசியல் வாழ்க்கை, நான்காம் பதிப்பு: ஜனவரி 1990, மோனா பப்பிளிகேஷன்ஸ், சென்னை